ஞாயிறு, 17 டிசம்பர், 2017

மார்கழிக் கல்யாணங்கள் -- சென்னை இசைவிழா

மார்கழியில் கல்யாணம் பண்ணுவதில்லை என்று நினைக்கிறோம். அனைவரும் டிசம்பரில் எங்கள் ஊருக்கு வந்து விட்டுக் கூறுங்கள். எது நிஜக் கல்யாணம் என்று. உங்கள் வீட்டு, எங்கள் வீட்டுக் கல்யாணத்திற்கு எத்தனை பேர் வரக்கூடும்?  1000?  2000?  அதுவுமே,  நம் வீட்டுத் திருமணத்தன்று மாமாவுக்கு அலுவலகத்தில் ஆடிட் இருக்கும். அத்தைக்கு மூட்டுவலி வரும். சொந்தங்களுக்கு ஏதோ சாக்கு வரும். ஆனால்,  சென்னையின் மார்கழி திருமணத்திற்கோ உலக உருண்டையின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் வருகிறார்கள். வருடம் தப்பாமல், டிசம்பரில் சென்னை வருகிறார்கள். சிவபெருமான் திருமணத்தின் போது நடந்தது போல்,  இந்தியாவின் தென்பகுதி பாரம் தாங்காமல் இறங்கிவிடுமோ என்று கூட நினைப்பேன். அப்படி ஒரு கோலாகலம். சாஸ்திரிய சங்கீதத்திற்கான இப்படி ஒரு விழா வேறெந்த ஊரிலும் நடப்பதில்லை என உறுதி செய்ய இன்டர்நெட்டை அலச வேண்டாம்.  அது நிதர்சனம். ஆனால் திருமணத்திற்கு என ஒரு மாசத்தை மட்டும் ஒதுக்கினால்,  என்னென்ன குழப்பங்கள் ஏற்படுமோ அத்தனை குழப்பமும் மெட்றாஸில் நடக்கிறது. வருஷத்தில் தை மாதம் மட்டுமே திருமணம் செய்ய உகந்தது என்றால், எல்லாருக்கும் மண்டபம் கிடைக்குமா, சமையலுக்கு ஆள் கிடைக்குமா, மாமாவுக்கு லீவ் கிடைக்குமா, ஒரே மாசத்தில் பல கல்யாணங்களுக்கு மொய் எழுத பாக்கெட் எல்லாருக்கும் சம்மதிக்குமா,  போத்தீஸில் மற்ற மாதங்கள் வியாபாரம் நடக்க வேண்டாமா, சமையல் வேலை செய்வோர் மற்ற மாதங்கள் சம்பாதிக்க வேண்டாமா, தேன்நிலவு தம்பதியருக்கு லாட்ஜ்களில் அறை கிடைக்க வேண்டாமா, குழப்பங்கள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல? அப்படித்தான் திண்டாடுகிறது டிசம்பர் சென்னை.

நேற்று மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸில் ஒரு காலைக் கச்சேரி சென்றோம். தெரியாதவர்களுக்கு ஒரு தகவல். காலைக் கச்சேரிகள் பெரும்பாலான சபாக்களில் இலவசம்.  காலை பாடுபவர்கள்,  வளர்ந்து வரும் கலைஞர்கள். அவர்கள் மதியக் கச்சேரி செய்யும் அளவிற்கு  உயர்ந்து, மாலை, Prime Slot  எனப்படும் ஆறு மணிக்கச்சேரி  வாய்ப்புப் பெற, காத்திருக்க வேண்டும். உழைக்க வேண்டும்.  திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தக்க வைத்துக் கொள்ள வேண்டும். செய்தால் பல வருடங்கள் துறையில் கோலோச்சலாம்.  .நான் அறிந்த வரை,  சபாக்களின் மாலைக் கச்சேரி வரை வர, குறுக்கு வழிகள் இல்லை. திறமை மட்டும் ஆட்சி செய்யும்,  மிகக் குறைந்த சிலதுறைகளில் ,  இது ஒன்று.  அப்பா பாடுகிறார் என்பதால்,  மகனுக்கு வாய்ப்பு தருவதில்லை.  வாய்ப்புத் தருவது சபாக்கள். மதிப்பிடுவது மக்கள் அல்லவா?  அதனால் நிஜமான திறமை வேண்டும். திறமைசாலிகளுக்குள் போட்டி உண்டு. சபாக்களுக்குப்  பிரியமான கலைஞர்கள் உண்டு.  அதெல்லாம் ஊடுருவிய தீமைகள். தவிற்பதற்கில்லை.

பணத்தை வைத்துச்  சுழலும் உலகில்,  ஏன் இலவசக் கச்சேரிகள் அளிக்கிறார்கள், தெரியவில்லை. அதற்கு டிக்கெட் நிர்ணயித்தால்,  வரும் பத்து பேரும் வரமாட்டார்கள் என்றா?  காலைக் கச்சேரிகள், காற்று வாங்கும் இடம்தான். அத்தனை பெரிய சபாவில், ஆங்காங்கே தென்படும் தலைகள். எண்ணி விடலாம். அட,மாலுக்கும் சினிமாவிற்கும், கூடச் செல்லும் நண்பர் குழாமும் அவர்கள் குடும்பங்களும் வந்தால் கூட கூட்டம் சேருமே ?பாடுபவர்களுக்கு சற்று உற்சாகம் வருமே!  பின்னால் வளர்வோம், நிறைந்த அரங்குகளைப் பார்ப்போம் என்ற நம்பிக்கையில், சுவற்றுக்குப் பாடும் பாடகர்கள் பாட்டில் உற்சாகம்  எங்கிருந்து வரும்? ஆயாசம்தான் இருக்கும். அதே போல், மாலைக் கச்சேரிகளின் டிக்கட் ரேட் , சினிமாவை விட அதிகம். சினிமா அளவு ஈர்க்க இயலாத ஒரு நிகழ்ச்சிக்கு , அதைப் போல் இரு மடங்கு டிக்கட் வசூலித்தால்,  சாமானியர்களுக்கு சபாவை எட்டிப் பார்க்கக் கூடத் தோன்றுவதில்லை.  தாங்கள்தான் சங்கீதத்தின் பிரதிநிதிகள் என்று நினைத்துக் கொள்ளும் ஒரு சிலரின் ஆதிக்கம்தான். கடைசிவரை பந்துவராளியை, பூர்விகல்யாணி என்றும், முகாரியை பைரவி என்றும் நினைத்துக் கொண்டு கேட்டு விட்டுப் போவார்கள்.

நேற்றுக்  கச்சேரியில் இரண்டு பேர்.  ஒரு ஜோல்னா பை, சாதா சூடிதார், அந்தப் பெண். அந்தப் பையன் , பல முறை துவைக்கப் பட்ட ஒரு சட்டை, பேண்ட்.  அவ்வளவு ஆர்வமாகக்  கச்சேரி கேட்டார்கள். த்விஜாவந்தியில்,  அகிலாண்டேஸ்வரியை விட்டால் வேறே கீர்த்தனையே யாரும் பண்ணவில்லையோ என்று நாம் நினைத்துக் கொண்டுள்ள போது , பாடகர் லேசாக முனகின உடனேயே , 'த்விஜாவந்தி ' என்று ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்த அப்பெண்ணும் பையனும், ' ஏன் ஆண்ட்டி, த்விஜாவந்தியில் இந்தக் கீர்த்தனை கேட்டுள்ளீர்களா'  என்று என்னிடம் வேறு கேட்டார்கள், பாருங்கள்,  அது என்ன கீர்த்தனை என்று கூடத்  திருப்பிச்  சொல்ல எனக்குத் தெரியவில்லை.

சபா  உணவகங்கள் அருமை. அரங்கை விட,  உணவகங்களில்  மக்கள் அதிகம் .மதிய உணவின் போதே,  மாலைச்  சிற்றுண்டிக்கு,  என்ன இனிப்பு  காரம் சேர்த்து உண்டால் நன்றாக இருக்கும்   என வெளிப்படையாகவே பேசுவோர்,  சபா சபாவாகத் தாவும்  கார்சவாரி ரசிகர்கள்.....அவர்கள் அப்படித் தாவுவது ,  வித்தியாசமான கச்சேரி கேட்கவா, வித்தியாசமான உணவகத்தில்  சாப்பிடவா என அவர்களைத்தான் கேட்க வேண்டும். எதுவும் அதிகமாக இருப்பது சந்தோசம் எனத் தப்புக் கணக்குப் போடுகிறோம். இல்லை. அது தொல்லை.  போதும் போதாததற்கு,  எல்லாத்  தொலைக்காட்சிகளும் கச்சேரிகள் ஒளிபரப்புகிறார்கள். அது நல்ல  விஷயம்தான்.  வயதானவர்கள், வசதியற்றவர்கள்,  வெளியே போகும் சூழ்நிலை இல்லாதவர்கள் , ஆகியோருக்கு நல்ல வரப்  பிரசாதம். வருஷம் முழுதும்  நடக்குமாறு பண்ணி,   இந்த இசை வெள்ளத்தில் மக்கள் மூழ்குமாறு செய்யலாமே?  இது என்ன பருவமழையா?  டிசம்பரில் மாத்திரம் வர?   சம்பிரதாயத்தை  மாற்ற பயம். ஆட்டுமந்தையாகவே இருக்க இஷ்டம். வேறு மாசத்தில் கச்சேரி வைக்க பயம். காலைக்  கச்சேரிக்கு டிக்கட் வசூலிக்க பயம். மாலைக்  கச்சேரிக்கு  டிக்கட் கட்டணம் குறைக்க பயம். உணவகம் இல்லாது சபா நடத்த பயம். வரவர,  சபா போகும் ஆசையே இருப்பதில்லை. பொய்யாகத்  தெரிகிறது.  பார்க்கலாம். ஒரு எல்லையைத் தொட்ட பின்னர் மாற்றம் வரலாம்.சென்னைக்கு எல்லாம் கல்யாண மாசம் ஆகலாம்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

சமூகத்தை அரித்து வரும் புற்று நோய்

இப்பொழுதுதான் சக்திபவனில் ஒரு தோசை சாப்பிட்டு வந்தோம்.இன்னும் உடை கூட மாற்றவில்லை.உண்மை.உண்மையில் இன்னும் சற்று பெரிய பளபள உணவகத்துக்கே முதலில் சென்றோம்.கூட்டம்.வெளியே நாற்காலிகளில் எல்லாம் மக்கள்.கோவில் வாசலில் கையேந்திக் காத்திருப்போர் பிச்சைக் காரர்களாம்.நாம் சொல்கிறோம்.அவர்களாவது பசிக்கு ஏதாவது கிடைக்குமா என்ற எண்ணத்தோடு காத்துள்ளார்கள்.ஆனால் posh ஹோட்டல் வாசலில் காத்திருப்போர் பசிக்கு காத்திருப்பதில்லை.சாப்பிடும் ஆசையால் காத்துள்ளோம். உடையாலும் உட்கார்ந்திருக்கும் இடத்தாலும் அறியப்பட்டால், அவர்கள் பிச்சைக்காரர்கள்.காத்திருக்கும் போது மனதில் உள்ள உணர்வால் அறியப்பட்டால் ,நாம்தான் பிச்சைக்காரர்கள்.அவர்கள் வயிறில் எரிவது பசி எனும் அக்னி.நம் மனதில் எரிவதோ ஆசை எனும் அக்னி.பசியை விரட்ட முடியாது.ஆசையை விரட்ட முடியும்.பசியும் இருந்து பணமும் இருந்தால் ஸ்டார் ஹோட்டல் போகக் கூடாதா?போகலாம்.ஆனால் காத்து நிற்பின் அது பசியால் அல்ல..ஆசையால்.இன்று எங்களுக்கு இருந்தது பசி.அதனால்தான் அங்கிருந்து சக்திபவன் சென்றோம்.

இந்த போஸ்டின் நாயக நாயகிகளைச் சந்தித்தது அங்கேதான்.முதல் பத்தி என் மனத்தில் நினைவு தெரிந்து உணவகங்களுக்கு செல்ல தொடங்கியது முதல் உள்ள எண்ணம். ஆனால் போஸ்ட்டின் வித்துக்கள் சிறப்பு எண்ணங்களே.எங்களுக்கு அடுத்த மேசையில் ஒரு ஏழை குடும்பம்,கணவன்,மனைவி,இரு குழந்தைகள் சாப்பிட அமர்ந்தார்கள்.அவர் ஆட்டோ ஓட்டுநர் என்று உடையில் இருந்தும் அவர்கள் ஏழ்மை அந்த பெண்ணின் கழுத்தில் இருந்தும் தெரிந்தது. குழந்தைகளுக்கு ஏதோ ஆர்டர் பண்ணப் பட்டு வந்தது.அவை ஆவலுடன் வேகவேகமாக சாப்பிட்டதைக் கணவனும் மனைவியும் பார்த்துப் பரவசப் பட்டுக் கொண்டார்கள்.நான் ஓரப் பார்வையாக அவர்களை பார்த்துக் கொண்டிருந்தேன்.இக்குழந்தைகள் சாப்பிடும் வேகம் பார்த்தால் அவர்கள் அம்மா அப்பாவிற்கு வரும் உணவையும் பங்கு கேட்கும் போல் உள்ளதே,அவரிடம் பர்ஸ் கூட இல்லை போல் தெரிகிறதே என்று சற்றுக் கவலையாக உணர்ந்தேன்.பளிச் என மனதில் ஒரு குரல் ஒலித்தது.அவர்களுக்கு எதுவும் சாப்பிட வர போவதில்லை என.கையில் உள்ள காசில் குழந்தைகளுக்கு மட்டும் ஏதாவது வாங்கித் தர வந்த பெற்றோர்.லேசில் வெல்ல இயலாத உணவு ஆசையை வென்ற இரு ஜீவன்கள்."அம்மா,நீ எப்ப சாப்பிடுவே "என்ற சின்னக் குழந்தையின் குரல்,என் இரவுத் தூக்கத்தைத் தொலைக்கப் பண்ணி விடுமோ என்று யோசித்தவாறே வெளியே வந்தேன்.

ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூகம்.ஏன்?ஐ.ஐ.டி .யில் இருந்து நாலு வருஷம் படித்து விட்டு வெளியே வருபவருக்கு ஏன் 18 லட்சம் சம்பளம்?கிரிக்கெட் மட்டும் ஏன் உசத்தி?டீமில் உள்ளவர்களுக்கு ஏன் அவ்வளவு பணம்?உன்னிகிருஷ்ணனுக்கு பாட வரும்.பாடுகிறார்.விராட் கோலிக்கு கிரிக்கெட் விளையாட வரும் .விளையாடுகிறார்.அஜித்துக்கு நடிக்க வரும் .நடிக்கிறார்.இன்று பார்த்த மனிதனுக்கு ஆட்டோ ஓட்ட வரும்.ஓட்டுகிறார். அஜித் டிசம்பர் கச்சேரி பாடுவாரா?உன்னிகிருஷ்ணன் ஆட்டோ ஓட்டுவாரா ?அவரவருக்கு வருவதை செய்கிறோம்.software engineer 12 மணி வேலை செய்தால்,ஒரு மெக்கானிக்கும் அதே நேரம் வேலை செய்கிறார்.கேட்டால் படிப்பு ஈட்டும் பணம் என்று கதை சொல்வார்கள்.உனக்குப் படிக்க வரும்.பிளம்பிங் பண்ண வருமா?மெத்தப் படித்தவர்கள், எல்லாம் ,தானே பண்ண வேண்டியதுதானே?படிக்க வந்தது.படித்தோம்.இன்னொருவனுக்கு படிப்பு ஏறவில்லை.வந்ததை செய்கிறான்.வசதி இல்லாமல் படிக்கும் வாய்ப்பை இழந்தவர்கள் எத்தனை பேர் உள்ளார்கள்.ஏன் வசதி இல்லை?சமூகத்துக்கு வந்த புற்று நோயால் அது தடுமாறி,தடம் மாறிப் போனதால்.

சரி,படிப்புக்கு மரியாதை தரவேண்டியதுதான்.அலுவலகத்தில் மணி அடிப்பவருக்கும்,மணி அடித்தால் வந்து கைகட்டி நிற்பவருக்கும்  ஒரே சம்பளம் தர வேண்டாம்.ஆனால் ஏன் இவ்வளவு வித்தியாசம்?ஒரு இடத்தில் ஏன் கோடிகள் குவிய வேண்டும்?ஆட்டோக்காரர்கள் பத்து ரூபாய்க்காக ஏன் தவளை போல் கத்த வேண்டும்?ஏன் விகிதாச்சாரம் இவ்வளவு மோசமாய் உள்ளது?நமக்கு உள்ளது போல் சமூகத்திற்கு,நாட்டிற்கு ஒரு ஆன்மா உள்ளது.சமூகத்தின் ஆன்மா நம் அனைவரிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டுள்ளது.சமூகம் என்ற பெரிய உடலை அழித்துத் தின்றுவரும் புற்று நோய் இந்த ஏற்றத் தாழ்வுகள்.சரியான ட்ரீட்மெண்ட் தரப்பட வேண்டும்.கான்சருக்கு க்ரோசின் போட்டால் சரியாகுமா?எத்தனை நாள்பட்ட கவனிப்பு வேண்டும்.அது போல்தான்.இப்போதெல்லாம் புற்று நோயை முற்றிலும் குணப்படுத்தி விடுகிறார்களாமே ?இன்று சக்திபவனுக்கு சாப்பிட வந்த குடும்பம் என்றாவது,முழுமையாக வயிறார சாப்பிடுமா?இல்லையெனில் தேடி சோறு நிதம் தின்று,பல சின்னஞ் சிறு கதைகள் பேசி,பலர் வாட பல செயல்கள் செய்து அடுத்த தலைமுறைக்கு என வங்கிக் கணக்கில் தேவைக்கு அதிகமாகப் பணம் சேர்க்கும் நாமெல்லாம் தலைகுனிய வேண்டியவர்களே.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

புகழ் தரும் தலைவலிகள்

இரண்டு வார மனச்சுமை. இன்று இறக்கி வைத்து விடுவேன். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப என்ற இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.நன்றாகப் போகிறது. நேரடியாக விஷயம் தொடுகிறேன். அதில் ரமணியம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் பாடிக் கலக்குகிறார். நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் பாராட்டுகள் எல்லா வழியிலும் வந்து குவிகின்றன. அவர்கள் பின்புலம் அறிந்த பின் மிகுந்த மரியாதை உண்டாகிறது. அவர்கள் சாதனைப் பெண் என்பது சந்தோஷம் தருகிறது. பின் ஏன் எனக்கு மனம் கனக்கிறது? சொல்கிறேன்.

புகழ் ஒரு போதை. மிகுந்த பக்குவத்துடன் கையாளப் பட வேண்டிய ஒன்று. அதிகம் குடித்தால் குடிகாரனுக்கு ஏற்படும் தடுமாற்றம்,  புகழ் வசப்படும் மனிதனுக்கு உண்டாகும். எளிமையான மனிதர்கள் புகழால் தொலைக்கும்  சில விஷயங்கள், எளிமை, தூக்கம், சுதந்திரம், பிறரால் அறியப் படாத இருப்பு, ஒரே வார்த்தையில் சொன்னால் நிம்மதி. பிரபலங்கள் யாராவது உண்மை பேசினால் நமக்கு இது விளங்கும். இல்லை என்றாலும் கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா என்ன? பாவம் ரமணியம்மாள் என்பதே என் மனது கொண்ட சுமை. முதல் பாடல் பாடும் போது,  தான் இவ்வளவு பயணிப்போம் என அவர்கள் நினைத்ததாகத் தெரியவில்லை. திறமையை,  தொலைக்காட்சிகள் ஊக்குவிக்கின்றன. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அவர்கள் டி ஆர் பி (டெலிவிஷன் ரேட்டிங் பாயிண்ட்) ஏற , இந்த அப்பாவிப் போட்டியாளர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்களோ என்றே தோன்றுகிறது. தொலைக்காட்சிசானல்களைத்  தப்பு சொல்ல மாட்டேன். அவர்கள் ஸ்ட்ரீட் ஸ்மார்ட்டாக இருந்தாக வேண்டும். வியாபாரிகள் வியாபார தந்திரம் செய்யக் கூடாது என்று வாதிட இயலாது. அந்த அம்மாள்தான் பாவம்.

அந்த ரமணியம்மாளே  வாக்குமூலம் தருகிறார்கள். "நான் வேலைக்கு செல்லும் வழியில் இளைஞர்கள் என்னுடன் செல்பி  எடுத்துக் கொள்கிறார்கள், சிலர் காரை நிறுத்திப் பணம் தருகிறார்கள்", என்றெல்லாம்.   சென்ற வார ஷோவில் அவர்கள் சொன்ன போது, அவர்களை நிம்மதியாய் விட்டு விடுங்களேன் என்று மனம் அடித்துக் கொண்டது. ஏன் என்றால்,  உலகம் பொய். உலகம் வேண்டுவது பரபரப்பு மட்டுமே. சில நல்ல உள்ளங்கள் உண்டு. அவர்கள் வலக்கை தருவது இடக்கைக்குத் தெரியாதது போல் உதவுபவர்கள். மற்றது எல்லாம் விளம்பரத்துக்காகத்தான்.  அவர்களால் சாலையில் இயல்பாய் முன் போல் நடக்கக் கூட முடியவில்லை. இரண்டு சேலைகளுடன் நிம்மதியாய் இருந்தவரை,  வாரம் ஒரு புது துணி கொடுத்து ஆசை வயப் படுத்தியாயிற்று. தூக்கம் வராது. நிச்சயம் வராது. அதற்காக ,அவர்கள் போன்ற, நம் போன்ற சாதாரண,  ஓரளவு திறமை உள்ள மக்கள் வளரவே கூடாதா என்கிறீர்களா? அப்படி இல்லை. இந்த தற்காலிக வளர்ச்சியும் புகழும் தரும் போதை, அவர்களைப் புறம் தள்ளி உலகம் தன்  பயணத்தைக் தொடரும் போது இந்த எளிய மனிதர்களுக்கு அதிர்ச்சியும் வலியும் ஏற்படுத்தும்.

இந்தப் புகழ் தற்காலிகமானது என நீ அறிவாயா என்றால், ஆம்,அறிவேன் என்பதே பதில். சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்த இதே போன்ற ஒரு பாட்டியின் திக்கற்ற நிலையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. ஆனால்,  தீர்வற்ற பிரச்சினை இதெல்லாம். நீங்களும் நானும் பேசிக் கொள்ளலாமே தவிர ஏதும் செய்ய இயலாது. ஆனால், ஒன்று கவனிக்கிறேன். ஒரு மனிதனின் வளர்ச்சியும் அவன் அடக்கமும்  பெரும்பாலும் நேர்விகிதத்தில் இருக்கின்றன. இருக்க வேண்டும். தொலைகாட்சி நிகழ்ச்சியின் நேர்காணலில் பங்கு பெறும் பல பிரபலங்கள் இதை உறுதி செய்கிறார்கள். வள்ளுவனும் பாரதியும் பெற்றது போன்ற புகழ்தான்  நிலையானது. அது நம் போன்ற சாமானியர்களுக்கு கஷ்டம். அதை உணர்ந்து, புகழின்  வசப்பட்டு மயங்காமல் இருப்பின் பிரச்சினை இல்லை. மயங்கி சந்தோஷ எல்லை வரை போனால், இன்னொரு எல்லையைத் தொட வேண்டிவரும் போது  அடி பலமாக இருக்கும். ரமணியம்மாளுக்கு இந்த எளிய மனம் மாறாமல் இருக்கட்டும் .வேறென்ன சொல்ல?  உடல் அடையும் புகழை,  உள்ளம் சினிமா படம் போல் வேடிக்கை பார்க்கட்டும்.தொலைக்காட்சி சானல்களும் இன்னும் கொஞ்சம் மிதமாக இருந்தால் நலம். சிம்பிள் பெண்டுலம்  போல் மக்களை வைத்து விளையாட அல்லவோ செய்கிறார்கள்! பாவம் மக்கள்.

மனம், சுமை இறக்கி இறகு போல் ஆனது.