நம் முதலமைச்சர் கட்டளைப் படி நடந்து வரும் யானைகளின் புத்துணர்வு முகாம் பற்றி தொலைக் காட்சியில் பார்க்கும் போதும் செய்தித் தாள்களில் வாசிக்கும் போதும் எனக்கு அந்த யானையே நான்தான் என்பது போல் மிக சந்தோஷமாக இருக்கும். உடனே நான் பெரிய மிருக நல ஆர்வலர் என்றெல்லாம் எண்ணிக் கொள்ளாதீர்கள். தெருவில் நாய்களைப் பார்த்தால் கூட நடந்து வருபவர் பின்னால் ஒளிந்து கொள்ளும் ஒரு ஜந்துதான் நான். Blue cross ஐச் சேர்ந்த யாராவது என்னை அப்போது பார்த்தால் சற்று எரிச்சல் கூட அடையக் கூடும். தெரு நாய்கள் என்றில்லை. வளர்ப்புப் பிராணிகள் வைத்திருக்கும் வீடுகளுக்குச் செல்வதை ஏதேனும் காரணம் சொல்லித் தவிர்த்து விடுவதே வழக்கம். மற்ற பறவைகள் பிராணிகள் என்றாலும் இதே கதைதான். அவை என்னைக் கண்டு அஞ்சும். நான் அவற்றைக் கண்டு அஞ்சுவேன். ஆனால் தூர இருந்து ரசிப்பேன். அவை துன்பப் பட்டால் தாங்காது. தொட்டியில் உள்ள மீன்கள், கூண்டுக் கிளிகள், சர்கஸ் விலங்குகள், வண்டி இழுக்கும் மாடுகள், காசு வாங்கும் அவ்வளவு கம்பீரமான யானை இவை எல்லாம் எந்த அவசரத்தில் பார்க்க நேர்ந்தாலும் என் மனம் தொடத் தவறியதில்லை. அதனால்தான் ஒரு டூர் அடித்து உற்சாகமாகத் திரும்பும் இந்தப் புத்துணர்வு முகாம் யானைகள் என்னை அவ்வளவு சந்தோஷமாக்கும். ஐந்தறிவு கொண்ட விலங்குகளுக்கே மாற்றங்கள் புத்துணர்வு ஊட்டுமானால் ஆறறிவு கொண்ட மனிதர்களுக்கு அத்தகைய மாற்றங்கள் எவ்வளவு தேவை என்ற நினைவே இந்தப் பயணக் கட்டுரையின் விதை! எல்லோரும் நீண்ட பயணங்கள் மேற் கொண்டு அனுபவங்கள் பகிர்கிறார்கள் .நான் சென்னையில் இருந்து இதோ இங்கிருக்கும் கரூருக்கு இரண்டே நாள்கள் போய் வந்தேன். ஆனால் எத்துணை சிறிய பயணமானாலும் அது ஒரு படிப்பினையே.
கரூர் என் பிறந்த ஊர். உலகின் எந்தக் கோடிக்குச் சென்றாலும் மண்ணின் வாசம் மறக்க இயலாது. நாம் சிறிய உருவுடன் பெற்றோர் கை பிடித்து நடந்த சாலைகளில் மறுபடி நடந்தது மனம் வருடியது. நம் சிறு கால்களால் அப்போது நடந்ததாலோ அல்லது அதை விட மிகப் பெரிய நகருக்கு வந்து விட்டதாலோ அப்போது நீளமாகத் தெரிந்த வீதிகள் எல்லாம் இந்த தூரத்தைக் கடக்கவா அப்போது அவ்வளவு சிரமப் பட்டோம் என்று தோன்ற வைத்தன. எதிரே பார்க்கும் தோல் சுருங்கின முகங்களில் நம் பெற்றோரைத் தெரிந்தவர் யாரேனும் இருக்கிறார்களா என்று தேடத் தோன்றியது. சிவன் கோவிலில் கருவூரார் சந்நிதியில் என் பள்ளித் தோழன், தன் அப்பாவின் பின்னால் நின்று கொண்டு சற்றே வெட்கத்துடன் எல்லோருக்கும் விபூதி கொடுத்த குட்டிப் பையன் இப்போது பெரியவனாகி அவன் அப்பா செய்த வேலையைச் செய்து கொண்டு தீபாராதனைத் தட்டை நீட்டி விட்டு முகத்தில் அதிசயம் கலந்த சிநேக பாவம் காட்டிய போது "ஓ நம்மை அடையாளம் கண்டு கொள்ள கடவுள் தவிர சிலர் இன்னும் இந்த ஊரில் உள்ளார்கள்" என்று மன ஓட்டம் சென்றது. இளம் அம்மாக்களின் இடுப்பிலும் அப்பாக்களின் தோளிலும் சவாரி மேற்கொண்டு சென்று கொண்டிருந்த குழந்தைகளிடம் போய் அதுகளுக்குப் புரியாவிட்டாலும் "உனக்கும் எனக்கும் ஒரு சொந்தம் உண்டு. நம் இருவரின் இளமைப் பருவமும் இந்த மண்ணில். நீயும் என் போல் ஐம்பது வயது தாண்டி இது போல் இங்கு வருவாயா? உன் சொந்தம் என்று கூற இங்கு யாரும் இல்லாவிட்டாலும் இந்த மண் என் சொந்தம் என்று சொல்லிக் கொண்டு வருவாயா ? இந்தக் கருவூரின் காவல் தெய்வம் மாரியம்மனும், ஆனிலையப்பனும், தான்தோன்றிப் பெருமானும் இடம் விட்டு நகராது ஊரைக் கட்டிக் காத்துக் கொண்டுள்ள போது, அவர்கள் தரிசனம் காண்பது தவிர வேறு காரணம் தேவை இல்லை இந்த மண்ணில் கால் பதிக்க என்று என் போலவே எண்ணிக் கொள்வாயா? "என்று அந்தக் குழந்தைகளின் கன்னம் தொட்டுக் கேட்கத் தோன்றியது.
படித்த பள்ளி, வேலை பார்த்த கல்லூரி, திரைஅரங்குகள் இன்னும் அத்தனை இடங்களும் நேற்றுதான் வந்த இடத்திற்கு மறுமுறை வந்தார் போல் இருந்தது. ஆனால் எங்கள் தாத்தா கட்டி பல தலைமுறைகள் வாழ்ந்த எங்கள் வீடு எது என்றே கண்டுகொள்ள முடியாமல் அந்தத் தெருவில் நின்று கொண்டு திருதிருவென விழித்த தருணம் மட்டும் மிக வருத்தமாகவும் இருந்தது. சட் என மனம் சமநிலை அடைந்தது. அடிக் கரும்பின் தித்திப்பு போல மனச் சுரங்கத்தில் நினைவுகள் இனிக்கலாம். அதை மேலே கொண்டு வந்து அசை போடலாம். ஆனால் யானைகளின் முகாம் போல அந்த எண்ணங்கள் புத்துணர்ச்சிதான் ஊட்ட வேண்டும். முகாமிலேயே யானைகள் தங்கலாமா?ஒரு வழியாய் எங்கள் வீட்டைக் கண்டுபிடித்து அதை வாங்கி அங்கே வசிப்பவர்களிடம் அனுமதி பெற்று உள்ளே சென்றவுடன் மனம் இன்னும் உள்ளேதான் சென்றது. அந்த இடத்திற்கு அந்நியமாகத்தான் உணர்ந்தேன். ஒரு நிமிடம் கண் மூடி இந்த வீடு தன்னில் இருந்தவர்களை வைத்திருந்தார் போல இப்போது இருப்பவர்களையும் இனி இருக்கப் போகிறவர்களையும் நல்லபடி வைக்கட்டும் என வேண்டி வெளியே வந்து விட்டேன்.
இனி சில முக்கிய செய்திகள். மடிக் கணினியை மறந்து, கைபேசியை மறந்து நிம்மதியாக இருந்த கணவர், நகரப் பரபரப்பில் இருந்து மாறுபட்ட சூழலை ரசித்த குழந்தைகள், நாம் சமையல் அறைக்கு சென்றால்தான் சாப்பிட முடியும் என்றில்லாது இரண்டு நாள் உட்கார்ந்த இடத்தில் சாப்பிட்டுக் கொண்டு என் மனதிற்குப் பிடித்ததை செய்த நான் எல்லோருக்கும் இந்தப் பயணம் ஒரு மகிழ்ச்சி தந்தது. பர்ஸ் சம்மதிப்பதைப் பொறுத்து அவ்வப்போது சில பயணங்கள் மேற்கொள்வது நம்மைக் கண்டிப்பாக உற்சாகமூட்டும். வீட்டில் நாம் எது பேசினாலும் இரண்டு காது இருப்பதே ஒன்றில் வாங்கி மற்றதில் விட என்பது போல் நடந்து கொள்ளும் கணவர்கள் கொஞ்ச நேரமாவது நாம் பேசுவதைக் கேட்க ஒரு சந்தர்ப்பம் அமையும். அடுத்த புத்துணர்வு முகாம் எப்போது என யானைகள் எதிர்நோக்குமோ என்னவோ நான் எதிர்நோக்குகிறேன்!
ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS
சினேகிதி மார்ச் 2016 இதழில் வெளிவந்துள்ள கட்டுரை