இன்னோரம்மாக்கள்
ஸன்யாசாஸ்ரமம் க்ருஹஸ்தாஸ்ரமம் என்ற இரண்டு நிலை தவிர நடுவில் ஓர் நிலை உண்டு.திருமண பந்தத்தை வெறுத்து ஒதுக்குவோர் அல்லது ஏதோ காரணத்தால் தனி வாழ்வை மேற்கொண்டவர்கள்.இவர்கள் ஆண்களிலும் உண்டு.பெண்களிலும் உண்டு.நம் சமூகம் வழக்கம் போல இவர்களிலும் பெண்களுக்குத் தரும் அழுத்தங்கள் அதிகம். திருமணமே உள்ளே வருவோர் தப்பித்துக் கொள்ளவும் வெளியே இருப்பவர் உள்ளே வரவும் விரும்பும் ஒரு மாயையான விஷயம். என்னுடன் நெருங்கிய உறவுகளில் இது போன்ற ஒரு வாழ்வைத் தேர்ந்து எடுத்த பெண்களின் மன ஓட்டம் பற்றின ஒரு விவாதமே இது.ரத்தம் சூடாக உள்ள போது இருக்கும் மன நிலை முதுமையில் மாறி விடுகிறது. அனுபவிக்கும் போதுதான் புரிதல் ஏற்படும் பொதுவாக. ஆனால் நமக்கு முன்னால் வாழ்ந்தவர்களின் வாழ்வைக் கவனிப்பது விலகி இருப்பதின் அவசியத்தைக் கற்றுத் தரும்.குடும்பிகள் என்று தனி அந்தஸ்து பெற்று விட்டதாய் நினைப்பவர்களும் விலகி இருப்பதே நலம்.
தன் சுகதுக்கங்களை இரண்டாம் பட்சமாக்கி அக்கா,தங்கை,அண்ணன்,தம்பி குடும்பத்துடன் தங்களை முழுமையாக இணைத்துக் கொண்டு தியாக வாழ்வு வாழ்பவர்கள் எந்தெந்த காலகட்டத்தில் எப்படி நடத்தப் படுகிறார்கள்?இவர்களை இந்தக் கட்டுரையில் 'இன்னூரம்மா 'என்று நாமகரணம் சூட்டிக் கொள்கிறேன்.அந்த வீட்டுக் குழந்தைகள் தங்கள் அம்மாவிற்கு இணையாகக் கொள்ளும் நபர் என்று பொருள்.சிறிய வயதில் குடும்ப பாரம் சுமக்கத் தொடங்கும் ஆண்கள்,பெண்கள் இருபாலருக்கும் இந்நூரம்மாக்கள் தெய்வம் போலத்தான் தோன்றுகிறார்கள்.இளம் கணவன் மனைவிக்கு ஒரு பாலமாய்,அவர்கள் விஷமக் குழந்தைகளுக்கு நல்வழி காட்டும் ஆசானாய், அந்தக் குடும்பத்திற்கு என்ன பிரச்சினை என்றாலும் தோள் கொடுக்கும் தேவதையாய் ,தேவைப் பட்டால் பொருளாதார உதவியும் செய்ய ஓடி வரும் காமதேனுவாய் அவர்கள் எடுக்கும் அவதாரங்கள் நிறைய.அவற்றை - அந்த உதவிகளை ,சார்ந்திருக்கும் குடும்பம் மதிக்கவே செய்கிறது.இல்லை என்று சொல்லவே மாட்டேன்.பல வீடுகளில் அவர்களுக்குத் தரப் படும் கௌரவம் அலாதியானது.நூறு சதவிகிதம் உண்மையும் கூட.ஆனால்--தள்ளி நிற்க வேண்டும்.மனது முழுக்க அன்பிருக்கலாம்.குழைவு கூடாது.ஏமாற்றம் அடையவே அடையாத எதிர்பார்ப்பு என ஒன்றிருந்தாலொழிய அதை வைத்துக் கொள்ளக் கூடாது.அப்படி எதுவும் எனக்குத் தெரிந்து இல்லை.முக்கியமான இன்னொன்று.சுய மதிப்பீடு.கொடுப்பதும் பெறுவதும் சமமாக நிகழ்ந்துள்ளது என்ற புரிதல்.கொடுத்தது அதிகம் என்று எண்ணிக் கொண்டால் கர்வம் வரும்;நான் இல்லை எனில் இவர்கள் நிலை என்ன ஆகி இருக்கும் என்ற ஆணவம் வரும்;சுயபச்சாதாபம் வரும்.நான் மெழுகுவர்த்தி,கருவேப்பிலைக் கொத்து என்ற வசனங்கள் தோன்றும்.எடுத்துக் கொண்டது அதிகமோ என்று தோன்ற ஆரம்பித்தால் இன்னும் மோசம்.பயம் வரும்.இவர்கள் இல்லையேல் என்ன ஆகுமோ என்ற பீதி வரும்.கண்ணுக்குத் தெரியாத மாய சங்கிலிகள் பிணைக்க ஆரம்பிக்கும்.கடன்பட்டவர் நெஞ்சக் கலக்கம் நான் கூற வேண்டுமா என்ன?கம்பன் ,ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியைப் பார்த்துக் கலங்கும் ராவணனை,கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்கிறார்.கடன் அவ்வளவு கொடிது.பொருள் கடன் மட்டும் இல்லை.கடன் பட்டுள்ளோமோ என்ற எண்ணமும்தான்.பளிச் என்று கூறவா?இந்நூரம்மாக்கள் ஒரு குடும்பத்திற்கு ஆக்சிஜனும் இல்லை.கறிவேப்பிலையும் இல்லை.இயல்பாய் எடுத்துக் கொண்டால் மன ஆரவாரமும் இல்லை.
இனி போஸ்ட் தலைப்பிற்கு நீதி வழங்கி விடலாமா?அறுபது வயது வரை பெரிய பிரச்சினைகள் ,மாற்றங்கள் இல்லை,இவர்களுக்கு.இந்நூரம்மாவின் வயது அறுபது தாண்டும் நேரம் வீட்டுக் குழந்தைகள் கல்யாணம் நடந்து விடுகிறது.அந்த வீட்டின் பெரிய தம்பதியினருக்குத் தனிமை கிடைக்கிறது.அழுத்தங்கள் குறைய ஆரம்பிக்கின்றன.ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முன் இல்லாத அளவு நேரம் கிடைக்கிறது.முதுமை அவர்களையும் எட்டிப் பார்க்கிறது.சிறு உடல் உபாதைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.நேற்று வரை,பெற்றோரையும் மனைவியையும் balance பண்ணத் தெரியாது,திண்டாடி,இந்த மட்டில் நம் மனைவியையும் குழந்தைகளையும் ஒருத்தி கவனித்துக் கொள்கிறாளே என்று நிம்மதி அடைந்திருந்த கணவன்மார்கள்,பெற்றோரை நல்லபடி அனுப்பி வைத்து விட்டு,மனைவியிடம் திடீர்க் கரிசனம் காட்டத் தொடங்குகிறார்கள். ஓய்வு பெற்றாயிற்று.வேறு பெரிய வேலைகள் இல்லை.ஹாலில் உட்கார்ந்து டி வி பார்த்துக் கொண்டே சாப்பிட்டு மனைவியை நாலு தோசை சாப்பிடுவதற்குள் நாற்பது தடவை சமையல் அறைக்கும் ஹாலுக்கும் நடக்க வைத்ததை எல்லாம் பண்ண அவர்களுக்குத் தேவை இல்லை.ஒழுங்காக சாப்பாட்டு அறை வந்து சாப்பிடுவார்கள்.முடிந்தால் ஏதேனும் உதவியும் செய்வார்கள்.மனைவிக்கு மாத்திரை எடுத்துத் தருவார்கள்.நேற்று வரை,தான் வள் என்று விழுந்த போதெல்லாம் கண்ணைக் கசக்கின அல்லது மௌனப் போர் நடத்தின மனைவியை சமாளிக்க உதவின இந்நூரம்மா இரண்டாவது இடம் நோக்கி நகர்த்தப் படுகிறாள் .
இவர்களையாவது ஒரு பக்கம் சேர்த்துக் கொள்ளலாம்.கல்யாணம் ஆன பெண்களை மட்டும் நம்பவே கூடாது.கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் தியரிதான் அவர்களுக்கு.எனக்கும் என் புருஷனுக்கும் நடுவில் இவள் யார் என்று எப்போது கேட்பார்கள் என்று சொல்லவே முடியாது.மேலும் சுலபமாகத் திருப்தி அடையக் கூடிய பேதமை உணர்வுடன் அல்லவா பெண்கள் இயல்பு படைக்கப் பட்டுள்ளது!! கணவனுடைய சிறு கரிசனங்கள் அவர்களை உணர்வுப் பிழம்புகள் ஆக்கி விடும்.உணர்ச்சி மேலோங்கிய நிலையில் ஞாயங்களுக்கு முதல் இடம் இல்லை.சிறு வயதில் சாதுவாக இருந்தவர்கள் தான் ஒரு மாமியார்,பாட்டி என்ற பதவி அடைவதை ஒரு கௌரவம் போல் எண்ணி,ஒரு மிதப்பில் செயல்பட ஆரம்பிக்கிறார்கள்.தன் கணவன் மட்டும் இன்றி,தன் மருமகளோ அல்லது பேரனோ இந்நூரம்மாவிற்கு தன்னைவிட சற்று அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது கூட அவர்களைக் கடுமையாய்ப் பாதிக்கிறது.பேச்சின் தன்மை மாற்றம் காண்கிறது.
வீட்டின் குழந்தைகள் அடுத்தது.இளம் வயதில் இந்நூரம்மாக்களின் கழுத்தைக் கட்டிக்கொண்டு தொங்கி இருப்பார்கள்.தங்கள் அம்மாக்களுடன் சிறு விஷயங்களுக்கெல்லாம் பழி சண்டை போட்டிருப்பார்கள்.ஒரு buffer ஆக இந்நூரம்மாக்களை நினைத்திருந்திருப்பார்கள்.ஒரு கல்யாணம் ஆனால் எல்லாம் தலைகீழ்.அவர்கள் புக்ககம் போனவுடன் அம்மா பாசம் பொங்கி வழிய ஆரம்பிக்கும்.என் அம்மா எப்படியெல்லாம் கஷ்டப் பட்டாள் .உனக்கு வேறு பொறுப்புகள் இல்லை.என் பொறுப்பை சுமந்தாய்,என்ற ரீதியில் பேச ஆரம்பிக்கிறார்கள்.இதை எல்லாம் கற்பனையில் கண்டு எழுதவில்லை
.சுமார் பத்து குடும்பங்களையாவது பார்த்து விட்டு எழுதுகிறேன்.இந்நூரம்மாக்கள் பற்றி கரிசனத்துடன் நினைக்கும் ஒரேயொரு குடும்பத்தைக் கூட சந்திக்காததால் எழுதுகிறேன்.அதனால் அவர்களுக்கு ஒரு செய்தி சொல்ல விரும்பி எழுதுகிறேன்.
மாறும் நெஞ்சங்களைக் கட்டாயம் தரிசிப்பீர்கள்.முதலில் இருந்தே தெளிவாக இருங்கள்.அன்பாக இருக்க வேண்டாம் என அர்த்தம் பண்ணிக்க கொள்ள வேண்டாம்.அரவணைக்கும் அன்பு மட்டும் செலுத்த நம் எல்லோருக்கும் அனுமதி உண்டு.அதே போல் லகானிடப் பட்ட குதிரை போல் ஓட அவசியம் இல்லை. சாதாரணமாக , சக்திக்கு உட்பட்டு செய்யக் கூடியதை எல்லாம் அமைதியாக செய்து கொண்டிருத்தல் போதுமானது. WE SHOULD NOT STRETCH OURSELVES BEYOND A LIMIT.பின்னால் மனிதர்கள் வேறு முகம் காட்டினால் "நாம் என்ன இழந்து விட்டோம்?நம்மைத் தொலைத்து ஒன்றும் செய்யவில்லையே " என ஆறுதல் அடைய முடியும். இல்லை என்றால் என் வீட்டு இந்நூரம்மா (யார் என சொல்ல மாட்டேன்) போல் மனம் கோழையாகும்.தேவை இல்லை.
ரஞ்ஜனி த்யாகு
MOTHER PROTECTS
மஞ்சுளா ரமேஷின் சினேகிதி நவம்பர் 2016 issue ல் வெளிவந்துள்ள கட்டுரை
மஞ்சுளா ரமேஷின் சினேகிதி நவம்பர் 2016 issue ல் வெளிவந்துள்ள கட்டுரை