ஞாயிறு, 12 ஜூன், 2016

மறுபடியும்


பல நாள்களுக்குப் பின் இந்த சந்திப்பு.ஒவ்வொரு வாழ்விலும் ஏதேனும் ஒரு விஷயம் மற்றெல்லாவற்றையும் விட அதிக முக்கியத்துவம் பெறுகிறது. தனி மனித குணங்களின் படி அந்த மையப்புள்ளி ஒவ்வொருவருக்கும் ஒன்று.எனக்கு அது என் பெற்றோரோ என நினைக்கிறேன். சென்ற வாரம் என் தம்பி என் வயதான பெற்றோரை இங்கு கொண்டு விட்டு விட்டு மூன்று நாள்கள் வெளியூர் சென்றான்.Shakespeare என்ற தீர்க்க தரிசி சொன்ன second childhood ன் நிதர்சனம் ஏற்படுத்தின தாக்கம் எழுத்தில் வடிக்க நான் அவர் போல human mind ஐப் படித்த ஒரு ஜீவன் ஆனால்தான் சாத்தியம்.இதை எழுதத் தொடங்கின போது இருந்த என் அப்பா இன்று இல்லை. என்னால் அதைத் தாங்க முடியவில்லை.  .மறுபிறவி,  நல்ல கதி ,அமைதியான மரணம் ,யாருக்கும் தொல்லை தராது மறைந்த தூய ஆன்மா, இன்னும் இருந்திருந்தால் அவர் அடைந்திருக்கக் கூடிய கஷ்டங்கள், நாம் எல்லாரும் ஒரு நாள் இதே போல மரணிப்போம் என்பது போன்ற பல உண்மையான ஆறுதல் வார்த்தைகளைக் கடந்த நான்கு நாள்களாய்க் கேட்கிறேன்.அவையனைத்தையும் தாண்டி ஒரு பெருவலி நிற்கிறது. அது நான் மறையும் போதுதான் மறையும். உப்பும் நீரும் சேரச் சேர வலிகள் மறையும் என்ற பொய்யை நான் நம்பவில்லை.நிரந்தரப் பிரிவுகள் வடுக்கள்தான்.வடுக்கள் காலம் கடந்து வலிப்பதில்லை.ஆனால் தங்கி விடுகின்றனதானே?மறுபிறவி எனக்குத் தெரியாது.நம்புகிறேன். அப்படி ஒன்று உண்டென்று.ஆனால் அப்பா என்றால் எனக்கு என் அப்பாதான்.அம்மா என் அம்மாதான்.பட்டினத்தார் பெற்ற ஞானம் சித்தித்தால் அன்றி இது எத்தனையாவது கர்ப்ப வாசம் என்றெல்லாம் பேசுவது என் வரையில் சாத்தியம் இல்லை. என்னை நானே உற்று நோக்கிக் கொள்கிறேன்.அன்று வந்து இரங்கல் தெரிவித்த அனைவரையும் கூட நினைத்துப் பார்க்கிறேன். ஒரு சிலையின் ஒரு பகுதி உடைந்து போனால் அது முழு சிலையா? அது போல் ஏதோ ஒரு சந்தோஷம் நீங்கி விட்டதே.என்னை விட்டு விடலாம். காற்றாகிப் போய் என் மனதில் ஒரு நிரந்தர வெற்றிடம் உண்டாக்கிய என் அப்பாவையும் விட்டு விடலாம். ஆனால் அம்மா....என்ன பண்ணட்டும்?எப்படி வெளி வருவாள்!

நடு இரவில் என் தங்கை அப்பாவின் ஒரு புகைப்படம் அனுப்பி இருந்தாள் காலை அதைத்தான் முதலில் பார்த்தேன். எனக்கு photos பார்ப்பது பிடிப்பதில்லை.The memories haunt me.பழைய சம்ப்ரதாயங்களில் எல்லாம் அர்த்தம் உள்ளதாய்க் கூறுகிறார்கள்.நான் வந்த வழியும் வளர்ந்த முறையும் எனக்கு அந்த நம்பிக்கையைத் தந்தாலும் எனக்கு எதுவும் பிடிக்கவில்லை. இருக்கும் போது செய்யாத எதையும் இறந்த பின் செய்வது போலித்தனம் போல் தோன்றுகிறது.ஆனால் இந்த வாக்கியம் உலகத்தை உற்று நோக்கிச் சொல்வது.  என் அப்பா சிங்கராஜா போலத்தான் வாழ்ந்தார்.மறைந்தார்.என்  தம்பி போல மகனை அடைந்தது அவர் வாங்கி வந்த வரம்.Mutual belief பற்றி நினைக்கிறேன்.ஒரு நாளும் தன் மகன் பற்றி அப்பா எந்த சந்தேகமும் கொண்டதில்லை.அவரைப் பொறுத்த மட்டில் அவன் அவர் தோளில் சவாரி செய்த குட்டி நாராயணனே.பெற்றோரைக் கடைசி வரை பேணி ஆக வேண்டும். ஜீவனுடன் உள்ள பெற்றோர் தராத வாழ்த்தை ஈமக் கடன்களைக் கடனே என ஆற்றும் மகனுக்கு மறைந்த ஆன்மா தரும் என்று விழுந்து விழுந்து லஷங்கள் செலவழித்து காரியம் செய்கிறார்கள். பயம். பயம் தவிர வேறில்லை.ராமதீர்த்தம் என்ற பெயர் கொண்ட அந்த இடத்தில் ஒரு industry யே இயங்குகிறது. மகத்தான சேவை.அதை நடத்துபவர்களுடையது.ஆனால் ஸ்ரத்தையுடன் செய்வது ஸ்ராத்தம்.அங்கு காரியம் செய்ய வருபவர்கள் அமைதி காக்க வேண்டாமா?குறை சொல்வது நோக்கம் அல்ல.காத்திருக்கும் நேரம் கவனித்தவை.மௌனம் காக்க வேண்டியோர் ஓயாது தப்பு தப்பாய் பேசுவது கேட்க நேர்கிறது.இறுதிப் பயணத்துக்கு ஒரு ஜீவனை அனுப்பி விட்டு அவர் வாழ்க்கை பற்றி என்ன postmortem வேண்டிக்கிடக்கு.இருக்கும் போது அந்த ஜீவனை லட்சியமே செய்யாதவர்கள் இறந்த பின் வந்தென்ன வாராது இருந்தால் என்ன. இருப்பவர்களைக் கொண்டாடினால் அந்த உயிர் மகிழும்.உயிரும் உடலும் பிரிந்த பிறகு எதற்கு கரிசனம்.உயிருடன் உள்ள ஒருவரிடம் சரியான படி நடந்து கொள்ளாத யாரும் தயவுசெய்து அவர் இல்லாது போனபின் அழுது அனாவசியமாய் நேரம் செலவழிக்காதீர்களேன்.

நடுவில் மறுபடி இடைவெளி.அதனால் என்ன ?இன்னும் எண்ணங்கள். வாழ்வின் நிதர்சனங்களை அசை போட உதவிய நாள்கள். ரத்த சம்பந்தமோ மற்ற சம்பந்தமோ நம் இன்பங்களையும் சரி துன்பங்களையும் சரி நம்மால் மட்டுமே உணர முடியும்.ஒவ்வொருவரின் பயணமும் தனியானது. நம் வலியை மற்றொருவர் தரும் ஆறுதல் குறைக்கும் என்று நினைத்தால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.சந்தோஷம் வருத்தம் இரண்டையும் அப்பட்டமாக  எதிர்நோக்குவோம்.பெரும்பாலான நேரங்கள் நாம் நம்முடன் பேச வேண்டும்.லூசு என்று உலகம் நினைக்கலாம்.கவலை தேவையில்லை.இந்த மாதிரி சமயங்களில் கூடத் தன்னிலை இழக்கலாகாது.அழக் கூடக் கூடாது என்ற பொருளில்லை.மற்றவர் தோளில் சாய்ந்து அழாதீர்கள்.ஏற்கெனவே துன்பம் சுமந்த மனது.அவர்கள் நம்மைக் கீழே போட்டால் அடி அதிகமாகப் படும்.Normal நாள்களில் அடி வாங்குவது தேவலை.மனம் வருத்தத்தில் இருக்கும் நேரம் சின்னதாய் யாராவது தட்டினால் கூட வலிக்கும்.வம்பு வேண்டாமே?

இது வரை ஒரு பக்கப் பார்வை.அந்த மற்றொரு பிரிவினர் பற்றிப் பேசாவிட்டால் வேதாளம் விக்ரமாதித்தனுக்குச் சொன்னது போல் என் தலை வெடித்துவிடும்.ஆறுதல் தருபவர்கள் உண்மையாக இருத்தல் வேண்டும்.முடியாத போது சும்மா இருப்பது இன்னும் மேல்.உலகத்தில் உள்ளதைத்தானே சொல்கிறேன் என வேண்டாத அல்லது வருத்தத்தில் இருப்பவர்களைக் கலங்க வைப்பது போன்ற விஷயங்கள் பேசாதிருந்தால் புண்ணியமாகப் போகும்.என் அப்பா மறைந்த தினம் சிலர் என் அம்மாவைப் பார்க்காது போயிருக்கலாம் என்று தோன்றியது.இன்னொன்று.உண்மை பேச வேண்டும்.உண்மைகள் எல்லாவற்றையும் பேசித்தான் தீர வேண்டும் என அவசியம் இல்லை.யார் சொல்லியாவது நாம் கேட்கிறோமா?பின் மற்றவர் விஷயத்தில் தலையிட மட்டும் நாம் யார்?அவரவர் தன்னை மட்டும் சரியாகப் பார்த்துக் கொண்டால் போதாதோ?நாட்டாண்மை பண்ண என்று கிராமங்களில் தனியாக ஒருவர் இருப்பார்.தடி எடுத்தோர் தண்டைக் காரர் ஆவது எங்கனம்?நம்மிடம் ஒரு விஷயம் முன் வைக்கப் பட்டுக் கருத்துக் கேட்கப் பட்டால் ஒழிய அதில் ஏன் தலையிட வேண்டும்?

எளிமையாக வாழ்வதைத் தொலைத்து விட்டோம்.சுயநலம் போல் தெரிந்தாலும் நான் கவலைப் படவில்லை.தன்னைப் பார்த்துக் கொள்வதுதான் முக்கியம்.ஏதும் மாற்றம் மற்றவர் கொண்டு வந்து நம்மை நிம்மதியாக்குவார்கள் என்பது பொய்.நமக்கு அமைதியை இறைவன் தர முடியும்.நாமே உருவாக்கிக் கொள்ள முடியும்.பேச்சும் இந்த மாதிரி நேரங்களில் பெரும் பங்கு வகிக்கிறது.வருத்தத்தில் உள்ளவர்கள் அதை ஒரு privilege போல எடுத்துக் கொண்டு,"நான் வருந்துகிறேன் . இப்போது என்ன பேசினாலும் தப்பாக யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது.அல்லது மாட்டார்கள்"என்று ஒரு கணக்குப் போடுகிறோம்.அது மஹா தவறு .புரிந்து கொண்டேன்.அதே நாணயத்தின் மற்றொரு பக்கம் பார்க்கிறேன்.இழப்பை சந்தித்தவர்களின் நெருங்கிய மற்ற உறவுகள் சற்று அதிகப் புரிதலுடன் நடந்து கொள்ளுங்கள்.கொடுப்பது வேறு உருவில் திரும்ப வரும்;கொடுப்பதே திரும்ப வரும்.அதுதான் நியதி.அப்படி என்றால் ஒருவருக்குத் தேவைப் படும் போது ஆறுதல் தரும் சக்தி உங்களுக்கு இருப்பதாய் அவர் நினைக்கும் பட்சத்தில் தந்து விட்டுப் போங்களேன்.காசா பணமா?

இன்று போய் அம்மாவுடன் சேர்ந்து அப்பாவுடைய உடைமைகளை இடம் மாற்றும் வேலை செய்து வந்தேன். அப்பாவின் வாசனை சுமந்த சட்டைகள் ,அப்பா காலம் முழுவதும் உபயோகப் படுத்தின பட்டை டம்ளர் ,ஹோமியோபதி புத்தகங்கள் ,குளிகைகள், அடிக் கோடிட்டு பல முறை படித்த அன்னை புத்தகங்கள் எல்லாம் ஏதோ விழுந்து விட்ட பேரரசின் நினைவுச் சின்னங்கள் போல மனசு தொட்டது.நான் எப்படி இருக்க வேண்டும்.எது சரி?அப்பா மறைந்த முதல் 15 நாள்கள் யாருடனும் பேச வேண்டும் போலத் தோன்றவில்லை. என் தோழர்கள் கேட்டனர் , 'அப்பா மறைவு வாழ்வின் நிலையாமையை உனக்குக் கற்றுத் தந்ததா ,அதுதான் மௌனமா' என....யோசித்தேன்.உண்மையில் நிலையாமையை விட முக்கியமாய் வேறொன்றைக் கற்றுத் தந்து போனார் அப்பா.என்ன தெரியுமா ? இருப்பவர்கள் எவ்வளவு முக்கியம்  என்று.நீர்க்குமிழி போன்ற வாழ்வில் எதையெல்லாம் தர முடியுமமோ இன்று இப்போது தந்து விடு. எப்ப வேண்டுமானாலும் குமிழி உடையும் .பணமோ, பொருளோ, அன்போ ,நேரமோ ,ஆதரவோ, கவனமோ, உதவியோ எதுவானாலும் உடனே தா. எதற்கு நேரம் கடத்துகிறாய் ? என் பெற்றோர் இங்கு வந்து தங்கிய நேரம் என் உடல் நிலை சரியில்லை.அதைத் தாண்டி அம்மா அப்பாவைக் குழந்தைகள் போல் கவனித்துக் கொண்ட த்ருப்தி ,என் மனதைச் சற்று சாந்தமாக்குகிறது.அப்பா மறைவு சோகம்தான்.ஆனால் அது பாடம் தந்தது.

நல்லவை கெட்டவை வீடுகளில் நடக்கும் போது விவாதங்கள் தவிர்க்க இயலாதவை.கூப்பிட்டால் மட்டும் கலந்து கொண்டு நடப்பவைகள் அனைத்தையும் பார்வையாளராய் கவனிப்போம். குரல் உயர்த்துவது அசிங்கம்.எப்போதுமே.அடித்துக் கொள்வதற்கு சமமான வன்முறை, பெரிய குரலில் பேசுவது.பொருள்கள் மேல் கோபம் காட்டுவது எல்லாம்.பிரசவ வைராக்கியம்,ஸ்மசான வைராக்கியங்கள் ஏற்படுகின்றன.தொடர்வதற்கு முயற்சி தேவைதான்.பாரதியார் ஆத்மஜயம் என்ற பாட்டில் கூறுகிறார்,"கண்ணில் தெரியும் பொருளைக் கை கவர்வது சாத்தியம் என்றால் மண்ணில் தெரியும் வானம் நம் வசப்படலாகாதோ"என்று.புலனடக்கம் எல்லா மேன்மையும் தரும் என்று உணர்ந்த பின்னரும் புலன்களை வெற்றி கொள்ள வேண்டாமா என்கிறார்.முழுமையாகப் பண்ணாத ஒன்றை எழுத,கை கூசுகிறது.கை கூப்பி இறைவனை அழைக்கத் தோன்றுகிறது.ஆனால் ஒவ்வொரு நொடியும் உண்மையாக இருத்தல் போதும்.உண்மைதான் அமைதி தரும்.உண்மையும் அமைதியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.ஒன்று உள்ள இடத்தில் மற்றது இருந்தே தீரும்.அதனால்தான் என் அப்பாவின் இறுதி நாள்கள்,இறுதி யாத்திரை எல்லாம் சுகமாக அமைந்ததாய்க் கருதுகிறேன்.அதையே விழைகிறேன்.புலனடக்கம் பயில வேண்டுமானால் விடாமுயற்சி தேவை.ஆனால் எப்போதும் மனம் வாக்கு காயம் ஒன்று பட்டு உண்மையாய் இருத்தல் தானாக நிகழ்வதுதான்.Just Be .வாழ்வை serious ஆக எடுத்துக் கொண்டு துறப்பதை உயர்வாகக் கூறுகிறோம்.அது மகான்களுக்கு சரி.எளியவர்களான நாம் ஒன்றைத் துறந்து விட்டுத் துவள்வதில் பலன் இல்லை.அதை விட வையத்தில்  வாழ்வாங்கு வாழ்வது மேல்.

மறுபடியும் என்று தலைப்பிட்டு ராமாயணம் போல் நீளமாகி விட்டது இந்த போஸ்ட்.Please bear with me.சந்திக்கலாம்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

1 கருத்து: