வியாழன், 29 டிசம்பர், 2016

விடை பெறுகிறேன்

இந்த வருஷத்தின் கடைசி எழுத்து.விடைபெறுகிறேன் என்பதற்கு இனி எழுத மாட்டேன் என்பது பொருளல்ல.எழுத்து என் வெளிஉலகத் தொடர்பு.உங்கள் ஒவ்வொருவருடனான தொடர்பு.அது நான் கடவுளின் கருவியாய் இவ்வுலகில் உள்ள வரை தொடரும்.எல்லா ஆண்டுகளும் ஏதோ முக்கியத்துவம் வாய்ந்தவையே.கடந்த,வரவிருக்கிற எல்லா ஆண்டுகளும்.மனிதர்கள் போலவே,மரங்கள்,நாள்கள் மணித்துளிகள் எல்லாமும் உயிர்ப்புள்ளவை.தொடக்கம் உள்ள அனைத்திற்கும் முடிவும் உண்டு.இறைவன் முடித்து வைத்தால் எஞ்சுவது அமைதி.மனிதன் முடித்து வைத்தால் ஆரவாரம்.ஆரவாரத்தை விட அமைதி நல்லது என்பதே இந்த போஸ்ட்.

நாடகத்தைத் தொடங்கியவன் நடத்தட்டும்.விட்டு விடலாம்.மூளை ,மனித மூளை என்ற ஒரு சதைக் கோளத்தை தலையில் இறுமாப்புடன் தாங்கி கொண்டு,இயற்கையின் வழியை மறித்துக் கொண்டு நிற்க வேண்டாம்.தெரிந்து கொள்ள வேண்டிய ஆயிரம் விஷயங்கள் உள்ள போது ,தெரிந்து கொள்ளவே இயலாத ,உதாரணமாய் மனித மனம் சம்பந்தமான ஆராய்ச்சிகள் எதற்கு?வர்தா புயலில் மரங்களின் மரணம் நிகழ்ந்த நேரம் மன சாம்ராஜ்யத்தில் சில ஜனனங்கள்.சுற்றுப்புறம் இருளில் உள்ள போது வெளியில் இருக்க வேண்டிய ஒளி உள்ளொளியாய் மாறுகிறது.ஆனால் அது நிரந்தரமாக தங்க ப்ரயத்தனம் வேண்டாமா?

ஒன்றிலிருந்து தள்ளி இருக்க ,விலக,விலக்க வேண்டும்.அல்லது விலக்கப் பட வேண்டும்.முதலாவது நம் கையில்.இரண்டாவது விதிவசம்.விலகல் கெட்ட வார்த்தை இல்லை.புரிதல்.2016 முடிகிறது என்றால் வருத்த டோன்.நாமே நல்லபடி வழியனுப்பி விட்டால் மகிழ்ச்சி.ஏன் ஏதோ ஒன்று நம்மை வேண்டாம் என்று சொல்லிப் போக வேண்டும்?நீ தந்தவற்றுக்கு நன்றி.தராமல் போனதாய் நான் தவறாக எண்ணிக் கொண்டிருப்பவைகளுக்கு சமாதானக் கொடி .இனி புரட்ட முடியாத ஏடுகள்!திரும்ப சந்திக்கப் போவதில்லை என்ற 363 நாள்கள்.இந்த வருடம் சந்தித்த பிரிவுகள் கொஞ்சமா?மரங்கள் மட்டுமா?மரங்கள் போன்ற மாமனிதர்களும் அல்லவா?காலம் சிலவற்றை நம்மிடம் இருந்து கவர்ந்து சென்றுதானே தீரும்!சந்தோஷமாக விட்டால் விடுதலை.

நாம் தவற விட்ட ஒன்று இயல்பாக இருத்தல்.ஸ்பான்டேனிட்டி என்று ஆங்கிலத்தில் கூறுவோம்.இயல்பாய் எளிமையாய் இருக்கலாமே.காலம் கடந்து கொண்டே இருக்கிறது.நடுநடுவே வேலைகள் அலைக்கழித்து விடுகின்றன.நேற்று விட்ட இடம் இது.இன்று தொடர்கிறேன்.இது ஒரு எண்ண கோவையே.தொடர்பற்று இருந்தால் மன்னிக்கவும்.பலசமயங்களில் நம் ஆழ்மனதில் உண்டாகும் குரலை தெய்வத்தின் வாக்கு எனத் தவறாக நினைக்கிறோம்.மனம் முழுமையாய் சமனப் பட்ட சில ஆத்மாக்களுக்கு மட்டுமே தெய்வம் உள்ளிருந்து வழிநடத்தும் பாக்கியம் அமைகிறது.அப்படி வழிநடத்தப் படுவோருக்கு உலக வாழ்வு துன்பம் இல்லை.எதுவும் துன்பம் இல்லை.ஆனால்,சாமானியர்களான நாம் சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு நம் மனம் எழுப்பும் குரலை கடவுள் சொல்வதாய்க் கற்பனை செய்து கொள்கிறோம்.Result obvious ஆக perfect ஆக இருப்பதில்லை.அமைதி அருள படுகிறது.ப்ரயத்தனப் பட்டுத் தொலைத்து விடுகிறோம்..பகவான் ரமண மகரிஷி சொன்ன சும்மா இரு என்பது தவிர வேறென்ன மருந்து உள்ளது??Spontaneous ஆக இருப்பது நன்று.ஆனால் அப்படி இருக்கிறோம் என்ற உணர்வும் அற்று இருப்பதே முழுமை.

2016 எல்லாம் தந்தது.ஆனால் மறைந்த என் அப்பாவில் தொடங்கி,வடுக்களையும் தந்து செல்கிறது.2017 நல்லன தரும் என நம்புகிறேன்.இறைவனிடம் மண்டியிடுகிறேன்.
1.உலகம் அமைதிப் பூங்காவாகட்டும் என.
2.மனம் நல்லதையே எண்ண அருள் தா என.
3.யாரையும் புண்படுத்தாத வாக்கு அருள் என.
4.இயற்கை பயமுறுத்தாமல் இருக்க வேண்டும் என .
5.குழப்பங்கள் அற்ற விடியல்கள் வேண்டும் என.
6.நிம்மதியான உறக்கம் வேண்டும் என.
7.கொடுக்கப் பட்ட அன்பு புரிந்து கொள்ளப் பட வேண்டும் என.
8.என்னைச் சேர்ந்த அனைவரும்,(யார்தான் நம்மவர் இல்லை) உன் அருள் வட்டத்திற்குள்ளேயே இருக்கட்டும் என.
9.வாழ்வை அதன் போக்கில் எடுத்துக் கொள்ளும் பக்குவம் அருள வேண்டும் என.
10.சக மனிதர்கள் என்னை சந்திக்கும் போது அவர்கள் உள்ளிருந்து பேசுவது நீ என்ற எண்ணம் என்னை விட்டு அகலாதிருக்க வேண்டும் என.
11.எல்லோரிடமும் கபடற்ற நேசம் காட்ட எப்போதும் தெளிவான மனம் தா என.
12.யாரிடமும் எதனிடத்தும் எப்போதாகிலும் குறை காண்கின் அது என் மன விகாரம் அன்றி உலகின் தவறில்லை என்ற மாறாத எண்ணத்  தூய்மை கொடு என.

பட்டியல் நீள்கிறது.உலகக் கோளத்தின் ஒரு மூலையில் 2017 பிறந்து விட்டது.2016 க்கு நன்றி.அமைதியாக விடை கொடுப்போம்.Mind is incapable of understanding.Ignorant!It has weaknesses.It has to wait till the time comes to receive the light.Sri Aurobindo Mother says,Only the true light can give the mind understanding.It is not all that it has learnt nor all that it has observed nor all its so called experience of life,it is something else which is beyond it.கடந்த வருஷத்தின் சற்றே வருத்தும் நினைவுகளை surface க்கு கொண்டு வர வேண்டாம்.மனம் அமைதி அடையட்டும்.எல்லோருக்கும் இன்பம் தர புத்தாண்டு மலரட்டும்.கீதை சொன்ன கண்ணன் நம்மைக் காக்கட்டும்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

சனி, 3 டிசம்பர், 2016

பேராண்மை

பிறன் மனை நோக்காமையை, வள்ளுவர், பிறனில் விழையாமை அதிகாரத்தில் பேராண்மை என்று குறிப்பிடுகிறார். அது உயர்ந்த பதம். அவர் குறிப்பிட்ட பேராண்மைக்கு,  சாதாரணமாய் மற்றவர் மனைவியை நிமிர்ந்தும் பாரா நல்ல குணம் என்று மட்டும் பொருள் இல்லை. இன்னும் ஆழமான பொருள் இருந்திருக்கும். கருத்தினாலும் மனைவி அன்றி பிற    பெண்களைத் தொடாத , தவறாக அணுகாத நிலை அது. ராமாயணத்தில் அது லக்ஷ்மணனால் வெளிப்பட்டது. சீதையின் கால்கொலுசு தவிர பிற அணிகலன்களை அவரால் அடையாளம் காண முடியாததில் வெளிப்பட்டது பேராண்மை. ஸ்ரீராமன் மனிதனாக வாழ்ந்த கடவுள். அவதாரமே,  ஒருவனுக்கு ஒருத்தி என்பதைக் காட்டுவதால் அவரைத்  தனியாக வைத்து விடுவோம். இழுக்க வேண்டாம்.

பேராண்மைக் குணங்களில் முதன்மையானது பிறன்மனை நோக்காதிருத்தலாய் இருக்கலாம். ஆனால் இன்னும் பலவும் உண்டு.   இனியன பேசுதல், பேராண்மை. பிறர் விஷயத்தில் மூக்கு நுழைக்காமல் இருப்பது பேராண்மை. குரல் உயராதிருத்தல் பேராண்மை. வம்பு பேசாமல் இருப்பது பேராண்மை. எப்போதும் பேசுவது மட்டும் செய்து கொண்டிருக்காது செவி கொடுப்பது பேராண்மை. வீண் பெருமை அற்றிருப்பது பேராண்மை. வந்த பாதையை மறவாதிருப்பது பேராண்மை. வாழ்வில் சோர்ந்து போகாதிருத்தல் பேராண்மை. தவறைத் தவறென்று சொல்லும் தைரியத்தின் பெயர் பேராண்மை .யாரையும் அலட்சியப்  படுத்தாதிருத்தல் பேராண்மை. கொடை பேராண்மை. கோபத்தை வெற்றி கொள்வது பேராண்மை. கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டிருப்பது பேராண்மை. கட்டுப்படுத்தாதிருப்பது பேராண்மை. நம்பிக்கை பேராண்மை. விழுந்தாலும் மறுபடி எழ வேண்டும் என்ற போர்க்குணம் பேராண்மை. எளிமை பேராண்மை. அடக்கமும் ஒழுக்கமும் பேராண்மை. பிரச்சினைகள் வரின் முதலில் நேசக்கரம் நீட்டுவது பேராண்மை. இன்னும் சொல்ல ஆயிரம் குணங்கள் உள்ளன.

ஆண்மை என்பதால் எல்லாம் ஆண்கள் சம்மந்தப் பட்டதல்ல. ஆணிடம் சில பெண் தன்மைகளும், பெண்ணிடம் சில ஆண்  தன்மைகளும் இருந்தாலே அந்த ஸ்ருஷ்டி பூரணம் பெற்றதாகிறது. தாயுமானவனான அப்பாக்கள் இருக்கிறார்கள். ஜான்சிராணி போன்ற வீரப்  பெண்மணிகளும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் பேராண்மை கொண்டவர்களே. அவர்கள்தான் சரித்திரம் படைக்கிறார்கள். உள்ளது ஒரு வாழ்வு. அது ஏன் சாதாரணமாய் முடிய வேண்டும்? அப்துல்கலாம் அய்யா சொன்னது போல் ஏன் சரித்திரமாகக் கூடாது?

வெள்ளி, 2 டிசம்பர், 2016

காதல் ஒருவனைக் கைப் பிடித்தே


என் உயிர் அப்பாவின் உடல் தென் வடமாய் ,ஒரு ஒற்றைத் துணி மீது கிடத்தப் பட்டிருந்தது.மன ஆழம் வரை ஒரு வலி ஊடுருவி தேள் கொட்டினாற் போல் வலித்தது. அப்போது கூட ஒரு சிங்கம் உறங்குவது போலத்தான் தெரிந்தது.தொட்டுப் பார்த்து அறியாத அப்பாவின் சில்லிட்ட குச்சி போல் ஆகி விட்ட கைகளைத் தொட்டுப் பார்த்த போது கட்டுப் படுத்த இயலாது கண்ணில் இருந்து கங்கை புறப்பட்டது.ஏன் திடீரெனக் காற்றாகிப் போனாய் அப்பா?உன்னால் பேன் காற்றைக் கூடத் தாங்க முடியாதே ,இப்போ இந்த ஐஸ் பெட்டி கொண்டு வந்து விட்டார்களே,அதில் எவ்வளவு நேரம் தூங்குவாய்? 'குளிருதும்மா' ன்னு சொல்ல மாட்டாயா?இன்னும் கொஞ்ச நாள் இருந்து சொல்லிப் போயிருக்கலாமில்லே?

அழுதழுது ஓய்ந்து போன போதுதான் அம்மா ஞாபகம் வந்தது.'அம்மா எப்படி இருக்கா,அவளைக் கவனிக்கக் கூட இல்லையே,'.அவசரமாய் அம்மா,அப்பா அறைக்கு ஓடினேன்.அம்மா அசைவற்று நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள் .கண் கொட்டவும் மறந்தது போல். அப்பா சில நிமிடம் முன் படுத்திருந்த கட்டிலைப்   பார்த்த படி ,ஒரு வெற்றுப் பார்வையுடன்.மௌனம்.எங்களிடம் வெளிப் பட்ட ஆர்பாட்டமான அழுகை இல்லை.'அம்மா,அம்மா'...... பதில் இல்லை.பேச வைக்க செய்த எந்த முயற்சியும் பலன் தரவில்லை.காரியங்கள் ஆரம்பிக்கப் பட்டிருந்தன.எது நிற்கிறது?யாருக்காகவும் எதுவும் நிற்பதில்லை.யார் யாரோ வந்தபடி இருந்தனர். கூடம் நிறைந்து இருந்தது.அப்பாவுக்கு ரொம்பக்  கூட்டம் பிடிக்காதே, அவர் அமைதியாகப் பயணப்படட்டும் விட்டு விடுங்களேன் என்று மனது ஒவ்வொருவரிடமாய் சென்று இறைஞ்சியது.

தும்பைப்பூ போல வெள்ளை வேட்டியும் சட்டையும் போட்டுக் கொண்டு ஐந்து நிமிடம் தாமதமாய் வந்த ட்யூஷன் மாணவர்களை கதிகலங்க வைத்த தந்தை தான் எங்களுக்கு பரிச்சயம்.தப்பு பண்ணினவர்களை அழ வைத்துதான் அவருக்குப்  பழக்கம்.இப்படிக்  கலங்கி நிற்கும் அழுமூஞ்சி சுற்றத்தைப்  பார்க்க அவருக்குப்  பிடிக்காது.அப்பா கோபக்காரர்தான்.ஆனால் பலாப்பழம் மாதிரி.இனிய உள்ளும்,  முள் போர்த்தின வெளியும் கொண்டவர்.குட்டி சட்டை போட்டு, கை பிடித்து, குமரன் பள்ளி கூட்டிச் சென்ற நாள் தொட்டு அப்பா மடியில் உட்கார்ந்து கல்யாணம் பண்ணிக் கொண்ட வரை ஏதேதோ அலைக்கழிக்கும் நினைவுகள். அப்பாவின் எத்தனை முகங்கள். நல்ல மகனா,கணவனா,அப்பாவா என்று இனம் பிரிக்க இயலாத அப்பா.கடைசி நாள்களில் நினைவு மங்காத நிலையிலும்,  வீட்டில் இருந்தும் வானப்ரஸ்தத்தில் இருப்பவர் போல் அனைத்தையும் இரண்டாம் முறை யோசிக்காமல் இயல்பாக விலக்கின அப்பா, பணத்தை விரலால் கூடத் தொடாமல் தம்பி ஷ்யாமை முழுமையாய் நம்பி , அன்பால் கட்டுப் பட்டு சார்ந்திருந்த அப்பா, என்னைப் பெண் என்றும் தம்பியைப் பிள்ளை என்றும் எண்ணாது எங்களை ராஜா வீட்டுப் பிள்ளைகள் போல் நடத்திய அப்பா ,அனைத்துக்கும் சிகரமாக , அம்மாவை விட்டே தராத அப்பா. ஒரு வாரம் முன்னால் கூட ,"நம்ம ரெண்டு பேருக்கும் சேர்த்து புஷ்பக விமானம் வரும் சாரதா சேர்ந்துதான் போவோம் "என்றாரே.ஏன் கிளம்பினார்?எங்கும் நிழலாய்த் தொடர்ந்த அம்மாவைப் பற்றித் துளியும் எண்ணாது பயணப்படலாமாப்பா?உன் உயிர் , உடலை யோசிக்காமல் நீத்து விட்டு அம்மாவை அழைக்க இயலாமல்   தவிக்கிறதோ ?வருத்தம் எல்லாம்கோபமானது."போ அப்பா. நீ இல்லாத அம்மாவை ஜீவனுடன் எப்படி மறுபடி பார்ப்பேன்?" சொல்.

பரபவென சடங்குகள் ஆரம்பிக்கப் பட்டன.கண் முன்னால் ஒரு ஜீவன் பிரிவது பார்ப்பினும் வயிறு நான் இருக்கிறேன் என்று எல்லோருக்கும் சொல்லி விடுமே. இப்போது எல்லாம் துரித கதிதான்."நாராயணா நாராயணா "என்ற சத்தம் கூடத்தை கிடுகிடுக்க வைத்தது.அம்மாவா அது?அம்மா அழுதே பார்த்திராத நாங்கள் ஸ்தம்பித்துப் போனோம்.அவள் தலை முதல் பாதம் வரை வேதனை வெளிப் பட்டது.பிறர் முன் அப்பாவை நெருங்கிக் கூடப் பேசி இராத அம்மா கடைசியாய் ஒரு முறை அவரைத் தொட்டுத் தடவிப் பார்த்த பொழுது மனது ஊமையாய் அழுதது.அப்பாவின் அழகு முகம் பேரமைதி காட்டியது.ஒருவருக்கும் தொந்தரவு ஏதும் தராமல்,ஒரு ஊசி கூட உடம்பில் குத்தப் படாமல், 'வந்த வேலைதான் ஆகிவிட்டதே , இனி எதற்கு இங்கிருக்கணும் ?'என்பது போல் கிளம்பியதால் இறுதி மூச்சு பிரிகிற நேரம் முகத்தில் தங்கின அமைதி. ஜம்  மென்று தன்  இறுதிப் பயணத்தைத் தொடங்கி விட்ட அப்பாவா ,அல்லது அகம்,புறம் எல்லாவற்றிலும் மாற்றம் சந்திக்கப் போகும் அம்மாவா யார் என் உள்ளம் பொசுக்கும் சோகத்திற்கு அதிகக் காரணம் தெரியவில்லை.

நாள்கள் இறக்கை கட்டிப் பறந்தன.நாளை பத்து.உறவுகள் கூடிப் பேச ஆரம்பித்தது காதில் வெந்நீர் கொட்டினாற்  போல இருந்தது.அப்பா தன் வாழ்வில் வரும் முன்னரே உபயோகப் படுத்தின மங்கலப் பொருள்களை எண்பது வயது அம்மா விலக்குவதா . எதற்கு?இருபது வயதில் என் அம்மா பொட்டு வைத்துக் கொண்டுதானே இருந்தாள் ! அப்பா எங்கேயோ தனக்காகப் பிறந்து வளர்கிறார் என்றா வைத்துக் கொண்டாள் .எப்படி இதை சொல்வது?யாரிடம் கூற?மனது நிலை இழந்து தவித்த நேரம் தம்பி ஷ்யாம் கூப்பிட்டான்.

"கீதா,நாம் கொஞ்சம் பேசணும் இங்க வரியா"

"சொல்லு ஷ்யாம் "

"எல்லாரும் பேசறது உன் காதிலும் விழுந்திருக்கும்.கண்ணை மூடிக் கொள்வது போல காதை மூடற  சக்திதான் நமக்கில்லையே "

"ஆமாம் ஷ்யாம் .எல்லாரும் அவரவருக்குத் தோணினதைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.நாளை அவர்கள் அனைவரும் போய் விடப் போகிறார்கள்.எனக்கு வெட்டியான இந்த மூடப் பழக்கவழக்கங்களில் நம்பிக்கை இல்லை நீ என்ன சொல்றே?"

"அம்மாவின் இழப்பு பெரிதுன்னு சொல்றேன் கீதா.அது மனம் சம்பந்தப் பட்டது.இனி புறத்தில் இழக்க அம்மாவிடம் எதுவும் இல்லைன்னு நினைக்கறேன்"

இரண்டு பெரும் ஒரு கொடி மலர்கள் அல்லவா?என் தம்பி வேறு எப்படி யோசிப்பான்.

"ஆமாம் கீதா இந்த பத்து நாளா நினைத்துப் பார்க்கிறேன்.கணவனுக்கு முன்னால முதல்ல போயிடற பெண்களை சுமங்கலிகள்னு ஒரு பதவி போலக் கொடுத்து உலகம் கொண்டாட என்ன காரணம்?யாரோ ஒருவர் முதலில் போகத்தானே வேண்டும்?இது என்ன சினிமா டிக்கட்டா,சேர்ந்து வாங்கிக் கொள்ள?அம்மா போல, தன்  கடமையைக் கடைசி வரை செய்தவர்களை அல்லவோ இன்னும் கொண்டாடணும்? "

"ஆமாம்,பாரதி சொல்லவில்லையா,"காதலொருவனைக் கைப் பிடித்தே    அவன் காரியம் யாவினும் கை கொடுத்தே "என்று.அப்பாவோட கடைசி மூச்சு வரை அதைச் செய்த   பாரதி கண்ட பெண்ணல்லவா அம்மா"

"இந்த மாதிரி நேரத்திலும் பாரதியையும் வள்ளுவனையும் நினைவு கூறுவது கூட நம் பெற்றோர் ஜீன்தான் ,கீதா"

"ஆமாம். அம்மா நம் வரை நித்ய சுமங்கலிதான்.நம் அப்பா எங்கயும் போகலை.அம்மாக்குள்ளேயே இருக்கார்.அம்மா உலகத்திற்காக வேறு மாதிரி இருக்க முடிவெடுத்தாலும் நம்ம எடுத்துச் சொல்லிடலாம் ஷ்யாம்"


அம்மா எப்போதும் ஒரு யோகி போலத்தான். பத்து முடிந்தது.பதினோராம் நாள் அதே சலனமற்ற முகம்.கலக்கமற்ற ஆழ்ந்த பார்வை.உறவுகள் கூடி பதிமூன்றாம் நாள் சுபம் செய்தான பிறகு அவரவர் கிளம்பி ஆயிற்று.வீடு வெறிச்சென்றிருந்தது.மறுநாள் அம்மா இத்தனை நேரம் குளித்து அப்பாவுக்கு சாப்பாடு தரும் நேரம். இத்தனை நாள் சோர்வும் சேர்ந்து சற்று அயர்ந்த தூக்கம் எனக்கு. நானும் ஷ்யாமும் பேசினோமே தவிர அம்மாவிடம் எங்கள் விவாதம் பற்றி எதுவும் கூறவில்லை. சரி இப்போது சொல்லலாம் மெதுவாக என்று எண்ணமிட்டவாறு அறைக்குள் நுழைந்தேன்.அம்மா அன்னை படம் முன் உட்கார்ந்து இருந்தாள்.அரவிந்தர் அன்னை படத்துடன் சந்தனம் குங்குமம் இடப்பட்ட குட்டி அப்பா படமும் சேர்ந்து கொண்டிருந்தது.அம்மாவின் கண்கள் மூடி இருந்தன.நெற்றியில் வழக்கத்தை விட சிறிய ஒட்டுப் பொட்டு, எண்ணை இட்டு வாரி முடித்த தலைமுடி, பளிச்சென்ற பச்சை காட்டன் புடவை அதே கலர் சட்டையுடன் அம்மாவைப் பார்த்தவுடன் அனிச்சையாகக் கண் கலங்கியது.

அம்மா சத்தம் கேட்டுக்  கண் திறந்தாள்.

"ஏன் கீதா அழறே?அப்பாக்கும் உங்க ரெண்டு பேருக்கும் என்னை வேறு மாதிரி பார்க்கப் பிடிக்காதுன்னு தெரியும். அப்பா எங்கயோ போய் விட்டதா நான் நினைக்காத போது யாருக்காக மாறணும் சொல்.அதான் இந்தக் கோலம். நான் த்ருப்தியா இருக்கேன்.என் கடமைகளை சரியா செய்து விட்ட நிம்மதி. நானும் அப்பா போலவே உங்க யாருக்கும் தொல்லை தராமல் அழைப்பு வரும் போது போகணும்.என்னை அதே சந்தோஷமான அம்மாவாவே நீங்க பார்க்கணும்.அப்பாவுக்காக நிறைய அழுதாச்சு.என் மறைவில் நீங்க அதுவும் செய்யக் கூடாது.அப்பாவுடன் இருப்பதுதானே அம்மாக்கு சந்தோஷம் .அதான் கிளம்பி விட்டாள்னு நினைக்கணும்.சரியாம்மா" என்றாள்.

"சரிம்மா "என்று அம்மாவுடன் கண்மூடி அமர்ந்தேன்.சதியை, உடன்கட்டை ஏறும் மூடத்ததனத்தை ஒழிக்க அப்போது வேண்டுமானால் ஒரு  ராஜாராம் மோஹன்ராய் தேவைப் பட்டார்..இப்போது சமூகத்தில் புரையோடியுள்ள களைகளைக் களைய அம்மா போல எளிய கம்பீரமான பெண்களே போதும் என்று மனம் அமைதியில் ஆழ்ந்தது.

ரஞ்ஜனி த்யாகு

அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டிக்கு அனுப்பப் பட்டு பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுக்கப் படாத கதை .

MOTHER PROTECTS