சனி, 3 டிசம்பர், 2016

பேராண்மை

பிறன் மனை நோக்காமையை, வள்ளுவர், பிறனில் விழையாமை அதிகாரத்தில் பேராண்மை என்று குறிப்பிடுகிறார். அது உயர்ந்த பதம். அவர் குறிப்பிட்ட பேராண்மைக்கு,  சாதாரணமாய் மற்றவர் மனைவியை நிமிர்ந்தும் பாரா நல்ல குணம் என்று மட்டும் பொருள் இல்லை. இன்னும் ஆழமான பொருள் இருந்திருக்கும். கருத்தினாலும் மனைவி அன்றி பிற    பெண்களைத் தொடாத , தவறாக அணுகாத நிலை அது. ராமாயணத்தில் அது லக்ஷ்மணனால் வெளிப்பட்டது. சீதையின் கால்கொலுசு தவிர பிற அணிகலன்களை அவரால் அடையாளம் காண முடியாததில் வெளிப்பட்டது பேராண்மை. ஸ்ரீராமன் மனிதனாக வாழ்ந்த கடவுள். அவதாரமே,  ஒருவனுக்கு ஒருத்தி என்பதைக் காட்டுவதால் அவரைத்  தனியாக வைத்து விடுவோம். இழுக்க வேண்டாம்.

பேராண்மைக் குணங்களில் முதன்மையானது பிறன்மனை நோக்காதிருத்தலாய் இருக்கலாம். ஆனால் இன்னும் பலவும் உண்டு.   இனியன பேசுதல், பேராண்மை. பிறர் விஷயத்தில் மூக்கு நுழைக்காமல் இருப்பது பேராண்மை. குரல் உயராதிருத்தல் பேராண்மை. வம்பு பேசாமல் இருப்பது பேராண்மை. எப்போதும் பேசுவது மட்டும் செய்து கொண்டிருக்காது செவி கொடுப்பது பேராண்மை. வீண் பெருமை அற்றிருப்பது பேராண்மை. வந்த பாதையை மறவாதிருப்பது பேராண்மை. வாழ்வில் சோர்ந்து போகாதிருத்தல் பேராண்மை. தவறைத் தவறென்று சொல்லும் தைரியத்தின் பெயர் பேராண்மை .யாரையும் அலட்சியப்  படுத்தாதிருத்தல் பேராண்மை. கொடை பேராண்மை. கோபத்தை வெற்றி கொள்வது பேராண்மை. கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டிருப்பது பேராண்மை. கட்டுப்படுத்தாதிருப்பது பேராண்மை. நம்பிக்கை பேராண்மை. விழுந்தாலும் மறுபடி எழ வேண்டும் என்ற போர்க்குணம் பேராண்மை. எளிமை பேராண்மை. அடக்கமும் ஒழுக்கமும் பேராண்மை. பிரச்சினைகள் வரின் முதலில் நேசக்கரம் நீட்டுவது பேராண்மை. இன்னும் சொல்ல ஆயிரம் குணங்கள் உள்ளன.

ஆண்மை என்பதால் எல்லாம் ஆண்கள் சம்மந்தப் பட்டதல்ல. ஆணிடம் சில பெண் தன்மைகளும், பெண்ணிடம் சில ஆண்  தன்மைகளும் இருந்தாலே அந்த ஸ்ருஷ்டி பூரணம் பெற்றதாகிறது. தாயுமானவனான அப்பாக்கள் இருக்கிறார்கள். ஜான்சிராணி போன்ற வீரப்  பெண்மணிகளும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் பேராண்மை கொண்டவர்களே. அவர்கள்தான் சரித்திரம் படைக்கிறார்கள். உள்ளது ஒரு வாழ்வு. அது ஏன் சாதாரணமாய் முடிய வேண்டும்? அப்துல்கலாம் அய்யா சொன்னது போல் ஏன் சரித்திரமாகக் கூடாது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக