செவ்வாய், 14 நவம்பர், 2017

இரவின் மடியில்

இரவின் மடியில் இருக்கும் ஒருவன் எப்படி இருப்பான், இருக்க வேண்டும்?அமைதி. மௌனம். பேச்சில்லை. அசைவில்லை. எல்லா ஜீவராசிகளும் உறங்குகின்றன. தூங்கா பிராணிகள் உண்டு என்று கூகிள் தேடல் செய்து கண்டறிய வேண்டாம். பொதுவாகச் சொல்கிறேன். நல்லவன் , அல்லாதவன் எல்லாருக்கும் தூக்கம் பொது. காலை முதல் சாவி கொடுக்கப் பட்ட பொம்மை போல ஓடி,  கதிரவன் மேற்கே மறையும் நேரம் வேகங்கள் குறைகின்றன. கொஞ்சம் கொஞ்சமாய் ஒடுங்கி, இரவின் மடி தேடி, தலை சாய்க்கிறோம். நித்ரா தேவி நம்மை ஆட்கொள்கிறாள். உறக்கம்,  இறப்பு இரண்டையும் ஒப்பிடுகிறார் திருவள்ளுவர். ஆழ்ந்த உறக்கம் இறப்புக்கு சமம்தான். ஒன்று வாழ்வின் சலனங்களை நிரந்தரமாய் முடித்து வைக்கிறது. மற்றது தற்காலிகமாய்த் தள்ளி வைக்கிறது. அவ்வளவே வித்தியாசம்.

உலகில் பரீட்சைக்கும் , கல்யாணத்திற்கும்,  வேலைக்கும்,  பொருள் ஈட்டவும் இன்னும் எல்லாவற்றிற்கும் எத்துணை தூரம் தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டுமோ,  அத்துணை தூரம் தூங்கவும் தயார்ப்படுத்திக் கொள்ளுதல்  தேவையாகிறது. எத்தனை பேர் படுக்கையை முகர்ந்தால் தூங்குகிறார்கள்?எளிமையான உழைப்பாளிகள் குழந்தைகள் என ஒரு சிறு பட்டியல் உண்டுதான்.சஞ்சலம் அறியாதவர்கள்.  இங்கே குறிப்பிடுவது மன சலனங்களையே. நாம் மிக அமைதியாக செலவிடும் நாள் நல்ல உறக்கம் தருகிறது. அதனாலேயே உறங்கும் முன் செய்யலாம், செய்ய வேண்டும் என பெரியோர்கள், மருத்துவர்கள் சில செயல்களைப் பரிந்துரைக்கிறார்கள். கட்டுரை பௌதிகத் தூக்கம் பற்றியதல்ல.

மனிதர்களின் பல நாட்கள் தேவர்களின் ஒரு நாள் என்று ஏதோ கணக்குகள் எல்லாம் படிக்கிறோம். அது போல மனித வாழ்வு நூறு வருஷங்கள் ஆனால், ஐம்பது வயது வரை நம் பகல். ஐம்பது கடந்தவர்கள் இரவின் மடியில் உள்ளோம். இரவு தொடங்கி விட்டது எனில் எப்போது வேண்டுமானால் தூக்கம் நம்மை அணைக்கும்.  அதற்குத்  தயாராக வேண்டும். நல்ல முறையில் பகல் பொழுது முழுதும் செலவிட்டிருந்தால், அதுவும் இயல்பாக நிகழ்ந்திருந்தால்,  இரவு அமைதியாகத் தூங்க முடியுமா என்ற யோசனை வராது. தூக்கமும் தானாக வரும். சரி, பகல் பொழுது நாம் அறியாமலேயே வேகமாகக் கடந்து விட்டது.யாரோ கெடுத்து விட்டார்கள், நாமே மெத்தனமாகக் கெடுத்துக் கொண்டோம் என்றால் கூட,  அந்தி சாயும் நேரம் , விழிப்படையலாம். நிதானப் படலாம்.

பௌதிக உறக்கத்துக்கே எளிமையான இரவு உணவு நல்லது என்கிறோம், இரவு உடை அணிகிறோம், கனமான நினைவுகள் விலக்க வேண்டும் என்கிறோம், த்யானம் செய்து விட்டு உறங்கப் போவது நல்லது என்கிறோம். அப்போது உண்மை உறக்கத்துக்கு? கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விடலாமே, உணவு ஆசையை, உடை ஆசையை, வன்மங்களை, நான் நடத்துகிறேன் என்ற பரிதாபகரமான தவறான எண்ணத்தை, நான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ........எப்படி சொல்வது, இந்த உருவத்தின் மீது கொண்டுள்ள விலக்க இயலாத பற்றை, கழிவிரக்கத்தை, பயத்தை, விட இயன்ற எல்லாவற்றையும்தான். இந்த நாளை வாழ்ந்து விட்டேன் என த்ருப்தி தருமாறு ஒரு நாளை வாழ்ந்தால், மறுநாள் விடியல் போனஸ் ஆக தெரியும். எல்லா நாட்களும் ஒன்றா வேறா? 24 மணி நேரம், காலை இரவு இரண்டும் தினம் வரும் என்று யோசித்தால் அனைத்து நாட்களும் ஒன்றே.

ஆனால் ஒரு நாள் என்பதன் பொருள் வேறு. ஒரே ஒரு முறை பயன்படப் போகும் ஒரு பொருளுக்கு மரியாதை தேவையா, இல்லையா? யூஸ் அண்ட் த்ரோ பொருளுக்கு குறைந்த மரியாதை போதும் என்பது ஒரு வாதம். ஆனால் அது சரியில்லை. ஒரே தடவை பயன்படுத்தப் படுவதால் அது மிகவும் உயர்ந்தது என்பதே உண்மை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாழ்வும் அத்துணை முக்கியம் பெறுகிறது. எது பிணைக்கிறது? வாழ்வின் மேல் உள்ள ஆசை. அதை முற்றிலும் நீக்கிக் கொள்ள முடியாதோ என்னவோ? ஆனால் சிறிது விலகி நின்று பார்க்க முயலலாம். பண்ண வேண்டும். நாம் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் நிகழும் என்றறிந்த ஒன்றல்லவா?  இரவின் மடி ஆசைகளை ஏக்கங்களை சில சமயம் அதிகம் ஆக்கலாம். நாம் சந்தோஷம் என நினைத்த ஒன்றின் தேவையே இல்லை என்பது அதிக நிம்மதி.

ஓரிரு நாட்களாக  இரவின் மடியில் என்ற தலைப்பு மன அரங்கில் ஆடுகிறது. பகலின் பிடியில் உள்ளவரும் யோசிக்கவே வேண்டும். 6 மணி வரை பகல் என்றாலும், 6.01க்கு இரவு வந்துவிடுகிறதே!  விலகல் வருந்த வேண்டிய விஷயம் அல்ல. உண்மையில் கட்டுக்களில் இருந்து பெறும் விடுதலை. பெரும் விடுதலையும் கூட. சாதாரணமாக நினைத்துப் பார்த்தாலும், இன்றைய வேலைகள் முடிந்தன, தூங்கப் போகிறேன் என்பது மனதுக்கு எத்தனை லேசாக உள்ளது. ஆனால் நம் படுக்கையை நாம் விரித்துக் கொள்ள வேண்டும். யாரோ மெத்தை விரித்து ரெடியாக வைப்பது எல்லாம்,மறு நாள் ஓட வேண்டுமே என சலித்துக் கொண்டே தினம் தூங்கும் தரம்  சற்றும் இல்லாத தினப்படி  தூக்கத்திற்கு வேண்டுமானால் சரி. நான் இரவின் மடி வந்து ஐந்து ஆண்டுகள் சென்றதால், நல்ல உறக்கத்துக்கு ஆயத்தம் செய்யவே விருப்பம். ஆயத்தம் செய்ய துவங்கி  விட்டதால் தூக்கம் என்னிஷ்டமா என்ன?  எதுவும் அறியாத, அறிய முடியாத இறைவன் கை விளையாட்டு பொம்மைகள் அல்லவோ நாம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக