புதன், 13 மே, 2015

எது வெற்றி?

நம் நாட்டில் மருத்துவ வசதிகள் பெருகியதால்,வாழும்  சராசரி வயது உயர்ந்துள்ளது.முக்கியமாக சென்னையில் கிடைக்கும் மருத்துவ வசதிகள் உலகத்தரம்  வாய்ந்தவை.ஆனால் சராசரியாய் வாழும் வயதை மட்டும் உயர்த்தி என்ன பலன்? முதியவர்கள் எந்த அளவு கவனித்துக் கொள்ளப் படுகிறார்கள் ,கவனித்துக் கொள்ளா விட்டால் கூடத் தேவலை. துரத்தப் படாமல்  அலட்சியப் படுத்தப் படாமல் இருக்கிறார்களா என்பதே நம் முன் உள்ள கேள்வி.நம்மை அவர்களிடத்தில் வைத்துப் பார்த்தால்தான் தெரியும்.ஒரு நோயைக் குணமாக்குவது மருந்தும் மருத்துவரும் மட்டும் இல்லை.அன்பு ; நெருங்கியவர் காட்டும் அக்கறை;

இப்போது கல்யாணத்திற்கு இருக்கும் பெண்கள் பையனின் பெற்றோர் பற்றி என்ன கேட்கிறார்களாம் தெரியுமா? Are they in the hall or on the wall (உங்களுக்குச் சட்டெனப் புரிகிறதோ,  எனக்கு முதலில் புரியவே இல்லை) உன் பெற்றோர் உயிருடன் உள்ளார்களா அல்லது படமாய் சுவற்றில் தொங்குகிறார்களா என்று அர்த்தமாம்.அதிர்ச்சியாக இல்லை? நாத்தனார்கள் பற்றிக் கேட்க ,ராகு கேது உண்டா என்று கேட்கிறார்களாம்.இவர்களுக்குத் தாமும் இன்னொரு பெண்ணுக்கு ராகு கேதுதானே நம் பெற்றோரை பற்றியும் நமக்கு வரப் போகும் அண்ணி இதெல்லாம் கேட்கக் கூடும் என்று தோன்றாதா? இதெல்லாவற்றிற்கும் எது காரணம்?தன்  பற்று.சுயநலம்.இந்தப் பெண்களெல்லாம் அம்மாவானால் என்ன மாதிரியான தலைமுறை உருவாகும்?

பலரால் பலமுறை வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லப் பட்ட செய்திதான்.விசாலமாக மனதை ஆக்கிக் கொள்ள வேண்டியது மிகமிக அவசியம்.ஒரு குழந்தை கலாசாரப்படி வளரும் குழந்தைகளுக்கு ஏற்கெனவே அனுசரித்துப் போகும் குணம் இல்லை.பெற்றோர் தூபம் போட்டு விடக் கூடாது  ராணி மாதிரி பெண்ணை வளர்த்தோம். அவளை அனுசரித்துப் போற மாதிரி பையன் வேணும் ,குடும்பம் வேணும் என்று எப்போது பார்த்தாலும் ஒரு பக்கமாகவே பேசாமல்,என் பெண் எல்லாரிடமும் அன்பாக அனுசரணையாக இருப்பாள் என்று முதலில் சொல்லி மாப்பிள்ளை தேடுவோர் எத்தனை பேர்?

முதியோர் இல்லங்கள் பெருகியதற்குக் காரணங்கள் பல.இருவரும் வேலை பார்க்கும் குடும்பங்கள்,வெளிநாடுகளுக்கு தொழில் காரணமாய் இடம் பெயர வேண்டிய நிர்பந்தங்கள் உள்ளவர்களுக்கு முதியோர் இல்லங்கள் ஒரு வரப்ரசாதமே.கொடுக்கும் பணத்திற்குத் தக்கவாறு சேவைகள் அளிக்கப் பல  இடங்கள் உண்டு.ஆமாம்,தலைமாட்டில் டங் என்று காபி கோப்பையை வைத்துவிட்டு இந்தக் கிழத்திற்கு காபி கூடக் கையில் கொடுக்க வேண்டி உள்ளது என முணுமுணு த்துக்கொண்டே முதியவர்கள் மனதை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வலிக்க வைப்பதற்கு பதில் அவர்கள் நிம்மதியாக ஓரிடத்தில் இருக்க விட்டுவிடலாம்.ஆனால் அந்த முடிவு பெரியவர்களுடையதாய் இருக்கலாமே தவிர மகனுடையதாய் இருந்து விடக் கூடாது.

பெரியவர்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்க்க முடியும், கோவிலுக்குச் செல்ல முடியும்,ஆனால் தன் சாப்பாட்டைக் கூடப் போய் எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று மருமகளை ஒரு வேலையாள் போல நடத்தினால் தவறுதான்.மேலும் உள்ளார்ந்த அன்புடன் நடந்து கொண்டால் அது செயல்பாடுகளில் கண்டிப்பாய் தெரியும்.முடிந்த சிறிய உதவிகள் செய்யலாம்.பணமும்  பிரிவினைகளுக்கு ஒரு காரணம்.நாங்கள் போன பிற்பாடு எல்லாம் மகன்தானே எடுத்துக்கொள்ளப் போகிறான் என்று முதியவர்கள் பேசுகிறார்கள்.அது மிகத் தவறான வாதம்.இருக்கும் போது அன்பை வெளிப் படுத்துவது போல் சிறுசிறு அன்பளிப்புகள் கொடுக்கலாம்.அதுவும் மகன் செலவுகளை சமாளிக்கத் திணறிக் கொண்டிருந்து பெற்றோர் பணம் வைத்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பது கசப்புகளையே வளர்க்கும்.


ஒரே பிள்ளையானால் சரி.ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றவர்கள் தன் குழந்தைகளுக்குள்ளேயே காட்டும் வித்தியாசமும் பிரிவுகளுக்குக் காரணம்.பெற்றோருக்கு எல்லாக் குழந்தைகளும் ஒன்றுதான்.அதிகம் சம்பாதிக்கும் பையன்,  தன்  கருத்து தப்போ சரியோ அடித்துப் பேசத்தெரிந்த பையன்,  உள்ளே என்ன நினைத்தாலும் வெளியே பார்க்கும் போது குரலில் தேன் கலந்து அம்மா அப்பா என்று உருகும் பையன் ஆகியோரிடம்  அதிக நெருக்கம் காட்டி உண்மையாய் இருப்பவர்களை அடையாளம் கண்டு கொள்ளாத பெற்றோரும் எல்லாரிடம் இருந்தும் விலகிப் போகிறார்கள்.மேலே குறிப்பிட்ட பிள்ளைகள் காரியவாதிகள்.அவர்கள் வாங்கிக் கொள்ள மட்டுமே செய்வார்கள்.செய்யும் அப்பாவிப் பிள்ளைகள் மனத்தையோ புண்படுத்தி விடுகிறார்கள். அதனால் யாரிடமும் ஒட்டுதல் இருப்பதில்லை.சாப்பாடு பற்றிய குறைகளும் உறவுகளைக் காயப் படுத்தும்.பல வருஷம் வேண்டியது சாப்பிட்டாயிற்று.அதற்காக ஒத்துக் கொள்ளாத பதார்த்தங்களைக் கூட வாயை மூடிக் கொண்டு விழுங்கச் சொல்லவில்லை.நம்மால் செய்ய முடியாத போது நமக்காக ஒருவர் செய்து தருவதை குறை சொல்லாது சாப்பிடலாம்.

 நிஜமான வயதிற்கேற்றவாறு நடந்து கொள்வது , பெரியவர்கள் வீட்டின் தூண்கள் போல,அவர்களால் நமக்கு உதவியே தவிர உபத்திரவம் அல்ல என்று இளைஞர்களுக்கு உணர்த்தலாம்.எதுவும் உறுதியாய்க் கூறவே முடியவில்லை. யார் சார்பாகவும் பேச முடியவில்லை.எல்லா வயதினரிலும் பக்குவப் பட்ட,படாத மனிதர்கள் உண்டு.சின்ன வயது முதலே வீட்டுப் பெரியவர்களிடம் நன்றாக நடந்து கொள்ளக் குழந்தைகளை பழக்குவது அவர்களை ஒரு நல்ல மனிதனாக்கும்.மாறாக பாட்டியையும் தாத்தாவையும் வெளியே தள்ளிய அம்மா அப்பாவைப் பார்த்து வளரும் மகன் தன் பெற்றோருக்கும் அதையே தருவான்.என் பெற்றோர் செய்யாததையா நான் செய்கிறேன் என்று தோன்றும்.பெண்கள் அம்மாவை பார்த்தே பாடம் கற்கிறார்கள்.தாயைப் போல் பிள்ளை.மாமியார் மாமனாரை விரட்டும் பெண்கள் தவறானவர்களோ என்னவோ அவர்கள் அம்மாக்கள் வளர்ப்பு தப்புதான்.எதற்கெடுத்தாலும் வாதம் புரிந்து எல்லோரையும் வெற்றி கொண்டதாய் நினைப்பவர்கள் வாழ்வில் தோற்று விடுகிறோம்.விட்டுக் கொடுத்து தினப்படி வாழ்வில் தோற்றுக் கொண்டிருப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விடுகிறோம்.எது சரி?எது நல்லது?

ரஞ்ஜனி த்யாகு 

பின் குறிப்பு ; இந்த post எப்போதோ எழுதியது.நிறைய repetitions இருக்கும்.மே மாதம் இன்னும் எழுத ஆரம்பிக்காததால் இதை publish பண்ணினேன்.

MOTHER PROTECTS 

Appeared in June 2015 Manjula Ramesh's snegidhi







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக