புதன், 4 நவம்பர், 2015

உணர்வுகளில் நிதானம்

ஒரு பெரிய இடைவெளிக்குப் பின் சந்திக்கிறோம்.மகிழ்ச்சியாக உள்ளது.எத்தனை மகிழ்ச்சி?அதுதான் இந்த போஸ்ட்டின் அடிநாதம்.மிதமான உணர்வுகளின் தேவை பற்றி இன்று ஏனோ மனம் யோசிக்கிறது.பல உணர்வுக் கலவைகளின் சங்கமமாக உள்ள நாம் தீவிரமான எண்ண ஓட்டங்களால் அலைக்கழிக்கப் பட்டே நாளின் வாழ்வின் பெரும் பகுதியைக் கழிக்கிறோம்.இன்பமோ துன்பமோ நவரசத்தில் வேறெந்த ரசமோ எதுவாயினும் அது கட்டுக்குள் இருக்க எது வழி?அதன் தேவை என்ன?ஒரு இடைச் செருகல்.ஸ்வாமி அரவிந்தரும் அரவிந்த அன்னையும் அருளிய உரைகளில் இருந்து சிலவற்றைத் தமிழ்ப் படுத்தி இனி நான் எழுதப் போகும் எல்லா போஸ்ட்டிலும் ஒரு பகுதி இருக்கும்.Reference எந்தப் புத்தகம் என்று கடைசியில் குறிப்பிட்டு விடுகிறேன்.ஒரு சில நாட்கள் உணர்வுபூர்வமாக ஏதும் பேசுவோமே?

 ஒவ்வொருவருக்கும் ஒரு inner poise இருக்கிறது.அதாவது மனதிற்குள் ஒரு சம நிலை.ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு உயரும் போது அநேகமாக எப்போதும் சிலபடிகள் கீழே இறங்கி மறுபடி மேலே வருகிறோம்.அது பெரு மாற்றம்.அதிர்ச்சியாகக் கூட இருக்கும்.கீழே வரும் வேகத்துடன் மேல் எழுகிறோமா அல்லது பழைய சில நல்ல முன்னேற்றங்களைக் கீழே தள்ளும் அளவு பின்னால் போய் விடுகிறோமா என்பது அமைதியாக கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.வாழ்க்கையில் ஒன்றின் இடத்தை மற்றொன்று ஆக்கிரமிப்பது நடந்து கொண்டேதான் உள்ளது.ஆனால் விதி விலக்காக இருப்போரும் உண்டு.அவர்கள் எல்லாவற்றையும் மனதில் தனித் தனித் தீவுகளில் வைத்திருப்போர்.மனிதன் கண்டு பிடித்த கணினியே கணக்கற்ற விஷயங்களை மெமரியில் எந்தக் குளறுபடியும் இன்றி வைத்துக் கொள்ளுமானால்,அதைக் கண்டு பிடித்த மனித மனமும் மூளையும் குழம்பலாமோ?வாழ்க்கையைப் படிப்பதாகச் சொல்லிக் கொள்கிறோம்.அதில் எல்லாம் என்ன பலன்?முதலில் படிக்க வேண்டியது நம்மைத்தான்.நம் செயல்பாடுகளின் காரணங்களே நமக்கு மறை பொருளானால் உலகம் பற்றிய ஆராய்ச்சி துல்லியமாக எப்படி இருக்க இயலும்?

எது நம்மை மிகவும் சோர்வடையச் செய்கிறது சொல்லுங்கள்?எதெல்லாம் பயனற்றதோ அதெல்லாம்.மாற்றிச் சொல்ல வேண்டுமானால் நாம் எந்த விஷயங்கள் பற்றி ஆயாசம் அடைகிறோமோ அவை அனைத்தும் யோசனை இன்றி விலக்க வேண்டியவை.அளவுக்கு மிஞ்சும் எல்லாம் நஞ்சுதான்.வருத்தம் சுகம் இன்பம் சோகம் எல்லாவற்றையும் மிதமாக எடுத்துக் கொள்வது மனப் பழக்கமே.முதலில் நாம் அவற்றிற்கு தலைவனாக விளங்குவது.பிறகு அதை வெளிப் படுத்துவது.இதை ஒரு அறிவுரை மாதிரி நான் பேசவில்லை.உங்கள் அனைவருடனும் செய்யும் உரையாடலாக மட்டுமே நினைக்கிறேன்.நம் நினைவுகள் நம்பிக்கைகள் மட்டுமே நமக்கு சொந்தம்.அவை வடிவம் பெறுவதோ பொய்த்துப் போவதோ கடவுள் செயல்.கடவுளின் கருவியாகப் பயன்படப் போகிறவர்கள் பங்கும் அதில் உண்டு.உடல் அணுக்களில் அமைதி சீரான ஸ்வாசம் உயரே மட்டுமே உள்ள எண்ணங்கள் இவை யாவும் சேர்ந்ததே அமைதியான பொழுதுகள்.மனிதனின் அடிப்படைக் குணம் ஆனந்தமே.பாலில் சிறு துளி டிகாக்க்ஷன் சேர்த்து காபி என்று ஒரு குழம்பிய பானம் தயாரிக்கிரோமே அது போல சின்ன வேண்டாத ஒரு எண்ணம் கூட நம்மை சமநிலை இழக்கவே வைக்கும்.சிவசங்கரி அவர்கள் சொன்னது போல் சின்ன நூல்கண்டா நம்மை சிறைப் படுத்துவது?

ஒரு முரட்டுக் குதிரையை அடக்கி விடலாம்.ஆனால் புலியிடம் நம் பாச்சா பலிக்காது.ஏன் ?அது கொடிய விலங்கு.அதனிடம் நல்லதை எதிர்பார்த்துப் பலனில்லை.அதனிடம் இருந்து தப்ப அதை அழிக்கவே வேண்டும்.ஆனால் சிறிது பொறுமையும் முயற்சியும் இருப்பின் முரட்டுக் குதிரையும் நம் வசப் படும்.மனிதனுள்ளும் அது போல கட்டுப் படுத்த கஷ்டம் போலத் தோன்றும் எண்ணங்கள் உண்டு.ஆனால் அவை புலி அல்ல.முரட்டுக் குதிரையே.கடிவாளம்தான் தேவை.அதை நாமேதான் போட்டுக்  கொள்ள வேண்டும்.ஆனால் கட்டுப்பாடு பொறுமை என்ற சொற்கள் எல்லாமும்  கூட சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியவை.அதற்கெல்லாமும் அளவு உண்டு!எல்லாமே எப்படியும் இருக்கட்டும் ,நான் அமைதியே காப்பேன் என்பது என் அளவில் weakness தான்.கங்கை வெள்ளம் செம்புக்குள் அடங்காதல்லவோ?காற்றுக்கு ஏது வேலி ?கடலுக்கு ஏது மூடி?நான் சொல்லவில்லை.கண்ணதாசன்தான் சொன்னார்.கட்டுக்குள் அடங்கின காட்டாற்று  வெள்ளமாக இருப்போமே? பேசுவோம்.
ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக