மனது அல்லது இதயம் ஆயிரம் வாசல் கொண்டது. நிமிடத்திற்கு ஆயிரம் எண்ண அலைகள் உற்பத்தி செய்யும் வல்லமை கொண்டது. பெரிய யானையைக் கட்டுப் படுத்தும் சின்னப் பாகன் போல கண்ணுக்குத் தெரியாமல் இருந்து கொண்டு நம்மை ஆட்டிப் படைக்கும் சக்தி பெற்றது. இதயம் கூட எனக்கு சொந்தம் இல்லை என்ற வாழ்வு வலி நிறைந்தது. அதை கட்டுக்குள் வைப்பது ஒரு அப்யாசம். யக்ஞம். ஆயிரம் வாசலையும் திறந்து வைத்து விட்டு அவதிப் படக் கூடாது. வாசல் திறப்பது நம் இஷ்டம், வசதி. உள் இருந்து பூட்டப் பட்ட கதவு போல. வெளி ஆட்கள் கதவு தட்டி விட்டு நிற்கலாம். உத்தரவு எதிர் பார்த்து. இஷ்டப்படி திறந்து கொண்டு உள்ளே வரலாகாது. ஆள்களுக்கும் எண்ணங்களுக்கும் பொது விதிதான். எல்லாம் உள்ளே வரும் போது குழப்பம் தான். பலர், பல பொருள் புழங்கும் இடம் சந்தை. சந்தைக் கடை என்றால் குழப்பம். கூட்டத்தில் கூட வந்தவர் காணாமல் போவது போல், குட்டையாகக் குழம்பிய எண்ணக்குவியலில் மனம் காணாது போகும்.
மனக் குதிரை ஓட்டம் எடுக்கப் பார்க்கும் தருணம், நில் என்றால் நிற்க வைக்க என்ன செய்ய வேண்டும். சும்மா இருந்தாலே போதும் என எண்ணுகிறேன். கோவிலுக்குள் கால் கழுவாது நுழைவோமா? மனக் கோவிலுக்குள் செல்லவும் அதேதான். மனத்தின் சக்தி அதிகமாக ஆக நம்மை நாம் ஏமாற்றிக் கொள்வதும் நிகழவே செய்கிறது. பல நேரம் நம் தவறுகள் நமக்குத் தெரியும். ஆனால் அத்தவறுகளை ஞாயப் படுத்த ஒரு விளக்கம் குதித்து முன்னால் வரும். அப்போது கவனம் அவசியமாகிறது. மேல்மனம் எதையும் கணிக்கும் சக்தி அற்றது. ஆனால் அப்படி கணிப்பதையேதான் தன் வேலையாகக் கொண்டுள்ளது. அறியாமையில் செயலாற்றிக் கொண்டிருக்கும் அதன் குரலைக் கேட்கத் தொடங்கினால் ஆயிரம் சந்தேகம் வரும்.
காலம் காலமாக சரி என்று சொல்லப் பட்ட சொல்லித் தரப் பட்ட எண்ணங்களுடனே வாழ வேண்டுமா என்ன! அமைதி வேறு,மௌனம் வேறு. மனதை அமைதி ஆக்க ஓரளவு இயலும். சாதா எண்ணங்களை நிறுத்தினால் போதும். ஆனால், வெளியில் இருந்து வரும் ஏதோ ஒன்று அந்த அமைதியைக் கலைக்கக் கூடும். நம் மன ஓட்டங்களையும் நிறுத்தி, வேறு மனங்களில் இருந்து வரும் அதிர்வுகளை உள்ளே வராமல் செய்வது சுலபம் இல்லை. அதன் பேர்தான் மௌனம். மௌனம் கைகூடும் தருணம் புரிதல் வருகிறது. ஒரு வீட்டை மாற்றினால், அதில் உள்ள நாம் மாறிவிடுவோமா ?இல்லை. நாம் மாறினால், இடத்தை மாற்றத் தேவையே இல்லை. மயங்கினால்தான் அது மனித இதயம். எந்த மயக்கமும் இல்லை என்று நம்ப இயலாது. நம் மனசுக்கு நாம்தான் எஜமான்.
வெற்றி இலக்கிற்கு முந்தின மணித் துளிகள்தான் மிகக் கஷ்டமானவை. எண்ணங்களை வெற்றி கொள்வதும் இதே போலத்தான். வெள்ளத்தனையது மலர்நீட்டம். நம் உள்ளத்தனையது உயர்வு. அவசரமாக செயல்படவோ பேசவோ செய்யாமல், ஒரு வெளி ஆள் போல நம்மை நோக்கினால் எங்கு தவறு எனத் தெரியும். நிஜப் போர்க் களத்தில் எதிர்ப்பவன் வெற்றி அடைகிறான்.வாழ்க்கையில், சண்டைகளில் பின்வாங்குபவனுக்கல்லவா வெற்றி!மனம் குரங்காவதும் கோவிலாவதும் நம் கையில்தான்.
வெற்றி இலக்கிற்கு முந்தின மணித் துளிகள்தான் மிகக் கஷ்டமானவை. எண்ணங்களை வெற்றி கொள்வதும் இதே போலத்தான். வெள்ளத்தனையது மலர்நீட்டம். நம் உள்ளத்தனையது உயர்வு. அவசரமாக செயல்படவோ பேசவோ செய்யாமல், ஒரு வெளி ஆள் போல நம்மை நோக்கினால் எங்கு தவறு எனத் தெரியும். நிஜப் போர்க் களத்தில் எதிர்ப்பவன் வெற்றி அடைகிறான்.வாழ்க்கையில், சண்டைகளில் பின்வாங்குபவனுக்கல்லவா வெற்றி!மனம் குரங்காவதும் கோவிலாவதும் நம் கையில்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக