திங்கள், 28 மார்ச், 2016

சினம் - பாரதியும் வள்ளுவனும் என்ன சொல்கிறார்கள்?

இன்று நல்ல பொழுதாகவே விடிந்தது.எது நல்ல பொழுதில்லை.?அல்ப விஷயமான என்ன காலைச் சிற்றுண்டி என்பதில் ஏதோ வாக்குவாதம் .அது சற்றே கோபமான வார்த்தைப் பரிமாறல்களில் முடிந்தது.உங்களுக்கு எப்படியோ.சினம் என்பது போல் கெட்டஒன்று உண்டென்று நான் நினைக்கவில்லை.யார் மீது நான் கோபம் கொண்டாலும் யார் என் மீது கோபம் கொண்டாலும் அது என் நாளையே கெடுத்து விடுவதாய் உணர்கிறேன்.என் காதலர்களான பாரதியும் வள்ளுவரும் சினம் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தேன்.இனி அவர்கள் சொன்னது.

பாரதியார் பாடல்கள் பல தலைப்புகளின் கீழ் வரிசைப் படுத்தப் பட்டுள்ளன.அவற்றில் சுயசரிதை என்ற தலைப்பில் சினத்தின் கேடு பற்றிப் பேசுகிறார்."சினங் கொள்வார் தமைத் தாமே தீயாற்சுட்டுச் செத்திடுவாரொப்பாவார் "  என்று தொடங்கி, "வேகாத மனங் கொண்டு களித்து வாழ்வீர்"என முடிக்கிறார்.சினம் கொள்வது கொடிய வாள்  கொண்டு  தன்  கழுத்தைத் தானே அறுத்துக் கொள்வதற்கு  ஒப்பானதாம்.தினம் கோடி முறை சினத்தில் வீழ்கிறோம்.சினத்தை வெளியிட்டு விட்டு துயர்க் கடலில் சிக்கிக் கொண்டு மனம் பதைக்கிறோம்.சினம் எதன் வெளிப்பாடு?குழப்பம்?எதிர்பார்ப்புகள்?ஈகோ ?எதுவானாலும் அது தவறே.பாரதியார் சொல்கிறார்."சக்தி அருளால் உலகில் பிறந்தோம்.சாகாமல் ஜீவித்திருப்பதற்கு நாம் காரணம் இல்லை .படைத்தவன் பார்த்துக் கொள்வான்.என்ன நடந்தால்தான் என்ன?கொதிப்படையாத மனம் கொண்டுவாழ்ந்து விட்டுப் போகலாமே" என்று.

வள்ளுவர் பற்றிப் பேசினால் தெய்வப் புலவர் என்ற அடைமொழிக்கு வேறு யார் ஏற்றவர் என்று தோன்றுகிறது.நம் கெட்ட குணம் கோபம் செல்லுபடியாகும் இடத்தில் அதை வெளியிடுவது.செல்லுபடியாகாத இடத்தில் சினம் காப்பவரால் பயன் என்ன என்கிறார்.செல்லும் இடத்தில் கோபம் கட்டுக்குள் இருந்தால்தான் சினம் காத்ததாகப் பொருள்.சினம் கொள்பவரின் முகமலர்ச்சி மட்டுமின்றி அக மகிழ்ச்சியும் அழியுமாம்.கொல்லும்  சினம் என்று குறிப்பிடுகிறார்.

கொஞ்சம் கோபம் நிறைய கோபம் என்பதெல்லாம் பொய்.உள்ள நிறைவில் கள்ளம் புகுந்தது போல்,வாழ்வை நினைத்த பின் தாழ்வை நினைப்பது போல் என்கிறார் பகைவனுக்கருள்வாய் பாட்டில் பாரதியார்.தெளிவான தேனில் சொட்டு விஷம் கலந்தால் அதைத் தேன் என்பதா விஷமென்பதா? மனதிற்குக் கட்டளை என்ற பாட்டில் பேயாய் உழலும் சிறு மனமே என்கிறார்.அன்பு பற்றி ,உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர் என்கிறார்.ஆனால் நாம் அப்படி இருப்பதில்லை.ஆசிட் உடம்பில் பட்டால் எப்படி மோசமான விளைவை ஏற்படுத்துகிறதோ அதையேதான் சினம் உள்ளத்திற்கு உண்டாக்குகிறது.தேவையா?அன்பும் காதலும் இயற்கையான உணர்வுகள்.கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம் என்று மொழிகிறார் வைரமுத்து.கோபம் இயற்கையான ஒரு உணர்வல்ல .இது ஏன் எனப் புரிகிறதா?காதல் வரக் காரணம் தேவை இல்லை.காரணம் இன்றிப் பெரும் பாலும் கோபம் வருவதில்லை.சரிதானே? தானாக உண்டாவதை இயற்கை என்கிறோம்.உண்டாக்கப் படுவதெல்லாம் செயற்கைதான்.சினம் பிறரால் சூழல்களால் தூண்டப்படும் செயற்கையான உணர்வு.

"தன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்"
என்று தெய்வப் புலவர் அனாயாசமாய்ச் சொல்லிச் சென்று விட்டார்.ரொம்ப பள்ளிக் கட்டுரை எழுதி விட்டேன்.வரவரக் கோபத்தை சினிமாவில் பார்த்தல் கூடப் பிடிப்பதில்லை.யாரிடமாவது அரை நோட் சுருதி ஏற்றிப் பேசினால் எனக்குள் வலி வருகிறது.கோபத்தைக் காட்டுபவர்களிடம் இருந்து மனம் பயந்து விலகிப் போகிறது.பாவம் என்னத்தை சாதிக்க இந்த வன்மம் வளர்க்கிறார்கள் என நினைக்கிறேன்.இன்று ஏப்ரல் முதல் தினம். அமைதியான பொழுதுகளே விடியட்டும்.மிக அமைதியான இரவுகள் நம்மைத் தாலாட்டட்டும்.கொடுப்பவரையும் வாங்கிக் கொள்பவரையும் ஒரே போல் தாக்கும் கோபம் நம்மை விட்டு ஓடட்டும்.மனிதன் மட்டும்தான் கோபத்திற்கு ஆட்படும் உயிரினம்.விலங்குகள் survival க்காக ஒன்றை ஒன்று அடிக்கும்.கோபத்தினால் அல்ல.கோபம் மனுஷனின் சொத்து.நாம் கோபப் படுபவரைப் பார்த்து மிருகம் போல் கோபம் கொள்ளாதே என்கிறோம்.அது நகைப்பிற்குரிய வாக்கியம்.விலங்கு மனிதன் போல் கோபம் கொள்வதில்லை.நாம் அவற்றிடம் இருந்து கற்க வேண்டியவை எவ்வளவோ.சண்டை போட்டுக் கொள்ளும் விலங்குகளைப் பார்த்தால் மனிதர்கள் போல் இவையும் சண்டை போட்டுக் கொள்ள வேண்டுமா என்று உங்களுக்கும் தோன்றுமா?அப்படியானால் நீங்களும் நானும் ஒரே wavelength .உடலுக்குத் தருவதை விட மனதுக்குத் தரும் துன்பமே வன்முறை.அதை நம் தவிர ,ஆறறிவு பெற்ற நம் தவிர ஐந்தறிவு கொண்ட வேறோர் உயிரினம் செய்ய முடியாதே?பகுத்து அறிவதற்கென அருளப் பட்ட ஆறாவது அறிவை கண்டிப்பாக நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.கோபம் அழிந்தால்தான் நாம் அதைப் பயன்படுத்தினதாகப் பொருள்.மறுபடி சந்திப்போமா?Let this be a great month!

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக