வெள்ளி, 1 ஏப்ரல், 2016

நாம் நல்ல பெற்றோரா நல்ல குழந்தைகளா ?

பத்தாம் வகுப்பு பனிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.பரீட்சை எழுதும் வயதில் குழந்தைகள் உள்ள வீடுகளில் டென்ஷன் உச்ச கட்டத்தில் உள்ளது.ஹெல்ப் லைனுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் வருடத்திற்கு வருடம் அதிகமாகிக் கொண்டு வருகின்றன.கணக்கு வினாத்தாள் சற்று கடினமாக வந்து விட்டால் பெற்றோர் தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை தூக்கம் தொலைக்கிறார்கள்.பரிட்சைக்குக் கிளம்புகிற குழந்தைக்கு வாயில் உணவு அடைக்கப் படுகிறது.கையால் எடுத்து சாப்பிடும் நேரத்தில் படிக்க முடியாது போய் அரை மார்க் குறைந்தால் அண்ணா யுனிவர்சிட்டி கௌன்சிலிங்கில் நல்ல கல்லூரி எதிலும் இடம் கிடைக்காது.கொக்கிற்கு ஒன்றே மதி என்பது போல் எஞ்சினியரிங் தவிர வேறு படிப்புகள் எதையாவது குழந்தைகள் தேர்வு செய்தால் பெற்றோர் கவுரவம் என்னாகும்?எங்கோ தவறு என்று தோன்றுகிறதா இல்லையா?எனக்குத் தோன்றுகிறது.

நாம் குழந்தை வளர்ப்பதற்கும் நம் பெற்றோர் நம்மை வளர்த்ததற்கும் வித்தியாசம் உள்ளது.இந்தக் கட்டுரை அது பற்றிய விவாதமே. தொடக்கத்தில் சொல்லி உள்ள விஷயங்களை படைத்தவனே வந்தாலும் இன்னும் பல ஆண்டுகளுக்கு ஒன்றும் செய்ய இயலாது.நம் பெற்றோர் எந்தெந்த விஷயங்களில் நம்மை குழந்தை போல நடத்தி எதிலெதில் பெரியவர் போல் நடத்த வேண்டுமோ அப்படி நடத்தினார்கள்.வரிசையாகக் குழந்தைகள் உள்ள வீடுகளில் ஐந்தாவது குழந்தை பிறக்கும் போது முதல் பெண் குழந்தை குட்டி தம்பிப் பாப்பாவிற்கு பாதித் தாய் போல் ஆகி விடும்.வரிசையாகத் தட்டைப் போட்டு சாப்பாடு போட்டால் அள்ளி அள்ளி அவரவர் சாப்பாட்டை அவரவரே சாப்பிட்ட காலம்.தன்  வயிற்ருக்கு எவ்வளவு வேண்டும் என்பது குழந்தைகளுக்கு தானே தெரிந்து போகும்.ஊட்டம் என்ற பெயரில் தேவைக்கு அதிகமாக நம் போல் அவர்கள் திணிக்கவில்லை.குட்டி சட்டி என்று அனாவசிய செல்லம் காட்டப் படவில்லை.அதனால் வெளியே யாராவது ஒரு வார்த்தை சொன்னால் தொட்டார் சிணுங்கி போல நாம் நடந்து கொள்ளவில்லை.இப்போது மாணவர்களைக் கண்டிக்க ஆசிரியர்கள் நடுங்கி அல்லவா போகிறார்கள்?

சாப்பாடு போன்ற சிறிய விஷயங்கள் குழந்தைகளே செய்தார்கள்.கல்யாணம் போன்ற ஆயிரம் காலத்துப் பயிரான விஷயங்களில் நம்மைக் குழந்தை போல நடத்தி அவர்கள் முடிவெடுத்தார்கள்.ஆனால் இப்போதோ வளர்ந்த குழந்தைகளுக்கு சாப்பாட்டை ஊட்டுகிறோம்.அவர்களை ஒரு வேலை செய்ய விடாது எச்சில் தட்டை கூட நாமே கழுவி வைக்கிறோம்.ஆனால் பெரிய முடிவுகளான திருமணம் அந்த வைபவத்திற்கான செலவு முதற் கொண்டு அவர்களைத் தீர்மானிக்கச் சொல்லி மௌனியாகி இருக்கிறோம்.நான் குழந்தைகள் சுதந்திரத்திற்கு எதிரி அல்ல.வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் அளவு ,தன்  வாழ்க்கையை சரியாக அமைத்துக் கொள்ளும் அளவு சரியாக சிந்திக்கத் தெரிந்தால் கவலை இல்லை.ஆனால் அப்படி சரியான சிந்தனை உள்ள emotional stability உள்ள தலைமுறையை உருவாக்குவதில் பெரும் பங்கு பெற்றோருடையதே.அந்த உணர்வு பூர்வமான நிலைப்பாடு இந்தத் தலைமுறையிடம் இருந்தால் தேர்வு சமயம் ஏன் ஹெல்ப் லைன் அழைப்புகள் வர வேண்டும்,ஏன் விவாகரத்து வழக்குகள் அதிகமாக வேண்டும்? 

இப்போதுள்ள இளைஞர்கள் நம்மை விடவும் புத்திசாலியாக தெளிவாக இருப்பதாக சொல்லிக் கொள்கிறோம்.உண்மைதான் .Exposure அதிகம்.ஆர்வம் அதிகம்.முக்கியமாக பெற்றோரும் நண்பர்களும் தரும் அழுத்தம் அதிகம்.அறிவு அதிகம் எனத்தான் நானும் நினைக்கிறேன்.ஆனால் எல்லாத் தலைமுறைகளிலும் அறிவாளிகள் உண்டு.எது அறிவு என்ற கேள்வியும் உள்ளதல்லவா?ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்ஸ் எல்லாம் தெரிவதும் கணினி பற்றியதும் அறிவுதான்.ஆனால் கணித மேதை ராமானுஜனுக்கு இருந்ததும் த்யாகராஜ ஸ்வாமிகளுக்கு இருந்ததும் பேரறிவுதான் அல்லவா?இன்னும் ராமானுஜனுக்கு இணையான கணித மேதை நம் நாட்டில் பிறக்கவில்லை.த்யாகராஜ ஸ்வாமிகளின் கீர்த்தனைகள் இல்லாத கச்சேரிகளை நினைக்கவும் முடியவில்லை.அதற்கு என்ன சொல்ல?பரிணாம வளர்ச்சி நடந்து கொண்டேதான் இருக்கும்.அந்தந்த காலகட்டத்தில் சூழ்நிலைகளில் சிகரம் தொடுபவர்கள் புத்திசாலிகள்.என் தாத்தாவின் அறிவு என் மகனுடைய அறிவை விடக் குறைந்தது இல்லை.

அடுத்தது தெளிவு.இன்று சுதந்திரம் அதிகம்.அதனால் குழப்பங்களும் அதிகம் எனத்தான் எண்ணுகிறேன்.தேர்ந்தெடுக்க பல வழிகள் உள்ளதால் தெளிவு போன்ற ஒரு மாயத் தோற்றம் கிடைக்கிறது.தான் தேர்ந்தெடுத்த ஒன்றுதான் சரி என்ற தெளிவு இளைஞர்களிடம் உள்ளது.அதில் தவறு நிகழ்ந்தால் நம்மை சாடுவதில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.எல்லாம் அவர்கள் சாய்ஸ் ஆயிற்றே! ஒரு கயிற்றை இரண்டு பக்கத்தில் இருந்து இழுத்தால் என்னாகும்?அறுந்து போகும்.அதைத்தான் நாம் செய்கிறோம்.நம் குட்டிக் குழந்தை ,வந்த வரன்களில் தனக்கு சரியான ஜோடியைத் தேர்ந்தெடுக்கும் அளவு பெரியவளாம்.ஆனால் அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தால் அம்மாக்கள் என்ன சொல்கிறோம்?அதுவே (அது என்றால் குழந்தை பெற்ற அந்தப் பெண்) சிறிசு.எப்படித்தான் ஒரு குழந்தையை வளர்க்குமோ என்று அங்கலாய்க்கிறோம்.ஏன் ? அப்போ நம் பெண் சிறியவளில் சேர்த்தியா,பெரியவளில் சேர்த்தியா? நம் பெற்றோரிடம் இந்த பதைபதைப்பு இல்லை.கல்யாணம் செய்து கொடுத்து விட்டு எல்லாத்தையும் அனுசரிச்சுப் போ என்று அவர்கள் சொன்னது நம்மைக் கை கழுவி விட இல்லை.நமக்கு தைரியம் தர.பெண் பெற்றவர்கள் மட்டுமில்லை.பையன்கள் வைத்திருப்போரும் சும்மா மகனுடைய உள்ளாடைகளைக் கூடக் கையில் கொண்டு வந்து தந்து அவனை நம்மை சார்ந்திருக்கப் பழக்கி சோம்பேறியாக்கி ,வரும் பெண் தலையில் சுமை அத்தனையும் ஏற்ற வேண்டாம்.

இது போல் எத்தனையோ !! முதியோர் இல்லங்களும் தனிக் குடித்தனங்களும் எப்போ அதிகம்?இப்போதா அப்போதா ?சகிப்புத் தன்மை இல்லைதானே?நம் பெற்றோர் நம்மை விட இன்னும் நன்றாக குழந்தை வளர்ப்பை செய்தார்களோ என்று தோன்றுகிறது.பலர் கோபம் அடையலாம்.விதிவிலக்காக மிக தைரியமான தெளிவான புத்திசாலியான குழந்தைகளை உருவாக்கினவர்கள் மன்னிக்கவும்.இவை பொதுக் கருத்துக்கள்.பெற்றோர் உலகிற்கு குழந்தைகளைக் கொண்டு வந்ததால் தம் கருத்துக்களை அவர்கள் மேல் திணிக்க வேண்டும் என்பது பொருளல்ல.எல்லாம் நல்ல குழந்தைகளாகவே உலகில் பிறக்கின்றன.ஒரு குழந்தை தன்  வளர்ச்சி பற்றிக் கவலை கொள்வதில்லை.வளர்கிறது.குழந்தை மனசு என்றால் என்ன?நம்பிக்கை நிறைந்த மனது.நாம் நினைப்பது எல்லாம் கிடைக்கும் என்ற மனது.கிடைக்காதோ என்று அவநம்பிக்கைப் பட குழந்தை மனதிற்குத் தெரியவே தெரியாது.அந்த எண்ணம் வாழ்நாள் பூர இருப்பின்.உணர்வுச் சிக்கலில் யாரும் சிக்கிக் கொள்வதில்லை.வளர வளர ,வெளி உலகுடன் தொடர்பு ஏற்படும் போது குழந்தைத் தனம் மாறும்.அந்த சமயம் ஆழமான சரியான கருத்துக்கள் திணிக்கிறார் போல் இல்லாமல் சொல்லப் பட வேண்டும்.கண்டிப்பாக நாமும் நல்ல பெற்றோராக செயல்பட இயலும்.குறிப்பிட்ட வயது வரும் வரை அவர்களின் பௌதீக வயதிற்கு ஏற்றார் போல் அவர்களை நடத்தி நம் கருத்துக்கள் சொல்லத் தயங்கக் கூடாது.இது ஒரு பெரிய பொறுப்பு.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக