செவ்வாய், 12 ஏப்ரல், 2016

உங்களுக்கு நேரம் இருக்கிறதா?

நம்மைச் சுற்றி நடப்பவற்றை உற்று நோக்கி வாழ்வது ஒரு வகை.வாழ்வை அதன் போக்கில் எடுத்துக் கொண்டு எளிதாக வாழ்வது மற்றொரு விதம்.மனம் எண்ணுவதைப் பகிர்ந்து கொள்ள பலசமயம் வீட்டின் சுவர் மட்டுமே தயாராய் இருக்கும் போது எழுத்தை விட உற்ற துணை யார்?எனக்கு என் கணவர்,மகன்,பெற்றோர்,தோழர்கள்,வீட்டில் வேலை செய்வோர்,ஏன் ,எங்கள் பால்கநியைத் தினம் விசிட் செய்யும் காக்கை எல்லோருக்கும் நேரம் தர முடியும் போது எனக்கு சில மணித் துளிகள் தர இவர்களிலேயே பலருக்கு ஏன் நேரம் இல்லை என்று புரியவில்லை.இல்லாமல் போவது நேரமா மனமா?இல்லை அவரவர் ஏற்படுத்திக் கொண்ட,போட்டுக் கொண்ட கட்டுக்களா?எதுவாயினும் அதை நான் ஒரு வன்முறையாகவே எண்ணுகிறேன்.ஒருவர் நம் நேரத்தை யாசகம் கேட்டு அதை மறுப்பது violence அன்றி வேறென்ன?அப்படி நேரம் தர முடியாதபடி வேறெது பெரிது?நாளை அந்த நேரத்தை உன்னிடம் யாசிக்க அந்த ஜீவன் ஜீவித்திருக்கும் என்பதற்கு உத்திரவாதம் உண்டா உன்னிடத்தில்?

ஒரு ஐந்து நிமிடம் பேசவா என்று கேட்பவரிடம் பேசுங்கள்.என்ன குறைந்து விடும்?எதற்காக பிறகு பேசச் சொல்லி ஒத்திப் போடுவீர்கள்?யாருடன் இருந்தால் என்ன?என்ன சூழலில் இருந்தால் என்ன?மன்னித்துக் கொள்ளுங்கள் என்னை நாடி ஒருவர் எதற்கோ அழைக்கிறார் சற்று காது கொடுத்து விட்டு வருகிறேன் என்று கூட சொல்ல இயலாது யாரிடம் மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?இன்று என்னை பேசத் தூண்டியது இதுதான்.என்னால் அனைவரிடமும் பேச முடிவதில்லை.நேசம் இருப்பவர்களிடம் கூட இந்த அவசர யுகத்தில் நேரம் கேட்கத் தயக்கமாகவே உள்ளது.கணவரிடம் தொலை பேசியில் பேச முயற்ச்சித்தால் கூட,I will call you later மெசேஜ்தான் வரும் பெரும்பாலும்.ஐம்பதுகளில் வம்பு பேச விரும்பாதவர்களுக்கு பேச யாராவது கிடைப்பது அபூர்வம்.ஒரு அனுபவம்.எனக்கு அப்படி ஒரு நட்பு அமைந்தது;மனதும் அமைதியாக இருந்தது;பூங்காவில் உட்கார்ந்து வானம் பார்த்து மேகங்கள் நகரும் அழகைப் பகிரவும்,நிலா உலாப் போவது பற்றிக் கவிதை பாடவும்,மனிதரில் எத்தனை நிறங்கள் என அலசவும்,தெய்வத்தின் குரலை சேர்ந்து வாசிக்கவும்,பாரதியையும் வள்ளுவனையும் நினைவு கூரவும் ,எல்லாவற்றிற்கும் மேலாக மன அழுத்தங்கள் அனைத்தையும் மறைக்காமல் வெளியிடவும் ஒரு இடம் இருந்தது.இப்போது என்ன ஆயிற்று என்கிறீர்களா?சொல்வேன்.

அந்த நட்பு எனக்கு நேரம் தர வரைமுறைகள் விதிக்கிறது.அது மனதைப் பாதிக்கிறது.நட்பு இரு வழிப் போக்குவரத்தல்லவா?எனக்குதான் புரியவில்லையா?உன்னுடன் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை என்பதன் பொருள் புரிபடுவதில்லை.நான் கொண்ட தோழமை உணர்வு என் வாழ்வை  எளிமையாக்குகிறது.இனிமையாக்குகிறது.ஆனால் அதுவே என் தோழிக்கு சங்கடம் தருவதாகி விட்டது.எனக்கு மனம் சோர்வாக உள்ள பொழுதுகள் எல்லாவற்றிலும் ,வேறு யாருக்கோ நேரம் தந்து கொண்டிருப்பேன்.நீ பிறகு வா என்றால் யாரோ காதில்  வெந்நீர் ஊற்றினார் போல் உள்ளது.என்னுடன் ஐந்து நிமிடம் பேசி விட்டு ஐந்து மணி நேரம்    வேண்டுமானாலும் காணாமல் போயேன் என்று கத்த ஆசையாக உள்ளது.என் சந்தோஷம் உன்னதும் என்றால் அந்த ஐந்து நிமிஷ சந்தோஷத்தைக் கூட உனக்கு அனுமதிக்காதவர்களுக்கு என்ன பெயர் தரட்டும்?அப்படி உலகில் ஒரு வேலை உண்டா என்ன?கொடுக்க 24 மணி நேரத்தில் சில மணித்துளிகள் இல்லாமல் போகுமா என்ன?நம்மை நாடி ஒருவர் வரும் போது நம் நேரத்தைப் பகிர்ந்து கொண்டிருப்பவரிடம் ஐந்து நிமிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு பேச இயலாதபடி அவர்கள் எந்த வகையில் பெரியவர்கள்?சாமியா?ஆசாமிதானே?எந்த ஜீவன் யாரை விட உயர்வு?ஏன் ?உனக்குப் பேச விருப்பம் இல்லாவிடில் வேறு விஷயம். விரும்பியும் சூழ்நிலைக் கைதியானால் அது என் நேரம்.காலத்தில் செய்யும் செயல்களுக்குத்தானே பலன்?

கண் காணாத தொலைவில் இருந்து கொண்டு பகிரக் கூடிய சிலவற்றில் முதன்மையானது நேரம்தானே?வேறு எதைக் கேட்கிறேன் எதையுமேவேறெதையுமே எதிர்பார்க்கவில்லையே இதற்கா இவ்வளவு போராட்டம் என்று வருத்தமாக இருந்தது.பல விளக்கங்கள் அளிக்கப் பட்டாலும் மனதிற்கு உடன்பாடில்லை.சுவற்றிடம் முறையிட்டேன்.பதில் இல்லை.எழுத வேண்டும் போல் இருந்தது.எழுதி ஆயிற்று.கண்டிப்பாக நம்மால் எல்லாருக்கும் எல்லாவற்றிற்கும் நேரம் ஒதுக்க முடியும்.நம் நேரத்தால் ஒருவர் அமைதியும் மகிழ்ச்சியும் அடைவார்கள் என்றால் அதைக் கேட்கும் போது அவர்களுக்குத் தருவோமே?மற்றவர் தரும் பொருளுக்காகக் காத்திருப்பவர்களை எப்படி அழைப்பது?ஏழைகள்?எனக்குத் தெரியவில்லை.ஆனால் இந்த ப்ளாக் வலியில் பிறந்ததே.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக