ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

தொலைபேசியா தொல்லைபேசியா

தொலைத் தொடர்பு சாதனங்களில் தலையாயதாய்க் கருதப் படும் தொலைபேசி என்னைப் பொறுத்த மட்டில் தொல்லையான ஒரு சாதனமே.என் ஸ்மார்ட் போன் ஒரு வாரமாக சரியில்லை.அது சரியில்லை என்பதை ஒரு வழியாகப் புரிய வைத்து ரிப்பேர் பண்ண கொடுப்பதற்குள் முழு எனெர்ஜியும் போய் விட்டது.வீட்டில்,நேற்று பிறந்த என் நாத்தனார் பேரன் தவிர எல்லோரிடமும் போன் உள்ளது.அந்த குழந்தை கூட தூக்கினால் முதலில் கையில் உள்ள போனைத்தான் பிடுங்கி வாயில் வைத்துக் கொள்கிறது.அதனால் போன் சரியில்லை என்ற என் புலம்பலைக் காதில் வாங்கவே வீட்டாருக்கு நாலு நாள் ஆனது.தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்.அவரவர் தங்கள் போனுடன் வழக்கம் போல் ஆசை ஆசையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.போனைப் பார்க்கும்  கண்ணில் தெரியும் அந்த அன்பை இப்போதெல்லாம் யாரும் நேரில் உள்ளவர்களிடம் காட்டுவதில்லை என்பதே வருத்தமான உண்மை.அந்த போனும் சற்றும் நன்றி இன்றி இத்தனை நாள் பயன்படுத்திய என்னை விட மற்றவர்களிடம் சரியாக நடந்து கொண்டது.அவர்கள் உபயோகித்துப் பார்த்த போது அமைதியாய் வேலை செய்து என்னை கேலி பொருளாக்கிற்று.கடைசியில் அது சுத்தமாக ஸ்ட்ரைக் பண்ணி தங்கள் தேவைகளுக்காகக் கூட வீட்டார் என்னைத் தொடர்பு கொள்ள இயலாமல் போன போது ரிப்பேர் கடை சென்றது.

போன் இல்லாத இந்த சில மணி நேரங்கள்.தொலைபேசி அத்தியாவசியமான சாதனம் அல்ல.என் பாட்டி சொல்வார்கள் செய்தி எதுவும் வராதிருந்தால் எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டு இருப்பதாகப் பொருள் என்று. சரிதானே?வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்றால் அவர்கள் பத்திரமாய் வீடு திரும்ப வேண்டும் என இறைவனிடம் மட்டும் சொல்லி விட்டு வேலையைக் கவனித்தது அந்த காலம்.அவர்கள் வாசல் சென்று ஓலா டாக்சி பிடித்து ஏறி உட்கார்ந்ததில் இருந்து தெரு முக்கு திரும்பும் முன் எங்க இருக்கே என்று கேட்பது இப்போ ட்ரெண்ட்.அது என்ன புஷ்பக விமானமா ஏறின உடன் destination அடைய.தெருமுக்கில் உள்ளேன் என்ற பதில்தான் வரும்.அதுவும் சென்ற மழையில் பழுதுபட்டு இன்னும் செப்பனிடப் பட்டுக் கொண்டிருக்கும் எங்கள் சாலையில் பயணித்தால்,இதோ அடுத்த அபார்ட்மெண்ட் தாண்டிவிட்டேன் என்றுதான் சொல்ல முடியும்.இன்று என்ன சமையல் என்பதில் தொடங்கி வம்பு பேசும் சாதனம் அல்ல அது.வாழ்வு இருமைகளால் ஆனது.சந்தோஷம் அல்லது   வருத்தம் பகிர படுகிறது,தொலைபேசி மூலம் என்று வைத்துக் கொள்வோம்.சந்தோஷமான செய்தி தெரிவிக்கப் பட்டால் சரி.அதற்கு மேல் பேசும் எதுவும் அதிகப் பொருளில்லாமல் நாம் செய்யும் வார்த்தை ஜாலங்கள்.தொலைபேசி செய்தித் தொடர்பு சாதனம்தான்.நம் உண்மை உணர்வுகளைச் சொல்ல அது பயன்படுவதில்லை என்ற எண்ணம் எனக்கு எப்பவும் உள்ளது.மனசு விரிவுபட்டால் சொல்லின் தேவை குறையும்.நீ ஒரு தடவை பேசினால் நான் ஒரு தடவை பேசுவேன் என்று கணக்குப் போட்டு பேசுவோர் அதைத் தவிர்த்தே விடலாமே.ஏர்டெல் வழங்கி உள்ள சேவைகளால் மனம் மகிழ்ந்து ஒரு நிமிடத்திற்கு 10 பைசா என பூஸ்டர் போட்டுக் கொண்டு பேசுகிறோம்,வேண்டிய,வேண்டாத அனைத்தையும்.மனசில் சந்தோஷம் பொங்கும் நேரம் பூஸ்டர் முடிந்து விட்டால் சந்தோஷம் பகிர படக் காத்து நிற்குமா?வோடாபோனும் ஏர்டெல்லும் புத்திசாலியா நாமா?அடுத்து வருத்தங்கள்.நேரில் பேசும் போதே நாம் சொல்வதை மூளையில் process கூட பண்ணாது,காது கொடுக்காதவர்கள்,காது இருப்பினும் கேட்க தெரியாதவர்கள் அதிகம்.நம் வருத்தங்கள் எதிராளியை அதே அளவு பாதிப்பதில்லை.இது உண்மை.நேரில் சாதிக்க முடியாததை தொலைபேசி மூலம் சாதிக்க முடியாது.நல்லபடியாக சொல்லப் போனால்,நம் எண்ணங்களை போன் போட்டு ஒருவருக்கு சொல்லி அவர்களை வருத்தப் படுத்த வேண்டாமே?கண்ணால் காண முடியாத தொலைவில் உள்ள நம் சொந்தமும் நலம் விரும்பிகளும் நம் பிரச்சினையை நேரில் அறியும் வரை நிம்மதியாக இருக்கட்டுமே?

இன்று காலை என் தோழியிடம் இதை விவாதித்தேன்.அட எப்படி உனக்குத்தான் போன் இல்லையே என்கிறீர்களா?Landline எதற்குள்ளது?நாம்தான் மூச்சுக்காற்று போல போனை நினைத்துக் கொண்டிருக்கும் காலத்தைச் சேர்ந்தவர்களே ! உடனடியாய் மாற்று ஏற்பாடு செய்ய மாட்டோமா?அவள் சொன்னாள் நீ செய்யாத ஒன்றை எழுதாதே என்று.மிகவும் சரி.தொலைபேசி இல்லாமல் நிம்மதியாக இருந்தேன் எனில்,அந்த அமைதியை நாடுவதுதானே சரி.எனக்கு personal ஆக பல காரணங்களால் தொல்லை உண்டாகிறது.வாட்சப் என்ற குறும் செய்திப் பரிமாற்றங்களில் mindless forwards அனுப்பப் படுகின்றன.பொதுவாக இம்மாதிரிக் குறும் செய்திகள் படிக்கும் போது நன்றாக இருந்தாலும்,உடனே மறக்கப் படுகின்றன.அனுப்பும்,படிக்கும் நேரம் வேஸ்ட்.அடுத்தது,நான் யார் கூடவாவது பேசிக் கொண்டுள்ள போது என்னைத் தொலைபேசியில் யார் அழைத்தாலும்,என் எதிரே உள்ளவருக்குத்தான் முதல் இடம்.தொலைபேசியில் அழைத்தவரிடம் மறுபடி அழைப்பதாகக் கூறி,பேச்சைத் தொடர மாட்டேன்.அதை மற்றவர்களிடம் எதிர்பார்க்கிறேன்.என்னை அருகே வைத்துக் கொண்டு,ஒரு நபர் வேறு ஒருவருடன் பேசுவது பிடிப்பதில்லை.அதாவது தொலைபேசியில் பேசுவது பிடிப்பதில்லை.அது என்ன விஷயமானாலும்.உடனடித் தீர்வை நம்மிடம் எதிர்நோக்கும் ஒருவர் எங்கோ இருந்து போனில் பேசிக் கொண்டிருப்பாரா?எங்கிருந்தோ தொலைபேசியில் மட்டும் பகிர படும் செய்தி,காதுக்கு மட்டுமே.அப்படிப் பட்ட விஷயங்கள் நம் முன்னால் உயிருடன் உட்கார்ந்துள்ளவரை விட எப்படி முக்கியம்.?அரை மணி தாமதிக்க முடியாத அளவு ஏன் முக்கியம்?இது போல் Telephone  conversation க்கான என் code மற்றவருடன் ஒத்துப் போவதில்லை.

ஆயிற்று இன்று போன் வந்து விடும்.சென்ற வருட மழைக் காலம் அகதிகள் போல் அலைந்த வரை உண்மையில் நமக்கு எத்தனை செட் உடை தேவை என்பதை யோசிக்க முடிந்ததில்லை.கண் முன்னால் அன்பான உயிர்கள் மடிவது கண்டும் வாழ்வு சமநிலை அடையவில்லை.முதியோர் இல்லங்கள் பெருகுவது கண்டும் குழந்தைகளை சார்ந்திருப்பதை விட முடிவதில்லை.இது போல் முடிவதில்லை என்ற பட்டியலும் முடிவதில்லை.தொலைபேசி ஒரு Necessary evil ஆகி விட்டது.அதை இனி நம்மிடம் இருந்து பிரிக்க முடியாது.கத்தி காயும் நறுக்கும்.கழுத்தையும் அறுக்கும்.எதற்குப் பயன்படுத்துகிறோம் என்பது கத்தி பிடித்தவன்தான் முடிவு செய்ய வேண்டும்.நான் காய் நறுக்குவதுடன் நிறுத்திக் கொள்ளவே விரும்புகிறேன்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS 

வியாழன், 1 செப்டம்பர், 2016

நேதாஜியும் காந்திஜியும்

நாம் அனைவரும் உண்மையில் எப்படி இருக்கிறோமோ அதை விட, எப்படி வெளிப் படுத்திக் கொள்கிறோமோ அந்த விஷயங்களால் அதிகமாக அறியப் படுவதை விரும்புகிறோம் . காலை கண் விழிப்பதில் இருந்து யோசித்துப் பாருங்களேன். காலை எழுந்தவுடன்,  நான் பூஸ்ட்தான் குடிப்பேன், காப்பியா, அடித் தொண்டையில் கசப்பாக  டேஸ்ட் பண்ணுமே அந்த ட்ரின்க்கா என்பதில் தொடங்கி, என் பொண்ணு சீரியல்தான் சாப்பிடுவா, இட்லியைப் பார்த்தாலே, ஓ திஸ் ரைஸ் கேக், நீயே சாப்பிடுன்னு சொல்லிட்டா என்பது, நல்ல சோப்பை விட, சினிமா ப்ரபலங்களால் அறிமுகப் படுத்தப் பட்ட அழகு  சோப் உபயோகிப்பதாய் சொல்லிக் கொள்வது, நகரப் பேருந்துகளில் போவதை இது வரை செய்ததே இல்லை, படி இறங்கினால் கார்தான் என்பது, வருஷம் 18 லக்ஷத்திற்கு குறைவாய் சம்பளம்  இருந்தால் ஜீவாதாரமே கஷ்டம் என்ற ரீதியில் பேசுவது, சவுகரியத்தை விட ஆடம்பரத்தைப் பறைசாற்ற மட்டும் உடை அணிவது, வயதைக்  கம்மியாகக் கூறிக் கொள்வது, பெரிய மனிதர்கள் என்று சமூகத்தின் பார்வையில் உள்ளவர்கள் தங்களுக்கு நெருக்கம் போல் காட்டிக் கொள்வது, தமக்குக் கீழே உள்ளவர்கள் என்று நினைப்போரிடம் அதிகாரம் செய்வது, ஸ்டார் ஹோட்டல் உணவுதான் விருப்பம்  என்று  சொல்லிக் கொள்வது,  பேட்டா செருப்புதான் பாத்ரூமுக்கு கூட போட்டுப்பேன் என்று சொல்வது, வெளிநாட்டில் உறவினர்கள் இருப்பதாக பறை சாற்றுவது , ஏ சி இல்லாமல் தூக்கம் வராது என்று பொய் சொல்வது, ஆன்மீக வேஷம் போடுவது  இதற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல் கோவிலுக்கு 100 ரூபாய் காணிக்கை அளித்து விட்டு,  ட்யூப் லைட் உபயம்  என்று  தன் பெயரைப் பொறித்துக் கொள்வது,  இது போல் தினம் சந்திக்கும் தமாஷிற்கும் போலி முகங்களுக்கும்   அளவில்லை. நேதாஜிக்கும், காந்திஜிக்கும், மேலே பேசினவற்றிற்கும் யாது சம்பந்தம்? உள்ளது.


நேதாஜியும் காந்திஜியும் இரு துருவங்கள். இருவரின் கனவும் இந்திய நாட்டின் சுதந்திரமே. இருவரும் மிக உயர்வான மனிதர்கள். ஆனால் ஒருவர் மஹாத்மா ஆனார். மற்றவர் ஒரு பேசப்படாத நாயகன்தான், நம் வரலாற்றில். ஏன் என யோசிப்பதுண்டு. நான் அந்த காலகட்டத்தில் வாழ்ந்திருந்தால் நேதாஜியின் கொள்கைகளையே ஆதரித்திருப்பேன், என்று தோன்றும். அஹிம்சையை ஆயுதமாகக் கொண்டு காரியம் சாதிக்க வேண்டும் என்றார் மஹாத்மா. நேதாஜியோ ,  அடிக்க வேண்டியதை அடி என்றார். முதல் பகுதியில் சொன்னது போல், தன்னை அமைதி விரும்பியாகக் காட்டிக் கொள்வதற்கே எல்லோரும் மஹாத்மா வழி என்று கூறிக் கொள்கிறார்களோ என நினைக்கிறேன். நேதாஜிதான், பொதுஜனத்தை  பிரதிபலித்தவர். நேதாஜி, காந்திஜி இரண்டு வேறு முகங்கள் போல் மனிதன் ஒவ்வொருவனும் இரு முகங்கள் கொண்டவன் என்பதற்காக,  தலைப்பு கொடுத்தேன். வித்தியாசமான தலைப்பென்றால் உள்ளே என்ன என்று யோசிக்க வைக்கலாம் என்ற அல்ப ஆசை. மற்றபடி கூகிள் சொல்பவற்றை தமிழில் மறுபடி எழுதுவது நேர விரயம். கூகிள் கடுகு பாக்கெட்டைத் திறந்து கொட்டினார் போல் தகவல்களைக் கொட்டுகிறது.

அஹிம்சாவாதிகள் என்பவர்கள், அமைதி விரும்பிகள் என்பவர்கள், உண்மையில் மிகக் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறார்கள். உடம்பு ஒரு கோவில். அதுவே கர்மம் புரியத் துணை செய்யும் க்ஷேத்திரம். உண்ணாவிரதங்கள்,  உடலை அவமதிப்பது . மரத்தடியில் இருந்து உண்ணாவிரதம் இருப்பது பெரிய நிகழ்வுகளுக்கு எவ்வாறு  வித்தாகும் ?வெளிநாட்டுப் பொருள்கள் எரிக்கப் பட்டன. அழிக்கப் பட்டன. பொருள்களின்  அழிவு எப்படி ஒரு பெரிய நிகழ்ச்சிக்கு வித்தாகும்?  தீமையை மட்டும்தான் அழிவுக்கு உட்படுத்தலாம் அல்லவா? ஒரு மாபெரும் ஆக்ரமிப்பு நடத்தி இருப்பவர்களிடம், தயவு செய்து வெளியே போகிறாயா என்றா கேட்போம்? நாம் நாலு நாள் இல்லாத போது,  அல்லது அசந்த போது,  நம் வீட்டில் யாராவது வந்து குடியேறினால்,  ஒரு மூலையில் சாப்பிடாமல் உட்கார்ந்து அவர்களாக வெளியே போகும் வரை கோஷமா எழுப்பிக் கொண்டிருப்போம்? நாடு பெரிய வீடுதானே ?  மருத்துவர் அறுவை சிகிச்சை செய்வது போல் அவசியமானால் களமிறங்குவதுதானே  சரி?

இந்தக் கட்டுரை  எண்ணங்களின் கலவை. இப்போது, நேதாஜி பற்றி வரும் பத்திரிகைச் செய்திகள். இங்கிலாந்திற்கு அடிமைப் படுத்தப் பட்டிருந்த போது,  அவர்களுடையது எல்லாம் விலக்க வேண்டியவை என நினைத்தோம். இப்போது சுதந்திரம் வந்து 70 ஆண்டுகள் ஆன நிலையில், மேற்கத்திய மோகம் தலை விரித்தாடுகிறது. ஆங்கிலேயர்களால், அவர்கள் ஆட்சியில் அடிமையாக இருந்தும் நாம் பெற்ற  சில நல்ல பாதிப்புகளை மறுத்தல் சாத்தியம் இல்லை.  ஆங்கிலமும் , ரயில் போக்குவரத்துத் துறை கண்ட முன்னேற்றங்களும் போதாதா? அப்போது வெள்ளையனே வெளியேறு கோஷம் போட்டு, பாரத மாதாவுக்கு நல்ல புதல்வர்கள் என்று சொல்வது பெருமைக்குரிய விஷயமாய் இருந்தது. இப்போதோ நமக்கு சற்றும் பொருந்தாத அவர்களுடைய சில பழக்க வழக்கங்களை பின்பற்றுவது பெருமையாய் உள்ளது. ஆனால் எது சரியான நிலை? எதை யாரிடம் இருந்து எப்போது எடுத்துக் கொள்ள வேண்டுமோ அதை அப்போது,  அதுவும் அவசியமானால்  எடுத்துக் கொள்வது. அவர்களுடைய திட்டமிடல்-Meticulous planning , பாதகமான சூழ்நிலைகளையும் சாதகமாக்கிக் கொள்ளும் திறமை, Rational approach அதையெல்லாம் விட்டுவிட்டு , சரியாக யோசிப்பவர்களுக்கு தீவிரவாதி முத்திரை குத்தி விட்டு,எல்லாவற்றையும் உணர்வு பூர்வமாக அணுகிக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது உணவு,உடை எல்லாவற்றிலும் கண்மூடித் தனமாய் அவர்களைப்  பின்பற்றுகிறோம்.

நாம் பார்க்கும் அனைவரும்,  நம் சுற்றுப்புறமும் நம்மைப் பாதித்துக் கொண்டே இருந்தால்  நம்மிடம் ஏதோ தவறு. ஒரு நிமிடமும் விடாது முதன்மைப் படுத்தி கொள்ளும் எண்ணம் மனித மனதின் கோளாறாக உள்ளது. சுத்தமாக அது அழிந்தால்தான்  நன்று.  எதற்காக உலகத்தின் பார்வையில் நல்லவனாக, பணக்காரனாக, அழகனாக, சமூக சேவாரத்னமாக, ஆன்மீகவாதியாக, அஹிம்சாவாதியாக, பன்முக அறிவு கொண்டவனாக, இரக்கமுள்ளவனாக காட்டிக் கொள்ள வேண்டும்? அட உலகம் கிடக்கட்டும். அவரவர் பழகும் சிறுவட்டத்திற்குள் மாத்திரம் என்ன நடக்கிறது? எதற்கு நம்மைப் பற்றி ஒரு வரியேனும் உயர்வாகப் பேசிக் கொள்ள வேண்டும்? சும்மா இரு, சொல்லற என்பதல்லவோ உயர்வு!!உண்மையான இருப்பை விடவும், வெளியே எவ்வாறு தெரிகிறோம் என்று கவலைப் படுபவர்கள்தான் சுற்றுப்புறத்தில் இருந்து அதிகஅதிர்வுகள் எடுத்துக் கொள்கிறார்கள் என எண்ணுகிறேன். நாம் நாமாக இருந்தால் என்ன? ஏன் யாரோ ஒருவர் போல் மாற வேண்டும்? அவர் நல்லவரானால் கூட!மனது கண்ணுக்கு  தெரியாது எங்கோ உள்ளது. சும்மா இருக்கப் பழக வேண்டும். பரிபூரணர்களாகி விட்டோம் என்ற எண்ணம் வந்தால் கண்டிப்பாக LKG ல் தான் இருக்கிறோம். நம் வேலையைக்  கவனமாக செய்வது அமைதி தரும். மற்றவர் பற்றி விமர்சனம் செய்யாமல் இருப்பது அதிக அமைதி தரும். அவர்களிடம் இருந்து நல்ல, தவறான அதிர்வுகள் எதையும் எடுத்துக் கொள்ளாதிருப்பது அமைதியைத் தங்க வைக்கும். முக்கியமாக,  உள்ளே நேதாஜி ஆதரவாளனாக இருந்து கொண்டு வெளிப்பார்வைக்கு மஹாத்மா வழி அஹிம்சாவாதி போல் காட்டிக் கொள்ளாதிருப்பது பொய்மையை முற்றும் விலக்கும் . பொய்க்கலப்பற்று இருத்தல் நன்று.  தூக்கத்தில் உளறினால் கூட உண்மையே வரும். அதுவே நன்று.