வெள்ளி, 1 ஏப்ரல், 2016

நாம் நல்ல பெற்றோரா நல்ல குழந்தைகளா ?

பத்தாம் வகுப்பு பனிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.பரீட்சை எழுதும் வயதில் குழந்தைகள் உள்ள வீடுகளில் டென்ஷன் உச்ச கட்டத்தில் உள்ளது.ஹெல்ப் லைனுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் வருடத்திற்கு வருடம் அதிகமாகிக் கொண்டு வருகின்றன.கணக்கு வினாத்தாள் சற்று கடினமாக வந்து விட்டால் பெற்றோர் தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை தூக்கம் தொலைக்கிறார்கள்.பரிட்சைக்குக் கிளம்புகிற குழந்தைக்கு வாயில் உணவு அடைக்கப் படுகிறது.கையால் எடுத்து சாப்பிடும் நேரத்தில் படிக்க முடியாது போய் அரை மார்க் குறைந்தால் அண்ணா யுனிவர்சிட்டி கௌன்சிலிங்கில் நல்ல கல்லூரி எதிலும் இடம் கிடைக்காது.கொக்கிற்கு ஒன்றே மதி என்பது போல் எஞ்சினியரிங் தவிர வேறு படிப்புகள் எதையாவது குழந்தைகள் தேர்வு செய்தால் பெற்றோர் கவுரவம் என்னாகும்?எங்கோ தவறு என்று தோன்றுகிறதா இல்லையா?எனக்குத் தோன்றுகிறது.

நாம் குழந்தை வளர்ப்பதற்கும் நம் பெற்றோர் நம்மை வளர்த்ததற்கும் வித்தியாசம் உள்ளது.இந்தக் கட்டுரை அது பற்றிய விவாதமே. தொடக்கத்தில் சொல்லி உள்ள விஷயங்களை படைத்தவனே வந்தாலும் இன்னும் பல ஆண்டுகளுக்கு ஒன்றும் செய்ய இயலாது.நம் பெற்றோர் எந்தெந்த விஷயங்களில் நம்மை குழந்தை போல நடத்தி எதிலெதில் பெரியவர் போல் நடத்த வேண்டுமோ அப்படி நடத்தினார்கள்.வரிசையாகக் குழந்தைகள் உள்ள வீடுகளில் ஐந்தாவது குழந்தை பிறக்கும் போது முதல் பெண் குழந்தை குட்டி தம்பிப் பாப்பாவிற்கு பாதித் தாய் போல் ஆகி விடும்.வரிசையாகத் தட்டைப் போட்டு சாப்பாடு போட்டால் அள்ளி அள்ளி அவரவர் சாப்பாட்டை அவரவரே சாப்பிட்ட காலம்.தன்  வயிற்ருக்கு எவ்வளவு வேண்டும் என்பது குழந்தைகளுக்கு தானே தெரிந்து போகும்.ஊட்டம் என்ற பெயரில் தேவைக்கு அதிகமாக நம் போல் அவர்கள் திணிக்கவில்லை.குட்டி சட்டி என்று அனாவசிய செல்லம் காட்டப் படவில்லை.அதனால் வெளியே யாராவது ஒரு வார்த்தை சொன்னால் தொட்டார் சிணுங்கி போல நாம் நடந்து கொள்ளவில்லை.இப்போது மாணவர்களைக் கண்டிக்க ஆசிரியர்கள் நடுங்கி அல்லவா போகிறார்கள்?

சாப்பாடு போன்ற சிறிய விஷயங்கள் குழந்தைகளே செய்தார்கள்.கல்யாணம் போன்ற ஆயிரம் காலத்துப் பயிரான விஷயங்களில் நம்மைக் குழந்தை போல நடத்தி அவர்கள் முடிவெடுத்தார்கள்.ஆனால் இப்போதோ வளர்ந்த குழந்தைகளுக்கு சாப்பாட்டை ஊட்டுகிறோம்.அவர்களை ஒரு வேலை செய்ய விடாது எச்சில் தட்டை கூட நாமே கழுவி வைக்கிறோம்.ஆனால் பெரிய முடிவுகளான திருமணம் அந்த வைபவத்திற்கான செலவு முதற் கொண்டு அவர்களைத் தீர்மானிக்கச் சொல்லி மௌனியாகி இருக்கிறோம்.நான் குழந்தைகள் சுதந்திரத்திற்கு எதிரி அல்ல.வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் அளவு ,தன்  வாழ்க்கையை சரியாக அமைத்துக் கொள்ளும் அளவு சரியாக சிந்திக்கத் தெரிந்தால் கவலை இல்லை.ஆனால் அப்படி சரியான சிந்தனை உள்ள emotional stability உள்ள தலைமுறையை உருவாக்குவதில் பெரும் பங்கு பெற்றோருடையதே.அந்த உணர்வு பூர்வமான நிலைப்பாடு இந்தத் தலைமுறையிடம் இருந்தால் தேர்வு சமயம் ஏன் ஹெல்ப் லைன் அழைப்புகள் வர வேண்டும்,ஏன் விவாகரத்து வழக்குகள் அதிகமாக வேண்டும்? 

இப்போதுள்ள இளைஞர்கள் நம்மை விடவும் புத்திசாலியாக தெளிவாக இருப்பதாக சொல்லிக் கொள்கிறோம்.உண்மைதான் .Exposure அதிகம்.ஆர்வம் அதிகம்.முக்கியமாக பெற்றோரும் நண்பர்களும் தரும் அழுத்தம் அதிகம்.அறிவு அதிகம் எனத்தான் நானும் நினைக்கிறேன்.ஆனால் எல்லாத் தலைமுறைகளிலும் அறிவாளிகள் உண்டு.எது அறிவு என்ற கேள்வியும் உள்ளதல்லவா?ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்ஸ் எல்லாம் தெரிவதும் கணினி பற்றியதும் அறிவுதான்.ஆனால் கணித மேதை ராமானுஜனுக்கு இருந்ததும் த்யாகராஜ ஸ்வாமிகளுக்கு இருந்ததும் பேரறிவுதான் அல்லவா?இன்னும் ராமானுஜனுக்கு இணையான கணித மேதை நம் நாட்டில் பிறக்கவில்லை.த்யாகராஜ ஸ்வாமிகளின் கீர்த்தனைகள் இல்லாத கச்சேரிகளை நினைக்கவும் முடியவில்லை.அதற்கு என்ன சொல்ல?பரிணாம வளர்ச்சி நடந்து கொண்டேதான் இருக்கும்.அந்தந்த காலகட்டத்தில் சூழ்நிலைகளில் சிகரம் தொடுபவர்கள் புத்திசாலிகள்.என் தாத்தாவின் அறிவு என் மகனுடைய அறிவை விடக் குறைந்தது இல்லை.

அடுத்தது தெளிவு.இன்று சுதந்திரம் அதிகம்.அதனால் குழப்பங்களும் அதிகம் எனத்தான் எண்ணுகிறேன்.தேர்ந்தெடுக்க பல வழிகள் உள்ளதால் தெளிவு போன்ற ஒரு மாயத் தோற்றம் கிடைக்கிறது.தான் தேர்ந்தெடுத்த ஒன்றுதான் சரி என்ற தெளிவு இளைஞர்களிடம் உள்ளது.அதில் தவறு நிகழ்ந்தால் நம்மை சாடுவதில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.எல்லாம் அவர்கள் சாய்ஸ் ஆயிற்றே! ஒரு கயிற்றை இரண்டு பக்கத்தில் இருந்து இழுத்தால் என்னாகும்?அறுந்து போகும்.அதைத்தான் நாம் செய்கிறோம்.நம் குட்டிக் குழந்தை ,வந்த வரன்களில் தனக்கு சரியான ஜோடியைத் தேர்ந்தெடுக்கும் அளவு பெரியவளாம்.ஆனால் அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தால் அம்மாக்கள் என்ன சொல்கிறோம்?அதுவே (அது என்றால் குழந்தை பெற்ற அந்தப் பெண்) சிறிசு.எப்படித்தான் ஒரு குழந்தையை வளர்க்குமோ என்று அங்கலாய்க்கிறோம்.ஏன் ? அப்போ நம் பெண் சிறியவளில் சேர்த்தியா,பெரியவளில் சேர்த்தியா? நம் பெற்றோரிடம் இந்த பதைபதைப்பு இல்லை.கல்யாணம் செய்து கொடுத்து விட்டு எல்லாத்தையும் அனுசரிச்சுப் போ என்று அவர்கள் சொன்னது நம்மைக் கை கழுவி விட இல்லை.நமக்கு தைரியம் தர.பெண் பெற்றவர்கள் மட்டுமில்லை.பையன்கள் வைத்திருப்போரும் சும்மா மகனுடைய உள்ளாடைகளைக் கூடக் கையில் கொண்டு வந்து தந்து அவனை நம்மை சார்ந்திருக்கப் பழக்கி சோம்பேறியாக்கி ,வரும் பெண் தலையில் சுமை அத்தனையும் ஏற்ற வேண்டாம்.

இது போல் எத்தனையோ !! முதியோர் இல்லங்களும் தனிக் குடித்தனங்களும் எப்போ அதிகம்?இப்போதா அப்போதா ?சகிப்புத் தன்மை இல்லைதானே?நம் பெற்றோர் நம்மை விட இன்னும் நன்றாக குழந்தை வளர்ப்பை செய்தார்களோ என்று தோன்றுகிறது.பலர் கோபம் அடையலாம்.விதிவிலக்காக மிக தைரியமான தெளிவான புத்திசாலியான குழந்தைகளை உருவாக்கினவர்கள் மன்னிக்கவும்.இவை பொதுக் கருத்துக்கள்.பெற்றோர் உலகிற்கு குழந்தைகளைக் கொண்டு வந்ததால் தம் கருத்துக்களை அவர்கள் மேல் திணிக்க வேண்டும் என்பது பொருளல்ல.எல்லாம் நல்ல குழந்தைகளாகவே உலகில் பிறக்கின்றன.ஒரு குழந்தை தன்  வளர்ச்சி பற்றிக் கவலை கொள்வதில்லை.வளர்கிறது.குழந்தை மனசு என்றால் என்ன?நம்பிக்கை நிறைந்த மனது.நாம் நினைப்பது எல்லாம் கிடைக்கும் என்ற மனது.கிடைக்காதோ என்று அவநம்பிக்கைப் பட குழந்தை மனதிற்குத் தெரியவே தெரியாது.அந்த எண்ணம் வாழ்நாள் பூர இருப்பின்.உணர்வுச் சிக்கலில் யாரும் சிக்கிக் கொள்வதில்லை.வளர வளர ,வெளி உலகுடன் தொடர்பு ஏற்படும் போது குழந்தைத் தனம் மாறும்.அந்த சமயம் ஆழமான சரியான கருத்துக்கள் திணிக்கிறார் போல் இல்லாமல் சொல்லப் பட வேண்டும்.கண்டிப்பாக நாமும் நல்ல பெற்றோராக செயல்பட இயலும்.குறிப்பிட்ட வயது வரும் வரை அவர்களின் பௌதீக வயதிற்கு ஏற்றார் போல் அவர்களை நடத்தி நம் கருத்துக்கள் சொல்லத் தயங்கக் கூடாது.இது ஒரு பெரிய பொறுப்பு.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS



திங்கள், 28 மார்ச், 2016

சினம் - பாரதியும் வள்ளுவனும் என்ன சொல்கிறார்கள்?

இன்று நல்ல பொழுதாகவே விடிந்தது.எது நல்ல பொழுதில்லை.?அல்ப விஷயமான என்ன காலைச் சிற்றுண்டி என்பதில் ஏதோ வாக்குவாதம் .அது சற்றே கோபமான வார்த்தைப் பரிமாறல்களில் முடிந்தது.உங்களுக்கு எப்படியோ.சினம் என்பது போல் கெட்டஒன்று உண்டென்று நான் நினைக்கவில்லை.யார் மீது நான் கோபம் கொண்டாலும் யார் என் மீது கோபம் கொண்டாலும் அது என் நாளையே கெடுத்து விடுவதாய் உணர்கிறேன்.என் காதலர்களான பாரதியும் வள்ளுவரும் சினம் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தேன்.இனி அவர்கள் சொன்னது.

பாரதியார் பாடல்கள் பல தலைப்புகளின் கீழ் வரிசைப் படுத்தப் பட்டுள்ளன.அவற்றில் சுயசரிதை என்ற தலைப்பில் சினத்தின் கேடு பற்றிப் பேசுகிறார்."சினங் கொள்வார் தமைத் தாமே தீயாற்சுட்டுச் செத்திடுவாரொப்பாவார் "  என்று தொடங்கி, "வேகாத மனங் கொண்டு களித்து வாழ்வீர்"என முடிக்கிறார்.சினம் கொள்வது கொடிய வாள்  கொண்டு  தன்  கழுத்தைத் தானே அறுத்துக் கொள்வதற்கு  ஒப்பானதாம்.தினம் கோடி முறை சினத்தில் வீழ்கிறோம்.சினத்தை வெளியிட்டு விட்டு துயர்க் கடலில் சிக்கிக் கொண்டு மனம் பதைக்கிறோம்.சினம் எதன் வெளிப்பாடு?குழப்பம்?எதிர்பார்ப்புகள்?ஈகோ ?எதுவானாலும் அது தவறே.பாரதியார் சொல்கிறார்."சக்தி அருளால் உலகில் பிறந்தோம்.சாகாமல் ஜீவித்திருப்பதற்கு நாம் காரணம் இல்லை .படைத்தவன் பார்த்துக் கொள்வான்.என்ன நடந்தால்தான் என்ன?கொதிப்படையாத மனம் கொண்டுவாழ்ந்து விட்டுப் போகலாமே" என்று.

வள்ளுவர் பற்றிப் பேசினால் தெய்வப் புலவர் என்ற அடைமொழிக்கு வேறு யார் ஏற்றவர் என்று தோன்றுகிறது.நம் கெட்ட குணம் கோபம் செல்லுபடியாகும் இடத்தில் அதை வெளியிடுவது.செல்லுபடியாகாத இடத்தில் சினம் காப்பவரால் பயன் என்ன என்கிறார்.செல்லும் இடத்தில் கோபம் கட்டுக்குள் இருந்தால்தான் சினம் காத்ததாகப் பொருள்.சினம் கொள்பவரின் முகமலர்ச்சி மட்டுமின்றி அக மகிழ்ச்சியும் அழியுமாம்.கொல்லும்  சினம் என்று குறிப்பிடுகிறார்.

கொஞ்சம் கோபம் நிறைய கோபம் என்பதெல்லாம் பொய்.உள்ள நிறைவில் கள்ளம் புகுந்தது போல்,வாழ்வை நினைத்த பின் தாழ்வை நினைப்பது போல் என்கிறார் பகைவனுக்கருள்வாய் பாட்டில் பாரதியார்.தெளிவான தேனில் சொட்டு விஷம் கலந்தால் அதைத் தேன் என்பதா விஷமென்பதா? மனதிற்குக் கட்டளை என்ற பாட்டில் பேயாய் உழலும் சிறு மனமே என்கிறார்.அன்பு பற்றி ,உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர் என்கிறார்.ஆனால் நாம் அப்படி இருப்பதில்லை.ஆசிட் உடம்பில் பட்டால் எப்படி மோசமான விளைவை ஏற்படுத்துகிறதோ அதையேதான் சினம் உள்ளத்திற்கு உண்டாக்குகிறது.தேவையா?அன்பும் காதலும் இயற்கையான உணர்வுகள்.கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம் என்று மொழிகிறார் வைரமுத்து.கோபம் இயற்கையான ஒரு உணர்வல்ல .இது ஏன் எனப் புரிகிறதா?காதல் வரக் காரணம் தேவை இல்லை.காரணம் இன்றிப் பெரும் பாலும் கோபம் வருவதில்லை.சரிதானே? தானாக உண்டாவதை இயற்கை என்கிறோம்.உண்டாக்கப் படுவதெல்லாம் செயற்கைதான்.சினம் பிறரால் சூழல்களால் தூண்டப்படும் செயற்கையான உணர்வு.

"தன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்"
என்று தெய்வப் புலவர் அனாயாசமாய்ச் சொல்லிச் சென்று விட்டார்.ரொம்ப பள்ளிக் கட்டுரை எழுதி விட்டேன்.வரவரக் கோபத்தை சினிமாவில் பார்த்தல் கூடப் பிடிப்பதில்லை.யாரிடமாவது அரை நோட் சுருதி ஏற்றிப் பேசினால் எனக்குள் வலி வருகிறது.கோபத்தைக் காட்டுபவர்களிடம் இருந்து மனம் பயந்து விலகிப் போகிறது.பாவம் என்னத்தை சாதிக்க இந்த வன்மம் வளர்க்கிறார்கள் என நினைக்கிறேன்.இன்று ஏப்ரல் முதல் தினம். அமைதியான பொழுதுகளே விடியட்டும்.மிக அமைதியான இரவுகள் நம்மைத் தாலாட்டட்டும்.கொடுப்பவரையும் வாங்கிக் கொள்பவரையும் ஒரே போல் தாக்கும் கோபம் நம்மை விட்டு ஓடட்டும்.மனிதன் மட்டும்தான் கோபத்திற்கு ஆட்படும் உயிரினம்.விலங்குகள் survival க்காக ஒன்றை ஒன்று அடிக்கும்.கோபத்தினால் அல்ல.கோபம் மனுஷனின் சொத்து.நாம் கோபப் படுபவரைப் பார்த்து மிருகம் போல் கோபம் கொள்ளாதே என்கிறோம்.அது நகைப்பிற்குரிய வாக்கியம்.விலங்கு மனிதன் போல் கோபம் கொள்வதில்லை.நாம் அவற்றிடம் இருந்து கற்க வேண்டியவை எவ்வளவோ.சண்டை போட்டுக் கொள்ளும் விலங்குகளைப் பார்த்தால் மனிதர்கள் போல் இவையும் சண்டை போட்டுக் கொள்ள வேண்டுமா என்று உங்களுக்கும் தோன்றுமா?அப்படியானால் நீங்களும் நானும் ஒரே wavelength .உடலுக்குத் தருவதை விட மனதுக்குத் தரும் துன்பமே வன்முறை.அதை நம் தவிர ,ஆறறிவு பெற்ற நம் தவிர ஐந்தறிவு கொண்ட வேறோர் உயிரினம் செய்ய முடியாதே?பகுத்து அறிவதற்கென அருளப் பட்ட ஆறாவது அறிவை கண்டிப்பாக நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.கோபம் அழிந்தால்தான் நாம் அதைப் பயன்படுத்தினதாகப் பொருள்.மறுபடி சந்திப்போமா?Let this be a great month!

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

சனி, 19 மார்ச், 2016

மகளிர் தினம் -பேச்சு

 இன்று அகில உலக மகளிர் தினம்.இப்போது எல்லாவற்றிற்கும் ஒரு நாளை ஒதுக்குகிறார்கள்.ஆனால் வாழ்க்கை முழுதும் கொண்டாடப் பட வேண்டிய பெண்களுக்கு ஒரு தினம் ஒதுக்குவது போதாது.நாம் கொண்டாடப் படத் தகுதி உடையவர்கள் என்ற எண்ணம் முதலில் நமக்கு வேண்டும்.மகாகவி பாரதியாரை படிப்பது நம்மில் புது ரத்தம் ஓட  வைக்கும்.
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்குமாம்.நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை,நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்,திமிர்ந்த ஞானச் செருக்கு இவை பெற்றுத் திகழ வேண்டும் பெண்கள் என்கிறார்.பெண்மை வாழ்க பெண்மை வெல்க என்று கூத்தாடி பெண்ணைப் போற்றின ஆண் கவி அவர்.பாரதியார் பற்றிப் பேசத் தொடங்கினால் ,நேரம் போதாது.ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்றெண்ணி இருந்தவர் மாய்ந்து விட்டார்.வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்ற அவர் இப்படி உங்கள் அனைவரையும் சேர்த்துப் பார்த்தால் --பார்த்தால் என்ற பேச்சே இல்லை.அவருடைய தீர்க்க தரிசனம் அது.என்றோ அவர் மனக் கண்ணில் கண்டவை இன்று நடந்து கொண்டிருக்கிறது.

முதலில் இந்த நாளை International working women s day என்றுதான் அறிவித்தார்கள்.work பண்ணாத பெண் என்று யாரும் இல்லை என்றோ என்னமோ working என்ற பதம் எடுக்கப் பட்டு விட்டது.100 வருடங்களுக்கும் மேலாக கொண்டாடப் பட்டு வருகிறது.ஒவ்வொரு நாட்டு கலாசாரத்தை ஒட்டி celebrations அமைகின்றன.சமூகத்தில்,அரசியலில்மருத்துவத் துறையில் கல்வித் துறையில் என்று சாதனை புரிந்த பெண்களுக்கு விருதுகள் கொடுத்து மகிழ்ச்சியைக்  கொண்டாடும் நாடுகள் உண்டு.ஆனால் யார்தான் சாதனைப் பெண் இல்லை?நீங்களும் நானும் சாதனைப் பெண்கள்தான்.எந்த வேலையும் குறைந்தது இல்லை.Dignity of labour என்று கூறலாம்.உண்மையில் உணவகங்களில் சாப்பிட்ட தட்டை எடுக்கும் வேலை செய்யும் துப்புரவாக எளிமையாக உடை அணிந்த பெண்களை நான் மிகவும் மதிக்கிறேன்.சில வருடங்கள் முன்னால் பெண்கள் இது போன்ற பொது இடங்களில் வேலை செய்வது taboo வாக இருந்தது.அதையெல்லாம் தூக்கிப் போட்ட பெண்களுக்கும் பெற்றோருக்கும் salute .வீடுகளிலும் அநேகமாக பல வீடுகளில் பெண்கள்தானே சமையல் department .அதை வேலையாக சம்பளம் வாங்கிக் கொண்டு செய்தால் என்ன தப்பு?

நடுவில் ஒரு கதை சொல்லவா?எல்லாம் கேட்ட கதைதான்.ஏற்கெனவே தொலைக் காட்சியில் கேட்டவர்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்.ஒரு முறை ஒரு நாட்டின் அதிபர் தன்  மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்த பொழுது ஒரு பெட்ட்ரோல் பங்கில் பெட்ரோல் போட காரை நிறுத்த வேண்டி வந்தது.அந்த பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் நம் அதிபரின் மனைவியின் கல்லூரித் தோழன்.அதிபர் மனைவியைப் பார்த்துக் கேட்டாராம்.பார்த்தாயா என்னைக் கல்யாணம் பண்ணாமல் ஒரு வேளை அவனைப் பண்ணிக் கொண்டிருந்தாயானால் என்ன ஆகி இருக்கும்.
மனைவி அமைதியாக பதில் கூறினாராம்.எனக்கு ஒன்றும் ஆகி இருக்காது.இதே போல் காரில் அவன் பக்கத்தில் உட்கார்ந்து போய்க் கொண்டு இருந்திருப்பேன்.அனால் நீங்கள் இந்த பெட்ரோல்   பங்கில் வேலை செய்து கொண்டு இருந்திருப்பீர்கள் என்று.இது விளையாட்டிற்காக சொல்லப் பட்ட கதையாக இருக்கலாம். ஆனால் அந்த பதிலில் என்ன தன்னம்பிக்கை பார்த்தீர்களா?பொழுது போக்காக செய்யும் சில செயல்கள் நம்மில் சிலசமயம் ஒரு தாக்கம் ஏற்படுத்தும்.How old are you மலையாளத்திரைப் படம் --எனக்கு மிகவும் பிடித்தது. 36 வயதினிலே அதன் தமிழ் version நீங்கள் பார்த்தீர்களா?கனவு காணுங்கள் என திரு அப்துல் கலாம் சொன்னது எல்லோருக்கும் தான்.பெண்கள் இதற்கு மேல் கனவு காணக் கூடாது என யார் சொல்ல முடியும்.காற்று போல இருப்போம்.வேலி நாமே போட்டுக் கொள்ளலாம்.வேறு யாரும் போடத் தேவை இல்லை.முக்கால்வாசிப் பெண்கள் atleast திருமணமான பெண்கள் அடையாளம் தொலைத்து விடுகிறார்கள்.விரும்பி கட்டுப் படுபவர்களை விட்டு விடுவோம்.

நான் பெரிய பெண்ணுரிமைக் கருத்துகள் கொண்டவள் அல்ல.பெண்களுக்கு பெண்மைக்கு ஒரு பேதைமை உண்டு.ஆனால் சமமாக கம்பீரமும் உண்டு.மிகத் திறமையான பெண்கள் கூட மன உளைச்சலுக்கு ஆளாகும் தருணங்கள் உண்டு.அதனால்தான் பெண்புத்தி பின்புத்தி என்றெல்லாம் கேலி பேசுகிறார்கள்.ஆண்களை விட உயர்வு என்று நிரூபிப்பதல்ல பெண் உரிமை.உண்மையாய் ஆத்மார்த்தமாய் பெண்விடுதலை பற்றிப் பேசுவோர் ஆண்களைத் தாழ்வாக நினைப்பதும் இல்லை.யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் சவுக்கியம் என்று கண்ணதாசன் கூறவில்லையா?போட்டி இல்லை இது.முடிந்த வரை சுயத்தை தொலைக்காமல் இருப்போம்.தீதும் நன்றும் பிறர் தர வாரா.நம் செயல்களால் நம் எதிர்காலத்தை நாமே முடிவு செய்கிறோம்.Wabco வில் workபண்ணுபவர்களுக்கு perfection பற்றி யாரும் பாடம் எடுக்க வேண்டாம்.ஆனால் தினமும் ஒரு அரை மணியாவது six sigma lecture எல்லாம் நான் கேட்கிறேனே!அதனால் இந்தப் பகிர்வுகள்.வாழும் ஒவ்வொரு கணமும் perfect ஆக வாழ வேண்டியதே.உடனே சீரியஸ் ஆக எப்போது பார்த்தாலும் இருக்கணும் என்பதல்ல பொருள்.Enjoy life .ஆனால் எது enjoyment என்பதில் கவனம் தேவை.சிலர் எனக்கு மட்டும் அப்போதே இது போன்ற சூழ்நிலைகள் அமைந்திருந்தால் அப்படி பண்ணிருப்பேன்.இப்படி பண்ணிருப்பேன்.I want to set the clock back என்றெல்லாம் கூறு வார்கள்.அது அறியாமையே.எந்த சூழ்நிலையில் இருந்தும் எந்த உயரமும் தொடலாம் என்பதற்கு நம் பிரதமரை விட என்ன உதாரணம் தேவை?

வெற்றி என்பது ஒவ்வொருவருக்கும் வேறு பொருள் தரும் ஒன்று.Largest online encyclopedia வான விக்கிபீடியா attainment of higher social status,achievement of a goal,opposite of failure என்று success ஐ define செய்கிறது.இந்தியாவில் மதிப்பெண்கள்ஐ ஐ டி ,மருத்தவக் கல்லூரி admission இதையெல்லாம் வெற்றி என்று சொல்லிக் கொண்டுள்ளார்கள்.இதெற்கெல்லாம் முன்னால் சொல்லித் தர வேண்டியது எப்படி எந்த சூழலையும் தனக்கு சாதகமாக்கிக் கொள்வது என்று.How to make a lemonade out of a spoilt lemon என்று டேல் கார்னகி கூறுகிறார்.Win 2.0 என்ற transformation program Wabco வில் பின்பற்றுவது பற்றி வீட்டில் sir சொல்லி கேட்கிறேன்.உங்களுக்கெல்லாம் என்னை விட அதிகமாக அது பற்றித் தெரியும்.உள்நாட்டுத் தரத்தில் இருந்து உலகத் தரத்திற்கு உயர்வது .உதாரணமாக அவர் கூறின விஷயங்களில் இருந்து ஒன்றை share பண்ணிக்கறேன்.Bar  code என்றால் என்ன என்று நமக்குத் தெரியும்.சூப்பர் மார்கெட்டிற்கு சாமான் வாங்கச் சென்றால் பில் போடுபவர் பொருளை barcode reader முன் காட்டுவார்.அதன் விலை கம்ப்யூட்டரில் வரும்.பல தடவை கவனித்து இருக்கிறேன்.பில் போடும் பையனோ பெண்ணோ பொருளை அப்படியும் இப்படியும் சில சமயம் தலைகீழாகவும் ஆட்டுவார்கள்.இதன் காரணம் என்ன என்றால் bar code ஐ இப்படித்தான் ஓட்ட வேண்டும் என்ற சட்டம் இந்தியாவில் இல்லை.வாப்கோ விற்கு உள்ளதோ global market .ஒரு முறை நீங்கள் வெளிநாட்டிற்கு அனுப்பின பொருளில் ஓட்டப் பட்ட barcode ஐ read பண்ண reader ஆல் முடியாது போனதாம்.காரணம் இன்க் சற்று மங்கி இருந்ததாம்.So ,that product was rejected it seems.உடனே action தான்.அதில் உங்களை யார் மிஞ்ச முடியும்?

வின் 2.0 நான்கு படிகள் கொண்டது என்று கூறுவார்.1.Talent 2.Behaviour 3.Product 4.Process .Let us quickly go through .1.Talent நாம் செய்யும் பணி  பற்றிய முழுமையான அறிவு.தெரியாததைத் தெரிந்து கொள்ளுதல்.உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும்  கற்றார் என்கிறார் வள்ளுவர்.இல்லாதவர்கள் இருப்பவர் முன் கையேந்துவது போல் என்பது பொருள்.அது போல் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல்.திறமையை வளர்த்துக் கொள்வது.2.Behaviour .Meeting commitments எனலாம்.சொல்லும் செயலும் ஒன்றாக இருத்தல்.சொன்னதை செய்து முடித்தல் 3.Product .தயாரிக்கும் பொருள்களின் தரம் எந்த வித compromise ம் செய்து கொள்ளாத அளவு முதன்மையான தரம் 4.Process .செயல் முறை முன்னேற்றம்.இதெல்லாம் நிறுவனங்களுக்கு மட்டும் இல்லை.வாழ்க்கைப் பாடங்களும் கூட.

சந்தா கோச்சர் -M D and C E O of ICICI BANK,Kiran mazumdhar shah-chairman and MD of Biocon Ltd,Preetha reddy-MD of Appollo hospitals,Vinitha bali-MD of Britania industries ltd,shika sharma-MD and ceo of Axis bank,indra nooyi pepsi,Mallika srinivasan-chairman and ceo of tafe, என்று கூகிள் ஓபன் செய்தால் வெற்றி பெற்ற பெண்கள் பட்டியல் நீள்கிறது.எல்லோரும் இந்த இடம் அடைய ,சிகரம் தொட எத்தனையோ சிரமங்களைக் கடந்து வந்திருப்பார்கள்.வாழ்க்கை எப்போதும் மலர்ப் படுக்கையாக இருந்து விடுவதில்லை.எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம்.நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கை பட வேண்டும் என்கிறார் பாரதியார்.Depression அடையவே கூடாது. நம் தாங்கும் சக்திக்கேற்பவே நமக்கு வாழ்வில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.போர்க் குணம் வேண்டும்.போர் என்றால் சண்டை இல்லை.அப்படிப் பார்த்தால் சின்ன சச்சரவுகளில் எல்லாம் தலையிடவே கூடாது.போர்க் களத்தில் வேண்டுமானால் எதிர்ப்பவனுக்கு வெற்றி.வாழ்க்கையில் விட்டுத் தருபவனுக்கே வெற்றி.போர் குணம் என்பது வெற்றி பெறுவதில் ஆர்வம்.அவரவர் மனதில் எது வெற்றி என்று நிர்ணயித்துக் கொள்ளுவோம்.யாருடனும் ஒப்பிட்டுக் கொள்ள வேண்டாம்.நாம் நேற்றை விட இன்று இன்னும் சிறப்பாக வாழ்ந்தால் அதுதான் வெற்றி.ஒரு சின்ன personal story சொல்லி முடிக்கட்டுமா?

MOTHER PROTECTS




செவ்வாய், 1 மார்ச், 2016

மனசும் அதன் மயக்கங்களும்

மனது அல்லது இதயம் ஆயிரம் வாசல் கொண்டது.  நிமிடத்திற்கு ஆயிரம் எண்ண அலைகள் உற்பத்தி செய்யும் வல்லமை கொண்டது. பெரிய யானையைக் கட்டுப் படுத்தும் சின்னப் பாகன் போல கண்ணுக்குத் தெரியாமல் இருந்து கொண்டு நம்மை ஆட்டிப் படைக்கும் சக்தி பெற்றது. இதயம் கூட எனக்கு சொந்தம் இல்லை என்ற வாழ்வு வலி நிறைந்தது. அதை கட்டுக்குள் வைப்பது ஒரு அப்யாசம். யக்ஞம். ஆயிரம் வாசலையும் திறந்து வைத்து விட்டு அவதிப் படக் கூடாது. வாசல் திறப்பது நம் இஷ்டம், வசதி. உள் இருந்து பூட்டப் பட்ட கதவு போல. வெளி ஆட்கள் கதவு தட்டி விட்டு நிற்கலாம். உத்தரவு எதிர் பார்த்து.  இஷ்டப்படி திறந்து கொண்டு உள்ளே வரலாகாது. ஆள்களுக்கும் எண்ணங்களுக்கும் பொது விதிதான். எல்லாம் உள்ளே வரும் போது குழப்பம் தான். பலர்,  பல பொருள் புழங்கும் இடம் சந்தை. சந்தைக்  கடை என்றால் குழப்பம்.  கூட்டத்தில் கூட வந்தவர் காணாமல் போவது போல், குட்டையாகக் குழம்பிய எண்ணக்குவியலில் மனம் காணாது போகும்.


மனக் குதிரை ஓட்டம் எடுக்கப் பார்க்கும் தருணம்,  நில் என்றால் நிற்க வைக்க என்ன செய்ய வேண்டும். சும்மா இருந்தாலே போதும் என எண்ணுகிறேன். கோவிலுக்குள் கால் கழுவாது நுழைவோமா? மனக் கோவிலுக்குள் செல்லவும் அதேதான். மனத்தின் சக்தி அதிகமாக ஆக நம்மை நாம் ஏமாற்றிக் கொள்வதும் நிகழவே செய்கிறது. பல நேரம் நம் தவறுகள் நமக்குத் தெரியும். ஆனால் அத்தவறுகளை ஞாயப் படுத்த ஒரு விளக்கம்  குதித்து முன்னால்  வரும்.  அப்போது கவனம் அவசியமாகிறது. மேல்மனம் எதையும் கணிக்கும் சக்தி அற்றது. ஆனால் அப்படி கணிப்பதையேதான் தன்  வேலையாகக் கொண்டுள்ளது. அறியாமையில் செயலாற்றிக் கொண்டிருக்கும் அதன் குரலைக் கேட்கத் தொடங்கினால் ஆயிரம் சந்தேகம் வரும்.

காலம் காலமாக சரி என்று சொல்லப் பட்ட சொல்லித் தரப் பட்ட எண்ணங்களுடனே வாழ வேண்டுமா என்ன! அமைதி வேறு,மௌனம் வேறு. மனதை அமைதி ஆக்க ஓரளவு இயலும். சாதா எண்ணங்களை நிறுத்தினால் போதும். ஆனால்,  வெளியில் இருந்து வரும் ஏதோ ஒன்று அந்த அமைதியைக் கலைக்கக் கூடும். நம் மன ஓட்டங்களையும் நிறுத்தி,  வேறு மனங்களில் இருந்து வரும் அதிர்வுகளை உள்ளே வராமல் செய்வது சுலபம் இல்லை. அதன் பேர்தான் மௌனம். மௌனம் கைகூடும் தருணம் புரிதல் வருகிறது. ஒரு  வீட்டை மாற்றினால், அதில் உள்ள நாம் மாறிவிடுவோமா ?இல்லை. நாம் மாறினால்,  இடத்தை மாற்றத் தேவையே இல்லை. மயங்கினால்தான் அது மனித இதயம். எந்த மயக்கமும் இல்லை என்று நம்ப இயலாது. நம் மனசுக்கு நாம்தான் எஜமான்.

வெற்றி இலக்கிற்கு முந்தின மணித் துளிகள்தான் மிகக் கஷ்டமானவை. எண்ணங்களை வெற்றி கொள்வதும் இதே போலத்தான். வெள்ளத்தனையது மலர்நீட்டம். நம் உள்ளத்தனையது உயர்வு. அவசரமாக செயல்படவோ பேசவோ செய்யாமல்,  ஒரு வெளி ஆள் போல நம்மை நோக்கினால் எங்கு தவறு எனத் தெரியும். நிஜப் போர்க் களத்தில் எதிர்ப்பவன் வெற்றி அடைகிறான்.வாழ்க்கையில்,  சண்டைகளில் பின்வாங்குபவனுக்கல்லவா  வெற்றி!மனம் குரங்காவதும் கோவிலாவதும் நம் கையில்தான்.

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

யானைகளுக்கு மட்டுமா புத்துணர்வு முகாம் ?

நம் முதலமைச்சர் கட்டளைப் படி நடந்து வரும் யானைகளின் புத்துணர்வு முகாம் பற்றி தொலைக் காட்சியில் பார்க்கும் போதும் செய்தித் தாள்களில் வாசிக்கும் போதும் எனக்கு அந்த யானையே நான்தான் என்பது போல் மிக சந்தோஷமாக இருக்கும். உடனே நான் பெரிய மிருக நல ஆர்வலர் என்றெல்லாம் எண்ணிக் கொள்ளாதீர்கள். தெருவில் நாய்களைப் பார்த்தால் கூட நடந்து வருபவர் பின்னால் ஒளிந்து கொள்ளும் ஒரு ஜந்துதான் நான். Blue cross ஐச் சேர்ந்த யாராவது என்னை அப்போது பார்த்தால் சற்று எரிச்சல் கூட அடையக் கூடும். தெரு நாய்கள் என்றில்லை. வளர்ப்புப் பிராணிகள் வைத்திருக்கும் வீடுகளுக்குச் செல்வதை ஏதேனும் காரணம் சொல்லித் தவிர்த்து விடுவதே வழக்கம். மற்ற பறவைகள் பிராணிகள் என்றாலும் இதே கதைதான்.  அவை என்னைக் கண்டு அஞ்சும். நான் அவற்றைக் கண்டு அஞ்சுவேன். ஆனால் தூர இருந்து ரசிப்பேன். அவை துன்பப் பட்டால் தாங்காது. தொட்டியில் உள்ள மீன்கள், கூண்டுக் கிளிகள், சர்கஸ் விலங்குகள், வண்டி இழுக்கும் மாடுகள், காசு வாங்கும் அவ்வளவு கம்பீரமான யானை இவை எல்லாம் எந்த அவசரத்தில் பார்க்க நேர்ந்தாலும் என் மனம் தொடத் தவறியதில்லை. அதனால்தான் ஒரு டூர் அடித்து உற்சாகமாகத் திரும்பும் இந்தப் புத்துணர்வு முகாம் யானைகள் என்னை அவ்வளவு சந்தோஷமாக்கும். ஐந்தறிவு கொண்ட விலங்குகளுக்கே மாற்றங்கள் புத்துணர்வு ஊட்டுமானால் ஆறறிவு கொண்ட மனிதர்களுக்கு அத்தகைய மாற்றங்கள் எவ்வளவு தேவை என்ற நினைவே இந்தப் பயணக் கட்டுரையின் விதை! எல்லோரும் நீண்ட பயணங்கள் மேற் கொண்டு அனுபவங்கள் பகிர்கிறார்கள் .நான் சென்னையில் இருந்து இதோ இங்கிருக்கும் கரூருக்கு இரண்டே நாள்கள் போய் வந்தேன். ஆனால் எத்துணை சிறிய பயணமானாலும் அது ஒரு படிப்பினையே.

கரூர் என் பிறந்த ஊர். உலகின் எந்தக் கோடிக்குச் சென்றாலும் மண்ணின் வாசம் மறக்க இயலாது. நாம் சிறிய உருவுடன் பெற்றோர் கை பிடித்து நடந்த சாலைகளில் மறுபடி நடந்தது மனம் வருடியது. நம் சிறு கால்களால் அப்போது நடந்ததாலோ அல்லது அதை விட மிகப் பெரிய நகருக்கு வந்து விட்டதாலோ அப்போது நீளமாகத் தெரிந்த வீதிகள் எல்லாம் இந்த தூரத்தைக் கடக்கவா அப்போது அவ்வளவு சிரமப் பட்டோம் என்று தோன்ற வைத்தன. எதிரே பார்க்கும் தோல் சுருங்கின முகங்களில் நம் பெற்றோரைத் தெரிந்தவர் யாரேனும் இருக்கிறார்களா என்று தேடத் தோன்றியது. சிவன் கோவிலில் கருவூரார் சந்நிதியில் என் பள்ளித் தோழன், தன் அப்பாவின் பின்னால் நின்று கொண்டு சற்றே வெட்கத்துடன் எல்லோருக்கும் விபூதி கொடுத்த குட்டிப் பையன் இப்போது பெரியவனாகி அவன் அப்பா செய்த வேலையைச் செய்து கொண்டு தீபாராதனைத் தட்டை நீட்டி விட்டு முகத்தில் அதிசயம் கலந்த சிநேக பாவம் காட்டிய போது "ஓ நம்மை அடையாளம் கண்டு கொள்ள கடவுள் தவிர சிலர் இன்னும் இந்த ஊரில் உள்ளார்கள்" என்று மன ஓட்டம் சென்றது. இளம் அம்மாக்களின் இடுப்பிலும் அப்பாக்களின் தோளிலும் சவாரி மேற்கொண்டு சென்று கொண்டிருந்த குழந்தைகளிடம் போய் அதுகளுக்குப் புரியாவிட்டாலும் "உனக்கும் எனக்கும் ஒரு சொந்தம் உண்டு. நம் இருவரின் இளமைப் பருவமும் இந்த மண்ணில். நீயும் என் போல் ஐம்பது வயது தாண்டி இது போல் இங்கு வருவாயா? உன் சொந்தம் என்று கூற இங்கு யாரும் இல்லாவிட்டாலும் இந்த மண் என் சொந்தம் என்று சொல்லிக் கொண்டு வருவாயா ? இந்தக் கருவூரின் காவல் தெய்வம் மாரியம்மனும், ஆனிலையப்பனும், தான்தோன்றிப் பெருமானும் இடம் விட்டு நகராது ஊரைக் கட்டிக் காத்துக் கொண்டுள்ள போது, அவர்கள் தரிசனம் காண்பது தவிர வேறு காரணம் தேவை இல்லை இந்த மண்ணில் கால் பதிக்க என்று என் போலவே எண்ணிக் கொள்வாயா? "என்று அந்தக் குழந்தைகளின் கன்னம் தொட்டுக் கேட்கத் தோன்றியது.

படித்த பள்ளி, வேலை பார்த்த கல்லூரி, திரைஅரங்குகள்  இன்னும் அத்தனை இடங்களும் நேற்றுதான் வந்த இடத்திற்கு மறுமுறை வந்தார் போல் இருந்தது. ஆனால் எங்கள் தாத்தா கட்டி பல தலைமுறைகள் வாழ்ந்த எங்கள் வீடு எது என்றே கண்டுகொள்ள முடியாமல் அந்தத் தெருவில் நின்று கொண்டு திருதிருவென விழித்த தருணம் மட்டும் மிக வருத்தமாகவும் இருந்தது. சட் என மனம் சமநிலை அடைந்தது. அடிக் கரும்பின் தித்திப்பு போல மனச் சுரங்கத்தில் நினைவுகள் இனிக்கலாம். அதை மேலே கொண்டு வந்து அசை போடலாம். ஆனால் யானைகளின் முகாம் போல அந்த எண்ணங்கள் புத்துணர்ச்சிதான் ஊட்ட வேண்டும். முகாமிலேயே யானைகள் தங்கலாமா?ஒரு வழியாய் எங்கள் வீட்டைக் கண்டுபிடித்து அதை வாங்கி அங்கே வசிப்பவர்களிடம் அனுமதி பெற்று உள்ளே சென்றவுடன் மனம் இன்னும் உள்ளேதான் சென்றது. அந்த இடத்திற்கு அந்நியமாகத்தான் உணர்ந்தேன். ஒரு நிமிடம் கண் மூடி இந்த வீடு தன்னில் இருந்தவர்களை வைத்திருந்தார் போல இப்போது இருப்பவர்களையும் இனி இருக்கப் போகிறவர்களையும் நல்லபடி வைக்கட்டும் என வேண்டி வெளியே வந்து விட்டேன்.

இனி சில முக்கிய செய்திகள். மடிக் கணினியை மறந்து, கைபேசியை மறந்து நிம்மதியாக இருந்த கணவர், நகரப் பரபரப்பில் இருந்து மாறுபட்ட சூழலை ரசித்த குழந்தைகள், நாம் சமையல் அறைக்கு சென்றால்தான் சாப்பிட முடியும் என்றில்லாது இரண்டு நாள் உட்கார்ந்த இடத்தில் சாப்பிட்டுக் கொண்டு என் மனதிற்குப் பிடித்ததை செய்த நான் எல்லோருக்கும் இந்தப் பயணம் ஒரு மகிழ்ச்சி தந்தது. பர்ஸ் சம்மதிப்பதைப் பொறுத்து அவ்வப்போது சில பயணங்கள் மேற்கொள்வது நம்மைக் கண்டிப்பாக உற்சாகமூட்டும். வீட்டில் நாம் எது பேசினாலும் இரண்டு காது இருப்பதே ஒன்றில் வாங்கி மற்றதில் விட என்பது போல் நடந்து கொள்ளும் கணவர்கள் கொஞ்ச நேரமாவது நாம் பேசுவதைக் கேட்க ஒரு சந்தர்ப்பம் அமையும். அடுத்த புத்துணர்வு முகாம் எப்போது என யானைகள் எதிர்நோக்குமோ என்னவோ நான் எதிர்நோக்குகிறேன்!

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS 
சினேகிதி மார்ச் 2016 இதழில் வெளிவந்துள்ள கட்டுரை 


செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

காலம்

அழ.வள்ளியப்பாவின் பாட்டு ஒன்று நினைவலைகளில் இன்று.

"அன்றொரு நாள் ஆடுகையில் நான் இழந்த பந்து
பின்னொரு நாள் தேடுகையில் மீண்டு வந்ததுண்டு
அன்றொரு நாள் பாடுகையில் அடி மறந்த பாட்டு
பின்னொரு நாள் பாடுகையில் நினைவில் வந்ததுண்டு
அன்றொரு நாள் போட்டியிலே நான் இழந்த நண்பன்
பின்னொரு நாள் சேர்ந்திடவே திரும்பி வந்த துண்டு
அன்றொரு நாள் சோம்பலிலே நான் இழந்த காலம்
என்னருமை வாழ்வினிலே இன்னொரு நாள் வருமோ "

எவ்வளவு எளிமை பாருங்களேன் கருத்திலும் வார்த்தைகளிலும்.நாம் நடந்து வந்த,கடந்து வந்த அடிச்சுவடுகளைத் திரும்பிப் பார்க்கும் வழக்கம் யாருக்கில்லை?நாம் பிறப்பதற்கு முன்னால் எத்தனை காலம் கடந்திருந்திருக்கிறது!நமக்குப் பின்னால் இன்னும் எத்தனை காலம் கடக்கப் போகிறது!அப்படி என்றால் அந்தக் குறுகிய நாட்களுக்கு ஒரு விருந்தாளி போல் உலகைப் பார்க்க வரும் நாம் எந்த அளவு நம்மை முக்கியமாக நினைத்துக் கொள்ளலாம்?ஒரு ஊரில் விருந்தாளியாகப் போய் தங்குகிறவருக்கு அந்த இடத்தில் என்னென்ன செய்ய வேண்டுமோ எப்படித் திட்டமிட்டு அதைச் செய்வோம்?அது போலத்தானே நம் வாழ்க்கைப் பயணமும் அதில் நாம் செலவழிக்கும் ஒவ்வொரு மணித் துளியும்?திரும்பக் கிடைக்காத விஷயங்கள் அதிக முக்கியத்துவம் பெற்றுத்தான் விடுகின்றன.அவ்வாறு திரும்பிப்  பெற முடியாத நீண்ட பட்டியலில் தலையானதே காலம்.அதே போல் வரும் விருந்தினர் ஒரு நாள் கிளம்ப வேண்டும்.அங்கு இருக்கும் வரை எல்லாம் அனுபவிக்கலாம்.ஆனால் வரையறைகள் உண்டு.நல்ல விருந்தினருக்கு நல்ல treatment கிடைக்கும். மோசமான விருந்தாளி போல் நாம் நடப்பின் உலகம்   அதையே திருப்பித் தரும்.இதில் என்ன புதிய செய்தி என்று தோன்ற வாய்ப்புண்டு.புதிது என எதுவுமே இல்லைதான்.நாம் கேட்கும்,படிக்கும்,சிந்திக்கும் கருத்துக்களின் மற்றொரு வடிவமே எழுத்து.நான் நிஜமாகவே அனைவருக்கும் ஒரு தோழியே.இவை கருத்துப் பரிமாற்றங்கள் மட்டுமே.பரிமாற்றங்கள் மேடையில் மட்டுமல்ல.மெயிலிலும் நிகழலாமே? சரி கடிகார முள் வேகவேகமாய் நகர்கிறது.காலம் பற்றித்தானே பேசத் தொடங்கினோம்.குரங்கு போல் தாவுவது என் weakness ?

வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் பற்றி தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறுகிறார்.I have heard many people saying that they want to set the clock back and relive some moments of their life in a better way.இது போல் நடக்க முடியாத விஷயங்களை நினைப்பதே நேர விரயம்.பேசுவது இன்னும் வீண்.எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி எழுதி மேற் செல்லும் என சிந்துபைரவி படத்தில் ஒரு வசனம்.வரும்.உண்மையில் அப்படித்தான் எல்லாம் நடக்கிறது.தவறுகள் என்று எதுவும் இல்லை.இன்னும் சரியாக வாழ்ந்திருக்கலாமோ என்றால் அப்படி எண்ணம் வந்தால் தவறாக வாழ்ந்திருக்கிறோம்  (எல்லாம் குட்டி lapsesதான் .பெரிதாக எதுவும் இல்லை) என்ற குற்ற உணர்வுடன் வாழ்வதாகப் பொருள்.There are little incidents in life.The importance of these incidents lies in the extent to which they have served us to make a progress. It is perfectly ok ,even necessary to recognise our imperfections.But if the realisation doesn't give us a greater courage what is the use of simply brooding over the past?இன்று சரியாக செய்யாததை நாளை செய்து விடுவோம்.சரி செய்ய முடியாத எதுவும் பண்ணி விட்டாலும் குடி முழுகாது.மறுபடி அது போல் யோசிக்காமல் வினை ஆற்றாது இருப்போம்.தவறுகளை ஞாயப் படுத்துவதல்ல நோக்கம்.டூர் கூட்டிப் போகும் அப்பா இன்று இங்கே நாளை அங்கே என்று திட்டமிடுதல் போல் தெளிவாக சிந்தித்து வாழ முடிவது உயர்வுதான்.வாழ்க்கைப் பயணத்தில்.ஆனால் வயதும் அனுபவங்களும்தானே கற்றுத் தரும் ஆசானாக விளங்குகின்றன?இந்த para mistakes பற்றிப் பேசி விட்டோம்.

சம்பந்தம் இல்லாமல் இல்லை.எதற்கும் எந்த நல்ல செயலுக்கும் காலம் கடக்கவில்லை.ஒவ்வொரு நொடியும் நிகழ்காலத்தில் இருந்து ரசித்து அனுபவிக்க வேண்டிய ஒன்றே.அப்படி நினைத்தால்தான் சரியாய் வாழ்தல் சாத்தியம்.இன்னும் நாலு வருஷம் பொறுத்துப் புலம்பாது இருத்தல் சாத்தியம். நடந்து முடிந்த செயல்கள் என்னென்ன நன்மைகளைத் தந்துள்ளன என்ற நினைவே சரியானது.சும்மா impurities என்று ஒரு லிஸ்ட் நாமே போட்டு அதைப் பற்றி யோசிப்பது ,என் அத்தைக்கு மீசை இருந்திருந்தால் நான் அவளை சித்தப்பா என்று கூப்பிட்டிருப்பேனே என்பதெல்லாம் பண்ணி முட்டாள் தனமாய் நேரம் கடத்தக் கூடாது என்பதைத்தான் அழ.வள்ளியப்பா முதல் para வில் சொன்னார்.அதேதான் எதிர்காலத்திற்கும்."அர்ஜுனா பிறவிகள் பல கடந்து போயின.அவை அனைத்தையும் நான் அறிவேன்.நீ அறிய மாட்டாய் "என்கிறார் பகவான்.நம் limited vision எதை அறியும் சொல்லுங்கள்? காலத்தை இறக்கையுடன் கூடியதாக நான் உருவகப் படுத்திக் கொண்டுள்ளேன்.அது பறந்து கொண்டுதான் இருக்கும்.அதுவே இயற்கை.

இறைவனுக்கு அமைந்த பல விளக்கங்களுள் அவர் மகாகாலம் என்பது மிக முக்கியமானது.பகவத்கீதை பதினோராம் அத்தியாயமான விஸ்வ ரூப தரிசன யோகத்தில் முப்பத்திரண்டாவது ஸ்லோகத்தில் "நீ யார் " என்ற கேள்விக்கு "நான் வல்லமை வாய்ந்த காலம் "என பகவான் பதில் அளிக்கிறார்.ஸ்வாமி சித்பவானந்தா தன்  உரையில் கூறுகிறார்,"காலம் முன்னும் பின்னும் அகண்டாகாரத்தில் விரிந்தோடுகிறது.அது செயலனைத்தையும் தன்பால் அடக்கி வைத்துள்ளது." என்று.காலம் என்பது அழிவு.எதற்கும் நிற்காது.யாரையும் விட்டும் வைக்காது.இதோ கடந்த நிமிடத்தை இறந்தகாலம் என்று சொல்லி விடுகிறோமே.!அப்படியானால் எத்தனை கவனமாகக் கையாளப் பட வேண்டிய ஒன்று.சோம்பி நிற்க,சோர்ந்து நிற்க,நடந்ததற்கு வருந்த,நடக்கப் போகிறதா என்று மறைபொருளாக உள்ளதற்குக் கவலைப் பட செலவு பண்ணக் கூடாத ஒன்று.ஒவ்வொரு நொடியும் இறைவனுக்கு அர்ப்பணித்து செம்மையாய் மிக மகிழ்ச்சியாய்,கால வடிவினனான கடவுளுக்கு நன்றி செலுத்தி வாழ வேண்டியதே.மறுபடி சந்திக்கலாம்.

ரஞ்ஜனி த்யாகு

Mother protects

செவ்வாய், 26 ஜனவரி, 2016

சரணாகதி

இந்த வருடத்தின் முதல் சந்திப்பு.எல்லோரும் இன்புற்று இருக்கவே அல்லாமல் யாமொன்றறியேன் பராபரமே. அது ஒரு மனசு.மேன்மை தவிர --பாருங்களேன் மென்மை என்று டைப் செய்தேன் அது மேன்மை என்று டைப் ஆகி விட்டது.இரண்டும்தான் சரி.மென் மனசுக் காரர்கள்.மென்மை weakness அல்ல.வைரம் போன்ற உறுதியான உள்ளங்களே மென்மையையும் வெளிப் படுத்துகின்றன.சிவபெருமான் மேல் காதலாகிக் கசிந்துருகின அடியார்கள் மற்றவற்றின் மேல் பற்றை விட எத்துணை  உறுதி வேண்டும் ! அதன் பின் காதல் பிறக்கிறது.அது கசிந்து உருகச் செய்கிறது.அதுதான் சொன்னேன் மென்மைக்கு உறுதி உண்டு என்று. மென்மையான உள்ளங்களால்தான் எல்லோரும் இன்பம் கொள்வதை அவ்வாறு நோக்க இயலும்.சரணாகதி என்று தலைப்பிட்டு விட்டு இது என்ன முன்னுரை என்றுள்ளதா?மேலே செல்லுங்கள் ப்ளீஸ் .

ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் தொண்டை கட்டும்.கீழே விழுந்தால் அடி படும்.நெருப்பைத் தொட்டால் சுடும்.அடித்தால் திருப்பி அடி விழும்.பந்து சுவற்றில் போட்டால் திரும்பி வரும் இவை போன்று சொல்லிக் கொண்டே போகலாம் அல்லவா? தீய வினைகள் பலன் தரும் என்றால் நல்ல வினைகளும் பலன் தந்தே ஆகணும் .அதனால் என்ன அறிகிறோம்?.நம் வாழ்க்கையின் எதிர்கால நிகழ்வுகளை நாமே நிர்ணயிக்கிறோம்.எதைக் கொடுக்கிறோமோ அதைத்தான் வேறு உருவில் பெறுகிறோம்.கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் ," எல்லாம் அவனால் நடக்கிறது" என்று கூறுவதைக் கேட்கிறோம். எனக்கும் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளதுதான்.ஆனால் மனத்தகத்து இறைவன் வீற்றிருந்தால் அது உண்மை எனில் தானாக நம் செயல்களில் மாற்றம் இருக்கும்.அன்பே சிவம்.எல்லாவற்றையும் துறப்பதும் அல்லது நினைப்பதை எல்லாம் அடையச் செய்யும் போராட்டமும் சரணாகதி இல்லை.அவன் தருவதை எளிமையாக மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வதே சரணாகதி.பெரும்பாலான நேரம் கடவுள் பொற்காசுகள் தரத் தயாராய் இருக்கும் போது நாம் அவரிடம் போய் மண்டியிட்டு ," அரைக் கிலோ கத்திரிக்காய் தரமாட்டாயா" என அழுது வாங்கி வந்து அப்போதைக்குத் த்ருப்திப் பட்டு மறுபடி கத்திரிக்காய்க்கு சமமாக எதைக் கேட்கலாம் என யோசிக்கிறோம்.உண்மையில் வரும் காலத்தை அவன் நடத்துவான் என்ற எண்ணம் இருந்தால் கத்திரிக்காய் வாங்கிக் கொள்ளும் போதும் காசு வாங்கிக் கொள்ளும் போதும் ஒரே மனநிலையில் இருக்க வேண்டும்.

ஆசைகளும் அவற்றை அடைவதும் ஒரு தெளிவற்ற நிச்சயமற்ற கலப்படம் நிறைந்த முழு த்ருப்தி அற்ற சந்தோஷத்தைத்தான் தரும் என அறிவது முதல் நிலை.பகுத்து அறிய முடிந்தவர்கள் எது ஆசை எனப் பிரித்தறிந்து அதை அடையச் செய்யும் அனாவசியப் ப்ரயத்தனங்களை நிறுத்த முயல்வார்கள்.இரண்டாவது நிலை அது.In Sri Aurobindo Mother's words.


" There is an infinitely greater delight in conquering and eliminating a desire than in satisfying it.Every sincere and steadfast seeker will realise after sometime sooner or later at times very soon,that this is an absolute truth,and that the delight felt in overcoming a desire is incomparably higher than the small pleasure,so fleeting and mixed."


 நம் வாழ்வின் பொறுப்பை இறைவனிடம் ஒப்படைப்பது மனதால் உணர்வால் அல்லது வாழ்க்கை சூழ்நிலைகளால் நடக்கிறது. சரணாகதி முழுமையாகும் தருணம் எல்லாம் தாளம் தப்பாது நடக்கும்.நம் ஆற்றலை விரிவு படுத்துவது சரணாகதி.அது மட்டுமே உண்மையான emotional protection ஆக இருக்க வல்லமை வாய்ந்தது.Detailed Perfect Surrender என்று குறிப்பிடலாம்.நம் வாழ்க்கையின் எல்லாவற்றையும் முக்கியமற்றவை என்ற பிரிவில் அடங்கும் சிறிய விஷயங்களைக் கூட அவன் பாதங்களில் வைத்து விடுவது .எந்த மனிதனாவது உன் கஷ்டத்தை எல்லாம் என்னிடம் விட்டு விடு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று நம்மிடம் கூறுகிறார்களா அப்படிக் கூறினாலும் அது நடக்குமா?நாம் முழுமையான சரணாகதிக்குத் தயாரா என்பதை சோதிக்க வாழ்க்கை ஒரு தருணத்தையாவது நமக்குத் தராமல் போகாது.அதை ஒரு spring board போலப் பயன்படுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும்.

Swami Aurobindo says in his great work " The synthesis of yoga ", "we must always go beyond.always renounce the lesser for the greater,the finite for the infinite:we must be ready to proceed from illumination to illumination , from experience to experience,from soul state to soul state,so as to reach the utmost transcendence of the Divine"


ஆமாம் நாள்,வினை,கோள்,கொடுங்கூற்று இவை எல்லாம் என்ன செய்ய முடியும் நம்மை?எதுவும் செய்யாது.எப்போது?குமரேசர் இரு தாளும் சதங்கையும் நமக்கு முன் வந்து தோன்றிடின்.  (கந்தரலங்காரம்). மாணிக்கவாசகர் (9ம் நூற்றாண்டு;திருவாசகம் எழுதிய மஹான் ; சைவத் திருமுறையின் ஒரு பகுதி இவரால் எழுதப் பட்டதே.) கூறியது போல்  சிக் கெனெப் பிடித்தேன் உன்னை.எங்கெழுந்தருள்வது இனியே என்று சிவன் பாதம்  பற்றிக் கொள்வோம்.இந்த முதல் பதிவு அரவிந்த அன்னைக்கு சமர்ப்பணம்.சேர்ந்து பயணிப்போம்.


ரஞ்ஜனி த்யாகு 



MOTHER PROTECTS