ஞாயிறு, 1 ஜனவரி, 2017

CELEBRATION--LIFE IS A CELEBRATION

MOTHER PROTECTS

புது வருஷ வாழ்த்துக்கள்.நாங்கள் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறோம்.120 வீடுகள் இருக்கும்.புதுவருஷக் கொண்டாட்டங்கள் இப்போதெல்லாம் ஒரு வித்தியாசமான பரிணாமம் கொண்டுவிடுகின்றன.மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப் பட்ட மேடை.மைக் செட்.ஸ்பீக்கர்.உணவு அளிக்கும் (காசு கொடுத்தால்தான்)ஸ்டால் ,அலங்கார பொருள்கள் விற்பனைப் பிரிவு ,தம்மை முன்னிலைப் படுத்தி காட்ட கூடிய உயர்தர உடை அணிந்த ஆண்,பெண்,குழந்தைகள்.சமீபத்திய திரைப்படங்களில் இருந்து குத்துப் பாட்டுகள்,அதுவும் அதிகபட்ச வால்யூமில் ,அதற்கேற்ப நடனமாடிய தோழர்கள் ......கொண்டாட்டம்தான் போங்கள் .மகிழ்ச்சி தொற்று .சந்தோஷமான சூழ்நிலை நம்மையும் மகிழ்வூட்டுகிறதுதான்.ஆனால் எவ்வளவு நேரம் தொடர இயலும்?தேடல் வெளியே நடந்து கொண்டுள்ள வரை ,கமா போட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.புள்ளி வைப்பது அவசியம்தானே ?இல்லை என்றால் ,முடிவு தெரியா நாவல் போல குறுகுறுப்பாக இருக்கும் அல்லவா?நாம் இருக்கிறோம்.நமக்கு உள்ளே ,வெளியே என இரு இடங்கள்.மகிழ்ச்சியை வெளியே தேடுகிறோம் என்றால்,உள்ளே அது இல்லை என்பதே பொருள்.இன்னும் துல்லியமாகச் சொன்னால் ,தேடல் நடக்க வேண்டியது வெளியேதான் என்று முழுமையாய் நம்புகிறோம்.பொன்னையும் பொக்கிஷத்தையும் பூமிக்கடியில் புதைத்து விட்டு,வீட்டு அலமாரியில் தேடினால் அகப்படுமா?

விழாக்கள்,பண்டிகைகள் மட்டும் கொண்டாட்டமா?இருப்பே கொண்டாடப் பட வேண்டிய ஒன்றுதானே!காலை கண் விழித்தால் ,நான் இன்று இருக்கிறேன் என்பதே பெரிய விஷயம் அல்லவோ? ஆனால் சொல்லும் அளவு உள்தேடல் சுலபமில்லை.நல்ல மாற்றங்கள் ஏற்படும்,அவ்வப்போது.ஆனால்,அவை irrevocable ஆக இருப்பது கஷ்டம்.தேடல் பெரும்பாலும் பெரிய catastrophes நடந்த பின் ,பெரிய வலிகளுக்குப் பின்னரே தொடங்குகிறது.நாம் ஏன் இங்கு உள்ளோம் என்ற எண்ணம் வந்தால் நல்லது.அதுவே அடிப்படை.பள்ளி சென்றால் அது படிக்க,குளியலறை சென்றால் குளிக்க,கடைக்கு சென்றால் சாமான் வாங்க,திரையரங்கு சென்றால் கேளிக்கைக்காக,கோவில் சென்றால் சாமியைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்ள ,உணவகம் சென்றால் சாப்பிட என்று ஒவ்வோர் இடத்துக்குச் செல்லவும் நமக்கு காரணம் தெரியும் போது உலகத்திற்கு வந்தது எதற்கு என அறியாமல் போய்ச் சேரலாமா?

நேற்று கொண்டாட்டங்களின் போது அபார்ட்மெண்டில் ஒரு வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் குழந்தை ஒன்று அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தது.Obvious ஆக food stall அருகில்.அந்தப் பெண்ணால் காசு செலவழித்து எந்த உணவும் வாங்க இயலாது.ஏனெனில் அந்த ஒரு நாள் கூத்துக்கு செலவழிந்த மின்சாரத்துக்கு சேர்த்துதான் சோளா பூரிக்கு ரேட் .அவள் எங்கே போவாள்,பாவம்!சீதையைக் கவர நடந்த மாரீச மான் போல,சாப்பிடுபவர்களின் கவனம் ஈர்க்க அக்குழந்தை நடை போட்டது.சீதா ப்ராட்டி தெய்வம்.எளிய மானுட வடிவெடுத்த தெய்வம்.காலமோ வால்மீகி  காலம்.மாரீசனை மான் என நம்பினாள் .நாமோ டெக்னாலஜியைக் கைக்குள் வைத்திருக்கும் உயர்மட்ட மனிதர்கள்.அக்குழந்தைக்கு உணவைப் பார்த்து ஆசை வரும் என்பது போன்ற விஷயங்களைக் கூட மனதால் யோசிப்போமா?தெரிந்த வழியையே GOOGLE MAP  அல்லவா சொல்ல வேண்டும்!நம் முழங்கால் உயரம் கூட இல்லாத சிறு மனிதன் ,அவனா முக்கியம்,2017 ஐ வரவேற்பதை விட?இயேசு கிறிஸ்து அவதரித்து 2017 ஆண்டுகள் ஆகிவிட்டன.இன்னும் 2000 ஆண்டுகள் போகட்டும்.இன்னொரு அவதாரம் வேண்டுமானாலும் நிகழட்டும்.நான் தேடிச் சோறு நிதம் தின்று,சின்னஞ் சிறு கதைகள் பேசி வேடிக்கை மனிதனாக கதையை நடத்தி விட்டுப் போகிறேன்.வருத்தமாக இல்லையா?ஒவ்வொன்றையும் உற்றுப் பார்த்தால் கேள்வி எழும் .கேள்வி வந்தால்தான் பதில் யோசிக்கத் தோன்றும்.

ஏன் காதைச் சுற்றி மூக்கைத் தொட வேண்டும்?ஏன் பாடம் பெற வாழ்க்கையில் அடி வாங்க வேண்டும்? வாழ்வின் ஒவ்வொரு நொடியும் பாடமல்லவா?எத்தனை மஹான்கள் நடந்த வழித் தடங்கள் கண் முன்னே தெரிகின்றன.Is it not very easy to be a follower than be a leader? கேளிக்கைகள் தவறில்லை.ஆனால் கால அவகாசத்திற்குட்பட்டவை.அன்று மேடையில் ஒரு நடிகரை இமிடேட் செய்து ஒரு சிறுவன் ஆடினான்.உலகமே நாடக மேடை.நாடகத்திற்குள் ஒரு நாடகம்.என்ன பயன்?கேளிக்கைகள் மூலம் ஏதேனும் செய்தி சொன்னாலாவது தேவலை என்றிருந்தது.நித்தம் நம்மை அமைதியாக,ஆனந்தமாக வைத்துக் கொள்ளத்தான்,கொஞ்சம் நேரம் செலவழித்து சிந்திக்க வேண்டும்.Celebration சந்தோஷம் .Life முழுமையும் celebration ஆனால் நிரந்தர சந்தோஷம் .ஆமாம், நிரந்தரம் என்று பேச எது உள்ளது?ஒரு இடைச் செருகல்.அடுத்த போஸ்ட்டின் வித்தும் கூட.அந்தக் குழந்தைக்கு,மாரீச மானுடன் ஒப்பிட்டேனே அந்தக் குழந்தைக்கு சிலர் சாப்பிட ஏதோ வாங்கித் தந்தனர்.அவர்களுக்கு என் மன ஆழத்தில் இருந்து வணக்கம்.ஆனால் அன்ன தானம்தான் சிறப்பு என்கிறார்களே,அதில் என்னால் உடன்பட முடியவில்லையே?போதும் என சொல்ல வைக்கக் கூடியது என்கிறார்கள்.சரிதான்.ஆனால் அந்த வேளைக்கு மட்டும்தானே வயிறு போதும் என்று கூறும்.?அடுத்த பசி?So வேறு ஏதோ தானம் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும்.நீங்களும் யோசியுங்கள்.நானும் யோசிக்கிறேன்.மறுபடி பார்க்கலாம்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

வியாழன், 29 டிசம்பர், 2016

விடை பெறுகிறேன்

இந்த வருஷத்தின் கடைசி எழுத்து.விடைபெறுகிறேன் என்பதற்கு இனி எழுத மாட்டேன் என்பது பொருளல்ல.எழுத்து என் வெளிஉலகத் தொடர்பு.உங்கள் ஒவ்வொருவருடனான தொடர்பு.அது நான் கடவுளின் கருவியாய் இவ்வுலகில் உள்ள வரை தொடரும்.எல்லா ஆண்டுகளும் ஏதோ முக்கியத்துவம் வாய்ந்தவையே.கடந்த,வரவிருக்கிற எல்லா ஆண்டுகளும்.மனிதர்கள் போலவே,மரங்கள்,நாள்கள் மணித்துளிகள் எல்லாமும் உயிர்ப்புள்ளவை.தொடக்கம் உள்ள அனைத்திற்கும் முடிவும் உண்டு.இறைவன் முடித்து வைத்தால் எஞ்சுவது அமைதி.மனிதன் முடித்து வைத்தால் ஆரவாரம்.ஆரவாரத்தை விட அமைதி நல்லது என்பதே இந்த போஸ்ட்.

நாடகத்தைத் தொடங்கியவன் நடத்தட்டும்.விட்டு விடலாம்.மூளை ,மனித மூளை என்ற ஒரு சதைக் கோளத்தை தலையில் இறுமாப்புடன் தாங்கி கொண்டு,இயற்கையின் வழியை மறித்துக் கொண்டு நிற்க வேண்டாம்.தெரிந்து கொள்ள வேண்டிய ஆயிரம் விஷயங்கள் உள்ள போது ,தெரிந்து கொள்ளவே இயலாத ,உதாரணமாய் மனித மனம் சம்பந்தமான ஆராய்ச்சிகள் எதற்கு?வர்தா புயலில் மரங்களின் மரணம் நிகழ்ந்த நேரம் மன சாம்ராஜ்யத்தில் சில ஜனனங்கள்.சுற்றுப்புறம் இருளில் உள்ள போது வெளியில் இருக்க வேண்டிய ஒளி உள்ளொளியாய் மாறுகிறது.ஆனால் அது நிரந்தரமாக தங்க ப்ரயத்தனம் வேண்டாமா?

ஒன்றிலிருந்து தள்ளி இருக்க ,விலக,விலக்க வேண்டும்.அல்லது விலக்கப் பட வேண்டும்.முதலாவது நம் கையில்.இரண்டாவது விதிவசம்.விலகல் கெட்ட வார்த்தை இல்லை.புரிதல்.2016 முடிகிறது என்றால் வருத்த டோன்.நாமே நல்லபடி வழியனுப்பி விட்டால் மகிழ்ச்சி.ஏன் ஏதோ ஒன்று நம்மை வேண்டாம் என்று சொல்லிப் போக வேண்டும்?நீ தந்தவற்றுக்கு நன்றி.தராமல் போனதாய் நான் தவறாக எண்ணிக் கொண்டிருப்பவைகளுக்கு சமாதானக் கொடி .இனி புரட்ட முடியாத ஏடுகள்!திரும்ப சந்திக்கப் போவதில்லை என்ற 363 நாள்கள்.இந்த வருடம் சந்தித்த பிரிவுகள் கொஞ்சமா?மரங்கள் மட்டுமா?மரங்கள் போன்ற மாமனிதர்களும் அல்லவா?காலம் சிலவற்றை நம்மிடம் இருந்து கவர்ந்து சென்றுதானே தீரும்!சந்தோஷமாக விட்டால் விடுதலை.

நாம் தவற விட்ட ஒன்று இயல்பாக இருத்தல்.ஸ்பான்டேனிட்டி என்று ஆங்கிலத்தில் கூறுவோம்.இயல்பாய் எளிமையாய் இருக்கலாமே.காலம் கடந்து கொண்டே இருக்கிறது.நடுநடுவே வேலைகள் அலைக்கழித்து விடுகின்றன.நேற்று விட்ட இடம் இது.இன்று தொடர்கிறேன்.இது ஒரு எண்ண கோவையே.தொடர்பற்று இருந்தால் மன்னிக்கவும்.பலசமயங்களில் நம் ஆழ்மனதில் உண்டாகும் குரலை தெய்வத்தின் வாக்கு எனத் தவறாக நினைக்கிறோம்.மனம் முழுமையாய் சமனப் பட்ட சில ஆத்மாக்களுக்கு மட்டுமே தெய்வம் உள்ளிருந்து வழிநடத்தும் பாக்கியம் அமைகிறது.அப்படி வழிநடத்தப் படுவோருக்கு உலக வாழ்வு துன்பம் இல்லை.எதுவும் துன்பம் இல்லை.ஆனால்,சாமானியர்களான நாம் சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு நம் மனம் எழுப்பும் குரலை கடவுள் சொல்வதாய்க் கற்பனை செய்து கொள்கிறோம்.Result obvious ஆக perfect ஆக இருப்பதில்லை.அமைதி அருள படுகிறது.ப்ரயத்தனப் பட்டுத் தொலைத்து விடுகிறோம்..பகவான் ரமண மகரிஷி சொன்ன சும்மா இரு என்பது தவிர வேறென்ன மருந்து உள்ளது??Spontaneous ஆக இருப்பது நன்று.ஆனால் அப்படி இருக்கிறோம் என்ற உணர்வும் அற்று இருப்பதே முழுமை.

2016 எல்லாம் தந்தது.ஆனால் மறைந்த என் அப்பாவில் தொடங்கி,வடுக்களையும் தந்து செல்கிறது.2017 நல்லன தரும் என நம்புகிறேன்.இறைவனிடம் மண்டியிடுகிறேன்.
1.உலகம் அமைதிப் பூங்காவாகட்டும் என.
2.மனம் நல்லதையே எண்ண அருள் தா என.
3.யாரையும் புண்படுத்தாத வாக்கு அருள் என.
4.இயற்கை பயமுறுத்தாமல் இருக்க வேண்டும் என .
5.குழப்பங்கள் அற்ற விடியல்கள் வேண்டும் என.
6.நிம்மதியான உறக்கம் வேண்டும் என.
7.கொடுக்கப் பட்ட அன்பு புரிந்து கொள்ளப் பட வேண்டும் என.
8.என்னைச் சேர்ந்த அனைவரும்,(யார்தான் நம்மவர் இல்லை) உன் அருள் வட்டத்திற்குள்ளேயே இருக்கட்டும் என.
9.வாழ்வை அதன் போக்கில் எடுத்துக் கொள்ளும் பக்குவம் அருள வேண்டும் என.
10.சக மனிதர்கள் என்னை சந்திக்கும் போது அவர்கள் உள்ளிருந்து பேசுவது நீ என்ற எண்ணம் என்னை விட்டு அகலாதிருக்க வேண்டும் என.
11.எல்லோரிடமும் கபடற்ற நேசம் காட்ட எப்போதும் தெளிவான மனம் தா என.
12.யாரிடமும் எதனிடத்தும் எப்போதாகிலும் குறை காண்கின் அது என் மன விகாரம் அன்றி உலகின் தவறில்லை என்ற மாறாத எண்ணத்  தூய்மை கொடு என.

பட்டியல் நீள்கிறது.உலகக் கோளத்தின் ஒரு மூலையில் 2017 பிறந்து விட்டது.2016 க்கு நன்றி.அமைதியாக விடை கொடுப்போம்.Mind is incapable of understanding.Ignorant!It has weaknesses.It has to wait till the time comes to receive the light.Sri Aurobindo Mother says,Only the true light can give the mind understanding.It is not all that it has learnt nor all that it has observed nor all its so called experience of life,it is something else which is beyond it.கடந்த வருஷத்தின் சற்றே வருத்தும் நினைவுகளை surface க்கு கொண்டு வர வேண்டாம்.மனம் அமைதி அடையட்டும்.எல்லோருக்கும் இன்பம் தர புத்தாண்டு மலரட்டும்.கீதை சொன்ன கண்ணன் நம்மைக் காக்கட்டும்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

சனி, 3 டிசம்பர், 2016

பேராண்மை

பிறன் மனை நோக்காமையை, வள்ளுவர், பிறனில் விழையாமை அதிகாரத்தில் பேராண்மை என்று குறிப்பிடுகிறார். அது உயர்ந்த பதம். அவர் குறிப்பிட்ட பேராண்மைக்கு,  சாதாரணமாய் மற்றவர் மனைவியை நிமிர்ந்தும் பாரா நல்ல குணம் என்று மட்டும் பொருள் இல்லை. இன்னும் ஆழமான பொருள் இருந்திருக்கும். கருத்தினாலும் மனைவி அன்றி பிற    பெண்களைத் தொடாத , தவறாக அணுகாத நிலை அது. ராமாயணத்தில் அது லக்ஷ்மணனால் வெளிப்பட்டது. சீதையின் கால்கொலுசு தவிர பிற அணிகலன்களை அவரால் அடையாளம் காண முடியாததில் வெளிப்பட்டது பேராண்மை. ஸ்ரீராமன் மனிதனாக வாழ்ந்த கடவுள். அவதாரமே,  ஒருவனுக்கு ஒருத்தி என்பதைக் காட்டுவதால் அவரைத்  தனியாக வைத்து விடுவோம். இழுக்க வேண்டாம்.

பேராண்மைக் குணங்களில் முதன்மையானது பிறன்மனை நோக்காதிருத்தலாய் இருக்கலாம். ஆனால் இன்னும் பலவும் உண்டு.   இனியன பேசுதல், பேராண்மை. பிறர் விஷயத்தில் மூக்கு நுழைக்காமல் இருப்பது பேராண்மை. குரல் உயராதிருத்தல் பேராண்மை. வம்பு பேசாமல் இருப்பது பேராண்மை. எப்போதும் பேசுவது மட்டும் செய்து கொண்டிருக்காது செவி கொடுப்பது பேராண்மை. வீண் பெருமை அற்றிருப்பது பேராண்மை. வந்த பாதையை மறவாதிருப்பது பேராண்மை. வாழ்வில் சோர்ந்து போகாதிருத்தல் பேராண்மை. தவறைத் தவறென்று சொல்லும் தைரியத்தின் பெயர் பேராண்மை .யாரையும் அலட்சியப்  படுத்தாதிருத்தல் பேராண்மை. கொடை பேராண்மை. கோபத்தை வெற்றி கொள்வது பேராண்மை. கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டிருப்பது பேராண்மை. கட்டுப்படுத்தாதிருப்பது பேராண்மை. நம்பிக்கை பேராண்மை. விழுந்தாலும் மறுபடி எழ வேண்டும் என்ற போர்க்குணம் பேராண்மை. எளிமை பேராண்மை. அடக்கமும் ஒழுக்கமும் பேராண்மை. பிரச்சினைகள் வரின் முதலில் நேசக்கரம் நீட்டுவது பேராண்மை. இன்னும் சொல்ல ஆயிரம் குணங்கள் உள்ளன.

ஆண்மை என்பதால் எல்லாம் ஆண்கள் சம்மந்தப் பட்டதல்ல. ஆணிடம் சில பெண் தன்மைகளும், பெண்ணிடம் சில ஆண்  தன்மைகளும் இருந்தாலே அந்த ஸ்ருஷ்டி பூரணம் பெற்றதாகிறது. தாயுமானவனான அப்பாக்கள் இருக்கிறார்கள். ஜான்சிராணி போன்ற வீரப்  பெண்மணிகளும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் பேராண்மை கொண்டவர்களே. அவர்கள்தான் சரித்திரம் படைக்கிறார்கள். உள்ளது ஒரு வாழ்வு. அது ஏன் சாதாரணமாய் முடிய வேண்டும்? அப்துல்கலாம் அய்யா சொன்னது போல் ஏன் சரித்திரமாகக் கூடாது?

வெள்ளி, 2 டிசம்பர், 2016

காதல் ஒருவனைக் கைப் பிடித்தே


என் உயிர் அப்பாவின் உடல் தென் வடமாய் ,ஒரு ஒற்றைத் துணி மீது கிடத்தப் பட்டிருந்தது.மன ஆழம் வரை ஒரு வலி ஊடுருவி தேள் கொட்டினாற் போல் வலித்தது. அப்போது கூட ஒரு சிங்கம் உறங்குவது போலத்தான் தெரிந்தது.தொட்டுப் பார்த்து அறியாத அப்பாவின் சில்லிட்ட குச்சி போல் ஆகி விட்ட கைகளைத் தொட்டுப் பார்த்த போது கட்டுப் படுத்த இயலாது கண்ணில் இருந்து கங்கை புறப்பட்டது.ஏன் திடீரெனக் காற்றாகிப் போனாய் அப்பா?உன்னால் பேன் காற்றைக் கூடத் தாங்க முடியாதே ,இப்போ இந்த ஐஸ் பெட்டி கொண்டு வந்து விட்டார்களே,அதில் எவ்வளவு நேரம் தூங்குவாய்? 'குளிருதும்மா' ன்னு சொல்ல மாட்டாயா?இன்னும் கொஞ்ச நாள் இருந்து சொல்லிப் போயிருக்கலாமில்லே?

அழுதழுது ஓய்ந்து போன போதுதான் அம்மா ஞாபகம் வந்தது.'அம்மா எப்படி இருக்கா,அவளைக் கவனிக்கக் கூட இல்லையே,'.அவசரமாய் அம்மா,அப்பா அறைக்கு ஓடினேன்.அம்மா அசைவற்று நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள் .கண் கொட்டவும் மறந்தது போல். அப்பா சில நிமிடம் முன் படுத்திருந்த கட்டிலைப்   பார்த்த படி ,ஒரு வெற்றுப் பார்வையுடன்.மௌனம்.எங்களிடம் வெளிப் பட்ட ஆர்பாட்டமான அழுகை இல்லை.'அம்மா,அம்மா'...... பதில் இல்லை.பேச வைக்க செய்த எந்த முயற்சியும் பலன் தரவில்லை.காரியங்கள் ஆரம்பிக்கப் பட்டிருந்தன.எது நிற்கிறது?யாருக்காகவும் எதுவும் நிற்பதில்லை.யார் யாரோ வந்தபடி இருந்தனர். கூடம் நிறைந்து இருந்தது.அப்பாவுக்கு ரொம்பக்  கூட்டம் பிடிக்காதே, அவர் அமைதியாகப் பயணப்படட்டும் விட்டு விடுங்களேன் என்று மனது ஒவ்வொருவரிடமாய் சென்று இறைஞ்சியது.

தும்பைப்பூ போல வெள்ளை வேட்டியும் சட்டையும் போட்டுக் கொண்டு ஐந்து நிமிடம் தாமதமாய் வந்த ட்யூஷன் மாணவர்களை கதிகலங்க வைத்த தந்தை தான் எங்களுக்கு பரிச்சயம்.தப்பு பண்ணினவர்களை அழ வைத்துதான் அவருக்குப்  பழக்கம்.இப்படிக்  கலங்கி நிற்கும் அழுமூஞ்சி சுற்றத்தைப்  பார்க்க அவருக்குப்  பிடிக்காது.அப்பா கோபக்காரர்தான்.ஆனால் பலாப்பழம் மாதிரி.இனிய உள்ளும்,  முள் போர்த்தின வெளியும் கொண்டவர்.குட்டி சட்டை போட்டு, கை பிடித்து, குமரன் பள்ளி கூட்டிச் சென்ற நாள் தொட்டு அப்பா மடியில் உட்கார்ந்து கல்யாணம் பண்ணிக் கொண்ட வரை ஏதேதோ அலைக்கழிக்கும் நினைவுகள். அப்பாவின் எத்தனை முகங்கள். நல்ல மகனா,கணவனா,அப்பாவா என்று இனம் பிரிக்க இயலாத அப்பா.கடைசி நாள்களில் நினைவு மங்காத நிலையிலும்,  வீட்டில் இருந்தும் வானப்ரஸ்தத்தில் இருப்பவர் போல் அனைத்தையும் இரண்டாம் முறை யோசிக்காமல் இயல்பாக விலக்கின அப்பா, பணத்தை விரலால் கூடத் தொடாமல் தம்பி ஷ்யாமை முழுமையாய் நம்பி , அன்பால் கட்டுப் பட்டு சார்ந்திருந்த அப்பா, என்னைப் பெண் என்றும் தம்பியைப் பிள்ளை என்றும் எண்ணாது எங்களை ராஜா வீட்டுப் பிள்ளைகள் போல் நடத்திய அப்பா ,அனைத்துக்கும் சிகரமாக , அம்மாவை விட்டே தராத அப்பா. ஒரு வாரம் முன்னால் கூட ,"நம்ம ரெண்டு பேருக்கும் சேர்த்து புஷ்பக விமானம் வரும் சாரதா சேர்ந்துதான் போவோம் "என்றாரே.ஏன் கிளம்பினார்?எங்கும் நிழலாய்த் தொடர்ந்த அம்மாவைப் பற்றித் துளியும் எண்ணாது பயணப்படலாமாப்பா?உன் உயிர் , உடலை யோசிக்காமல் நீத்து விட்டு அம்மாவை அழைக்க இயலாமல்   தவிக்கிறதோ ?வருத்தம் எல்லாம்கோபமானது."போ அப்பா. நீ இல்லாத அம்மாவை ஜீவனுடன் எப்படி மறுபடி பார்ப்பேன்?" சொல்.

பரபவென சடங்குகள் ஆரம்பிக்கப் பட்டன.கண் முன்னால் ஒரு ஜீவன் பிரிவது பார்ப்பினும் வயிறு நான் இருக்கிறேன் என்று எல்லோருக்கும் சொல்லி விடுமே. இப்போது எல்லாம் துரித கதிதான்."நாராயணா நாராயணா "என்ற சத்தம் கூடத்தை கிடுகிடுக்க வைத்தது.அம்மாவா அது?அம்மா அழுதே பார்த்திராத நாங்கள் ஸ்தம்பித்துப் போனோம்.அவள் தலை முதல் பாதம் வரை வேதனை வெளிப் பட்டது.பிறர் முன் அப்பாவை நெருங்கிக் கூடப் பேசி இராத அம்மா கடைசியாய் ஒரு முறை அவரைத் தொட்டுத் தடவிப் பார்த்த பொழுது மனது ஊமையாய் அழுதது.அப்பாவின் அழகு முகம் பேரமைதி காட்டியது.ஒருவருக்கும் தொந்தரவு ஏதும் தராமல்,ஒரு ஊசி கூட உடம்பில் குத்தப் படாமல், 'வந்த வேலைதான் ஆகிவிட்டதே , இனி எதற்கு இங்கிருக்கணும் ?'என்பது போல் கிளம்பியதால் இறுதி மூச்சு பிரிகிற நேரம் முகத்தில் தங்கின அமைதி. ஜம்  மென்று தன்  இறுதிப் பயணத்தைத் தொடங்கி விட்ட அப்பாவா ,அல்லது அகம்,புறம் எல்லாவற்றிலும் மாற்றம் சந்திக்கப் போகும் அம்மாவா யார் என் உள்ளம் பொசுக்கும் சோகத்திற்கு அதிகக் காரணம் தெரியவில்லை.

நாள்கள் இறக்கை கட்டிப் பறந்தன.நாளை பத்து.உறவுகள் கூடிப் பேச ஆரம்பித்தது காதில் வெந்நீர் கொட்டினாற்  போல இருந்தது.அப்பா தன் வாழ்வில் வரும் முன்னரே உபயோகப் படுத்தின மங்கலப் பொருள்களை எண்பது வயது அம்மா விலக்குவதா . எதற்கு?இருபது வயதில் என் அம்மா பொட்டு வைத்துக் கொண்டுதானே இருந்தாள் ! அப்பா எங்கேயோ தனக்காகப் பிறந்து வளர்கிறார் என்றா வைத்துக் கொண்டாள் .எப்படி இதை சொல்வது?யாரிடம் கூற?மனது நிலை இழந்து தவித்த நேரம் தம்பி ஷ்யாம் கூப்பிட்டான்.

"கீதா,நாம் கொஞ்சம் பேசணும் இங்க வரியா"

"சொல்லு ஷ்யாம் "

"எல்லாரும் பேசறது உன் காதிலும் விழுந்திருக்கும்.கண்ணை மூடிக் கொள்வது போல காதை மூடற  சக்திதான் நமக்கில்லையே "

"ஆமாம் ஷ்யாம் .எல்லாரும் அவரவருக்குத் தோணினதைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.நாளை அவர்கள் அனைவரும் போய் விடப் போகிறார்கள்.எனக்கு வெட்டியான இந்த மூடப் பழக்கவழக்கங்களில் நம்பிக்கை இல்லை நீ என்ன சொல்றே?"

"அம்மாவின் இழப்பு பெரிதுன்னு சொல்றேன் கீதா.அது மனம் சம்பந்தப் பட்டது.இனி புறத்தில் இழக்க அம்மாவிடம் எதுவும் இல்லைன்னு நினைக்கறேன்"

இரண்டு பெரும் ஒரு கொடி மலர்கள் அல்லவா?என் தம்பி வேறு எப்படி யோசிப்பான்.

"ஆமாம் கீதா இந்த பத்து நாளா நினைத்துப் பார்க்கிறேன்.கணவனுக்கு முன்னால முதல்ல போயிடற பெண்களை சுமங்கலிகள்னு ஒரு பதவி போலக் கொடுத்து உலகம் கொண்டாட என்ன காரணம்?யாரோ ஒருவர் முதலில் போகத்தானே வேண்டும்?இது என்ன சினிமா டிக்கட்டா,சேர்ந்து வாங்கிக் கொள்ள?அம்மா போல, தன்  கடமையைக் கடைசி வரை செய்தவர்களை அல்லவோ இன்னும் கொண்டாடணும்? "

"ஆமாம்,பாரதி சொல்லவில்லையா,"காதலொருவனைக் கைப் பிடித்தே    அவன் காரியம் யாவினும் கை கொடுத்தே "என்று.அப்பாவோட கடைசி மூச்சு வரை அதைச் செய்த   பாரதி கண்ட பெண்ணல்லவா அம்மா"

"இந்த மாதிரி நேரத்திலும் பாரதியையும் வள்ளுவனையும் நினைவு கூறுவது கூட நம் பெற்றோர் ஜீன்தான் ,கீதா"

"ஆமாம். அம்மா நம் வரை நித்ய சுமங்கலிதான்.நம் அப்பா எங்கயும் போகலை.அம்மாக்குள்ளேயே இருக்கார்.அம்மா உலகத்திற்காக வேறு மாதிரி இருக்க முடிவெடுத்தாலும் நம்ம எடுத்துச் சொல்லிடலாம் ஷ்யாம்"


அம்மா எப்போதும் ஒரு யோகி போலத்தான். பத்து முடிந்தது.பதினோராம் நாள் அதே சலனமற்ற முகம்.கலக்கமற்ற ஆழ்ந்த பார்வை.உறவுகள் கூடி பதிமூன்றாம் நாள் சுபம் செய்தான பிறகு அவரவர் கிளம்பி ஆயிற்று.வீடு வெறிச்சென்றிருந்தது.மறுநாள் அம்மா இத்தனை நேரம் குளித்து அப்பாவுக்கு சாப்பாடு தரும் நேரம். இத்தனை நாள் சோர்வும் சேர்ந்து சற்று அயர்ந்த தூக்கம் எனக்கு. நானும் ஷ்யாமும் பேசினோமே தவிர அம்மாவிடம் எங்கள் விவாதம் பற்றி எதுவும் கூறவில்லை. சரி இப்போது சொல்லலாம் மெதுவாக என்று எண்ணமிட்டவாறு அறைக்குள் நுழைந்தேன்.அம்மா அன்னை படம் முன் உட்கார்ந்து இருந்தாள்.அரவிந்தர் அன்னை படத்துடன் சந்தனம் குங்குமம் இடப்பட்ட குட்டி அப்பா படமும் சேர்ந்து கொண்டிருந்தது.அம்மாவின் கண்கள் மூடி இருந்தன.நெற்றியில் வழக்கத்தை விட சிறிய ஒட்டுப் பொட்டு, எண்ணை இட்டு வாரி முடித்த தலைமுடி, பளிச்சென்ற பச்சை காட்டன் புடவை அதே கலர் சட்டையுடன் அம்மாவைப் பார்த்தவுடன் அனிச்சையாகக் கண் கலங்கியது.

அம்மா சத்தம் கேட்டுக்  கண் திறந்தாள்.

"ஏன் கீதா அழறே?அப்பாக்கும் உங்க ரெண்டு பேருக்கும் என்னை வேறு மாதிரி பார்க்கப் பிடிக்காதுன்னு தெரியும். அப்பா எங்கயோ போய் விட்டதா நான் நினைக்காத போது யாருக்காக மாறணும் சொல்.அதான் இந்தக் கோலம். நான் த்ருப்தியா இருக்கேன்.என் கடமைகளை சரியா செய்து விட்ட நிம்மதி. நானும் அப்பா போலவே உங்க யாருக்கும் தொல்லை தராமல் அழைப்பு வரும் போது போகணும்.என்னை அதே சந்தோஷமான அம்மாவாவே நீங்க பார்க்கணும்.அப்பாவுக்காக நிறைய அழுதாச்சு.என் மறைவில் நீங்க அதுவும் செய்யக் கூடாது.அப்பாவுடன் இருப்பதுதானே அம்மாக்கு சந்தோஷம் .அதான் கிளம்பி விட்டாள்னு நினைக்கணும்.சரியாம்மா" என்றாள்.

"சரிம்மா "என்று அம்மாவுடன் கண்மூடி அமர்ந்தேன்.சதியை, உடன்கட்டை ஏறும் மூடத்ததனத்தை ஒழிக்க அப்போது வேண்டுமானால் ஒரு  ராஜாராம் மோஹன்ராய் தேவைப் பட்டார்..இப்போது சமூகத்தில் புரையோடியுள்ள களைகளைக் களைய அம்மா போல எளிய கம்பீரமான பெண்களே போதும் என்று மனம் அமைதியில் ஆழ்ந்தது.

ரஞ்ஜனி த்யாகு

அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டிக்கு அனுப்பப் பட்டு பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுக்கப் படாத கதை .

MOTHER PROTECTS

செவ்வாய், 8 நவம்பர், 2016

இரவில் தூக்கிலிடப்பட்ட 1000,500 ரூபாய் நோட்டுகள்

இன்று நவம்பர் 9ம் தேதி, 2016. நேற்று இரவு, இனி 1000,500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடி அவர்கள்  அறிவித்துள்ளார். வெளியில் வந்து கொண்டிருப்பது பதுக்கப் பட்ட பணமா, மனிதர்களின் முகமா? இத்தனை பெரிய நாட்டில், காஷ்மீர் முதல் கன்யாகுமரிவரை உள்ள, 1000 ரூபாய் நோட்டை,  கண்ணால் மட்டும் பார்த்துள்ளவரிடம் இருந்து, அதை 10 பைசா போல அனாயாசமாய் பயன்படுத்துபவர் வரை எல்லோருக்கும் ஏற்பட்டுள்ள ஒரு பிரச்சினையை, சொந்தப் பிரச்சினை போல் எடுத்துக் கொண்டு அமைதி தொலைப்பவர்களை வருத்தத்துடன் நோக்குகிறேன். தொலைக்காட்சி சேனல்களில் பேசும் மக்கள் முகங்களில் பரபரப்புக்காக, ஒப்புக்காகப்  பேசும் தன்மையையே பார்க்கிறேன். புஜ் பூகம்பத்தில், சுனாமியில் ஒரு நொடியில் எல்லாம் மண்ணானது. இப்போ மோடி அவர்கள் ரூபாயைக் கொளுத்தவா சொல்லி இருக்கிறார்? மாற்றிக் கொள்ளலாம் என்றுதானே சொல்கிறார்? நேற்றிரவு ஏ டி எம் அனைத்தின் முன்னும் வெகு நீள க்யூ. ஏன் நம்மால் பொறுமை காக்கவே முடிவதில்லை?

 நாலு ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப் பட்டதையும், விமானம் காணாமல் போனதையும், விவசாயிகள் தற்கொலையையும் எங்கோ நடக்கும் செய்தியாக மட்டும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு டின்னர் சாப்பிடும் கூட்டம்தான் நாம். குழந்தைகள் கார்ட்டூன் சானல் பார்த்துக் கொண்டு சாப்பிடுவது போல் நமக்கு செய்தி சேனல்கள். ஏ டி எம் முன்னால் நின்றவரில் பாதிப்பேருக்கு பதட்டம். மீதிப்பேர் வேண்டுமானால் தேவைக்காக நின்றிருக்கலாம். எப்போது கற்போம்? வாழ்வை ஏன் பரந்த நோக்கில் பார்க்க முடியவில்லை?யாரோ எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. நான் கஷ்டப் பட்டு விடக் கூடாது. "தானும் தன் சுகமும் பெரிது" என நீ நினைக்க மாட்டாயா என்று கேள்வி எழும் . சரியான கேள்விதான். தனக்கு மிஞ்சி தானதருமம் என்ற வாக்குப்படி,நம்மை முதலில் கொள்வது மன்னிக்க இயலாத குற்றம் அல்லதான். ஆனால், வரையறை உள்ளது.  பிரதமரின் இந்த அதிரடி நடவடிக்கையால் சில சிரமங்களுக்கு உள்ளானவர்களைப் பட்டியல் இடுகிறேன். கல்யாணங்கள் நடக்கும் வீடுகள், மருத்துவ விடுதியில் யாரையாவது சேர்த்து விட்டு பணம் பெருமளவில் கட்ட வேண்டியிருப்போர், இழப்பு நடந்த வீடுகள் இவர்களெல்லாம் எத்தனை கஷ்டப் படுவார்கள்?அவர்கள் எல்லாம் கூட அரசாங்கத்தைத் திட்டினால் தப்பு. நாட்டின் ஒட்டு மொத்த நலன் கருதி எடுக்கப் பட்ட நடவடிக்கை,  தங்கள் இக்கட்டின் போது மாட்டியதே என்று வருத்தம் வேண்டுமானால் அடையலாம். நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் என்று வள்ளுவர் அதைத்தான் கூறுகிறார். அவ்வாறெனில் இந்தக்  குறுகிய காலத்தில், எந்த முக்கிய நிகழ்வுகளும் இல்லை என்பவர் சந்தோஷம் அல்லவா பட வேண்டும்?  நமக்கு ஏன் நன்றி இல்லை? இறையிடமும் இயற்கையிடமும்!

இயற்கைப் பேரழிவுகளை கண் முன்னால் பார்த்தவர்களுக்குத் தெரியும்,  மறுநாள் எதுவும் நடக்கலாம் என. ஒலிம்பிக்கில் வெள்ளி வாங்கின சிந்துவுக்குத் தெரியும் கடைசி நொடி எத்துணை முக்கியம் என. என் ஆட்டிஸக் குழந்தையின் 28 வது பிறந்த நாளை நேற்றுக் கொண்டாடின எங்கள் குடும்பத்திற்குத் தெரியும் 28 வருஷங்கள்,28 நொடிகளாய் ஓடும்,  எந்தப் பெரிய அற்புதங்களையும் காணாமல் என. எதற்குப் பதட்டம்? பதறினால் சுனாமி வராதா? பதறினால் சிந்துவுக்கு வெள்ளிக்கு பதில் தங்கம் கிடைத்திருக்குமா இல்லை வெள்ளியும் இல்லாது போயிருக்குமா? பதறினால், என் ராகவன் பேசி இருப்பானா? என்ன தெரிகிறது? விலக்க வேண்டியது பயம். விதைக்க வேண்டியது நம்பிக்கை. ஆனால் என்ன செய்கிறோம்? எதற்கெடுத்தாலும் பயம் கொள்கிறோம். எல்லாரையும் சந்தேகப் படுகிறோம். பத்து ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் என்ன ஆகும் என்று ஏன் பயம்? இடுப்பு பிடிக்க ஆள் இல்லாதவர் கவலைப் படுவதில்லை. தும்மினால் கூட ஓடி வர நாலு பேர் உள்ளவர்கள் அந்த நலம்விரும்பிகளை நம்புங்கள். அரசாங்கத்தை நம்புங்கள். நாளைப் பொழுதை நம்புங்கள். அதை நமக்களித்த கடவுளை நம்புங்கள். பயம் ஒரு நோய். நோயுடன் உங்களை அணுகுபவர்களுக்கு தைரியத்தை மருந்து போல் கொடுங்கள். கால் நோவுடன் ஒருவர் வந்தால் மருத்துவரும் சேர்ந்து " உன் கால் நோகிறதே" என அழுவதா சரியான தீர்வு? முதியவர்கள் பாவம் என்கிறார்கள். என்ன பாவம்? உதவ யாரும் அற்ற முதியவர்கள் வேண்டுமானால் பாவம். அது கூட உதவ ஆயிரம் நல்லவர்கள் உள்ளார்கள். குடிகாரக் கணவன் அறியாது,  அரிசிப் பானையிலும் புளிப்பானையிலும் சிறுவாடு  சேர்த்துவிட்டு, அதை மாற்ற அந்தக் குடிகாரக் கணவனையே நாட வேண்டிய நிலையில் உள்ள இந்தியாவின் ஏழைத் தாய்க்குலம் உண்மையில் பாவம். அடுக்குமாடிக் குடியிருப்பின் ஏ சி அறைவாசிகள் புலம்பினால் அது அவர்கள் தேர்வு. வினாத்தாளில் சுலபமான கேள்விகளைத் தேர்ந்தெடுக்க பள்ளியில் இருந்தே பழகிய நமக்கு, வளர்ந்த பின் எளிய வழிகளை வாழ்க்கை பாதையாய்த் தெரிவு செய்ய என்ன குழப்பம்? சக்கனி ராஜ எனத் துவங்கும் கரஹரப்ரியா கீர்த்தனையில் தியாகராஜ ஸ்வாமிகள் பாடுகிறார், "ராஜபாட்டை போன்ற அகலமான வீதிகள் உள்ள போது ஒரு சின்ன சந்தை தேர்ந்தெடுத்து அதில் பயணிப்பேனா" என்கிறார். 2026ம் வருஷம் இந்தக்  கட்டுரையை யாரேனும் படிக்க நேர்ந்தால்,இது எவ்வளவு முக்கியமற்ற விஷயமாகிப் போயிருக்கும்! 

புதன், 26 அக்டோபர், 2016

தினமும் தீபாவளிதான்

இன்னும் இரண்டு நாள்களில் தீபாவளி.50 ம் வருஷத்தில் இருந்து 80 ம் வருஷத்திற்குள் பிறந்தவர்கள் மத்தியில் வாட்சப்பில் மிகவும் உணர்வுபூர்வமான பகிர்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.தாத்தா பாட்டியில் தொடங்கி நண்பர்கள் வரை,எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடிய அந்தக் காலத்து தீபாவளி எப்படி எல்லாம் இனித்தது என்ற சோகமான பகிர்வுகள். மிகவும் அழகான எழுத்து.ஆனால் அது தாண்டி யோசித்தால்,இதில் சோகப்பட என்ன உள்ளது தெரியவில்லை.என் மாதிரி கோபப்பட வேண்டுமானால் விஷயம் உள்ளது.சும்மா வெட்டியாய் அந்த தீபாவளி காணாமல் போச்சு கண்டுபிடித்துத் தாருங்கள் என்றெல்லாம் புலம்புகிறார்களே.தொலைத்தவர்கள் அல்லவா கண்டுபிடிக்க வேண்டும்.அந்த அளவு precious ஆன ஒன்றை ஏன் தொலைத்தார்களாம்?பத்திரமாக வைத்துக் கொள் என்று அந்த அத்தனை நல்ல பழக்கவழக்கங்களையும் குழந்தைகளிடம் சேர்ப்பிக்காது இப்போது எதற்குப் புலம்பல்?பாட்டி தாத்தாவுடன் இருந்தவர்கள்தானே நாம்?நம் பெற்றோர் போல் பெரியவர்களுடன் நேரம் செலவிடுகிறோமா நாம் ?நாம் வாழ்ந்து காட்டாத ஒரு வாழ்வை குழந்தைகள் எங்கிருந்து கற்பார்கள்?நாம் பணத்தைத் துரத்தினால் நம் செல்வங்கள் இன்னும் அதிகப் பணத்தைத் துரத்துகிறார்கள்.வெள்ளைக் காகிதம் போன்ற குழந்தைகள் மனதில் தவறான எழுத்துகள் எழுதி விட்டு ,என் பிள்ளை தீபாவளிக்கு கூட 7 மணிக்குத்தான் எழுந்திருப்பான் என்று அலட்டி விட்டு ,நேரம் காலமில்லாமல் பண்டிகை அன்றும் 10 மணி பட்டிமன்றத்தை தொலைக்காட்சியில் பார்த்து விட்டு ,தீபாவளி ரிலீஸ் படம் பார்ப்பதுதான் கொண்டாட்டத்தின் உச்சம் என நினைத்து விட்டு,சாஸ்திரம் என்ற பெயரில் துணி வாங்கி,
(எத்தனை செட் வாங்குவது சாஸ்த்திரம்) எல்லாவற்றையும் குழந்தைகளுக்கு நாம் பழக்கி விட்டு 50 வயது தாண்டி என்ன ஞானோதயம்? தங்கத்தை,வெள்ளியை,பரம்பரை சொத்தான வீட்டை சந்ததிகளுக்கு விட்டுச் செல்வார்களாம்.எதைத் தர வேண்டுமோ அதை,அந்த values எல்லாவற்றையும் காற்றில் பறக்க விடுவார்களாம்.

இந்தக் காலக் குழந்தைகள் கேட்பதில்லையாம்.ஏன்?குழந்தைத் தனம் மாறி, பொறாமை,சுயநலம்,கோபம்,பொறுமையின்மை,அஹங்காரம் ,எடுத்தெறிந்து பேசுவது இன்னும் எத்தனையோ குணங்கள் முதலில் தென்படும் போது அதைக் களைவதை முதல் வேலையாய்க் கொண்டால் குழந்தைக்கு நாம் சொல்வதின் முக்கியத்துவம் புரியும்.முதல் தப்பு செய்யும் போது கண்டறியப்படும்,கண்டிக்கப் படும் குழந்தைகள் பாடம் பெறுகின்றனர்.அந்தத் தவறுகள் தெரியாத அளவு வேறெதிலோ பிஸியாக இருந்து விட்டு திடீரென விழித்துக் கொண்டால்,அல்லது தெரிந்தாலும் சின்னக் குழந்தைதானே பிறகு சொல்லலாம் என்று ஒத்திப் போட்டால் யார் தவறு?பிறந்தது முதல் ஒவ்வொரு நாளும் வயது கூடுமா குறையுமா?அப்போ அறிவும் அதிகமாக வேண்டும்.தவறுகளை ஞாயப் படுத்த, வளரும் சிறு மனிதனுக்கு குழந்தை பட்டம் கொடுத்துக் கொண்டிருப்பது வீண்.

போஸ்ட் பாதை மாறுகிறது.என் weakness .அடுத்த தலைமுறை என் weakness .நம்மை விட அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது தாபம்.வளர்ச்சிதானே சந்தோஷம் ?மறுபடி தீபாவளிக்கு வருவோம்.   முடிந்து விட்ட காலம் எப்போதும் இனிமையாகத் தோன்றும்.நமக்கு அந்தக் காலம் மாதிரி,இப்போது கொண்டாடும் தீபாவளி நம் குழந்தைகளுக்கு ஒரு நாள் கடந்து போன ஒன்றாயிருக்கும்.இந்த நாள் பற்றின நல்ல நினைவுகள் அவர்களுக்கும் இருக்கும்.காலங்கள் மாறும் போது ,அப்போ எல்லாம் என்று தொடங்கும் பெரியவர்களை கண்டாலே இளையதலைமுறையினர் ஓட்டம் பிடிக்கிறார்கள். எண்ணை தேய்த்துக் குளிப்பதும்,பறவைகளையும் மிருகங்களையும் பயமுறுத்தும் வெடி வெடிப்பதும்,வீடு வீடாக பலகாரம் எடுத்துப் போய் விழுந்து கும்பிடுவதும் ,சர்க்கரை அளவை ஏற்றும் அளவு இனிப்புண்பதும் இன்றைய தலைமுறையின் தீபாவளியில் இல்லை.எது குறைந்து போனது?வெடிக்காவிட்டால் சப்தம் குறையும்.இனிப்பு குறைவாக உண்டால் உடல்நலம் பேணப்படும்.தீபாவளி என்றில்லாமல் எப்போது வேண்டுமோ அப்போது துணி வாங்குகிறார்கள்.அதில் என்ன தவறு?துணி பற்றின craving இல்லை.பலர் முதியோர் இல்லங்களில் அனாதைக் குழந்தைகள் விடுதியில் பொருளுதவி செய்து அவர்களுடன் நேரம் செலவிடுகிறார்கள்.

மறுபடி மனசு சம்பந்தப் பட்டதுதான் எல்லாம்.பாருங்களேன் இந்த போஸ்ட்டில் நான் யார் பக்கம் என்று கணிக்க முடிகிறதா?இல்லை அல்லவா?பண்டிகைக் கால சம்பிரதாயங்களுக்கும் சிறு நிகழ்வுகளுக்கும் அப்பாற்பட்டது வாழ்வு.எப்படி இருந்தேன் இப்படி ஆகிட்டேன் என்று வருந்துவது அவரவர் பிரச்சினை.நினைவுகளை அசை போடுவதானால் மகிழ்ச்சியாக செய்து விட்டுப் போவோம்.அந்தக் காலம் வருமா வருமா என்றால் வராதுதான்.பாட்டியும் தாத்தாவும்,10 ரூபாய்க்கு சரவெடியும் சிவாஜி படமும் வராது.ஆனால் வந்தால் புலம்புவோர் எல்லாம் தாங்குவார்களா?Santro car க்கு பதில் மாட்டு வண்டி ஓகேவா ?மின்விசிறி,ஏசி இல்லாமல்,கயிற்றுக் கட்டிலில் கொல்லைப்புறம் தூங்குவது ஓகேவா ?பெண்கள் ஹேண்ட்பேகில் இருந்து அலட்சியமாய் 1000 ரூபாய் நோட்டை வீசி எறிந்து பலகாரம் வாங்காமல் அடுப்படியில் வேலை செய்யத் தயாரா?   அட அதெல்லாம் விடுங்கள் மனைவி குழந்தையுடன் மட்டும் ரகசியமாய் உணவகம் கிளம்பும் சமயம் அண்ணன் பெண் வந்து தீபாவளி வாழ்த்து சொன்னால் மனசார மறுபடி வாழ்த்துவார்களா  " நேரம் கெட்ட நேரம் இவ எதுக்கு வரா" என்று தங்கள் மன வக்ரத்தை குழந்தைகளுக்கு முன் வெளிப்படுத்தி அவர்களுக்கு முன்னோடியாய் இருப்பார்களா?

பண்டிகைகள் சம்பிரதாயங்களில் இல்லை.கொண்டாடப்படும் உணர்வில் இருக்கிறது.விவசாயிகள் நலம் பெரும் நாளெல்லாம் பொங்கல் பண்டிகைதான்.தீமை அழிந்து நன்மை வெற்றி பெரும் நாளெல்லாம் தசராதான்.இயேசு கிறிஸ்துவின் அவதார குணங்களுடன் ஒரு பிறப்பு நிகழும் நாட்கள் க்ரிஸ்மஸ்தான்.  சூரசம்ஹாரம் முருகப் பெருமான் நிகழ்த்தினது போல் நம் கெட்ட குணம் ஒன்று மறையும் நாள் கந்தசஷ்டிதான்.மனசின் எல்லா மூலைகளிலும் விளக்கெரிந்தால் கார்த்திகைதான்.லலிதா சஹஸ்ரநாமமும் சௌந்தர்யலஹரியும் பாராயணம் செய்யும் நேரம் அம்பாள் மனச் சிம்மாசனத்தில் ஓடி வந்தமரும் நாளெல்லாம் லக்ஷ்மி பூஜைதான்.ஒழுங்காக வாழ்ந்தால் எல்லா நாளும் நல்லனதான் .அப்படி என்றால் இந்த வருடம் அக்டோபர் 29 மட்டும் அல்ல.தினமும் தீபாவளிதான்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS 

சனி, 22 அக்டோபர், 2016

PERFECTION

சூரியன் ஒரு நாள் விடாமல் கிழக்கு திசையிலேயே உதித்து மேற்கே மறைகிறது.பூமி நிறுத்தாமல் சுற்றுகிறது.நம் உடம்புக்குள் என்ன பெரிய சமாச்சாரங்கள் நடக்கின்றன என அறியாமலேயே,நுரையீரலும் கல்லீரலும் எங்கே உள்ளன என்று தெரியாமலேயே ஜீவித்திருக்கிறோம்.ரிதம் தப்பாது எல்லாம் நடக்கின்றன.இவையாவது தேவலை.அடுத்த லெவல் நிகழ்வுகளை ஆராய்ந்தால் காலை விழித்தவுடன் காபி கேட்கிறது நாக்கு.அதுவும் நல்ல காபி.அம்மாவோ மனைவியோ சமைத்ததில் துளி உப்பு கூடினால் முகம் அஷ்ட கோணலாகிறது.அப்பாவோ கணவனோ மகனோ ஒரு மாதம் வேலை இல்லாமல் இருந்தால் அந்த அவர்களின் நேரம் பணமாகவில்லயே என்ற கவலை வருகிறது.உணவகங்களில் ஊசிப் போன சட்னி போட்டால் ஒத்துக்  கொள்வோமா, பெண்கள், சட்டையைத் தையல்காரன் சற்று மாற்றித் தைத்தால் உண்டு இல்லை என்று பண்ணி விட மாட்டார்களா,சாலை விதிகளை மதிக்காது போகும் பசங்களை" ஏய் பொறம்போக்கு சொல்லிட்டு வந்திட்டியா" என்று ஒரு முறை கூட திட்டாதவர் உண்டா,வீட்டு வேலை செய்பவர்கள் ஒரு நாள் வரவில்லை என்றால் ஏதோ துடைப்பத்தையே கையில் தொடாதோர் போல சலித்துக் கொள்ளாத பெண்கள் உண்டா,மேலதிகாரியை வில்லன் போல குடும்பத்திடம் சித்தரிக்காத ஆண்கள் உண்டா,குழந்தைகள் 99 மதிப்பெண் வாங்கி ஒரு மார்க் தவற விட்டதுக்காக அவர்களின் தன்னம்பிக்கையையே கெடுப்பது போல் பேசாத பெற்றோர் உண்டா,தன் சிவப்புத் தோல் மேல் கர்வம் இல்லாதவர்,கறுப்புத் தோலுக்காகக் கடவுளையே சபிக்காதவர் உண்டா ," உன்னைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் நான் சொல்வது தவறாக இருக்கலாம்" என்று தணிந்து செல்பவர் உண்டா .இவை அத்தனையையும் யோசித்துப் பார்த்தால் என்ன தெரிகிறது? PERFECTION என ஒன்று உள்ளது.ஆனால் அது மற்றவரிடம் நாம் எதிர்பார்க்கும் ஒன்றாக மட்டுமே உள்ளது.

தமிழ்ப் பதம் என்ன?நீங்கள் அறிவீர்களா? Perfection என்பது முழுமையா?ஆமாம்.இறைவன் படைப்பில்,இயற்கையில் இந்த முழுமை வெளிப்படுகிறது.நம் உருவத்தில் இருந்து,நம் இயக்கம் வரை எல்லாம் ஒழுங்கு.நம்மால் நினைத்துப் பார்த்தாலே பரவசமாகும் அளவு ஒழுங்கு.ஒரு வினாடி ஒழுங்கு மாறினால் என்ன ஆகும்.ஒரு விநாடி இதயத் துடிப்பு நிற்கிறதா?நின்றால் அதன் பெயர் என்ன? "நாம் சாதா மனித இனம்.எப்போதும் ஒரு போல் இருக்க இயலாது.தவறுவது இயற்கை" என்று சமாதானம் சொல்லிக் கொள்கிறோம்.தவறுவது இயற்கை அல்ல.தவறாமல் இருப்பதுதான் இயற்கை.முழுமையைப் பற்றி நமக்கு double standard .மற்றவர் வளவள எனப் பேசுவதைக் கிண்டல் செய்வோம்.நாம் வாய் மூட மாட்டோம்.மற்றவருக்கு இடைஞ்சலாக வண்டி நிறுத்துவோம்.யாராவது செய்தால் சண்டை இடுவோம்.நாம் ,மற்றவர் புண்படப் பேசினால்,அதன் பெயர் நல்ல அறிவுரை.நாம் ரொம்ப frank என்று பொருள்.அதுவே மற்றவர் நம்மை சாதாரணமாக எதுவும் சொன்னால்,நமக்கு சொல் பொறுக்காது.நம்மிடம் பேசியவர் மஹா கெட்ட நபர்.இன்று கற்காததை நாளை கற்றுக் கொள்ளலாம்  என்று ஒத்திப் போடும் அலட்சியம். "கற்க கசடற "என்பதும் " செய்வன திருந்தச் செய் "என்பதும் புத்தகத்தில் படித்து மறந்த வாக்கியங்கள்.

என்ன காரணம்?நினைவும் வாக்கும் செயலும் perfect ஆக இல்லாதவர்கள் அதற்கு முயற்சியாவது செய்து கொண்டு அமைதி கடைப் பிடிக்கவாவது வேண்டாமா?மற்றவருக்கு நீதி வழங்க வேண்டாம்.மற்றவர் நம்மை அங்கீகரிக்க வேண்டும் என்ற ஏக்கமும் வேண்டாம்.Let us just try to achieve perfection in all that we do.Perfect மனிதர்கள்,casual மனிதர்கள் என்ற இரு சாராரை எடுத்துக் கொண்டு சில சிந்தனைகள்.தங்களை perfectionists என்று நினைத்துக் கொள்பவர் உண்மையில் முழுமை பெற்றவர்கள் இல்லை.முழுமை இன்னும் அதிக முழுமை வேண்டும் என்று எண்ணும் .லேசில் த்ருப்திப் படாது.நான் முழுமை அடைய விரும்புகிறேன் முயல்கிறேன் என்று சொல்லலாமே தவிர perfect ஆகி விட்டதாய்க் கூறவே முடியாது.ஏனெனில் perfection ஐ அளக்க அளவுகோல் எது?அதே போல் casual என்ற பிரிவினருக்கு perfection ஒரு obsession .அவர்கள் நிலைப்பாடு என்ன தெரியுமா?அவர்களுக்கும் முழுமை பிடிக்கும்.ஆனால் மற்றவரிடம் அதைப் பார்க்க அதிகம் பிடிக்கும்.எங்கே , "நான் perfect இல்லை என்னால் அப்படி இருப்பதும் இயலாது" என்பவர்களிடம் ஒரு நேரத்திற்கு அவர்களை சந்திப்பதாய்க் கூறிவிட்டு அரை மணி தாமதமாகப் போங்கள் .வறுத்து எடுத்து விடுவார்கள். "மற்றதெல்லாம் தேவலை.நேரம் தப்புவது மட்டும் என்னால் பொறுக்க முடியாது" என்பார்கள்.ஆனால் உண்மை என்னவெனில் மற்றவருடைய imperfection எதுவும் அவர்களுக்குப் பொறுக்காது என்பதே.நீல கலர் புடவைக்கு ஏன் அதே வண்ண சட்டை தேடுகிறார்கள்?Perfection தான் உங்களுக்கு தேவை இல்லையே?கைக்கு வந்ததை போட்டுக் கொள்ளுங்களேன்!ஆக நான் perfect என்று சொல்பவர்களும் சரி casual என்று சொல்பவர்களும் சரி தங்களை ஏமாற்றிக் கொள்கிறார்கள்.சரியான வாதம் எது.?நான் மனிதன்.என்னிடம் குறைகள் உண்டு.அவற்றிற்கு நானே பொறுப்பு.ஆனால் குறைகளை நிறைகளாக்க கண்டிப்பாக முயல்வேன் என்பதே.

சிறப்பான வேலைகள் செய்வது perfection அல்ல.சாதாரண வேலைகளை சிறப்பாகப் பண்ணுவதுதான் perfection .நாம் முழுமை அடைய அடைய மற்றவர் குறைகள் தெரிவதில்லை.இது நம் வாழ்வு.முடிந்தவரை நன்றாக வாழத்தான் வேண்டும்.எல்லாவற்றையும் சரியாகச் செய்தல் ஒரு திறமை என நினைக்கிறோம்.ஆனால் அது ஒரு attitude .நாம் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.நாம் அடையக்  கூடிய விதத்தில் some kind of excellence இருந்தே தீரும்.துப்புரவுத் தொழிலாளர்கள் சாலை பெருக்குவது திறம்படச்  செய்யட்டும்.சிவில் என்ஜினியர் ரோடு போடுவதை நன்றாகச்  செய்யட்டும்.என்ன வேலை என்பது பற்றி பேசவில்லை.எதுவானாலும் அதை பூரணமாக செய்வது பற்றித்தான் பேச்சு.Anything worth doing is worth doing right.இவை எல்லாம் பல பெரியோர் சொல்லிக் கேட்டவை.

சொல்லாமல் முடிக்க இயலுவதில்லை.அக வாழ்வும் புற  வாழ்வும் தொடர்புடையன.நினைவுத் தூய்மை,அதை ஒட்டிய பேச்சு,செயல் ஆகியவை அகம் perfect ஆக உள்ளதன் வெளிப்பாடு.புறவாழ்வின் முழுமை பலவகைகளில் வெளிப்படுகிறது.முடிந்தவரை best ற்கு கீழான எதற்கும் உடன்படல் கூடாது.வெள்ளத்தனையது மலர்நீட்டம்.மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு.உள்ளுவதெல்லாம் உயர்வாகவே இருக்கட்டுமே?எதற்கு compromise ? தேவை இல்லை.என் ideal க்கு குறைவான எதையும் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்பது கர்வம் அல்ல.திமிர் அல்ல.எளிமை.எனக்கு ஒத்துவராது என்று விலகும் எளிமை.செம்மை.உலகம் ஒழுங்குடன் படைக்கப் பட்டுள்ளது.இசைவுடன் இயற்கை இயங்குகிறது.உலகம் imperfect ஆகிறது என்றால் அது perfection இல்லாத அதற்கு முயற்சியும் செய்யாத நம்மால்.இந்த போஸ்ட்டையும் முழுமையாக முடித்த உணர்வு இல்லை.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS