செவ்வாய், 20 மார்ச், 2018

சிறப்புக் குழந்தைகளும் புரியாத உண்மைகளும்

இது நிஜமான டயரி. என் மனக்கண் முன்னே ஒரு உலகம் விரிகிறது. யாருடனும் பகிரப் பிடிக்காத உலகம்.பின் எதற்கு எழுத வேண்டும்?சும்மா பேச்சுக்காக நம் கையில் என்ன இருக்கு என்போர் உணர இயலா உண்மைகள்.தலையால் யோசியாமல்,இதயத்தால் யோசித்தால் மட்டும் ஓரளவு புரியும் உண்மைகள்.நேற்று முழுதும் ராகவன் பேசவில்லை.அதை சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்தப் படுகிறேன்.முடியாது.வீட்டில் சின்ன பிரச்சினைக்கெல்லாம் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்கிறோம்.ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறோம்.வெளியில் சுற்றி விட்டு வருகிறோம். ஒருவருடனான மனக்கசப்புகளை மற்றவரிடம் பகிர்ந்து கொள்கிறோம்.இது எதையும் செய்ய இயலாத ராகவனுக்காக நான் யோசிக்கத்தான் செய்வேன்.அதைத்தான் முதல் வேலையாகக் கொள்வேன்.அவன் என்னைப் பார்க்காது ஊடுருவும் ஒரு பார்வை பார்ப்பது எதற்கு எனத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.எனக்கும் ராகவனுக்கும் உள்ள மௌனப் பரிபாஷை அது.அம்மாவுக்கு மட்டுமாவது நான் நினைப்பது புரிகிறது என்று அவனுக்குப் புரிய வேண்டும்.ஆட்டிசம் ஒரு உலகம்.சிறை போன்றதொரு உலகம்.வெளி வரக் கடினமான சிறை.நானும் என்னை விருப்பத்துடன் சிறைப் படுத்திக் கொண்டுள்ளேன்.அதுவே சுகமாகவும் இருக்கிறது.அந்த சிறை கம்பிகள் என்னை பந்தப் படுத்தலாமே தவிர வெளியே உள்ள உலகம் அதை செய்ய முடியாது. வெளியே உள்ளவர் எங்களை உள்ளே இருப்பதாய்ப் பார்க்கிறார்கள்.ஆனால் அந்த சிறு உலகில் உள்ள எங்களுக்கோ வெளியில் உள்ளவர்கள்தான் அடைபட்டுள்ளது போல் தெரிகிறது.என்ன,கம்பியின் எதிரெதிர் பக்கத்தில் இருந்து பார்க்கிறோம். எல்லோரும் சரியே.

நீங்கள் என்னை  பார்த்துப் பாவம் என்றால்,என்னாலும் உங்களுக்காகப் பாவப்பட மட்டுமே இயலும். மாடை ஒரு தூணில் கட்டி விட்டு எங்க வேணா போ என்றால் அது கயிறு போகும் தூரமே போக இயலும்.மனிதன் போட்ட கட்டு . அப்போது கட்டுவது கடவுள் ஆனால்? ஏன் கட்டினான்,அது மாட்டிற்கு எவ்வளவு நல்லது என கட்டியவன் அறிவான்.கட்டப்பட்ட மாடும் அதை உணர்ந்து விட்டால் மற்றவருக்கு இதில் என்ன பங்கு? அவரவருக்கு சுயதர்மங்கள் உண்டு. பசித்தவனுக்கு சோறு தருவதுதான் என்  தர்மம். விருந்து சாப்பிட்டு ஏப்பம் விடுபவர்களுக்கு ஐஸ்க்ரீம் தருவது என்னாலும் முடியும்.ஆனால் பசித்த ஒருவன் எதிரே இல்லாத போது.அதே போல் யாரோ ஜெயிலுக்குப் போனால் எல்லாரும் தீர்ப்பு வழங்கலாமா என்ன!!!புண்ணியம்,பாவம் என்பதெல்லாம் நம் அறிவிற்கு விளங்கும் அளவு சின்ன விஷயங்களா? மற்றவர் வழங்கும் judgements ஐப் புறக்கணிக்கிறேன். ஆனால் என்னிடம் வந்து அவனுக்கு என்ன தெரியும் அலட்டாதே என்று யாரும் சொல்ல வேண்டாம். என் கடமைகளை சுட்டிக்காட்ட வேண்டாம்.சுட்டிக்காட்டி காயப்படுத்த வேண்டாம்.ஆனால் மற்றவர் என்ன படுத்துவது?என் அறிவு அல்லவோ வருத்தங்கள் களைய வேண்டும்.

ஒரு அலுவலக டார்கெட் ,ஒரு அசைன்மென்ட் ,இன்று என்ன காய் என்ற திட்டமிடல் ,பச்சை சட்டையும் சிவப்புப் புடவையும் மேட்சிங்கா என்ற எண்ணம் ,வீடு வாங்கப் பணம் சேர்த்தல் ,உடம்பின் உபாதைகளுக்குத் தரும் கவனம், கோபித்துக் கொள்ளும் சக மனிதர்களின் எரிச்சல் இப்படிப் பல செயல்களுக்குத் தரும் கவனம் கூட சிறப்புக் குழந்தைகளுக்குத் தேவை இல்லை என்றால், இவை அனைவற்றையும் நான் மறுப்பது தப்பாகத் தோன்றவில்லை. இவர்களுக்குப் பேச்சில்லை.புரிதல் இல்லை.Entertainment இல்லை .ஏன் insurance கூட இல்லை.தெரியுமா?அவர்களுக்கென்று உள்ளது அக்குழந்தைகளின் குடும்பம் மட்டுமே.மற்றவர்களுக்கெல்லாம் கேட்க நேரம் கூட இல்லை.நான் ஏன் என்று கேட்கிறேனா? STOP PASSING JUDGEMENTS.YOU HAVE OTHER WORKS.WE HAVE ONLY THIS WORK.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

திங்கள், 19 மார்ச், 2018

எளிமையற்ற வெளியுலகத் தொடர்புகள்

நவராத்திரி ஒன்பது நாட்கள்,இம்முறை கிட்டத்தட்ட பனிரெண்டு நாட்கள்,அமாவாசை கழிந்து ஒரு நாள் தள்ளி பூஜை தொடங்கியதால்.நல்லபடி கழிந்த நாட்கள்.ஆனால்,நவராத்திரி போன்ற பண்டிகைகள் மூலம் என்ன கற்றல் நிகழ்ந்துள்ளது இத்தனை வருஷங்களில்?தாம்பூலம் தருவது,வாங்கி கொள்வது,சுண்டல் செய்வது,டிரஸ் விதம் விதமாய் அணிவது,பல இடங்களில் சேர்ந்து லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் செய்வது,பரிசுப் பொருள்கள் வாங்குவது தருவது இவை எல்லாம் வழக்கமான நிகழ்வுகள்.இந்த அத்தனையின் பின்னும் உள்ள மனமுரண்பாடுகள் நம் மனக்கண்ணுக்குத் தெரிந்தால் தகராறுதான்.

யார் முதலில் கூப்பிடுவது,கூப்பிடாமல் போகலாமா,யார் உசத்தி,யார் தாழ்வு,ஆபீசர் மனைவிக்கும் வீட்டு வேலை செய்பவர்களுக்கும் ஒரே மதிப்பில் சட்டைத்துணி தரலாமா ,ஏன் ஸஹஸ்ரநாம பாராயணத்தில் கூட முன்னிலைப் படுத்தி கொள்கிற முகங்களின் தரிசனமே காண்கிறேன்.சிலசமயம் ஆயாசம் ஏற்படினும் கோபமே அதிகம்.இது நல்ல கோபம்.அப்படி ஒன்று உண்டா?என்   தங்கை கூறினாள் அருள் பாலிக்கும் பெண் தெய்வ வடிவங்களை விடவும் தனக்கு தீமை களையும் பெண் தெய்வ வடிவங்களையே பிடிக்கிறது என.உண்மை.எனக்குள்ளும் துர்கையே அதிகம் நிறைந்துள்ளாள்.ஒன்பது நாட்களும் கொலுவில் வைத்த துர்கை பொம்மை பார்த்து ஒன்பது கெட்ட குணங்களின் சம்ஹாரமாவது நிகழ்ந்தால் அல்லவோ அது நல்ல நவராத்திரி?

எளிமை தொலைந்த பண்டிகைகள்.ஒரு மஞ்சள் பையை எடுத்துக் கொண்டு எல்லார் வீட்டுக்கும் நுழைந்து சுண்டல் வாங்கி வந்து மனம் விட்டு சிரித்து மகிழ்ந்த காலம் இருந்தது.இப்போது வாட்சப்பில் வரும் செய்திகள் போல் அந்தக் காலம் பற்றின ஏக்கம் எனக்கில்லை.இப்போது பெண்கள் தனிக்குடித்தனம் விரும்புகிறோம்.வேலைக்கு செல்லும் பெண்களே அதிகம்.ஒரு நாள் குறித்து அழைக்கிறார்கள்.அதெல்லாம் சரியே.இவை நடைமுறை சவுகரியங்கள்.ஆனால் இயந்திரத் தனமான உபசரிப்புகள்,எதிர்பார்ப்புகள்,போட்டிகள் ,வம்புகள் இவைகளைக் கடக்கும் போது அடடா என்ன பெரிய விஷயங்கள் காத்திருக்கும் போது இதென்ன எண்ண விரயம்,நேர விரயம் என்றாகிப் போனது.

நம் இயல்பில் உள்ள தவறான எண்ணம்,உணர்வு,பேச்சு,செயல் இவற்றை நம் மனதிடம் இருந்து ஒளிந்து கொள்ளாமல் களைந்தால்  துர்கை அங்கிருக்கிறாள்.சோர்வடையும் போது,இதோ கொலு படியில்தானே நிற்கிறாள்,கூப்பிட்டால் வந்து விடுவாள் என நினைத்தால் துர்கை அங்கிருக்கிறாள்.நமக்குள் நாம் சென்றால் துர்கை அங்கிருக்கிறாள்.உண்மைக்காக,உண்மையாக வாழ்ந்து,வெளி உலகின் பொய்களுக்கு எதிராக தைரியமாக நின்றால் துர்கை அங்கிருக்கிறாள்.

இது சென்ற வருடம் நவராத்திரி அன்று தொடங்கிய போஸ்ட். அதை முடிக்க இயலவில்லை.வேலைகள்.என்னதான் டயரி என்று நான் சொல்லிக் கொண்டாலும் ஏதோ வீட்டுக் கணக்கு எழுதுவது போல் போஸ்ட்டை எழுதி முடிக்க முடியாது.வெளிப்படுத்த இயலாத கோபங்களும் தாபங்களும்தானே எழுத்து?ஒரு ஐந்து ஆறு மாதமாக மனம் தொட்ட விஷயங்கள் வேறு.இன்று எழுத,காரணம் உண்டு.பூ மலர்வது போல் இயற்கையாக,எளிமையாக உள்ள எத்தனை செயல்களைக் குழப்பி விட்டு விட்டது மனித இனம். ஆனந்தவிகடனில் படித்தேன்,"அடல்ட்ஸ் ஒன்லி "சர்டிபிகேட்டுடன் படங்கள் தயாரிக்கிறார்கள்.ஆண் பெண் சம்பந்தப்பட்டவை மட்டும் இந்தப் பிரிவில் அடங்காது.வன்முறையும்,டிப்ரெஷனும்,கோபமும்,மற்றவரை மட்டம் தட்டுவதும்,புறம்பேசுவதும் ,கேலி பேசுவதும்,மற்றவர் செயல்களில் மூக்கை நுழைப்பதும்,நாக்கை மற்றவரைக் காயப் படுத்தும் சாதனமாக மட்டும் வைத்துக் கொண்டிருப்பதும் இவை எதுவும் குழந்தைகள் காண தகுதி அற்றவையே.அட,இதற்கெல்லாம் அடல்ட்ஸ் ஒன்லி கூட கொடுக்க முடியாது.உலகில் கடவுள் இலவசமாக வழங்கி உள்ள கொடைகளை சற்றும் நன்றியும் வெட்கமும் இல்லாமல் உபயோகித்து வரும் அடல்ட்ஸ் ஆன நாமெல்லாருக்கும், வயசு, கண்டபடி நடக்க ஒரு லைசென்ஸா என்ன!!!

பூ மலர்வதும்,சூரியன் பேரழகாய் வந்து நம் ஜன்னல் வழி எட்டிப் பார்ப்பதும் ஏன் நாம் சுவாசிப்பதும் தானாக நடக்கும் போது புத்தி மட்டும் ஒரு காலகட்டத்தில், ஏன் குறுக்காகப் போக வேண்டும்?உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒரு போதும் தெய்வம் கொடுக்காத போது (நன்றி கவிஞர் வாலி,கொடுத்ததெல்லாம் கொடுத்தார் என்ற பாடல்.),நாம் யார் தப்பு தப்பான வழியை தேர்வு செய்ய?அதை அப்படியே தெய்வ இயல்புடன் பிறக்கும் குட்டிக் குழந்தைகளுக்கு transfer செய்ய? நிஜமாகவே புரியவில்லை.உண்மை ஒன்று.நேர் வழி ஒன்று.அப்படியானால் சரியாக யோசிக்கும் இருவர் கருத்து ஏன் மாறுபட வேண்டும்?சலனங்கள் வரும் போது நம்மை ஏமாற்றிக் கொள்ளாமல் சுயபரிசீலனை செய்ய வேண்டும்தான்.ரெண்டு கை தட்டவில்லை என்றால் சண்டை இல்லை.கையை ஓங்காதவர்தான் சரியாக இருப்பார்கள்.பெரும்பாலும்.சிலசமயம் சாமர்த்திய சாலிகளும் கையைப் பின்னிழுத்துக் கொள்வார்கள்.தர்மத்தின் பக்கம் பேசுகிறேன்,என்னுள் உள்ள துர்கை பேசுகிறாள் (துர்க்கைக்கு சமமான ஆண் தெய்வத்தின் பெயர் தெரியவில்லை) என்று மாட்டிக் கொள்ளும் நல்லவர்கள் உண்டு.அதனால்தான் ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்கிறார்,"ஒரு சண்டை என்று வந்தால் இரு தரப்பும் தவறாக யோசிப்பவர்களே என".

சில மாதங்களாய் " போதும்"என்று தோன்றுகிறது. "சரியாக யோசிப்பவருடன் மட்டும் தொடர்பில் வைத்திரு " என்று இரு கரம் கூப்பத் தோன்றுகிறது. யாருக்கும் விளக்கம் தரத் தேவை இல்லை என்று தோன்றுகிறது.தவறுகளை ஞாயப் படுத்தும் விளக்கங்களைக் கேட்பது நேரவிரயமாகத் தோன்றுகிறது.நான் தவறுக்கு அப்பாற்பட்டவள் என்ற முட்டாள்தனமான எண்ணம் கொண்டுவிடாதே என்று மனதைக் கண்டிக்க தோன்றுகிறது. என் பக்கம் தவறிருந்தால் அதை உணரும் clear vision கடவுள்தான் அருள முடியும் என்று தோன்றுகிறது.எளிமை தொலைத்த வெளி உலக தொடர்புகள் வேண்டாமே என்று தோன்றுகிறது. இப்படி பல தோன்றுகிறது போட்டதினால் வாழ்க்கை சலிப்பானது என நான் சொல்ல வருகிறேனோ என்று உங்களுக்குத் தோன்றுகிறதா?இல்லை.மனித வாழ்வு ரசிக்க வேண்டிய ஒன்றே.அதே சமயம் நம்மை செதுக்கிக் கொள்ள அளிக்கப் பட்ட களம் . சரியாக விளையாட வேண்டும். வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது ஒரு நாள் விளையாட்டானால் என்ன தீவிரமாக விளையாட வேண்டுமோ,எவ்வளவு focused ஆக விளையாட வேண்டுமோ அப்படி நடத்தப் பட வேண்டியதே இந்த ஒரு வாழ்வு.ஏனெனில் இன்னொரு வாழ்வு பற்றியது நாமறியா ரகசியம்.

பின் குறிப்பு ; ஆனந்தவிகடன்,கவிஞர் வாலி அவர்கள் கருத்துக்கள் சிலவற்றைக் கடன் வாங்கி உள்ளேன்.ஸ்ரீ அரவிந்த அன்னை புத்தகங்கள் என் உள்ளே வெளிச்சம் பாய்ச்சும் நிரந்தரத் துணை.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

சனி, 10 பிப்ரவரி, 2018

ஸ்கூட்டி பேசுமா?...பேசும்

கார்த்திக்கிற்கு ஒரு புது ஸ்கூட்டி வாங்கினோம்.நேற்று.எக்ஸ்சேன்ஜ் ஆஹ்பர்தான்.நாம் முடிந்தால் மனிதர்களையும் எக்ஸ்சேன்ஜ் ஆஹ்பரில் மாற்றிக் கொள்ளும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள்.அபியும் நானும் படத்தில் குழந்தை சொல்லும், "அம்மா இந்த அப்பா இன்டர்வ்யூல பெயில் ஆகிட்டா வேற அப்பா மாத்திடலாமா"என்று.படம் பார்க்கும் போது சிரிப்பு வந்தது. ஆனால் கணவன்மார்களுக்கு வாசுகி மாதிரி மனைவி தேவை.மனைவிகளுக்கு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையே  கணவனாக இருந்தால் தேவலை. எப்போதும் தோழியின் மாமியார்,தங்கையின் மாமியார் நல்லவர்கள்.குழந்தைகளுக்கோ,ஆங்கிலம் பேசும்,பெற்றோர்,எதிலும் தலையிடாத பெற்றோர் தேவை.அம்மா அப்பாவுக்கோ ஒன்று என்ற எண்ணை மட்டுமே அறிந்த குழந்தைகள் தேவை. லீவ் போடாத பணியாளர்கள் தேவை நிறுவனங்களுக்கும்,வீடுகளுக்கும்.லீவ் போட்டால் கேள்வி எழுப்பாது,போனஸ் தரும் போது compromise பண்ணாத முதலாளிகள் தேவை பணியாளர்களுக்கு.மேலே குறிப்பிட்ட லிஸ்டில் employer employee தவிர மற்றவை உணர்வு சம்பந்தப் பட்ட உறவுகள்.ஆமாம் மனிதனுக்கு மட்டுமே உணர்வு உண்டா,பொருள்களுக்குமா? பொருள்களுக்கும் உண்டு.அதனால்தான் சொல்கிறேன்.ஸ்கூட்டி பேசும்.

பழைய ஸ்கூட்டி மிகவும் நல்லது.தொந்தரவே கொடுத்ததில்லை.டாக்டரிடம் அடிக்கடி போகாது.எஜமான விசுவாசம் ஜாஸ்தி.கார்த்திக்கை ரொம்பவும் பிடிக்கும். நல்ல குழந்தைகள் போல் சொன்ன பேச்சு கேட்கும்.சில சமயம் நாம் மனிதர்களிடம் பேசுவதை விட நம் உடமையான பொருள்களிடம் பேசுவதுண்டு.பொருள்களுக்கும் மரியாதை உண்டு.அவற்றை உதைப்பது,(ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ண உதைக்கலாம்.கோபமாக உதைப்பதை சொல்கிறேன்.),கதவை அறைந்து சாத்துவது,பேனாவைத் தூக்கி எறிவது ,சாப்பாட்டுத் தட்டை கோபத்தில் தள்ளுவது,போன்ற மிகவும் தப்பான பழக்கவழக்கங்கள் பலரிடம் பார்க்கிறேன்.எவ்வளவு தப்பு தெரியுமா?வாழ்வில் ஒரே ஒரு முறை செய்தாலும் தப்பு.அப்படி தன்னிலை இழக்கலாமா? மறுபடி ஸ்கூட்டிக்கு வருவோம்.அதை மாற்ற எந்தக் காரணமும் இல்லை.தினம் பயணிக்க வேண்டிய தொலைவு அதிகம் ஆனதால் இன்னும் சற்று powerful ஆன வண்டி வாங்கலாமே என நாங்கள் கூறியதால் அரை மனசோடு சம்மதித்தான்.புது வண்டி பார்த்து வந்தோம்.பழைய வண்டியை 9000 க்கு தர ஒப்புக் கொண்டாயிற்று.அடுத்த நாள் வண்டி வரும் வழியில் நின்று விட்டது.யாரோ தள்ளி விட்டு ஒரு வழியாய் வீடு வந்தான்.

நல்ல கண்டிஷனில் தந்தால்தானே 9000 ரூபாய் குறையும்?அதனால் அதை டாக்டரிடம், {அதான் சர்வீஸ் சென்டர்} கூட்டிப் போய் வந்தோம்.மறுபடி நன்றாக இருந்தது.புது வண்டியை வாங்கிக் கொள்ளலாம் என்று தகவல் வந்தது.மறுநாள் டெலிவரி எடுக்க வேண்டும்.கிளம்பும் போது , "இன்றுதான் இந்த ஸ்கூட்டியின் கடைசி ட்ரிப் என்னுடன்" என்று சொல்லிக் கிளம்பினான்.அன்று மாலை வீடு திரும்பியவுடன்,அம்மா, " கடைசி ரெண்டு கிலோமீட்டர் வண்டியை நகர்த்துவது பெரும் பாடாகிப் போனது,ஏன் என்றே தெரியவில்லை" என்றான்.உடனே நான் சொன்னேன், "சரியான டைம்லதான் புதுவண்டி வாங்கறோம் கார்த்திக்.மறுபடி தொந்தரவு கொடுக்கிறது பார்த்தாயா?" அவன் சற்று நேரம் அமைதியாய் இருந்துவிட்டு குறுக்காகத் தலையை ஆட்டினான்.  "இல்லை அம்மா,நான் அப்படி நினைக்கவில்லை.அதற்கு இங்கிருந்து போகப் பிடிக்கவில்லை.அதை சொல்ல அது கொடுத்த signal தான் அந்த resistance."அவன் சொன்னது 100 சதவிகிதம் உண்மை என்று உணர்ந்தேன். நாம் ஒருவித வித்தியாசமான உணர்வுநிலையில் இருந்து சிந்தித்தால்,பொருள்கள்,விலங்குகள் நம்முடன் பேசுவதை,பேசும் என்பதை உணரலாம்.

வாழ்வு utter respect உடன் அணுக வேண்டிய தவம்.நாம் தொடர்பில் உள்ள அனைத்தும்,அனைவரும் நமக்கு முக்கியமே.மனித உறவுகளில் மட்டும் மனத்தின் குறுக்கீடு உள்ளது.ஸ்கூட்டியிடம்  "சமர்த்தாகப் போ" என்று கூறி விட்டு விட்டு,புதுவண்டி எடுத்து வந்தோம்.பெண்ணை,புக்ககம் அனுப்புவது போல்,அடுத்த ஓனர் நன்றாக அதை நடத்த வேண்டும் என வேண்டிக் கொண்டேன்.ஆனால் மகள் நம் மனசில் எப்பவும் இருப்பாள்.பொருள்கள் அவ்வாறு இருப்பதில்லை.பொருள்களிடம் காட்டும் detachment ஐ மனிதர்களிடமும்,மனிதனுக்குத் தரும் மரியாதையை பொருள்களிடமும் காட்டினால் நலம்.பேசுவோம்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

புதன், 3 ஜனவரி, 2018

யானையும் பூனையும்

நம்மை மற்றவர் நிலையில் வைத்துப் பார்த்தல் என்று  கேள்விப்பட்டிருக்கிறோம்.    அது  பற்றிய  சில விமர்சனங்கள், இந்தக் கட்டுரை.  ஒரு யானை,ஒரு பூனை இரண்டையும் எடுத்துக் கொள்வோம். இரண்டிற்கும் மற்றதின் நிலை புரியவில்லை. உடனே பூனை, யானையின் ஷூவிற்குள் போய் நின்று அது எப்படி நினைக்கும் என்றெல்லாம் உணர்கிறது. ஆனால் யானை அதையே செய்ய எத்தனித்த போது, பூனையின் ஷூ, யானையின் காலடி பட்டு நசுங்கி விடுகிறது. ஏன்?தெரியாது. அது அப்படித்தான். அப்போது பூனைகள் புரிந்து கொள்ளவும் மிதிபடவும் பிறந்தவையா? யானைகள் தன்னிச்சைப்படி வாழ லைசென்ஸ் பெற்றவையா?  அப்படி என்றால் யானை பூனையை விட விசேஷமானதா?ஆனால், எலியிடம் கேட்டால் என்ன சொல்லும்?  அதற்கு யானையிடம் பயம் இல்லை. பூனையிடமே பயம். இவை எல்லாம் என்ன வாழ்க்கைப் பாடங்கள் தருகின்றன?

பூனையும் யானையும் நம் ஈகோ என்று உருவகப் படுத்திக் கொண்டால்,பூனை அளவு சிறியதாக நம் ஈகோ இருப்பின் மற்றவரை அறிதல் சுலபம். யானை போல் ஈகோ பெரிதானால் நாம் அறியாமையில்தான் இருப்போம் என்று கூறலாம். ஆனால் அதெல்லாம் எதற்கு? ஏன் நான் மற்றவர் செருப்பை அணிய வேண்டும்? எனக்கு வேண்டாமே!  என் பழைய செருப்புதான் வசதி.சுகம்.  (செருப்பு நைந்தால் வேறு மாற்றிக் கொள்ளணும்.  ஆனால் அதுவும் நமக்கே நமக்கான செருப்பு) மற்றவர் , மாற்றான் போல நம்முடன் ஒட்டிப் பிறந்த பிறப்பானாலும் கூட, அவர் ஷூ நமக்கு கச்சிதமாகப்  பொருந்தும் சாத்தியக் கூறுகள் இல்லை. மனித இனம் ,பொதுவில் எல்லா ஜீவராசிகளுமே என்று கூடச் சொல்லலாம்,மற்றவர் சூழ்நிலையை அறிந்து, அனுசரணையாக அணுகும் தன்மையுடன் படைக்கப் படவில்லை என்றுதான் கூறுவேன். சிலர் இருக்கிறார்கள். எல்லோரையும் அனுசரித்து,இதம் காட்டி,ஒத்து வாழ்பவர்கள். அவர்கள் அப்படி இருப்பது ,  இயல்பாலே அன்றி, அத்தனை பேர் சூழ்நிலையையும் புரிந்து கொண்டதால் அல்ல.  மேலும் அப்படிப் பட்டவர்கள் ஒரு முறை, ஒரே ஒரு முறை,  யாரும் தங்களைப் புரிந்து கொள்ளவில்லையானால் கூட மன அழுத்தம் அடைகிறார்கள்.

நமக்கு நம் வேலை உள்ளது. யானைக்கும் பூனைக்கும் அதன் வேலை. சுயதர்மங்கள். அதை செய்தால், ஒழுங்கு தப்பாமல் செய்தால் போதும். யாரையும் நம் கோணத்தில் இருந்து புரிந்து கொண்டால் போதும். கொஞ்ச நேரம் பூனை யானையானால்,  எலி பிடிக்காது. அப்போ எதை சாப்பிடும்?யானை உணவை சாப்பிட்டால்,  பூனைக்கு செரிக்குமா?  நான் நீயில்லை.நீ நானில்லை. கம்பீரமாக நின்று கொண்டு யானை சொல்லலாம். "பாவம்,குட்டிப் பூனை.எவ்வளவு அழகு! மியாவ் என்று கத்துவது எவ்வளவு இனிமை. ஆனால் சுத்த பயந்தான்கொள்ளியாக இருக்கிறதே! என்ன பண்ணும். சின்னக்  கூடு. சத்தம் கேட்டாலே பயப்படும் ஜீவன்".

இப்போ பூனை என்ன நினைக்கும்?  "எவ்வளோ கம்பீரமான யானை! கோவில் வாசலில் நின்றால் யாரும் போட்டோ எடுக்காமல் போவதில்லை. ஆனால் பாவம். ஏன் காசு கேட்கிறது? தன்னை விட சின்ன மனுஷன் பேச்சை எல்லாம் கேட்க வேண்டி உள்ளது! ரொம்ப பெரிய உடம்பு. அதைத் தூக்கிக் கொண்டு நடக்கணும் ".

என்ன தெரிகிறது?  பார்வைகள் வேறு. எல்லோரையும் அன்போடு நோக்க மட்டும் தெரிந்து கொண்டால் போதும். அவர்கள்,  சரியா தவறா என்ற ஆராய்ச்சி தேவை இல்லை. அவர்கள் சூழ்நிலையில் நம்மை வைத்துப் பார்ப்பதென்பது வெறும் பேச்சு.  நம்மைச்  சுற்றி ஆயிரம் பேர். அவர்களுடைய பல சூழ்நிலைகள்.  ஒவ்வொன்றிலும் பொருந்திப் பார்த்து அவர்களைப் புரிந்து கொள்ளும் வெட்டி வேலை செய்வதற்கு பதில், எல்லோரையும் சரியாகப் பார்த்து விடலாமே?  சத்தம் ஏன் தன்னைப் பதுங்க வைக்கிறது,தன் முந்தைய அனுபவங்கள் என்ன என்பதை பூனையே அறியும். சத்தம் யானைக்கு தமாஷ். பூனைக்குத் தலைவலி. பாகன் பேச்சுக் கேட்டு பைசா வாங்கிக் கொண்டு ஆசீர்வாதம் வழங்கும் யானைக்குத்தான் தெரியும் அதன் பிரச்சினை. மற்றவரிடம் நாம் காட்டும் இரக்கம்,தற்பெருமை இரண்டும் தராசின் சமமான இரு தட்டுகள். யாரையும் பார்த்து , 'ஐயோ பாவம் ' சொல்லாதீர்கள். அத்தனை ஜீவராசிகளுக்கும் தற்காப்பிற்காக ஏதோ கொடுத்துள்ளான் இறைவன். உதாரணம் வேண்டாம் அல்லவா? கொம்பு,ஓடு போன்ற பல. அப்போது,எல்லா உயிரினங்களையும் விட மேல் எனக் கூறிக் கொள்ளும் மனிதனை விட்டு விடுவானா? அதுதான் அறிவு தந்துள்ளான். ஆபத்து நேரம் ஓட்டை பயன்படுத்தாத ஆமை உண்டா?  பிற விலங்குகள் துரத்தினால் வேகமாய் ஓடாத மான்கள் உண்டா? அப்படியானால், பிரச்சினை வந்தால் எல்லா மனிதனும் உபயோகிக்க வேண்டிய அறிவு அவனிடம் உள்ளதே? அவன் ஏன் பாவம்? அதே போல் ,' நானாக இருந்தால் இப்படி பண்ணி இருப்பேன்'  என்ற தற்பெருமை இருக்கிறதே,அது ரொம்பவும் மோசம். மான் ஓடும் போது கால் ஒடிந்தால் விதி. நல்ல நிலையில் உள்ளவர்கள்,  கண்டிப்பாக துன்பத்தில் இருப்போரிடம் சுய தம்பட்டம் அடிக்கவே கூடாது. நிலைமைகள் மாற, நிமிஷம் கூட தேவை இல்லை.

 மற்றவர் செருப்பை அணிந்தால் தடுக்கி விழுவோம். அவை என்ன, ஸ்ரீராமர் பாதுகைகளா , உள்ளொளி நல்க?  அமைதியாய் ,உண்மையாய்  அன்பு செலுத்தினால் போதும். அன்பே சிவம்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

மார்கழிக் கல்யாணங்கள் -- சென்னை இசைவிழா

மார்கழியில் கல்யாணம் பண்ணுவதில்லை என்று நினைக்கிறோம். அனைவரும் டிசம்பரில் எங்கள் ஊருக்கு வந்து விட்டுக் கூறுங்கள். எது நிஜக் கல்யாணம் என்று. உங்கள் வீட்டு, எங்கள் வீட்டுக் கல்யாணத்திற்கு எத்தனை பேர் வரக்கூடும்?  1000?  2000?  அதுவுமே,  நம் வீட்டுத் திருமணத்தன்று மாமாவுக்கு அலுவலகத்தில் ஆடிட் இருக்கும். அத்தைக்கு மூட்டுவலி வரும். சொந்தங்களுக்கு ஏதோ சாக்கு வரும். ஆனால்,  சென்னையின் மார்கழி திருமணத்திற்கோ உலக உருண்டையின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் வருகிறார்கள். வருடம் தப்பாமல், டிசம்பரில் சென்னை வருகிறார்கள். சிவபெருமான் திருமணத்தின் போது நடந்தது போல்,  இந்தியாவின் தென்பகுதி பாரம் தாங்காமல் இறங்கிவிடுமோ என்று கூட நினைப்பேன். அப்படி ஒரு கோலாகலம். சாஸ்திரிய சங்கீதத்திற்கான இப்படி ஒரு விழா வேறெந்த ஊரிலும் நடப்பதில்லை என உறுதி செய்ய இன்டர்நெட்டை அலச வேண்டாம்.  அது நிதர்சனம். ஆனால் திருமணத்திற்கு என ஒரு மாசத்தை மட்டும் ஒதுக்கினால்,  என்னென்ன குழப்பங்கள் ஏற்படுமோ அத்தனை குழப்பமும் மெட்றாஸில் நடக்கிறது. வருஷத்தில் தை மாதம் மட்டுமே திருமணம் செய்ய உகந்தது என்றால், எல்லாருக்கும் மண்டபம் கிடைக்குமா, சமையலுக்கு ஆள் கிடைக்குமா, மாமாவுக்கு லீவ் கிடைக்குமா, ஒரே மாசத்தில் பல கல்யாணங்களுக்கு மொய் எழுத பாக்கெட் எல்லாருக்கும் சம்மதிக்குமா,  போத்தீஸில் மற்ற மாதங்கள் வியாபாரம் நடக்க வேண்டாமா, சமையல் வேலை செய்வோர் மற்ற மாதங்கள் சம்பாதிக்க வேண்டாமா, தேன்நிலவு தம்பதியருக்கு லாட்ஜ்களில் அறை கிடைக்க வேண்டாமா, குழப்பங்கள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல? அப்படித்தான் திண்டாடுகிறது டிசம்பர் சென்னை.

நேற்று மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸில் ஒரு காலைக் கச்சேரி சென்றோம். தெரியாதவர்களுக்கு ஒரு தகவல். காலைக் கச்சேரிகள் பெரும்பாலான சபாக்களில் இலவசம்.  காலை பாடுபவர்கள்,  வளர்ந்து வரும் கலைஞர்கள். அவர்கள் மதியக் கச்சேரி செய்யும் அளவிற்கு  உயர்ந்து, மாலை, Prime Slot  எனப்படும் ஆறு மணிக்கச்சேரி  வாய்ப்புப் பெற, காத்திருக்க வேண்டும். உழைக்க வேண்டும்.  திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தக்க வைத்துக் கொள்ள வேண்டும். செய்தால் பல வருடங்கள் துறையில் கோலோச்சலாம்.  .நான் அறிந்த வரை,  சபாக்களின் மாலைக் கச்சேரி வரை வர, குறுக்கு வழிகள் இல்லை. திறமை மட்டும் ஆட்சி செய்யும்,  மிகக் குறைந்த சிலதுறைகளில் ,  இது ஒன்று.  அப்பா பாடுகிறார் என்பதால்,  மகனுக்கு வாய்ப்பு தருவதில்லை.  வாய்ப்புத் தருவது சபாக்கள். மதிப்பிடுவது மக்கள் அல்லவா?  அதனால் நிஜமான திறமை வேண்டும். திறமைசாலிகளுக்குள் போட்டி உண்டு. சபாக்களுக்குப்  பிரியமான கலைஞர்கள் உண்டு.  அதெல்லாம் ஊடுருவிய தீமைகள். தவிற்பதற்கில்லை.

பணத்தை வைத்துச்  சுழலும் உலகில்,  ஏன் இலவசக் கச்சேரிகள் அளிக்கிறார்கள், தெரியவில்லை. அதற்கு டிக்கெட் நிர்ணயித்தால்,  வரும் பத்து பேரும் வரமாட்டார்கள் என்றா?  காலைக் கச்சேரிகள், காற்று வாங்கும் இடம்தான். அத்தனை பெரிய சபாவில், ஆங்காங்கே தென்படும் தலைகள். எண்ணி விடலாம். அட,மாலுக்கும் சினிமாவிற்கும், கூடச் செல்லும் நண்பர் குழாமும் அவர்கள் குடும்பங்களும் வந்தால் கூட கூட்டம் சேருமே ?பாடுபவர்களுக்கு சற்று உற்சாகம் வருமே!  பின்னால் வளர்வோம், நிறைந்த அரங்குகளைப் பார்ப்போம் என்ற நம்பிக்கையில், சுவற்றுக்குப் பாடும் பாடகர்கள் பாட்டில் உற்சாகம்  எங்கிருந்து வரும்? ஆயாசம்தான் இருக்கும். அதே போல், மாலைக் கச்சேரிகளின் டிக்கட் ரேட் , சினிமாவை விட அதிகம். சினிமா அளவு ஈர்க்க இயலாத ஒரு நிகழ்ச்சிக்கு , அதைப் போல் இரு மடங்கு டிக்கட் வசூலித்தால்,  சாமானியர்களுக்கு சபாவை எட்டிப் பார்க்கக் கூடத் தோன்றுவதில்லை.  தாங்கள்தான் சங்கீதத்தின் பிரதிநிதிகள் என்று நினைத்துக் கொள்ளும் ஒரு சிலரின் ஆதிக்கம்தான். கடைசிவரை பந்துவராளியை, பூர்விகல்யாணி என்றும், முகாரியை பைரவி என்றும் நினைத்துக் கொண்டு கேட்டு விட்டுப் போவார்கள்.

நேற்றுக்  கச்சேரியில் இரண்டு பேர்.  ஒரு ஜோல்னா பை, சாதா சூடிதார், அந்தப் பெண். அந்தப் பையன் , பல முறை துவைக்கப் பட்ட ஒரு சட்டை, பேண்ட்.  அவ்வளவு ஆர்வமாகக்  கச்சேரி கேட்டார்கள். த்விஜாவந்தியில்,  அகிலாண்டேஸ்வரியை விட்டால் வேறே கீர்த்தனையே யாரும் பண்ணவில்லையோ என்று நாம் நினைத்துக் கொண்டுள்ள போது , பாடகர் லேசாக முனகின உடனேயே , 'த்விஜாவந்தி ' என்று ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்த அப்பெண்ணும் பையனும், ' ஏன் ஆண்ட்டி, த்விஜாவந்தியில் இந்தக் கீர்த்தனை கேட்டுள்ளீர்களா'  என்று என்னிடம் வேறு கேட்டார்கள், பாருங்கள்,  அது என்ன கீர்த்தனை என்று கூடத்  திருப்பிச்  சொல்ல எனக்குத் தெரியவில்லை.

சபா  உணவகங்கள் அருமை. அரங்கை விட,  உணவகங்களில்  மக்கள் அதிகம் .மதிய உணவின் போதே,  மாலைச்  சிற்றுண்டிக்கு,  என்ன இனிப்பு  காரம் சேர்த்து உண்டால் நன்றாக இருக்கும்   என வெளிப்படையாகவே பேசுவோர்,  சபா சபாவாகத் தாவும்  கார்சவாரி ரசிகர்கள்.....அவர்கள் அப்படித் தாவுவது ,  வித்தியாசமான கச்சேரி கேட்கவா, வித்தியாசமான உணவகத்தில்  சாப்பிடவா என அவர்களைத்தான் கேட்க வேண்டும். எதுவும் அதிகமாக இருப்பது சந்தோசம் எனத் தப்புக் கணக்குப் போடுகிறோம். இல்லை. அது தொல்லை.  போதும் போதாததற்கு,  எல்லாத்  தொலைக்காட்சிகளும் கச்சேரிகள் ஒளிபரப்புகிறார்கள். அது நல்ல  விஷயம்தான்.  வயதானவர்கள், வசதியற்றவர்கள்,  வெளியே போகும் சூழ்நிலை இல்லாதவர்கள் , ஆகியோருக்கு நல்ல வரப்  பிரசாதம். வருஷம் முழுதும்  நடக்குமாறு பண்ணி,   இந்த இசை வெள்ளத்தில் மக்கள் மூழ்குமாறு செய்யலாமே?  இது என்ன பருவமழையா?  டிசம்பரில் மாத்திரம் வர?   சம்பிரதாயத்தை  மாற்ற பயம். ஆட்டுமந்தையாகவே இருக்க இஷ்டம். வேறு மாசத்தில் கச்சேரி வைக்க பயம். காலைக்  கச்சேரிக்கு டிக்கட் வசூலிக்க பயம். மாலைக்  கச்சேரிக்கு  டிக்கட் கட்டணம் குறைக்க பயம். உணவகம் இல்லாது சபா நடத்த பயம். வரவர,  சபா போகும் ஆசையே இருப்பதில்லை. பொய்யாகத்  தெரிகிறது.  பார்க்கலாம். ஒரு எல்லையைத் தொட்ட பின்னர் மாற்றம் வரலாம்.சென்னைக்கு எல்லாம் கல்யாண மாசம் ஆகலாம்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

சமூகத்தை அரித்து வரும் புற்று நோய்

இப்பொழுதுதான் சக்திபவனில் ஒரு தோசை சாப்பிட்டு வந்தோம்.இன்னும் உடை கூட மாற்றவில்லை.உண்மை.உண்மையில் இன்னும் சற்று பெரிய பளபள உணவகத்துக்கே முதலில் சென்றோம்.கூட்டம்.வெளியே நாற்காலிகளில் எல்லாம் மக்கள்.கோவில் வாசலில் கையேந்திக் காத்திருப்போர் பிச்சைக் காரர்களாம்.நாம் சொல்கிறோம்.அவர்களாவது பசிக்கு ஏதாவது கிடைக்குமா என்ற எண்ணத்தோடு காத்துள்ளார்கள்.ஆனால் posh ஹோட்டல் வாசலில் காத்திருப்போர் பசிக்கு காத்திருப்பதில்லை.சாப்பிடும் ஆசையால் காத்துள்ளோம். உடையாலும் உட்கார்ந்திருக்கும் இடத்தாலும் அறியப்பட்டால், அவர்கள் பிச்சைக்காரர்கள்.காத்திருக்கும் போது மனதில் உள்ள உணர்வால் அறியப்பட்டால் ,நாம்தான் பிச்சைக்காரர்கள்.அவர்கள் வயிறில் எரிவது பசி எனும் அக்னி.நம் மனதில் எரிவதோ ஆசை எனும் அக்னி.பசியை விரட்ட முடியாது.ஆசையை விரட்ட முடியும்.பசியும் இருந்து பணமும் இருந்தால் ஸ்டார் ஹோட்டல் போகக் கூடாதா?போகலாம்.ஆனால் காத்து நிற்பின் அது பசியால் அல்ல..ஆசையால்.இன்று எங்களுக்கு இருந்தது பசி.அதனால்தான் அங்கிருந்து சக்திபவன் சென்றோம்.

இந்த போஸ்டின் நாயக நாயகிகளைச் சந்தித்தது அங்கேதான்.முதல் பத்தி என் மனத்தில் நினைவு தெரிந்து உணவகங்களுக்கு செல்ல தொடங்கியது முதல் உள்ள எண்ணம். ஆனால் போஸ்ட்டின் வித்துக்கள் சிறப்பு எண்ணங்களே.எங்களுக்கு அடுத்த மேசையில் ஒரு ஏழை குடும்பம்,கணவன்,மனைவி,இரு குழந்தைகள் சாப்பிட அமர்ந்தார்கள்.அவர் ஆட்டோ ஓட்டுநர் என்று உடையில் இருந்தும் அவர்கள் ஏழ்மை அந்த பெண்ணின் கழுத்தில் இருந்தும் தெரிந்தது. குழந்தைகளுக்கு ஏதோ ஆர்டர் பண்ணப் பட்டு வந்தது.அவை ஆவலுடன் வேகவேகமாக சாப்பிட்டதைக் கணவனும் மனைவியும் பார்த்துப் பரவசப் பட்டுக் கொண்டார்கள்.நான் ஓரப் பார்வையாக அவர்களை பார்த்துக் கொண்டிருந்தேன்.இக்குழந்தைகள் சாப்பிடும் வேகம் பார்த்தால் அவர்கள் அம்மா அப்பாவிற்கு வரும் உணவையும் பங்கு கேட்கும் போல் உள்ளதே,அவரிடம் பர்ஸ் கூட இல்லை போல் தெரிகிறதே என்று சற்றுக் கவலையாக உணர்ந்தேன்.பளிச் என மனதில் ஒரு குரல் ஒலித்தது.அவர்களுக்கு எதுவும் சாப்பிட வர போவதில்லை என.கையில் உள்ள காசில் குழந்தைகளுக்கு மட்டும் ஏதாவது வாங்கித் தர வந்த பெற்றோர்.லேசில் வெல்ல இயலாத உணவு ஆசையை வென்ற இரு ஜீவன்கள்."அம்மா,நீ எப்ப சாப்பிடுவே "என்ற சின்னக் குழந்தையின் குரல்,என் இரவுத் தூக்கத்தைத் தொலைக்கப் பண்ணி விடுமோ என்று யோசித்தவாறே வெளியே வந்தேன்.

ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூகம்.ஏன்?ஐ.ஐ.டி .யில் இருந்து நாலு வருஷம் படித்து விட்டு வெளியே வருபவருக்கு ஏன் 18 லட்சம் சம்பளம்?கிரிக்கெட் மட்டும் ஏன் உசத்தி?டீமில் உள்ளவர்களுக்கு ஏன் அவ்வளவு பணம்?உன்னிகிருஷ்ணனுக்கு பாட வரும்.பாடுகிறார்.விராட் கோலிக்கு கிரிக்கெட் விளையாட வரும் .விளையாடுகிறார்.அஜித்துக்கு நடிக்க வரும் .நடிக்கிறார்.இன்று பார்த்த மனிதனுக்கு ஆட்டோ ஓட்ட வரும்.ஓட்டுகிறார். அஜித் டிசம்பர் கச்சேரி பாடுவாரா?உன்னிகிருஷ்ணன் ஆட்டோ ஓட்டுவாரா ?அவரவருக்கு வருவதை செய்கிறோம்.software engineer 12 மணி வேலை செய்தால்,ஒரு மெக்கானிக்கும் அதே நேரம் வேலை செய்கிறார்.கேட்டால் படிப்பு ஈட்டும் பணம் என்று கதை சொல்வார்கள்.உனக்குப் படிக்க வரும்.பிளம்பிங் பண்ண வருமா?மெத்தப் படித்தவர்கள், எல்லாம் ,தானே பண்ண வேண்டியதுதானே?படிக்க வந்தது.படித்தோம்.இன்னொருவனுக்கு படிப்பு ஏறவில்லை.வந்ததை செய்கிறான்.வசதி இல்லாமல் படிக்கும் வாய்ப்பை இழந்தவர்கள் எத்தனை பேர் உள்ளார்கள்.ஏன் வசதி இல்லை?சமூகத்துக்கு வந்த புற்று நோயால் அது தடுமாறி,தடம் மாறிப் போனதால்.

சரி,படிப்புக்கு மரியாதை தரவேண்டியதுதான்.அலுவலகத்தில் மணி அடிப்பவருக்கும்,மணி அடித்தால் வந்து கைகட்டி நிற்பவருக்கும்  ஒரே சம்பளம் தர வேண்டாம்.ஆனால் ஏன் இவ்வளவு வித்தியாசம்?ஒரு இடத்தில் ஏன் கோடிகள் குவிய வேண்டும்?ஆட்டோக்காரர்கள் பத்து ரூபாய்க்காக ஏன் தவளை போல் கத்த வேண்டும்?ஏன் விகிதாச்சாரம் இவ்வளவு மோசமாய் உள்ளது?நமக்கு உள்ளது போல் சமூகத்திற்கு,நாட்டிற்கு ஒரு ஆன்மா உள்ளது.சமூகத்தின் ஆன்மா நம் அனைவரிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டுள்ளது.சமூகம் என்ற பெரிய உடலை அழித்துத் தின்றுவரும் புற்று நோய் இந்த ஏற்றத் தாழ்வுகள்.சரியான ட்ரீட்மெண்ட் தரப்பட வேண்டும்.கான்சருக்கு க்ரோசின் போட்டால் சரியாகுமா?எத்தனை நாள்பட்ட கவனிப்பு வேண்டும்.அது போல்தான்.இப்போதெல்லாம் புற்று நோயை முற்றிலும் குணப்படுத்தி விடுகிறார்களாமே ?இன்று சக்திபவனுக்கு சாப்பிட வந்த குடும்பம் என்றாவது,முழுமையாக வயிறார சாப்பிடுமா?இல்லையெனில் தேடி சோறு நிதம் தின்று,பல சின்னஞ் சிறு கதைகள் பேசி,பலர் வாட பல செயல்கள் செய்து அடுத்த தலைமுறைக்கு என வங்கிக் கணக்கில் தேவைக்கு அதிகமாகப் பணம் சேர்க்கும் நாமெல்லாம் தலைகுனிய வேண்டியவர்களே.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

புகழ் தரும் தலைவலிகள்

இரண்டு வார மனச்சுமை. இன்று இறக்கி வைத்து விடுவேன். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப என்ற இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.நன்றாகப் போகிறது. நேரடியாக விஷயம் தொடுகிறேன். அதில் ரமணியம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் பாடிக் கலக்குகிறார். நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் பாராட்டுகள் எல்லா வழியிலும் வந்து குவிகின்றன. அவர்கள் பின்புலம் அறிந்த பின் மிகுந்த மரியாதை உண்டாகிறது. அவர்கள் சாதனைப் பெண் என்பது சந்தோஷம் தருகிறது. பின் ஏன் எனக்கு மனம் கனக்கிறது? சொல்கிறேன்.

புகழ் ஒரு போதை. மிகுந்த பக்குவத்துடன் கையாளப் பட வேண்டிய ஒன்று. அதிகம் குடித்தால் குடிகாரனுக்கு ஏற்படும் தடுமாற்றம்,  புகழ் வசப்படும் மனிதனுக்கு உண்டாகும். எளிமையான மனிதர்கள் புகழால் தொலைக்கும்  சில விஷயங்கள், எளிமை, தூக்கம், சுதந்திரம், பிறரால் அறியப் படாத இருப்பு, ஒரே வார்த்தையில் சொன்னால் நிம்மதி. பிரபலங்கள் யாராவது உண்மை பேசினால் நமக்கு இது விளங்கும். இல்லை என்றாலும் கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா என்ன? பாவம் ரமணியம்மாள் என்பதே என் மனது கொண்ட சுமை. முதல் பாடல் பாடும் போது,  தான் இவ்வளவு பயணிப்போம் என அவர்கள் நினைத்ததாகத் தெரியவில்லை. திறமையை,  தொலைக்காட்சிகள் ஊக்குவிக்கின்றன. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அவர்கள் டி ஆர் பி (டெலிவிஷன் ரேட்டிங் பாயிண்ட்) ஏற , இந்த அப்பாவிப் போட்டியாளர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்களோ என்றே தோன்றுகிறது. தொலைக்காட்சிசானல்களைத்  தப்பு சொல்ல மாட்டேன். அவர்கள் ஸ்ட்ரீட் ஸ்மார்ட்டாக இருந்தாக வேண்டும். வியாபாரிகள் வியாபார தந்திரம் செய்யக் கூடாது என்று வாதிட இயலாது. அந்த அம்மாள்தான் பாவம்.

அந்த ரமணியம்மாளே  வாக்குமூலம் தருகிறார்கள். "நான் வேலைக்கு செல்லும் வழியில் இளைஞர்கள் என்னுடன் செல்பி  எடுத்துக் கொள்கிறார்கள், சிலர் காரை நிறுத்திப் பணம் தருகிறார்கள்", என்றெல்லாம்.   சென்ற வார ஷோவில் அவர்கள் சொன்ன போது, அவர்களை நிம்மதியாய் விட்டு விடுங்களேன் என்று மனம் அடித்துக் கொண்டது. ஏன் என்றால்,  உலகம் பொய். உலகம் வேண்டுவது பரபரப்பு மட்டுமே. சில நல்ல உள்ளங்கள் உண்டு. அவர்கள் வலக்கை தருவது இடக்கைக்குத் தெரியாதது போல் உதவுபவர்கள். மற்றது எல்லாம் விளம்பரத்துக்காகத்தான்.  அவர்களால் சாலையில் இயல்பாய் முன் போல் நடக்கக் கூட முடியவில்லை. இரண்டு சேலைகளுடன் நிம்மதியாய் இருந்தவரை,  வாரம் ஒரு புது துணி கொடுத்து ஆசை வயப் படுத்தியாயிற்று. தூக்கம் வராது. நிச்சயம் வராது. அதற்காக ,அவர்கள் போன்ற, நம் போன்ற சாதாரண,  ஓரளவு திறமை உள்ள மக்கள் வளரவே கூடாதா என்கிறீர்களா? அப்படி இல்லை. இந்த தற்காலிக வளர்ச்சியும் புகழும் தரும் போதை, அவர்களைப் புறம் தள்ளி உலகம் தன்  பயணத்தைக் தொடரும் போது இந்த எளிய மனிதர்களுக்கு அதிர்ச்சியும் வலியும் ஏற்படுத்தும்.

இந்தப் புகழ் தற்காலிகமானது என நீ அறிவாயா என்றால், ஆம்,அறிவேன் என்பதே பதில். சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்த இதே போன்ற ஒரு பாட்டியின் திக்கற்ற நிலையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. ஆனால்,  தீர்வற்ற பிரச்சினை இதெல்லாம். நீங்களும் நானும் பேசிக் கொள்ளலாமே தவிர ஏதும் செய்ய இயலாது. ஆனால், ஒன்று கவனிக்கிறேன். ஒரு மனிதனின் வளர்ச்சியும் அவன் அடக்கமும்  பெரும்பாலும் நேர்விகிதத்தில் இருக்கின்றன. இருக்க வேண்டும். தொலைகாட்சி நிகழ்ச்சியின் நேர்காணலில் பங்கு பெறும் பல பிரபலங்கள் இதை உறுதி செய்கிறார்கள். வள்ளுவனும் பாரதியும் பெற்றது போன்ற புகழ்தான்  நிலையானது. அது நம் போன்ற சாமானியர்களுக்கு கஷ்டம். அதை உணர்ந்து, புகழின்  வசப்பட்டு மயங்காமல் இருப்பின் பிரச்சினை இல்லை. மயங்கி சந்தோஷ எல்லை வரை போனால், இன்னொரு எல்லையைத் தொட வேண்டிவரும் போது  அடி பலமாக இருக்கும். ரமணியம்மாளுக்கு இந்த எளிய மனம் மாறாமல் இருக்கட்டும் .வேறென்ன சொல்ல?  உடல் அடையும் புகழை,  உள்ளம் சினிமா படம் போல் வேடிக்கை பார்க்கட்டும்.தொலைக்காட்சி சானல்களும் இன்னும் கொஞ்சம் மிதமாக இருந்தால் நலம். சிம்பிள் பெண்டுலம்  போல் மக்களை வைத்து விளையாட அல்லவோ செய்கிறார்கள்! பாவம் மக்கள்.

மனம், சுமை இறக்கி இறகு போல் ஆனது.