ஞாயிறு, 15 நவம்பர், 2015

பார்வைகள் --பல கோணங்கள்

நாம் உலகத்தைக் கூர்ந்து பார்க்கிறோம்.சிலர் நம்மையே பார்த்துக் கொள்வதையும் செய்கிறோம்.ஒருவரின் பார்வை மற்றவரது போல் இருப்பதில்லை,அவர்கள் ஈருடல் ஓருயிர் போல நெருக்கமானவர்களாய் இருப்பினும்.யாரும் மற்றவருக்காக கருத்துக்களை மாற்றிக் கொள்வதும் இல்லை.In English we say putting yourself in others shoes.மற்றவர் கோணத்தில் இருந்தும் பிரச்சினைகளை அணுகுவது.அது சாமானியமான காரியம் இல்லை.பொறுமை முயற்சி எல்லாமும் தேவை.Sometimes we will compromise saying it is better to endure than trying to cure.இதற்கு எல்லாவற்றையும் அதிக முக்கியத்துவம் கொடுத்து குழப்பிக் கொள்ளாமல் அதனதன் போக்கில் எடுத்துக் கொள்வது ஒன்றே வழி.சின்னதாக ஒரு வேண்டாத எண்ணம் மனதில் புக முயற்சிப்பது தெரிந்தாலே உடனடி 144 போட வேண்டியது அவசியம்.

உலகில் ஒவ்வொன்றும் ஒவ்வொருவரும் அதிசயம்தான்.நாம் சினிமா பாடல் வரிகளை சில நேரம் ரொம்ப சாதாரணமாய் எடுத்துக் கொள்கிறோம்.இப்போதும் மிக அழகிய பாடல்கள் உண்டு.நேற்று பூவுக்குள் மறைந்திருக்கும் கனிக் கூட்டம் அதிசயம் பாட்டுக் கேட்டேன்.கவிஞர் வைர முத்துவின் பேனாவைக் கடன் வாங்கி வந்தால் நமக்கும் அப்படி எழுத வருமா என அதிசயமாக இருந்தது.எல்லாம் அதிசயம்தான்.தாஜ்மஹால் மட்டும் அல்ல.Thoughts பற்றி அரவிந்த அன்னை எழுதிய இரண்டு பகுதிகள் இன்று படித்தேன்.மனதின் ஆழங்களில் உள்ளதை எல்லாம் என் முன்னால் யாரோ தோண்டி எடுத்து வைத்து விட்டது போல அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன்.இன்று நவம்பர் 17 ம் தேதி அன்னையின் மஹா சமாதி தினம்.மனம் தனியே பிரிந்து அரவிந்தாஸ்ரமத்தின் உள்ளே சென்று மலர்க் குவியலால் மூடப் பட்ட ஸ்வாமி அரவிந்தர் அன்னை சமாதியில் தஞ்சம்.அதிசயங்களுக்கும் ஆஸ்ரமத்திற்கும் என்ன தொடர்பு என்று தோன்றுகிறதா?சரிதான்.தொடர்பு உள்ளது.சொல்ல முயல்கிறேன்.அதி வேகமான எண்ணங்கள் நினைவுகள்,அவற்றை உள்ளடக்கிய சற்று நிதானப் பட்டு விட்ட உடல்,வயது,டைப் செய்வதில் குறைந்த திறமை இவற்றை வைத்துக் கொண்டு இவ்வளவுதான் பேச முடிகிறது.

நினைவுகள் என்னைப் பொறுத்த மட்டில் actions ஐ விடவும் சக்தி வாய்ந்தவை.நல்ல,தீய நினைவுகள் இரண்டுமேதான்.நல்ல நினைவுகள் நடக்க இயலாது என்பவற்றைக் கூட நடத்தி விடும் சக்தி வாய்ந்தவை.அதை உணர்ந்திருக்கிறேன்.நீங்கள்?நினைவு என்றால் தீவிரமான நினைவு.மனதில் அப்பப்போ கடந்து செல்லும் சாதாரண மேலோட்டமான நினைவு அலைகள் அல்ல.நம் நினைவுகளை கவனிக்க வேண்டியது மிக அவசியம்.எண்ணங்களின் முக்கியத்துவம் பற்றி தம்மபதம் கூறுகிறது,ஒரு விரோதி நமக்கு செய்வதை விட நம்மை சுத்தமாக வெறுக்கும் ஒருவர் நமக்கு செய்வதை விட அதிகமான தீமை ஒரு misdirected thought ஆல் நமக்கு விளைகிறது.அதே போல ஒரு well directed thought செய்யும் நன்மையை வேறு யாரும் நமக்கு செய்யவும் முடியாது.

We are contaminated each day each minute.எல்லா நினைவுகளும் மனதின் ஒரு craving ஐயே -(சரியான தமிழ்ப் பதம் கிடைக்கவில்லை) வெளிப் படுத்துகிறது.தேடல் என வேண்டுமானால் கூறலாம்.இதில் இருந்து வெளி வரவே வேண்டும்.ஒரு நாளில் நடப்பதல்ல இது.To fight against thoughts,it is necessary to receive them first,to admit them,deliberately allow oneself to be contaminated, absorb the sickness and try to destroy the deadly germ by healing oneself.மனதில் நடக்கும் ஒரு போர் இது.தீவிரமான போர் புரிதலே வெற்றி தரும்.ஒவ்வொரு முறை யாரையாவது எதையாவது தவறாக எண்ணும் temptation வரும் போதெல்லாம் அல்லது தேவை அற்றதோ என்ற tag தாங்கி வரும் எண்ணங்கள் வரும் போதெல்லாம்  நம் மனதில் சிறுக சிறுக சேர்த்து வைத்த pure disinterested thoughts கொண்டு அதை தூக்கிப் போட முயல வேண்டும்.நம் மனதின் பரபரப்பையும் கவலைகளையும் பயங்களையும் இந்த முயற்சி எந்த அளவு அமைதி கொண்டு replace செய்து விடுகிறது என்று ஒரு முறை உணர்ந்தால் தயங்காமல் வேலையை ஆரம்பித்து விடுவோம்.

ஒவ்வொரு மனமும் அதன் எண்ணங்களும் அதிசயம்தான்.கொஞ்சம் யோசித்தால் நம் கணிப்புகள் எவ்வளவு கனிவற்றவை என்பது நமக்கே தெரியும்.அது அறியாமைதான்.ரொம்ப வருந்த வேண்டாம்.திருத்திக் கொள்ள முயன்றால் போதும்.மற்றவர் பற்றி அறியும் திறன் நமக்கு இல்லை என்பதை மறுபடி மறுபடி நமக்கு நாமே சொல்லிக் கொள்ள வேண்டும்.மற்றவரிடம் நாம் காணும் குறைகளை எடுத்துக் கொண்டால் அவர்களிடம் எது நம்மை கோபப் படுத்துகிறதோ அது உள்ளுக்குள் கண்டிப்பாக நம்மிடமும் இருக்கும்.நம் மன அழுக்குகளையே பெரும்பாலும் நாம் வெளியே பார்க்கிறோம்.சலவை செய்த வெள்ளைத் துணி போல அப்பழுக்கற்று மனம் இருந்தால் யாருடைய குறைகளும் தெரியாது.யாரையும் குறை சொல்லத் தோன்றாது.ஒன்று நல்லது அல்லது கெட்டது எனத் தீர்மானிக்கும் அறிவு பெற்றுள்ளோமா?வாய்ப்பே இல்லை.மனிதனுக்கு அதைத் தீர்மானிக்கும் அறிவு இல்லை.எல்லாம் relative .எனக்கு ஒன்று சரி.அது உங்கள் பார்வையில் தப்பாக இருக்கலாம்.

போஸ்ட் நீள்கிறது.இப்போதைக்கு அவரவர் வேலையை எண்ணங்களைப் பார்ப்போம்.நன்றாக வாழ வேண்டும் என்றால் சரியாக எண்ண வேண்டும்.ஒரே வழியில் சென்றடையும் ஊர் போல உண்மைக்கு ஒரு வழிதான்.வாய் மொழியாகவும் உடல் மொழியாகவும் வெளிப் படும் முன்னே பிறந்து விடுவதால் நினைவே பெரிது.மழை வெள்ளத்தில் சென்னை மிதந்து கொண்டுள்ளது.வெளியே வந்து எட்டிப் பார்க்கிறோம்.நம் திட்டங்களைப் பாழாக்கி விட்டது,துணி காயாது,அலுவலகம் போகும் முன் நனைந்து விடுவோம் என்பது போன்ற எண்ணங்கள்தான் முதலில் நம்மை ஆக்கிரமிக்கின்றன.மழை ஒரு இயற்கை நிகழ்வு.ஆனால் நம் மனம் வேறு மிக முக்கியமான எதுவும் நம்மை ஆக்ரமிக்காத வரை இந்த சிறிய நிகழ்வு அதன் சாதக பாதகங்களைப் பற்றியே வட்டமிடுகிறது.இப்படித்தான் மனித வாழ்நாட்கள் கடந்து போகின்றன.இவற்றைஎல்லாம்தான் thoughts என்று தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் இவை எல்லாம் தெளிவற்ற தேவையற்ற mental agitations என்ற category ல்தான் அடங்கும்.கஷ்டமாக இருப்பினும் மிக சாதாரணமான இந்த நினைவுகள் இல்லாமல் மூளையைக் காலியாக வைத்துக் கொண்டால்தான்,உண்மையான thought process ஏற்படும்.நம்முடைய weaknesses ஐ சரி என்று justify பண்ணிக் கொள்வதை நிறுத்த வேண்டும்.  We shall have a second part.I have ended abruptly.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

சனி, 7 நவம்பர், 2015

இந்த வருஷம் தீபாவளி

வருஷம் பூர ஒவ்வொரு நாளுக்கும் ஏதேதோ பெயர் கொடுத்து கொண்டாடிக் கொண்டு வருகிறோம்.வாழ்க்கையே celebration தான் என்பது போல.அது உண்மையும் கூட.அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.அதிலும் கூன் குருடு செவிடு நீங்கி ஒரு பிறவி அடைதல் அதனினும் அரிது எனும் போது எல்லா நாள்களுமே கொண்டாட வேண்டியவைதான்.இந்த வருஷம் தீபாவளி அன்று உங்கள் அனைவருடனும் தொடர்பு கொள்ள எண்ணினேன்.முடியவில்லை.நான் எழுதினாலும் அன்று நீங்கள் படிக்க முடிய வேண்டும் அல்லவா?சரி உணர்வுகளின்வேகம் குறையும் முன் எழுதலாமே என்பதால் மதிய குட்டித் தூக்கத்திற்கு " டா டா "காட்டி ஆயிற்று.

நம் இளைய வயது தீபாவளியின் நினைவுகள் மனதை வருடிப் போவதை மறுக்க மாட்டேன்.ஆனால் இறந்த காலத்தில் மனதை அடிக்கடி கொண்டு நிறுத்துவது தேங்கிய நீர் போல காலம் செல்ல செல்ல மணம் மாறும்.எதற்கு?நல்ல நினைவுகளே ஆனாலும் இறந்த காலம் பற்றி யோசிக்க சில நிமிடங்களுக்கு மேல் செலவழிப்பது சந்தோஷம்  சங்கடம் எது தரினும் விரயமான நேரத்தைத் திருப்பித் தராது.நம் அனுபவங்களே எழுத்து.என் இவ்வருட தீபாவளி  அனுபவம் இது.If you are able to identify yourself with me I am happy.If not just read in a very casual manner as you will see an episode of a television mega serial.

வழக்கம் போல் கங்கா ஸ்நானம் முடித்து நமஸ்காரம் பண்ணி ஆசி வாங்கிவர என் அம்மா வீட்டிற்கு சென்றோம்.அந்த நாள்களில் என்னை என் தம்பி தங்கையைக் கூட்டிக் கொண்டு கடை வீதி உலா சென்று எங்கள் கை போன திசையில் சென்று  நாங்கள் கேட்டதை எல்லாம் வாங்கித் தந்த அப்பா கட்டிலில் ஓரமாய் பூனைக் குட்டி போலப் படுத்திருந்ததைப் பார்த்த போது கண்ணில் புறப்பட யத்தனித்த கங்கையை ,"தீபாவளிதான் ஆனாலும் குளிக்கும் போதுதான் வந்து விட்டாயே இப்போ எதற்குக் கண் வழி வர யத்தனிக்கிறாய் உள்ளே போ"  என்று கூறி விட்டேன்.கங்கை கண் வழி வெளிப்பட்டால் அந்த அறையிலேயே மௌனத் தவம் புரியும் என் அம்மாவையும் அல்லவோ அது பாதிக்கும்?அம்மா இரும்பு மனுஷிதான்.ஆனால் சூரியகாந்தி பூ போல துணையை சார்ந்து தன் தேவைகளை நிர்ணயம் செய்து கொண்ட இந்தியப் பெண்தான்.

ட்யூஷன் பெண்களைப் பார்க்க தலையை brush and iodex கண் மை கொண்டு டை பண்ணி மடிப்பு கலையாத வெள்ளை வேஷ்டி சட்டையுடன் எப்போவும் ட்ரிம் ஆகவே நாங்கள் பார்த்த அப்பாவா  இது? பாட்டி அத்தையுடன் சேர்ந்து முகத்தில் சோர்வே தெரியாமல் அல்லது இருந்தும் அதைக் காட்டிக் கொள்ளாமல் வண்டியை இழுத்த அம்மாவா இது ?  தினமும் மனதில் ஒரு பாட்டு காரணம் இன்றி உட்கார்ந்து கொள்ளும்.இன்று என்ன தெரியுமா?"கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்.துடுப்பு கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்" .துடுப்பும் பாரமாகிப் போன ஓடமாக நாமும்தானே மாறுவோம் என்றிருந்தது.

பெரியவர்களுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம்.என் தோழி ஒரு குறும் செய்தி அனுப்பினாள் .நாம் விரும்பும் மதிக்கும் ஒருவருக்காக நேரம் தருவது ரொம்ப உயர்வாம்.ஏனென்றால் நம்மால் திரும்பிப் பெற இயலாத ஒன்றை அவர்களுக்காக செலவு செய்வதால்.பல நாள்களாக என் அப்பா ஓரிரு வார்த்தை தவிர பேசுவதில்லை.என்னை உறுதியாகத் தோளில் இள வயதில் தூக்கி இப்போ மெலிந்து பஞ்சு போல் உள்ள அப்பாவின் கைகளைப் பிடித்து "இன்னிக்கு தீபாவளி இன்றாவது ஏதான பேசுப்பா" என்ற போது நிமிர்ந்து பார்த்து அப்பா புரிந்த புன்னகையும் அதன் reaction ஆக அம்மா முகத்தில் ஒரு மணித்துளி தோன்றிய மத்தாப்பூ வெளிச்சமும்தான் இந்த தீபாவளி special எனக்கு. இன்னும் சில சிறப்புகளும் உண்டு.மனதில் தித்திக்கும் அவை நேரம் வரும் போது எழுத்திலும் வரும்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

புதன், 4 நவம்பர், 2015

உணர்வுகளில் நிதானம்

ஒரு பெரிய இடைவெளிக்குப் பின் சந்திக்கிறோம்.மகிழ்ச்சியாக உள்ளது.எத்தனை மகிழ்ச்சி?அதுதான் இந்த போஸ்ட்டின் அடிநாதம்.மிதமான உணர்வுகளின் தேவை பற்றி இன்று ஏனோ மனம் யோசிக்கிறது.பல உணர்வுக் கலவைகளின் சங்கமமாக உள்ள நாம் தீவிரமான எண்ண ஓட்டங்களால் அலைக்கழிக்கப் பட்டே நாளின் வாழ்வின் பெரும் பகுதியைக் கழிக்கிறோம்.இன்பமோ துன்பமோ நவரசத்தில் வேறெந்த ரசமோ எதுவாயினும் அது கட்டுக்குள் இருக்க எது வழி?அதன் தேவை என்ன?ஒரு இடைச் செருகல்.ஸ்வாமி அரவிந்தரும் அரவிந்த அன்னையும் அருளிய உரைகளில் இருந்து சிலவற்றைத் தமிழ்ப் படுத்தி இனி நான் எழுதப் போகும் எல்லா போஸ்ட்டிலும் ஒரு பகுதி இருக்கும்.Reference எந்தப் புத்தகம் என்று கடைசியில் குறிப்பிட்டு விடுகிறேன்.ஒரு சில நாட்கள் உணர்வுபூர்வமாக ஏதும் பேசுவோமே?

 ஒவ்வொருவருக்கும் ஒரு inner poise இருக்கிறது.அதாவது மனதிற்குள் ஒரு சம நிலை.ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு உயரும் போது அநேகமாக எப்போதும் சிலபடிகள் கீழே இறங்கி மறுபடி மேலே வருகிறோம்.அது பெரு மாற்றம்.அதிர்ச்சியாகக் கூட இருக்கும்.கீழே வரும் வேகத்துடன் மேல் எழுகிறோமா அல்லது பழைய சில நல்ல முன்னேற்றங்களைக் கீழே தள்ளும் அளவு பின்னால் போய் விடுகிறோமா என்பது அமைதியாக கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.வாழ்க்கையில் ஒன்றின் இடத்தை மற்றொன்று ஆக்கிரமிப்பது நடந்து கொண்டேதான் உள்ளது.ஆனால் விதி விலக்காக இருப்போரும் உண்டு.அவர்கள் எல்லாவற்றையும் மனதில் தனித் தனித் தீவுகளில் வைத்திருப்போர்.மனிதன் கண்டு பிடித்த கணினியே கணக்கற்ற விஷயங்களை மெமரியில் எந்தக் குளறுபடியும் இன்றி வைத்துக் கொள்ளுமானால்,அதைக் கண்டு பிடித்த மனித மனமும் மூளையும் குழம்பலாமோ?வாழ்க்கையைப் படிப்பதாகச் சொல்லிக் கொள்கிறோம்.அதில் எல்லாம் என்ன பலன்?முதலில் படிக்க வேண்டியது நம்மைத்தான்.நம் செயல்பாடுகளின் காரணங்களே நமக்கு மறை பொருளானால் உலகம் பற்றிய ஆராய்ச்சி துல்லியமாக எப்படி இருக்க இயலும்?

எது நம்மை மிகவும் சோர்வடையச் செய்கிறது சொல்லுங்கள்?எதெல்லாம் பயனற்றதோ அதெல்லாம்.மாற்றிச் சொல்ல வேண்டுமானால் நாம் எந்த விஷயங்கள் பற்றி ஆயாசம் அடைகிறோமோ அவை அனைத்தும் யோசனை இன்றி விலக்க வேண்டியவை.அளவுக்கு மிஞ்சும் எல்லாம் நஞ்சுதான்.வருத்தம் சுகம் இன்பம் சோகம் எல்லாவற்றையும் மிதமாக எடுத்துக் கொள்வது மனப் பழக்கமே.முதலில் நாம் அவற்றிற்கு தலைவனாக விளங்குவது.பிறகு அதை வெளிப் படுத்துவது.இதை ஒரு அறிவுரை மாதிரி நான் பேசவில்லை.உங்கள் அனைவருடனும் செய்யும் உரையாடலாக மட்டுமே நினைக்கிறேன்.நம் நினைவுகள் நம்பிக்கைகள் மட்டுமே நமக்கு சொந்தம்.அவை வடிவம் பெறுவதோ பொய்த்துப் போவதோ கடவுள் செயல்.கடவுளின் கருவியாகப் பயன்படப் போகிறவர்கள் பங்கும் அதில் உண்டு.உடல் அணுக்களில் அமைதி சீரான ஸ்வாசம் உயரே மட்டுமே உள்ள எண்ணங்கள் இவை யாவும் சேர்ந்ததே அமைதியான பொழுதுகள்.மனிதனின் அடிப்படைக் குணம் ஆனந்தமே.பாலில் சிறு துளி டிகாக்க்ஷன் சேர்த்து காபி என்று ஒரு குழம்பிய பானம் தயாரிக்கிரோமே அது போல சின்ன வேண்டாத ஒரு எண்ணம் கூட நம்மை சமநிலை இழக்கவே வைக்கும்.சிவசங்கரி அவர்கள் சொன்னது போல் சின்ன நூல்கண்டா நம்மை சிறைப் படுத்துவது?

ஒரு முரட்டுக் குதிரையை அடக்கி விடலாம்.ஆனால் புலியிடம் நம் பாச்சா பலிக்காது.ஏன் ?அது கொடிய விலங்கு.அதனிடம் நல்லதை எதிர்பார்த்துப் பலனில்லை.அதனிடம் இருந்து தப்ப அதை அழிக்கவே வேண்டும்.ஆனால் சிறிது பொறுமையும் முயற்சியும் இருப்பின் முரட்டுக் குதிரையும் நம் வசப் படும்.மனிதனுள்ளும் அது போல கட்டுப் படுத்த கஷ்டம் போலத் தோன்றும் எண்ணங்கள் உண்டு.ஆனால் அவை புலி அல்ல.முரட்டுக் குதிரையே.கடிவாளம்தான் தேவை.அதை நாமேதான் போட்டுக்  கொள்ள வேண்டும்.ஆனால் கட்டுப்பாடு பொறுமை என்ற சொற்கள் எல்லாமும்  கூட சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியவை.அதற்கெல்லாமும் அளவு உண்டு!எல்லாமே எப்படியும் இருக்கட்டும் ,நான் அமைதியே காப்பேன் என்பது என் அளவில் weakness தான்.கங்கை வெள்ளம் செம்புக்குள் அடங்காதல்லவோ?காற்றுக்கு ஏது வேலி ?கடலுக்கு ஏது மூடி?நான் சொல்லவில்லை.கண்ணதாசன்தான் சொன்னார்.கட்டுக்குள் அடங்கின காட்டாற்று  வெள்ளமாக இருப்போமே? பேசுவோம்.
ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

மதுரை அரசாளும் மீனாக்ஷி

நேற்று மதுரை சென்று திரும்பினோம்,ஒரே நாளில்.ரைட் சகோதரர்கள் உபயம்.மனதில் கோடீஸ்வரராகவும் இக வாழ்வில் நான்கு இலக்க பணப் புழக்கத்தை அறியா எளிய மனிதராகவும்  வாழ்ந்து மறைந்த என் உயிர்த் தாத்தா ராமநாத சாஸ்த்திரிகள் வம்சத்தில் வந்த நான் ஒரு நாள் விமானப் பயணம் செய்வோம் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.இந்த போஸ்டின் High Light தாய் மீனாக்ஷி என்பதால் இந்தத் தலைப்பு.ஆனால் இது ஒரு பயண அனுபவமே.Flight ஐ நான் ஒரு airbus என்றுதான் எப்போதும் கூறுவேன்.மற்ற போக்குவரத்து சாதனங்களின் வேகத்தை விட அதிகமாயும் மனதின்எண்ண ஓட்டத்தை விட மெதுவாயும் செல்லும் என்பது தவிர பயணம் பற்றிக் கூற என்னைப் பொறுத்த மட்டில் அதிக விஷயம் இல்லை.ஆனால் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பஞ்சுப் பொதியாய் நுரை நுரையாய் விரவி இருக்கும் மேகக் கூட்டத்தைப் பார்க்கும் போது மனம் சட் என்று உள்ளே போகிறது.பிரபஞ்சத்தின் எத்துணை சிறு துளி நாம்! நாம் உலக வாழ்வில் சந்திக்கும் அனைவரும் தொடர்பில் உள்ள அனைவரும் நம்மை விட்டு மறைந்து போன நம் பாசத்திற்குரிய நம் forefathers ம் நாமும் ஆத்மாவாக அந்த மேகங்கள் நடுவில் இருந்து வந்து மறுபடி அதில்  ஒன்றியவர்கள்தானா? இது போன்ற போக்குவரத்து எத்துணை பிறவிகள் தொடரும்? எப்போது நிரந்தரமாக அங்கேயே தங்கும் வரம் பெறுவோம்?பகவான் க்ருஷ்ணரைத் தவிர யார் பிறப்பின் ரகசியம் அறிவார்? எந்த ஆத்மாவுடன் ஒரு பிறவியில் தொடர்பில் இருக்கப் போகிறோம் என்பதை நம் ஆத்மா தீர்மானிக்கிறதா அல்லது அந்தத் தீர்மானம் ஒரு ஆன்மாவிற்குக் கடவுளால் வழங்கப் பட்டு பூமிக்கு வருகிறோமா? "காதறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே" என்றல்லவோ பட்டினத்தார் பாடினார்? அப்படி என்றால் உலக வாழ்வை எவ்வாறு நடத்துவது சரி?பயண நேரம் முழுதும் என் முன்னோர்கள் யாரும் எங்குமே போகாது வான வெளியில்,என்ன நமக்கு சற்று மேலே சுற்றிக் கொண்டுள்ளார்கள்,நேரம் வந்தால் மறுபடி ஒரு கர்பவாசம் செய்ய வரத்தானே போகிறார்கள் என்று தோன்றிய வண்ணமே இருந்தது.

இதை என் பக்கத்தில் அமர்ந்திருந்த என் மகனிடம் பகிர்ந்து கொண்டேன்."ரொம்ப feel பண்ணாதேம்மா .உன் தாத்தா இதே flight ல் jeans T shirt சகிதம் நமக்குப் பின்னாலேயே கூட உட்கார்ந்து வராரோ என்னமோ "என்றான்.Flight இறங்கும் போது மனமும் மேகக் கூட்டத்தில் இருந்து விடுபட்டு அடுத்து செய்ய வேண்டிய விஷயங்களுக்குத் தாவியது.அதற்கு  நமக்கு அடுத்த தலைமுறை மாதிரி யாரும் உதவ முடியாது.

தூங்கா நகரம்.மக்கள் தொகை ,ஜன நெருக்கடி அதிகம்.எல்லாம் மீனாக்ஷி ஆட்சி.சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்து போகும் மக்கள்.மதுரை மல்லி.சில க்ஷேத்ரங்கள் பற்றி கடவுள் அழைப்பு இருந்தாலன்றி அந்த மண்ணை மிதிக்கவும் இயலாது எனப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன். எந்தப் புனிதத் தலத்திற்குத்தான் அந்த வார்த்தை பொருந்தாது?இதோ தெரு முக்கில் உள்ள வேம்புலித் தாயை அவள் அழைத்தாலன்றி தரிசனம் செய்ய முடியுமா என்ன? நேற்று மீனாக்ஷி கருணை மிகக் கொண்டு அழைத்தாள் .செல்ல முடிந்தது.மக்கள் வெள்ளம்தான் எப்பவும் கோவிலில்.மதியம் குறைந்த நேரம்தான் அம்மனுக்கு rest .நடை 4 மணிக்கே மறுபடி திறக்கப் படுகிறது.சும்மா பள்ளிக் கட்டுரை போல எழுதிக் கொண்டிருப்பதாய் நினைக்கிறீர்களா?அதுதான் இல்லை.இதற்கு மேல் எழுத்தில் வெளிப் படப் போவது மனசு.

தர்ம தரிசனத்திற்காக எளிய மக்கள் சிவனே (மீனாக்ஷியே என்று வேணாலும் சொல்லிக் கொள்ளுங்கள்) என்று கால் கடுக்க நிற்கிறார்கள்.ஆனால் பணம் படைத்தவர்கள் 100 ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு 90 சதவிகித மக்களை முந்திக் கொண்டு மூலஸ்தானத்திற்கருகில் சென்று விடுகிறார்கள்.அதற்கும் அரை மணியாவது க்யூவில் நின்றே ஆக  வேண்டும் என்பது வேறு கதை.நாங்களும் flight ஐ miss பண்ணி விடுவோம் என்ற போலி சமாதானம் சொல்லிக் கொண்டு அதே தவறைச் செய்தோம்.உண்மையில் தரிசனம் செய்யணும் என்றால் அவசரமாகப் போகக் கூடாது.யார் இந்தக் காசு வாங்கிக் கொண்டு தரிசனம் செய்விக்கும் முறையைத் தோற்றுவித்த மஹானுபாவர் தெரியவில்லை.இதோ அருகில் வந்து விட்டோம்.இரண்டடி உயரத்தில் ரம்யமாக சக்தியின் உருவமாக விளக்கின் ஒளியில் அருளை அள்ளி வழங்கிக் கொண்டு மதுரைக்கு மட்டுமா உலகிற்கே அரசியாய் நின்று கொண்டிருக்கும் மீனாட்சியைத் தரிசித்த கணம் ,இந்தத் தரினத்திற்காக எது செய்தால்தான் என்ன என்றுதான் தோன்றியது.ஆனால் அவள் நம் எல்லோருக்கும் தெய்வம் அல்லவா? ஒரு அரசன் கட்டிய நிஜக் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தன்னால் வர முடியாது என்று சிவபெருமான் கூறி அருளின கதை நமக்குத் தெரியாதா?ஏன் அப்படிச் சொன்னார்?பூசல நாயனார் கட்டின மனக் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அதே திருநாளில் செல்ல வேண்டும் என்பதற்காக.தந்தைக்கே அந்தப் பரிவு என்றால் மீனாட்சித் தாய்க்கும் அந்தப் பரிவு எளியவர் மேல் இருக்காதா என்று தோன்றியது.ஆனால் பணம்  தன் வேலையைக் காட்டாது எல்லோரும் அவள் கடைக் கண் பார்வை பெற என்ன வழி?

ரஞ்ஜனி த்யாகு


MOTHER PROTECTS

புதன், 30 செப்டம்பர், 2015

வாட்சப் கலாட்டா

வாட்சப் கலாட்டா 


நேற்று ஒரு ஸ்மார்ட் போன் வாங்கினேன்.அட உண்மையாவே இத்தனை நாள் என்னிடம் அது கிடையாதுங்க.ஸ்மார்ட்டாக இல்லாதவர்களுக்குதான் போனாவது ஸ்மார்ட்டாக இருக்க வேண்டும்  என்று வாதாடி வந்தேன்.கீ பேட் ஆக்டிவ் என்று ஒளிரும்  விரல் நீளம் இருந்த என் பழைய போன் தன் பயணத்தை நிறுத்திக் கொண்டதால் வேறு வழி இல்லாமல் பளபள என ப்ரகாசமாய் ஜொலித்துக் கொண்டிருந்த நகரின் ப்ரதான சாலையில் இருந்த ஒரு மொபைல் போன் கடைக்கு அரை மனதாகப் பயணப் பட்டேன் .குடும்ப சகிதமாய்.எனக்குதான் ஸ்மார்ட் போன் சமாச்சாரம் ஒன்றும் தெரியாதே.மேலான ஆலோசனை வழங்க, கார்ட் தேய்க்க, என் கணவர்,மகன் எல்லாம் வந்தால்தானே சரிப் படும்?அது ஒரு மாய உலகம் என அறிந்தும் நாமாவது பொறியில் சிக்குவதாவது என்ற இறுமாப்பில் 4000 ரூபாய்க்கு மேல் ஒரு பைசா என்றாலும் போனே வாங்கிக் கொள்ள மாட்டேன் என்று வழக்கம் போலப் புலம்பிக் கொண்டே இருந்தேன்.அவர்களும் வழக்கம் போல  நமட்டுச் சிரிப்புடன் அதைக் காதில் போட்டுக் கொள்ளாது மோடி கவர்மெண்ட்டின் சாதனைகளையும் செவ்வாய் க்ரஹத்தில் தண்ணீர் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது பற்றியும் விவாதித்துக் கொண்டு வந்தார்கள்.

கடையில் வாங்க வந்தது ஸ்மார்ட் போன் என்றதுமே உபசரிப்பும் பலமாகியது.வித விதமான மாடல்கள் காட்டப் பட்டன.என் கணவரும் மகனும் கடைக் காரரிடம் எனக்குப் புரியாத, போனுடன் தொடர்புடைய சில வார்த்தைகள் சொல்லி ஏதோ கேட்டபடி இருக்க கடைப் பையன் சளைக்காமல் பதில் அளித்துக் கொண்டிருந்தான்.கடைசியில் எனக்கு உகந்தது என என்னைக் கேட்காமல் அவர்களே முடிவெடுத்து  தேர்ந்தெடுத்த ஒரு மாடலைக் காட்டி "பில் போடுப்பா"என்றனர்.அப்போதுதான் நான் திடீரென முழித்துக் கொண்டு,"என்னப்பா எத்தனை ஆகிறது?"என்றேன்."ஜஸ்ட் 11000மா எதுவும் சொல்லிடாதே.கொடுக்க வேண்டியது கொடுத்தாதான் க்வாலிட்டி இருக்கும் .உன் நேரமே எவ்வளவு சந்தோஷமாகப் போறது பாரேன் உனக்கு இஷ்டமானவர்களோட எப்பவும் தொடர்பிலேயே இருக்கலாம்."என்று மகன் கூறியதை தலையை ஆட்டி வேகவேகமாக ஆமோதித்தார் என் கணவர்.ஏனென்றால் அவருக்கு இந்த டீல் சீக்கிரம் முடிந்தால்தான் காலாகாலத்தில் தன்  போனை நோண்டப் போக முடியும்.வீட்டில் நம்முடன் எப்போதும் தொடர்பிலேயே உள்ளவர்களை விட போன் தொடர்பு அதிக சந்தோஷம் தரும் என்ற பேருண்மையை ஸ்மார்ட் போனுடன் சேர்த்தே விற்பனை செய்கிறார்கள்  போலத் தோன்றியது.

அடுத்து போனில் உள்ள அப்ளிகேஷன்சைக் கற்பிக்கும் படலம் தொடங்கியது.மிகுந்த ஆர்வமுடன் மாற்றி மாற்றி ஒரு பாடத்திட்டத்தின் ஒரு மாத பாடத்தை ஒரு நாளில் வகுப்பு எடுப்பது போல என் காதில் ஓதினார்கள்.நானும் நன்கு புரிந்த மாதிரி  பூம் பூம் மாடு போலத் தலையை ஆட்டி வைத்தேன்.மறு நாள் அவசரமாய் வேலைகளை முடித்து விட்டு போனுடன் சவுகரியமான இடம் தேர்ந்தெடுத்து உட்கார்ந்து கொண்டு புது விளையாட்டு பொம்மையை ஆராயும் குழந்தையின் ஆர்வத்துடன் ஒரு விரலால் ஸ்வைப் செய்தேன். போன்  கம் மென்றிருந்தது . பல முறை முயன்று விட்டு , கணவருடைய அலுவலகத்திற்குப் பேசிப் பயனில்லை,மீடிங்கில் இருக்கிறேன் என்ற ஒரே பதில்தான் வரும் என்பதால் பக்கத்து வீட்டு சுபாவிடம் முதல் பாடம் கற்றேன்.அவளே பெரிய மனது பண்ணி வாட்சப் பயன்படுத்தவும் சொல்லித் தந்தாள்.லிஸ்டில் தேடி என் நெருங்கின கல்லூரித் தோழியைப் பிடித்து முதல் செய்தி அனுப்பினேன்.எங்களுக்குள் நடந்த செய்திப் பரிமாற்றம் பின்வருமாறு.

நான் :  உமா,எப்படி இருக்கே?நான் வாட்சப்ல இருக்கேன்.இனி அடிக்கடி பேசலாம்.
உமா: ஏன் இன்னும் ஒரு வருஷம் கழித்து போன் வாங்க வேண்டியதுதானே?சரி சரி க்ரூப்ல உன்னை சேத்துடறேன்.நீ எங்க இருக்கே?என்ன பண்றே?
நான்:...................................
உமா:இன்னும் அதே மாதிரி சோம்பேறியாதான் இருக்கியா?ஏதான கேட்டா எட்டு தடவை யோசிச்சுதான் பதில் சொல்லுவியா?
 நான்:ரொம்ப தாங்க்ஸ் உமா .
(கவனிக்க.இந்த தாங்க்ஸ் அவள்   என்னைக் குழுவில் இணைத்ததற்கு.சோம்பேறி என்ற பட்டம் கொடுத்ததற்கல்ல .)
உமா:என் ஹஸ்பெண்ட் டாக்டர்.உன் கணவர் என்ன பண்றார்?
நான்: ...........................................
உமா:எத்தனை பசங்க?என்ன படிக்கிறாங்க?
நான்: அவங்க லாயர்
(தெரிந்திருக்கும்.இது முந்தைய கேள்விக்கு பதில்)
உமா:நீ வேலை பார்க்கறியா?நான் அஞ்சு வருஷத்திற்கப்புறம்  வேலையை விட்டுட்டேன்.
நான்:ஒரே பையன் டென்த் போறான் .

என்னால் இதற்கு மேல் தாங்க முடியவில்லை.டைப் செய்வதை நிறுத்தி விட்டு போனில் அழைத்தேன்.வள்ளென்று விழுந்தாள்.தோழிகள் தவிர யார் அந்த உரிமை எடுத்துக் கொள்ள இயலும்?
"டைப் பண்றதை நிறுத்தறச்சே பை சொல்லணும்ங்கற பேசிக் கர்டசி கூடத் தெரியாத உனக்கெல்லாம் எதுக்குடி ஸ்மார்ட் போன் ?நீ அப்பப்ப பேசு அதுவே தேவலை வாட்சப் வராதே.தாங்கலை"
அவள் சரியாகத்தான் சொன்னாள் எனத் தோன்றியது.
நீண்ட கடிதங்களிலும்,ஓரளவு இ மெயிலிலும் கூடத் தெரியும் நெருக்கம் இந்தக் குறும் செய்திகளில் இல்லை என்று தோன்றியது.இன்னும் சில நாட்களில் உமாவின் வேகத்திற்கு ஈடு கொடுத்து என்னால் இது போன்ற பரிமாற்றங்கள் செய்து கொள்ள முடியலாம்.ஆனால் முதல் வரியில் கேட்ட கேள்விக்கான பதிலை கடைசி வரிக்கு வருவதற்குள் மறந்து மீண்டும் அதையே கேட்கிறார்கள்.அர்த்தமற்ற நேர விரயம் அல்லவா?தொழில் நுட்பத்திற்கு எதிரி போல என்னை சிலர் பார்ப்பதுண்டு.நான் தொழில் நுட்ப வளர்ச்சி கண்டு மகிழ்ச்சியே அடைகிறேன்.ஆனால் அது இன்னும் உபயோகமான விஷயங்களுக்கு உதவலாமே தவிர ,"நீ எத்தனை மணிக்கு குளித்தாய்?என்ன கலர் உடை அணிந்திருக்கிறாய்?"என்பது போன்ற அல்ப விஷயம் பேச அல்ல.
மொபைல் போனை விட்டு ஒரு நிமிடம் கூட இருக்க இயலாது.தூங்கக் கூட முடியாது என்றால் அதற்கு அடிமையானதாகத்தானே அர்த்தம்?சில மணித் துளிகள் அடிமைப் பட்டதே மூச்சுத் திணற வைத்து விட்டது.நாள்பட்ட அடிமைத் தனம் போதைப் பழக்கத்திற்கு ஒப்பானது.வெளியில் வர முயற்சி தேவை.
ரஞ்ஜனி த்யாகு
MOTHER PROTECTS

சனி, 26 செப்டம்பர், 2015

எது துறவு?


இன்று , ஒரு விஷயம் படித்தேன். "விரும்புவதை விடுவது மட்டும் துறவறம் அல்ல. விரும்பாததை ஏற்றுக் கொள்வதும் துறவறம்தான்".  எனக்கு, அது ஒரு மிக நல்ல செய்தியாக, அடுத்த கட்டுரையின்  துவக்கமாகப் பட்டது. நாம் அனைவரும் துறவிகள்தானோ என்று தோன்றுகிறது. பிறந்த நாள் முதல், விரும்பாத விஷயங்களை எதிர்கொள்ளத் துவங்கி விடுகிறோம்.  அத்தனை நாள் கருவில், எந்த  வேலையும் செய்யாது, சுகமாக, அம்மா மூலம் உடலையும் உயிரையும் வளர்த்துக் கொண்டிருந்த குழந்தை, பால் குடிக்க தன்  சிறு வாயை   அசைத்து  வேலை செய்யத் தொடங்குகிறது. ரொம்பப் பிடித்து அதைச்  செய்யுமா,  இல்லை ஆயாசமாக இருப்பதால்தான் அழுகிறதா?  குழந்தை வளர வளர, அதன்  பிரச்சினைகளும் வளர்கின்றன. நடக்கத் தொடங்கும் வரை , அது தவழ்கிறதே ,எத்தனை கஷ்டம் தெரியுமா?காலை நாள் பூர உதைத்து,  அது செய்யும் உடல் பயிற்சி நாம் செய்தால் எல்லோரும் 50 kg தாஜ்மகால்தான்.இன்னும் கொஞ்சம் ஆழமான விஷயங்களுக்கு நகர்வோம்.

பள்ளி செல்லத் தொடங்கின உடனேயே,  இருமைகள் நிறைந்த உலகினுள், குழந்தை தூக்கி வீசப் படுகிறது.  நன்மையையும் தீமையும் நிரம்பின உலகு. பள்ளிக் கல்வி பற்றிக் கூற முற்படின்,  அது வேறு விவாதம். மதிப்பெண்களால் மட்டுமே ஒரு குழந்தையை எடைபோடும் தவறை நம் பாடத்திட்டம் செய்வதால்,  சுயத்தைத் தொலைத்து,  கடனே என்று கடமை ஆற்றும் நம் செல்வங்கள்! காலை வேளையில், "பள்ளி வாகனம்"என்று எழுதிக் கொண்டு அளவுக்கதிகமாக  மாணவர்களைச்  சுமந்து செல்லும் ஆட்டோக்களை ஒரு நாள் சாலை ஓரம் நின்று உற்றுப் பார்ப்போம். துறவிகள் முகங்களிலும் காண இயலாத ஏதோ ஒன்றை,  நான் அந்த முகங்களில் பார்க்கிறேன்.

வாழ்க்கை நல்லதும் கெட்டதும் சேர்ந்ததே. இளம் வயதில்,  நமக்கு உள்ள நல்ல குணங்கள்,  வயது ஏற ஏற,  போர்க் குணமாவது ஏன் என யோசிப்பது அவசியம். விரும்பின விஷயங்களைத் துறப்பது பெரிய கஷ்டம் இல்லை. பல காரணங்களால் அவை துறக்கப் படலாம். அவற்றில் முதன்மைக் காரணம் விரும்பினது கிடைக்க வாய்ப்பில்லை என்பது.  பொருள்களுக்கு மட்டும் அல்ல. மனித உறவுகளுக்கும் இதே விதிதான்.  நாம் விரும்பும் விஷயங்கள் காலகட்டத்திற்கேற்ப மாறுபடும். ஒரு புது விருப்பம் பழையதின் இடத்தை ஆக்ரமிக்கும் போது,  பழையது தானாகக் காணாமல் போகிறது. நாம் ஒன்றை அல்லது ஒருவரைத் துறக்கிறோம் என்று சொல்வதை விட துறக்கப் படுகிறோம் என்பதே சரி. முதலில் கொஞ்சம் சிரமமாக இருக்கும். ஆனால் பழகிப் போகும்.

ஆனால்,  விரும்பாததை ஏற்றுக் கொள்வது என்று  ஒரு விஷயம் உள்ளது பாருங்கள்,அது வாழ்க்கைப் பாடம்தான். மனதில் துணிவு, நம்பிக்கை,  இறைவனிடம் அல்லது நமக்கு மேற்பட்ட சக்தியிடம் முழுமையான சரணாகதி அடைதல், எல்லா சூழலிலும் ஒளிந்து கொண்டிருக்கும் சிறு நல்லதையாவது தேடிக் காணும் தன்மை, இறைவன் அவரவர் தாங்கும் சக்திக்கு மேற்பட்ட கஷ்டங்களைத் தராத அளவு கருணை கொண்டவன் என்ற உறுதியான எண்ணம், மற்றவர் பார்வையும் நம் பார்வையும் ஒரே போல் இருக்க வேண்டும் என்ற அர்த்தமற்ற எதிர்பார்ப்பு அற்று இருத்தல், அடி வாங்கினால் மறு கன்னத்தைக் காட்டாவிட்டாலும் திருப்பி அடிக்க சமயம் எதிர்பார்த்து மற்றவரைக்  காயப் படுத்தாதிருத்தல், நாம் விரும்பாவிடினும்,  அமைதி ஏற்படும் பொருட்டு  ஒன்றைச்  செய்தால்,  அன்று உலகம் சுற்றுவதை நிறுத்தி விடப் போவதில்லை என்ற தெளிவு ---இது போலப்  பலவும் சாத்தியமானால்தான்,  விரும்பாதவற்றை ஏற்க முடியும்.

எதற்கு விரும்பாததை ஏற்கணும் என்ற கேள்வி மனதில் தங்குவது ஞாயமே. எனக்கும் அது உள்ளது. அதற்கு சரியான பதில் என்னால் கூற முடியவில்லை. ஓரளவு ஒத்துக் கொள்கிறார் போலச்  சொல்கிறேன். இப்போது விரும்பாமல் ஏற்றுக் கொள்ளும் ஒன்று,  எதிர்காலத்தில் மிகவும் நன்மை பயக்கலாம். நம் போன்ற மனிதர்களுக்குத் தொலைநோக்கு கிடையாது.  சிறு வட்டத்திற்குள் இருந்து யோசித்து, நாம் எடுக்கும் முடிவால்,  நீடித்து நன்மை தந்திருக்கக் கூடிய எதையேனும் இழக்க வாய்ப்புண்டு. மேலும்,  குரங்கு போன்ற மனித மனம்,  இன்று விரும்பாததை,  நாளையோ மறுநாளோ விரும்பலாம்.    கேள்விதானே மனசில் நிற்கிறது?  பாரதியார் தன்  வசனகவிதையில், "இவ்வுலகம் இனியது என்று தொடங்கி, சாதல் இனிது" என முடிக்கிறார். நல்லதல்லாத எதையும் அவரால் பார்க்க இயலவில்லை.  ஒரு மராத்தான் ஓடி முடிக்க,  ஒற்றை அடி  முதலில் வைக்கத்தானே வேண்டும்?  எல்லா முயற்சிகளுக்கும் ஒரு ஆரம்பம் வேண்டும். துறவு குறித்த ஆரம்ப பாடத்தை யோசிப்போம்.   விரும்புவதை விலக்கும் துறவியாய் இருப்பதை விட, விரும்பாததை சகித்துக் கொள்ளும் துறவியாக இருக்கலாமே?

ரஞ்ஜனி த்யாகு
MOTHER PROTECTS

வியாழன், 24 செப்டம்பர், 2015

பாரதி என்றொரு மஹா கவி


செப்டெம்பர் மாதம் பாரதியை அந்த மஹா கவியை நினைவு கூராது 25 நாள்களை ஓட்டினால் அது தவறல்லவா?எனவேதான் இந்த அவசர போஸ்ட் .வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடம் ஏது என்று கண்ணதாசன் சொன்னாலும் சிலர் தங்கிவிட்டிருக்கலாமோ என்ற எண்ணம் என்னால் தவிர்க்க முடிவதே இல்லை.உங்களுக்கு எப்படி?ஒரிஜினலான எழுத்து என்று ஒன்று உண்டா அல்லது எழுதும் போது மனதில் எட்டிப் பார்க்கும் பாரதியையும் கண்ணதாசனையும் இன்னும் பிற great souls ஐயும் தான் நம்முடைய வறுமை நிரம்பின சொற்களால் மறுபடி வெளிப் படுத்துகிறோமா ?பாரதியின் ஒவ்வொரு கவிதையையும் ஒரு போஸ்ட்டில் நினைவு கூர்ந்து அது பற்றிப் பேசினால்,நமக்கு இன்னும் எத்தனை பிறவி தேவை பேசி முடிக்க?இன்று என்னைத் தொட்ட கவிதைகளில் ஒரு சில மட்டும் நினைவுகளுக்குத் தீனி போட .

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் ,நாலு வரியில் தற்போது பலர் செய்து கொண்டிருக்கும் motivational talks எல்லாவற்றிற்கும் முன்னோடியானதொரு கவிதை.முழுக் கவிதையைத் தேடித் படிக்கும் சிரமத்தைத் தமிழ் அறிந்த எல்லோரும் மேற்கொள்ள வேண்டும் என்பதால் கவிதையை என் போஸ்ட்டில் repeat செய்ய வேண்டாம் என்று எண்ணுகிறேன்.ஒரு அக்னித் துண்டத்தை காட்டின் மூலையில் வைத்தால் காடு முழுதும் வெந்து போகிறது.தழலின் தன்மையில் சிறியது,பெரியது உண்டா என்று கேட்கிறார்.இதைப் பலவாறாகப் பொருள் படுத்தலாம்.மனதின் ஓரம் தோன்றும் aspiration ஐக் குறிப்பதாக நான் எண்ணுகிறேன்.நம் அனைவருள்ளும் progress க்கான பொறி  உள்ளது.அது உண்மையில் அக்னி அளவு தீவிரத்துடன் இருப்பின் நம்மை முழுதும் ஆக்ரமிக்கும். உயர்த்தும். Desire ம் அத்தன்மையதே.எப்படி aspirations நம்மை ஆக்குமோ அப்படி ஆசை என்ற சிறு பொறியும்" நாம்" எனும் அழகிய வனத்தை நொடியில் அழிக்கும்.இதைத்தான் இன்று எல்லாப் பெரியவர்களும் வேறு மொழியில் சொல்கிறார்கள்.

There is a thin line which separates need and desire.We need great sincerity to  know that.உலக வாழ்வை நாம் தொடங்குவதற்குப் பின்புலத்தில் இருப்பதே ஆசைதான்.ஒரு நிகழ்வு தீவிரமான vibration உண்டாக்கினால் அது ஆசையால் விளைவதே.ஒரு நாளில் சித்தார்த்த புத்தர் ஆக  முடியாது.யோகம் செய்பவர்களுக்குத் தேவைகளும் இருப்பதில்லை. நம் போன்றவர்கள் ஆசைகளையாவது நம் கட்டுப் பாட்டில் வைத்திருப்பது ஒரு தேவை!!இப்படி வேறெங்காவது தாவுவது என் வழக்கம் ஆகிப் போய் விட்டது.அக்னிக் குஞ்சை பாரதி "ஆக்கும் aspiration "என்றாரா "அழிக்கும் ஆசை" என்றாரா அவரே அறிவார்,ஆனால் பொருள் பொதிந்த கவிதை.

நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று நின்னைச் சரணடைந்தேன் என்ற பாடல்.பொன் புகழை மட்டும் விரும்புபவர்கள் கவலை அற்று இருப்பது எப்படி?நான் அப்படித்தான் இருக்கிறேன்.ஆனாலும் என்னைக் கவலை தின்னாது காப்பாற்றுவாயா என்பது  அரற்றுகிறார் போல இல்லை?வேண்டாத எண்ணங்களும் அச்சமும் குடி புகுந்த என் மனதில் நீ புகுந்து அவற்றைக் கொன்று போடு என்கிறார்.எல்லாம் என் செயல் என்று எண்ணும் என் மூட மனதில் வெளிச்சம் தா .அனைத்தும் உன் செயல் என்ற வெளிச்சம் தா என இறைஞ்சுகிறார்.எத்தனையோ துன்பமான,சோர்வான சூழ்நிலையில் இருந்தும் அவை எதுவும் எனக்கில்லை ,ஏன் என்றால் அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட உன்னையல்லவோ சரணடைந்து விட்டேன் என்பது என்ன மாதிரியானதொரு simple and great belief !!கண்ணம்மா என் குலதெய்வம் என்ற பாடல்.நல்லது நாட்டுக தீமையை ஓட்டுக என்பது கடைசி வரி.

செப்டெம்பர் மாதம் என்று தொடங்கியது போஸ்ட்டிற்கு ஒரு தொடக்கம் வேண்டியே அன்றி வேறில்லை.பாரதியார் தொடாத எதையும் தமிழில் எழுதுவது சாத்தியமா தெரியவில்லை.இரண்டு பாடல்களுக்கு மேல் எடுத்துக் கொண்டால் போஸ்ட் நீளும்.ஒரு நாளின் பெரும் பகுதியை நாம் விரும்பினாலும் இல்லை என்றாலும் செய்தே ஆக  வேண்டிய வேலைகள் ஆக்கிரமிக்கின்றன.அப்போது பளு தெரியாமல் இருக்க நினைவுகளைத் துணைக்கழைப்போம் அல்லவா?அந்த நினைவுகளில் ஒரு பாரதியார் பாடல் வந்து உட்காருவது ஒரு புது உற்சாகம் தருகிறது.சந்தோஷங்கள் infectious தானே?அதனால் இந்த பகிர்வு.நாளை பேசலாம்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS