புதன், 27 ஜூலை, 2016

மறதியா தொலைத்த ஞாபகங்களா?


மறக்க வேண்டியவற்றை ஞாபகம் வைத்துக் கொள்ளக் கூடாது.ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியவற்றை மறக்கக் கூடாது.இப்படி கூடும் கூடாது என்பதைத் தாண்டி,நாம் இன்றியமையாதவை என நினைக்கும் விஷயங்கள் மறப்பதில்லை.நம் ஆழ்மனதே வேண்டாம் என்று தள்ளும் விஷயங்கள் மட்டுமே நம்மால் மறக்கப் படுகின்றன.நம் விருப்பத்தின் பேரில் நிகழ்வதே மறதி.காதலிக்கும் போது பிறந்த நாள்,சந்தித்த நாள்,அன்று போட்டிருந்த சல்வார்,காதல் தெரிவித்த தருணம்,சேர்ந்து சாப்பிட்ட உணவகம் என்று வெளிப்பார்வைக்கு,வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அனாவசியமாகத் தெரியும் விஷயங்களை இளைஞர்கள் மறப்பதில்லை.ஆனால் திருமணம் ஆன பின்னர்,இரண்டாவது கல்யாண நாளில் மனைவி இனிப்பு செய்தால் "இன்று என்னம்மா விசேஷம்"என்று கேட்பவர் உண்டு.காதலித்த போது அவளைக் கவர்வது முக்கியம்.கவர்வதற்கு கால்காசு பிரயோசனம் இல்லாத பல ஞாபகத்தில் இருக்க வேண்டும்.கல்யாணம் ஆன பின் நிஜ வாழ்வின் போராட்டங்கள்.ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியதை வைத்துக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் நோ டென்ஷன் .அதன் பெயர் மறதி இல்லை.விரும்பித் தொலைத்துவிட்ட ஞாபகங்கள்.(இந்த விஷயங்களில்,பெண்கள் sincere தான்.கிறிஸ்து பிறப்பதற்கு முன்,பின் என்பது போல்,அவர்கள் திருமணத்திற்கு முன்னும் பின்னும் அவர்களே.இப்போது எல்லாம் மாறிவிட்டது என்ற விவாதம் வேண்டாம்.போஸ்ட் அது பற்றியதல்ல)

இந்தப் போஸ்ட்டிற்குக் கரு தந்தது ஒரு தோழர்.சில மாதங்களுக்குப் பின் அவரை சந்தித்தேன்."அப்பா எப்படி இருக்கிறார்"என்று இரண்டு மாதங்கள் முன்னர்தான் இவ்வுலகை விட்டு நீங்கிய என் தந்தை பற்றி விசாரித்தார்.இதில் என்ன ஆச்சரியம் என்றால்,அவருடையதுதான் நான் receive செய்த condolence மெசேஜ்களில் ஆழமான வார்த்தைகளில் எழுதப்பட்ட ஒன்று.எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.அவருடைய கேள்வி மறதியில் பிறந்தது என்ற சமாதானம் வேறொரு உறவினரால் கூறப் பட்டது.எவ்வாறு இது சாத்தியம் என்று யோசிக்க வைத்தது.

எனக்கு ஆறாம் வகுப்பில் படித்த திருக்குறள் மறக்கவில்லை.கல்லூரியில் கற்ற Fluid mechanics ஞாபகம் இல்லை.என் தோழிக்கு இதுவே மாறி இருக்கலாம்.சிலருக்கு ரெண்டும் அழியாது மனதில் இருக்கலாம்.நாம் எதற்கு,யாருக்கு எத்துணை கவனம் அளிக்கிறோம் என்பது நம் ஞாபக ஏடுகளைப் புரட்டினால் தெரியும்.வயது ஞாபகமறதி ஏற்படுத்தும்.இல்லை என்று சொல்லவில்லை.அது எந்த மாதிரி மறத்தல் தெரியுமா?At a very superficial level . Functional level .இன்று வங்கி செல்ல வேண்டும்,பால் உறை விட வேண்டும்,
அயர்ன் பண்ண எத்தனை துணி கொடுத்தோம், என்று லைசென்ஸ் புதுப்பிக்க வேண்டும் ,tax கட்ட வேண்டிய நாள் எது என்பதெல்லாம் வயதானால்--அடிக்கோடிட்டு சொல்கிறேன்,வயதானால் மறக்க வாய்ப்புண்டு.அதைக் கூட senior citizen பதவியை அடையாதவர் செய்யக் கூடாது.சாப்பிட,டி வி பார்க்க,வாரம் ஒரு நாள் ஹோட்டலில் சாப்பிட,பீரோ வழிந்தாலும் புதுக் துணி,நகை வாங்க மறக்கிறோமா?மற்றதெல்லாம் மட்டும் எப்படி மறக்கும்?Alzheimer 's disease என்று ஒன்று சொல்கிறார்கள்.அது தாக்கப் பட்டதாக மருத்துவர் கூறினால் நம்பலாம்.மருத்துவ சமூகம் beautiful ஆக பெயர் வைத்து விட்டது.உண்மையில் இந்த நோயின் symptoms இல்லாமல் எல்லாவற்றையும் மறப்பதும் வியாதியே.அதற்கு மனத்தை treat பண்ண வேண்டும்.வயதால் சிறிய நிகழ்வுகளை மறப்பவர்களிடம் கேளுங்கள்,தாயாதிகள்,பங்காளிகள் பெயரை சட்  எனக் கூறுவார்கள்.அப்படி என்றால் என்ன பொருள்?எனக்கு எதெல்லாம் இப்போது தேவை இல்லையோ அவற்றை மூளைக்கு அதிக strain கொடுத்து வைத்துக் கொள்ளத் தேவை இல்லை,என்பதுதானே?

மறதி indifference ஐ வெளிப் படுத்துகிறது.நீயும் உன் பற்றின சமாச்சாரமும் எனக்கு எதற்கு என்று மறைமுக வாக்குமூலம் தருகிறது.வேண்டியவற்றை மறத்தல் தவறு.வேண்டாதவற்றை மறத்தல் வரம்.மாறிப் பண்ணினால் குழப்பம்.நாம் ஒவ்வொருவரும் ஒரு தனி உலகில்,மற்றவர் இல்லாத, நுழைய முடியாத அக உலகில் வாழ்கிறோம்.நம் எண்ணங்களால் ஆன உலகம் அது.எதை மறக்கிறோமோ அது நம் எண்ணங்களில் இருந்ததில்லை என்பதையே அது காட்டுகிறது.ஞாபக மடிப்பில் நம் விருப்பத்துடன் செய்த பதிவுகள் மறக்காது.நம்மைத் தொடும் மனிதர்கள்,நிகழ்வுகள்தான் பதிவாகும்.நாமும் எல்லாவற்றையும் மனதில் ஏற்றிக் கொள்வது இயலாது.மற்றவர் அப்படி செய்வார்கள் என்று எண்ணுவதும் அர்த்தமற்றது.ஆனால் மறதி என்ற வார்த்தைக்குப் பதில்,தொலைத்த ஞாபகங்கள் என்று சொல்லிக் கொண்டால் நன்றாக இருக்கும்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

செவ்வாய், 26 ஜூலை, 2016

வாழ்க்கை நீண்டதா,குறுகியதா?

கருவறையில் தொடங்கி கல்லறையில் முடியும் பயணம். தொடக்கம் தெரிந்து முடிவு பற்றி ஏதும் அறிந்து கொள்ள முடியாப்பயணம். பயணத்தை ரசிக்கத் தொடங்கும் முன் இறங்கும் இடம் வரலாம். அனுபவித்து ரசித்துக் கொண்டிருக்கையில் பாதியில் முடியலாம். எப்போது இறங்கும் இடம் வரும் என்று ஆயாசம் வந்த பின் நிதானமாகப் பயணம் முடியலாம். நிம்மதியாகப் பயணப்  பட்டு சரியான நேரத்தில் ஊர் சென்றடையும் ரயில் போல் ,வந்த வேலை முடிந்தது போல் விடை பெறலாம். எப்படி வாழ்வில் இருந்து விடை பெறுகிறோம் என்பது ஏற்கெனவே எழுதப் பட்டு அந்த எழுத்தை தலையில் தாங்கியே ஜனிக்கிறோம் .வினாத்தாள் தெரிந்து விட்டால், பரீக்ஷைக்கு முன் ஏற்படும் குழப்பம்தான் உண்டாகும் எல்லோர் தலை எழுத்தும் முதலிலேயே தெரிந்து விட்டால். வாழ்க்கை என்றால் 100 வருடம் என்பது போல் விதிகள் இல்லையாதலால், தனி நபர் சம்மந்தப் பட்டதுதான் பயண காலம். வாழ்க்கையைப் பிறவிப் பெருங்கடல் என்கிறார் திருவள்ளுவர். நீர்க்குமிழி என்கிறார்கள் தற்போதைய கவிஞர்கள். எது சரி? எப்படி எடுத்துக் கொள்வது அமைதி தரும்?  வாழ்வு நீண்டதோ குறுகியதோ வேறொருவர் சொல்லி நடத்தும்,வேறொருவர்இயக்கும் நாடகம் அல்ல என்பதில் மட்டும் நாமனைவரும் மிகத் தெளிவாகவே இருக்கிறோம்.

நமக்குத் தெரிவது ஒரு வாழ்வுதான். யாரும் சென்ற பிறவியில் எவ்வளவு கஷ்டப் பட்டேன் தெரியுமா என்றோ, என் போன பிறவி மனைவி எவ்வளவு அழகு தெரியுமா என்றோ பேசுகிறார்களா என்ன? எழுதும் போதே தமாஷாக உள்ளது. நம் வாழ்க்கையின் முக்கியமான எத்தனையோ பேரை அருகில் இல்லாத ஒரே காரணத்தால் மனதில் இருந்தும் விலக்கி விடுகிறோம். இதில் போன பிறவி, அடுத்த பிறவி என்றெல்லாம் பேசி என்ன பயன்? இப்போது செய்யும் ஒரு செயல் அடுத்த பிறவியில் பலன் தரும் என்றால் அது புண்ணிய வடிவு கொள்ளப்  போகும் நற்செயல் மட்டுமே. அது கூட மறுபிறவிக் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு.

குலத்தில் இரண்டே பிரிவுகள். இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர், என்பது போல், வாழ்வின் தன்மை இரண்டு வரிகளில். எந்த நல்ல செயல் செய்ய நினைத்தாலும் வாழ்வு குறுகியது, இன்றே செய்து விட வேண்டும் என எண்ணிக் கொள்ளலாம். எந்த தீயசெயல் செய்யும் எண்ணம் வந்தாலும், ஓ, வாழ்வு நீண்டது, இந்தத் தீமை புரிந்தால், நம் ஆயுள் முடியும் முன் நம்மைத் திருப்பி அடிக்கும், எந்த உருவிலாவது தாக்கியே தீரும் என உறுதியாக நம்பலாம். கடன் வாங்குபவருக்கு, தானங்கள் செய்ய நினைப்போருக்கு, குடும்பத்திடம் அன்பு காட்ட விரும்புவோருக்கு, இயற்கையை ரசிப்பவர்களுக்கு, புதிதாய்க் கற்க,படைக்க நினைப்போருக்கு, பகைமையை மறக்க எண்ணுவோருக்கு, இறைவனுக்கு நன்றி செலுத்தி எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என்று பாடிக் களிப்பவருக்கெல்லாம் வாழ்வு சிறிதே. நாளை என்பது இல்லாதது போல் நடந்து கொண்டால் அன்றி,  பல நல்ல செயல்களை ஒத்திப் போடத் தோன்றலாம்.

இன்று கோபுரத்தில் உள்ளோம், நாளை வாழ்வு நம்மைப் புரட்ட வாய்ப்புள்ளது என்ற அடக்கம் தோன்றட்டும். பகைமை பாராட்டத் தோன்றும் போது நீண்ட வாழ்வின் மகிழ்ச்சியை அழிக்கும் அமிலம் அது என எண்ணிக் கொள்வோம். நாளை என்ற ஒன்று உண்டு என்றால்தான்,  சில தவறுகள் தவிர்க்கப் படும். வாழ்வு குறுகியது என்ற பயத்தை விட,  வாழ்வு நீண்டது என்ற  நிம்மதியே  நம்மைப் பல நேரம் நல்வழிப் படுத்துகிறது. வாழ்க்கைப் பயணம் சிறிதானால்,  அவசர அவசரமாக நல்லதெல்லாம் செய்யணும் என்ற பதட்டமும் வருகிறது.ஆனால் பிறவியைப் பெரும்கடலென எண்ணும்  போது,  நிதானமாகத் தீயவைகள்  தவிர்க்கப் படுகின்றன. நல்லது செய்வதை விட, தீயவை விலக்கல் முதற்படி.

வாழ்வில் நமக்கு கிடைத்த அனைத்திற்கும் நாம் பாதுகாவலர்கள்தான். உரிமையாளர்கள் அல்ல. பணத்தில் தொடங்கி எல்லாவற்றிற்கும். அந்த நினைவு வந்தாலே,  தானாக, எங்கு நிதானப் பட வேண்டும், எதற்கு அவசரப்பட வேண்டும் என்பது விளங்கும்.  வாழ்க்கை  எந்த தூரம் போக சீட்டு வாங்க வேண்டும் என்பதை ஆண்டவன் நிர்ணயிக்கும் பயணம். ஏறவும் இறங்கவும் நம்மிடம் சக்தி இல்லாது அவன் கூட்டிச் செல்லும் பயணம்.  ரயில் பயணத்தின் இறுதியில் மூட்டை முடிச்சுடன் இறங்குவோம். வாழ்க்கைப் பயணத்தின் இறுதியில் மூட்டையாவது ஒன்றாவது, ஒட்டுத் துணியும் உருவப் பட்டு பஞ்சபூதங்களில் ஒன்றுடன் ஐக்கியமாகிறோம். நாற்பது வயதில் நீண்ட பயண அனுபவம் பெறலாம். நூறு வயதில்  எதையும் அறிய முயலாது பயணம் முடியலாம். வாழ்க்கை நீண்டதோ குறுகியதோ உற்று நோக்க வேண்டியது. பயணிப்போம்.

ஞாயிறு, 24 ஜூலை, 2016

காற்று

கண்ணால் பார்க்காத,ஆனால் நான் முழுமையாக நம்புகிற இரண்டு இருப்புகள் என்றால்,ஒன்று கடவுள்,மற்றது காற்று.காற்றை ஒரு போஸ்டில் அடைக்க முடியுமா?ஏன் முடியாது?ஒன்பது துவாரம் உள்ள எண் சாண் உடம்பில் சுற்றி வருகிறதே,தப்பிக்க வகை இருந்தும் தப்பிக்க முயல்வதில்லையே ,தன்  போலவே கண்ணிற்குப் புலப்படாத ஆண்டவனின் ஆணை வரும்வரை ஆர்பாட்டம் ஏதும்  இன்றி தன் இருப்பை இயல்பான ஒரு நிகழ்வாக்கி லேசாக இருக்கிறதே. போஸ்ட்டிற்குள் அடங்கி விடேன் என்பது அதன் நெருங்கின தோழியின் அன்புக் கட்டளை.அதற்குக் காது உண்டு.கேட்கும்.

பஞ்ச பூதங்களில் காற்றுடன் ஏனோ நெருக்கம்.தினம் காற்று சம்பந்தப் பட்ட பாட்டு ஒன்று மனக் கதவைத் தட்டும்.காலை கண் விழித்ததும் ஜன்னல் வழி தெரியும் ஆகாசம்,கால் பதிக்கும் நிலம்,உலகில் பெரும்பகுதியை ஆக்ரமித்துக் கொண்டு-- சிம்பிள் ஆகச் சொன்னால் காலைக் கடன்களில் தொடங்கி தேவை படும் நீர்,வயிற்றின் அக்னியைத் தணிக்க நாம் மூட்டும் அடுப்பு நெருப்பு என்று மற்ற நான்கு பூதங்களும் தங்களை வெளிப் படுத்திக் கொள்ளும் போது ஜீவனே அதுதான் என்ற காற்று மட்டும் எப்படி உள்ளது என யோசிக்கிறேன். நாமும் அப்படித்தான் இருத்தல் வேண்டும் அல்லவா? நம் presence மற்றவரால் உணரப் பட வேண்டுமே தவிர உணர்த்த வேண்டி இருப்பின் அந்த வாழ்வு ஒரு மாற்று குறைவே என்று எண்ணம் தோன்றியது.ஆனால் அப்படி உணர்த்த நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் முயற்சியையே வாழ்க்கை என்று அழைத்துக் கொண்டிருக்கிறோம்.ஓரளவு சிந்திக்கத் தெரிந்தது முதல் இதைத்தான் செய்யக் கற்பிக்கப் படுகிறோம்.செய்கிறோம் . தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள முயலாத நபர்கள் எப்போதும் அமைதி தொலைப்பதில்லை.ஏன் நான் மற்றவரை விட உயர்வு?உண்மையில் நான் உயர்வு என்றால் அது காற்றுப் போல் தானாகவல்லவோ வெளிப்பட வேண்டும்!

காற்று உலகத்தில் செய்யும் தொழில் போல் வாழ்வை சற்று யோசிப்போம்.நம் ஒவ்வொருவரின் திறமையும் அளவற்றது.அது நமக்களிக்கப் பட்ட கொடை .இறக்கை முளைத்தது போல் மனம் பறந்து விரியலாம்.என்னென்ன செய்ய இயலுமோ செய்யலாம்.ஆனால் தகுதியை உலகம்தான் நிர்ணயிக்க வேண்டும்.வேடிக்கையாக சொல்வதுண்டு.மனிதன் தன்  சம்மந்தப் பட்ட விஷயங்களுக்கு வக்கீலாகவும் மற்றவர் விஷயங்களுக்கு நீதிபதியாகவும் செயல்படுகிறான் என்று.ரொம்ப உண்மை .நம்மைப் பற்றி, சொல்லிக் கொள்வதெல்லாம் வக்கீல் தன்  கட்சிக்கு வாதாடுவது போலத்தானே? மேலும் மற்றவர் நன்றாய் இருப்பதை உலகம் பொறுப்பதில்லை என்றெல்லாம் கூறுகிறார்கள்.அந்தக் கூற்றுகள் முற்றிலும் உண்மை இல்லை.மனித மனத்தின் விசித்திரங்களில் ஒன்றுதான் திறமைசாலிகள் அதுவும் தன்னை விட திறமைசாலிகளைக் கண்டாலும் காணாதது போலிருப்பது.ஆனாலும் மேன்மையானவை வெளிப்பட மற்ற மனிதர்களின் குறுக்கீடுகள் பெரிய தடைக் கற்கள் இல்லை.

சிறு கதை.நாமறிந்த கதை.தெய்வப் புலவர் திருவள்ளுவர் திருக்குறளை மதுரைத் தமிழ்ச் சங்கம் முன்னர் கொண்டு சென்ற போது மற்ற புலவர்கள் அதைக் கண்டு பொறாமையுற்று எதிர்த்தார்களாம்.திருக்குறளையும் மற்ற புலவர்களின் புத்தகங்களையும் ஒரு தட்டில் ஏற்றியவுடன் திருக்குறள் தவிர மற்ற அனைத்தும் நீருக்குள் விழுந்துவிட்டனவாம்.என்ன அறிகிறோம்?உண்மையில் உயர்ந்த விஷயங்கள் தானே அங்கீகாரம் பெற்றே தீரும்.சரி,காற்று வேலையைத் தொடங்கி விட்டது பார்த்தீர்களா?ஒரு சுற்று சுற்றி விட்டது.

நான் சொல்லும் காற்று,தென்றல்.ப்ராணாயாமம் செய்யும் போது உள்ளும் வெளியும் போகும் காற்று.சுவாசத்தில் இருப்பது.வருடிப் போவது.சத்தம் இன்றி முத்தம் தருவது.சூறாவளியும் காற்றுதான்.அசுரனும் பகவத் சொரூபம் என்பது போல.சூறாவளி இருப்பை வெளியிடும் காற்று.வெளிப் படுத்திக் கொள்ளவே வாழ்பவர் சூறாவளி போன்றோர்.சூறாவளி காற்று அடையும் வரவேற்பைத்தான் அவர்கள் அடையலாம்.சூறாவளி கதவில் மோதும்.தென்றல் போல் வரவேற்பறை வாராது.காற்று சொல்லும் பாடங்கள் இன்னும் ஏராளம். லகுவாக இருத்தல்.ஆரவாரம் அற்று இருத்தல்.அடையாளம் காட்டும் ஆசைகள் அற்று இருத்தல்.தென்றல் உடல் தொடுவது போல் அன்பால் மனம் தொடுதல்.அதைப் பிரயத்தனங்கள் இன்றி இயல்பாய் செய்தல்.இருப்பை விட  இல்லாமையால் இன்னும் அதிகமாக உணரப் படுதல்,இவை முக்கியமானவை.யாராலும் அடக்க முடியாதிருத்தல்,அதாவது கட்டுப் பாடற்று சுதந்திரமாய் இருத்தல் என்பதை நான் முக்கியம் என்ற பிரிவில் அடக்கவில்லை.ரசிக்கத்தக்க என்ற பிரிவில் போட்டுக் கொள்கிறேன்.ஏனென்றால் நான் காற்றை ரசிக்கக் காரணமே அதன் கட்டுப்படாத தன்மைதானே!வேலைகள் அழைக்கின்றன.காற்றுப் போல் அவற்றில் கரைந்து போனால்தான் வாழ்வின் ரிதம் பாதிக்கப் படாது.மீண்டும் சீக்கிரம் சந்திப்போமா ?

ரஞ்ஜனி த்யாகு


MOTHER PROTECTS

வியாழன், 14 ஜூலை, 2016

கண் விற்று வாங்கும் சித்திரங்கள்

'வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்றும் கொள்வாரோ? கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கை கொட்டிச் சிரியாரோ' என்கிறார் பாரதியார். எங்கோ நடப்பதையா பாரதியார் கூறினார்?  இல்லை.  கண்ணை விற்றுச்  சித்திரம் வாங்கும் மனிதர்களையே அதிகம் பார்க்கிறேன். எதை வாங்க எதைக் கொடுக்கலாம்?  வரைமுறை உள்ளதா இல்லையா?  வாழ்வு இறக்கை  கட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. வாகனம் போல வாழ்க்கை ஓடட்டும். பேருந்திற்குள் நாம் உட்கார்ந்து இருக்கிறோமா அல்லது உள்ளேயே ஓடுகிறோமா? ஓடும் வண்டிக்குள் உட்கார்ந்து செய்யும் அமைதியான பயணம் போல் ஏன் வாழ்க்கைப் பயணம் இல்லை?  காலம் நிற்காமல் ஓடும். நம் உடம்பில், வாழ்க்கைச் சூழலில், உலகத்தில், மாற்றங்கள் ஏற்படும். ஆனால் மனது? அதை மட்டும் அப்படியே,பத்திரமாக நிச்சலனமாக ஏன் வைத்துக் கொள்ள முடியாது?

எதையும் தேங்காய் உடைப்பது போல் பேசியே பழக்கப் பட்ட எனக்கு பூடகமாக ரொம்ப நேரம் பேசுவது இயலாது. சொல்லி விடவா,சொல்ல வந்ததை? 'வெளியுலகம் பற்றி நீ என்ன அறிவாய்'  என்று,  மனைவியையும் ஒரு சக ஊழியர் போல மட்டுமே பார்க்கத் தெரிந்த , எங்கேயும் நிதானிக்கவே தெரியாது முழிக்கின்ற,  சற்றுப்  பாவமான  ஆண் நண்பர்கள்,  இன்று மனதில் உட்கார்ந்து மணி அடிக்கிறார்கள். ஓசை தாங்கவில்லை. அதுதான் எழுத்து. நடுத்தர வயது கடந்த பெண்கள்,  தீராது என்று சும்மா இருக்கலாம். குழந்தைகள், அப்பாவைப் பார்த்து, "இந்த மாமா யாரம்மா" என்று கேட்கவில்லை என்று திருப்தி பட்டுக் கொள்ளுங்கள். ஆமாம்,எதற்கு ஓட்டம்?சாப்பாட்டுக்கா, சமூகத்தில் மதிப்பு கிடைக்கும் எனவா, இல்லை சும்மா வங்கி கணக்கில் பணம் உள்ளது என்று பார்த்து மகிழவா,  அல்லது சமூகத்திற்கு ஏதோ செய்கிறோம் என்ற எண்ணமா, இல்லை எப்போதும் திருப்தி அடையாமல் பேயாட்டம் ஆடும் ஈகோவை திருப்தி படுத்தும் முயற்சியா,  எதற்கு ஓடுகிறோம் என்றாவது தெரியுமா உங்களுக்கு? யாரோ துரத்துவது போலல்லவா ஓடுகிறீர்கள்!  இளமையில் ஓடுவதாவது தேவலை. முதுமையில்? கடைசி வரை ஓடியாக வேண்டும் என்ற விதியுடன் பிறந்தவர்கள்,  இதில் அடங்க மாட்டார்கள். அவர்களுக்காக,அவர்கள் உடல் நலத்துக்காக, குடும்பங்களுக்காகப்  பிரார்த்திக்கலாம்.  விதி வசப் பட்டு ஓடலாம். ஆசையால் அலைக்கழிக்கப் பட்டு ஓடக்  கூடாதுதான்.

கண் விற்றுச்  சித்திரம் வாங்கத் தேவை என்ன?  அதற்குப்  பதில், அந்தச் சித்திரத்தைப் பார்க்கும் ஆசையைத் தியாகம் செய்யும்  மனோதிடம் வளர்த்துக் கொள்ளலாம். ஆனால்,  உலக ஆசைகள் வசப் பட்ட  மனதுக்கு,  அந்த மனபலம் இல்லை. சந்தேகம் கொண்ட மனம் அது. யோசிக்காது சித்திரம் வாங்கும். அதற்கு முட்டாள் தனமாய்க் கண்ணையே விலை பேசும். என்னுடன் பழகிக் கொண்டிருக்கும்,பழக்கம் இல்லாதிருக்கும் எல்லா ஆண்களுக்கும் சொல்கிறேன். தயவுபண்ணிக்  காது கொடுங்கள். முதுமையில் சித்திரங்கள் பார்ப்பது பேராசை.  கண் இருப்பது தேவை. குடும்பம் கண். அதன் சந்தோஷங்களைப்  பின் தள்ளி,  நீங்கள் அடையும் அதிகப் பணமும் பட்டமும் வெறும் அழியும் சித்திரங்கள். 

எவ்வளவு உண்மை. எளிமையாக எடுத்துக் கொள்ளலாமே? பிரபஞ்சத்தின் சிறு துளி நாம்.  பெரிய வருத்தங்கள் ,  இழப்புகள் என நாம்  நினைப்பவை எல்லாம் கூட, ஒரு குழந்தைக்கு பொம்மை உடைந்தால் ஏற்படும் இழப்பு போலத்தான்.  நகர்ந்து கொண்டே இருக்கும் மனிதன்,  வழியில் எதிர்கொள்ளும் நிகழ்வுகளில்,  எதற்கு எவ்வளவு முக்கியத்துவம் தரலாம்? ஒரு தொலைநோக்கு வேண்டாம்? நாம் எதையும் அறிய முடியாதுதான். மறுபடி மறுபடி நினைவுறுத்திக் கொள்வோம். எதிர்காலம் மறைபொருள்தான். ஆனால் எதிர்காலத்திலும் கதிரவன் கிழக்கிலேயே உதிப்பான். சரிதானே?  எண்பது வயதிலும் மனைவி அவள்தான். ஆனால், தொழில்முறை உறவுகள் முதுமையில் நிற்கும். அல்லது குறையும். நிதானப் படுங்கள் . சித்திரம் எழுத சுவர் வேண்டும். அதைக் காணக்  கண் வேண்டும். எவ்வளவு சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல,  கண்டும் காணாது  இருக்கும் ஆண்களைப்  பொறுத்துக்  கொண்டு நேசிக்கப்  பரந்த மனம் வேண்டும். ' இந்த எழுத்து என்ன சாதிக்கும்?'  என்ற தோல்வி மனப்பான்மை இருப்பினும்,  தொடரக்  கடவுள் எனக்கு அருள வேண்டும்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

சனி, 18 ஜூன், 2016

மாறும் நெஞ்சங்கள்

இன்னோரம்மாக்கள் 

ஸன்யாசாஸ்ரமம் க்ருஹஸ்தாஸ்ரமம் என்ற இரண்டு நிலை தவிர நடுவில் ஓர் நிலை உண்டு.திருமண பந்தத்தை வெறுத்து ஒதுக்குவோர் அல்லது ஏதோ காரணத்தால் தனி வாழ்வை மேற்கொண்டவர்கள்.இவர்கள் ஆண்களிலும் உண்டு.பெண்களிலும் உண்டு.நம் சமூகம் வழக்கம் போல இவர்களிலும் பெண்களுக்குத் தரும் அழுத்தங்கள் அதிகம். திருமணமே உள்ளே வருவோர் தப்பித்துக் கொள்ளவும் வெளியே இருப்பவர் உள்ளே வரவும் விரும்பும் ஒரு மாயையான விஷயம். என்னுடன் நெருங்கிய உறவுகளில் இது போன்ற ஒரு வாழ்வைத் தேர்ந்து எடுத்த பெண்களின் மன ஓட்டம் பற்றின ஒரு விவாதமே இது.ரத்தம் சூடாக உள்ள போது இருக்கும் மன நிலை முதுமையில் மாறி விடுகிறது. அனுபவிக்கும் போதுதான் புரிதல் ஏற்படும் பொதுவாக. ஆனால் நமக்கு முன்னால் வாழ்ந்தவர்களின் வாழ்வைக்  கவனிப்பது விலகி இருப்பதின் அவசியத்தைக் கற்றுத் தரும்.குடும்பிகள் என்று தனி அந்தஸ்து பெற்று விட்டதாய் நினைப்பவர்களும் விலகி இருப்பதே நலம்.

தன் சுகதுக்கங்களை இரண்டாம் பட்சமாக்கி அக்கா,தங்கை,அண்ணன்,தம்பி குடும்பத்துடன் தங்களை முழுமையாக இணைத்துக் கொண்டு தியாக வாழ்வு வாழ்பவர்கள் எந்தெந்த காலகட்டத்தில் எப்படி நடத்தப்  படுகிறார்கள்?இவர்களை இந்தக் கட்டுரையில் 'இன்னூரம்மா 'என்று நாமகரணம் சூட்டிக் கொள்கிறேன்.அந்த வீட்டுக் குழந்தைகள் தங்கள் அம்மாவிற்கு இணையாகக் கொள்ளும் நபர் என்று பொருள்.சிறிய வயதில் குடும்ப பாரம் சுமக்கத் தொடங்கும் ஆண்கள்,பெண்கள் இருபாலருக்கும் இந்நூரம்மாக்கள் தெய்வம் போலத்தான் தோன்றுகிறார்கள்.இளம் கணவன் மனைவிக்கு ஒரு பாலமாய்,அவர்கள் விஷமக்  குழந்தைகளுக்கு நல்வழி காட்டும் ஆசானாய், அந்தக் குடும்பத்திற்கு என்ன பிரச்சினை என்றாலும் தோள்  கொடுக்கும் தேவதையாய் ,தேவைப் பட்டால் பொருளாதார உதவியும் செய்ய ஓடி வரும் காமதேனுவாய் அவர்கள் எடுக்கும் அவதாரங்கள் நிறைய.அவற்றை - அந்த உதவிகளை ,சார்ந்திருக்கும் குடும்பம் மதிக்கவே செய்கிறது.இல்லை என்று சொல்லவே மாட்டேன்.பல வீடுகளில் அவர்களுக்குத் தரப் படும் கௌரவம் அலாதியானது.நூறு சதவிகிதம் உண்மையும் கூட.ஆனால்--தள்ளி நிற்க வேண்டும்.மனது முழுக்க அன்பிருக்கலாம்.குழைவு கூடாது.ஏமாற்றம் அடையவே அடையாத எதிர்பார்ப்பு என ஒன்றிருந்தாலொழிய அதை வைத்துக் கொள்ளக் கூடாது.அப்படி எதுவும் எனக்குத் தெரிந்து இல்லை.முக்கியமான இன்னொன்று.சுய மதிப்பீடு.கொடுப்பதும் பெறுவதும் சமமாக நிகழ்ந்துள்ளது என்ற புரிதல்.கொடுத்தது அதிகம் என்று எண்ணிக் கொண்டால் கர்வம் வரும்;நான் இல்லை எனில் இவர்கள் நிலை என்ன ஆகி இருக்கும் என்ற ஆணவம் வரும்;சுயபச்சாதாபம் வரும்.நான் மெழுகுவர்த்தி,கருவேப்பிலைக் கொத்து என்ற வசனங்கள் தோன்றும்.எடுத்துக் கொண்டது அதிகமோ என்று தோன்ற ஆரம்பித்தால் இன்னும் மோசம்.பயம் வரும்.இவர்கள் இல்லையேல் என்ன ஆகுமோ என்ற பீதி வரும்.கண்ணுக்குத் தெரியாத மாய சங்கிலிகள் பிணைக்க ஆரம்பிக்கும்.கடன்பட்டவர் நெஞ்சக்  கலக்கம் நான் கூற வேண்டுமா என்ன?கம்பன் ,ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியைப் பார்த்துக் கலங்கும் ராவணனை,கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்கிறார்.கடன் அவ்வளவு கொடிது.பொருள் கடன் மட்டும் இல்லை.கடன் பட்டுள்ளோமோ என்ற எண்ணமும்தான்.பளிச் என்று கூறவா?இந்நூரம்மாக்கள் ஒரு குடும்பத்திற்கு ஆக்சிஜனும் இல்லை.கறிவேப்பிலையும் இல்லை.இயல்பாய் எடுத்துக் கொண்டால் மன ஆரவாரமும் இல்லை.

இனி போஸ்ட் தலைப்பிற்கு நீதி வழங்கி விடலாமா?அறுபது வயது வரை பெரிய பிரச்சினைகள் ,மாற்றங்கள் இல்லை,இவர்களுக்கு.இந்நூரம்மாவின் வயது அறுபது தாண்டும் நேரம் வீட்டுக் குழந்தைகள் கல்யாணம் நடந்து விடுகிறது.அந்த வீட்டின் பெரிய தம்பதியினருக்குத் தனிமை கிடைக்கிறது.அழுத்தங்கள் குறைய ஆரம்பிக்கின்றன.ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முன் இல்லாத அளவு நேரம் கிடைக்கிறது.முதுமை அவர்களையும் எட்டிப் பார்க்கிறது.சிறு உடல் உபாதைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.நேற்று வரை,பெற்றோரையும் மனைவியையும் balance பண்ணத் தெரியாது,திண்டாடி,இந்த மட்டில் நம் மனைவியையும் குழந்தைகளையும் ஒருத்தி கவனித்துக் கொள்கிறாளே என்று நிம்மதி அடைந்திருந்த கணவன்மார்கள்,பெற்றோரை நல்லபடி அனுப்பி வைத்து விட்டு,மனைவியிடம் திடீர்க் கரிசனம் காட்டத்  தொடங்குகிறார்கள். ஓய்வு பெற்றாயிற்று.வேறு பெரிய வேலைகள் இல்லை.ஹாலில் உட்கார்ந்து டி வி  பார்த்துக் கொண்டே சாப்பிட்டு மனைவியை நாலு தோசை சாப்பிடுவதற்குள் நாற்பது தடவை சமையல் அறைக்கும் ஹாலுக்கும்  நடக்க வைத்ததை எல்லாம் பண்ண அவர்களுக்குத் தேவை இல்லை.ஒழுங்காக சாப்பாட்டு அறை வந்து சாப்பிடுவார்கள்.முடிந்தால் ஏதேனும் உதவியும் செய்வார்கள்.மனைவிக்கு மாத்திரை எடுத்துத் தருவார்கள்.நேற்று வரை,தான் வள் என்று விழுந்த போதெல்லாம் கண்ணைக் கசக்கின அல்லது மௌனப் போர் நடத்தின மனைவியை சமாளிக்க உதவின இந்நூரம்மா இரண்டாவது இடம் நோக்கி நகர்த்தப் படுகிறாள் .

இவர்களையாவது ஒரு பக்கம் சேர்த்துக் கொள்ளலாம்.கல்யாணம் ஆன பெண்களை மட்டும் நம்பவே கூடாது.கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் தியரிதான் அவர்களுக்கு.எனக்கும் என் புருஷனுக்கும் நடுவில் இவள் யார் என்று எப்போது கேட்பார்கள் என்று சொல்லவே முடியாது.மேலும் சுலபமாகத் திருப்தி அடையக்  கூடிய பேதமை உணர்வுடன் அல்லவா பெண்கள் இயல்பு படைக்கப் பட்டுள்ளது!! கணவனுடைய சிறு கரிசனங்கள் அவர்களை உணர்வுப் பிழம்புகள் ஆக்கி விடும்.உணர்ச்சி மேலோங்கிய நிலையில் ஞாயங்களுக்கு முதல் இடம் இல்லை.சிறு வயதில் சாதுவாக இருந்தவர்கள் தான் ஒரு மாமியார்,பாட்டி என்ற பதவி அடைவதை ஒரு கௌரவம் போல் எண்ணி,ஒரு மிதப்பில் செயல்பட ஆரம்பிக்கிறார்கள்.தன்  கணவன் மட்டும் இன்றி,தன்  மருமகளோ அல்லது பேரனோ இந்நூரம்மாவிற்கு தன்னைவிட சற்று அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது கூட அவர்களைக் கடுமையாய்ப் பாதிக்கிறது.பேச்சின் தன்மை மாற்றம் காண்கிறது.

வீட்டின் குழந்தைகள் அடுத்தது.இளம் வயதில் இந்நூரம்மாக்களின் கழுத்தைக் கட்டிக்கொண்டு தொங்கி இருப்பார்கள்.தங்கள் அம்மாக்களுடன் சிறு விஷயங்களுக்கெல்லாம் பழி சண்டை போட்டிருப்பார்கள்.ஒரு buffer ஆக இந்நூரம்மாக்களை நினைத்திருந்திருப்பார்கள்.ஒரு கல்யாணம் ஆனால் எல்லாம் தலைகீழ்.அவர்கள் புக்ககம் போனவுடன் அம்மா பாசம் பொங்கி வழிய ஆரம்பிக்கும்.என் அம்மா எப்படியெல்லாம் கஷ்டப் பட்டாள் .உனக்கு வேறு பொறுப்புகள் இல்லை.என் பொறுப்பை சுமந்தாய்,என்ற ரீதியில் பேச ஆரம்பிக்கிறார்கள்.இதை எல்லாம் கற்பனையில் கண்டு எழுதவில்லை
.சுமார் பத்து குடும்பங்களையாவது   பார்த்து விட்டு எழுதுகிறேன்.இந்நூரம்மாக்கள் பற்றி கரிசனத்துடன் நினைக்கும் ஒரேயொரு குடும்பத்தைக் கூட சந்திக்காததால் எழுதுகிறேன்.அதனால் அவர்களுக்கு ஒரு செய்தி சொல்ல விரும்பி எழுதுகிறேன்.

மாறும் நெஞ்சங்களைக் கட்டாயம் தரிசிப்பீர்கள்.முதலில் இருந்தே தெளிவாக இருங்கள்.அன்பாக இருக்க வேண்டாம் என அர்த்தம் பண்ணிக்க கொள்ள வேண்டாம்.அரவணைக்கும் அன்பு மட்டும் செலுத்த நம் எல்லோருக்கும் அனுமதி உண்டு.அதே போல் லகானிடப் பட்ட குதிரை போல் ஓட அவசியம் இல்லை. சாதாரணமாக , சக்திக்கு உட்பட்டு செய்யக் கூடியதை எல்லாம் அமைதியாக செய்து கொண்டிருத்தல் போதுமானது. WE SHOULD NOT STRETCH OURSELVES BEYOND A LIMIT.பின்னால் மனிதர்கள் வேறு  முகம் காட்டினால்  "நாம் என்ன இழந்து விட்டோம்?நம்மைத் தொலைத்து ஒன்றும் செய்யவில்லையே " என ஆறுதல் அடைய முடியும். இல்லை என்றால் என் வீட்டு இந்நூரம்மா (யார் என சொல்ல மாட்டேன்) போல் மனம் கோழையாகும்.தேவை இல்லை.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS 

மஞ்சுளா ரமேஷின் சினேகிதி நவம்பர் 2016 issue ல் வெளிவந்துள்ள கட்டுரை 

ஞாயிறு, 12 ஜூன், 2016

மறுபடியும்


பல நாள்களுக்குப் பின் இந்த சந்திப்பு.ஒவ்வொரு வாழ்விலும் ஏதேனும் ஒரு விஷயம் மற்றெல்லாவற்றையும் விட அதிக முக்கியத்துவம் பெறுகிறது. தனி மனித குணங்களின் படி அந்த மையப்புள்ளி ஒவ்வொருவருக்கும் ஒன்று.எனக்கு அது என் பெற்றோரோ என நினைக்கிறேன். சென்ற வாரம் என் தம்பி என் வயதான பெற்றோரை இங்கு கொண்டு விட்டு விட்டு மூன்று நாள்கள் வெளியூர் சென்றான்.Shakespeare என்ற தீர்க்க தரிசி சொன்ன second childhood ன் நிதர்சனம் ஏற்படுத்தின தாக்கம் எழுத்தில் வடிக்க நான் அவர் போல human mind ஐப் படித்த ஒரு ஜீவன் ஆனால்தான் சாத்தியம்.இதை எழுதத் தொடங்கின போது இருந்த என் அப்பா இன்று இல்லை. என்னால் அதைத் தாங்க முடியவில்லை.  .மறுபிறவி,  நல்ல கதி ,அமைதியான மரணம் ,யாருக்கும் தொல்லை தராது மறைந்த தூய ஆன்மா, இன்னும் இருந்திருந்தால் அவர் அடைந்திருக்கக் கூடிய கஷ்டங்கள், நாம் எல்லாரும் ஒரு நாள் இதே போல மரணிப்போம் என்பது போன்ற பல உண்மையான ஆறுதல் வார்த்தைகளைக் கடந்த நான்கு நாள்களாய்க் கேட்கிறேன்.அவையனைத்தையும் தாண்டி ஒரு பெருவலி நிற்கிறது. அது நான் மறையும் போதுதான் மறையும். உப்பும் நீரும் சேரச் சேர வலிகள் மறையும் என்ற பொய்யை நான் நம்பவில்லை.நிரந்தரப் பிரிவுகள் வடுக்கள்தான்.வடுக்கள் காலம் கடந்து வலிப்பதில்லை.ஆனால் தங்கி விடுகின்றனதானே?மறுபிறவி எனக்குத் தெரியாது.நம்புகிறேன். அப்படி ஒன்று உண்டென்று.ஆனால் அப்பா என்றால் எனக்கு என் அப்பாதான்.அம்மா என் அம்மாதான்.பட்டினத்தார் பெற்ற ஞானம் சித்தித்தால் அன்றி இது எத்தனையாவது கர்ப்ப வாசம் என்றெல்லாம் பேசுவது என் வரையில் சாத்தியம் இல்லை. என்னை நானே உற்று நோக்கிக் கொள்கிறேன்.அன்று வந்து இரங்கல் தெரிவித்த அனைவரையும் கூட நினைத்துப் பார்க்கிறேன். ஒரு சிலையின் ஒரு பகுதி உடைந்து போனால் அது முழு சிலையா? அது போல் ஏதோ ஒரு சந்தோஷம் நீங்கி விட்டதே.என்னை விட்டு விடலாம். காற்றாகிப் போய் என் மனதில் ஒரு நிரந்தர வெற்றிடம் உண்டாக்கிய என் அப்பாவையும் விட்டு விடலாம். ஆனால் அம்மா....என்ன பண்ணட்டும்?எப்படி வெளி வருவாள்!

நடு இரவில் என் தங்கை அப்பாவின் ஒரு புகைப்படம் அனுப்பி இருந்தாள் காலை அதைத்தான் முதலில் பார்த்தேன். எனக்கு photos பார்ப்பது பிடிப்பதில்லை.The memories haunt me.பழைய சம்ப்ரதாயங்களில் எல்லாம் அர்த்தம் உள்ளதாய்க் கூறுகிறார்கள்.நான் வந்த வழியும் வளர்ந்த முறையும் எனக்கு அந்த நம்பிக்கையைத் தந்தாலும் எனக்கு எதுவும் பிடிக்கவில்லை. இருக்கும் போது செய்யாத எதையும் இறந்த பின் செய்வது போலித்தனம் போல் தோன்றுகிறது.ஆனால் இந்த வாக்கியம் உலகத்தை உற்று நோக்கிச் சொல்வது.  என் அப்பா சிங்கராஜா போலத்தான் வாழ்ந்தார்.மறைந்தார்.என்  தம்பி போல மகனை அடைந்தது அவர் வாங்கி வந்த வரம்.Mutual belief பற்றி நினைக்கிறேன்.ஒரு நாளும் தன் மகன் பற்றி அப்பா எந்த சந்தேகமும் கொண்டதில்லை.அவரைப் பொறுத்த மட்டில் அவன் அவர் தோளில் சவாரி செய்த குட்டி நாராயணனே.பெற்றோரைக் கடைசி வரை பேணி ஆக வேண்டும். ஜீவனுடன் உள்ள பெற்றோர் தராத வாழ்த்தை ஈமக் கடன்களைக் கடனே என ஆற்றும் மகனுக்கு மறைந்த ஆன்மா தரும் என்று விழுந்து விழுந்து லஷங்கள் செலவழித்து காரியம் செய்கிறார்கள். பயம். பயம் தவிர வேறில்லை.ராமதீர்த்தம் என்ற பெயர் கொண்ட அந்த இடத்தில் ஒரு industry யே இயங்குகிறது. மகத்தான சேவை.அதை நடத்துபவர்களுடையது.ஆனால் ஸ்ரத்தையுடன் செய்வது ஸ்ராத்தம்.அங்கு காரியம் செய்ய வருபவர்கள் அமைதி காக்க வேண்டாமா?குறை சொல்வது நோக்கம் அல்ல.காத்திருக்கும் நேரம் கவனித்தவை.மௌனம் காக்க வேண்டியோர் ஓயாது தப்பு தப்பாய் பேசுவது கேட்க நேர்கிறது.இறுதிப் பயணத்துக்கு ஒரு ஜீவனை அனுப்பி விட்டு அவர் வாழ்க்கை பற்றி என்ன postmortem வேண்டிக்கிடக்கு.இருக்கும் போது அந்த ஜீவனை லட்சியமே செய்யாதவர்கள் இறந்த பின் வந்தென்ன வாராது இருந்தால் என்ன. இருப்பவர்களைக் கொண்டாடினால் அந்த உயிர் மகிழும்.உயிரும் உடலும் பிரிந்த பிறகு எதற்கு கரிசனம்.உயிருடன் உள்ள ஒருவரிடம் சரியான படி நடந்து கொள்ளாத யாரும் தயவுசெய்து அவர் இல்லாது போனபின் அழுது அனாவசியமாய் நேரம் செலவழிக்காதீர்களேன்.

நடுவில் மறுபடி இடைவெளி.அதனால் என்ன ?இன்னும் எண்ணங்கள். வாழ்வின் நிதர்சனங்களை அசை போட உதவிய நாள்கள். ரத்த சம்பந்தமோ மற்ற சம்பந்தமோ நம் இன்பங்களையும் சரி துன்பங்களையும் சரி நம்மால் மட்டுமே உணர முடியும்.ஒவ்வொருவரின் பயணமும் தனியானது. நம் வலியை மற்றொருவர் தரும் ஆறுதல் குறைக்கும் என்று நினைத்தால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.சந்தோஷம் வருத்தம் இரண்டையும் அப்பட்டமாக  எதிர்நோக்குவோம்.பெரும்பாலான நேரங்கள் நாம் நம்முடன் பேச வேண்டும்.லூசு என்று உலகம் நினைக்கலாம்.கவலை தேவையில்லை.இந்த மாதிரி சமயங்களில் கூடத் தன்னிலை இழக்கலாகாது.அழக் கூடக் கூடாது என்ற பொருளில்லை.மற்றவர் தோளில் சாய்ந்து அழாதீர்கள்.ஏற்கெனவே துன்பம் சுமந்த மனது.அவர்கள் நம்மைக் கீழே போட்டால் அடி அதிகமாகப் படும்.Normal நாள்களில் அடி வாங்குவது தேவலை.மனம் வருத்தத்தில் இருக்கும் நேரம் சின்னதாய் யாராவது தட்டினால் கூட வலிக்கும்.வம்பு வேண்டாமே?

இது வரை ஒரு பக்கப் பார்வை.அந்த மற்றொரு பிரிவினர் பற்றிப் பேசாவிட்டால் வேதாளம் விக்ரமாதித்தனுக்குச் சொன்னது போல் என் தலை வெடித்துவிடும்.ஆறுதல் தருபவர்கள் உண்மையாக இருத்தல் வேண்டும்.முடியாத போது சும்மா இருப்பது இன்னும் மேல்.உலகத்தில் உள்ளதைத்தானே சொல்கிறேன் என வேண்டாத அல்லது வருத்தத்தில் இருப்பவர்களைக் கலங்க வைப்பது போன்ற விஷயங்கள் பேசாதிருந்தால் புண்ணியமாகப் போகும்.என் அப்பா மறைந்த தினம் சிலர் என் அம்மாவைப் பார்க்காது போயிருக்கலாம் என்று தோன்றியது.இன்னொன்று.உண்மை பேச வேண்டும்.உண்மைகள் எல்லாவற்றையும் பேசித்தான் தீர வேண்டும் என அவசியம் இல்லை.யார் சொல்லியாவது நாம் கேட்கிறோமா?பின் மற்றவர் விஷயத்தில் தலையிட மட்டும் நாம் யார்?அவரவர் தன்னை மட்டும் சரியாகப் பார்த்துக் கொண்டால் போதாதோ?நாட்டாண்மை பண்ண என்று கிராமங்களில் தனியாக ஒருவர் இருப்பார்.தடி எடுத்தோர் தண்டைக் காரர் ஆவது எங்கனம்?நம்மிடம் ஒரு விஷயம் முன் வைக்கப் பட்டுக் கருத்துக் கேட்கப் பட்டால் ஒழிய அதில் ஏன் தலையிட வேண்டும்?

எளிமையாக வாழ்வதைத் தொலைத்து விட்டோம்.சுயநலம் போல் தெரிந்தாலும் நான் கவலைப் படவில்லை.தன்னைப் பார்த்துக் கொள்வதுதான் முக்கியம்.ஏதும் மாற்றம் மற்றவர் கொண்டு வந்து நம்மை நிம்மதியாக்குவார்கள் என்பது பொய்.நமக்கு அமைதியை இறைவன் தர முடியும்.நாமே உருவாக்கிக் கொள்ள முடியும்.பேச்சும் இந்த மாதிரி நேரங்களில் பெரும் பங்கு வகிக்கிறது.வருத்தத்தில் உள்ளவர்கள் அதை ஒரு privilege போல எடுத்துக் கொண்டு,"நான் வருந்துகிறேன் . இப்போது என்ன பேசினாலும் தப்பாக யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது.அல்லது மாட்டார்கள்"என்று ஒரு கணக்குப் போடுகிறோம்.அது மஹா தவறு .புரிந்து கொண்டேன்.அதே நாணயத்தின் மற்றொரு பக்கம் பார்க்கிறேன்.இழப்பை சந்தித்தவர்களின் நெருங்கிய மற்ற உறவுகள் சற்று அதிகப் புரிதலுடன் நடந்து கொள்ளுங்கள்.கொடுப்பது வேறு உருவில் திரும்ப வரும்;கொடுப்பதே திரும்ப வரும்.அதுதான் நியதி.அப்படி என்றால் ஒருவருக்குத் தேவைப் படும் போது ஆறுதல் தரும் சக்தி உங்களுக்கு இருப்பதாய் அவர் நினைக்கும் பட்சத்தில் தந்து விட்டுப் போங்களேன்.காசா பணமா?

இன்று போய் அம்மாவுடன் சேர்ந்து அப்பாவுடைய உடைமைகளை இடம் மாற்றும் வேலை செய்து வந்தேன். அப்பாவின் வாசனை சுமந்த சட்டைகள் ,அப்பா காலம் முழுவதும் உபயோகப் படுத்தின பட்டை டம்ளர் ,ஹோமியோபதி புத்தகங்கள் ,குளிகைகள், அடிக் கோடிட்டு பல முறை படித்த அன்னை புத்தகங்கள் எல்லாம் ஏதோ விழுந்து விட்ட பேரரசின் நினைவுச் சின்னங்கள் போல மனசு தொட்டது.நான் எப்படி இருக்க வேண்டும்.எது சரி?அப்பா மறைந்த முதல் 15 நாள்கள் யாருடனும் பேச வேண்டும் போலத் தோன்றவில்லை. என் தோழர்கள் கேட்டனர் , 'அப்பா மறைவு வாழ்வின் நிலையாமையை உனக்குக் கற்றுத் தந்ததா ,அதுதான் மௌனமா' என....யோசித்தேன்.உண்மையில் நிலையாமையை விட முக்கியமாய் வேறொன்றைக் கற்றுத் தந்து போனார் அப்பா.என்ன தெரியுமா ? இருப்பவர்கள் எவ்வளவு முக்கியம்  என்று.நீர்க்குமிழி போன்ற வாழ்வில் எதையெல்லாம் தர முடியுமமோ இன்று இப்போது தந்து விடு. எப்ப வேண்டுமானாலும் குமிழி உடையும் .பணமோ, பொருளோ, அன்போ ,நேரமோ ,ஆதரவோ, கவனமோ, உதவியோ எதுவானாலும் உடனே தா. எதற்கு நேரம் கடத்துகிறாய் ? என் பெற்றோர் இங்கு வந்து தங்கிய நேரம் என் உடல் நிலை சரியில்லை.அதைத் தாண்டி அம்மா அப்பாவைக் குழந்தைகள் போல் கவனித்துக் கொண்ட த்ருப்தி ,என் மனதைச் சற்று சாந்தமாக்குகிறது.அப்பா மறைவு சோகம்தான்.ஆனால் அது பாடம் தந்தது.

நல்லவை கெட்டவை வீடுகளில் நடக்கும் போது விவாதங்கள் தவிர்க்க இயலாதவை.கூப்பிட்டால் மட்டும் கலந்து கொண்டு நடப்பவைகள் அனைத்தையும் பார்வையாளராய் கவனிப்போம். குரல் உயர்த்துவது அசிங்கம்.எப்போதுமே.அடித்துக் கொள்வதற்கு சமமான வன்முறை, பெரிய குரலில் பேசுவது.பொருள்கள் மேல் கோபம் காட்டுவது எல்லாம்.பிரசவ வைராக்கியம்,ஸ்மசான வைராக்கியங்கள் ஏற்படுகின்றன.தொடர்வதற்கு முயற்சி தேவைதான்.பாரதியார் ஆத்மஜயம் என்ற பாட்டில் கூறுகிறார்,"கண்ணில் தெரியும் பொருளைக் கை கவர்வது சாத்தியம் என்றால் மண்ணில் தெரியும் வானம் நம் வசப்படலாகாதோ"என்று.புலனடக்கம் எல்லா மேன்மையும் தரும் என்று உணர்ந்த பின்னரும் புலன்களை வெற்றி கொள்ள வேண்டாமா என்கிறார்.முழுமையாகப் பண்ணாத ஒன்றை எழுத,கை கூசுகிறது.கை கூப்பி இறைவனை அழைக்கத் தோன்றுகிறது.ஆனால் ஒவ்வொரு நொடியும் உண்மையாக இருத்தல் போதும்.உண்மைதான் அமைதி தரும்.உண்மையும் அமைதியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.ஒன்று உள்ள இடத்தில் மற்றது இருந்தே தீரும்.அதனால்தான் என் அப்பாவின் இறுதி நாள்கள்,இறுதி யாத்திரை எல்லாம் சுகமாக அமைந்ததாய்க் கருதுகிறேன்.அதையே விழைகிறேன்.புலனடக்கம் பயில வேண்டுமானால் விடாமுயற்சி தேவை.ஆனால் எப்போதும் மனம் வாக்கு காயம் ஒன்று பட்டு உண்மையாய் இருத்தல் தானாக நிகழ்வதுதான்.Just Be .வாழ்வை serious ஆக எடுத்துக் கொண்டு துறப்பதை உயர்வாகக் கூறுகிறோம்.அது மகான்களுக்கு சரி.எளியவர்களான நாம் ஒன்றைத் துறந்து விட்டுத் துவள்வதில் பலன் இல்லை.அதை விட வையத்தில்  வாழ்வாங்கு வாழ்வது மேல்.

மறுபடியும் என்று தலைப்பிட்டு ராமாயணம் போல் நீளமாகி விட்டது இந்த போஸ்ட்.Please bear with me.சந்திக்கலாம்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

ராமாயணம்-கதைத் தோற்றம் -சிறு அலசல்

இன்று ஸ்ரீ ராம நவமி.அந்தந்த நாள்களுக்கென்று ஒரு மூட் உண்டு.பண்டிகை நாள்கள் உள்முகம்தான்.100 வருடங்களுக்கு மேல் பூஜை பெற்ற அந்த நிற்கின்ற ராமன் படத்திற்கு புஷ்பம் வைக்கையிலே ராமாயணக் காட்சிகள் மனதில் ஓடத் தொடங்கியது.நம் பலருக்கும் நடக்கும் ஒன்றுதான்.இப்போது பட்டாபிஷேக ராமர் படங்கள்தான் நிறைய வரையப் படுகின்றன.அதனாலேயே அந்த நின்று தரிசனம் தரும் கோதண்ட ராமர் படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.அழகின் பெண்மையின் கருணையின் வடிவாக கொடி போல ஸ்ரீராமன் அருகில் நிற்கும் பிராட்டி,பாதத்தில்கூப்பிய கரங்களுடன் மகாபக்த ஹனுமான் எம்பெருமானுக்கு இன்னொருபுறம் நிற்கும் இளவல் லட்சுமணன்.இளவலுக்கு நான் அடைமொழி தரத் தகுதியற்றவளாக உணர்கிறேன்.நீங்கள் உலகத்தின் உயர்ந்த சகோதரனுக்குக் கொடுக்கும் அடைமொழியை போட்டுக் கொள்ளுங்கள்.ராமாயணக் காட்சிகளை ஒரு திரைப் படத்தை விடவும் அழகாக எங்கள் குழந்தை மனதில் பதியச் செய்த தாத்தாவை நினைத்து விட்டுத்தான் ஸ்ரீராம ஸ்மரணை செய்ய என்னால் இயலும்.அஷ்டோத்திரம் படித்துப் பூஜை முடித்த போது அஷ்டோத்திர வரிகளை மனம் அசை போட்டது.ஸ்ரீராமனைப் பூஜிக்கும் பலவரிகளுக்கு இடையிடையே,தாடகை,ராவணன்,மாரீசன் பெயர்களும் இடம் பெற்றிருந்தது.அதாவது இவர்களை எல்லாம் வதம் செய்த பெருமான் என்ற பொருள் தாங்கிய சொல் தொடர்கள் வந்தன.அஷ்டோத்திரத்தில் இடம் பெறாத ராமாயணக் கதாபாத்திரம்,முக்கியக் கதாபாத்திரம் யார் என்ற எண்ண ஓட்டமே இந்த எழுத்தின் ஆரம்பம். யார் அது?கைகேயி.

கோடு போட்டு நிற்கச் சொன்னான் சீதை நிற்கவில்லையே சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே என்றார் கண்ணதாசன்.ஆனால் லட்சுமணன் கோடு போடுவதற்கு முன்னமே ராமன் கதை திருப்பம் கண்டு விடுகிறது.ஒவ்வொரு வாழ்க்கைக்கும் ஒரு நோக்கம் உண்டு.அவதாரங்களுக்கும்தான்.அந்த அவதார நோக்கம் நிறைவேறத் தோதாக நிகழ்வுகள் அமைகின்றன.அவதாரபுருஷனுடன் கூடவே வரும் பலர் அந்த நிகழ்வுக்குத் துணை புரிகிறார்கள்.அதனால் இந்த நிகழ்வுகள் predestined என்பதில் சந்தேகம் இல்லை.கைகேயிதான் ஸ்ரீராமாவதாரத்தின் நோக்கம் பூர்த்தியாக வித்திட்டது.கைகேயி நல்லவளா கெட்டவளா என்பது அல்ல நம் விவாதம்.ராமாயணம் ஒரு எளிய கதை போலத் தோன்றலாம்.அது உண்மை அல்ல.Interpreting the epic is not that easy .அயோத்யா காண்டத்தில்தான் கதை விரியத் தொடங்குகிறது.வால்மீகியும் கம்பனும் துளசிதாசரும் மாறுபடும் இடங்கள் பல.நாம் அவரவர் விருப்பப் படி,அவரவர் அடிப்படை குணங்களின் படி இந்தக் காவியத்தை அதன் கதாபாத்திரங்களைப் புரிந்து கொண்டுள்ளோம்.After thousands of years the scar on Kaikeyi's character remains.ஏன்?

இதுதான் என் கேள்வி.ராமன் தன்  தாயைவிட அதிகம் அன்பு செலுத்தியது கைகேயியிடம்தான்.கைகேயியின் உயிர் ஸ்ரீ ராமன்.அப்படியானால் என்ன நிகழ்ந்தது கைகேயிக்கு?மந்தரை சொல்பேச்சு கேட்டுதன் நிலை இழக்கும் அளவு திண்மை அற்ற கதாபாத்திரமா அவள்?வரம் பெற்று வனம் போக ஆணை வந்தும் ஸ்ரீ ராமன் முகம் சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை போல் இருந்ததாகக் கம்பன் பாடுகிறார்.மன்னவன் பணி என்றாகில் நும் பணி மறுப்பனோ என்றாராம் ராமன்.எனக்கு நீ வேறு,தந்தை வேறா?அவர் இட்ட பணி என்று ஏன் கூறுகிறாய்?நீ இட்ட பணியை நான் செய்யாதிருப்பேனா என்கிறார்.ஸ்ரீராமனை கைகேயியின் நடத்தை எந்த வகையிலும் மாற்றவில்லை.ஆனால் அவள் ராமன்மீது கொண்ட அன்பு என்னாயிற்று?மந்தரையின் துர்போதனையால் அவ்வளவு நாள் கொண்ட அன்பு மாறி விட்டதா?இல்லை அவள் வரங்களுக்கு ஏதேனும் உள் பொருள் உண்டா?இதைக் கம்பனும் வால்மீகியும் ஒவ்வொரு விதமாகவும் சொற்பொழிவாளர்கள் வேறு பல விதமாகவும் பொருள் படுத்துகிரார்கள்.நான் கூறப் போவது என் பார்வையில் கைகேயி.கைகேயி ஒரு நெகடிவ் கதாபாத்திரம்தான் என்வரை.

இப்போது ஒரு புது டிரெண்ட் உருவாகி உள்ளது.துரியோதனன்,ராவணன் போன்ற எதிர்மறை மனிதர்களை ஹீரோவாகக் கொண்டாடி அவர்களைக் கதாநாயகனாகக் காட்டி அவர்கள் பார்வையில் ராமாயணம்,மகாபாரதம் சொல்லும் கேலிக் கூத்து.நீ ஒரு ராவணனாக,துரியோதனனாக,கைகேயியாக உன்னை வெளிப் படுத்திக் கொள்ள விரும்புவாயா?மாட்டேன் என்றால் அங்கேயே என் வேலை முடிந்தது.அவர்களிடம் உள்ள நல்ல குணங்களைப் பட்டியல் இடுகிறார்கள்.ஏதேனும் ஒரு தீய குணம் போதும்.நல்லது அனைத்தையும் ரப்பர் போல அழிக்க.இப்போது கைகேயிக்கு வருவோம்.

1.கெட்டவர்களால் மதி இழப்பது குற்றம்.
2.தன் மேல் மோகம் கொண்ட தசரதனின் weakness ஐ சரியானபடி பயன்படுத்தி ,சற்றும் இரக்கமற்று வரம் கேட்டது குற்றம்.
3.தன் வரம் வழங்கப் பட்டால் என்னென்ன விபரீதங்கள் நிகழும் என அறிந்தும் அதை விரும்பிப் பெற்ற perversity .
4.தவறான சகவாசம் என்ற குற்றம்.
5.அவள் மனதில் என்ன இருந்ததோ,நாம் அறியோம்.காட்டக் கூடாத இடத்தில் தன்  பலத்தை ப்ரயோகித்த அல்ப குணம்.

ஏன் கைகேயி என்ற பெயர் யாரும் இடுவதில்லை,என்ற கேள்விக்கு பரதன் உன் பெயரில் யாரும் இருக்க மாட்டார்கள் என்று சபித்ததாகக் கூறுகிறார்கள்.அது மட்டும் காரணம் இல்லை.புராணங்களையும் இதிகாசங்களையும் கிண்டல் செய்து மட்டுமே வரும் நாஸ்திகவாதிகள் கூட அந்தப் பெயர் பக்கமே போகாததற்குக் காரணம் அந்த கதாபாத்திரத்தின் மேல் உள்ள வெறுப்பே.தீராத தீர்க்கவே முடியாத பழி சுமந்த பாத்திரம். ராமாயணக் கதை உருவாகக் காரண கர்த்தா என்பதற்கு மேல் கைகேயி பற்றிப் பேச எனக்கு எதுவும் இல்லை.ஆனால் வால்மீகி,கம்பன் என்ன நினைத்து இதிகாசத்தை வடித்தார்கள் என்று நினைத்து மாளவில்லை.நம் நாட்டு சரித்திரத்தின் மூன்று வித moods ஐ பிரதிபலிப்பவர்கள்,வால்மீகி,வியாசர்,காளிதாசன்.வால்மீகி-Moral ,வியாசர்-Intellectual ,காளிதாசன்-Material Poets .எனலாமா?ராமாயணம் ஒரு ideal அதாவது உயர்ந்த உன்னத சமூகத்தை எடுத்துக் காட்டுகிறது.Ideal என்றால் கற்பனையாகத்தான் இருக்க முடியும் என்ற தவறான கருத்துக்கள் உண்டு.ராமாயணத்தில் ஒரு உண்மை சமூகம் உயர்ந்து நிற்கிறது.வெறும் கற்பனையை மட்டும் வைத்து ஒரு ideal சமூகம் பற்றி வால்மீகியால் எழுதி இருக்க முடியாது.உத்தர காண்டத்தில் காணப் படும் விஷயங்கள் ideal ஆனவையா என்ற கேள்வி வருகிறது.அதற்கு பதில் it is a later addition .குழப்பிக் கொள்ள வேண்டாம்.

குழந்தையாக உள்ள மனித இனம் அதாவது younger humanity ஐக் காட்டும் இதிகாசம் ராமாயணம்.அடுத்தடுத்த அவதாரங்கள் evolution ஐக் காட்டுவதை நாம் அறிவோம்.இராமாயண காலம் எளிமையானது.அதிகக் குழப்பங்கள்,complexities கிடையாது.ஒன்று நினைத்து வேறு செய்தல்,இரு பொருள் படப் பேசுதல் அறிவை வேண்டாத விஷயங்களுக்குப் பயன்படுத்துதல்(கைகேயி போல என சொல்லாமல் இருக்க முடியவில்லை) என்பதெல்லாம் குறைவு.Rare .காட்டுக்குப் போ என்று தந்தை சொன்னால் பித்ருவாக்ய பரிபாலனம் செய்ய வேண்டுமே தவிர கேள்விகள் கிடையாது.வால்மீகியின் இயல்பு imaginative ,sensitive ஆகவே இருந்திருக்க வேண்டும்.நிலையில் இருந்து திரிந்து நடக்கும் மனிதர்கள்,அலட்சியம்,வன்முறை எல்லாம் அவருடைய பரிசுத்தமான நீதி வழுவாத மனதை shock செய்திருக்க வேண்டும்.தீமை கண்டு ,பாவம் கண்டு இரங்கி இருப்பார்.ஆனால் அவருடைய அழகிய மனதிற்கு அவை ரசக் குறைவாகத்தான் இருந்திருக்கும்.The most paradoxical poem.Nothing is superior to Ramayana.It portrays the picture of entirely moralised civilisation என ஸ்வாமி அரவிந்தர் குறிப்பிடுகிறார்.

கவிச் சக்ரவர்த்தி கம்பன் பார்வையையும் சுருக்கமாகப் பார்த்து விட்டு முடித்துக் கொள்ளலாம்.கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் என்றால்,அவர் ஏன் வால்மீகி ராமாயணத்தை மறுபடி எடுத்துக் கொண்டார்?ஒரு புது காவியம் படைத்திருக்கக் கூடாதா? ஒரு சமூகம் தர்ம வழியினின்றும் பிறழும் போது பேரரசுகள் கூட வீழ்ந்திருக்கின்றன.கம்பன் தான் வாழ்ந்த காலத்தில் தான் விரும்பிய values ஐ மக்களுக்குச் சொல்ல ஏற்கெனவே தமிழ் மக்களுக்கு மிகவும் நெருக்கமான ராமாயணத்தை எடுத்துக் கொண்டார்.இடைச் செருகல்கள் உண்டு.அவர் முதலில் கொடுக்கும் செய்தி புலனடக்கத்தின் அவசியம்.அவர் பார்த்ததும் ஒரு idealistic society யே .அயோத்தி மாநகரில்,தருமம் இல்லையாம்.ஏனெனில் அதை ஏற்க ஆளில்லை.Hero இல்லை.ஏனெனில் விரோதிகள் இல்லை.பொய் இல்லை.அதனால் உண்மை என்று தனியாக ஏதும் இல்லை.

நகரப் படலத்தின் அந்த அழகுப் பாடல்

வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை ஓர்  செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய் உரைஇலாமையால்
வெண்மை இல்லை பல கேள்வி மேவலால்
நகரத்தில் தொடங்கி மனிதர்கள் வரை அவர் சொல்ல விரும்பியது உயர்ந்த செய்திகள் மட்டுமே.எனவே வால்மீகியும் கம்பனும் சில தகவல்களில் வேறுபட்டாலும் எண்ணம் ஒன்றே.

இந்த blog ன் தொடக்கம் கேகயன் மகள்.எழுத ஆரம்பித்தது முதல் கருத்துகள் திரட்டினேன்.மனிதர்கள் நல்லது,கெட்டது நிறைந்தவர்கள்தான். கைகேயியின் சில ,வெகு சில நல்ல குணங்களை சில தோழர்கள் சுட்டிக் காட்டினார்கள்.கேட்டுக் கொண்டேன்.ஆனாலும் கைகேயியின் நடத்தை பற்றிய என் கருத்துக்களில் மாற்றம் இல்லை.அந்தத் தோழர்கள் இதை personal ஆக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டு,வள்ளுவனை என் கருத்துக்களுக்கு வலிமை சேர்க்க அழைத்து நிறைவு செய்கிறேன்.
ஒரு செயல் தப்பு என்றால் தப்புதான்.தவறை சரி என்றால் பார்வைதான் தவறு என நான் கூறுவேனே?

"தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்"
தீவினை அச்சம் என்ற அதிகாரம்.ஒரு தீய செயல் தீய விளைவைத்தான் தரும் .அதனால் நெருப்பை விட பயங்கரமானது.

"மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்
அறஞ் சூழும் சூழ்ந்தவன் கேடு"
மறந்தும் மற்றவருக்கு கேடு செய்யக் கூடாதென்றால்,நினைவுடன் அதை செய்பவர் எப்படி நல்லவர்?

"ஈன்றாள் பசி காண்பானாயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை"
பெற்ற தாய் பசியுடன் இருந்தால் கூட,அதை ஆற்றக் கூட சான்றோர் பழிக்கும் செயல்கள் செய்யக் கூடாது.என்ன நல்ல நோக்கம் இருந்தது ,கைகேயியின் செயல்களுக்கு?

"கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்"
தகாதவை என ஒதுக்கப் பட்ட செயல்களை ஒதுக்கி விடாமல் செய்பவர்களுக்கு ஒரு வேளை  அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும்.கைகேயிக்கு அதுதானே நடந்தது?இறுதியில் துன்பம்தானே?

"அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பாலவை"

பிறர் வருந்துமாறு செய்து பெற்றதெல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய் விடும்.நல் வழியில் வந்தவை இப்போதில்லை என்றாலும் முடிவில் நன்மையே தரும்.

திருவள்ளுவர் சொன்னால் நான் நம்புவேன்.ஏன் என்றால் அவர் மட்டும்தான் ஒன்றை செய் என்றால் ஏன் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.செய்யக் கூடாதென்றால் ஏன் செய்யக் கூடாதென்றும் சொல்கிறார்.At random 1330 ல் எந்த குறளை  வேண்டுமானாலும் எடுத்து பரீட்சித்துப் பாருங்கள்.அவர் வாய்மொழி வந்தவற்றிற்கு அவர் authority தான் .

அதனால்தான் எனக்கு கைகேயியின் கதாபாத்திரம் பிடிக்கவில்லை.ராமன் என்ன பண்ணியிருப்பினும் அவன்தான் கதை நாயகன்.ராவணன் எப்பேற்பட்ட சிவபக்தனாயிருப்பினும் பிறன் மனை விழைந்த பேடித்தனத்தால் வில்லன்தான்.பேசுவோம்.
ரஞ்ஜனி த்யாகு
Mother protects