ஞாயிறு, 17 டிசம்பர், 2017

மார்கழிக் கல்யாணங்கள் -- சென்னை இசைவிழா

மார்கழியில் கல்யாணம் பண்ணுவதில்லை என்று நினைக்கிறோம். அனைவரும் டிசம்பரில் எங்கள் ஊருக்கு வந்து விட்டுக் கூறுங்கள். எது நிஜக் கல்யாணம் என்று. உங்கள் வீட்டு, எங்கள் வீட்டுக் கல்யாணத்திற்கு எத்தனை பேர் வரக்கூடும்?  1000?  2000?  அதுவுமே,  நம் வீட்டுத் திருமணத்தன்று மாமாவுக்கு அலுவலகத்தில் ஆடிட் இருக்கும். அத்தைக்கு மூட்டுவலி வரும். சொந்தங்களுக்கு ஏதோ சாக்கு வரும். ஆனால்,  சென்னையின் மார்கழி திருமணத்திற்கோ உலக உருண்டையின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் வருகிறார்கள். வருடம் தப்பாமல், டிசம்பரில் சென்னை வருகிறார்கள். சிவபெருமான் திருமணத்தின் போது நடந்தது போல்,  இந்தியாவின் தென்பகுதி பாரம் தாங்காமல் இறங்கிவிடுமோ என்று கூட நினைப்பேன். அப்படி ஒரு கோலாகலம். சாஸ்திரிய சங்கீதத்திற்கான இப்படி ஒரு விழா வேறெந்த ஊரிலும் நடப்பதில்லை என உறுதி செய்ய இன்டர்நெட்டை அலச வேண்டாம்.  அது நிதர்சனம். ஆனால் திருமணத்திற்கு என ஒரு மாசத்தை மட்டும் ஒதுக்கினால்,  என்னென்ன குழப்பங்கள் ஏற்படுமோ அத்தனை குழப்பமும் மெட்றாஸில் நடக்கிறது. வருஷத்தில் தை மாதம் மட்டுமே திருமணம் செய்ய உகந்தது என்றால், எல்லாருக்கும் மண்டபம் கிடைக்குமா, சமையலுக்கு ஆள் கிடைக்குமா, மாமாவுக்கு லீவ் கிடைக்குமா, ஒரே மாசத்தில் பல கல்யாணங்களுக்கு மொய் எழுத பாக்கெட் எல்லாருக்கும் சம்மதிக்குமா,  போத்தீஸில் மற்ற மாதங்கள் வியாபாரம் நடக்க வேண்டாமா, சமையல் வேலை செய்வோர் மற்ற மாதங்கள் சம்பாதிக்க வேண்டாமா, தேன்நிலவு தம்பதியருக்கு லாட்ஜ்களில் அறை கிடைக்க வேண்டாமா, குழப்பங்கள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல? அப்படித்தான் திண்டாடுகிறது டிசம்பர் சென்னை.

நேற்று மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸில் ஒரு காலைக் கச்சேரி சென்றோம். தெரியாதவர்களுக்கு ஒரு தகவல். காலைக் கச்சேரிகள் பெரும்பாலான சபாக்களில் இலவசம்.  காலை பாடுபவர்கள்,  வளர்ந்து வரும் கலைஞர்கள். அவர்கள் மதியக் கச்சேரி செய்யும் அளவிற்கு  உயர்ந்து, மாலை, Prime Slot  எனப்படும் ஆறு மணிக்கச்சேரி  வாய்ப்புப் பெற, காத்திருக்க வேண்டும். உழைக்க வேண்டும்.  திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தக்க வைத்துக் கொள்ள வேண்டும். செய்தால் பல வருடங்கள் துறையில் கோலோச்சலாம்.  .நான் அறிந்த வரை,  சபாக்களின் மாலைக் கச்சேரி வரை வர, குறுக்கு வழிகள் இல்லை. திறமை மட்டும் ஆட்சி செய்யும்,  மிகக் குறைந்த சிலதுறைகளில் ,  இது ஒன்று.  அப்பா பாடுகிறார் என்பதால்,  மகனுக்கு வாய்ப்பு தருவதில்லை.  வாய்ப்புத் தருவது சபாக்கள். மதிப்பிடுவது மக்கள் அல்லவா?  அதனால் நிஜமான திறமை வேண்டும். திறமைசாலிகளுக்குள் போட்டி உண்டு. சபாக்களுக்குப்  பிரியமான கலைஞர்கள் உண்டு.  அதெல்லாம் ஊடுருவிய தீமைகள். தவிற்பதற்கில்லை.

பணத்தை வைத்துச்  சுழலும் உலகில்,  ஏன் இலவசக் கச்சேரிகள் அளிக்கிறார்கள், தெரியவில்லை. அதற்கு டிக்கெட் நிர்ணயித்தால்,  வரும் பத்து பேரும் வரமாட்டார்கள் என்றா?  காலைக் கச்சேரிகள், காற்று வாங்கும் இடம்தான். அத்தனை பெரிய சபாவில், ஆங்காங்கே தென்படும் தலைகள். எண்ணி விடலாம். அட,மாலுக்கும் சினிமாவிற்கும், கூடச் செல்லும் நண்பர் குழாமும் அவர்கள் குடும்பங்களும் வந்தால் கூட கூட்டம் சேருமே ?பாடுபவர்களுக்கு சற்று உற்சாகம் வருமே!  பின்னால் வளர்வோம், நிறைந்த அரங்குகளைப் பார்ப்போம் என்ற நம்பிக்கையில், சுவற்றுக்குப் பாடும் பாடகர்கள் பாட்டில் உற்சாகம்  எங்கிருந்து வரும்? ஆயாசம்தான் இருக்கும். அதே போல், மாலைக் கச்சேரிகளின் டிக்கட் ரேட் , சினிமாவை விட அதிகம். சினிமா அளவு ஈர்க்க இயலாத ஒரு நிகழ்ச்சிக்கு , அதைப் போல் இரு மடங்கு டிக்கட் வசூலித்தால்,  சாமானியர்களுக்கு சபாவை எட்டிப் பார்க்கக் கூடத் தோன்றுவதில்லை.  தாங்கள்தான் சங்கீதத்தின் பிரதிநிதிகள் என்று நினைத்துக் கொள்ளும் ஒரு சிலரின் ஆதிக்கம்தான். கடைசிவரை பந்துவராளியை, பூர்விகல்யாணி என்றும், முகாரியை பைரவி என்றும் நினைத்துக் கொண்டு கேட்டு விட்டுப் போவார்கள்.

நேற்றுக்  கச்சேரியில் இரண்டு பேர்.  ஒரு ஜோல்னா பை, சாதா சூடிதார், அந்தப் பெண். அந்தப் பையன் , பல முறை துவைக்கப் பட்ட ஒரு சட்டை, பேண்ட்.  அவ்வளவு ஆர்வமாகக்  கச்சேரி கேட்டார்கள். த்விஜாவந்தியில்,  அகிலாண்டேஸ்வரியை விட்டால் வேறே கீர்த்தனையே யாரும் பண்ணவில்லையோ என்று நாம் நினைத்துக் கொண்டுள்ள போது , பாடகர் லேசாக முனகின உடனேயே , 'த்விஜாவந்தி ' என்று ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்த அப்பெண்ணும் பையனும், ' ஏன் ஆண்ட்டி, த்விஜாவந்தியில் இந்தக் கீர்த்தனை கேட்டுள்ளீர்களா'  என்று என்னிடம் வேறு கேட்டார்கள், பாருங்கள்,  அது என்ன கீர்த்தனை என்று கூடத்  திருப்பிச்  சொல்ல எனக்குத் தெரியவில்லை.

சபா  உணவகங்கள் அருமை. அரங்கை விட,  உணவகங்களில்  மக்கள் அதிகம் .மதிய உணவின் போதே,  மாலைச்  சிற்றுண்டிக்கு,  என்ன இனிப்பு  காரம் சேர்த்து உண்டால் நன்றாக இருக்கும்   என வெளிப்படையாகவே பேசுவோர்,  சபா சபாவாகத் தாவும்  கார்சவாரி ரசிகர்கள்.....அவர்கள் அப்படித் தாவுவது ,  வித்தியாசமான கச்சேரி கேட்கவா, வித்தியாசமான உணவகத்தில்  சாப்பிடவா என அவர்களைத்தான் கேட்க வேண்டும். எதுவும் அதிகமாக இருப்பது சந்தோசம் எனத் தப்புக் கணக்குப் போடுகிறோம். இல்லை. அது தொல்லை.  போதும் போதாததற்கு,  எல்லாத்  தொலைக்காட்சிகளும் கச்சேரிகள் ஒளிபரப்புகிறார்கள். அது நல்ல  விஷயம்தான்.  வயதானவர்கள், வசதியற்றவர்கள்,  வெளியே போகும் சூழ்நிலை இல்லாதவர்கள் , ஆகியோருக்கு நல்ல வரப்  பிரசாதம். வருஷம் முழுதும்  நடக்குமாறு பண்ணி,   இந்த இசை வெள்ளத்தில் மக்கள் மூழ்குமாறு செய்யலாமே?  இது என்ன பருவமழையா?  டிசம்பரில் மாத்திரம் வர?   சம்பிரதாயத்தை  மாற்ற பயம். ஆட்டுமந்தையாகவே இருக்க இஷ்டம். வேறு மாசத்தில் கச்சேரி வைக்க பயம். காலைக்  கச்சேரிக்கு டிக்கட் வசூலிக்க பயம். மாலைக்  கச்சேரிக்கு  டிக்கட் கட்டணம் குறைக்க பயம். உணவகம் இல்லாது சபா நடத்த பயம். வரவர,  சபா போகும் ஆசையே இருப்பதில்லை. பொய்யாகத்  தெரிகிறது.  பார்க்கலாம். ஒரு எல்லையைத் தொட்ட பின்னர் மாற்றம் வரலாம்.சென்னைக்கு எல்லாம் கல்யாண மாசம் ஆகலாம்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

சமூகத்தை அரித்து வரும் புற்று நோய்

இப்பொழுதுதான் சக்திபவனில் ஒரு தோசை சாப்பிட்டு வந்தோம்.இன்னும் உடை கூட மாற்றவில்லை.உண்மை.உண்மையில் இன்னும் சற்று பெரிய பளபள உணவகத்துக்கே முதலில் சென்றோம்.கூட்டம்.வெளியே நாற்காலிகளில் எல்லாம் மக்கள்.கோவில் வாசலில் கையேந்திக் காத்திருப்போர் பிச்சைக் காரர்களாம்.நாம் சொல்கிறோம்.அவர்களாவது பசிக்கு ஏதாவது கிடைக்குமா என்ற எண்ணத்தோடு காத்துள்ளார்கள்.ஆனால் posh ஹோட்டல் வாசலில் காத்திருப்போர் பசிக்கு காத்திருப்பதில்லை.சாப்பிடும் ஆசையால் காத்துள்ளோம். உடையாலும் உட்கார்ந்திருக்கும் இடத்தாலும் அறியப்பட்டால், அவர்கள் பிச்சைக்காரர்கள்.காத்திருக்கும் போது மனதில் உள்ள உணர்வால் அறியப்பட்டால் ,நாம்தான் பிச்சைக்காரர்கள்.அவர்கள் வயிறில் எரிவது பசி எனும் அக்னி.நம் மனதில் எரிவதோ ஆசை எனும் அக்னி.பசியை விரட்ட முடியாது.ஆசையை விரட்ட முடியும்.பசியும் இருந்து பணமும் இருந்தால் ஸ்டார் ஹோட்டல் போகக் கூடாதா?போகலாம்.ஆனால் காத்து நிற்பின் அது பசியால் அல்ல..ஆசையால்.இன்று எங்களுக்கு இருந்தது பசி.அதனால்தான் அங்கிருந்து சக்திபவன் சென்றோம்.

இந்த போஸ்டின் நாயக நாயகிகளைச் சந்தித்தது அங்கேதான்.முதல் பத்தி என் மனத்தில் நினைவு தெரிந்து உணவகங்களுக்கு செல்ல தொடங்கியது முதல் உள்ள எண்ணம். ஆனால் போஸ்ட்டின் வித்துக்கள் சிறப்பு எண்ணங்களே.எங்களுக்கு அடுத்த மேசையில் ஒரு ஏழை குடும்பம்,கணவன்,மனைவி,இரு குழந்தைகள் சாப்பிட அமர்ந்தார்கள்.அவர் ஆட்டோ ஓட்டுநர் என்று உடையில் இருந்தும் அவர்கள் ஏழ்மை அந்த பெண்ணின் கழுத்தில் இருந்தும் தெரிந்தது. குழந்தைகளுக்கு ஏதோ ஆர்டர் பண்ணப் பட்டு வந்தது.அவை ஆவலுடன் வேகவேகமாக சாப்பிட்டதைக் கணவனும் மனைவியும் பார்த்துப் பரவசப் பட்டுக் கொண்டார்கள்.நான் ஓரப் பார்வையாக அவர்களை பார்த்துக் கொண்டிருந்தேன்.இக்குழந்தைகள் சாப்பிடும் வேகம் பார்த்தால் அவர்கள் அம்மா அப்பாவிற்கு வரும் உணவையும் பங்கு கேட்கும் போல் உள்ளதே,அவரிடம் பர்ஸ் கூட இல்லை போல் தெரிகிறதே என்று சற்றுக் கவலையாக உணர்ந்தேன்.பளிச் என மனதில் ஒரு குரல் ஒலித்தது.அவர்களுக்கு எதுவும் சாப்பிட வர போவதில்லை என.கையில் உள்ள காசில் குழந்தைகளுக்கு மட்டும் ஏதாவது வாங்கித் தர வந்த பெற்றோர்.லேசில் வெல்ல இயலாத உணவு ஆசையை வென்ற இரு ஜீவன்கள்."அம்மா,நீ எப்ப சாப்பிடுவே "என்ற சின்னக் குழந்தையின் குரல்,என் இரவுத் தூக்கத்தைத் தொலைக்கப் பண்ணி விடுமோ என்று யோசித்தவாறே வெளியே வந்தேன்.

ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூகம்.ஏன்?ஐ.ஐ.டி .யில் இருந்து நாலு வருஷம் படித்து விட்டு வெளியே வருபவருக்கு ஏன் 18 லட்சம் சம்பளம்?கிரிக்கெட் மட்டும் ஏன் உசத்தி?டீமில் உள்ளவர்களுக்கு ஏன் அவ்வளவு பணம்?உன்னிகிருஷ்ணனுக்கு பாட வரும்.பாடுகிறார்.விராட் கோலிக்கு கிரிக்கெட் விளையாட வரும் .விளையாடுகிறார்.அஜித்துக்கு நடிக்க வரும் .நடிக்கிறார்.இன்று பார்த்த மனிதனுக்கு ஆட்டோ ஓட்ட வரும்.ஓட்டுகிறார். அஜித் டிசம்பர் கச்சேரி பாடுவாரா?உன்னிகிருஷ்ணன் ஆட்டோ ஓட்டுவாரா ?அவரவருக்கு வருவதை செய்கிறோம்.software engineer 12 மணி வேலை செய்தால்,ஒரு மெக்கானிக்கும் அதே நேரம் வேலை செய்கிறார்.கேட்டால் படிப்பு ஈட்டும் பணம் என்று கதை சொல்வார்கள்.உனக்குப் படிக்க வரும்.பிளம்பிங் பண்ண வருமா?மெத்தப் படித்தவர்கள், எல்லாம் ,தானே பண்ண வேண்டியதுதானே?படிக்க வந்தது.படித்தோம்.இன்னொருவனுக்கு படிப்பு ஏறவில்லை.வந்ததை செய்கிறான்.வசதி இல்லாமல் படிக்கும் வாய்ப்பை இழந்தவர்கள் எத்தனை பேர் உள்ளார்கள்.ஏன் வசதி இல்லை?சமூகத்துக்கு வந்த புற்று நோயால் அது தடுமாறி,தடம் மாறிப் போனதால்.

சரி,படிப்புக்கு மரியாதை தரவேண்டியதுதான்.அலுவலகத்தில் மணி அடிப்பவருக்கும்,மணி அடித்தால் வந்து கைகட்டி நிற்பவருக்கும்  ஒரே சம்பளம் தர வேண்டாம்.ஆனால் ஏன் இவ்வளவு வித்தியாசம்?ஒரு இடத்தில் ஏன் கோடிகள் குவிய வேண்டும்?ஆட்டோக்காரர்கள் பத்து ரூபாய்க்காக ஏன் தவளை போல் கத்த வேண்டும்?ஏன் விகிதாச்சாரம் இவ்வளவு மோசமாய் உள்ளது?நமக்கு உள்ளது போல் சமூகத்திற்கு,நாட்டிற்கு ஒரு ஆன்மா உள்ளது.சமூகத்தின் ஆன்மா நம் அனைவரிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டுள்ளது.சமூகம் என்ற பெரிய உடலை அழித்துத் தின்றுவரும் புற்று நோய் இந்த ஏற்றத் தாழ்வுகள்.சரியான ட்ரீட்மெண்ட் தரப்பட வேண்டும்.கான்சருக்கு க்ரோசின் போட்டால் சரியாகுமா?எத்தனை நாள்பட்ட கவனிப்பு வேண்டும்.அது போல்தான்.இப்போதெல்லாம் புற்று நோயை முற்றிலும் குணப்படுத்தி விடுகிறார்களாமே ?இன்று சக்திபவனுக்கு சாப்பிட வந்த குடும்பம் என்றாவது,முழுமையாக வயிறார சாப்பிடுமா?இல்லையெனில் தேடி சோறு நிதம் தின்று,பல சின்னஞ் சிறு கதைகள் பேசி,பலர் வாட பல செயல்கள் செய்து அடுத்த தலைமுறைக்கு என வங்கிக் கணக்கில் தேவைக்கு அதிகமாகப் பணம் சேர்க்கும் நாமெல்லாம் தலைகுனிய வேண்டியவர்களே.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

புகழ் தரும் தலைவலிகள்

இரண்டு வார மனச்சுமை. இன்று இறக்கி வைத்து விடுவேன். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப என்ற இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.நன்றாகப் போகிறது. நேரடியாக விஷயம் தொடுகிறேன். அதில் ரமணியம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் பாடிக் கலக்குகிறார். நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் பாராட்டுகள் எல்லா வழியிலும் வந்து குவிகின்றன. அவர்கள் பின்புலம் அறிந்த பின் மிகுந்த மரியாதை உண்டாகிறது. அவர்கள் சாதனைப் பெண் என்பது சந்தோஷம் தருகிறது. பின் ஏன் எனக்கு மனம் கனக்கிறது? சொல்கிறேன்.

புகழ் ஒரு போதை. மிகுந்த பக்குவத்துடன் கையாளப் பட வேண்டிய ஒன்று. அதிகம் குடித்தால் குடிகாரனுக்கு ஏற்படும் தடுமாற்றம்,  புகழ் வசப்படும் மனிதனுக்கு உண்டாகும். எளிமையான மனிதர்கள் புகழால் தொலைக்கும்  சில விஷயங்கள், எளிமை, தூக்கம், சுதந்திரம், பிறரால் அறியப் படாத இருப்பு, ஒரே வார்த்தையில் சொன்னால் நிம்மதி. பிரபலங்கள் யாராவது உண்மை பேசினால் நமக்கு இது விளங்கும். இல்லை என்றாலும் கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா என்ன? பாவம் ரமணியம்மாள் என்பதே என் மனது கொண்ட சுமை. முதல் பாடல் பாடும் போது,  தான் இவ்வளவு பயணிப்போம் என அவர்கள் நினைத்ததாகத் தெரியவில்லை. திறமையை,  தொலைக்காட்சிகள் ஊக்குவிக்கின்றன. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அவர்கள் டி ஆர் பி (டெலிவிஷன் ரேட்டிங் பாயிண்ட்) ஏற , இந்த அப்பாவிப் போட்டியாளர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்களோ என்றே தோன்றுகிறது. தொலைக்காட்சிசானல்களைத்  தப்பு சொல்ல மாட்டேன். அவர்கள் ஸ்ட்ரீட் ஸ்மார்ட்டாக இருந்தாக வேண்டும். வியாபாரிகள் வியாபார தந்திரம் செய்யக் கூடாது என்று வாதிட இயலாது. அந்த அம்மாள்தான் பாவம்.

அந்த ரமணியம்மாளே  வாக்குமூலம் தருகிறார்கள். "நான் வேலைக்கு செல்லும் வழியில் இளைஞர்கள் என்னுடன் செல்பி  எடுத்துக் கொள்கிறார்கள், சிலர் காரை நிறுத்திப் பணம் தருகிறார்கள்", என்றெல்லாம்.   சென்ற வார ஷோவில் அவர்கள் சொன்ன போது, அவர்களை நிம்மதியாய் விட்டு விடுங்களேன் என்று மனம் அடித்துக் கொண்டது. ஏன் என்றால்,  உலகம் பொய். உலகம் வேண்டுவது பரபரப்பு மட்டுமே. சில நல்ல உள்ளங்கள் உண்டு. அவர்கள் வலக்கை தருவது இடக்கைக்குத் தெரியாதது போல் உதவுபவர்கள். மற்றது எல்லாம் விளம்பரத்துக்காகத்தான்.  அவர்களால் சாலையில் இயல்பாய் முன் போல் நடக்கக் கூட முடியவில்லை. இரண்டு சேலைகளுடன் நிம்மதியாய் இருந்தவரை,  வாரம் ஒரு புது துணி கொடுத்து ஆசை வயப் படுத்தியாயிற்று. தூக்கம் வராது. நிச்சயம் வராது. அதற்காக ,அவர்கள் போன்ற, நம் போன்ற சாதாரண,  ஓரளவு திறமை உள்ள மக்கள் வளரவே கூடாதா என்கிறீர்களா? அப்படி இல்லை. இந்த தற்காலிக வளர்ச்சியும் புகழும் தரும் போதை, அவர்களைப் புறம் தள்ளி உலகம் தன்  பயணத்தைக் தொடரும் போது இந்த எளிய மனிதர்களுக்கு அதிர்ச்சியும் வலியும் ஏற்படுத்தும்.

இந்தப் புகழ் தற்காலிகமானது என நீ அறிவாயா என்றால், ஆம்,அறிவேன் என்பதே பதில். சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்த இதே போன்ற ஒரு பாட்டியின் திக்கற்ற நிலையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. ஆனால்,  தீர்வற்ற பிரச்சினை இதெல்லாம். நீங்களும் நானும் பேசிக் கொள்ளலாமே தவிர ஏதும் செய்ய இயலாது. ஆனால், ஒன்று கவனிக்கிறேன். ஒரு மனிதனின் வளர்ச்சியும் அவன் அடக்கமும்  பெரும்பாலும் நேர்விகிதத்தில் இருக்கின்றன. இருக்க வேண்டும். தொலைகாட்சி நிகழ்ச்சியின் நேர்காணலில் பங்கு பெறும் பல பிரபலங்கள் இதை உறுதி செய்கிறார்கள். வள்ளுவனும் பாரதியும் பெற்றது போன்ற புகழ்தான்  நிலையானது. அது நம் போன்ற சாமானியர்களுக்கு கஷ்டம். அதை உணர்ந்து, புகழின்  வசப்பட்டு மயங்காமல் இருப்பின் பிரச்சினை இல்லை. மயங்கி சந்தோஷ எல்லை வரை போனால், இன்னொரு எல்லையைத் தொட வேண்டிவரும் போது  அடி பலமாக இருக்கும். ரமணியம்மாளுக்கு இந்த எளிய மனம் மாறாமல் இருக்கட்டும் .வேறென்ன சொல்ல?  உடல் அடையும் புகழை,  உள்ளம் சினிமா படம் போல் வேடிக்கை பார்க்கட்டும்.தொலைக்காட்சி சானல்களும் இன்னும் கொஞ்சம் மிதமாக இருந்தால் நலம். சிம்பிள் பெண்டுலம்  போல் மக்களை வைத்து விளையாட அல்லவோ செய்கிறார்கள்! பாவம் மக்கள்.

மனம், சுமை இறக்கி இறகு போல் ஆனது.





திங்கள், 20 நவம்பர், 2017

என் மொழி வேறா?

இது முப்பது வருடக் கதை.கதைக்கு நாயகன்,நாயகி கிடையாது.ஒரு குடும்பமே கதையின் வித்து.தலைப்பு சொல்வது போல் இந்த போஸ்ட்டும் புரிந்து கொள்ளப் படக் கூடிய சாத்தியக் கூறுகள் குறைவே.ஆனாலும் ,என் போல புரியாத மொழியில் பேசிக் கொண்டிருக்கும் யாருக்காவது என்றேனும் உபயோகமாகலாம் என்பதே எழுத காரணம். என் குடும்பம் பற்றி அறியாதவர்களுக்கு......நான் ரஞ்ஜனி .த்யாகு என் husband .எங்கள் முதல் குழந்தை ராகவன்.அவன் தம்பி கார்த்திக்.ராகவன் ஆட்டிஸக் குழந்தை.அவன் வயது 29.ஆட்டிசம் பற்றி பாடம் நடத்த அல்ல இக்கட்டுரை.அதற்கு நல்ல தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் மருத்துவர்கள் .இருக்கிறார்கள்.வீட்டில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் என்றால் வீட்டின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை எளிமையாகக் கூறுவது கட்டுரையின் நோக்கம்.

ஆட்டிசம்என்பது  குழந்தையின் cognition மிக மோசமாக உள்ள ஒரு நிலை.cognition சரியாக இருப்பின்,ராமாயணமும் புரியும்.Theory of relativity ம் புரியும்.Cognition minus என்றால் எதுவும் எப்படிப் புரிய வேண்டுமோ அப்படிப் புரியாது.அந்தக் கஷ்டம் பாதிக்கப் பட்ட குழந்தையை விட அதன் அம்மா அப்பா rare cases ல் அதன் caretaker க்கே விளங்கும்.Cognition நன்றாக உள்ளதாய் கர்வம் கொண்டுள்ள so called normal people ஆன பெற்றோருக்கு ஏன் என் குழந்தைக்கு இது கூடப் புரியலை என்பது பெரும் அதிர்ச்சியாக இருக்கும்.அதை ஆழ்மனதிற்கு சொல்லி,புரிய வைத்து,மனதை இந்த condition ஐ ஏற்க வைத்து சம நிலை அடைந்து,மனசு என்ற ஆடுகின்ற வஸ்த்துவை உன் மேல் ஒரு கட்டடம் எழும்பப் போகிறது,நீ அஸ்திவாரம் ஆடாதே என்று மிரட்டி,அமைதியாக காலத்தை ஓட்ட வேண்டும்.

சமீப காலமாய் last straw on camel s back என்பது போல சில நிகழ்வுகளை சந்திக்கிறேன்.அது நெருக்கமானவர்கள் கூட அறிந்தும் அறியாமையினாலும் செய்வதைக் காணும் போது ஏன் என் மொழி புரியாமல் போனது அவர்களுக்கு என்று வியக்கிறேன்.மனித இனம் வாழ்வைப் படிக்கும் முன் வண்டி ஓட்டக் கற்றுக் கொண்டு விடுகிறது! நூறு சிறப்புக் குழந்தைகளை,குடும்பங்களையாவது அறிவோம்.You know,there s a cry in the depth of our hearts,which people without a special ear cannot hear? இது ஒரு பெரிய விஷயமா என்று தோன்றலாம்.குழந்தையின் ப்ரீ கே ஜி அட்மிஷனுக்கு தயார் செய்யும் அம்மா,ஐந்தாம் வகுப்பில் இரண்டாவது ரேங்க் வாங்கினதுக்கு குழந்தையை அழ அடிக்கும் பெற்றோர்,ஆறாம் வகுப்பில் Fitjee யில் சேர்க்கும் ambitious பெற்றோர்,ஐ ஐ டி தவிர இந்தியாவில் கல்லூரி இல்லை போல் ரிசல்ட் அன்று தூக்கம் தொலைக்கும் குடும்பங்கள்,அப்படியே குழந்தைகள் நாலு வருஷம் படித்து முடித்தாலும் முதல் நாள் campus interview ல் வேலை கிடைக்காவிட்டால்,ஒரு மாதம் பையன் சும்மா இருந்தால் சுனாமி நுழைந்தது போலாகும் வீடுகள் ,கல்யாண மார்க்கெட்டில் விலை போக முக்கியமாகப் பெறப் படும் மாஸ்டர்ஸ் டிகிரி வைத்துள்ள குழந்தைகளின் பெற்றோர்,அனைத்துக்கும் சிகரம் வைத்தார் போல் தன் பேரனோ பேத்தியோ சிறப்புக் குழந்தை என அறிந்த முதியவர்கள் ஆகியோருக்காவது இது பெரிய விஷயமே.நான் அப்படித்தான் நினைக்கிறேன்.வாழ்வு இரு கோடுகள் தத்துவமே.எல்லாருக்கும் ஒன்று சொல்ல விருப்பம்.

இந்தக் குழந்தைகளால் குடும்பங்கள் ஒரு மிதவாழ்வுக்கு பழகிவிடுகின்றன.அதீதமான உணர்வுப் பரிமாறல்கள் இருப்பதில்லை.கையளவு உள்ள இதயத்தில் முக்கியமான இடம் இக்குழந்தைகளால் ஆக்ரமிக்கப் பட்டுள்ளதால்,மற்ற அனைத்தும் அதை விட சிறிதாகவே தெரியும்.அப்படியெனில் யாரும் அவசியம் இல்லை என்று பொருள் கொள்ளக் கூடாது.இக்குழந்தையைச் சுற்றித்தான் எங்கள் உலகம் சுழலும்.வேறு மாதிரி இருக்க முடியாது.அதனால் நான் இவர்களுக்குத் தேவை இல்லையோ என்ற சந்தேகம் கொள்பவர்கள் எங்களால் தரப்படும் எந்த சமாதானத்தையும் ஏற்க முடிவதில்லை.அவளுக்கு ராகவன் ஒரு சாக்கு என்று சொல்பவர்கள்தான் அதிகம்.எனக்கு லேசான வருத்தம் வருவதுண்டு.ஆனால் கோபம் இல்லை.கோபங்கள் மறைந்து 29 ஆண்டுகள் ஆயின.உண்மை. பெரிய அழுத்தம் சுமப்பதாய் பொய் சொல்ல மாட்டேன்.ஆனால்,வேறு எந்த pressure ம் எங்கள் போன்ற பெற்றோருக்கு additional pressure தான்.சந்தேகம் இல்லாமல்.பக்கத்து வீட்டு ராமநாதன் சனிக்கிழமை ஆபீஸ் போகலையா,குழந்தைகளுக்கும் மனைவிக்கும் டிரைவர் வேலையா பார்க்கிறான் என்றால் இல்லைதான்.ஆனால் ராமநாதன் மனைவி அவர் நகர்ந்ததும் ஜோல்னா பையை மாட்டிக் கொண்டு பாண்டிபஜார் போகலாம்.வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளலாம்,காத்து வாங்கலாம்.ராமநாதன் குழந்தை பிஸ்ஸா சாப்பிட்டு வரும்.எங்கள் குழந்தை சாப்பாட்டு கிண்ணத்தைத் தூக்கி வந்து பசி எனக் காட்டும்.எங்கள் கூரை கீழேயே வசித்தாலன்றி என் மொழி புரிவது கடினமே.

ஒவ்வொரு நாளும் வேறானது.சிறப்புப் பள்ளிகளில் பெற்றோரை இவன் அம்மா அப்பா என்றே conscious ஆகக் குறிப்பிடுவார்கள்.ராகவனை ஒட்டி என் நாள்களில்,செயல்களில் மாற்றங்கள் இருப்பின் அது ஏன் யாருக்கும் புரியவில்லை?என் மொழி வேறா?குடும்பத்தினரே ஜாலியா இரு என்கிறார்கள்.எது ஜாலியின் டெபினிஷன்?ராகவனுக்கு வருத்தம்,அழுத்தம் புரியாது.அதனாலேயே நான் நித்ய ஜாலிதான் என்று சொல்லி ஆயிற்று.ஒரு முறை அல்ல.பல முறை.அதிகப்படியான excitements ம் இக்குழந்தைகளுக்குப் புரியாது. எங்கள் மூவருக்குமே அதுவே பழகிப் போனது.Nothing excites greatly.அதில் தவறென்ன? என்னுடன் தொடர்பில் உள்ள அனைவருக்கும் சொல்லி விட்டேன்.உங்களுடனான என் உறவு வேறு.எங்கள் வித்தியாசமான வாழ்க்கை முறை வேறு என்று.வாழ்வு ஒரு சதுரங்கம்.அவரவருக்கு ஒரு இடம்.எனக்கு குழப்பம் இல்லை.குழப்பிக் கொள்ளவும் கூடாது.அதனால் சில நேரம் மௌனம் காக்க வேண்டிவருகிறது.என் மொழி புரியாவிட்டால் பரவாயில்லை.என்னை அறிந்தவர்களுக்கு என் மௌனமுமா புரியாது?

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

செவ்வாய், 14 நவம்பர், 2017

இரவின் மடியில்

இரவின் மடியில் இருக்கும் ஒருவன் எப்படி இருப்பான், இருக்க வேண்டும்?அமைதி. மௌனம். பேச்சில்லை. அசைவில்லை. எல்லா ஜீவராசிகளும் உறங்குகின்றன. தூங்கா பிராணிகள் உண்டு என்று கூகிள் தேடல் செய்து கண்டறிய வேண்டாம். பொதுவாகச் சொல்கிறேன். நல்லவன் , அல்லாதவன் எல்லாருக்கும் தூக்கம் பொது. காலை முதல் சாவி கொடுக்கப் பட்ட பொம்மை போல ஓடி,  கதிரவன் மேற்கே மறையும் நேரம் வேகங்கள் குறைகின்றன. கொஞ்சம் கொஞ்சமாய் ஒடுங்கி, இரவின் மடி தேடி, தலை சாய்க்கிறோம். நித்ரா தேவி நம்மை ஆட்கொள்கிறாள். உறக்கம்,  இறப்பு இரண்டையும் ஒப்பிடுகிறார் திருவள்ளுவர். ஆழ்ந்த உறக்கம் இறப்புக்கு சமம்தான். ஒன்று வாழ்வின் சலனங்களை நிரந்தரமாய் முடித்து வைக்கிறது. மற்றது தற்காலிகமாய்த் தள்ளி வைக்கிறது. அவ்வளவே வித்தியாசம்.

உலகில் பரீட்சைக்கும் , கல்யாணத்திற்கும்,  வேலைக்கும்,  பொருள் ஈட்டவும் இன்னும் எல்லாவற்றிற்கும் எத்துணை தூரம் தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டுமோ,  அத்துணை தூரம் தூங்கவும் தயார்ப்படுத்திக் கொள்ளுதல்  தேவையாகிறது. எத்தனை பேர் படுக்கையை முகர்ந்தால் தூங்குகிறார்கள்?எளிமையான உழைப்பாளிகள் குழந்தைகள் என ஒரு சிறு பட்டியல் உண்டுதான்.சஞ்சலம் அறியாதவர்கள்.  இங்கே குறிப்பிடுவது மன சலனங்களையே. நாம் மிக அமைதியாக செலவிடும் நாள் நல்ல உறக்கம் தருகிறது. அதனாலேயே உறங்கும் முன் செய்யலாம், செய்ய வேண்டும் என பெரியோர்கள், மருத்துவர்கள் சில செயல்களைப் பரிந்துரைக்கிறார்கள். கட்டுரை பௌதிகத் தூக்கம் பற்றியதல்ல.

மனிதர்களின் பல நாட்கள் தேவர்களின் ஒரு நாள் என்று ஏதோ கணக்குகள் எல்லாம் படிக்கிறோம். அது போல மனித வாழ்வு நூறு வருஷங்கள் ஆனால், ஐம்பது வயது வரை நம் பகல். ஐம்பது கடந்தவர்கள் இரவின் மடியில் உள்ளோம். இரவு தொடங்கி விட்டது எனில் எப்போது வேண்டுமானால் தூக்கம் நம்மை அணைக்கும்.  அதற்குத்  தயாராக வேண்டும். நல்ல முறையில் பகல் பொழுது முழுதும் செலவிட்டிருந்தால், அதுவும் இயல்பாக நிகழ்ந்திருந்தால்,  இரவு அமைதியாகத் தூங்க முடியுமா என்ற யோசனை வராது. தூக்கமும் தானாக வரும். சரி, பகல் பொழுது நாம் அறியாமலேயே வேகமாகக் கடந்து விட்டது.யாரோ கெடுத்து விட்டார்கள், நாமே மெத்தனமாகக் கெடுத்துக் கொண்டோம் என்றால் கூட,  அந்தி சாயும் நேரம் , விழிப்படையலாம். நிதானப் படலாம்.

பௌதிக உறக்கத்துக்கே எளிமையான இரவு உணவு நல்லது என்கிறோம், இரவு உடை அணிகிறோம், கனமான நினைவுகள் விலக்க வேண்டும் என்கிறோம், த்யானம் செய்து விட்டு உறங்கப் போவது நல்லது என்கிறோம். அப்போது உண்மை உறக்கத்துக்கு? கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விடலாமே, உணவு ஆசையை, உடை ஆசையை, வன்மங்களை, நான் நடத்துகிறேன் என்ற பரிதாபகரமான தவறான எண்ணத்தை, நான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ........எப்படி சொல்வது, இந்த உருவத்தின் மீது கொண்டுள்ள விலக்க இயலாத பற்றை, கழிவிரக்கத்தை, பயத்தை, விட இயன்ற எல்லாவற்றையும்தான். இந்த நாளை வாழ்ந்து விட்டேன் என த்ருப்தி தருமாறு ஒரு நாளை வாழ்ந்தால், மறுநாள் விடியல் போனஸ் ஆக தெரியும். எல்லா நாட்களும் ஒன்றா வேறா? 24 மணி நேரம், காலை இரவு இரண்டும் தினம் வரும் என்று யோசித்தால் அனைத்து நாட்களும் ஒன்றே.

ஆனால் ஒரு நாள் என்பதன் பொருள் வேறு. ஒரே ஒரு முறை பயன்படப் போகும் ஒரு பொருளுக்கு மரியாதை தேவையா, இல்லையா? யூஸ் அண்ட் த்ரோ பொருளுக்கு குறைந்த மரியாதை போதும் என்பது ஒரு வாதம். ஆனால் அது சரியில்லை. ஒரே தடவை பயன்படுத்தப் படுவதால் அது மிகவும் உயர்ந்தது என்பதே உண்மை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாழ்வும் அத்துணை முக்கியம் பெறுகிறது. எது பிணைக்கிறது? வாழ்வின் மேல் உள்ள ஆசை. அதை முற்றிலும் நீக்கிக் கொள்ள முடியாதோ என்னவோ? ஆனால் சிறிது விலகி நின்று பார்க்க முயலலாம். பண்ண வேண்டும். நாம் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் நிகழும் என்றறிந்த ஒன்றல்லவா?  இரவின் மடி ஆசைகளை ஏக்கங்களை சில சமயம் அதிகம் ஆக்கலாம். நாம் சந்தோஷம் என நினைத்த ஒன்றின் தேவையே இல்லை என்பது அதிக நிம்மதி.

ஓரிரு நாட்களாக  இரவின் மடியில் என்ற தலைப்பு மன அரங்கில் ஆடுகிறது. பகலின் பிடியில் உள்ளவரும் யோசிக்கவே வேண்டும். 6 மணி வரை பகல் என்றாலும், 6.01க்கு இரவு வந்துவிடுகிறதே!  விலகல் வருந்த வேண்டிய விஷயம் அல்ல. உண்மையில் கட்டுக்களில் இருந்து பெறும் விடுதலை. பெரும் விடுதலையும் கூட. சாதாரணமாக நினைத்துப் பார்த்தாலும், இன்றைய வேலைகள் முடிந்தன, தூங்கப் போகிறேன் என்பது மனதுக்கு எத்தனை லேசாக உள்ளது. ஆனால் நம் படுக்கையை நாம் விரித்துக் கொள்ள வேண்டும். யாரோ மெத்தை விரித்து ரெடியாக வைப்பது எல்லாம்,மறு நாள் ஓட வேண்டுமே என சலித்துக் கொண்டே தினம் தூங்கும் தரம்  சற்றும் இல்லாத தினப்படி  தூக்கத்திற்கு வேண்டுமானால் சரி. நான் இரவின் மடி வந்து ஐந்து ஆண்டுகள் சென்றதால், நல்ல உறக்கத்துக்கு ஆயத்தம் செய்யவே விருப்பம். ஆயத்தம் செய்ய துவங்கி  விட்டதால் தூக்கம் என்னிஷ்டமா என்ன?  எதுவும் அறியாத, அறிய முடியாத இறைவன் கை விளையாட்டு பொம்மைகள் அல்லவோ நாம்?

வியாழன், 13 ஜூலை, 2017

வேடர்கள் இருவர்

உங்களுக்கு திண்ணப்பனைத் தெரியுமா?
தெரியாது.உனக்கு?
எனக்கும் தெரியாது.
கண்ணப்ப நாயனாரை?
நம் யாருக்குத்தான் தெரியாது.!
திண்ணப்பனை,கண்ணப்ப நாயனாராக்கியது எது? ஏன் எல்லா திண்ணப்பனும்  நாயனாராகவில்லை?ஏதோ ஒன்று வித்தியாசம்.பக்தியா?அது எல்லோருக்கும் உள்ளது.அல்லது இருப்பதாக சொல்லிக் கொள்கிறோம்.காட்டிக் கொள்கிறோம்.பின்?அவனிடம் இருக்கும் எல்லாம் நம்மிடமும் இருந்திருக்கலாம்.ஆனால் அவனைத் தனிமைப் படுத்தி உயரத்தில் தூக்கி வைத்தது,நம்மிடம் நிறைந்து உள்ள ஒன்று அவனிடம் இல்லாதிருந்ததே.அது என்ன?நான் இன்னும் ஒரு பத்தி எழுதும்  வரை யோசியுங்கள்.பிறகு சேர்ந்து யோசிப்போம்.முதல் வேடன் கண்ணப்ப நாயனார்.அடுத்து தலைப்பின் நாயகன்,இரண்டாவது வேடன், குகன்.

குகனொடும் ஐவரானோம் என்று எம்பிரான் வாக்கால் தழுவ பட்ட,(physical   ஆகவும்தான்) பேறு பெற்ற  ஸ்ருங்கிபேரபுரத்தரசன் குகன்.பரந்தாமனிடம் கொண்ட பேரன்பினால் உண்மை அந்தணனான குகன் என்று குறிப்பிடப்படும் குகன்.கண்ணப்ப நாயனாரும் குகனும் ஏன் ஒரே ஜாதி?வேட்டுவர் குலத்தை சொல்லவில்லை.ஏன் உயர்ந்தவர்கள்?என்ன ஒற்றுமை அவர்களுக்குள்?என்ன வேற்றுமை நமக்கும் அவர்களுக்கும்?

உலகம் முழுவதும் கொடுக்கல் வாங்கலையே அடிப்படையாய்க் கொண்டு நடக்கிறது.பழைய காலத்தில் பண்டமாற்று முறை இருந்தது.பின் பணம் புழக்கத்தில் வந்தது.பணம் கொடுத்தால் வாங்கக் கூடிய பொருள்கள் பெருகின.என்ன தப்பான புரிதல் வந்துவிட்டது என்றால்,எதையும் வாங்க முடியும்,அதற்கு சமமான ஏதோ ஒன்றைக் கொடுப்பின் என்ற நினைப்பு நமக்கு வந்துவிட்டது.பணத்திற்கும் பணத்தால் வாங்கும் பொருளுக்கும் இது சரிவரலாம்.ஆனால் பணம் கொடுத்து வாங்க இயலாத நிம்மதி,சந்தோஷம் ,நேரம்,அன்பு ,நட்பு எத்தனையோ உள்ளதல்லவா?அவற்றை வாங்க என்ன செய்வது? சொல்லவா?கொடுக்க மட்டும் செய்வது.எடுத்துக் கொள்ளும் எண்ணம் சற்றும் அற்றுக் கொடுப்பது.உடம்பின் ஒவ்வொரு அணுவிலும்,என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு துளியும் இல்லாமல் தருவது.இதையே வேடர்கள் இருவரும் செய்தார்கள்.பெறற்கரிய பேறு பெற்றார்கள்.

சிவபெருமானிடம் அன்புமயமானவர் திண்ணனார்.அவர் செயல்கள் எல்லாம் தனக்கினியன என்கிறார் சிவபெருமான். அன்பே சிவம்.பெருமான் அன்பெனும் பிடியில் அகப்படும் மலை.அவனை அடைய செய்யப்படும் எல்லா கர்மங்களும் அன்பு வழிக்குப் பிறகே.பெருமான் சிரசில் உள்ள பூக்களை செருப்பால் நீக்குகிறாராம்.அது ஆண்டவனுக்கு குமரன் மலரடியைக் காட்டிலும் இனிமையாக உள்ளதாம்.திண்ணப்பன் கூறும் அன்பு மொழிகள் முனிவர்களுடைய வேதம்,மந்திரம் முதலியவற்றிலும் இனிமையாக உள்ளதாம். சாதாரண வாழ்வா அது?அவசரமாய் எழுத?சிவபெருமான் திருக்கண்ணில் உதிரம் பெருக தனது வலக்கண்ணை அனாயாசமாய் அகழ்ந்து ஸ்வாமியின் கண் உள்ள இடத்தில் வைக்கிறார்.இப்போது மற்ற கண்ணில் ரத்தம் வருகிறது.திண்ணப்பருக்கு அவனிடம் அன்பைக் கொடுக்க மட்டுமே தெரிந்தது.க்ஷண நேரம் கூட யோசிக்கவில்லை.அவர் கொண்டது பேரன்பு.தன்னை மேல்மனத்திற்கு கொண்டு வந்து இந்தக் கண்ணையும் இழந்தால் என்னாவேன் என்று பேரம் பேச முடியாத அன்பு. கொடுத்தார்.ஆட்கொள்ளப் பட்டார்.கண்ணப்பரானார்.

குகனுடையதும் எதிர்பார்ப்பற்ற தூய அன்பு.அன்பிற்காக மட்டும் அன்பு செய்தவன் குகன். பெறுவதை யோசிக்காதது தூய்மை அடைகிறது.வலிமை அடைகிறது.அது விளங்க காலம் ஆகும்.கொடுக்க மட்டும் ஜனித்த பிறவிகள் உண்டு.கர்ணன் போல்.கொடுக்க மட்டும் பழகிக் கொண்டால் நிம்மதி சந்தோஷம் கட்டாயம் வரும்.உயர்நிலை வரும்.ஆனால் அது தேவகுணம்.அடைய முயன்றால் நல்லது. வேடர்கள் இருவரும் நேற்று ரொம்ப நேரம் பாடம் சொன்னார்கள். உலகில் இந்த Bhavam பார்ப்பது அபூர்வம்.இறைவன் பக்தன், குரு சிஷ்யன், அரிய நண்பர்கள்,இன்னும் அரிய தாய் சேய் -----தவிர மற்ற தொடர்புகளில் சாத்தியக்கூறுகள் குறைவு.கோடியில் ஒரு மனிதன் பிறக்கலாம்.வேடர்கள் இருவரும் கோடியில் இருவர்தானே ! ஒருவித Heaviness உணர்கிறேன்.மறுபடி பேசலாம்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER  PROTECTS

திங்கள், 10 ஜூலை, 2017

பெண் விடுதலைப் புரட்சி


பல நூறாண்டுகள் அடிமைப் படுத்தப்பட்ட இந்தியாவில் விடுதலைப் புரட்சி வெடித்தது. அதற்கான விதையை ஓரிருவர் போட அது விருட்சமாகி, வனமாகி பிரிட்டிஷாரை,  திரும்பிப் பார்க்காது ஓட வைத்தது. ஆங்கிலேயர்களிடம் இருந்து நல்லன, அல்லாதன பலவற்றை எடுத்துக் கொண்டோம். பெண்களை,  பொருள் போல் பார்ப்பதை மட்டும் ஆதி காலம் தொட்டு மாற்றிக் கொள்ள நம்மால் முடியாது போயிற்று. எதற்கும் ஒரு வரம்பு உண்டு. வரம்புகள் மீறப் பட்டால் புரட்சி வெடிக்கும். செய்யாத தவறுக்கு சிறைவாசம் அனுபவிக்கும் கைதி போல,  அடிமைகளாய் நடத்தப் பட்ட பெண்கள்,  உயிருக்கும், ஆத்மாவிற்கும் பால் கிடையாது என்பதை,  பாரத சமூகம் புரிந்து கொள்ளாவிடின்,  புரிய வைப்பது அவசியம் என்று உணர ஆரம்பித்ததே பெண்விடுதலைப் புரட்சியின் ஆரம்பம். இது தேவையா, நல்லதா, இன்றைய பெண்கள் நடந்து கொள்ளும் முறை, நோக்கம் வெற்றி பெற உதவப் போகிறதா?

பெண்கள்,  தாம் ஆண்களை விடக் குறைந்து விடவில்லை என்பதை, உடை, கல்வி, செய்யும் வேலை, வகிக்கும் பதவி, இப்படிப் பல வழிகளில் வெளியிடத்  தொடங்கி சில ஆண்டுகள் ஆயிற்று. ஆனாலும்,  அவர்களை நல்ல பெண்கள் பட்டியலில் சேர்க்க பலர் தயாராயில்லை. உடை அணிவதை எடுத்துக் கொள்வோம். ஆண்கள் உடைகளை, குறைவான உடைகளை அணிவதன் மூலம்,  " பார்!  உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? " என்று கேட்கிறார்கள். நான் அடிக்கடி யோசிப்பதுண்டு. உடைமாற்றம் முழு மாற்றமல்ல என்று பெண்களுக்கு யார் சொல்வது என. ஆனால்,  அவர்கள் கண்ணோட்டத்தில் பாருங்கள். இப்போ ஒரு அம்மன் படம் வரைகிறோம். அது சரஸ்வதியா துர்கையா என்று கேட்டால் உங்களுக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது.  நாம் அந்த தெய்வங்களை தரிசித்ததில்லை. அந்த அம்மன் கையில் வீணை வரைந்தால் சரஸ்வதி. சூலம் வரைந்தால் துர்கை. சரிதானே?  அது போல முதலில், வெகு விரைவில் உணரும் புலன் கண் என்பதால், முதல் செய்தியைக் கண்ணால் பார்க்கும் உடைவழி அனுப்பும் ஆயத்தம் ஜீன்சும் டீ ஷர்ட்டும். என்ன தவறு?

இந்த விஷயத்திற்கு சில ஆழம் செறிந்த சூட்சுமக் காரணங்களை ஆராய்வோம்.நான்கு நிலைகளில் ஒரு செய்தி உணரப் படுகிறது. வெளியே (Physical) , உணர்வால்  (Emotional) , அறிவால்  (Mental) , சூட்சுமமாக ( (Psychological) என்பவை அந்த நிலைகள். குருக்ஷேத்திர யுத்தத்தில் பகவான் தேரை பாண்டவ கௌரவ சேனைகளுக்கிடை கொண்டு நிறுத்துகிறார். முதலில் அர்ஜுனன் உணர்வது ஆயாசம். அதன்பிறகு உணர்வதே,  என் சுற்றத்தாரல்லவோ இவர்கள் என்ற உணர்ச்சி மேலீடு. நம் சுதந்திரப் போராட்ட வரலாறு சொல்வதும் இதேதான். முதலில் என் நாடாகட்டும். அது போலவே, பெண் விடுதலைப் புரட்சியில், வெளிப்பார்வைக்கு, முதலில் என் உடல் என் சொந்தம் என்பதைத் தெளிவுபடுத்தவே பெண்கள் முதலில் செய்தது  உடை மாற்றம். அதை மற்றவருக்குப் புரியவைப்பது ஒருபுறம் இருக்கட்டும். தாங்களே உணர்ந்து கொள்ளவும் அநேகப் பெண்களுக்கு உடை மாற்றம் தேவைப் படுகிறது. மிகத்தெளிவாக இருப்பின், இதைத் தாண்டி அடுத்தது யோசிக்க இயலும். ஆனால்,  பெண்கள் பதட்ட நிலை தாண்டி, தெளிவு பெற,  நேரம் எடுத்துக் கொள்கிறார்கள்.  சவுகரியங்களுக்காக மட்டும் வேறு உடை அணிபவர்களை விவாதத்திற்கு உட்படுத்தவில்லை.

திடீரென இந்தத் தலைப்பில் எழுதக் காரணம் உண்டு.நேற்று நீயா நானா என்ற நிகழ்ச்சி தொலைக்காட்சியில் பார்த்தேன். பெண்கள் இரு பிரிவினராகப் பிரிந்து பேசினார்கள். அத்தனை பெண்களுமா ஏதோ பிரச்சினை கூறுவார்கள்? அவர்களில் வெளிப்பார்வைக்கு மிக தைரியமாய்த் தென்பட்டவரே அதிகம்.  இப்போது எல்லாம் மாறி விட்டது. ஆண் சமூகம் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டது என்று நினைக்கிறோம். ஆனால், இல்லை என்றே தோன்றுகிறது. சுதந்திரம் பெண்களிடம் உள்ளது. அதை வேறு யார்  தருவது?  வீட்டுப் பெண்ணை அடிமை கொள்ள நினைக்காது இன்னொரு உயிர் என நினைத்தாலே போதும். மதிப்புடன்   நடத்தப் பட்டால் அதை உணரும் திறன் இல்லா மூடப் பிறவி அல்ல அவள். கணவன் வாழ்வு, அவன் குழந்தைகள் வாழ்வு, அவன் பெற்றோர் வாழ்வு என ஏகப்பட்ட பேர் வாழ்விற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அவள் நேரத்தை, வாழ்வை நாங்கள் நிர்ணயிப்போம் என்ற மெத்தனப் போக்கிற்கு பெண்கள் தரும் அடியே முறிந்த திருமணங்கள். விவாகரத்துகள். அதிகரிக்கும் முதிர்கன்னிகள்.

இந்தப் போராட்டம் இன்னும் தீவிரப் படும்.  ஒரு தொடக்கூடாத எல்லையைத் தொட்டு நிலைப்படலாம். ஆனால்,  இந்தியக் கலாச்சாரம்  நம் பெண்களை எப்போதும் பற்றி உள்ளது. வெகுசிலர் பாதை தவறலாம். பெரும்பாலோர் மனதளவிலும் தவறுவதில்லை. பெண்களின் முதல் எதிரி இன்னொரு பெண். அது ஒரு சமூக அவலம். வெற்றி பெறும் ஒவ்வொரு ஆணின் பின் ஒரு பெண் இருக்கிறாள் என்பது பொது வழக்கு. ஆனால் என் அகராதிப்  படி, ஒரு பெண் வெற்றி பெற வேண்டுமெனில் அவள் பின் ஒரு நல்ல ஆண்மகன் உள்ளான். ஒரு புரிந்து கொள்ளும் குடும்பம் உள்ளது. இன்று உள்ள சாதனைப் பெண்கள் சிலரை எடுத்துக் கொள்ளுங்கள். மாமியாருடன் கிளம்பும் வரை உரிமைப் போராட்டம் நடத்திவிட்டு  (எதற்கு, சிக்கிக் கொண்டுள்ளவன் அவர்கள் பிள்ளையா, இவள் கணவனா என்ற பேருண்மையைக் கண்டறியத்தான்) மைக் பிடித்தால் பாட வருமா, கல்லூரியில் டீச்சரானால் கணக்கு சரியாக சொல்லிக் கொடுக்க முடியுமா,  எந்த சாதாரண வேலையாயினும் ரிதம் தப்பாதா ?  என் கல்லூரித் தோழிகள் தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பெரும் பதவிகளில் இருப்பதாக வாட்சப் செய்தி வந்தது. மிகவும் சந்தோஷமான செய்தி.  வீட்டில் உள்ளவர்கள்,  அவர்களுக்கு வடை சுட தெரியுமா என்பதையே யோசித்துக் கொண்டிருந்தால் விமோச்சனம் இல்லை. அதற்காக வடையை வட்டமாக செய்யத் தெரியாதவர்கள் வெளியில் போய் வேலை செய்யத்தான் வேணும் என்பதும் இல்லை.

கேவலத்தின்  உச்சமாக இன்னொரு செய்தி வந்தது. ஒரு பையன்,  ஒரு சக மாணவியிடம் காதல் சொல்கிறான். அவள் தனக்குள்ள கடமைகள், சாதிக்கும் ஆசை  பற்றிக் கூறி மறுக்கிறாள். காலம் ஓடுகிறது. அவளை ஐந்து வருஷங்களுக்குப் பின் பார்க்கிறான். அப்போது, அவள் நிர்வாணமாக நிற்கும் தன் குழந்தைக்கு உடை அணிவித்துக் கொண்டிருக்கிறாள். கண்ணியமாக  எழுதி உள்ளேன். ஊகிக்க முடிந்தவர் ஊகித்துக் கொள்ளுங்கள். சாதனை  என்று அதை அம்புக்குறியிட்டு அந்தப் பையன் நகைப்பதாக அந்தக் குறும்படம் முடிகிறது. வெட்கப் பட வேண்டியது அவனா அவளா?  பெண் வெளிவர இதைவிட சிறப்பான நேரம் இல்லை . வீட்டுக்குள் பெண்ணைப் பூட்டி வைத்த விந்தை மனிதர் தலை கவிழும் நேரம். என்ன,  எல்லாப் புரட்சியும் போல வரவரத்  தீவிரமாகிறது.  அபாய எல்லையை எட்டும். எட்டட்டும். முடிவுக்கும் வரும். வாழ்க்கைச் சக்கரம் சுற்றும். நாம் எல்லாவற்றையும் பார்க்க முடியாது. நம் சந்ததி பார்க்கட்டும். ஆணும் பெண்ணும் சமமான சமுதாயம் உருவாகட்டும்.