வெள்ளி, 15 ஏப்ரல், 2016

ராமாயணம்-கதைத் தோற்றம் -சிறு அலசல்

இன்று ஸ்ரீ ராம நவமி.அந்தந்த நாள்களுக்கென்று ஒரு மூட் உண்டு.பண்டிகை நாள்கள் உள்முகம்தான்.100 வருடங்களுக்கு மேல் பூஜை பெற்ற அந்த நிற்கின்ற ராமன் படத்திற்கு புஷ்பம் வைக்கையிலே ராமாயணக் காட்சிகள் மனதில் ஓடத் தொடங்கியது.நம் பலருக்கும் நடக்கும் ஒன்றுதான்.இப்போது பட்டாபிஷேக ராமர் படங்கள்தான் நிறைய வரையப் படுகின்றன.அதனாலேயே அந்த நின்று தரிசனம் தரும் கோதண்ட ராமர் படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.அழகின் பெண்மையின் கருணையின் வடிவாக கொடி போல ஸ்ரீராமன் அருகில் நிற்கும் பிராட்டி,பாதத்தில்கூப்பிய கரங்களுடன் மகாபக்த ஹனுமான் எம்பெருமானுக்கு இன்னொருபுறம் நிற்கும் இளவல் லட்சுமணன்.இளவலுக்கு நான் அடைமொழி தரத் தகுதியற்றவளாக உணர்கிறேன்.நீங்கள் உலகத்தின் உயர்ந்த சகோதரனுக்குக் கொடுக்கும் அடைமொழியை போட்டுக் கொள்ளுங்கள்.ராமாயணக் காட்சிகளை ஒரு திரைப் படத்தை விடவும் அழகாக எங்கள் குழந்தை மனதில் பதியச் செய்த தாத்தாவை நினைத்து விட்டுத்தான் ஸ்ரீராம ஸ்மரணை செய்ய என்னால் இயலும்.அஷ்டோத்திரம் படித்துப் பூஜை முடித்த போது அஷ்டோத்திர வரிகளை மனம் அசை போட்டது.ஸ்ரீராமனைப் பூஜிக்கும் பலவரிகளுக்கு இடையிடையே,தாடகை,ராவணன்,மாரீசன் பெயர்களும் இடம் பெற்றிருந்தது.அதாவது இவர்களை எல்லாம் வதம் செய்த பெருமான் என்ற பொருள் தாங்கிய சொல் தொடர்கள் வந்தன.அஷ்டோத்திரத்தில் இடம் பெறாத ராமாயணக் கதாபாத்திரம்,முக்கியக் கதாபாத்திரம் யார் என்ற எண்ண ஓட்டமே இந்த எழுத்தின் ஆரம்பம். யார் அது?கைகேயி.

கோடு போட்டு நிற்கச் சொன்னான் சீதை நிற்கவில்லையே சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே என்றார் கண்ணதாசன்.ஆனால் லட்சுமணன் கோடு போடுவதற்கு முன்னமே ராமன் கதை திருப்பம் கண்டு விடுகிறது.ஒவ்வொரு வாழ்க்கைக்கும் ஒரு நோக்கம் உண்டு.அவதாரங்களுக்கும்தான்.அந்த அவதார நோக்கம் நிறைவேறத் தோதாக நிகழ்வுகள் அமைகின்றன.அவதாரபுருஷனுடன் கூடவே வரும் பலர் அந்த நிகழ்வுக்குத் துணை புரிகிறார்கள்.அதனால் இந்த நிகழ்வுகள் predestined என்பதில் சந்தேகம் இல்லை.கைகேயிதான் ஸ்ரீராமாவதாரத்தின் நோக்கம் பூர்த்தியாக வித்திட்டது.கைகேயி நல்லவளா கெட்டவளா என்பது அல்ல நம் விவாதம்.ராமாயணம் ஒரு எளிய கதை போலத் தோன்றலாம்.அது உண்மை அல்ல.Interpreting the epic is not that easy .அயோத்யா காண்டத்தில்தான் கதை விரியத் தொடங்குகிறது.வால்மீகியும் கம்பனும் துளசிதாசரும் மாறுபடும் இடங்கள் பல.நாம் அவரவர் விருப்பப் படி,அவரவர் அடிப்படை குணங்களின் படி இந்தக் காவியத்தை அதன் கதாபாத்திரங்களைப் புரிந்து கொண்டுள்ளோம்.After thousands of years the scar on Kaikeyi's character remains.ஏன்?

இதுதான் என் கேள்வி.ராமன் தன்  தாயைவிட அதிகம் அன்பு செலுத்தியது கைகேயியிடம்தான்.கைகேயியின் உயிர் ஸ்ரீ ராமன்.அப்படியானால் என்ன நிகழ்ந்தது கைகேயிக்கு?மந்தரை சொல்பேச்சு கேட்டுதன் நிலை இழக்கும் அளவு திண்மை அற்ற கதாபாத்திரமா அவள்?வரம் பெற்று வனம் போக ஆணை வந்தும் ஸ்ரீ ராமன் முகம் சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை போல் இருந்ததாகக் கம்பன் பாடுகிறார்.மன்னவன் பணி என்றாகில் நும் பணி மறுப்பனோ என்றாராம் ராமன்.எனக்கு நீ வேறு,தந்தை வேறா?அவர் இட்ட பணி என்று ஏன் கூறுகிறாய்?நீ இட்ட பணியை நான் செய்யாதிருப்பேனா என்கிறார்.ஸ்ரீராமனை கைகேயியின் நடத்தை எந்த வகையிலும் மாற்றவில்லை.ஆனால் அவள் ராமன்மீது கொண்ட அன்பு என்னாயிற்று?மந்தரையின் துர்போதனையால் அவ்வளவு நாள் கொண்ட அன்பு மாறி விட்டதா?இல்லை அவள் வரங்களுக்கு ஏதேனும் உள் பொருள் உண்டா?இதைக் கம்பனும் வால்மீகியும் ஒவ்வொரு விதமாகவும் சொற்பொழிவாளர்கள் வேறு பல விதமாகவும் பொருள் படுத்துகிரார்கள்.நான் கூறப் போவது என் பார்வையில் கைகேயி.கைகேயி ஒரு நெகடிவ் கதாபாத்திரம்தான் என்வரை.

இப்போது ஒரு புது டிரெண்ட் உருவாகி உள்ளது.துரியோதனன்,ராவணன் போன்ற எதிர்மறை மனிதர்களை ஹீரோவாகக் கொண்டாடி அவர்களைக் கதாநாயகனாகக் காட்டி அவர்கள் பார்வையில் ராமாயணம்,மகாபாரதம் சொல்லும் கேலிக் கூத்து.நீ ஒரு ராவணனாக,துரியோதனனாக,கைகேயியாக உன்னை வெளிப் படுத்திக் கொள்ள விரும்புவாயா?மாட்டேன் என்றால் அங்கேயே என் வேலை முடிந்தது.அவர்களிடம் உள்ள நல்ல குணங்களைப் பட்டியல் இடுகிறார்கள்.ஏதேனும் ஒரு தீய குணம் போதும்.நல்லது அனைத்தையும் ரப்பர் போல அழிக்க.இப்போது கைகேயிக்கு வருவோம்.

1.கெட்டவர்களால் மதி இழப்பது குற்றம்.
2.தன் மேல் மோகம் கொண்ட தசரதனின் weakness ஐ சரியானபடி பயன்படுத்தி ,சற்றும் இரக்கமற்று வரம் கேட்டது குற்றம்.
3.தன் வரம் வழங்கப் பட்டால் என்னென்ன விபரீதங்கள் நிகழும் என அறிந்தும் அதை விரும்பிப் பெற்ற perversity .
4.தவறான சகவாசம் என்ற குற்றம்.
5.அவள் மனதில் என்ன இருந்ததோ,நாம் அறியோம்.காட்டக் கூடாத இடத்தில் தன்  பலத்தை ப்ரயோகித்த அல்ப குணம்.

ஏன் கைகேயி என்ற பெயர் யாரும் இடுவதில்லை,என்ற கேள்விக்கு பரதன் உன் பெயரில் யாரும் இருக்க மாட்டார்கள் என்று சபித்ததாகக் கூறுகிறார்கள்.அது மட்டும் காரணம் இல்லை.புராணங்களையும் இதிகாசங்களையும் கிண்டல் செய்து மட்டுமே வரும் நாஸ்திகவாதிகள் கூட அந்தப் பெயர் பக்கமே போகாததற்குக் காரணம் அந்த கதாபாத்திரத்தின் மேல் உள்ள வெறுப்பே.தீராத தீர்க்கவே முடியாத பழி சுமந்த பாத்திரம். ராமாயணக் கதை உருவாகக் காரண கர்த்தா என்பதற்கு மேல் கைகேயி பற்றிப் பேச எனக்கு எதுவும் இல்லை.ஆனால் வால்மீகி,கம்பன் என்ன நினைத்து இதிகாசத்தை வடித்தார்கள் என்று நினைத்து மாளவில்லை.நம் நாட்டு சரித்திரத்தின் மூன்று வித moods ஐ பிரதிபலிப்பவர்கள்,வால்மீகி,வியாசர்,காளிதாசன்.வால்மீகி-Moral ,வியாசர்-Intellectual ,காளிதாசன்-Material Poets .எனலாமா?ராமாயணம் ஒரு ideal அதாவது உயர்ந்த உன்னத சமூகத்தை எடுத்துக் காட்டுகிறது.Ideal என்றால் கற்பனையாகத்தான் இருக்க முடியும் என்ற தவறான கருத்துக்கள் உண்டு.ராமாயணத்தில் ஒரு உண்மை சமூகம் உயர்ந்து நிற்கிறது.வெறும் கற்பனையை மட்டும் வைத்து ஒரு ideal சமூகம் பற்றி வால்மீகியால் எழுதி இருக்க முடியாது.உத்தர காண்டத்தில் காணப் படும் விஷயங்கள் ideal ஆனவையா என்ற கேள்வி வருகிறது.அதற்கு பதில் it is a later addition .குழப்பிக் கொள்ள வேண்டாம்.

குழந்தையாக உள்ள மனித இனம் அதாவது younger humanity ஐக் காட்டும் இதிகாசம் ராமாயணம்.அடுத்தடுத்த அவதாரங்கள் evolution ஐக் காட்டுவதை நாம் அறிவோம்.இராமாயண காலம் எளிமையானது.அதிகக் குழப்பங்கள்,complexities கிடையாது.ஒன்று நினைத்து வேறு செய்தல்,இரு பொருள் படப் பேசுதல் அறிவை வேண்டாத விஷயங்களுக்குப் பயன்படுத்துதல்(கைகேயி போல என சொல்லாமல் இருக்க முடியவில்லை) என்பதெல்லாம் குறைவு.Rare .காட்டுக்குப் போ என்று தந்தை சொன்னால் பித்ருவாக்ய பரிபாலனம் செய்ய வேண்டுமே தவிர கேள்விகள் கிடையாது.வால்மீகியின் இயல்பு imaginative ,sensitive ஆகவே இருந்திருக்க வேண்டும்.நிலையில் இருந்து திரிந்து நடக்கும் மனிதர்கள்,அலட்சியம்,வன்முறை எல்லாம் அவருடைய பரிசுத்தமான நீதி வழுவாத மனதை shock செய்திருக்க வேண்டும்.தீமை கண்டு ,பாவம் கண்டு இரங்கி இருப்பார்.ஆனால் அவருடைய அழகிய மனதிற்கு அவை ரசக் குறைவாகத்தான் இருந்திருக்கும்.The most paradoxical poem.Nothing is superior to Ramayana.It portrays the picture of entirely moralised civilisation என ஸ்வாமி அரவிந்தர் குறிப்பிடுகிறார்.

கவிச் சக்ரவர்த்தி கம்பன் பார்வையையும் சுருக்கமாகப் பார்த்து விட்டு முடித்துக் கொள்ளலாம்.கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் என்றால்,அவர் ஏன் வால்மீகி ராமாயணத்தை மறுபடி எடுத்துக் கொண்டார்?ஒரு புது காவியம் படைத்திருக்கக் கூடாதா? ஒரு சமூகம் தர்ம வழியினின்றும் பிறழும் போது பேரரசுகள் கூட வீழ்ந்திருக்கின்றன.கம்பன் தான் வாழ்ந்த காலத்தில் தான் விரும்பிய values ஐ மக்களுக்குச் சொல்ல ஏற்கெனவே தமிழ் மக்களுக்கு மிகவும் நெருக்கமான ராமாயணத்தை எடுத்துக் கொண்டார்.இடைச் செருகல்கள் உண்டு.அவர் முதலில் கொடுக்கும் செய்தி புலனடக்கத்தின் அவசியம்.அவர் பார்த்ததும் ஒரு idealistic society யே .அயோத்தி மாநகரில்,தருமம் இல்லையாம்.ஏனெனில் அதை ஏற்க ஆளில்லை.Hero இல்லை.ஏனெனில் விரோதிகள் இல்லை.பொய் இல்லை.அதனால் உண்மை என்று தனியாக ஏதும் இல்லை.

நகரப் படலத்தின் அந்த அழகுப் பாடல்

வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை ஓர்  செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய் உரைஇலாமையால்
வெண்மை இல்லை பல கேள்வி மேவலால்
நகரத்தில் தொடங்கி மனிதர்கள் வரை அவர் சொல்ல விரும்பியது உயர்ந்த செய்திகள் மட்டுமே.எனவே வால்மீகியும் கம்பனும் சில தகவல்களில் வேறுபட்டாலும் எண்ணம் ஒன்றே.

இந்த blog ன் தொடக்கம் கேகயன் மகள்.எழுத ஆரம்பித்தது முதல் கருத்துகள் திரட்டினேன்.மனிதர்கள் நல்லது,கெட்டது நிறைந்தவர்கள்தான். கைகேயியின் சில ,வெகு சில நல்ல குணங்களை சில தோழர்கள் சுட்டிக் காட்டினார்கள்.கேட்டுக் கொண்டேன்.ஆனாலும் கைகேயியின் நடத்தை பற்றிய என் கருத்துக்களில் மாற்றம் இல்லை.அந்தத் தோழர்கள் இதை personal ஆக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டு,வள்ளுவனை என் கருத்துக்களுக்கு வலிமை சேர்க்க அழைத்து நிறைவு செய்கிறேன்.
ஒரு செயல் தப்பு என்றால் தப்புதான்.தவறை சரி என்றால் பார்வைதான் தவறு என நான் கூறுவேனே?

"தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்"
தீவினை அச்சம் என்ற அதிகாரம்.ஒரு தீய செயல் தீய விளைவைத்தான் தரும் .அதனால் நெருப்பை விட பயங்கரமானது.

"மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்
அறஞ் சூழும் சூழ்ந்தவன் கேடு"
மறந்தும் மற்றவருக்கு கேடு செய்யக் கூடாதென்றால்,நினைவுடன் அதை செய்பவர் எப்படி நல்லவர்?

"ஈன்றாள் பசி காண்பானாயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை"
பெற்ற தாய் பசியுடன் இருந்தால் கூட,அதை ஆற்றக் கூட சான்றோர் பழிக்கும் செயல்கள் செய்யக் கூடாது.என்ன நல்ல நோக்கம் இருந்தது ,கைகேயியின் செயல்களுக்கு?

"கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்"
தகாதவை என ஒதுக்கப் பட்ட செயல்களை ஒதுக்கி விடாமல் செய்பவர்களுக்கு ஒரு வேளை  அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும்.கைகேயிக்கு அதுதானே நடந்தது?இறுதியில் துன்பம்தானே?

"அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பாலவை"

பிறர் வருந்துமாறு செய்து பெற்றதெல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய் விடும்.நல் வழியில் வந்தவை இப்போதில்லை என்றாலும் முடிவில் நன்மையே தரும்.

திருவள்ளுவர் சொன்னால் நான் நம்புவேன்.ஏன் என்றால் அவர் மட்டும்தான் ஒன்றை செய் என்றால் ஏன் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.செய்யக் கூடாதென்றால் ஏன் செய்யக் கூடாதென்றும் சொல்கிறார்.At random 1330 ல் எந்த குறளை  வேண்டுமானாலும் எடுத்து பரீட்சித்துப் பாருங்கள்.அவர் வாய்மொழி வந்தவற்றிற்கு அவர் authority தான் .

அதனால்தான் எனக்கு கைகேயியின் கதாபாத்திரம் பிடிக்கவில்லை.ராமன் என்ன பண்ணியிருப்பினும் அவன்தான் கதை நாயகன்.ராவணன் எப்பேற்பட்ட சிவபக்தனாயிருப்பினும் பிறன் மனை விழைந்த பேடித்தனத்தால் வில்லன்தான்.பேசுவோம்.
ரஞ்ஜனி த்யாகு
Mother protects

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

உங்களுக்கு நேரம் இருக்கிறதா?

நம்மைச் சுற்றி நடப்பவற்றை உற்று நோக்கி வாழ்வது ஒரு வகை.வாழ்வை அதன் போக்கில் எடுத்துக் கொண்டு எளிதாக வாழ்வது மற்றொரு விதம்.மனம் எண்ணுவதைப் பகிர்ந்து கொள்ள பலசமயம் வீட்டின் சுவர் மட்டுமே தயாராய் இருக்கும் போது எழுத்தை விட உற்ற துணை யார்?எனக்கு என் கணவர்,மகன்,பெற்றோர்,தோழர்கள்,வீட்டில் வேலை செய்வோர்,ஏன் ,எங்கள் பால்கநியைத் தினம் விசிட் செய்யும் காக்கை எல்லோருக்கும் நேரம் தர முடியும் போது எனக்கு சில மணித் துளிகள் தர இவர்களிலேயே பலருக்கு ஏன் நேரம் இல்லை என்று புரியவில்லை.இல்லாமல் போவது நேரமா மனமா?இல்லை அவரவர் ஏற்படுத்திக் கொண்ட,போட்டுக் கொண்ட கட்டுக்களா?எதுவாயினும் அதை நான் ஒரு வன்முறையாகவே எண்ணுகிறேன்.ஒருவர் நம் நேரத்தை யாசகம் கேட்டு அதை மறுப்பது violence அன்றி வேறென்ன?அப்படி நேரம் தர முடியாதபடி வேறெது பெரிது?நாளை அந்த நேரத்தை உன்னிடம் யாசிக்க அந்த ஜீவன் ஜீவித்திருக்கும் என்பதற்கு உத்திரவாதம் உண்டா உன்னிடத்தில்?

ஒரு ஐந்து நிமிடம் பேசவா என்று கேட்பவரிடம் பேசுங்கள்.என்ன குறைந்து விடும்?எதற்காக பிறகு பேசச் சொல்லி ஒத்திப் போடுவீர்கள்?யாருடன் இருந்தால் என்ன?என்ன சூழலில் இருந்தால் என்ன?மன்னித்துக் கொள்ளுங்கள் என்னை நாடி ஒருவர் எதற்கோ அழைக்கிறார் சற்று காது கொடுத்து விட்டு வருகிறேன் என்று கூட சொல்ல இயலாது யாரிடம் மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?இன்று என்னை பேசத் தூண்டியது இதுதான்.என்னால் அனைவரிடமும் பேச முடிவதில்லை.நேசம் இருப்பவர்களிடம் கூட இந்த அவசர யுகத்தில் நேரம் கேட்கத் தயக்கமாகவே உள்ளது.கணவரிடம் தொலை பேசியில் பேச முயற்ச்சித்தால் கூட,I will call you later மெசேஜ்தான் வரும் பெரும்பாலும்.ஐம்பதுகளில் வம்பு பேச விரும்பாதவர்களுக்கு பேச யாராவது கிடைப்பது அபூர்வம்.ஒரு அனுபவம்.எனக்கு அப்படி ஒரு நட்பு அமைந்தது;மனதும் அமைதியாக இருந்தது;பூங்காவில் உட்கார்ந்து வானம் பார்த்து மேகங்கள் நகரும் அழகைப் பகிரவும்,நிலா உலாப் போவது பற்றிக் கவிதை பாடவும்,மனிதரில் எத்தனை நிறங்கள் என அலசவும்,தெய்வத்தின் குரலை சேர்ந்து வாசிக்கவும்,பாரதியையும் வள்ளுவனையும் நினைவு கூரவும் ,எல்லாவற்றிற்கும் மேலாக மன அழுத்தங்கள் அனைத்தையும் மறைக்காமல் வெளியிடவும் ஒரு இடம் இருந்தது.இப்போது என்ன ஆயிற்று என்கிறீர்களா?சொல்வேன்.

அந்த நட்பு எனக்கு நேரம் தர வரைமுறைகள் விதிக்கிறது.அது மனதைப் பாதிக்கிறது.நட்பு இரு வழிப் போக்குவரத்தல்லவா?எனக்குதான் புரியவில்லையா?உன்னுடன் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை என்பதன் பொருள் புரிபடுவதில்லை.நான் கொண்ட தோழமை உணர்வு என் வாழ்வை  எளிமையாக்குகிறது.இனிமையாக்குகிறது.ஆனால் அதுவே என் தோழிக்கு சங்கடம் தருவதாகி விட்டது.எனக்கு மனம் சோர்வாக உள்ள பொழுதுகள் எல்லாவற்றிலும் ,வேறு யாருக்கோ நேரம் தந்து கொண்டிருப்பேன்.நீ பிறகு வா என்றால் யாரோ காதில்  வெந்நீர் ஊற்றினார் போல் உள்ளது.என்னுடன் ஐந்து நிமிடம் பேசி விட்டு ஐந்து மணி நேரம்    வேண்டுமானாலும் காணாமல் போயேன் என்று கத்த ஆசையாக உள்ளது.என் சந்தோஷம் உன்னதும் என்றால் அந்த ஐந்து நிமிஷ சந்தோஷத்தைக் கூட உனக்கு அனுமதிக்காதவர்களுக்கு என்ன பெயர் தரட்டும்?அப்படி உலகில் ஒரு வேலை உண்டா என்ன?கொடுக்க 24 மணி நேரத்தில் சில மணித்துளிகள் இல்லாமல் போகுமா என்ன?நம்மை நாடி ஒருவர் வரும் போது நம் நேரத்தைப் பகிர்ந்து கொண்டிருப்பவரிடம் ஐந்து நிமிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு பேச இயலாதபடி அவர்கள் எந்த வகையில் பெரியவர்கள்?சாமியா?ஆசாமிதானே?எந்த ஜீவன் யாரை விட உயர்வு?ஏன் ?உனக்குப் பேச விருப்பம் இல்லாவிடில் வேறு விஷயம். விரும்பியும் சூழ்நிலைக் கைதியானால் அது என் நேரம்.காலத்தில் செய்யும் செயல்களுக்குத்தானே பலன்?

கண் காணாத தொலைவில் இருந்து கொண்டு பகிரக் கூடிய சிலவற்றில் முதன்மையானது நேரம்தானே?வேறு எதைக் கேட்கிறேன் எதையுமேவேறெதையுமே எதிர்பார்க்கவில்லையே இதற்கா இவ்வளவு போராட்டம் என்று வருத்தமாக இருந்தது.பல விளக்கங்கள் அளிக்கப் பட்டாலும் மனதிற்கு உடன்பாடில்லை.சுவற்றிடம் முறையிட்டேன்.பதில் இல்லை.எழுத வேண்டும் போல் இருந்தது.எழுதி ஆயிற்று.கண்டிப்பாக நம்மால் எல்லாருக்கும் எல்லாவற்றிற்கும் நேரம் ஒதுக்க முடியும்.நம் நேரத்தால் ஒருவர் அமைதியும் மகிழ்ச்சியும் அடைவார்கள் என்றால் அதைக் கேட்கும் போது அவர்களுக்குத் தருவோமே?மற்றவர் தரும் பொருளுக்காகக் காத்திருப்பவர்களை எப்படி அழைப்பது?ஏழைகள்?எனக்குத் தெரியவில்லை.ஆனால் இந்த ப்ளாக் வலியில் பிறந்ததே.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

நாம் நல்ல பெற்றோரா நல்ல குழந்தைகளா ?

பத்தாம் வகுப்பு பனிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.பரீட்சை எழுதும் வயதில் குழந்தைகள் உள்ள வீடுகளில் டென்ஷன் உச்ச கட்டத்தில் உள்ளது.ஹெல்ப் லைனுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் வருடத்திற்கு வருடம் அதிகமாகிக் கொண்டு வருகின்றன.கணக்கு வினாத்தாள் சற்று கடினமாக வந்து விட்டால் பெற்றோர் தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை தூக்கம் தொலைக்கிறார்கள்.பரிட்சைக்குக் கிளம்புகிற குழந்தைக்கு வாயில் உணவு அடைக்கப் படுகிறது.கையால் எடுத்து சாப்பிடும் நேரத்தில் படிக்க முடியாது போய் அரை மார்க் குறைந்தால் அண்ணா யுனிவர்சிட்டி கௌன்சிலிங்கில் நல்ல கல்லூரி எதிலும் இடம் கிடைக்காது.கொக்கிற்கு ஒன்றே மதி என்பது போல் எஞ்சினியரிங் தவிர வேறு படிப்புகள் எதையாவது குழந்தைகள் தேர்வு செய்தால் பெற்றோர் கவுரவம் என்னாகும்?எங்கோ தவறு என்று தோன்றுகிறதா இல்லையா?எனக்குத் தோன்றுகிறது.

நாம் குழந்தை வளர்ப்பதற்கும் நம் பெற்றோர் நம்மை வளர்த்ததற்கும் வித்தியாசம் உள்ளது.இந்தக் கட்டுரை அது பற்றிய விவாதமே. தொடக்கத்தில் சொல்லி உள்ள விஷயங்களை படைத்தவனே வந்தாலும் இன்னும் பல ஆண்டுகளுக்கு ஒன்றும் செய்ய இயலாது.நம் பெற்றோர் எந்தெந்த விஷயங்களில் நம்மை குழந்தை போல நடத்தி எதிலெதில் பெரியவர் போல் நடத்த வேண்டுமோ அப்படி நடத்தினார்கள்.வரிசையாகக் குழந்தைகள் உள்ள வீடுகளில் ஐந்தாவது குழந்தை பிறக்கும் போது முதல் பெண் குழந்தை குட்டி தம்பிப் பாப்பாவிற்கு பாதித் தாய் போல் ஆகி விடும்.வரிசையாகத் தட்டைப் போட்டு சாப்பாடு போட்டால் அள்ளி அள்ளி அவரவர் சாப்பாட்டை அவரவரே சாப்பிட்ட காலம்.தன்  வயிற்ருக்கு எவ்வளவு வேண்டும் என்பது குழந்தைகளுக்கு தானே தெரிந்து போகும்.ஊட்டம் என்ற பெயரில் தேவைக்கு அதிகமாக நம் போல் அவர்கள் திணிக்கவில்லை.குட்டி சட்டி என்று அனாவசிய செல்லம் காட்டப் படவில்லை.அதனால் வெளியே யாராவது ஒரு வார்த்தை சொன்னால் தொட்டார் சிணுங்கி போல நாம் நடந்து கொள்ளவில்லை.இப்போது மாணவர்களைக் கண்டிக்க ஆசிரியர்கள் நடுங்கி அல்லவா போகிறார்கள்?

சாப்பாடு போன்ற சிறிய விஷயங்கள் குழந்தைகளே செய்தார்கள்.கல்யாணம் போன்ற ஆயிரம் காலத்துப் பயிரான விஷயங்களில் நம்மைக் குழந்தை போல நடத்தி அவர்கள் முடிவெடுத்தார்கள்.ஆனால் இப்போதோ வளர்ந்த குழந்தைகளுக்கு சாப்பாட்டை ஊட்டுகிறோம்.அவர்களை ஒரு வேலை செய்ய விடாது எச்சில் தட்டை கூட நாமே கழுவி வைக்கிறோம்.ஆனால் பெரிய முடிவுகளான திருமணம் அந்த வைபவத்திற்கான செலவு முதற் கொண்டு அவர்களைத் தீர்மானிக்கச் சொல்லி மௌனியாகி இருக்கிறோம்.நான் குழந்தைகள் சுதந்திரத்திற்கு எதிரி அல்ல.வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் அளவு ,தன்  வாழ்க்கையை சரியாக அமைத்துக் கொள்ளும் அளவு சரியாக சிந்திக்கத் தெரிந்தால் கவலை இல்லை.ஆனால் அப்படி சரியான சிந்தனை உள்ள emotional stability உள்ள தலைமுறையை உருவாக்குவதில் பெரும் பங்கு பெற்றோருடையதே.அந்த உணர்வு பூர்வமான நிலைப்பாடு இந்தத் தலைமுறையிடம் இருந்தால் தேர்வு சமயம் ஏன் ஹெல்ப் லைன் அழைப்புகள் வர வேண்டும்,ஏன் விவாகரத்து வழக்குகள் அதிகமாக வேண்டும்? 

இப்போதுள்ள இளைஞர்கள் நம்மை விடவும் புத்திசாலியாக தெளிவாக இருப்பதாக சொல்லிக் கொள்கிறோம்.உண்மைதான் .Exposure அதிகம்.ஆர்வம் அதிகம்.முக்கியமாக பெற்றோரும் நண்பர்களும் தரும் அழுத்தம் அதிகம்.அறிவு அதிகம் எனத்தான் நானும் நினைக்கிறேன்.ஆனால் எல்லாத் தலைமுறைகளிலும் அறிவாளிகள் உண்டு.எது அறிவு என்ற கேள்வியும் உள்ளதல்லவா?ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்ஸ் எல்லாம் தெரிவதும் கணினி பற்றியதும் அறிவுதான்.ஆனால் கணித மேதை ராமானுஜனுக்கு இருந்ததும் த்யாகராஜ ஸ்வாமிகளுக்கு இருந்ததும் பேரறிவுதான் அல்லவா?இன்னும் ராமானுஜனுக்கு இணையான கணித மேதை நம் நாட்டில் பிறக்கவில்லை.த்யாகராஜ ஸ்வாமிகளின் கீர்த்தனைகள் இல்லாத கச்சேரிகளை நினைக்கவும் முடியவில்லை.அதற்கு என்ன சொல்ல?பரிணாம வளர்ச்சி நடந்து கொண்டேதான் இருக்கும்.அந்தந்த காலகட்டத்தில் சூழ்நிலைகளில் சிகரம் தொடுபவர்கள் புத்திசாலிகள்.என் தாத்தாவின் அறிவு என் மகனுடைய அறிவை விடக் குறைந்தது இல்லை.

அடுத்தது தெளிவு.இன்று சுதந்திரம் அதிகம்.அதனால் குழப்பங்களும் அதிகம் எனத்தான் எண்ணுகிறேன்.தேர்ந்தெடுக்க பல வழிகள் உள்ளதால் தெளிவு போன்ற ஒரு மாயத் தோற்றம் கிடைக்கிறது.தான் தேர்ந்தெடுத்த ஒன்றுதான் சரி என்ற தெளிவு இளைஞர்களிடம் உள்ளது.அதில் தவறு நிகழ்ந்தால் நம்மை சாடுவதில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.எல்லாம் அவர்கள் சாய்ஸ் ஆயிற்றே! ஒரு கயிற்றை இரண்டு பக்கத்தில் இருந்து இழுத்தால் என்னாகும்?அறுந்து போகும்.அதைத்தான் நாம் செய்கிறோம்.நம் குட்டிக் குழந்தை ,வந்த வரன்களில் தனக்கு சரியான ஜோடியைத் தேர்ந்தெடுக்கும் அளவு பெரியவளாம்.ஆனால் அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தால் அம்மாக்கள் என்ன சொல்கிறோம்?அதுவே (அது என்றால் குழந்தை பெற்ற அந்தப் பெண்) சிறிசு.எப்படித்தான் ஒரு குழந்தையை வளர்க்குமோ என்று அங்கலாய்க்கிறோம்.ஏன் ? அப்போ நம் பெண் சிறியவளில் சேர்த்தியா,பெரியவளில் சேர்த்தியா? நம் பெற்றோரிடம் இந்த பதைபதைப்பு இல்லை.கல்யாணம் செய்து கொடுத்து விட்டு எல்லாத்தையும் அனுசரிச்சுப் போ என்று அவர்கள் சொன்னது நம்மைக் கை கழுவி விட இல்லை.நமக்கு தைரியம் தர.பெண் பெற்றவர்கள் மட்டுமில்லை.பையன்கள் வைத்திருப்போரும் சும்மா மகனுடைய உள்ளாடைகளைக் கூடக் கையில் கொண்டு வந்து தந்து அவனை நம்மை சார்ந்திருக்கப் பழக்கி சோம்பேறியாக்கி ,வரும் பெண் தலையில் சுமை அத்தனையும் ஏற்ற வேண்டாம்.

இது போல் எத்தனையோ !! முதியோர் இல்லங்களும் தனிக் குடித்தனங்களும் எப்போ அதிகம்?இப்போதா அப்போதா ?சகிப்புத் தன்மை இல்லைதானே?நம் பெற்றோர் நம்மை விட இன்னும் நன்றாக குழந்தை வளர்ப்பை செய்தார்களோ என்று தோன்றுகிறது.பலர் கோபம் அடையலாம்.விதிவிலக்காக மிக தைரியமான தெளிவான புத்திசாலியான குழந்தைகளை உருவாக்கினவர்கள் மன்னிக்கவும்.இவை பொதுக் கருத்துக்கள்.பெற்றோர் உலகிற்கு குழந்தைகளைக் கொண்டு வந்ததால் தம் கருத்துக்களை அவர்கள் மேல் திணிக்க வேண்டும் என்பது பொருளல்ல.எல்லாம் நல்ல குழந்தைகளாகவே உலகில் பிறக்கின்றன.ஒரு குழந்தை தன்  வளர்ச்சி பற்றிக் கவலை கொள்வதில்லை.வளர்கிறது.குழந்தை மனசு என்றால் என்ன?நம்பிக்கை நிறைந்த மனது.நாம் நினைப்பது எல்லாம் கிடைக்கும் என்ற மனது.கிடைக்காதோ என்று அவநம்பிக்கைப் பட குழந்தை மனதிற்குத் தெரியவே தெரியாது.அந்த எண்ணம் வாழ்நாள் பூர இருப்பின்.உணர்வுச் சிக்கலில் யாரும் சிக்கிக் கொள்வதில்லை.வளர வளர ,வெளி உலகுடன் தொடர்பு ஏற்படும் போது குழந்தைத் தனம் மாறும்.அந்த சமயம் ஆழமான சரியான கருத்துக்கள் திணிக்கிறார் போல் இல்லாமல் சொல்லப் பட வேண்டும்.கண்டிப்பாக நாமும் நல்ல பெற்றோராக செயல்பட இயலும்.குறிப்பிட்ட வயது வரும் வரை அவர்களின் பௌதீக வயதிற்கு ஏற்றார் போல் அவர்களை நடத்தி நம் கருத்துக்கள் சொல்லத் தயங்கக் கூடாது.இது ஒரு பெரிய பொறுப்பு.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS