ஞாயிறு, 25 மார்ச், 2018

கடல் கரையைத் தொடப் போகிறதா?

ஆமாம். கடல் கரையைத் தொடப் போகிறது.  கொஞ்ச நாட்களாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.  என் வயதில் உள்ளவர்களுக்கு டைப்பிங்கை விட எழுதுவது சுலபமாக உள்ளது.  நான் எனக்காகத்தான் எழுதுகிறேனா என்ற சுய பரிசீலனை உள்ளது. என்னால் வாழ்வைப் பார்க்க முடிந்த கோணமே இது வரை எழுதின கட்டுரைகள். கரை இல்லாத கடல் என்றால், அலைகள் எவ்வளவு தொலைவு சென்று திரும்பும்?  கடலுக்கு, கரை கட்ட முடியுமா? முடிந்தாலும் கஷ்டமான வேலைதானே?  எண்ணங்களுக்கு தடை போடத்தான் முடியுமா? கொஞ்ச நாள் இடைவெளி. கடல் கரை தொடுவது ஒரு நிகழ்வு. அதன் முக்கியத்துவம் அவ்வளவே. கடல் நீர் வற்றாதது போல மனித இதயம் என்ற சுரங்கத்தில் எண்ணங்கள் வற்றுவதில்லை. எண்ணங்களுக்கு வடிகால் தேவை. என் எண்ணங்களின் வடிகாலாக இருந்தது இந்தப்புத்தகம் . என்னுடன் பயணித்த எல்லோருக்கும் நன்றி கூற விழைகிறேன்.

இன்று புத்தகக் கண்காட்சி சென்று வந்தேன். அவ்வளவு புத்தகங்கள் ஓரிடத்தில் பார்ப்பதே குதூகலம். கண்காட்சியா, கண்கொள்ளாக் காட்சியா?தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டாலும், எல்லாவற்றையும் கணினி மூலம் மட்டும் படிக்காது , புத்தகத்தின் மீது காதல் கொண்டுள்ளவர்கள் இருக்கவே செய்கிறார்கள். நாமெல்லாம் அந்த இனம். ஓலைச் சுவடிகள் போல, புத்தகங்கள் மறையாமல் இருக்க, நிறைய வாசிப்போம், எழுதுவோம்.

அன்புடன்

ரஞ்ஜனி த்யாகு



விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் யாரும் சட்டை தைப்பதில்லை.அவற்றுக்கு மனம் இல்லை.குழப்பம் இல்லை.எதையும்,உடம்பு உட்பட எதையும் மறைக்கத் தேவை இல்லை.நமக்கு எல்லாம் வேண்டும்.பிறந்த அன்றே குட்டி சட்டை போட்டு விடுவார்கள்.வளர வளர சட்டை மாறும்.பெரிதாகும்

போர்த்தாத மனங்கள் பார்க்க வேண்டும் போல் உள்ளது.போர்த்திக் கொள்ளும் வியாதி தாக்காமல் இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை உள்ளது.
MOTHER PROTECTS.MOTHER LEADS

சனி, 24 மார்ச், 2018

அமுதா

வரும் காலத்தைப் பார்க்க முடியாது. ஆனால்,  கண்ணை இறுக்க மூடிக் கொண்டாலும்,  இறந்தகாலம் நம்முன் தெரியவே செய்கிறது. பாடங்களை சரியாகப் பயின்றால் வரப்போகும் தேர்வை செம்மையாக எழுதலாம். அரைகுறையாகக் கற்றால்,  பாஸ் மட்டும்  செய்யலாம். கசடறக் கற்றாலே 100 மதிப்பெண்ணுடன் தேறலாம். அதுவும் கூட,  வரப்போகும் கேள்வித்தாளை பொறுத்து.  எதிர்பாரா வினாக்கள் வருவதுண்டு. அவற்றிற்கு ஏதோ பதில் எழுதி வைப்போம். ஆசிரியர்,  பாவம் பார்த்து  ஏதோ மதிப்பெண்  போடலாம். அதுவும்,  கருணை உள்ள ஆசிரியர். அப்படிப்பட்ட ஆசிரியர்தான் கடவுள். வாழ்வெனும் நீண்ட புத்தகத்தைக் கொடுத்து, சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்ற மாதாந்திர குட்டி டெஸ்ட் எல்லாம் வைத்து நம்மைத் தயார்ப் படுத்துகிறார். நாம் ஊக்கம் குறைந்த மாணாக்கர் போல் வாழ்வைப் படிப்பதில்லை. படிக்கும் காலம் கேளிக்கைவயப்படும் மாணவன் போல் வாழும் காலம் புலன்கள் வயப்பட்டு ஒரே பரீட்சையைத் தவற விடுகிறோம்.அந்தோ பாவம். அரியர்ஸ் வைத்து மறுபடி எழுதக் கூட வாய்ப்பில்லை.

பல வீழ்ந்த சாம்ராஜ்யங்கள் மண்ணாசையைப் போக்கவில்லை. ராவணன் அழிவு போன்ற நிகழ்வுகளை பற்றிப் படிப்பதும் கேட்பதும்  பெண்ணாசையைப் போக்கவில்லை. சண்டை போட்டு மண்டை உடைத்துக் கொள்ளும் குடும்பங்களின் அருகாமை , குடும்பப் பாசத்தைப் போக்கவில்லை, சொந்தங்களின் இழப்பு, பொருள் சேர்க்கும் ஆசையைப் போக்கவில்லை, பெரிய பதவிகள் வகித்தோரின் கடைசி காலங்கள் பதவி ஆசையைப் போக்கவில்லை, சுனாமியும் நிலநடுக்கமும் வந்து வாழ்வாதாரமே பாதிக்கப்பட்ட மக்கள் நிலை, வங்கி கணக்கில் பத்து ரூபாய் கூடினால் தரும் ஆனந்தத்தைப் போக்கவில்லை.  ஏன்? ஏன் என்றால் இறந்த காலத்தைப் பார்க்க விருப்பம் இல்லை. அது முடிந்து போனது என்ற வறட்டு வேதாந்தம்.  வரும்காலம் யாருக்குத் தெரியும் என்ற அதே வேதாந்தம். அப்படியாவது நிகழ்காலத்தை ஒழுங்காக நடத்துகிறோமா? இல்லை. அது ஏன்? கடந்தவை பற்றி மதிப்பில்லை. வரப்போவது பற்றின வணக்கத்துடன் கூடிய பயம் இல்லை. மஹான்கள்,  இறந்த காலம்,  வரும்காலம் பற்றி நினைக்காதே என்று சொன்னது பற்றிய தவறான புரிதல்.

கணக்கு நன்றாகத் தெரிந்தவனுக்கு மூன்றும் இரண்டும் என்ன என்று சந்தேகம் வருமா? அந்த அளவு எளிது குழப்பம் அற்று சிந்திப்பது, வாழ்வது. நமக்கு பெற்றோர் இருப்பது போல், குழப்பத்திற்கும் அம்மா உண்டு. அதன் பெயர் அறியாமை. எனக்கும், உங்களுக்கும் எல்லாருக்கும் குழப்பம் வரலாம். வந்தால் அது நம் உணர்வின் தவறே அன்றி, வேறு யாரும் பொறுப்பல்ல. நம் அறியாமை என்ற தாய் பிரசவிக்கும் குழந்தையே மனக்குழப்பம்.  வாழ்வு முழுதும்சுமை சுமந்து, திண்டாடக் கூடாது. சரி,  சொல்ல வந்ததைச் சொல்கிறேன். நம்மை இன்னாராக உணர்தல், இன்னாராக மட்டும் உணர்தல்,வித்தியாசம் என்ன?

இன்னார் என்பது அடையாளம். நான் இன்னார் மட்டும் என்பது வட்டம் போட்டுக் கொண்டு வெளியே வர இயலாத நிலை. அந்த வட்டம் நமக்குள்ள பரந்த பார்வையை, தொலைநோக்கை மழுங்க வைக்கிறது. வாழ்வில் ஒருவருடன் ஏதோ மனவேறுபாடு என்று வைத்துக் கொள்வோம். அதனால் என்ன? அவர் எய்யும் ஒவ்வொரு சொல்லம்பையும் கவனமாக கேட்ச் பிடித்து திருப்பி அடிக்க வேண்டாம். நாம்,நம்மிடம் மாறாக நடப்பவர், அல்லது அப்படி நாம் நினைத்துக் கொண்டிருப்பவருடன் நமக்குள்ள உறவை மட்டும் முன்னிலைப் படுத்தி சிந்திக்கிறோம். என் மகன் இப்படி சொல்லலாமா? என் தோழன் இதை செய்யலாமா? என்றெல்லாம் குழம்பி அமைதி தொலைக்கிறோம். தப்பு. உங்கள் மகன் பேச்சு கடுமையாக இருந்தால் அவன் பேசின போது உங்கள் மகனாக இல்லை. உலகில் அவனது பல கதாபாத்திரங்களில் வேறு யாரோவாக இருந்துள்ளான், உணர்வு நிலையில். அதே போல் நம்மிடம் கோபப்படுபவன் நம் நண்பன் மட்டும் என்றால் வருத்தம்.  அவன் ஒரு கணவன், மகன்,  தந்தை . அவனுக்கு ஆயிரம் பாத்திரங்கள் வாழ்வெனும் நாடகத்தில். யாரோ ஒருத்தியின் கணவன், மகன், அப்பா  என்ன பேசினால் நமக்கென்ன?

ஆனால் அறியாமை கண்ணை மறைக்கும். ஒரு நொடி நிதானப்பட்டால் போதும். சரியாக யோசிப்போம். அதே போல சூழ்நிலைகள். நிதானமாக கடினமான நொடிகளைக் கடப்பவர் உண்டு. ஆனால்,  ஆழ்மனக் கசப்புகளாக அவற்றை சுமப்பின் பொருள் இல்லை. அதன் பேர் புரிதல் இல்லை. யார் மீதும் எதன் மீதும் கசப்பு வந்தால் பலன் இல்லை. இதையெல்லாம் பண்ண மகாத்மாவாக இருக்கத்  தேவை இல்லை. மனிதனாக இருப்பின் போதும். எது செய்தாலும், யாருடன் இருந்தாலும், மற்ற அனைவரையும்,அனைத்தையும் புறம் தள்ள வேண்டாமே? அதே போல் விலகல் இயல்பாக,  கசப்பின்றி அமையலாமே ? தள்ளி இருந்தால் காந்தம் இரும்பை ஈர்க்காது . கிட்ட வந்தால் ஒட்டிக் கொள்ளும். வாழ்வு வன்மம் வளர்க்கவல்ல.

எளிய மனிதர்களிடம் உள்ள பல நல்ல தன்மைகள் ஆசைவயப்பட்ட பெரியமனிதர்களிடம் இல்லை. எங்கள் வீட்டில் வேலை செய்யும் அமுதா, நேற்று, "அக்கா,  நகை பிரிப்பதில், சொத்து பிரிப்பதில் என் தம்பிகள் தொந்தரவு கொடுக்கிறார்கள். அம்மாவின் நகையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டேன் " என்று கூறினாள்.  எத்தனை பவுன் தெரியுமா? மொத்தமே ரெண்டு பவுன். 20 லட்சம் செலவில் கல்யாணம் நடத்தும் நமக்கு ரெண்டு பவுனை நாலு பேருக்குப் பிரித்தால் வரும் அரைப் பவுன் அவர்களுக்கு அத்தனை பெரிது என்று உணரவாவது முடியுமா?தெரியாது. கோடியுடன் லட்சத்தை இணைக்க சொந்த அண்ணன் தம்பியைக் கோர்ட்டில் நிறுத்தும் பெரியவர்களுக்குக் குழப்பம்தான். எதுவான கூட எடுத்துப் போக முடியுமோ, அதற்கும்தொழில்நுட்பம் ஏதாவது கண்டுபிடித்து விட்டால் நாம் ஏமாறக் கூடாதே எனும் தவிப்பு. அறியாமை. அமுதாவிற்கு பாவ புண்ணியம் பற்றிய அறிவு இல்லாதிருக்கலாம். பகவத்கீதை தெரியாமல் இருக்கலாம். எது செய்தால் அமைதி வரும் என்ற தெளிவு உள்ளதே? முகம் ஒரு நாள் கூட சோர்வையும் குழப்பத்தையும் வெளிப்படுத்துவதில்லையே? எது திறம்பட வாழும் வாழ்வு? விடை தெரிந்த வினா !!!!



செவ்வாய், 20 மார்ச், 2018

சிறப்புக் குழந்தைகளும் புரியாத உண்மைகளும்

இது நிஜமான டயரி. என் மனக்கண் முன்னே ஒரு உலகம் விரிகிறது. யாருடனும் பகிரப் பிடிக்காத உலகம்.பின் எதற்கு எழுத வேண்டும்?சும்மா பேச்சுக்காக நம் கையில் என்ன இருக்கு என்போர் உணர இயலா உண்மைகள்.தலையால் யோசியாமல்,இதயத்தால் யோசித்தால் மட்டும் ஓரளவு புரியும் உண்மைகள்.நேற்று முழுதும் ராகவன் பேசவில்லை.அதை சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்தப் படுகிறேன்.முடியாது.வீட்டில் சின்ன பிரச்சினைக்கெல்லாம் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்கிறோம்.ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறோம்.வெளியில் சுற்றி விட்டு வருகிறோம். ஒருவருடனான மனக்கசப்புகளை மற்றவரிடம் பகிர்ந்து கொள்கிறோம்.இது எதையும் செய்ய இயலாத ராகவனுக்காக நான் யோசிக்கத்தான் செய்வேன்.அதைத்தான் முதல் வேலையாகக் கொள்வேன்.அவன் என்னைப் பார்க்காது ஊடுருவும் ஒரு பார்வை பார்ப்பது எதற்கு எனத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.எனக்கும் ராகவனுக்கும் உள்ள மௌனப் பரிபாஷை அது.அம்மாவுக்கு மட்டுமாவது நான் நினைப்பது புரிகிறது என்று அவனுக்குப் புரிய வேண்டும்.ஆட்டிசம் ஒரு உலகம்.சிறை போன்றதொரு உலகம்.வெளி வரக் கடினமான சிறை.நானும் என்னை விருப்பத்துடன் சிறைப் படுத்திக் கொண்டுள்ளேன்.அதுவே சுகமாகவும் இருக்கிறது.அந்த சிறை கம்பிகள் என்னை பந்தப் படுத்தலாமே தவிர வெளியே உள்ள உலகம் அதை செய்ய முடியாது. வெளியே உள்ளவர் எங்களை உள்ளே இருப்பதாய்ப் பார்க்கிறார்கள்.ஆனால் அந்த சிறு உலகில் உள்ள எங்களுக்கோ வெளியில் உள்ளவர்கள்தான் அடைபட்டுள்ளது போல் தெரிகிறது.என்ன,கம்பியின் எதிரெதிர் பக்கத்தில் இருந்து பார்க்கிறோம். எல்லோரும் சரியே.

நீங்கள் என்னை  பார்த்துப் பாவம் என்றால்,என்னாலும் உங்களுக்காகப் பாவப்பட மட்டுமே இயலும். மாடை ஒரு தூணில் கட்டி விட்டு எங்க வேணா போ என்றால் அது கயிறு போகும் தூரமே போக இயலும்.மனிதன் போட்ட கட்டு . அப்போது கட்டுவது கடவுள் ஆனால்? ஏன் கட்டினான்,அது மாட்டிற்கு எவ்வளவு நல்லது என கட்டியவன் அறிவான்.கட்டப்பட்ட மாடும் அதை உணர்ந்து விட்டால் மற்றவருக்கு இதில் என்ன பங்கு? அவரவருக்கு சுயதர்மங்கள் உண்டு. பசித்தவனுக்கு சோறு தருவதுதான் என்  தர்மம். விருந்து சாப்பிட்டு ஏப்பம் விடுபவர்களுக்கு ஐஸ்க்ரீம் தருவது என்னாலும் முடியும்.ஆனால் பசித்த ஒருவன் எதிரே இல்லாத போது.அதே போல் யாரோ ஜெயிலுக்குப் போனால் எல்லாரும் தீர்ப்பு வழங்கலாமா என்ன!!!புண்ணியம்,பாவம் என்பதெல்லாம் நம் அறிவிற்கு விளங்கும் அளவு சின்ன விஷயங்களா? மற்றவர் வழங்கும் judgements ஐப் புறக்கணிக்கிறேன். ஆனால் என்னிடம் வந்து அவனுக்கு என்ன தெரியும் அலட்டாதே என்று யாரும் சொல்ல வேண்டாம். என் கடமைகளை சுட்டிக்காட்ட வேண்டாம்.சுட்டிக்காட்டி காயப்படுத்த வேண்டாம்.ஆனால் மற்றவர் என்ன படுத்துவது?என் அறிவு அல்லவோ வருத்தங்கள் களைய வேண்டும்.

ஒரு அலுவலக டார்கெட் ,ஒரு அசைன்மென்ட் ,இன்று என்ன காய் என்ற திட்டமிடல் ,பச்சை சட்டையும் சிவப்புப் புடவையும் மேட்சிங்கா என்ற எண்ணம் ,வீடு வாங்கப் பணம் சேர்த்தல் ,உடம்பின் உபாதைகளுக்குத் தரும் கவனம், கோபித்துக் கொள்ளும் சக மனிதர்களின் எரிச்சல் இப்படிப் பல செயல்களுக்குத் தரும் கவனம் கூட சிறப்புக் குழந்தைகளுக்குத் தேவை இல்லை என்றால், இவை அனைவற்றையும் நான் மறுப்பது தப்பாகத் தோன்றவில்லை. இவர்களுக்குப் பேச்சில்லை.புரிதல் இல்லை.Entertainment இல்லை .ஏன் insurance கூட இல்லை.தெரியுமா?அவர்களுக்கென்று உள்ளது அக்குழந்தைகளின் குடும்பம் மட்டுமே.மற்றவர்களுக்கெல்லாம் கேட்க நேரம் கூட இல்லை.நான் ஏன் என்று கேட்கிறேனா? STOP PASSING JUDGEMENTS.YOU HAVE OTHER WORKS.WE HAVE ONLY THIS WORK.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

திங்கள், 19 மார்ச், 2018

எளிமையற்ற வெளியுலகத் தொடர்புகள்

நவராத்திரி ஒன்பது நாட்கள்,இம்முறை கிட்டத்தட்ட பனிரெண்டு நாட்கள்,அமாவாசை கழிந்து ஒரு நாள் தள்ளி பூஜை தொடங்கியதால்.நல்லபடி கழிந்த நாட்கள்.ஆனால்,நவராத்திரி போன்ற பண்டிகைகள் மூலம் என்ன கற்றல் நிகழ்ந்துள்ளது இத்தனை வருஷங்களில்?தாம்பூலம் தருவது,வாங்கி கொள்வது,சுண்டல் செய்வது,டிரஸ் விதம் விதமாய் அணிவது,பல இடங்களில் சேர்ந்து லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் செய்வது,பரிசுப் பொருள்கள் வாங்குவது தருவது இவை எல்லாம் வழக்கமான நிகழ்வுகள்.இந்த அத்தனையின் பின்னும் உள்ள மனமுரண்பாடுகள் நம் மனக்கண்ணுக்குத் தெரிந்தால் தகராறுதான்.

யார் முதலில் கூப்பிடுவது,கூப்பிடாமல் போகலாமா,யார் உசத்தி,யார் தாழ்வு,ஆபீசர் மனைவிக்கும் வீட்டு வேலை செய்பவர்களுக்கும் ஒரே மதிப்பில் சட்டைத்துணி தரலாமா ,ஏன் ஸஹஸ்ரநாம பாராயணத்தில் கூட முன்னிலைப் படுத்தி கொள்கிற முகங்களின் தரிசனமே காண்கிறேன்.சிலசமயம் ஆயாசம் ஏற்படினும் கோபமே அதிகம்.இது நல்ல கோபம்.அப்படி ஒன்று உண்டா?என்   தங்கை கூறினாள் அருள் பாலிக்கும் பெண் தெய்வ வடிவங்களை விடவும் தனக்கு தீமை களையும் பெண் தெய்வ வடிவங்களையே பிடிக்கிறது என.உண்மை.எனக்குள்ளும் துர்கையே அதிகம் நிறைந்துள்ளாள்.ஒன்பது நாட்களும் கொலுவில் வைத்த துர்கை பொம்மை பார்த்து ஒன்பது கெட்ட குணங்களின் சம்ஹாரமாவது நிகழ்ந்தால் அல்லவோ அது நல்ல நவராத்திரி?

எளிமை தொலைந்த பண்டிகைகள்.ஒரு மஞ்சள் பையை எடுத்துக் கொண்டு எல்லார் வீட்டுக்கும் நுழைந்து சுண்டல் வாங்கி வந்து மனம் விட்டு சிரித்து மகிழ்ந்த காலம் இருந்தது.இப்போது வாட்சப்பில் வரும் செய்திகள் போல் அந்தக் காலம் பற்றின ஏக்கம் எனக்கில்லை.இப்போது பெண்கள் தனிக்குடித்தனம் விரும்புகிறோம்.வேலைக்கு செல்லும் பெண்களே அதிகம்.ஒரு நாள் குறித்து அழைக்கிறார்கள்.அதெல்லாம் சரியே.இவை நடைமுறை சவுகரியங்கள்.ஆனால் இயந்திரத் தனமான உபசரிப்புகள்,எதிர்பார்ப்புகள்,போட்டிகள் ,வம்புகள் இவைகளைக் கடக்கும் போது அடடா என்ன பெரிய விஷயங்கள் காத்திருக்கும் போது இதென்ன எண்ண விரயம்,நேர விரயம் என்றாகிப் போனது.

நம் இயல்பில் உள்ள தவறான எண்ணம்,உணர்வு,பேச்சு,செயல் இவற்றை நம் மனதிடம் இருந்து ஒளிந்து கொள்ளாமல் களைந்தால்  துர்கை அங்கிருக்கிறாள்.சோர்வடையும் போது,இதோ கொலு படியில்தானே நிற்கிறாள்,கூப்பிட்டால் வந்து விடுவாள் என நினைத்தால் துர்கை அங்கிருக்கிறாள்.நமக்குள் நாம் சென்றால் துர்கை அங்கிருக்கிறாள்.உண்மைக்காக,உண்மையாக வாழ்ந்து,வெளி உலகின் பொய்களுக்கு எதிராக தைரியமாக நின்றால் துர்கை அங்கிருக்கிறாள்.

இது சென்ற வருடம் நவராத்திரி அன்று தொடங்கிய போஸ்ட். அதை முடிக்க இயலவில்லை.வேலைகள்.என்னதான் டயரி என்று நான் சொல்லிக் கொண்டாலும் ஏதோ வீட்டுக் கணக்கு எழுதுவது போல் போஸ்ட்டை எழுதி முடிக்க முடியாது.வெளிப்படுத்த இயலாத கோபங்களும் தாபங்களும்தானே எழுத்து?ஒரு ஐந்து ஆறு மாதமாக மனம் தொட்ட விஷயங்கள் வேறு.இன்று எழுத,காரணம் உண்டு.பூ மலர்வது போல் இயற்கையாக,எளிமையாக உள்ள எத்தனை செயல்களைக் குழப்பி விட்டு விட்டது மனித இனம். ஆனந்தவிகடனில் படித்தேன்,"அடல்ட்ஸ் ஒன்லி "சர்டிபிகேட்டுடன் படங்கள் தயாரிக்கிறார்கள்.ஆண் பெண் சம்பந்தப்பட்டவை மட்டும் இந்தப் பிரிவில் அடங்காது.வன்முறையும்,டிப்ரெஷனும்,கோபமும்,மற்றவரை மட்டம் தட்டுவதும்,புறம்பேசுவதும் ,கேலி பேசுவதும்,மற்றவர் செயல்களில் மூக்கை நுழைப்பதும்,நாக்கை மற்றவரைக் காயப் படுத்தும் சாதனமாக மட்டும் வைத்துக் கொண்டிருப்பதும் இவை எதுவும் குழந்தைகள் காண தகுதி அற்றவையே.அட,இதற்கெல்லாம் அடல்ட்ஸ் ஒன்லி கூட கொடுக்க முடியாது.உலகில் கடவுள் இலவசமாக வழங்கி உள்ள கொடைகளை சற்றும் நன்றியும் வெட்கமும் இல்லாமல் உபயோகித்து வரும் அடல்ட்ஸ் ஆன நாமெல்லாருக்கும், வயசு, கண்டபடி நடக்க ஒரு லைசென்ஸா என்ன!!!

பூ மலர்வதும்,சூரியன் பேரழகாய் வந்து நம் ஜன்னல் வழி எட்டிப் பார்ப்பதும் ஏன் நாம் சுவாசிப்பதும் தானாக நடக்கும் போது புத்தி மட்டும் ஒரு காலகட்டத்தில், ஏன் குறுக்காகப் போக வேண்டும்?உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒரு போதும் தெய்வம் கொடுக்காத போது (நன்றி கவிஞர் வாலி,கொடுத்ததெல்லாம் கொடுத்தார் என்ற பாடல்.),நாம் யார் தப்பு தப்பான வழியை தேர்வு செய்ய?அதை அப்படியே தெய்வ இயல்புடன் பிறக்கும் குட்டிக் குழந்தைகளுக்கு transfer செய்ய? நிஜமாகவே புரியவில்லை.உண்மை ஒன்று.நேர் வழி ஒன்று.அப்படியானால் சரியாக யோசிக்கும் இருவர் கருத்து ஏன் மாறுபட வேண்டும்?சலனங்கள் வரும் போது நம்மை ஏமாற்றிக் கொள்ளாமல் சுயபரிசீலனை செய்ய வேண்டும்தான்.ரெண்டு கை தட்டவில்லை என்றால் சண்டை இல்லை.கையை ஓங்காதவர்தான் சரியாக இருப்பார்கள்.பெரும்பாலும்.சிலசமயம் சாமர்த்திய சாலிகளும் கையைப் பின்னிழுத்துக் கொள்வார்கள்.தர்மத்தின் பக்கம் பேசுகிறேன்,என்னுள் உள்ள துர்கை பேசுகிறாள் (துர்க்கைக்கு சமமான ஆண் தெய்வத்தின் பெயர் தெரியவில்லை) என்று மாட்டிக் கொள்ளும் நல்லவர்கள் உண்டு.அதனால்தான் ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்கிறார்,"ஒரு சண்டை என்று வந்தால் இரு தரப்பும் தவறாக யோசிப்பவர்களே என".

சில மாதங்களாய் " போதும்"என்று தோன்றுகிறது. "சரியாக யோசிப்பவருடன் மட்டும் தொடர்பில் வைத்திரு " என்று இரு கரம் கூப்பத் தோன்றுகிறது. யாருக்கும் விளக்கம் தரத் தேவை இல்லை என்று தோன்றுகிறது.தவறுகளை ஞாயப் படுத்தும் விளக்கங்களைக் கேட்பது நேரவிரயமாகத் தோன்றுகிறது.நான் தவறுக்கு அப்பாற்பட்டவள் என்ற முட்டாள்தனமான எண்ணம் கொண்டுவிடாதே என்று மனதைக் கண்டிக்க தோன்றுகிறது. என் பக்கம் தவறிருந்தால் அதை உணரும் clear vision கடவுள்தான் அருள முடியும் என்று தோன்றுகிறது.எளிமை தொலைத்த வெளி உலக தொடர்புகள் வேண்டாமே என்று தோன்றுகிறது. இப்படி பல தோன்றுகிறது போட்டதினால் வாழ்க்கை சலிப்பானது என நான் சொல்ல வருகிறேனோ என்று உங்களுக்குத் தோன்றுகிறதா?இல்லை.மனித வாழ்வு ரசிக்க வேண்டிய ஒன்றே.அதே சமயம் நம்மை செதுக்கிக் கொள்ள அளிக்கப் பட்ட களம் . சரியாக விளையாட வேண்டும். வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது ஒரு நாள் விளையாட்டானால் என்ன தீவிரமாக விளையாட வேண்டுமோ,எவ்வளவு focused ஆக விளையாட வேண்டுமோ அப்படி நடத்தப் பட வேண்டியதே இந்த ஒரு வாழ்வு.ஏனெனில் இன்னொரு வாழ்வு பற்றியது நாமறியா ரகசியம்.

பின் குறிப்பு ; ஆனந்தவிகடன்,கவிஞர் வாலி அவர்கள் கருத்துக்கள் சிலவற்றைக் கடன் வாங்கி உள்ளேன்.ஸ்ரீ அரவிந்த அன்னை புத்தகங்கள் என் உள்ளே வெளிச்சம் பாய்ச்சும் நிரந்தரத் துணை.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS