வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

சிட்டுக்குருவி இதயத்திற்கு சொந்தக்காரர்கள்


அது என்ன சிட்டுக்குருவி இதயம். ?  யார் தந்த பெயர்?  ஏன் அந்தப் பெயர்? நான் வைத்த பெயர்.  பெயருக்குக்  காரணம் உண்டு. அதனால் காரணப் பெயர்.  சிட்டுக்குருவியே குட்டிப் பறவை.  அதன் இதயம் எத்தனை பெரிசு இருந்து விட முடியும்?  சிட்டுக்குருவியை பயம் காட்ட முடியும். கொஞ்சம் யாரேனும் சத்தம் போட்டால் கூட அதன் இதயத் துடிப்பு அதிகரிக்குமோ என்று நினைப்பேன்.  இளகிய மனம் கொண்ட மனிதர்களைத்தான் கட்டுரையின் தலைப்பு குறிப்பிடுகிறது.  ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட என் மகன்  ராகவனுடனேயே நாளின் பெரும்பகுதி செலவிடுவதால் சிட்டுக்குருவி இதயம் பற்றின ஆராய்ச்சி அதிகம் செய்கிறேன்.  வீட்டிற்குள்ளேயே யாரும் குரல் உயர்த்தினால் , ராகவனின் சிட்டுக்குருவி இதயம் இதை ஏற்காது என்று பலமுறை கூறி உள்ளேன். எப்பொழுதேனும் ராகவன் தாண்டி என் பற்றி நினைப்பதுண்டு. என் இதயத்திற்கும் இது பொருந்துமா?

 என் சிறிய வயது இதயம் அத்தகைய ஒன்றுதான்.  மிக இளகியது. இப்போதும் மாற்றம் இல்லை.  உண்மையில் ,  ராகவன் கூட சேர்ந்து அல்லது அவன் என்னுடன் சேர்ந்து சிறிய முரண்பாடுகள் கூட,  துப்பாக்கி சப்தம் கேட்ட குருவி போல் என்னை ஆக்கி விடுகிறது. இளம் குருவி பயமறியாது போல. இப்போது குருவிக்கு வயது ஏறுகிறது.  கோபம்,சத்தம்,பொய்,நடிப்பு எல்லாம் வருத்துகிறது. நம்பக் கடினமாக உள்ளதா?  பரவாயில்லை. எல்லோருக்கும்தானே இவை எல்லாம் பிடிக்காது என்று கேட்கலாம். துப்பாக்கி சப்தம் எல்லா உயிரினங்களையும்தான் விரட்டும். ஆனால் குருவி அளவு பயந்து படபடக்காத  ஜீவன்கள் உண்டல்லவா?  அது போல்,  இதுதான் உலகம் என அவற்றைக் கடப்பவர் உண்டு.  ஆனால், ஒரு குருவிதான் இன்னொரு குருவியைப்  பயமுறுத்தாது.  சிட்டுக்குருவி இதயத்திற்கு சொந்தக்காரர்கள்தான் ஒருவரை ஒருவர் வருத்தப் படுத்துவதில்லை.

இந்தக் கலியுகத்தில் இது சாத்தியமா?  சிட்டுக்குருவி இனம் அழிந்து வருகிறதாமே !!!   சிட்டுக்குருவி இதயம் கொண்டவர்களுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்து விடலாமா?  வேண்டாம்.  நாங்கள் அப்படியே இருந்து விட்டுப் போவதால், மற்றவர்களுக்கு என்ன நஷ்டம்?   கட்டுரைகள், இந்த எழுத்துக்கள் ஒரு உணர்வுநிலையில்  இருந்து பிறக்கின்றன. உண்மையில், சின்னத்தனம் கண்டு வருந்தினால் , அது சரிதான். பாரதியார் பிறந்த மண் இது. சிறுமை கண்டு பொங்கினால்,  அது பலவீனம் அல்ல. பலம்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

புதன், 15 ஆகஸ்ட், 2018

நூதன அடிமைகள்

சுதந்திர தினம் அன்று அடிமைகள் பற்றி எழுதலாமா,அடிமைத்தனம் பற்றி எழுதலாமா?  உலக நடப்பைத்தானே எழுத முடியும்? எது குறித்து,யார் குறித்து நாம் பயம் கொள்கிறோமோ அவைகளுக்கு,அவர்களுக்கு நாம் அடிமைகள். இதில் என்ன நூதனம் ? அடிமைத்தனம் என அறியாமலே நம்மைப் பணிய வைக்கும் புது உத்திகளுக்கு இரையானோர் நூதன அடிமைகள். என்ன, அவர்களுக்கு தாம் செய்வது , பழைய காலம் அரண்மனைகளில் இருந்த அடிமைகள் செய்த தொழில்தான் என உணரக்கூட நேரமும் உணர்வும் இருப்பதில்லை. பாவம்.

கார்ப்பரேட் பூதங்களால் விழுங்கப் பட்ட, பணம் பண்ண சமூக அழுத்தத்தால் உந்தப் பட்ட, போதும் என்ற மனம் ஏற்படவே முடியாது தேவைகளைப் பெருக்கிக் கொண்ட , எது ஒன்றையும் மனத்தால் அன்றி மூளையால் மட்டுமே சிந்திக்கப் பழக்கப் படுத்தி கொண்ட, வாழ்வின் முக்கியமான பருவங்களை மற்றவருக்கென,மற்றவரைத் த்ருப்திப் படுத்தவென மட்டுமே செலவிட்ட, மற்றவர் மதிப்பெண் கொடுத்துத்தான் சுயமதிப்பை உணர வேண்டும் என்ற எண்ணம் கொண்ட,வாழ்க்கையை கொடுக்கல் வாங்கல் வ்யாபாரமாக்கிய, வாழ்வை டைம்டேபிள் போட்டு வாழ்ந்து பிரபஞ்சத்தில் கொட்டிக் கிடைக்கும் அழகை, இலவசமாய்க் கிடைக்கும் நிம்மதியை நொடி நேரமும் அனுபவிக்காத, எல்லோரும் நூதன அடிமைகள்தான்.

அடிமைகள் உருவாகிறார்களா உருவாக்கப் படுகிறார்களா என்பதும் கேள்வியே. அல்லது நிர்பந்தமா? யாரறிவார்? இது பெரிய விவாதம். நிர்பந்தத்தால்,வாழ்வின் சூழ்நிலைகளால் சிலர் இந்த வட்டத்தில் சிக்கிக் கொள்கின்றனர். அவர்களைக் குற்றம் சொல்ல இயலாது. ஆனால் அவர்கள் சிந்தனை தெளிவாக இருப்பின், இந்த வ்யூகத்தினின்று வெளிவருவது அசாத்தியமான செயல் அல்ல. உருவாக்கப் படுகிறார்கள் என்பதும் சரியல்ல. தனிமனிதனின் எண்ணங்களே அவனது வாழ்வை பெரும்பாலும் நிர்ணயிக்கின்றன. சரியான நேரத்தில் விழித்துக் கொள்ளுதல்,சரியான இடத்தில் கோடு போடுதல் காப்பாற்றி விடும். அடிமைகள் உருவாகிறார்கள் என்பதே சரி. நாம் எஜமானா அடிமையா என தீர்மானிக்க வேண்டியது நாம்.பூமியில் எவர்க்கும் அடிமை செய்யாமல் இருந்தால்தான் ஆடலாம்,பள்ளுப் பாடலாம். மஹாகவி பாரதியார் அப்படி இருந்ததால்தான், ஆங்கிலேயன் வெளியேறுமுன்னரே ஆனந்தசுதந்திரம் அடைந்து விட்டோமென்று கூத்தாடினார்.

இன்னும் சில பதிவுகள்.எஜமான வர்க்கத்தினருக்கு. பணம் கொடுத்தால் என்ன வேலை வேண்டுமானாலும் செய்ய வைக்கலாம் என்பது இறுமாப்பு. பத்து ரூபாய் நோட்டும் நூறு ரூபாய் நோட்டும் நமக்கு வேலை பண்ணி தருமா? அதைக் கை  நீட்டி வாங்கும் மனிதன்தானே வேலை செய்ய வேண்டும்? அவர்களை இப்படி நடத்தலாம் என வரைமுறை உண்டு. மீறக்கூடாது. அன்புப் பிணைப்பு, அன்பால் அடிமை கொள்ளலாம் என்ற வழக்குகள் உண்டு. அதுவும் தேவை அற்ற ஒன்றே. பிணைப்பது வேண்டாம்.பிணைக்கப் பட வேண்டவே வேண்டாம்.பேசலாம்.......

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

இருளில் உலவும் பெருச்சாளிகள்

நடைப்பயிற்சி மேற்கொள்வது  இப்போது அதிகம் ஆகி உள்ளது. அது ஒரு விழிப்புணர்வு என்றுதான் நான் நினைக்கிறேன். ஜாகிங் போறேன், நாலு கிலோமீட்டர் நடந்தேன் என்பது ஒரு அலட்டலாகவும் இருக்கலாம். குழந்தைகளை யாரும் வெளியே போய் விளையாடச் சொல்வதில்லை. கண்டதை சாப்பிடாதே என்று தடுப்பதில்லை. ஆனால் வயதானவர்களை இப்படியே உட்கார்ந்திருந்தால் வெயிட் ஏறாதா, கொஞ்சம் நட என மிரட்டுகிறோம். எழுபது வயசில் ஏன் சாப்பிட ஆசை என்று கேள்வி கேட்கிறோம். எல்லாம் தலைகீழ். குத்துவிளக்கு மேல்நோக்கி எரிகிறது. அது தீபம். மின்சார பல்ப் தலைகீழாகத் தொங்குகிறது. அது முன்னேற்றம். என் கண்டுபிடிப்பில்லை . பட்டணத்தில் பூதம் படத்தில், அந்த பூதம் சொல்லும், "அடடே தலைகீழாகத் தொங்கும் தீபம்" என்று. மின்சார விளக்கு வந்தாலும், குத்துவிளக்கும் மெழுவர்த்தியும் இருக்கும். சிலவற்றை வாழ்வில் இருந்து பிரிக்க முடியாது. அது போன்றதே நடை.  நன்றாக உள்ளோம் என்பதற்கோர் அத்தாட்சி.

நான் நாள் தவறாது நடக்கிறேன். காலை வாக்கிங் இயற்கையுடனான தொடர்பு.  இரவும் அதே வானம், செடி, கொடி, மரம்தான் சுற்றிலும். ஆனால் அவற்றுக்கும் தூக்கம் வந்து விடுகிறது. இருள் போர்த்திய வானம் மனதை உள்ளே செலுத்தி விடுகிறது. பளிச் என்ற நீலவானம் என்னுடன் பேசும். கருமையான வானம் ," உனக்கு அவன்தானே தோழன், காலை அவனுடன் பேசிக் கொள் , இப்போது, உன் உள்ளே உள்ள ஒன்றிடம் பேசு" என்று சொல்லி விலகி விடுகிறது. அந்த உரையாடலே இந்தக் கட்டுரை.  தினம் இரவு வாக்கிங் சமயம், எங்கள் குடியிருப்பில் பெருச்சாளிகள் குறுக்கிடும். ஒன்றாவது நம் பாதையைக் கடந்து ஓடும். அதைக் கண்டாலே உடம்பு ஒரு மாதிரி சிலிர்த்து என்னமோ செய்யும். அதற்காகவே, காலையே நடைப்பயிற்சியை முடித்து விட வேண்டும் என நினைப்பேன். காலை அவை வெளியே வராது. ஏன்? ஏன்?

யாராலும் விரும்ப முடியாத, முகம் சுளிக்க வைக்கும் ஜந்து பெருச்சாளி. இருட்டில்தான் வெளிப்பட முடியும். பாதாளத்தில், ஆழத்தில் இருக்கும். மனித இதயம் ஒரு பாதாள உலகம்தான். பாதாளத்தில் நல்லதும் நிறையவே இருக்கும். அது போல் மனச்சுரங்கத்தில், நல்லவற்றுடன்,பெருச்சாளிகள் போன்ற, அருவருக்கத் தக்க எண்ணங்கள் இருக்கலாம். பெருச்சாளி அற்ற சுரங்கம்  இருந்தால் நன்று. ஆனால்  அப்படி இல்லையெனில் , வெளிச்சம் பாய்ச்ச்சுவதே அவற்றை விரட்ட வழி. அமைதி தருவன எல்லாம் நீலவானம் போன்றவை. அமைதியைத் துளி கெடுப்பதெல்லாம் இரவு வானம் போன்ற கருமை போர்த்திய எண்ணங்கள். சந்தேகம் இல்லை. யார்தான் கருமையை, இருட்டை, விரும்ப முடியும்?  இரவும் பகலும் போல நம் விதியை வேண்டுமானால் இறைவன் எழுதுகிறான். ஆனால், டார்ச் வெளிச்சத்துக்கும் பெருச்சாளி ஓடி விடுமே? டார்ச் வெச்சுக்காதே என்று இறைவன் சொல்கிறானா, என்ன!! சக்தி மிக்க டார்ச்சுக்கு நாம் அனைவரும் சொந்தக்காரர்கள்.  அதை இயக்குவதும், இயக்காததும் நம் தேர்வு. 

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

எலியட்ஸ் பீச்சில் ஒரு என்ஜினியர்

நேற்று எலியட்ஸ் பீச் சென்றோம். நீர்ப்பரப்பில் மட்டும்தான் கடை போடவில்லை. கடைகள் மயம் . ஒரு மணி நேரம் அங்கு சுற்றினால்,பஜ்ஜி சாப்பிடும் ஆசையை வென்று விடலாம். எங்கு திரும்பினும் பஜ்ஜி கடை. மணல்பரப்பு , அத்தனை பெரிய மணல்பரப்பு ரொம்பவும் அழுக்கு. கல்லூரி மாணவர்கள் ஏதோ சுத்தம் செய்வதாய்க் கூறுகிறார்கள்.ஆனால் பார்த்தால் தெரியும் அளவு முன்னேற்றம் ஏதும் இல்லை. அனைத்துத் தர மக்களுக்கும் பர்ஸுக்கு சரிப்பட்டு வரும் என்டர்டைன்மெண்ட். மண்குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா என்கிறாரே வாலி, வானும் மண்ணும் நீரும் எல்லோருக்கும் பொது அல்லவோ? எளிய காட்டன் புடவைப் பெண்ணின் கால்களையும் ஜீன்ஸ் யுவதியின் கால்களையும் ஒரே மாதிரி நனைக்கும் அலைகள். ஓ திஸ் டர்ட்டி இண்டியா என்று வாயில் சரளமாக சொல்லிக் கொண்டு புழுதி படிந்த சுட்ட சோளத்தை உண்ணும் மக்கள். குதிரை சவாரிக்காக பழக்கப்பட்ட மெலிந்த குதிரைகள். இளம் காதல் ஜோடிகள். இத்தனைக்கு நடுவில்தான் சந்தித்தேன் அந்த என்ஜினியரை . அவனைப் பற்றிக் கூறும் முன் ஒன்று சொல்லி விடுகிறேன்.அழுக்காக இருந்தாலும் பாரத மாதா கீ ஜே தான்.சும்மா வாயில் வந்தபடியெல்லாம் அரசாங்கத்தையும் மற்றவரையும் திட்டிக் கொண்டு பிளாஸ்டிக் பையைக் கூட வீடுகளில் இருந்து அகற்றாதவர்கள் எல்லாம் வாய்க்கு ஒரு பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு இருப்பது மேல். மக்கள் தொகை நாளுக்கு நாள் வளர்பிறைச் சந்திரன் போல் பெருகி வரும் நாட்டில் மாற்றங்கள் மெதுவாகத்தான் ஏற்படும். இந்த சுதந்திரம் கிடைத்த ஆகஸ்ட் மாதத்தில், நிஜ இந்தியக் குடிமகனாக உணர்பவர்கள்,முதலில் சரவணா ஸ்டோரில் துணி வாங்கி விட்டு, "நாலு புடவை வாங்கியிருக்கேன் நாலு பிளாஸ்டிக் கவர் குடுங்க, சொந்தக்காரங்களுக்கு தனித்தனி கவர்ல தரணுமில்ல" என்று கேட்பதையாவது நிறுத்த வேண்டும். தனிமனித ஒழுக்கம் கடைப்பிடிக்காதவர்கள் மற்ற ஒருவன் ஒழுங்காக இல்லை என்று பேசுவது,நாட்டைத் திட்டுவது என்ற கேலிக்கூத்து செய்யத் தேவையில்லை. என்ஜினியரைப் பார்க்கலாம்,வாருங்கள்.

ஐஸ்க்ரீம் விற்கும் சிறுவன். அவன் அம்மா பஜ்ஜி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறாள். ஐஸ்க்ரீம் வண்டி ஒரு சிறிய fridge போல செயல்பட பாட்டரி மூலம் கரண்ட். அதில் ஏதோ கோளாறு. அந்தப் பையனுக்கு பதைபதைப்பு.நல்ல கூட்ட நேரம்.  "அம்மா பவர் வரலே,வந்து பாரு",ஒரு முறை பல முறை கூவி அழைக்கிறான்.அம்மாவுக்கோ,திரும்பக் கூட நேரம் இல்லை.ஒயரை எடுத்து என்னமோ செய்கிறான். மாற்றி மாற்றி அங்கே,இங்கே சொருகினான்.தட்டிக் கொட்டி,கருமமே கண்ணாயினார் என்பது போல் பத்து நிமிஷம் சுற்றுப்புற நினைவு மறந்து என்னமோ செய்தான். விளக்கு எரிந்து விட்டது. அவன் முகத்திலும்தான். பள்ளிகளும் கல்லூரிகளும் டிகிரி தருகின்றன. ஆனால் பேப்பரில் உள்ள டிகிரி ஒருவனை பொறியாளனாக்குவதில்லை. ஐஸ்க்ரீம் சிறுவன் டிகிரி இல்லாத உண்மை எஞ்சினியர். ஆனால் அவனுக்கு யாரேனும் வழிகாட்டுவார்களா, இன்னும் இருபது ஆண்டுகள் கடந்து அவன் யாராகப் போகிறான் என்றெல்லாம் நினைத்து மட்டும் கொண்டேன். நாம் நம்மைப் பற்றித்தான் நினைத்துக் கொள்கிறோம். பெரும்பாலும். சிலர் இருக்கிறார்கள்,உதவி புரிபவர்கள், எளியவரைக் கைதூக்கி விடுபவர்கள். ஆனால் கொடுப்பவரும் வாங்கி கொள்பவரும் சந்திக்க வேண்டுமே!! இதோ எலியட்ஸ் என்ஜினியரை போஸ்ட் எழுதிவிட்டு மறந்து போகப் போகிறேன். காலை சிற்றுண்டிக்கு இட்லியா தோசையா என்ற பெரும் ஆராய்ச்சிக்குப் போகிறேன். எலியட்ஸ் பீச் ஓரம் எத்தனை எஞ்சினியர்களோ...........................

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

தேடல் நிகழும் இடம் சரிதானா?

ஏதோ ஒன்றைத் தேடுவதே வாழ்க்கை. சரியான இடத்தில் தேடினால் புதையல் கிடைக்கும். தவறான இடத்தில் தேடினால் எதுவும் கிடைப்பதில்லை. எங்கு தேட வேண்டும் , எதை நாட வேண்டும் என்பதே மிகவும் தீர்கமானதொரு முடிவு. வயிற்றுவலி வந்த ஒரு ஆண், மகப்பேறு மருத்துவரிடம் சென்று தீர்வு கேட்பது போல கேலிக்குரியது தவறான இடத்தில், தவறான நேரத்தில், தவறான நபரிடம்  நிகழ்த்தும் தேடல். தேடலுக்கு மூலம் எதுவாகவும் இருக்கலாம். பொருள் தேடல், துணை தேடல், அன்பு தேடல், ஆதரவு தேடல், புகழ் தேடல், இறை தேடல் என பல வகைத் தேடல்கள் உண்டு. அந்தோ,  நம்மில் பலர் வேண்டாத இடத்தில், தவறான நபரிடத்தில், தேடி, சலித்து வாழ்வின் பெரும்பகுதியைக் கடந்து விட்டு ரத்தம் சுண்டியபின் உணர்கிறோம், உணர வாய்ப்பே இன்றி பயணத்தை நிறைவும் செய்கிறோம்.

நேற்று காரில் சென்று டிராஃபிக் ஜாமில் மாட்டினோம் . சைக்கிள், கட்டை வண்டி,எல்லாம் எங்களைக் கடந்து சுகமாய் சென்றன. கார் , அது எத்தனை லட்சம் பெறுமானமான கார் ஆனாலும் அது என்ன வேகத்தில் செல்லலாம் என ரோட்டில் போகும்,  மற்ற, விலை குறைந்த வாகனங்கள் தீர்மானிக்கின்றன. பெரிய கார் இருந்தால் போகும் இடம் அடைவது சுலபம் என்று அர்த்தமில்லை. எந்த இடத்துக்கு ஷேர் ஆட்டோ இன்னும் சரியான வாகனம் என்பது கூட ஒரு முக்கியமான முடிவுதான். வாழ்க்கைச்  சூழ்நிலைகள் டிராஃபிக் ஜாம் போன்றவை. சிக்னல் காத்திருப்புகளின் போது மற்றவரைப் பார்த்து வசை பாடாமல் காத்திருப்பது அமைதி தரும். எழுத தலைப்பும் தரும்.

பாகற்காயைப் பார்த்து இனிப்பாக இரு என முடியுமா?  தேளே, கொட்டாதே என முடியுமா? கல்லுக்குள் ஈரம் காண முடியுமா?  ஈரம் அறியா இதயங்களிடம் அன்பைப் பெற முடியுமா?  எங்கு எதைத்  தேட வேண்டுமோ அங்கு அதைத் தேடினால் ஏமாற்றம் வருமா?  அதிர்ச்சி வேண்டுமானால் வரும். பாகற்காய் பாயசம் போல இனித்தால் அதிர்ச்சி இல்லையா என்ன!! ஆனால்,  நம் தேடல்கள் முடிவதில்லை. சிலர் சரியாகத் தேடி, வேண்டியதை அடைகிறோம்தான். ஆனால்,  அது அடுத்த தேடலின் ஆரம்பமே. தேட வேண்டியது ஒன்றே. அது சுலபமாகக் கிடைக்கும் வஸ்து இல்லை. அன்பெனும் பிடிக்குள் மட்டும்  அகப்படும் மலை அல்லவோ!!!