அது என்ன சிட்டுக்குருவி இதயம். ? யார் தந்த பெயர்? ஏன் அந்தப் பெயர்? நான் வைத்த பெயர். பெயருக்குக் காரணம் உண்டு. அதனால் காரணப் பெயர். சிட்டுக்குருவியே குட்டிப் பறவை. அதன் இதயம் எத்தனை பெரிசு இருந்து விட முடியும்? சிட்டுக்குருவியை பயம் காட்ட முடியும். கொஞ்சம் யாரேனும் சத்தம் போட்டால் கூட அதன் இதயத் துடிப்பு அதிகரிக்குமோ என்று நினைப்பேன். இளகிய மனம் கொண்ட மனிதர்களைத்தான் கட்டுரையின் தலைப்பு குறிப்பிடுகிறது. ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட என் மகன் ராகவனுடனேயே நாளின் பெரும்பகுதி செலவிடுவதால் சிட்டுக்குருவி இதயம் பற்றின ஆராய்ச்சி அதிகம் செய்கிறேன். வீட்டிற்குள்ளேயே யாரும் குரல் உயர்த்தினால் , ராகவனின் சிட்டுக்குருவி இதயம் இதை ஏற்காது என்று பலமுறை கூறி உள்ளேன். எப்பொழுதேனும் ராகவன் தாண்டி என் பற்றி நினைப்பதுண்டு. என் இதயத்திற்கும் இது பொருந்துமா?
என் சிறிய வயது இதயம் அத்தகைய ஒன்றுதான். மிக இளகியது. இப்போதும் மாற்றம் இல்லை. உண்மையில் , ராகவன் கூட சேர்ந்து அல்லது அவன் என்னுடன் சேர்ந்து சிறிய முரண்பாடுகள் கூட, துப்பாக்கி சப்தம் கேட்ட குருவி போல் என்னை ஆக்கி விடுகிறது. இளம் குருவி பயமறியாது போல. இப்போது குருவிக்கு வயது ஏறுகிறது. கோபம்,சத்தம்,பொய்,நடிப்பு எல்லாம் வருத்துகிறது. நம்பக் கடினமாக உள்ளதா? பரவாயில்லை. எல்லோருக்கும்தானே இவை எல்லாம் பிடிக்காது என்று கேட்கலாம். துப்பாக்கி சப்தம் எல்லா உயிரினங்களையும்தான் விரட்டும். ஆனால் குருவி அளவு பயந்து படபடக்காத ஜீவன்கள் உண்டல்லவா? அது போல், இதுதான் உலகம் என அவற்றைக் கடப்பவர் உண்டு. ஆனால், ஒரு குருவிதான் இன்னொரு குருவியைப் பயமுறுத்தாது. சிட்டுக்குருவி இதயத்திற்கு சொந்தக்காரர்கள்தான் ஒருவரை ஒருவர் வருத்தப் படுத்துவதில்லை.
இந்தக் கலியுகத்தில் இது சாத்தியமா? சிட்டுக்குருவி இனம் அழிந்து வருகிறதாமே !!! சிட்டுக்குருவி இதயம் கொண்டவர்களுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்து விடலாமா? வேண்டாம். நாங்கள் அப்படியே இருந்து விட்டுப் போவதால், மற்றவர்களுக்கு என்ன நஷ்டம்? கட்டுரைகள், இந்த எழுத்துக்கள் ஒரு உணர்வுநிலையில் இருந்து பிறக்கின்றன. உண்மையில், சின்னத்தனம் கண்டு வருந்தினால் , அது சரிதான். பாரதியார் பிறந்த மண் இது. சிறுமை கண்டு பொங்கினால், அது பலவீனம் அல்ல. பலம்.
ரஞ்ஜனி த்யாகு
MOTHER PROTECTS
அருமையான பதிவு
பதிலளிநீக்குhttps://tamilmoozi.blogspot.com/2020/09/blog-post.html
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குClick Here To Read More Articles {Articlepins.com}
பதிலளிநீக்கு