செவ்வாய், 31 மார்ச், 2015

மொழி

தாயின் கருப்பையில் ஒன்பது மாதங்கள் தங்கி,விடுதலை பெற்று வெளிவரும் ஜீவன் தன் இருப்பை அழுகையால் வெளிப்படுத்துகிறது. அவரவர் குழந்தையின் அந்த முதல் அழுகுரலே இது வரை கேட்டவற்றில் மிக  இனிமையான சத்தம். வளரத் தொடங்கும்  குழந்தை நம்மிடம் இருந்தே மொழியைக் கற்கிறது.நம் வாய் மூலமே நம் இயல்பு  வெளிப் படுகிறது   என்பதால் மொழியை சரியாகக் கற்பிப்பது பெரிய பொறுப்பு..சிலர் வாயைத்திறந்தாலே பயம் ஏற்படும்.சிலர் இன்னும் ஏதாவது பேச மாட்டார்களா என்றிருக்கும்.எல்லா மொழிகள் போல் மௌனம் கூட ஒரு மொழிதான். "மௌனமே பார்வையால்  ஒரு பாட்டுப் பாட வேண்டும்" என்ற பாட்டு எவ்வளவு அழகாக எழுதப் பட்டுள்ளது என்று தோன்றும்.என்னைத் தெரிந்தவர்களுக்கு என் மௌனக் குழந்தை ராகவனையும் தெரியும்.நானும் அவனும் மட்டும் வீட்டில் இருக்கும் மௌனமான பல காலைப் பொழுதுகளில் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு வடிவம் தர அவன் தவிப்பதைப் பார்ப்பது போல் கஷ்டமான விஷயம் எனக்கு எதுவும் இல்லை.

நேற்று எனக்கு ஒரு ஸ்பெஷல் நாள்.தோட்டத்தில் இருந்த தேனடையில் இருந்த ஒரு குழவி காலில் கொட்டி விட்டது.உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உயிர் கொல்லும் வலி. அனிச்சையாக கண்ணில் இருந்து கண்ணீர் கொட்டுகிறது.அப்போது ஓடி வந்து தன்  இரண்டு கைகளால் என் கண்ணீரைத் துடைத்து விட்டு சற்று யோசித்த ராகவன்  "அளாதடா "என்றான். இது வரை நான் கேட்ட ஆறுதல் வார்த்தைகளில் அதற்கு இணையாக ஒரு வார்த்தையை யாரும் கூறியதில்லை.நான் என்ன மஹாத்மாவா ,சத்தியசோதனை போல சுயசரிதை எழுத?ஏதோ நம் blog ,படிப்பவர்களும் நமக்குத் தெரிந்தவர்கள்தானே பெரும்பாலும் என்று எழுதுகிறேன்.

மொழி சரியான நேரத்தில் சரியானபடி உபயோகிக்கப் படும் போது எவ்வளவு அழகானது என்று நினைத்துக் கொள்கிறேன்.மறுபக்கம் என்ற ஒன்றுதான் எல்லாவற்றிற்கும் இருக்கிறதே? கடுமையான, பயனற்ற, புண்படுத்த,
தற்பெருமையை பறைசாற்றிக்கொள்ள ,உபயோகமாகும் மொழியும் உண்டு.அது போன்ற மொழி பயன்படுத்துபவர்களிடம் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன். ஆனால் society ,அதற்கென்று சில norms என்ற வேண்டாத விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன.அதையெல்லாம் தூக்கிப் போட்டால் என்ன ஆகிவிடும்?எதற்கெடுத்தாலும் இடக்கான பதில்கள்,அமிலம் போன்ற வார்த்தைகள் அதையெல்லாம் காது கொடுத்துக் கேட்க வேண்டிய கட்டாயம் என்ன?ஒரு இருபது வருஷம் கழித்து நான் என்ன மாதிரியான விஷயங்கள் பேசுவதில் சின்ன வயதில் நேரம் செலவழித்திருக்கிறேன் என்று எண்ணிப் பார்த்தால் மனசுக்கு சந்தோஷம் ஏற்பட வேண்டும்,அதிர்ச்சி ஏற்பட்டால் அந்த வருடங்கள் எல்லாம் வீணில் கழிந்தவையே.

வார்த்தையைப் பிடுங்கி நம்மைப் பேச வைப்பவர்களைக் கடவுள்தான் அடையாளம் காட்ட வேண்டும்.வயதிற்கு ஒவ்வாது சிண்டு முடிதல் மனதில் தோன்றும் சின்னத்தனம் இவை இயல்பாக சிஸ்டத்திலேயே இருந்தால் ஆபத்து."Strike, strike at the root of penury in my heart "என்கிறார் தாகூர்.ஒருவர் வாயைக் கொண்டுதான் அவர் பெரிய மனிதரா என்று கூற இயலும்.இல்லை என்றால்," எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு" என்பதுதான் உண்மை.ராகவனின்" அளாதடா "ஏன் என்னை நெகிழ்த்தியது?பேசவே பேசாத ஒரு ஜீவனின் அபூர்வ வார்த்தை அது என்பதால்.தொணதொண என்ற பேச்சு ஓசையாக உள்ளது.பைசா பெறாத குடும்பப் பிரச்சினைகள்,அடுத்த நிமிடமே மாறக்கூடும் என்ற நிகழ்வுகள் குறித்துத்திட்டமிடுதல் அதில் எல்லாம் கலந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இவையெல்லாம் நேர விரயம் அன்றி வேறென்ன?Let us cross the bridge when it comes .

நேற்று கல்யாணமாலையில் கேட்டது.ஒரு நாட்டின் அதிபர் தன் மனைவியுடன் ஒரு நாள் காரில் சென்று கொண்டிருந்தாராம்.அப்போது பெட்ரோல் பங்க் ஒன்றில் நிற்க வேண்டி இருந்ததாம்.அதில் வேலை பார்த்த நபர் நம் அதிபரின் மனைவியின் தோழன்.அதிபர் மனைவியிடம் கேட்டாராம்,  "என்னைக் கல்யாணம் பண்ணாமல் அவனைப் பண்ணி இருந்தால் என்ன செய்து கொண்டிருந்திருப்பாய் இப்போது ?" என்று.அதற்கு சற்றும் தாமதிக்காமல் அவர் மனைவி கூறினாராம் ."அதில் என்ன சந்தேகம்?இதே போல் இந்த நாட்டு  அதிபரின் மனைவியாய்க் காரில் அவன் பக்கத்தில்  உட்கார்ந்து கொண்டு போய்க் கொண்டிருந்திருப்பேன்,நீ பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்திருப்பாய் "என.வாழ்க்கையை எப்படி பாசிடிவ்வாக எதிர்கொள்வது என்பதற்கு ஒரு பேச்சாளர் கூறியது இது.வெட்டிப் பேச்சுகளுக்கு இந்த மாதிரி பதில்கள்தானே சரி?

பேசாமல் communicate செய்வது இன்னும் சவுக்கியமாய் இருக்கிறது."முன்னம் இருக்கும் இந்தச் சின்ன முகத்தில் பல மொழிகள் பாடம் பெற வர வேண்டும்" என்று கண்ணதாசன் காதல் பாட்டாய் எழுதியதை நான் ராகவனிடம் பாடும் போதுதான் அர்த்தம் முழுமை பெற்றது போல் உள்ளது.வெகு சிலர் தவிர யார் குறைவாகப் பேசினால் அல்லது பேசாமல் செய்யும் communication ஐப் புரிந்து கொள்கிறார்கள்? முழு மௌனத்தைக் குறிப்பிடுகிறேன்.E mail ம் s m s ம் கூடப் பேச்சுதான்.நாம் எப்படிப் பட்டவர்கள் என்ற சுயமதிப்பீடு சரியாய் இருந்தால் எனக்கு அது போதும்.நம்மைப் பற்றி சரியான புரிதல் உள்ளவர்களுக்குபேசி எதையும் புரிய வைக்கத் தேவை இல்லை.அந்தப் புரிதல் இல்லாதவர்களுக்கு கொஞ்சமாவது புரிய வைக்கக் கூட செலவழிக்கும் நேரத்தால் பலனில்லை.

தமிழ் மீடியம் பள்ளிகளில் படித்து(இப்போதைய கான்வென்ட்டுகளுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத கோவில்கள்தான் அந்த அரசுப் பள்ளிகள்)ஆங்கிலத்தை ஒரு பாடமாகவே மட்டும் படித்திருந்தாலும் how can we not fall in love with great works such as Gitanjali by Tagore ? கீதாஞ்சலியை அவர் எழுதிய spirit சற்றும் மாறாமல் எனக்குக் கற்பித்த என் முதல் ஆசான்களான என் பெற்றோரை நினைத்துக் கொண்டே இன்று மறுபடி படிக்கிறேன்.P U C படித்த தலைமுறைக்கு 11th grade ல்" This is my prayer to Thee my Lord" poem text ல் இருந்திருக்கும்."Give me the strength to raise my mind high above daily trifles" என்ற தாகூரின் prayer மனதில் ஆணி அடித்தது போல் உட்கார்ந்து கொண்டுள்ளது.

இன்னும் எழுதப் போனால் தாகூரை மொழி பெயர்க்க இவள் எதற்கு நாம் ஒரிஜினலையே படித்துக் கொள்ள மாட்டோமா என்று நினைக்க மாட்டீர்களா?
சத்தம், மொழி பற்றிப் பேசத் தொடங்கியது கீதாஞ்சலி வரை வந்து விட்டது .
சுற்றுப்புறம் ஓசையால் காதை செவிடாக்கிக் கொண்டுதான் உள்ளது.அதற்கு எதுவும் செய்ய முடியாது இருக்கிறோம்.ஏழு மணி வரை (அதற்குள் எழுந்து விட்டால்) காலைப் பொழுதின் அமைதியை ரசிக்கும் நான் அதற்கு மேல் பக்கத்து வீட்டுப் பையன் அலற விடும் ஜாஸ் ம்யூசிக்கையோ அல்லது எல்லோருக்கும் கொஞ்சம் பக்தி வரட்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவன் அம்மா அதிக பட்ச வால்யூமில் வைக்கும் கந்தசஷ்டிக் கவசத்தையோ கேட்டே ஆக வேண்டும்.வசிப்பது flat அல்லவா?ஏ தாவது சொன்னால் கூடி வாழும் சமூக வாழ்க்கைக்குத் தகுதி அற்றவளாய் brand பண்ணப் படுவேன்.

சில சமயம் வீட்டுக்குள்ளேயே இந்த தொந்தரவு நம் எல்லாருக்கும் இருக்கும்.எல்லா வயதினரும் சேர்ந்ததுதானே குடும்பம்?சின்னவர்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டியை அலற விடுவது த்ரில்.பெரியவர்களுக்குக் கேட்கும் திறன் குறைவதால் அதிக வால்யூம் தேவைப் படுகிறது. அதிக சத்தம் நல்லதில்லை ;அதன் பெயர் noise pollution என்று குழந்தையில் இருந்தே கற்பிக்கலாம். பெரியவர்கள் hearingaid வைத்துக் கொள்ளலாம்.அல்லது வசதியாய்,நல்ல நிலைமையில் உள்ள புலன்களால் செய்யும் காரியத்தில் மனதைச் செலுத்தி மற்றதை  விட்டு விடலாம்.மறுபடி வயதானவர்களுக்கு எதிரான எதையானும் எழுதுகிறேன்.எனக்கும் ஒரு நாள் இந்த இயலாமை வரும் என அறிவேன்.அதற்கான preparation ஆகத்தான் மனதிற்குள் ஏற்படும் சத்தங்களை மட்டுப் படுத்துவது நல்லது,அப்படிச் செய்தால் பேசும்   மொழி ,தானே நல்லதாகும்.அப்பாடா சுற்றி வளைத்து தலைப்புக்கு வந்தாயிற்று!

மறுபடி அடுத்த மாதம் சந்திப்போம்.

ரஞ்ஜனி த்யாகு 

MOTHER PROTECTS 

வியாழன், 26 மார்ச், 2015

கணவனுக்கு ஒரு கடிதம்

ஒரு பெரிய நாட்டின் ஒரு கோடியில் சாதாரணமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் என் குரல் இந்தத்தாய்த் திருநாட்டின் பல கோடிப் பெண்கள் சார்பாய் ஒலிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.எனக்குப் பையன்களே பிறந்திருந்தாலும் ,இந்தக் காலப் பெண்கள் தங்கள் வழியில் குறுக்கிடுவோர் கண்களில் விரலை விட்டு ஆட்டுவதில் எனக்கு ஏற்பட்டுள்ள மகிழ்ச்சி அலாதியானது.இத்தனைக்கும் I am not a feminist .Just the opposite  .சுயத்தை ஒரு நிகழ்வு தொலைக்கும் என்றால் அதன் அவசியம்தான் என்ன?மகன்கள் வைத்துக் கொண்டு அவர்களுக்குக் கல்யாணம் பண்ணி குழந்தை குட்டியுடன் இருப்பதைப் பார்த்து உண்மையான சந்தோஷம் அடைய நினைக்கும் பெற்றோர்கள் மட்டும் கல்யாணம் பண்ணி வைக்கட்டும்.மற்றபடி தங்கள் வாழ்நாள் முழுவதும் மகனுடைய வாழ்வையும் சேர்த்து இரட்டை வாழ்வு வாழ்ந்து, - வரும் பெண்ணுக்கு, உள்ள ஒரு வாழ்வையும் பறித்துக் கொள்ள நினைப்பவர்கள் நித்திய பிரம்மச்சாரிகளாய் பிள்ளைகளை வைத்துக் கொள்வதே மேல்.பிள்ளையார் சொன்னாராமே" என் அம்மா மாதிரி பெண் கிடைத்தால்தான் திருமணம் புரிவேன் " என்று,அது மாதிரி தங்களுக்கே பிள்ளையிடம் முதலிடம் என்று பிள்ளையைக் கைக்குள் வைத்து வளர்க்கும் தாய் ஒரு அம்மாவாய் வாழ்க்கையில் தோற்றதாகத்தான் அர்த்தம்.

பண்டைக்காலத்தில் வானப்ரஸ்தம் என்று வைத்தார்களே ,எதற்காக?அரசர்கள் கூட ஒரு வயதிற்குப்பின் இளையவர்களுக்கு முடி சூட்டி விட்டு ஒதுங்கவில்லையா?பின் ஏன் பையனைப் பெற்ற அம்மாக்கள் மட்டும் திருமணமான மகன் மீது ஆதிக்கத்தை விட மறுக்கிறார்கள்?சின்ன வயதில் தாங்கள் வெறுத்த விஷயங்களைத் தன் மருமகளும் வெறுக்கலாம் என எண்ணிப் பார்க்கிறார்களோ?
என் அன்புக் கணவனே,
மனைவிக்கு மனம் உண்டு.உன் அம்மா உன்னிடமும் என்னிடமும் காட்டும் முகம் வேறு .சொன்னால் நீ ஒத்துக் கொள்ளவா போகிறாய்?ஒத்துக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை.ஏன் தவறுகளை ஞாயப் படுத்துகிறாய்?நான் உன்னிடம் கொண்ட பிரியம் என் பெற்றோராலா நிர்ணயிக்கப் படுகிறது?அப்போது நீ என்னிடம் செலுத்தும் அன்புக்கும் அதே விதிதானே?நான் அடிமை இல்லை. "நீ என் பெற்றோரிடம் இப்படி நடந்து கொண்டால்தான் என் அன்பைப் பெற முடியும்" என்று நீ கூறும் பட்சத்தில் அந்த அன்புப் பிச்சை எனக்குத்தேவை இல்லை.அதுவும் தவறாக நடப்பவர்களிடம் இதைக் கூறினால் தேவலை.என்னால் வீட்டு வேலைக்காரர்கள் முதல் யாரிடமும் கடுமை காட்ட இயலாது.நான் உயிர் போல் நினைக்கும் உன்னை எனக்குத் தந்தவர்களிடமா அலட்சியம் காட்டுவேன்?அது கூடப் புரியாமல் பெற்றோரிடம் உள்ள பாசம்,(பாசமா அது!!!என் அகராதியில் அதன் பெயர் பயம்)உன் கண்ணை மறைத்தால் அதற்கும் நானா பொறுப்பு?

அவள் ஒரு தொடர்கதையில் சுஜாதாவை,சந்தோஷ் சுப்ரமணியத்தில் ஜெனிலாவை ரசிப்பீர்கள்.ஆனால் மனைவி மட்டும் புடவைத்தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொண்டு பவ்யம் தவிர வேறு ரசத்தைக் காட்டக் கூடாது என்றால் எப்படி Boss ? எத்தனையோ நாள்கள் பேசி மனது அசந்து போய் விட்டது.ஒரு புடவை வாங்குவதில் இருந்து ஹோட்டல் போவது, வெளியூர் போவது அவ்வளவு ஏன் கோயில் போவது கூடத் தங்கள் விருப்பப் படியே மகன் செய்ய வேண்டும் என்று அவர்கள் கொடுத்த மன அழுத்தங்களுக்கெல்லாம் ஈடு கொடுத்து என் விருப்பங்களை இரண்டாம் பட்சமாகவே நீ நினைத்திருந்தாய் என்பது என் பார்வையில் உண்மையேயாயினும் மனது என்னவோ நீதான் பாவம் என்று உன்னை எப்போதும் மன்னிக்கவே செய்கிறது.

அவர்கள் நல்லவர்கள்தான்.நீங்கள் சேர்ந்துள்ள போதுதான் பிரச்சினையே.அவர்கள் முதுமையினால் சோர்ந்து போவதற்கும், விரக்தி அடைவதற்கும், ஆசைகள் சிலவற்றை விடவே முடியாது அடையும் துன்பங்களுக்கும் தன்  முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு நிகழ் காலத்தைத் தொலைக்கும் வளர்ந்த குழந்தையுடன் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டமே வாழ்வு எனத் தோன்றுகிறது.ஆயாசமாக இருக்கிறது.என் அமைதியைக் கெடுக்கும் பலம் இந்த அற்ப நிகழ்வுகளுக்கு  இல்லவே இல்லை.ஆனால் உன் முக வாட்டத்திற்கு அந்த சக்தி உள்ளதே,நான் என்ன செய்ய?இந்தக் கடிதம் மட்டும் என்ன சாதிக்கப் போகிறது தெரியவில்லை.ஆனால் நான் மிஸ் பண்ணினதாய் நினைக்கும் சிலவற்றை உன்னுடன் சேர்ந்து செய்யக் கடவுளிடம் இன்னும் ஒரு பிறவி கேட்க ஆசை.

இப்படிக்கு ,

பல பெண்களின் பிரதிநிதி  -   ஒரு Typical  Indian Housewife 


பின் குறிப்பு ; இந்தக் கடிதம் ஒரு கற்பனையே.யாரையும் குறிப்பிடவில்லை.ஆனால் நான் அதிகமாய்த் தொடர்பில் உள்ள பெண்கள் 
இதைத் தாங்கள் எழுதியதாகவே உணர்வார்கள் என எனக்குத் தெரியும்.இதில் குறிப்பிடப் பட்டுள்ள character உடைய ஆண்கள் பற்றி என்ன கூறுவேன்?Live the present .Do not take responsibility for things which are not under your control   என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால் அறிவுரை கொடுப்பது செய்யத் தகாத ஒன்று,அதுவும் adults க்கு.ஆத்மார்த்தமாய் பெரியவர்கள்   நல்லவர்களாய் இருந்து மருமகள் சாட்டுவது பொய்க் குற்றமாய் இருக்கும் குடும்பங்களும் உண்டு.எல்லாவற்றிற்கும் விதிவிலக்குகள்  இருக்கின்றன...பொதுவாகக் கூறுவது இயலாது. 

ரஞ்ஜனி த்யாகு 

Mother protects

சனி, 21 மார்ச், 2015

மாஸ்டர் ஹெல்த் செக் அப்

 நேற்று ஒரு பெரிய மருத்துவமனையில் எனக்கும் என் கணவருக்கும் மாஸ்டர் செக் அப்.பழைய கால தாத்தாக்களும் பாட்டிகளும் ஏதேனும் உடம்பு சுகமில்லை என்றால் மருத்துவரிடம் போவார்கள்.அதுதானே லாஜிக்கும் கூட!பிரச்சினை இல்லாதவர்கள் வக்கீலிடம் போகிறார்களா,பாடத்தில் சந்தேகம் இல்லாதவர்கள் ஆசிரியரிடம் செல்கிறார்களா,பணம் இல்லாதவர்கள் வங்கிக்குச் செல்கிறார்களா?அப்போது ஓரளவு தலைவலி காய்ச்சல் மாதிரியான நோய்கள் தவிர குறிப்பிட்ட பிரச்சினை இல்லாத போது மருத்துவப் பரிசோதனையின் தேவை என்ன ?

கிட்டத்தட்ட ஒரு சுற்றுலா மையம் போல மருத்துவமனைகள்.பணம் விளையாடி உள்ள interiors மற்றும் சுற்றுப்புறம்.முழு உடல் பரிசோதனைப் பிரிவில் நல்ல கொழு கொழு மனிதர்கள்.(நான் விதிவிலக்கல்ல.)இந்த சமயம் இன்னொன்று சொல்ல வேண்டும்.போனவுடன் உடல் எடை எடுக்கப்படுகிறது.எடை காட்டியின் முள் வலது பக்கம் சாயச் சாய நம் BP எகிறுகிறது.நேற்று வரை நிம்மதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.இன்று எதைப் பார்த்தாலும் பயம் பற்றிக் கொண்டுவிட்டது.

ஏதோ இப்போது ஏற்பட்டுள்ள awareness என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள்.எத்தனை புரிதல் இருந்தாலும் ஒரு சில நோய்கள் தவிர பிறவற்றைத் தடுக்க முடியாது.வந்தால் treat பண்ண வேண்டியதுதான்.நாம் எதை அதிகம் எதிர்பார்க்கிறோமோ அதை விரும்பி அழைக்கிறோம் என்பது உண்மை.அதனால்தானே பெரியவர்கள் நல்லது நினைக்கச் சொன்னார்கள்.உடம்பில் குத்திக் குத்தி ரத்தம் எடுத்து அதைப் பரிசோதித்து நான் நன்றாய் இருக்கிறேனா என்று சொல்ல சாதாரண நாட்களில் ஒரு மருத்துவர் தேவை இல்லை.அதை என் உடம்பே எனக்குச் சொல்லி விடும் அன்றோ?ஒரு பாயிண்ட் temperature கூடினால் நம்மால் இயல்பாய் இருக்க முடிகிறதா?பின் எதை அறிய இந்த சோதனை?புற்று நோய் வருமா ,ஹார்ட் அட்டாக் வருமா இதெல்லாம் துல்லியமாய்க் கூற அவர்கள் கடவுளா?மருத்துவர்கள்தானே?  

உடம்பு ஒரு கோவில்.அதைப் பார்த்துக் கொள்ள வேண்டாமா என்று எல்லோரும் கேட்கிறார்கள்.யார் இல்லை என்று சொல்கிறார்கள்?உடம்பு சின்னதாக ஒரு signal கொடுத்தாலே மருத்துவரைப் பார்த்து விடணும் என்றுதான் நானும் சொல்கிறேன்.ஆனால் சும்மாவேனும் போய் இப்போது எல்லாம் நன்றாக உள்ளது.மறுபடி ஒரு வருடத்திற்கப்புறம் வந்து எல்லாம் சரியாகத்தான் உள்ளதா என்று பார்த்துக்கொண்டு போ என்பது எதற்கு என்று புரியவில்லை.நடுவில் நமக்கு ஏதேனும் வந்திருந்தால் அதைப் போன வருட செக் அப் எந்த முறையிலாவது தடுத்து நிறுத்தியதா?இல்லையல்லவா?

பின்னால் பெரிதாக எதுவும் வந்தால் வேண்டும் என்றே சொல்லி பணம் சேர்க்கவும் செய்ய வேண்டாம்.புலி வருது கதை போல எதற்கு தப்பாய் யோசிக்க வேண்டும்?நாம் ஒவ்வொருவரும் ஒரு mission உடன் உலகிற்கு வந்துள்ளோம்.அது முடியும் வரை சூழ்நிலை எதுவாயினும் வாழவே வேண்டும்.மரம் வைத்த கடவுள் நீர் ஊற்றுவார்.கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் தங்களையேயாயினும் நம்பலாம்.A miser is a person who lives poor throughout his life to die rich என்று படித்தேன்.எவ்வளவு சரி?நல்ல விஷயங்களுக்கு செலவு செய்வோம்.

நான் இன்னும் ஐம்பது வருடங்களுக்கு முன்னம் உள்ள நாட்களில்தான் வாழ்கிறேனோ என்னவோ?இப்படி ஒரு நாள் விட்டு ஒரு நாள் வெயிட் பார்ப்பதும் 100 கிராம் குறைந்தால் குதூகலிப்பதும் எப்போ என்ன வருமோ எனப் பயந்து கொண்டே வாழ்வதும் நம் முன்னோரிடம் இல்லை.வாழ்க்கையுடன் உடற் பயிற்சியும் பின்னிப் பிணைந்திருந்தது.அதற்காக மிக்சி இருக்கும் போது நான் மட்டும் அம்மியில் சட்னி அரைப்பேனா ,அதைச் சொல்லவில்லை.ஆனால் எல்லாக் கண்டுபிடிப்புகளும் நன்மை அளவு தீமைகளையும் தந்து விட்டதோ? இல்லை என்றால் ஸ்கைப் மூலம் எங்கோ இருப்பவர்களை படுக்கை அறைக்கு அழைத்து வரும் நாம் அடிக்கடி சந்திக்கும் சொந்தங்களிடம் கூட பாராமுகம் காட்டுவோமா? இல்லை நேரம் இல்லாதது போல் நடந்து கொள்வோமா?Facebook ல் சமீபத்தில் உறுப்பினரானேன்.புகைப்படம் கூடப் போடாது ஒரு பூவை profile picture ஆகப் போட்டால் கூட நாலைந்து like வருகிறது.ஆனால் நாம் தினம் சந்திக்கும் யாரிடமாவது I like this in you என்று மனம் விட்டு சமீப நாட்களில் சொல்லி இருக்கிறோமா?எல்லாவற்றிலும் இயந்திரத்தனம்.

தலைப்புக்கு சம்பந்தம் இல்லாது ஏதோ பேச நேர்ந்து விட்டது.மனசில் பாதிப்பை ஏற்படுத்தினது மாஸ்டர் செக் அப்பா இல்லை கால மாற்றமா,எதுவானாலும் மறுபடி உங்களுடன் பேசியது மகிழ்ச்சி.எழுதி அனைவருடனும் தொடர்பில் இருப்பது ஒரு மகிழ்ச்சி என்றால் படிப்பது இன்னும்.இந்த மாதம் பொன்னியின் செல்வன். சோழர்கள் காலத்தில் அரண்மனையில் வாழ்வது போல் ஒரு feel உண்டாக்க கல்கியால்தான் முடியுமா? எவ்வளவு ஆராய்ச்சிக்குப் பின் எழுதப் பட்டுள்ள படைப்பு?!இது போன்ற இன்டர்நெட் வசதிகள் எல்லாம் அற்ற காலத்தில் சேகரிக்கப் பட்ட செய்திகள் அல்லவா எல்லாம்!


ரஞ்ஜனி த்யாகு  


MOTHER PROTECTS 

திங்கள், 9 மார்ச், 2015

அனுபவம்

பொங்கலும் அதுவுமாய் வேலை பார்க்க வரும் சத்யா வழக்கம் போல் மட்டம் போட (அவர்கள் பண்டிகை கொண்டாட வேண்டாமா)ஒவ்வொரு ரூமாய்த்துடைத்துக்கொண்டே வந்த நான் கால் வழுக்கி டமார் என விழுந்து சரியாய் தலையில் அடி பட்டுக்கொள்ள பின் மண்டையில் கொம்பு முளைத்தாற் போன்று வீங்கி விட்டது.ஒரு சில நிமிடம் வீட்டில் எல்லோரும் பரபரத்தார்கள்.அதற்கு மேல் வியாதியைக் கொண்டாட நம் போன்ற பெண்களுக்கு யார் நேரம் தருகிறார்கள் ?"அம்மா போல தைரியமான பெண் யார் இருக்கா? கொஞ்சம் அயோடெக்ஸ் போட்டு தேச்சு விட்டா பத்து நிமிஷத்துல பொங்கல் வைக்க ரெடி ஆகிடுவா" .ஒரே பாராட்டு மழையில் நனைந்தது அல்ப மனித மனதுக்கு உற்சாக டானிக் போல இருக்க சாவி கொடுக்கப்பட்ட பொம்மை மாதிரி இரவு வரை எல்லாம் பண்ணினேன் .ஆனால் வலி மட்டும் நான் இருக்கிறேன் என்று உணர்த்திக்கொண்டே இருந்தது .அடுத்த நாள் கனுவிற்காக அம்மா வீடு சென்ற போது சாதாரணமாக முதல் நாள் விஷயங்களை விவரித்தவுடன் நமக்காக என என்றும் துடிக்கும் மனம் கொண்ட அம்மா என்ற ஜீவன் ஓடி வந்து தலையைத்தடவிப்பார்த்து அதிர்ந்தது ."என்னடீ இப்படி வீங்கி இருக்கு ஒரு ஸ்கேன் எடுத்துப்பார்த்துட்டா நல்லது இல்லயோ உடனே டாக்டர்ட்ட போ " 

 டாக்டர் எதுவும் எசகு பிசகாய் சொல்லி விடக்கூடாதே என்று பயந்து கொண்டே போனால் அவர்" இத்தனை நேரமா வராம என்ன செஞ்சீங்க நீங்கள் எல்லாம் படிச்சவங்களா" எனக்கண்டபடி திட்டிவிட்டு ஸ்கேனுக்கு எழுதித்தந்தார் .ஸ்கேன் ரிசல்ட் நார்மலாய் வந்து டாக்டர் வீக்கம் குறைய மருந்து தந்து கணக்கு நோட்டில் தண்டம் 4000 ரூபாய் என்று எழுதி மெகா சீரியலின்  ஒரு எபிசோட் போன்றதொரு நிகழ்ச்சிக்கு சுபம் போட்டாயிற்று .தலைப்பு சொல்லும் அனுபவம் அதுவல்ல .

ஸ்கேன் எடுக்கப்பட்ட அந்த பதினைந்து விநாடிகள்தான். கண்ணை மூடிப்படுத்துக்கொண்டு ஸ்கேன் செய்யும் போது ஏதேதோ எண்ணங்கள் .வேறு உலகம் சென்றாற் போல் இருந்தது .என் கேஸ் சாதாரணம் .ஆனால் மரணத்தைத் தொட்டு விட்டு வரும் பலர் உள்ளார்கள் .அப்படிப்பட்டவர்கள் ஒரு அனுபவம் அடைகிறார்கள் .ஒரு  சின்ன நிகழ்வு எப்படி நம்மைப்புரட்டிப்போடுகிறது?கடவுள் எத்தனை பெரியவர்? மருத்துவமனையில் கண் மூடிப்படுத்திருக்கும் ஒருவர் திரும்பி வராவிட்டால் செய்த தவறுகளை எல்லாம் திருத்திக்கொள்ள வாய்ப்பே இருக்காதே ?கோபங்கள் மனஸ்தாபங்கள் கருத்து வேறுபாடுகள் யாரையோ பார்த்து அது போல் நாம் இல்லையே எனும் ஆதங்கம் இதெல்லாம் குறுகிய இந்த வாழ்வில் எதற்காக ?இத்தனையும் மரணத்தருவாயில் உணர்ந்து யாருக்கு லாபம் ?நம் உடல் ஒரு குருக்ஷேத்திரம் .நம் நல்ல கெட்ட எண்ணங்கள்தான் பாண்டவர்களும் கௌரவர்களும் .நல்ல எண்ணங்கள் பாண்டவர் போல் எண்ணிக்கையில் குறைவாகவும் தீய எண்ணங்கள் கௌரவர் போல் எண்ணிக்கையில் அதிகமாகவும் இருக்கின்றனஎன்று சுவாமி சித்பவானந்தா பகவத்கீதைக்கு அவர் எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார் பாண்டவர்களை வெற்றி பெற வைக்க நாம் ஓயாது முயல வேண்டும். வாழ்வின் இறுதித்தருணத்தில் இது எல்லோருக்கும் விளங்கும் .வாழும் போதே உணர்வது நன்று .அதற்காக யாரும் கால் தடுக்கி விழுந்து ஸ்கேன் வரை போக வேண்டாம் .சர்வேஜனா சுகிநோபவந்து .

ரஞ்ஜனி த்யாகு 

"சினேகிதி"  மார்ச் 2015  இதழில்  வெளிவந்துள்ள கட்டுரை 


MOTHER PROTECTS