சனி, 21 மார்ச், 2015

மாஸ்டர் ஹெல்த் செக் அப்

 நேற்று ஒரு பெரிய மருத்துவமனையில் எனக்கும் என் கணவருக்கும் மாஸ்டர் செக் அப்.பழைய கால தாத்தாக்களும் பாட்டிகளும் ஏதேனும் உடம்பு சுகமில்லை என்றால் மருத்துவரிடம் போவார்கள்.அதுதானே லாஜிக்கும் கூட!பிரச்சினை இல்லாதவர்கள் வக்கீலிடம் போகிறார்களா,பாடத்தில் சந்தேகம் இல்லாதவர்கள் ஆசிரியரிடம் செல்கிறார்களா,பணம் இல்லாதவர்கள் வங்கிக்குச் செல்கிறார்களா?அப்போது ஓரளவு தலைவலி காய்ச்சல் மாதிரியான நோய்கள் தவிர குறிப்பிட்ட பிரச்சினை இல்லாத போது மருத்துவப் பரிசோதனையின் தேவை என்ன ?

கிட்டத்தட்ட ஒரு சுற்றுலா மையம் போல மருத்துவமனைகள்.பணம் விளையாடி உள்ள interiors மற்றும் சுற்றுப்புறம்.முழு உடல் பரிசோதனைப் பிரிவில் நல்ல கொழு கொழு மனிதர்கள்.(நான் விதிவிலக்கல்ல.)இந்த சமயம் இன்னொன்று சொல்ல வேண்டும்.போனவுடன் உடல் எடை எடுக்கப்படுகிறது.எடை காட்டியின் முள் வலது பக்கம் சாயச் சாய நம் BP எகிறுகிறது.நேற்று வரை நிம்மதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.இன்று எதைப் பார்த்தாலும் பயம் பற்றிக் கொண்டுவிட்டது.

ஏதோ இப்போது ஏற்பட்டுள்ள awareness என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள்.எத்தனை புரிதல் இருந்தாலும் ஒரு சில நோய்கள் தவிர பிறவற்றைத் தடுக்க முடியாது.வந்தால் treat பண்ண வேண்டியதுதான்.நாம் எதை அதிகம் எதிர்பார்க்கிறோமோ அதை விரும்பி அழைக்கிறோம் என்பது உண்மை.அதனால்தானே பெரியவர்கள் நல்லது நினைக்கச் சொன்னார்கள்.உடம்பில் குத்திக் குத்தி ரத்தம் எடுத்து அதைப் பரிசோதித்து நான் நன்றாய் இருக்கிறேனா என்று சொல்ல சாதாரண நாட்களில் ஒரு மருத்துவர் தேவை இல்லை.அதை என் உடம்பே எனக்குச் சொல்லி விடும் அன்றோ?ஒரு பாயிண்ட் temperature கூடினால் நம்மால் இயல்பாய் இருக்க முடிகிறதா?பின் எதை அறிய இந்த சோதனை?புற்று நோய் வருமா ,ஹார்ட் அட்டாக் வருமா இதெல்லாம் துல்லியமாய்க் கூற அவர்கள் கடவுளா?மருத்துவர்கள்தானே?  

உடம்பு ஒரு கோவில்.அதைப் பார்த்துக் கொள்ள வேண்டாமா என்று எல்லோரும் கேட்கிறார்கள்.யார் இல்லை என்று சொல்கிறார்கள்?உடம்பு சின்னதாக ஒரு signal கொடுத்தாலே மருத்துவரைப் பார்த்து விடணும் என்றுதான் நானும் சொல்கிறேன்.ஆனால் சும்மாவேனும் போய் இப்போது எல்லாம் நன்றாக உள்ளது.மறுபடி ஒரு வருடத்திற்கப்புறம் வந்து எல்லாம் சரியாகத்தான் உள்ளதா என்று பார்த்துக்கொண்டு போ என்பது எதற்கு என்று புரியவில்லை.நடுவில் நமக்கு ஏதேனும் வந்திருந்தால் அதைப் போன வருட செக் அப் எந்த முறையிலாவது தடுத்து நிறுத்தியதா?இல்லையல்லவா?

பின்னால் பெரிதாக எதுவும் வந்தால் வேண்டும் என்றே சொல்லி பணம் சேர்க்கவும் செய்ய வேண்டாம்.புலி வருது கதை போல எதற்கு தப்பாய் யோசிக்க வேண்டும்?நாம் ஒவ்வொருவரும் ஒரு mission உடன் உலகிற்கு வந்துள்ளோம்.அது முடியும் வரை சூழ்நிலை எதுவாயினும் வாழவே வேண்டும்.மரம் வைத்த கடவுள் நீர் ஊற்றுவார்.கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் தங்களையேயாயினும் நம்பலாம்.A miser is a person who lives poor throughout his life to die rich என்று படித்தேன்.எவ்வளவு சரி?நல்ல விஷயங்களுக்கு செலவு செய்வோம்.

நான் இன்னும் ஐம்பது வருடங்களுக்கு முன்னம் உள்ள நாட்களில்தான் வாழ்கிறேனோ என்னவோ?இப்படி ஒரு நாள் விட்டு ஒரு நாள் வெயிட் பார்ப்பதும் 100 கிராம் குறைந்தால் குதூகலிப்பதும் எப்போ என்ன வருமோ எனப் பயந்து கொண்டே வாழ்வதும் நம் முன்னோரிடம் இல்லை.வாழ்க்கையுடன் உடற் பயிற்சியும் பின்னிப் பிணைந்திருந்தது.அதற்காக மிக்சி இருக்கும் போது நான் மட்டும் அம்மியில் சட்னி அரைப்பேனா ,அதைச் சொல்லவில்லை.ஆனால் எல்லாக் கண்டுபிடிப்புகளும் நன்மை அளவு தீமைகளையும் தந்து விட்டதோ? இல்லை என்றால் ஸ்கைப் மூலம் எங்கோ இருப்பவர்களை படுக்கை அறைக்கு அழைத்து வரும் நாம் அடிக்கடி சந்திக்கும் சொந்தங்களிடம் கூட பாராமுகம் காட்டுவோமா? இல்லை நேரம் இல்லாதது போல் நடந்து கொள்வோமா?Facebook ல் சமீபத்தில் உறுப்பினரானேன்.புகைப்படம் கூடப் போடாது ஒரு பூவை profile picture ஆகப் போட்டால் கூட நாலைந்து like வருகிறது.ஆனால் நாம் தினம் சந்திக்கும் யாரிடமாவது I like this in you என்று மனம் விட்டு சமீப நாட்களில் சொல்லி இருக்கிறோமா?எல்லாவற்றிலும் இயந்திரத்தனம்.

தலைப்புக்கு சம்பந்தம் இல்லாது ஏதோ பேச நேர்ந்து விட்டது.மனசில் பாதிப்பை ஏற்படுத்தினது மாஸ்டர் செக் அப்பா இல்லை கால மாற்றமா,எதுவானாலும் மறுபடி உங்களுடன் பேசியது மகிழ்ச்சி.எழுதி அனைவருடனும் தொடர்பில் இருப்பது ஒரு மகிழ்ச்சி என்றால் படிப்பது இன்னும்.இந்த மாதம் பொன்னியின் செல்வன். சோழர்கள் காலத்தில் அரண்மனையில் வாழ்வது போல் ஒரு feel உண்டாக்க கல்கியால்தான் முடியுமா? எவ்வளவு ஆராய்ச்சிக்குப் பின் எழுதப் பட்டுள்ள படைப்பு?!இது போன்ற இன்டர்நெட் வசதிகள் எல்லாம் அற்ற காலத்தில் சேகரிக்கப் பட்ட செய்திகள் அல்லவா எல்லாம்!


ரஞ்ஜனி த்யாகு  


MOTHER PROTECTS 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக