திங்கள், 9 மார்ச், 2015

அனுபவம்

பொங்கலும் அதுவுமாய் வேலை பார்க்க வரும் சத்யா வழக்கம் போல் மட்டம் போட (அவர்கள் பண்டிகை கொண்டாட வேண்டாமா)ஒவ்வொரு ரூமாய்த்துடைத்துக்கொண்டே வந்த நான் கால் வழுக்கி டமார் என விழுந்து சரியாய் தலையில் அடி பட்டுக்கொள்ள பின் மண்டையில் கொம்பு முளைத்தாற் போன்று வீங்கி விட்டது.ஒரு சில நிமிடம் வீட்டில் எல்லோரும் பரபரத்தார்கள்.அதற்கு மேல் வியாதியைக் கொண்டாட நம் போன்ற பெண்களுக்கு யார் நேரம் தருகிறார்கள் ?"அம்மா போல தைரியமான பெண் யார் இருக்கா? கொஞ்சம் அயோடெக்ஸ் போட்டு தேச்சு விட்டா பத்து நிமிஷத்துல பொங்கல் வைக்க ரெடி ஆகிடுவா" .ஒரே பாராட்டு மழையில் நனைந்தது அல்ப மனித மனதுக்கு உற்சாக டானிக் போல இருக்க சாவி கொடுக்கப்பட்ட பொம்மை மாதிரி இரவு வரை எல்லாம் பண்ணினேன் .ஆனால் வலி மட்டும் நான் இருக்கிறேன் என்று உணர்த்திக்கொண்டே இருந்தது .அடுத்த நாள் கனுவிற்காக அம்மா வீடு சென்ற போது சாதாரணமாக முதல் நாள் விஷயங்களை விவரித்தவுடன் நமக்காக என என்றும் துடிக்கும் மனம் கொண்ட அம்மா என்ற ஜீவன் ஓடி வந்து தலையைத்தடவிப்பார்த்து அதிர்ந்தது ."என்னடீ இப்படி வீங்கி இருக்கு ஒரு ஸ்கேன் எடுத்துப்பார்த்துட்டா நல்லது இல்லயோ உடனே டாக்டர்ட்ட போ " 

 டாக்டர் எதுவும் எசகு பிசகாய் சொல்லி விடக்கூடாதே என்று பயந்து கொண்டே போனால் அவர்" இத்தனை நேரமா வராம என்ன செஞ்சீங்க நீங்கள் எல்லாம் படிச்சவங்களா" எனக்கண்டபடி திட்டிவிட்டு ஸ்கேனுக்கு எழுதித்தந்தார் .ஸ்கேன் ரிசல்ட் நார்மலாய் வந்து டாக்டர் வீக்கம் குறைய மருந்து தந்து கணக்கு நோட்டில் தண்டம் 4000 ரூபாய் என்று எழுதி மெகா சீரியலின்  ஒரு எபிசோட் போன்றதொரு நிகழ்ச்சிக்கு சுபம் போட்டாயிற்று .தலைப்பு சொல்லும் அனுபவம் அதுவல்ல .

ஸ்கேன் எடுக்கப்பட்ட அந்த பதினைந்து விநாடிகள்தான். கண்ணை மூடிப்படுத்துக்கொண்டு ஸ்கேன் செய்யும் போது ஏதேதோ எண்ணங்கள் .வேறு உலகம் சென்றாற் போல் இருந்தது .என் கேஸ் சாதாரணம் .ஆனால் மரணத்தைத் தொட்டு விட்டு வரும் பலர் உள்ளார்கள் .அப்படிப்பட்டவர்கள் ஒரு அனுபவம் அடைகிறார்கள் .ஒரு  சின்ன நிகழ்வு எப்படி நம்மைப்புரட்டிப்போடுகிறது?கடவுள் எத்தனை பெரியவர்? மருத்துவமனையில் கண் மூடிப்படுத்திருக்கும் ஒருவர் திரும்பி வராவிட்டால் செய்த தவறுகளை எல்லாம் திருத்திக்கொள்ள வாய்ப்பே இருக்காதே ?கோபங்கள் மனஸ்தாபங்கள் கருத்து வேறுபாடுகள் யாரையோ பார்த்து அது போல் நாம் இல்லையே எனும் ஆதங்கம் இதெல்லாம் குறுகிய இந்த வாழ்வில் எதற்காக ?இத்தனையும் மரணத்தருவாயில் உணர்ந்து யாருக்கு லாபம் ?நம் உடல் ஒரு குருக்ஷேத்திரம் .நம் நல்ல கெட்ட எண்ணங்கள்தான் பாண்டவர்களும் கௌரவர்களும் .நல்ல எண்ணங்கள் பாண்டவர் போல் எண்ணிக்கையில் குறைவாகவும் தீய எண்ணங்கள் கௌரவர் போல் எண்ணிக்கையில் அதிகமாகவும் இருக்கின்றனஎன்று சுவாமி சித்பவானந்தா பகவத்கீதைக்கு அவர் எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார் பாண்டவர்களை வெற்றி பெற வைக்க நாம் ஓயாது முயல வேண்டும். வாழ்வின் இறுதித்தருணத்தில் இது எல்லோருக்கும் விளங்கும் .வாழும் போதே உணர்வது நன்று .அதற்காக யாரும் கால் தடுக்கி விழுந்து ஸ்கேன் வரை போக வேண்டாம் .சர்வேஜனா சுகிநோபவந்து .

ரஞ்ஜனி த்யாகு 

"சினேகிதி"  மார்ச் 2015  இதழில்  வெளிவந்துள்ள கட்டுரை 


MOTHER PROTECTS 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக