புதன், 18 பிப்ரவரி, 2015

ஒரு Five Star அனுபவம்

    ரு உறவினர் மகன் நிச்சயதார்த்தத்திற்காக என் கணவர் குழந்தைகளுடன் போன வாரம் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குப் போயிருந்தேன். அங்கே நாங்கள் செலவிட்ட இரண்டு மணி நேரம் எனக்குள் ஏற்படுத்திய சலனங்களைக் கட்டாயம் 'சினேகிதி' களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்...

    'இந்திர லோகமோ' என்று  எண்ண  வைக்கக்கூடிய அந்தப் பகட்டான அறையில் நுழைந்ததும் மதுக்கோப்பை போல் இருந்த கண்ணாடிக் கோப்பைகளில் நிறைத்து பழரசம் தரப்பட்டது... 'வெல்கம் ட்ரின்க்'!

ன் கணவருக்கு இந்த அனுபவம் புதிதல்ல, ஆபிஸ் மீட்டிங் என்று மாதம் ஒரு முறையேனும் இப்படி டின்னர் உண்டு. நானும் குழந்தைகளும் ஆளுக்கொரு கோப்பையை எடுத்துக் கொண்டு சாதாரணமாய் வீட்டில் ஒரு சர்பத் போட்டால் எப்படிக் குடிப்போமோ அப்படி அந்த ஜூசைக் குடித்துவிட்டு காலிக் கோப்பையை மேஜை மேல் வைத்து விட்டு சுற்றுமுற்றும் பார்த்தோம். யாரும் அதில் கால்வாசி கூடக் குடிக்கவில்லை என்று தெரிந்தது, எனக்கு எப்படியோ இருந்தது.வாயில் வைத்து ஒரு மிடறு விழுங்கிவிட்டு கோப்பையை கையில் பிடித்தபடி பேசிக்கொண்டிருந்தனர்."ஓ இது ஒரு ஸ்டைல்" எனப் புரிந்தது.மெதுவாகக் குடிக்கட்டும் பரவாயில்லை ஆனால் என் முதல் அதிர்ச்சி,டின்னர் தொடங்கும் வரை அப்படியே இருந்த கோப்பைகள் மேஜையில் வைக்கப் பட்டு பின்னர் அகற்றப்பட்டதுதான்.முப்பது பேர் கூடி இருப்போம்.30x 100 ml =3000ml =3L பழரசம் அப்படியே வீண்.
அழகான யூனிபார்மில் கோட் சூட் அணிந்த வெயிட்டர்கள்.அவர்களை வெளியில் பார்த்தால் ஒரு கம்பெனியின் உயர் மட்ட அதிகாரிகள் என்று கண்டிப்பாக எண்ணத்தோன்றும்.ஆனால் வந்திருந்த சில பெண்கள் அவர்களிடம் நடந்து கொண்ட முறைக்கு ,ஆடம்பர வர்கத்தின் ஒரு பிரதிநிதியாகக் கலந்து கொண்ட நான் தலை குனிகிறேன்.தட்டில் அவர்கள் கொண்டு வந்து நீட்டும் பண்டங்களை ,தலையைக் கூட நிமிர்த்திப் பாராமல்,ஏதோ நம் அடிமைகள் நமக்கு சேவகம் செய்கிறார்கள் என்பது போலவும் தாங்கள் அரச பரம்பரையினர் போலவும் எண்ணிக் கொண்டு சைகையால் மறுத்த ஆணவம்.
இதே பெண்களை மறுநாள் வீட்டில் போய்ப் பார்த்தால் அழுக்கு நைட்டியுடன் சமையலறையில் அல்லாடிக் கொண்டிருப்பார்கள்.எனக்கு இந்த முரண்பாட்டைப் பார்த்து விநோதமாயும் வேதனையாகவும் இருந்தது.சில ஆயிரம் செலவழித்துச் சாப்பிடுவதால் (அது கூட ஓசி சாப்பாடு)நம் தலையின் பின் ஒளி வட்டம்உள்ளதா? இல்லை நம் எச்சில் தட்டைவாங்கிச் செல்வதால் அவர்கள் இழிவானவர்களா?
இதற்கே மனஉளைச்சல் பட்டால் எப்படி என்று அடுத்துத் தொடங்கியது டின்னர்.ஏகப்பட்ட உணவு வகைகள் மிகமிக அழகாக அலங்கரித்து வைக்கப் பட்டிருந்தன.பஹ்பே முறை உணவு.அவரவர்கள் தட்டில் வேண்டியது (வேண்டாததையும் கூட)எடுத்துக் கொண்டு பேசிய படியே சாப்பிட-(கொறிக்க என்பது இன்னும் பொருத்தமாய் இருக்கும்) தொடங்கினார்கள்.பலர் ஸ்பூன்,போர்க்கைஆயுதமாய் வைத்துக் கொண்டு தோசையுடன்சண்டை போட்டு சாப்பிட்டனர்.சில உணவு வகைகளைக் கையால் தொட வேண்டுமே என்றோ என்னமோ யாரும் அவற்றின் கிட்டே கூடப் போகவில்லை.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்  போல் ஒரு அயிட்டம் சாப்பிட்ட தட்டில் இன்னொன்றை சாப்பிட மாட்டார்களாம்.தோசை சாப்பிட்ட தட்டை முன்னால் சொன்ன அதே அலட்சியத்துடன் வெயிட்டரிடம் நீட்டி விட்டு வேறு தட்டில் புலாவ் ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்கிறார்கள்.வீட்டில் இப்படித்தான் ஒரு வேளை உணவு சாப்பிட நாலு தட்டு எடுத்துக் கொள்வார்களா?
ஒரு இரண்டு நாள் செய்து பாருங்கள்.வேலை பார்க்கும் முனியம்மா சொல்லாமல் கொள்ளாமல் நின்று விடுவாள்என்று கத்தலாம் போல இருந்தது.அனைவர் தட்டிலும் மீந்த உணவு வகைகளை வைத்து பல ஏழைகளுக்கு ஒரு வேளை உணவளித்து விடலாம்.
இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே எத்தனை பேர் உள்ளார்கள்?இரண்டு வேளை உணவு கூடக் கிடைக்காது பட்டினியாக உறங்கச் செல்லும் குழந்தைகள் எத்தனை பேர்!பணம் உள்ளவர்கள் செலவழிக்கட்டும் .யார் வேண்டாம் என்றது?ஆனால் உணவை வீணாக்காமல் இருப்பது அவரவர் மனசாட்சியைப் பொறுத்ததல்லவா?
இதன் பெயர் நாகரீகமா?எப்படி வந்தது இந்தக் கலாச்சாரம்?பெரிய மாற்றங்கள் ஒரு நாளில் ஏற்படாது என்பது நமக்குத்தெரியும்.ஆனால் ஒவ்வொருவரும் நினைத்தால் ஏதோ சிறிய அளவிலாவது ஒரு மாற்றம் ஏற்படாதா என்று நினைத்துக் கொண்டே சற்றே கனத்த மனதுடன் வீடு வந்து சேர்ந்தோம்.

ரஞ்ஜனி த்யாகு 


Mother Protects 


 மஞ்சுளா ரமேஷின் சினேகிதி -ஜூன் 2014 இதழில் வெளிவந்த கட்டுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக