செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

மௌனம்

வாழ்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுமே நேரடியாகவோ மறைமுகமாகவோ நமக்கு ஒரு பாடம் புகட்டவே வருகிறது . திருமணம்,  முதல் குழந்தை பிறப்பு ஆகியவை ஒரு முறை நிகழ்வுகளாய் முக்கியத்துவம் பெற்று விடுகின்றன. சிலருடைய வாழ்வில் அந்த நாட்கள் வருடத்தின் பண்டிகை நாட்களாயும் அமைந்து விடும்போது உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஒரு தீபாவளி திருநாளில்தான் என் முதல் குழந்தை ராகவன் பிறந்தான். அவன் ஆட்டிசம் என்ற பாதிப்பால் 'மௌனமாக' இருப்பவன்.

பண்டிகைகள் பட்சணம் சாப்பிடவும் புதுத்துணிமணிகளில் பணத்தை வாரி இறைக்கவும் மட்டும் வருவதில்லை. ஒவ்வொரு பண்டிகைத் திருநாளும் ஒரு உள்முகப் பயணத்தின் அவசியத்தை நினைவூட்டவே வருகிறது. தசரா என உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால், 'கடவுள் சக்தி, தீய சக்திகளை அழித்து நல்லதை நிலைநாட்டும் நாள்' என முதல் வகுப்பு குழந்தைகளுக்கே கற்றுத் தந்து விடுகிறார்கள்.

உலகில் நன்மையும், தீமையும் உள்ளது போல் நம் ஒவ்வொருவரிடமும் இரண்டும்  கலந்தே உள்ளன. நம்மிடம் உள்ள ஏதேனும் ஒரு தீய குணத்தை விலக்கி ஒரு நல்ல குணத்தை வளர்க்க எந்த நாளுமே உகந்த நாள்தான் என்றாலும் ஒரு டார்கெட் (Target ) போல விசேஷ நாட்களை எடுத்துக் கொள்ளலாம்.

இவை எல்லாம் நம் மனதிற்கு ஒரு உத்வேகத்தை, செய்ய வேண்டும்  என்ற ஆர்வத்தை ஏற்படுத்தத்தான். இந்த வருடம்  தீபாவளி அன்று "போன தீபாவளியின் போது  எப்படி இருந்த நான், இப்படி ஆகிட்டேன்" என்று நமக்கு நாமே ஒரு 'ஷொட்டு'  கொடுத்துக் கொள்ளலாம்.

இந்த வருடம் எனக்குத் தோன்றியது இன்னும் அமைதியாய், மௌனமாக இருக்கலாமே என்பதுதான். எங்கள் மகனுக்குக் கடவுளால் வரமாய் வழங்கப்பட்ட மௌனம், பொதுவாக அனைவருக்குமே எவ்வளவு நன்மை பயக்கக் கூடியது என்று சமீபகாலமாய் மனது யோசிக்கிறது. வாய் ஓயாமல் மனதில் நினைப்பதை எல்லாம் பேசிக் கொண்டிருப்பதில் என்ன பயன்?



"ஒரு பத்து நிமிடம் பயனுள்ள விதத்தில் பேச, பத்து நாட்கள் மௌனத்தைக் கடை பிடிக்க வேண்டும்"என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை. இந்த மகாவாக்கியத்தின் உண்மையை உணரத்தான் முடிகிறது. சொற்களில் வடிப்பது சாத்தியம் இல்லை. ஒரு நாளில் நாம் பேசும் பேச்சில் எவ்வளவு சதவீதம் உண்மை உள்ளது? அவசியமானவற்றை மட்டும்தான் பேசுகிறோமா என்றால் 'இல்லை' என்பதே நம்மில் பலரின் பதிலாய் இருக்கும்.

'ரகசியங்களில் நான் மௌனம்', என்கிறார் கீதையில் பகவான். 'கட்டுப்படுத்தப்பட்ட பேச்சு முழு  மௌனத்தை விடவும் சிறந்தது' என்பதும் அன்னையின் வாக்கே. "மௌனமாக இருக்கும் திறனில் பெரிய வலிமை உள்ளது. ஒருவர் என்ன செய்கிறார் அல்லது என்ன செய்யவில்லை என்பது பற்றி வெட்டிப் பேச்சுப் பேசுவது தவறு. அத்தகைய வெட்டிப் பேச்சுக்குக் காது கொடுப்பதும் தவறு . அது உண்மையா என அறிய முயல்வதும் தவறு. எல்லாரிடமும் குறைகள் உள்ளன. அவற்றைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பது அவற்றைப் போக்க உதவாது" என்பன எல்லாம் ஸ்ரீ அரவிந்த அன்னையின் அருளுரைகள் தாம்.

நம் மனதை சற்றே உயர்நிலைக்குக் கொண்டு சென்று யோசித்தால் இவை அனைத்தையும் உணரலாம். ஆனால் சாதாரணமாய் நினைத்துப் பார்த்தாலும் பேச்சை குறைப்பது நம் ஆற்றலை வெகுவாக சேமிக்க உதவும். பல வேண்டாத பிரச்சனைகளை விலக்கும். அடுத்த தீபாவளிக்காவது ஞானிகள் போல் மௌனியாய் இருக்கும் என் மகன் சற்றே அக்ஞாநியாகி மளமளவென்று பேசி, நான் கொஞ்சம் ஞானம் பெற்று இன்னும் அமைதியாக இருக்கக் கற்றுக் கொண்டால்  எவ்வளவு நன்றாக  இருக்கும்!

Mother Protects

ரஞ்ஜனி த்யாகு

Appeared in மஞ்சுளா ரமேஷின் சினேகிதி, அக்டோபர் 2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக