திங்கள், 2 பிப்ரவரி, 2015

கொஞ்சம் பேசலாமா

 Mother Protects

அலைகடலில் நில்லாது தொடரும் அலைகள் போல் மனதில் எண்ணங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. அவற்றை சில சமயம் மனதுக்குள்ளேயே வைத்திருக்கவும் சில சமயம் நம் அலைவரிசையில் (wavelength)  உள்ளவர்களிடம் பகிர்ந்து பண்ணிக்கொள்ளவும் தோன்றுகிறது. ஆனால் நினைத்ததை எழுத்தில் வடிக்கும் பொழுது நாம் படித்த, நம்மை மிகவும் பாதித்த (நேர்மறையான பாதிப்பைத்தான் சொல்கிறேன்.) சில பெரிய எழுத்தாளர்களின் பாணியையோ கருத்துகளையோ  அறியாமல் பின்பற்றுவது  தவிர்க்க முடியாததாகிறது. யாருமே சொல்லாத ஒரு கருத்தைத்தான் சொல்ல வேண்டும் என்றால் அது இயலாத காரியம். நாம் படித்த, கேட்ட பல செய்திகள் நம் நினைவு மடிப்புகளில் இருந்தே தீரும்.என் ப்ரிய எழுத்தாளர் யார் என நீங்கள் கண்டுபிடித்தால், சாமர்த்தியமாக எழுதுவதில் நான் தோற்றுவிட்டேன் என்று கொள்ளலாம். பேப்பரையும் பேனாவையும் வைத்துகொண்டு பால்கனியில் உட்காந்து எழுதுவதுதான் எனக்கு இன்னும் சவுகரியமாக உள்ளது. 1970 க்கு முன் பிறந்த எல்லாருக்கும் அப்படித்தானா தெரியவில்லை. ஆனால் என்னதான் பழைய பெருமையெல்லாம் பேசினாலும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்குத் தலைவணங்கியே ஆக வேண்டும். அம்மாவிடம் இருந்து வரும் நீலவண்ண இன்லண்ட் லெட்டருக்காக அவசரம் அவசரமாக மதியஉணவு  சாப்பிட்டு விட்டு வார்டன் அறைக்கு  ஓடி கையில் கடிதத்துடன்  திரும்புவது ஏதோ பெரிய வெற்றி பெற்ற மாதிரியல்லவா இருந்தது! கடிதம்  வராமல் இருந்தால் எத்தனை எண்ணங்கள் ஓடும் மனதில்? அந்த பரபரப்புகளையெல்லாம் தூக்கி போட்டு விட்டதே தொழில்நுட்பம்? ஆனால், எது நினைத்தாலும் உடனே நடந்து விட வேண்டும் என்ற இளையதலைமுறையினரின்  பொறுமயின்மைக்கும் காரணமாகி  விட்டது.  கணினியும், தொலைக்காட்சிப் பெட்டியும்,கைபேசியும் வீடுகளின்  அமைதியை கெடுத்து விட்டதாக பல நாள் குற்றம் சாட்டுகிறேன்.  நீங்கள் பலரும் அதையே நினைக்கக் கூடும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான். பேச வேறு பல செய்திகள் உண்டு என நினைக்கும் உங்களுடன் நான் தொடர்புப் பாலம் ஏற்படுத்திக் கொள்ள விரும்பிச் செய்த சிறு முயற்சியே இந்தப் புத்தகம்.  மனதிற்கு இணையான, நொடியில் பயணிக்கும் போக்குவரத்து சாதனம் ஏதும் உண்டா,என்ன !! தங்கள் பொன்னான நேரத்தின் சிறு பகுதியை ஒதுக்கி இதை வாசிக்கும் உங்களுடன், சேர்ந்திருக்க என் மனக்குதிரை தயாராக உள்ளது.

பேசலாமா??



ரஞ்ஜனி த்யாகு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக