வியாழன், 26 மார்ச், 2015

கணவனுக்கு ஒரு கடிதம்

ஒரு பெரிய நாட்டின் ஒரு கோடியில் சாதாரணமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் என் குரல் இந்தத்தாய்த் திருநாட்டின் பல கோடிப் பெண்கள் சார்பாய் ஒலிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.எனக்குப் பையன்களே பிறந்திருந்தாலும் ,இந்தக் காலப் பெண்கள் தங்கள் வழியில் குறுக்கிடுவோர் கண்களில் விரலை விட்டு ஆட்டுவதில் எனக்கு ஏற்பட்டுள்ள மகிழ்ச்சி அலாதியானது.இத்தனைக்கும் I am not a feminist .Just the opposite  .சுயத்தை ஒரு நிகழ்வு தொலைக்கும் என்றால் அதன் அவசியம்தான் என்ன?மகன்கள் வைத்துக் கொண்டு அவர்களுக்குக் கல்யாணம் பண்ணி குழந்தை குட்டியுடன் இருப்பதைப் பார்த்து உண்மையான சந்தோஷம் அடைய நினைக்கும் பெற்றோர்கள் மட்டும் கல்யாணம் பண்ணி வைக்கட்டும்.மற்றபடி தங்கள் வாழ்நாள் முழுவதும் மகனுடைய வாழ்வையும் சேர்த்து இரட்டை வாழ்வு வாழ்ந்து, - வரும் பெண்ணுக்கு, உள்ள ஒரு வாழ்வையும் பறித்துக் கொள்ள நினைப்பவர்கள் நித்திய பிரம்மச்சாரிகளாய் பிள்ளைகளை வைத்துக் கொள்வதே மேல்.பிள்ளையார் சொன்னாராமே" என் அம்மா மாதிரி பெண் கிடைத்தால்தான் திருமணம் புரிவேன் " என்று,அது மாதிரி தங்களுக்கே பிள்ளையிடம் முதலிடம் என்று பிள்ளையைக் கைக்குள் வைத்து வளர்க்கும் தாய் ஒரு அம்மாவாய் வாழ்க்கையில் தோற்றதாகத்தான் அர்த்தம்.

பண்டைக்காலத்தில் வானப்ரஸ்தம் என்று வைத்தார்களே ,எதற்காக?அரசர்கள் கூட ஒரு வயதிற்குப்பின் இளையவர்களுக்கு முடி சூட்டி விட்டு ஒதுங்கவில்லையா?பின் ஏன் பையனைப் பெற்ற அம்மாக்கள் மட்டும் திருமணமான மகன் மீது ஆதிக்கத்தை விட மறுக்கிறார்கள்?சின்ன வயதில் தாங்கள் வெறுத்த விஷயங்களைத் தன் மருமகளும் வெறுக்கலாம் என எண்ணிப் பார்க்கிறார்களோ?
என் அன்புக் கணவனே,
மனைவிக்கு மனம் உண்டு.உன் அம்மா உன்னிடமும் என்னிடமும் காட்டும் முகம் வேறு .சொன்னால் நீ ஒத்துக் கொள்ளவா போகிறாய்?ஒத்துக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை.ஏன் தவறுகளை ஞாயப் படுத்துகிறாய்?நான் உன்னிடம் கொண்ட பிரியம் என் பெற்றோராலா நிர்ணயிக்கப் படுகிறது?அப்போது நீ என்னிடம் செலுத்தும் அன்புக்கும் அதே விதிதானே?நான் அடிமை இல்லை. "நீ என் பெற்றோரிடம் இப்படி நடந்து கொண்டால்தான் என் அன்பைப் பெற முடியும்" என்று நீ கூறும் பட்சத்தில் அந்த அன்புப் பிச்சை எனக்குத்தேவை இல்லை.அதுவும் தவறாக நடப்பவர்களிடம் இதைக் கூறினால் தேவலை.என்னால் வீட்டு வேலைக்காரர்கள் முதல் யாரிடமும் கடுமை காட்ட இயலாது.நான் உயிர் போல் நினைக்கும் உன்னை எனக்குத் தந்தவர்களிடமா அலட்சியம் காட்டுவேன்?அது கூடப் புரியாமல் பெற்றோரிடம் உள்ள பாசம்,(பாசமா அது!!!என் அகராதியில் அதன் பெயர் பயம்)உன் கண்ணை மறைத்தால் அதற்கும் நானா பொறுப்பு?

அவள் ஒரு தொடர்கதையில் சுஜாதாவை,சந்தோஷ் சுப்ரமணியத்தில் ஜெனிலாவை ரசிப்பீர்கள்.ஆனால் மனைவி மட்டும் புடவைத்தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொண்டு பவ்யம் தவிர வேறு ரசத்தைக் காட்டக் கூடாது என்றால் எப்படி Boss ? எத்தனையோ நாள்கள் பேசி மனது அசந்து போய் விட்டது.ஒரு புடவை வாங்குவதில் இருந்து ஹோட்டல் போவது, வெளியூர் போவது அவ்வளவு ஏன் கோயில் போவது கூடத் தங்கள் விருப்பப் படியே மகன் செய்ய வேண்டும் என்று அவர்கள் கொடுத்த மன அழுத்தங்களுக்கெல்லாம் ஈடு கொடுத்து என் விருப்பங்களை இரண்டாம் பட்சமாகவே நீ நினைத்திருந்தாய் என்பது என் பார்வையில் உண்மையேயாயினும் மனது என்னவோ நீதான் பாவம் என்று உன்னை எப்போதும் மன்னிக்கவே செய்கிறது.

அவர்கள் நல்லவர்கள்தான்.நீங்கள் சேர்ந்துள்ள போதுதான் பிரச்சினையே.அவர்கள் முதுமையினால் சோர்ந்து போவதற்கும், விரக்தி அடைவதற்கும், ஆசைகள் சிலவற்றை விடவே முடியாது அடையும் துன்பங்களுக்கும் தன்  முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு நிகழ் காலத்தைத் தொலைக்கும் வளர்ந்த குழந்தையுடன் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டமே வாழ்வு எனத் தோன்றுகிறது.ஆயாசமாக இருக்கிறது.என் அமைதியைக் கெடுக்கும் பலம் இந்த அற்ப நிகழ்வுகளுக்கு  இல்லவே இல்லை.ஆனால் உன் முக வாட்டத்திற்கு அந்த சக்தி உள்ளதே,நான் என்ன செய்ய?இந்தக் கடிதம் மட்டும் என்ன சாதிக்கப் போகிறது தெரியவில்லை.ஆனால் நான் மிஸ் பண்ணினதாய் நினைக்கும் சிலவற்றை உன்னுடன் சேர்ந்து செய்யக் கடவுளிடம் இன்னும் ஒரு பிறவி கேட்க ஆசை.

இப்படிக்கு ,

பல பெண்களின் பிரதிநிதி  -   ஒரு Typical  Indian Housewife 


பின் குறிப்பு ; இந்தக் கடிதம் ஒரு கற்பனையே.யாரையும் குறிப்பிடவில்லை.ஆனால் நான் அதிகமாய்த் தொடர்பில் உள்ள பெண்கள் 
இதைத் தாங்கள் எழுதியதாகவே உணர்வார்கள் என எனக்குத் தெரியும்.இதில் குறிப்பிடப் பட்டுள்ள character உடைய ஆண்கள் பற்றி என்ன கூறுவேன்?Live the present .Do not take responsibility for things which are not under your control   என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால் அறிவுரை கொடுப்பது செய்யத் தகாத ஒன்று,அதுவும் adults க்கு.ஆத்மார்த்தமாய் பெரியவர்கள்   நல்லவர்களாய் இருந்து மருமகள் சாட்டுவது பொய்க் குற்றமாய் இருக்கும் குடும்பங்களும் உண்டு.எல்லாவற்றிற்கும் விதிவிலக்குகள்  இருக்கின்றன...பொதுவாகக் கூறுவது இயலாது. 

ரஞ்ஜனி த்யாகு 

Mother protects

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக