புதன், 29 ஜூலை, 2015

சந்திப்புகள்-ரயில் பயணங்கள்-நிஜங்கள்

ப்ரயத்தனம் எடுத்துக் கொண்டு நிகழும் சந்திப்பு ஒரு வகை.தானாக நிகழ்வது இரண்டாவது வகை. ப்ரயத்தனப் பட்டு ஏற்படுத்திக் கொள்ளும் சந்திப்புகளில் நாம் கவனமாக இருக்க முடியும்.சந்திப்பு சந்தோஷமாக முடியலாம்.சங்கடங்களிலும் கொண்டு விடலாம்.,நாம் கவனமாகத் தேர்ந்தெடுத்த பின்னும்.ஆனால் உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பாட்டு சொல்வது போல் அதில் யார் குற்றமும் இல்லை.தானாக நிகழும் சந்திப்புகள் நீண்ட காலம் தொடரும் நட்பாவதும் நடக்கலாம்.சென்ற போஸ்ட்டிற்கு பதில் அளித்த நண்பர் ஒருவர் நம்பிக்கை என்பது என்ன என்று கேள்வி எழுப்பி உள்ளார்."எது நம்பிக்கை ,கடவுள் உள்ளார் என்பதா இல்லை என்பதா ,குழந்தைகளுக்கு மனதில் நம்பிக்கை உணர்வை எவ்விதம் தூண்டுவது,அறிவியலும் தத்துவமும் நம்பிக்கை பற்றி விளக்க முடியுமா "என்று கேட்டுள்ளார்.அந்தக் கேள்விகளும் நேற்று நிகழ்ந்த சந்திப்புமே இந்த போஸ்ட்டிற்கு துவக்கம்.

பல ஆண்டுகள் கழித்து ஒரு நபரை சந்திப்பது வேறு யாரையோ பார்ப்பது போல்தான் என்று தோன்றுகிறது.வெளித்தோற்றத்தைப் புறம் தள்ளி விடுவோம்."நீ துளியும் மாறவில்லை" என்பது பொய் போலத்தான் என் மனம் நினைக்கிறது.போகும் ஒவ்வொரு ஆண்டுடனும் வயதும் போகும் போது அதெப்படி மாற்றம் நிகழவில்லை என்று கதை சொல்லலாம்?ஐந்து வயதில் இருந்த நானும் நீங்களும் இறந்து விட்டதுதானே நிஜம்?சில நாட்கள் முன்னம் நானும் இந்தப் பொய்யை உண்மை என நம்பிக் கொண்டுதான் இருந்தேன்.உடனே நம் மனது மாற்றம் என்பதைக் கெட்ட மாற்றம் எனப் பொருள் படுத்தி யோசிக்கக் கூடாது.It may be change for the better.நட்பும் நம்பிக்கையும் தொடர்புடையவவை.கொஞ்சம் நம்பிக்கை பற்றிப்பேசி விட்டு இரண்டையும் தொடர்பு படுத்தலாம்.

நம்பிக்கைக்கு definition கொடுக்க இயலாது.எது அன்றி வாழ்க்கை இல்லையோ அது நம்பிக்கை.அதைக் கடவுள் மேல் வைக்கலாம்,தன் மேலே வைத்துக் கொள்ளலாம்,தான் சார்ந்துள்ள தன்னைச் சார்ந்துள்ள பேர் மேல் வைக்கலாம்.அது ஒரு பற்றுக் கோடு . நம்பினோர்க்கு அவர் சாமி.நம்பாதவர்களுக்குக் கல்.Philosophical ஆக sound பண்ணாமல் faith பற்றி விளக்கம் கூற முற்பட்டால் நான் தோல்வியே அடைவேன்.இறையிடம் கொள்ளும்,தன்னிடமே கொள்ளும் நம்பிக்கை தவிர வேறு எதன் மீது வைக்கும் நம்பிக்கையும் ஒரு நாள் இல்லையேல் ஒரு நாள் மனம் புண் படுவதில்தான் முடியும். நேர விரயம் தவிர வேறில்லை.

மௌனம் ஒரு மொழி.உயர்ந்த மொழியும் கூட.உரையாடலில் இருவர் பங்கு உள்ளதால் ஒத்த எண்ணங்கள் அற்ற போது அது நிஜ அர்த்தத்தை இழந்து அனர்த்தமாகி விடுகிறது.அக்னிக்குக் கொடுக்கப் படும் பொருள்களை அது வேக வேகமாய் விழுங்குவது போல் மொபைல் போனை சார்ஜ் செய்ய இணைத்தால் அது அதி வேகமாய் சார்ஜ் ஆவது போல் பேசப் பேச விஷயங்கள் பல பரிமாணங்களில் வளர்கின்றன.ரயில் பயணங்களில் நிகழ்வது போன்ற சந்திப்புகளில் எதிர்பார்ப்பும் இல்லை.ஏமாற்றமும் இல்லை.எல்லா சந்திப்புகளையும் ரயில் சந்திப்பு போன்று எளிமையாக ஆக்கிக் கொள்ளலாமே?வாழ்க்கை ஒரு ரயில் பயணம்தான் அல்லவா?நம் ஸ்டேஷன் வந்தால் இறங்கப் போகிறோம்.நம்முடன் தொடர்பில் உள்ள எல்லாரும் நிஜத்தில் ரயில் சிநேகங்கள் தவிர வேறில்லை.காலம் முன்னும் பின்னும் நீண்டு கிடக்கிறது.சிலர் நம்முடன் ஒன்றாக ஏறி ஒன்றாக இறங்குகிறார்கள்.எவ்வளவு சிநேகமாய் இருப்பினும் சில சமயம் இறங்கும் நேரம் வந்து விடுகிறது,யாரேனும் ஒருவருக்கு.அப்படி இறங்குபவர்களை நம்பிக்கை துரோகி என்று அழைக்கிறோமா?பின் நிஜத்தில் மட்டும் ஏன் அனாவசியமாய் faith என்று பெரிய வார்த்தைகள் கூறி பயணத்தின் இனிமையைக் கெடுத்துக் கொள்ள வேண்டும்?

சற்றே வெளி வந்து எட்டிப் பார்த்து சொல்ல நினைத்ததை சொல்லி விட்ட இந்த நத்தை மீண்டும் சொல்லத் தூண்டும் விஷயம் கிடைக்கும் வரை உள்ளே செல்கிறது.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

திங்கள், 27 ஜூலை, 2015

சிவபெருமான் மேல் காதலாகி கசிந்துருகி ஒரு கிரிவலம்

சிவபெருமான் மேல் காதலாகிக் கசிந்துருகுவோர்க்கே கிரிவலம் செய்யும் பாக்கியம் அமைகிறது.உடற்பயிற்சிக்காக,மூலிகைக் காற்றை சுவாசிக்க என்று வேறு காரணங்கள் கற்பித்துக் கொண்டு கிரிவலம் செய்வோரும் அவன் மேல் மனம் கசிந்து போகாமல் இருப்பது சாத்தியமில்லை.நினைத்தாலே முக்தி அருளும் தலமாம் திருவண்ணாமலையில் கால் பதிக்கும் போதே ஒரு அமைதி நம்மைச் சூழ்கிறது.எங்கு திரும்பினும் லிங்க மயம் .லிங்க வடிவம் பற்றி ஒன்று கூற விருப்பம்.பிள்ளையார் வடிவத்திற்கும் லிங்க வடிவிற்கும் மனதை ஒருமுகப் படுத்தும் சக்தி அதிகம் உள்ளதாய் எப்போதும் தோன்றும்.ஒரு ராமர் படத்தையோ லக்ஷ்மி படத்தையோ காலண்டரில் அல்லது வேறு இடங்களில் பார்க்கும் போது என் .டி .ஆரோ நயன்தாராவோ மனதில் சில சமயம் எட்டிப் பார்ப்பதுண்டு.சில பெண்களைப் பார்த்து "அப்படியே மஹாலக்ஷ்மி மாதிரி இருக்கிறாய் "என்று பொய் சொல்வோம்.ஏதோ அந்த தெய்வத்தை ஒரு தடவை பார்த்து வந்தார் போல் .வரலக்ஷ்மி விரதம் பூஜை செய்யும் போது சம்பந்தம் அற்று அந்தப் பெண் முகம் மனதில் நிழலாடும்.லிங்க வடிவில் சிவனைத் த்யானிக்க இந்த பிரச்சினை இல்லை.

கிரிவலப் பாதையில் எட்டு லிங்கங்கள் சிறு கோவில்களில் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளன.வலம் வருவோர் அநேகமாக எல்லா லிங்கங்களையும் தரிசித்துச் செல்கிறார்கள்.இந்திர  லிங்கம் முதலாவது. ஈசான லிங்கம் கடைசி.அண்ணாமலையார் திருக் கோவில் வாசலில் தொடங்கி அதே இடத்தில் முடிக்க வேண்டும்.14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையின் நீளம்.வேறு விஷயங்களுக்கு வருவோம்.டாகுமென்ட்ரி மாதிரி ஒலிக்கிறது.

நம் மனதிற்குள் ஏற்படும் பதிவுகளை நம் விருப்பப் படி interpret செய்து கொள்ளலாம்.இதில் சொல்ல வருவது அந்த ஐந்தரை மணி நேரம் நான் அடைந்த உணர்வுகள்.கிரிவலம் மேற்கொள்ளும் பாக்கியம் பெற்ற உங்களில் பலர் இன்னும் உயர் நிலையில் இருந்து யோசித்திருக்கலாம்.முதலில் நந்திகேஸ்வரர்.பல நந்திகள் வழி பூர.எல்லாம்,எந்த மூலையில் இருந்தாலும் அண்ணாமலையாரை நோக்கிக் கொண்டிருக்கின்றன.நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் மனதில் அவனை மட்டுமே நினை என்பதைத்தான் அவை உணர்த்தின.கிரிவலத்தை அதி காலை அல்லது அந்தி மங்கும் வேளையில்தான் பொதுவாகத் தொடங்குகிறார்கள்.இல்லையென்றால் very simple .கால் சுடும்.திருவோடு மட்டும் உடைமையாய்க் கொண்ட பக்கிரிகள் பலர்.எல்லோரும் இறையுடன் ஒன்றினவர்களா தெரியாது. ஆனால் வேறு ஓர் உலகம் உள்ளது.அவர்களில் சிலர்  realised  souls ஆக இருக்கலாம்.திருவோடு சுமந்து திரிய வேண்டாம்.But பணம் பண்ண அலையவும் வேண்டாம்.எது வசதி?ஒவ்வொருவருக்கு ஒரு பொருள் .தேவைகள் --அடிப்படைத் தேவைகள் கூட பூர்த்தியாகாத பேரைக் கொண்ட பூமியில் ஆசைகளுக்கு வரையறை வகுத்துக் கொள்ளவில்லை என்றால் சிவன் நினைவு எப்போ வரும்?

இயற்கையுடன் ஒன்றின நிலை.முழு அமைதி.இயற்கை அன்னை கடவுள்தானே.சுற்றுப்புறம் முழுமையும் பிரபஞ்சம் முழுதும் ஒம்காரத்தால் நிரம்பி உள்ள உணர்வு.பேசத் தோன்றுவதில்லை. சும்மா இரு சொல்லற என்பது எத்துணை உண்மை! இது மாதிரி இன்னொரு ஐந்து மணி நேரம் வாய்க்க இன்னும் எத்தனை நாள் காக்க வைக்கப் போகிறாய் பெருமானே என்று தோன்றாமல் கிரிவலத்தை முடிப்பது சாத்தியம் இல்லை.இடு காட்டின் வழி நடந்துதான் ஈசான லிங்கத்தை அடைகிறோம்.சமரசம் உலாவும் இடமாம் இடுகாடு தாண்டி ஈசான லிங்கத்தை தரிசிக்கும் வினாடி மார்க்கண்டேயன் போல் போய்த் தழுவிக் கொள்ளத் தோன்றுகிறது.மன ஏக்கம் கண்ணீராய் வெளிப் படுகிறது.இந்த உலகமும் உறவுகளும் அந்தஏக்கத்தைப் போக்க முடியுமா என்ன? மேலே எழுத வரவில்லை.மறுபடி பேசலாம்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

வியாழன், 23 ஜூலை, 2015

கண்ணன் வருவான்



நம்முடையது ஒரு கர்ம பூமி.நமக்கென விதிக்கப் பட்ட கர்மத்தை அசராமல் செய்வதே நாம் செய்யக் கூடிய மிக உயர்ந்த செயலாக இருக்க இயலும்.யாராலும் கட்டுப் படுத்த இயலாத மனிதன் சுதந்திரமானவன்.சென்ற மாதம் திருவண்ணாமலை கிரிவலம் சென்றோம்.இயன்றால் ஒரு முறை சென்று வருவது ஒரு புத்துணர்வூட்டும் அனுபவமாய் அமையும் இயற்கையை ரசிக்கும் அனைவருக்கும்... சுதந்திரம் என்பது என்ன மாதிரியானதொரு அனுபவம் எனத் தெரிந்து கொள்ள விரும்புவோர்க்கும்.மனம் சென்ற திசையில் பயணிப்பதல்ல சுதந்திரம். எல்லாம் கழன்று மனம் அடங்கிய நிலை அது.

இந்த போஸ்ட் எழுதத் தொடங்கிய மனநிலை வேறு.சில சமயம் தொடர்ந்து எழுத இயலாது ஏதோ குறுக்கிட்டு விடுகிறது.எல்லாவற்றில் இருந்தும் விடுபட்டு நிச்சலனமாக இருக்க விரும்புவோர் மற்றவர் அப்படி இருப்பதையும் ரொம்ப மதிக்கவே செய்கிறார்கள்.ஆனால் அதை வெளிப் படுத்தக் கூடச் செய்யாது இருப்பதே நன்று என்று இன்று புரிந்தது.Familiarity breeds contempt என்பது உண்மைதான்.மிகவும் பழகிய ஒரு நபரிடம் ,'நாம் ஒருவரை ஒருவர் அனாவசியமாகப் பிணைத்துக் கொள்ள வேண்டாம்.எப்போது இயல்பாகப் பேச வேணும் என்று தோன்றுகிறதோ அப்போது வாய் மொழியாகவும் மற்ற நேரம் டெலிபதியாகவும் பேசுவோம்' என்ற பொருள் பட சில வார்த்தைகள் கூறி விட்டேன். ஆத்மார்த்தமாக,அப்பாவியாக ஏதேனும் சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்வது பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதுதான் நடந்தது.யாரையும் பிணைக்க விரும்பாத யாராலும் பிணைக்கப் படவும் விரும்பாத நிலைக்கு வந்து விட்டிருந்தால் இதைப் படிக்கும் உங்களுக்கு என் மன ஓட்டம் புரியும்.

நாம்தான் வம்புகளை விலை கொடுத்து வாங்குகிறோம்.நம் அமைதியைக் கெடுத்துக் கொள்ளும் செயல்களில் ஈடுபடுகிறோம்.விதிக்கப் பட்ட கர்மத்தை செய்தால் போதும்.மற்றதெல்லாம் தானே நடக்கட்டும்.நாமே தேடிச் சென்று அடையும் இலக்குகளை விட இறைவன் வழி நடத்துவதால் சென்றடையும் இலக்குகளே சரியாய் அமைகின்றன.திரௌபதி துகிலுரியப் பட்ட போது புடவையைக் கையால் பிடித்து கொண்டிருந்த வரை வராத கண்ணன் இரண்டு கையையும் அவள் மேலே தூக்கியவுடன் ஓடி வந்தானல்லவா?நாமும் எல்லாம் கண்ணனாலே என்று நினைத்துக் கொள்வோம்.எல்லோருக்காகவும் கண்ணன் வருவான்.அமைதியும் அருள்வான்.

ரஞ்ஜனி த்யாகு


MOTHER PROTECTS

செவ்வாய், 7 ஜூலை, 2015

சொல்ல மறந்த கதைகள்

எல்லோர் வாழ்க்கையிலும் சொல்ல மறந்த கதைகள் உண்டு .சிலர் இது போன்ற பைசா பிரயோஜனம் இல்லாத ஆராய்ச்சிகள் செய்யாது நிம்மதியாக இருப்பது உண்டு.சிலரால் அது முடியாது.முடியாதென்றால் முடியவே முடியாது என்று பொருள்.அவர்கள் மனம் சிறு வயது முதல் ஆசையாகச் சேகரித்த பல சிறு கதைகளால் நிரம்பி வழிந்து கொண்டே இருக்கிறது.அதைக் கேட்க ஆள் வேண்டும் அல்லவா?இந்த அவசர யுகத்தில் யாருக்கு அதற்கு நேரம் உள்ளது,சொல்லுங்கள்!அவர்கள் மன எழுச்சியின் வெளிப்பாடுகளே டயரிகள்,blogs ,ஓயாத பேச்சுகள்.

கதை கேட்க எல்லோருக்கும் பிடிக்கும்.ஆனால் அது அவர்கள் மனதுக்கு நெருங்கினதாய் இருக்க வேண்டும்.தன்னை கதையின் ஏதோ ஒரு நிகழ்வுடன் identify பண்ணிக் கொள்வது முடியும் எனில் அந்தக் கதை பிடிக்கிறது.நேற்று 30 வருஷங்களாய்த் தேடின ஒரு நட்பை முகநூலில் பிடித்தேன்.பி.எஸ்.ஜி.கல்லூரியின் ஒவ்வொரு மரமும், கணினி அறிமுகமாகிக் கொண்டிருந்த நாட்களில் பிரம்மாண்ட கணினி முன் அவள் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது ,சம்பந்தமே இல்லாத கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மெண்டில் போய் சிவனே என்று காத்திருந்ததும்  இப்போது போல் அன்றி ஆண்களே அதிகம் இருந்த கல்லூரியில் ஒரு வித மிரட்சியுடன் ஆனால் சீனியருடன் போகிறேன் என்று ஒரு பாதுகாப்பு உணர்வுடன் கல்லூரி கேண்டீனில் குடித்த  காபியும் கோயம்புத்தூரின் விசாலமான சாலைகளும் அன்னபூர்ணா கௌரிசங்கரும் அமைதியான ஞாயிறு காலைப் பொழுதுகளில் ஒரு தூக்கப் போர்வை போர்த்திக் கொண்டு விடியும் பெண்கள் விடுதியும் அவ்வப்போது ஞாபகங்களில் தலை நீட்டிப் போவதுண்டு.

சிறிய வயதில் ,ஏன் வயதானாலும் கூட பலருக்கு மாறாதது மாற்றம் என்ற புரிதல் வருவதில்லை.இளமைக் காலங்களில் நம் வாழ்வு ஓடிய ஊர்களுக்கு இப்போது போனால் எவ்வளவு அந்நியமாய் உணர்கிறேன் தெரியுமா?எல்லாம் மாறிப் போயுள்ளது.நாம் வாழ்ந்த தாத்தா கட்டிய வீடும் படித்த பள்ளியும் விளையாடின வீதிகளும் காலால் நடந்தே தேய்த்த சாலைகளும் "ஓ ,அது நானல்ல அதையா இங்கு தேடுகிறாய் "என்று எகத்தாளமாய்க் கேள்வி கேட்கின்றன.அது சில சமயங்களில் ஒரு சிறு வலி உண்டாக்கும்.இடங்கள் நம்மை அன்னியமாக உணர வைத்தால் உண்டாகும் வருத்தத்தை விட இனிமையானவர்களாய் இளமையில் நாம் கொண்டாடியவர்கள் நம்மை யாரோ போல் பார்த்தால் உண்டாகும் வருத்தம் அதிகம்.

நேற்று நீண்ட காலமாய்த் தொடர்பில் இல்லாத ஒரு நட்பைத் தொலைபேசியில் அழைக்க நேர்ந்தது."நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்" என்று ஆரம்பித்த உடன் ,"என்ன!நீங்களா?என்னை எப்படிக் கூப்பிடுவோம் என்று கூட உனக்கு மறந்து விட்டதா? "என்று மறுமுனை வள்ளென்று விழுந்தது.எப்படி சில பேர் பணம்,பதவி எது வரினும் தம்மை மாற்றிக் கொள்வதில்லை என்ற எண்ணம் சுகமாய் இருந்தது..முகநூலில் முப்பது வருஷம் சென்ற பின் கிடைத்து "Friend request "(!!!!) போட்டு மறுபடி friend ஆன என் தோழி கேட்டாள் ,"What have I done to you,?You still have so many fond memories?" என்னிடம் பதில் இல்லை.நிகழ்கால ஓட்டத்தை தடை செய்யாத,ஆனால் நிதானிக்க உதவும் ஒன்று நல்ல நட்பல்லவா ?வாழ்வின் இரு நிமிடங்கள் ஒன்று போல் இருப்பதில்லை.Somewhat apologetically I told her "I am not as nagging as before.So don't think I will bother you too much". You know what reply I got! "How many of us will have the  privilege of listening to your nagging.I am one among the few lucky ones !"

நினைவிற்குப் பிடித்த கதைகள் இன்னும் பல உண்டு.

ரஞ்ஜனி த்யாகு 

MOTHER PROTECTS