வியாழன், 23 ஜூலை, 2015

கண்ணன் வருவான்



நம்முடையது ஒரு கர்ம பூமி.நமக்கென விதிக்கப் பட்ட கர்மத்தை அசராமல் செய்வதே நாம் செய்யக் கூடிய மிக உயர்ந்த செயலாக இருக்க இயலும்.யாராலும் கட்டுப் படுத்த இயலாத மனிதன் சுதந்திரமானவன்.சென்ற மாதம் திருவண்ணாமலை கிரிவலம் சென்றோம்.இயன்றால் ஒரு முறை சென்று வருவது ஒரு புத்துணர்வூட்டும் அனுபவமாய் அமையும் இயற்கையை ரசிக்கும் அனைவருக்கும்... சுதந்திரம் என்பது என்ன மாதிரியானதொரு அனுபவம் எனத் தெரிந்து கொள்ள விரும்புவோர்க்கும்.மனம் சென்ற திசையில் பயணிப்பதல்ல சுதந்திரம். எல்லாம் கழன்று மனம் அடங்கிய நிலை அது.

இந்த போஸ்ட் எழுதத் தொடங்கிய மனநிலை வேறு.சில சமயம் தொடர்ந்து எழுத இயலாது ஏதோ குறுக்கிட்டு விடுகிறது.எல்லாவற்றில் இருந்தும் விடுபட்டு நிச்சலனமாக இருக்க விரும்புவோர் மற்றவர் அப்படி இருப்பதையும் ரொம்ப மதிக்கவே செய்கிறார்கள்.ஆனால் அதை வெளிப் படுத்தக் கூடச் செய்யாது இருப்பதே நன்று என்று இன்று புரிந்தது.Familiarity breeds contempt என்பது உண்மைதான்.மிகவும் பழகிய ஒரு நபரிடம் ,'நாம் ஒருவரை ஒருவர் அனாவசியமாகப் பிணைத்துக் கொள்ள வேண்டாம்.எப்போது இயல்பாகப் பேச வேணும் என்று தோன்றுகிறதோ அப்போது வாய் மொழியாகவும் மற்ற நேரம் டெலிபதியாகவும் பேசுவோம்' என்ற பொருள் பட சில வார்த்தைகள் கூறி விட்டேன். ஆத்மார்த்தமாக,அப்பாவியாக ஏதேனும் சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்வது பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதுதான் நடந்தது.யாரையும் பிணைக்க விரும்பாத யாராலும் பிணைக்கப் படவும் விரும்பாத நிலைக்கு வந்து விட்டிருந்தால் இதைப் படிக்கும் உங்களுக்கு என் மன ஓட்டம் புரியும்.

நாம்தான் வம்புகளை விலை கொடுத்து வாங்குகிறோம்.நம் அமைதியைக் கெடுத்துக் கொள்ளும் செயல்களில் ஈடுபடுகிறோம்.விதிக்கப் பட்ட கர்மத்தை செய்தால் போதும்.மற்றதெல்லாம் தானே நடக்கட்டும்.நாமே தேடிச் சென்று அடையும் இலக்குகளை விட இறைவன் வழி நடத்துவதால் சென்றடையும் இலக்குகளே சரியாய் அமைகின்றன.திரௌபதி துகிலுரியப் பட்ட போது புடவையைக் கையால் பிடித்து கொண்டிருந்த வரை வராத கண்ணன் இரண்டு கையையும் அவள் மேலே தூக்கியவுடன் ஓடி வந்தானல்லவா?நாமும் எல்லாம் கண்ணனாலே என்று நினைத்துக் கொள்வோம்.எல்லோருக்காகவும் கண்ணன் வருவான்.அமைதியும் அருள்வான்.

ரஞ்ஜனி த்யாகு


MOTHER PROTECTS

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக