இன்று , ஒரு விஷயம் படித்தேன். "விரும்புவதை விடுவது மட்டும் துறவறம் அல்ல. விரும்பாததை ஏற்றுக் கொள்வதும் துறவறம்தான்". எனக்கு, அது ஒரு மிக நல்ல செய்தியாக, அடுத்த கட்டுரையின் துவக்கமாகப் பட்டது. நாம் அனைவரும் துறவிகள்தானோ என்று தோன்றுகிறது. பிறந்த நாள் முதல், விரும்பாத விஷயங்களை எதிர்கொள்ளத் துவங்கி விடுகிறோம். அத்தனை நாள் கருவில், எந்த வேலையும் செய்யாது, சுகமாக, அம்மா மூலம் உடலையும் உயிரையும் வளர்த்துக் கொண்டிருந்த குழந்தை, பால் குடிக்க தன் சிறு வாயை அசைத்து வேலை செய்யத் தொடங்குகிறது. ரொம்பப் பிடித்து அதைச் செய்யுமா, இல்லை ஆயாசமாக இருப்பதால்தான் அழுகிறதா? குழந்தை வளர வளர, அதன் பிரச்சினைகளும் வளர்கின்றன. நடக்கத் தொடங்கும் வரை , அது தவழ்கிறதே ,எத்தனை கஷ்டம் தெரியுமா?காலை நாள் பூர உதைத்து, அது செய்யும் உடல் பயிற்சி நாம் செய்தால் எல்லோரும் 50 kg தாஜ்மகால்தான்.இன்னும் கொஞ்சம் ஆழமான விஷயங்களுக்கு நகர்வோம்.
பள்ளி செல்லத் தொடங்கின உடனேயே, இருமைகள் நிறைந்த உலகினுள், குழந்தை தூக்கி வீசப் படுகிறது. நன்மையையும் தீமையும் நிரம்பின உலகு. பள்ளிக் கல்வி பற்றிக் கூற முற்படின், அது வேறு விவாதம். மதிப்பெண்களால் மட்டுமே ஒரு குழந்தையை எடைபோடும் தவறை நம் பாடத்திட்டம் செய்வதால், சுயத்தைத் தொலைத்து, கடனே என்று கடமை ஆற்றும் நம் செல்வங்கள்! காலை வேளையில், "பள்ளி வாகனம்"என்று எழுதிக் கொண்டு அளவுக்கதிகமாக மாணவர்களைச் சுமந்து செல்லும் ஆட்டோக்களை ஒரு நாள் சாலை ஓரம் நின்று உற்றுப் பார்ப்போம். துறவிகள் முகங்களிலும் காண இயலாத ஏதோ ஒன்றை, நான் அந்த முகங்களில் பார்க்கிறேன்.
வாழ்க்கை நல்லதும் கெட்டதும் சேர்ந்ததே. இளம் வயதில், நமக்கு உள்ள நல்ல குணங்கள், வயது ஏற ஏற, போர்க் குணமாவது ஏன் என யோசிப்பது அவசியம். விரும்பின விஷயங்களைத் துறப்பது பெரிய கஷ்டம் இல்லை. பல காரணங்களால் அவை துறக்கப் படலாம். அவற்றில் முதன்மைக் காரணம் விரும்பினது கிடைக்க வாய்ப்பில்லை என்பது. பொருள்களுக்கு மட்டும் அல்ல. மனித உறவுகளுக்கும் இதே விதிதான். நாம் விரும்பும் விஷயங்கள் காலகட்டத்திற்கேற்ப மாறுபடும். ஒரு புது விருப்பம் பழையதின் இடத்தை ஆக்ரமிக்கும் போது, பழையது தானாகக் காணாமல் போகிறது. நாம் ஒன்றை அல்லது ஒருவரைத் துறக்கிறோம் என்று சொல்வதை விட துறக்கப் படுகிறோம் என்பதே சரி. முதலில் கொஞ்சம் சிரமமாக இருக்கும். ஆனால் பழகிப் போகும்.
ஆனால், விரும்பாததை ஏற்றுக் கொள்வது என்று ஒரு விஷயம் உள்ளது பாருங்கள்,அது வாழ்க்கைப் பாடம்தான். மனதில் துணிவு, நம்பிக்கை, இறைவனிடம் அல்லது நமக்கு மேற்பட்ட சக்தியிடம் முழுமையான சரணாகதி அடைதல், எல்லா சூழலிலும் ஒளிந்து கொண்டிருக்கும் சிறு நல்லதையாவது தேடிக் காணும் தன்மை, இறைவன் அவரவர் தாங்கும் சக்திக்கு மேற்பட்ட கஷ்டங்களைத் தராத அளவு கருணை கொண்டவன் என்ற உறுதியான எண்ணம், மற்றவர் பார்வையும் நம் பார்வையும் ஒரே போல் இருக்க வேண்டும் என்ற அர்த்தமற்ற எதிர்பார்ப்பு அற்று இருத்தல், அடி வாங்கினால் மறு கன்னத்தைக் காட்டாவிட்டாலும் திருப்பி அடிக்க சமயம் எதிர்பார்த்து மற்றவரைக் காயப் படுத்தாதிருத்தல், நாம் விரும்பாவிடினும், அமைதி ஏற்படும் பொருட்டு ஒன்றைச் செய்தால், அன்று உலகம் சுற்றுவதை நிறுத்தி விடப் போவதில்லை என்ற தெளிவு ---இது போலப் பலவும் சாத்தியமானால்தான், விரும்பாதவற்றை ஏற்க முடியும்.
எதற்கு விரும்பாததை ஏற்கணும் என்ற கேள்வி மனதில் தங்குவது ஞாயமே. எனக்கும் அது உள்ளது. அதற்கு சரியான பதில் என்னால் கூற முடியவில்லை. ஓரளவு ஒத்துக் கொள்கிறார் போலச் சொல்கிறேன். இப்போது விரும்பாமல் ஏற்றுக் கொள்ளும் ஒன்று, எதிர்காலத்தில் மிகவும் நன்மை பயக்கலாம். நம் போன்ற மனிதர்களுக்குத் தொலைநோக்கு கிடையாது. சிறு வட்டத்திற்குள் இருந்து யோசித்து, நாம் எடுக்கும் முடிவால், நீடித்து நன்மை தந்திருக்கக் கூடிய எதையேனும் இழக்க வாய்ப்புண்டு. மேலும், குரங்கு போன்ற மனித மனம், இன்று விரும்பாததை, நாளையோ மறுநாளோ விரும்பலாம். கேள்விதானே மனசில் நிற்கிறது? பாரதியார் தன் வசனகவிதையில், "இவ்வுலகம் இனியது என்று தொடங்கி, சாதல் இனிது" என முடிக்கிறார். நல்லதல்லாத எதையும் அவரால் பார்க்க இயலவில்லை. ஒரு மராத்தான் ஓடி முடிக்க, ஒற்றை அடி முதலில் வைக்கத்தானே வேண்டும்? எல்லா முயற்சிகளுக்கும் ஒரு ஆரம்பம் வேண்டும். துறவு குறித்த ஆரம்ப பாடத்தை யோசிப்போம். விரும்புவதை விலக்கும் துறவியாய் இருப்பதை விட, விரும்பாததை சகித்துக் கொள்ளும் துறவியாக இருக்கலாமே?
ரஞ்ஜனி த்யாகு
MOTHER PROTECTS
Due to circumstances, their position in the family, social, political, financial status and many other causes, a man will not be willing to act like a Rishi. But many saints for eg Gouthama Buddha though had everything like what I mentioned earlier, relinquished all. But what I observed is, Man accepts what he does not like"" also because of forced compulsion, he feels powerless, he needs family,Social, financial, political , professional security & peaceful ambience.
பதிலளிநீக்கு