Being a fifth wheel to the coach என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.சில முறை அல்லது பல முறைகள் அப்படி உணர்ந்தும் இருக்கலாம்.நான்கு சக்கரங்களில் ஓடும் ஒரு வண்டிக்கு ஐந்தாவது சக்கரத்தால் எப்படிப் பலன் இல்லையோ அது போல ஒரு இடத்தில் ஒரு பொருளின் அல்லது ஒரு மனிதரின் தேவை இல்லாத போது அப்பொருள் அல்லது மனிதரை ஐந்தாவது சக்கரம் என அழைக்கிறோம்.ஆனால் ஐந்தாவது சக்கரம் உணர்ச்சி அற்றது.ஐந்தாவது சக்கரம் போல் நடத்தப் படும் மனிதன் ஜீவன் உள்ளவன்.சமீப நாட்களில் எனக்கு மிகவும் நெருங்கிய சிலர் தாம் வாழ்வில் ஒரு ஸ்டெப்னி போல, உயிரற்ற பொருள் போல் நடத்தப் படுவதாய் வருந்தியது என்னை மிகவும் சங்கடப் படுத்தியது.யோசிக்கவும் வைத்தது.
அது போல் வருந்தும் எல்லோருக்கும் ஒன்று கூற விரும்புகிறேன்.மற்றவர் நம்மை அப்படி நடத்துகிறார்களா அல்லது அது நம் மனப் பிரமையா என்ற ஆராய்ச்சிகளைப் புறம் தள்ளுங்கள்.நம் விருப்பம் அற்று நம்மை யாரும் அப்படி நடத்துவது சாத்தியம் இல்லை.ஐந்தாவது சக்கரமாய் உணராமல் இருப்பதில்தான் சூட்சுமம் உள்ளது. இயல்பாய் வாழ்க்கையை எடுத்துக் கொள்வோம்.அனாவசியக் கவலைகளும், நமக்கு அவசியம் அற்ற எதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அற்று இருப்போம்.ஒரு பயணத்தில் திடீரென ஒரு டயர் பழுது பட்டால் ஐந்தாவது சக்கரம் இல்லாது போனால் என்ன ஆகும்?திண்டாடிப் போவோம்.வாழ்க்கைப் பயணமும் அது போலத்தான்.
எல்லா நிகழ்சிகளையும் பல விதமாக நோக்கலாம்.எதிர்மறையாக நோக்குவது நம்மை வருத்தும். "நான் யாருக்காகவும் எப்போதும் உதவத் தயாராக உள்ள ஐந்தாம் சக்கரம்.நான் இல்லாது போனால் என் சுற்றமும் நட்பும் திண்டாடிப் போகும்" என்று மாற்றி யோசித்துப் பாருங்கள். கார் டிக்கியில் கம்மென்று கிடக்கும் ஸ்டெப்னி பல பயணங்களில் சும்மாதான் இருக்கிறது.ஆனால் தேவை வந்து விட்டால் அதனால் அல்லவோ பயணம் நல்ல விதமாய் முற்றுப் பெறுகிறது?சிறு வட்டத்திற்குள் இருந்து வருந்துவதல்ல வாழ்க்கை.தீதும் நன்றும் பிறர் தர வாரா.நான் யாருக்கும் தேவை அற்றவள் எனத் தயவு செய்து நினைத்துக் கொள்ளாதீர்கள் என் அன்பு சினேகிதிகளே.தேவை இல்லாமல் ஒரு புழுவைக் கூட இறைவன் படைக்கவில்லை.பயனற்ற வாழ்வு,அர்த்தமற்ற வாழ்வு என்றும் ஏதும் இல்லை.
ரஞ்ஜனி த்யாகு
Appeared in September 2015 issue -Manjula Ramesh's snehidhi
MOTHER PROTECTS
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக