வாட்சப் கலாட்டா
நேற்று ஒரு ஸ்மார்ட் போன் வாங்கினேன்.அட உண்மையாவே இத்தனை நாள் என்னிடம் அது கிடையாதுங்க.ஸ்மார்ட்டாக இல்லாதவர்களுக்குதான் போனாவது ஸ்மார்ட்டாக இருக்க வேண்டும் என்று வாதாடி வந்தேன்.கீ பேட் ஆக்டிவ் என்று ஒளிரும் விரல் நீளம் இருந்த என் பழைய போன் தன் பயணத்தை நிறுத்திக் கொண்டதால் வேறு வழி இல்லாமல் பளபள என ப்ரகாசமாய் ஜொலித்துக் கொண்டிருந்த நகரின் ப்ரதான சாலையில் இருந்த ஒரு மொபைல் போன் கடைக்கு அரை மனதாகப் பயணப் பட்டேன் .குடும்ப சகிதமாய்.எனக்குதான் ஸ்மார்ட் போன் சமாச்சாரம் ஒன்றும் தெரியாதே.மேலான ஆலோசனை வழங்க, கார்ட் தேய்க்க, என் கணவர்,மகன் எல்லாம் வந்தால்தானே சரிப் படும்?அது ஒரு மாய உலகம் என அறிந்தும் நாமாவது பொறியில் சிக்குவதாவது என்ற இறுமாப்பில் 4000 ரூபாய்க்கு மேல் ஒரு பைசா என்றாலும் போனே வாங்கிக் கொள்ள மாட்டேன் என்று வழக்கம் போலப் புலம்பிக் கொண்டே இருந்தேன்.அவர்களும் வழக்கம் போல நமட்டுச் சிரிப்புடன் அதைக் காதில் போட்டுக் கொள்ளாது மோடி கவர்மெண்ட்டின் சாதனைகளையும் செவ்வாய் க்ரஹத்தில் தண்ணீர் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது பற்றியும் விவாதித்துக் கொண்டு வந்தார்கள்.
கடையில் வாங்க வந்தது ஸ்மார்ட் போன் என்றதுமே உபசரிப்பும் பலமாகியது.வித விதமான மாடல்கள் காட்டப் பட்டன.என் கணவரும் மகனும் கடைக் காரரிடம் எனக்குப் புரியாத, போனுடன் தொடர்புடைய சில வார்த்தைகள் சொல்லி ஏதோ கேட்டபடி இருக்க கடைப் பையன் சளைக்காமல் பதில் அளித்துக் கொண்டிருந்தான்.கடைசியில் எனக்கு உகந்தது என என்னைக் கேட்காமல் அவர்களே முடிவெடுத்து தேர்ந்தெடுத்த ஒரு மாடலைக் காட்டி "பில் போடுப்பா"என்றனர்.அப்போதுதான் நான் திடீரென முழித்துக் கொண்டு,"என்னப்பா எத்தனை ஆகிறது?"என்றேன்."ஜஸ்ட் 11000மா எதுவும் சொல்லிடாதே.கொடுக்க வேண்டியது கொடுத்தாதான் க்வாலிட்டி இருக்கும் .உன் நேரமே எவ்வளவு சந்தோஷமாகப் போறது பாரேன் உனக்கு இஷ்டமானவர்களோட எப்பவும் தொடர்பிலேயே இருக்கலாம்."என்று மகன் கூறியதை தலையை ஆட்டி வேகவேகமாக ஆமோதித்தார் என் கணவர்.ஏனென்றால் அவருக்கு இந்த டீல் சீக்கிரம் முடிந்தால்தான் காலாகாலத்தில் தன் போனை நோண்டப் போக முடியும்.வீட்டில் நம்முடன் எப்போதும் தொடர்பிலேயே உள்ளவர்களை விட போன் தொடர்பு அதிக சந்தோஷம் தரும் என்ற பேருண்மையை ஸ்மார்ட் போனுடன் சேர்த்தே விற்பனை செய்கிறார்கள் போலத் தோன்றியது.
அடுத்து போனில் உள்ள அப்ளிகேஷன்சைக் கற்பிக்கும் படலம் தொடங்கியது.மிகுந்த ஆர்வமுடன் மாற்றி மாற்றி ஒரு பாடத்திட்டத்தின் ஒரு மாத பாடத்தை ஒரு நாளில் வகுப்பு எடுப்பது போல என் காதில் ஓதினார்கள்.நானும் நன்கு புரிந்த மாதிரி பூம் பூம் மாடு போலத் தலையை ஆட்டி வைத்தேன்.மறு நாள் அவசரமாய் வேலைகளை முடித்து விட்டு போனுடன் சவுகரியமான இடம் தேர்ந்தெடுத்து உட்கார்ந்து கொண்டு புது விளையாட்டு பொம்மையை ஆராயும் குழந்தையின் ஆர்வத்துடன் ஒரு விரலால் ஸ்வைப் செய்தேன். போன் கம் மென்றிருந்தது . பல முறை முயன்று விட்டு , கணவருடைய அலுவலகத்திற்குப் பேசிப் பயனில்லை,மீடிங்கில் இருக்கிறேன் என்ற ஒரே பதில்தான் வரும் என்பதால் பக்கத்து வீட்டு சுபாவிடம் முதல் பாடம் கற்றேன்.அவளே பெரிய மனது பண்ணி வாட்சப் பயன்படுத்தவும் சொல்லித் தந்தாள்.லிஸ்டில் தேடி என் நெருங்கின கல்லூரித் தோழியைப் பிடித்து முதல் செய்தி அனுப்பினேன்.எங்களுக்குள் நடந்த செய்திப் பரிமாற்றம் பின்வருமாறு.
நான் : உமா,எப்படி இருக்கே?நான் வாட்சப்ல இருக்கேன்.இனி அடிக்கடி பேசலாம்.
உமா: ஏன் இன்னும் ஒரு வருஷம் கழித்து போன் வாங்க வேண்டியதுதானே?சரி சரி க்ரூப்ல உன்னை சேத்துடறேன்.நீ எங்க இருக்கே?என்ன பண்றே?
நான்:...................................
உமா:இன்னும் அதே மாதிரி சோம்பேறியாதான் இருக்கியா?ஏதான கேட்டா எட்டு தடவை யோசிச்சுதான் பதில் சொல்லுவியா?
நான்:ரொம்ப தாங்க்ஸ் உமா .
(கவனிக்க.இந்த தாங்க்ஸ் அவள் என்னைக் குழுவில் இணைத்ததற்கு.சோம்பேறி என்ற பட்டம் கொடுத்ததற்கல்ல .)
உமா:என் ஹஸ்பெண்ட் டாக்டர்.உன் கணவர் என்ன பண்றார்?
நான்: ...........................................
உமா:எத்தனை பசங்க?என்ன படிக்கிறாங்க?
நான்: அவங்க லாயர்
(தெரிந்திருக்கும்.இது முந்தைய கேள்விக்கு பதில்)
உமா:நீ வேலை பார்க்கறியா?நான் அஞ்சு வருஷத்திற்கப்புறம் வேலையை விட்டுட்டேன்.
நான்:ஒரே பையன் டென்த் போறான் .
என்னால் இதற்கு மேல் தாங்க முடியவில்லை.டைப் செய்வதை நிறுத்தி விட்டு போனில் அழைத்தேன்.வள்ளென்று விழுந்தாள்.தோழிகள் தவிர யார் அந்த உரிமை எடுத்துக் கொள்ள இயலும்?
"டைப் பண்றதை நிறுத்தறச்சே பை சொல்லணும்ங்கற பேசிக் கர்டசி கூடத் தெரியாத உனக்கெல்லாம் எதுக்குடி ஸ்மார்ட் போன் ?நீ அப்பப்ப பேசு அதுவே தேவலை வாட்சப் வராதே.தாங்கலை"
அவள் சரியாகத்தான் சொன்னாள் எனத் தோன்றியது.
நீண்ட கடிதங்களிலும்,ஓரளவு இ மெயிலிலும் கூடத் தெரியும் நெருக்கம் இந்தக் குறும் செய்திகளில் இல்லை என்று தோன்றியது.இன்னும் சில நாட்களில் உமாவின் வேகத்திற்கு ஈடு கொடுத்து என்னால் இது போன்ற பரிமாற்றங்கள் செய்து கொள்ள முடியலாம்.ஆனால் முதல் வரியில் கேட்ட கேள்விக்கான பதிலை கடைசி வரிக்கு வருவதற்குள் மறந்து மீண்டும் அதையே கேட்கிறார்கள்.அர்த்தமற்ற நேர விரயம் அல்லவா?தொழில் நுட்பத்திற்கு எதிரி போல என்னை சிலர் பார்ப்பதுண்டு.நான் தொழில் நுட்ப வளர்ச்சி கண்டு மகிழ்ச்சியே அடைகிறேன்.ஆனால் அது இன்னும் உபயோகமான விஷயங்களுக்கு உதவலாமே தவிர ,"நீ எத்தனை மணிக்கு குளித்தாய்?என்ன கலர் உடை அணிந்திருக்கிறாய்?"என்பது போன்ற அல்ப விஷயம் பேச அல்ல.
மொபைல் போனை விட்டு ஒரு நிமிடம் கூட இருக்க இயலாது.தூங்கக் கூட முடியாது என்றால் அதற்கு அடிமையானதாகத்தானே அர்த்தம்?சில மணித் துளிகள் அடிமைப் பட்டதே மூச்சுத் திணற வைத்து விட்டது.நாள்பட்ட அடிமைத் தனம் போதைப் பழக்கத்திற்கு ஒப்பானது.வெளியில் வர முயற்சி தேவை.
ரஞ்ஜனி த்யாகு
MOTHER PROTECTS
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக