புதன், 27 ஜூலை, 2016

மறதியா தொலைத்த ஞாபகங்களா?


மறக்க வேண்டியவற்றை ஞாபகம் வைத்துக் கொள்ளக் கூடாது.ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியவற்றை மறக்கக் கூடாது.இப்படி கூடும் கூடாது என்பதைத் தாண்டி,நாம் இன்றியமையாதவை என நினைக்கும் விஷயங்கள் மறப்பதில்லை.நம் ஆழ்மனதே வேண்டாம் என்று தள்ளும் விஷயங்கள் மட்டுமே நம்மால் மறக்கப் படுகின்றன.நம் விருப்பத்தின் பேரில் நிகழ்வதே மறதி.காதலிக்கும் போது பிறந்த நாள்,சந்தித்த நாள்,அன்று போட்டிருந்த சல்வார்,காதல் தெரிவித்த தருணம்,சேர்ந்து சாப்பிட்ட உணவகம் என்று வெளிப்பார்வைக்கு,வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அனாவசியமாகத் தெரியும் விஷயங்களை இளைஞர்கள் மறப்பதில்லை.ஆனால் திருமணம் ஆன பின்னர்,இரண்டாவது கல்யாண நாளில் மனைவி இனிப்பு செய்தால் "இன்று என்னம்மா விசேஷம்"என்று கேட்பவர் உண்டு.காதலித்த போது அவளைக் கவர்வது முக்கியம்.கவர்வதற்கு கால்காசு பிரயோசனம் இல்லாத பல ஞாபகத்தில் இருக்க வேண்டும்.கல்யாணம் ஆன பின் நிஜ வாழ்வின் போராட்டங்கள்.ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியதை வைத்துக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் நோ டென்ஷன் .அதன் பெயர் மறதி இல்லை.விரும்பித் தொலைத்துவிட்ட ஞாபகங்கள்.(இந்த விஷயங்களில்,பெண்கள் sincere தான்.கிறிஸ்து பிறப்பதற்கு முன்,பின் என்பது போல்,அவர்கள் திருமணத்திற்கு முன்னும் பின்னும் அவர்களே.இப்போது எல்லாம் மாறிவிட்டது என்ற விவாதம் வேண்டாம்.போஸ்ட் அது பற்றியதல்ல)

இந்தப் போஸ்ட்டிற்குக் கரு தந்தது ஒரு தோழர்.சில மாதங்களுக்குப் பின் அவரை சந்தித்தேன்."அப்பா எப்படி இருக்கிறார்"என்று இரண்டு மாதங்கள் முன்னர்தான் இவ்வுலகை விட்டு நீங்கிய என் தந்தை பற்றி விசாரித்தார்.இதில் என்ன ஆச்சரியம் என்றால்,அவருடையதுதான் நான் receive செய்த condolence மெசேஜ்களில் ஆழமான வார்த்தைகளில் எழுதப்பட்ட ஒன்று.எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.அவருடைய கேள்வி மறதியில் பிறந்தது என்ற சமாதானம் வேறொரு உறவினரால் கூறப் பட்டது.எவ்வாறு இது சாத்தியம் என்று யோசிக்க வைத்தது.

எனக்கு ஆறாம் வகுப்பில் படித்த திருக்குறள் மறக்கவில்லை.கல்லூரியில் கற்ற Fluid mechanics ஞாபகம் இல்லை.என் தோழிக்கு இதுவே மாறி இருக்கலாம்.சிலருக்கு ரெண்டும் அழியாது மனதில் இருக்கலாம்.நாம் எதற்கு,யாருக்கு எத்துணை கவனம் அளிக்கிறோம் என்பது நம் ஞாபக ஏடுகளைப் புரட்டினால் தெரியும்.வயது ஞாபகமறதி ஏற்படுத்தும்.இல்லை என்று சொல்லவில்லை.அது எந்த மாதிரி மறத்தல் தெரியுமா?At a very superficial level . Functional level .இன்று வங்கி செல்ல வேண்டும்,பால் உறை விட வேண்டும்,
அயர்ன் பண்ண எத்தனை துணி கொடுத்தோம், என்று லைசென்ஸ் புதுப்பிக்க வேண்டும் ,tax கட்ட வேண்டிய நாள் எது என்பதெல்லாம் வயதானால்--அடிக்கோடிட்டு சொல்கிறேன்,வயதானால் மறக்க வாய்ப்புண்டு.அதைக் கூட senior citizen பதவியை அடையாதவர் செய்யக் கூடாது.சாப்பிட,டி வி பார்க்க,வாரம் ஒரு நாள் ஹோட்டலில் சாப்பிட,பீரோ வழிந்தாலும் புதுக் துணி,நகை வாங்க மறக்கிறோமா?மற்றதெல்லாம் மட்டும் எப்படி மறக்கும்?Alzheimer 's disease என்று ஒன்று சொல்கிறார்கள்.அது தாக்கப் பட்டதாக மருத்துவர் கூறினால் நம்பலாம்.மருத்துவ சமூகம் beautiful ஆக பெயர் வைத்து விட்டது.உண்மையில் இந்த நோயின் symptoms இல்லாமல் எல்லாவற்றையும் மறப்பதும் வியாதியே.அதற்கு மனத்தை treat பண்ண வேண்டும்.வயதால் சிறிய நிகழ்வுகளை மறப்பவர்களிடம் கேளுங்கள்,தாயாதிகள்,பங்காளிகள் பெயரை சட்  எனக் கூறுவார்கள்.அப்படி என்றால் என்ன பொருள்?எனக்கு எதெல்லாம் இப்போது தேவை இல்லையோ அவற்றை மூளைக்கு அதிக strain கொடுத்து வைத்துக் கொள்ளத் தேவை இல்லை,என்பதுதானே?

மறதி indifference ஐ வெளிப் படுத்துகிறது.நீயும் உன் பற்றின சமாச்சாரமும் எனக்கு எதற்கு என்று மறைமுக வாக்குமூலம் தருகிறது.வேண்டியவற்றை மறத்தல் தவறு.வேண்டாதவற்றை மறத்தல் வரம்.மாறிப் பண்ணினால் குழப்பம்.நாம் ஒவ்வொருவரும் ஒரு தனி உலகில்,மற்றவர் இல்லாத, நுழைய முடியாத அக உலகில் வாழ்கிறோம்.நம் எண்ணங்களால் ஆன உலகம் அது.எதை மறக்கிறோமோ அது நம் எண்ணங்களில் இருந்ததில்லை என்பதையே அது காட்டுகிறது.ஞாபக மடிப்பில் நம் விருப்பத்துடன் செய்த பதிவுகள் மறக்காது.நம்மைத் தொடும் மனிதர்கள்,நிகழ்வுகள்தான் பதிவாகும்.நாமும் எல்லாவற்றையும் மனதில் ஏற்றிக் கொள்வது இயலாது.மற்றவர் அப்படி செய்வார்கள் என்று எண்ணுவதும் அர்த்தமற்றது.ஆனால் மறதி என்ற வார்த்தைக்குப் பதில்,தொலைத்த ஞாபகங்கள் என்று சொல்லிக் கொண்டால் நன்றாக இருக்கும்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

செவ்வாய், 26 ஜூலை, 2016

வாழ்க்கை நீண்டதா,குறுகியதா?

கருவறையில் தொடங்கி கல்லறையில் முடியும் பயணம். தொடக்கம் தெரிந்து முடிவு பற்றி ஏதும் அறிந்து கொள்ள முடியாப்பயணம். பயணத்தை ரசிக்கத் தொடங்கும் முன் இறங்கும் இடம் வரலாம். அனுபவித்து ரசித்துக் கொண்டிருக்கையில் பாதியில் முடியலாம். எப்போது இறங்கும் இடம் வரும் என்று ஆயாசம் வந்த பின் நிதானமாகப் பயணம் முடியலாம். நிம்மதியாகப் பயணப்  பட்டு சரியான நேரத்தில் ஊர் சென்றடையும் ரயில் போல் ,வந்த வேலை முடிந்தது போல் விடை பெறலாம். எப்படி வாழ்வில் இருந்து விடை பெறுகிறோம் என்பது ஏற்கெனவே எழுதப் பட்டு அந்த எழுத்தை தலையில் தாங்கியே ஜனிக்கிறோம் .வினாத்தாள் தெரிந்து விட்டால், பரீக்ஷைக்கு முன் ஏற்படும் குழப்பம்தான் உண்டாகும் எல்லோர் தலை எழுத்தும் முதலிலேயே தெரிந்து விட்டால். வாழ்க்கை என்றால் 100 வருடம் என்பது போல் விதிகள் இல்லையாதலால், தனி நபர் சம்மந்தப் பட்டதுதான் பயண காலம். வாழ்க்கையைப் பிறவிப் பெருங்கடல் என்கிறார் திருவள்ளுவர். நீர்க்குமிழி என்கிறார்கள் தற்போதைய கவிஞர்கள். எது சரி? எப்படி எடுத்துக் கொள்வது அமைதி தரும்?  வாழ்வு நீண்டதோ குறுகியதோ வேறொருவர் சொல்லி நடத்தும்,வேறொருவர்இயக்கும் நாடகம் அல்ல என்பதில் மட்டும் நாமனைவரும் மிகத் தெளிவாகவே இருக்கிறோம்.

நமக்குத் தெரிவது ஒரு வாழ்வுதான். யாரும் சென்ற பிறவியில் எவ்வளவு கஷ்டப் பட்டேன் தெரியுமா என்றோ, என் போன பிறவி மனைவி எவ்வளவு அழகு தெரியுமா என்றோ பேசுகிறார்களா என்ன? எழுதும் போதே தமாஷாக உள்ளது. நம் வாழ்க்கையின் முக்கியமான எத்தனையோ பேரை அருகில் இல்லாத ஒரே காரணத்தால் மனதில் இருந்தும் விலக்கி விடுகிறோம். இதில் போன பிறவி, அடுத்த பிறவி என்றெல்லாம் பேசி என்ன பயன்? இப்போது செய்யும் ஒரு செயல் அடுத்த பிறவியில் பலன் தரும் என்றால் அது புண்ணிய வடிவு கொள்ளப்  போகும் நற்செயல் மட்டுமே. அது கூட மறுபிறவிக் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு.

குலத்தில் இரண்டே பிரிவுகள். இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர், என்பது போல், வாழ்வின் தன்மை இரண்டு வரிகளில். எந்த நல்ல செயல் செய்ய நினைத்தாலும் வாழ்வு குறுகியது, இன்றே செய்து விட வேண்டும் என எண்ணிக் கொள்ளலாம். எந்த தீயசெயல் செய்யும் எண்ணம் வந்தாலும், ஓ, வாழ்வு நீண்டது, இந்தத் தீமை புரிந்தால், நம் ஆயுள் முடியும் முன் நம்மைத் திருப்பி அடிக்கும், எந்த உருவிலாவது தாக்கியே தீரும் என உறுதியாக நம்பலாம். கடன் வாங்குபவருக்கு, தானங்கள் செய்ய நினைப்போருக்கு, குடும்பத்திடம் அன்பு காட்ட விரும்புவோருக்கு, இயற்கையை ரசிப்பவர்களுக்கு, புதிதாய்க் கற்க,படைக்க நினைப்போருக்கு, பகைமையை மறக்க எண்ணுவோருக்கு, இறைவனுக்கு நன்றி செலுத்தி எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என்று பாடிக் களிப்பவருக்கெல்லாம் வாழ்வு சிறிதே. நாளை என்பது இல்லாதது போல் நடந்து கொண்டால் அன்றி,  பல நல்ல செயல்களை ஒத்திப் போடத் தோன்றலாம்.

இன்று கோபுரத்தில் உள்ளோம், நாளை வாழ்வு நம்மைப் புரட்ட வாய்ப்புள்ளது என்ற அடக்கம் தோன்றட்டும். பகைமை பாராட்டத் தோன்றும் போது நீண்ட வாழ்வின் மகிழ்ச்சியை அழிக்கும் அமிலம் அது என எண்ணிக் கொள்வோம். நாளை என்ற ஒன்று உண்டு என்றால்தான்,  சில தவறுகள் தவிர்க்கப் படும். வாழ்வு குறுகியது என்ற பயத்தை விட,  வாழ்வு நீண்டது என்ற  நிம்மதியே  நம்மைப் பல நேரம் நல்வழிப் படுத்துகிறது. வாழ்க்கைப் பயணம் சிறிதானால்,  அவசர அவசரமாக நல்லதெல்லாம் செய்யணும் என்ற பதட்டமும் வருகிறது.ஆனால் பிறவியைப் பெரும்கடலென எண்ணும்  போது,  நிதானமாகத் தீயவைகள்  தவிர்க்கப் படுகின்றன. நல்லது செய்வதை விட, தீயவை விலக்கல் முதற்படி.

வாழ்வில் நமக்கு கிடைத்த அனைத்திற்கும் நாம் பாதுகாவலர்கள்தான். உரிமையாளர்கள் அல்ல. பணத்தில் தொடங்கி எல்லாவற்றிற்கும். அந்த நினைவு வந்தாலே,  தானாக, எங்கு நிதானப் பட வேண்டும், எதற்கு அவசரப்பட வேண்டும் என்பது விளங்கும்.  வாழ்க்கை  எந்த தூரம் போக சீட்டு வாங்க வேண்டும் என்பதை ஆண்டவன் நிர்ணயிக்கும் பயணம். ஏறவும் இறங்கவும் நம்மிடம் சக்தி இல்லாது அவன் கூட்டிச் செல்லும் பயணம்.  ரயில் பயணத்தின் இறுதியில் மூட்டை முடிச்சுடன் இறங்குவோம். வாழ்க்கைப் பயணத்தின் இறுதியில் மூட்டையாவது ஒன்றாவது, ஒட்டுத் துணியும் உருவப் பட்டு பஞ்சபூதங்களில் ஒன்றுடன் ஐக்கியமாகிறோம். நாற்பது வயதில் நீண்ட பயண அனுபவம் பெறலாம். நூறு வயதில்  எதையும் அறிய முயலாது பயணம் முடியலாம். வாழ்க்கை நீண்டதோ குறுகியதோ உற்று நோக்க வேண்டியது. பயணிப்போம்.

ஞாயிறு, 24 ஜூலை, 2016

காற்று

கண்ணால் பார்க்காத,ஆனால் நான் முழுமையாக நம்புகிற இரண்டு இருப்புகள் என்றால்,ஒன்று கடவுள்,மற்றது காற்று.காற்றை ஒரு போஸ்டில் அடைக்க முடியுமா?ஏன் முடியாது?ஒன்பது துவாரம் உள்ள எண் சாண் உடம்பில் சுற்றி வருகிறதே,தப்பிக்க வகை இருந்தும் தப்பிக்க முயல்வதில்லையே ,தன்  போலவே கண்ணிற்குப் புலப்படாத ஆண்டவனின் ஆணை வரும்வரை ஆர்பாட்டம் ஏதும்  இன்றி தன் இருப்பை இயல்பான ஒரு நிகழ்வாக்கி லேசாக இருக்கிறதே. போஸ்ட்டிற்குள் அடங்கி விடேன் என்பது அதன் நெருங்கின தோழியின் அன்புக் கட்டளை.அதற்குக் காது உண்டு.கேட்கும்.

பஞ்ச பூதங்களில் காற்றுடன் ஏனோ நெருக்கம்.தினம் காற்று சம்பந்தப் பட்ட பாட்டு ஒன்று மனக் கதவைத் தட்டும்.காலை கண் விழித்ததும் ஜன்னல் வழி தெரியும் ஆகாசம்,கால் பதிக்கும் நிலம்,உலகில் பெரும்பகுதியை ஆக்ரமித்துக் கொண்டு-- சிம்பிள் ஆகச் சொன்னால் காலைக் கடன்களில் தொடங்கி தேவை படும் நீர்,வயிற்றின் அக்னியைத் தணிக்க நாம் மூட்டும் அடுப்பு நெருப்பு என்று மற்ற நான்கு பூதங்களும் தங்களை வெளிப் படுத்திக் கொள்ளும் போது ஜீவனே அதுதான் என்ற காற்று மட்டும் எப்படி உள்ளது என யோசிக்கிறேன். நாமும் அப்படித்தான் இருத்தல் வேண்டும் அல்லவா? நம் presence மற்றவரால் உணரப் பட வேண்டுமே தவிர உணர்த்த வேண்டி இருப்பின் அந்த வாழ்வு ஒரு மாற்று குறைவே என்று எண்ணம் தோன்றியது.ஆனால் அப்படி உணர்த்த நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் முயற்சியையே வாழ்க்கை என்று அழைத்துக் கொண்டிருக்கிறோம்.ஓரளவு சிந்திக்கத் தெரிந்தது முதல் இதைத்தான் செய்யக் கற்பிக்கப் படுகிறோம்.செய்கிறோம் . தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள முயலாத நபர்கள் எப்போதும் அமைதி தொலைப்பதில்லை.ஏன் நான் மற்றவரை விட உயர்வு?உண்மையில் நான் உயர்வு என்றால் அது காற்றுப் போல் தானாகவல்லவோ வெளிப்பட வேண்டும்!

காற்று உலகத்தில் செய்யும் தொழில் போல் வாழ்வை சற்று யோசிப்போம்.நம் ஒவ்வொருவரின் திறமையும் அளவற்றது.அது நமக்களிக்கப் பட்ட கொடை .இறக்கை முளைத்தது போல் மனம் பறந்து விரியலாம்.என்னென்ன செய்ய இயலுமோ செய்யலாம்.ஆனால் தகுதியை உலகம்தான் நிர்ணயிக்க வேண்டும்.வேடிக்கையாக சொல்வதுண்டு.மனிதன் தன்  சம்மந்தப் பட்ட விஷயங்களுக்கு வக்கீலாகவும் மற்றவர் விஷயங்களுக்கு நீதிபதியாகவும் செயல்படுகிறான் என்று.ரொம்ப உண்மை .நம்மைப் பற்றி, சொல்லிக் கொள்வதெல்லாம் வக்கீல் தன்  கட்சிக்கு வாதாடுவது போலத்தானே? மேலும் மற்றவர் நன்றாய் இருப்பதை உலகம் பொறுப்பதில்லை என்றெல்லாம் கூறுகிறார்கள்.அந்தக் கூற்றுகள் முற்றிலும் உண்மை இல்லை.மனித மனத்தின் விசித்திரங்களில் ஒன்றுதான் திறமைசாலிகள் அதுவும் தன்னை விட திறமைசாலிகளைக் கண்டாலும் காணாதது போலிருப்பது.ஆனாலும் மேன்மையானவை வெளிப்பட மற்ற மனிதர்களின் குறுக்கீடுகள் பெரிய தடைக் கற்கள் இல்லை.

சிறு கதை.நாமறிந்த கதை.தெய்வப் புலவர் திருவள்ளுவர் திருக்குறளை மதுரைத் தமிழ்ச் சங்கம் முன்னர் கொண்டு சென்ற போது மற்ற புலவர்கள் அதைக் கண்டு பொறாமையுற்று எதிர்த்தார்களாம்.திருக்குறளையும் மற்ற புலவர்களின் புத்தகங்களையும் ஒரு தட்டில் ஏற்றியவுடன் திருக்குறள் தவிர மற்ற அனைத்தும் நீருக்குள் விழுந்துவிட்டனவாம்.என்ன அறிகிறோம்?உண்மையில் உயர்ந்த விஷயங்கள் தானே அங்கீகாரம் பெற்றே தீரும்.சரி,காற்று வேலையைத் தொடங்கி விட்டது பார்த்தீர்களா?ஒரு சுற்று சுற்றி விட்டது.

நான் சொல்லும் காற்று,தென்றல்.ப்ராணாயாமம் செய்யும் போது உள்ளும் வெளியும் போகும் காற்று.சுவாசத்தில் இருப்பது.வருடிப் போவது.சத்தம் இன்றி முத்தம் தருவது.சூறாவளியும் காற்றுதான்.அசுரனும் பகவத் சொரூபம் என்பது போல.சூறாவளி இருப்பை வெளியிடும் காற்று.வெளிப் படுத்திக் கொள்ளவே வாழ்பவர் சூறாவளி போன்றோர்.சூறாவளி காற்று அடையும் வரவேற்பைத்தான் அவர்கள் அடையலாம்.சூறாவளி கதவில் மோதும்.தென்றல் போல் வரவேற்பறை வாராது.காற்று சொல்லும் பாடங்கள் இன்னும் ஏராளம். லகுவாக இருத்தல்.ஆரவாரம் அற்று இருத்தல்.அடையாளம் காட்டும் ஆசைகள் அற்று இருத்தல்.தென்றல் உடல் தொடுவது போல் அன்பால் மனம் தொடுதல்.அதைப் பிரயத்தனங்கள் இன்றி இயல்பாய் செய்தல்.இருப்பை விட  இல்லாமையால் இன்னும் அதிகமாக உணரப் படுதல்,இவை முக்கியமானவை.யாராலும் அடக்க முடியாதிருத்தல்,அதாவது கட்டுப் பாடற்று சுதந்திரமாய் இருத்தல் என்பதை நான் முக்கியம் என்ற பிரிவில் அடக்கவில்லை.ரசிக்கத்தக்க என்ற பிரிவில் போட்டுக் கொள்கிறேன்.ஏனென்றால் நான் காற்றை ரசிக்கக் காரணமே அதன் கட்டுப்படாத தன்மைதானே!வேலைகள் அழைக்கின்றன.காற்றுப் போல் அவற்றில் கரைந்து போனால்தான் வாழ்வின் ரிதம் பாதிக்கப் படாது.மீண்டும் சீக்கிரம் சந்திப்போமா ?

ரஞ்ஜனி த்யாகு


MOTHER PROTECTS

வியாழன், 14 ஜூலை, 2016

கண் விற்று வாங்கும் சித்திரங்கள்

'வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்றும் கொள்வாரோ? கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கை கொட்டிச் சிரியாரோ' என்கிறார் பாரதியார். எங்கோ நடப்பதையா பாரதியார் கூறினார்?  இல்லை.  கண்ணை விற்றுச்  சித்திரம் வாங்கும் மனிதர்களையே அதிகம் பார்க்கிறேன். எதை வாங்க எதைக் கொடுக்கலாம்?  வரைமுறை உள்ளதா இல்லையா?  வாழ்வு இறக்கை  கட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. வாகனம் போல வாழ்க்கை ஓடட்டும். பேருந்திற்குள் நாம் உட்கார்ந்து இருக்கிறோமா அல்லது உள்ளேயே ஓடுகிறோமா? ஓடும் வண்டிக்குள் உட்கார்ந்து செய்யும் அமைதியான பயணம் போல் ஏன் வாழ்க்கைப் பயணம் இல்லை?  காலம் நிற்காமல் ஓடும். நம் உடம்பில், வாழ்க்கைச் சூழலில், உலகத்தில், மாற்றங்கள் ஏற்படும். ஆனால் மனது? அதை மட்டும் அப்படியே,பத்திரமாக நிச்சலனமாக ஏன் வைத்துக் கொள்ள முடியாது?

எதையும் தேங்காய் உடைப்பது போல் பேசியே பழக்கப் பட்ட எனக்கு பூடகமாக ரொம்ப நேரம் பேசுவது இயலாது. சொல்லி விடவா,சொல்ல வந்ததை? 'வெளியுலகம் பற்றி நீ என்ன அறிவாய்'  என்று,  மனைவியையும் ஒரு சக ஊழியர் போல மட்டுமே பார்க்கத் தெரிந்த , எங்கேயும் நிதானிக்கவே தெரியாது முழிக்கின்ற,  சற்றுப்  பாவமான  ஆண் நண்பர்கள்,  இன்று மனதில் உட்கார்ந்து மணி அடிக்கிறார்கள். ஓசை தாங்கவில்லை. அதுதான் எழுத்து. நடுத்தர வயது கடந்த பெண்கள்,  தீராது என்று சும்மா இருக்கலாம். குழந்தைகள், அப்பாவைப் பார்த்து, "இந்த மாமா யாரம்மா" என்று கேட்கவில்லை என்று திருப்தி பட்டுக் கொள்ளுங்கள். ஆமாம்,எதற்கு ஓட்டம்?சாப்பாட்டுக்கா, சமூகத்தில் மதிப்பு கிடைக்கும் எனவா, இல்லை சும்மா வங்கி கணக்கில் பணம் உள்ளது என்று பார்த்து மகிழவா,  அல்லது சமூகத்திற்கு ஏதோ செய்கிறோம் என்ற எண்ணமா, இல்லை எப்போதும் திருப்தி அடையாமல் பேயாட்டம் ஆடும் ஈகோவை திருப்தி படுத்தும் முயற்சியா,  எதற்கு ஓடுகிறோம் என்றாவது தெரியுமா உங்களுக்கு? யாரோ துரத்துவது போலல்லவா ஓடுகிறீர்கள்!  இளமையில் ஓடுவதாவது தேவலை. முதுமையில்? கடைசி வரை ஓடியாக வேண்டும் என்ற விதியுடன் பிறந்தவர்கள்,  இதில் அடங்க மாட்டார்கள். அவர்களுக்காக,அவர்கள் உடல் நலத்துக்காக, குடும்பங்களுக்காகப்  பிரார்த்திக்கலாம்.  விதி வசப் பட்டு ஓடலாம். ஆசையால் அலைக்கழிக்கப் பட்டு ஓடக்  கூடாதுதான்.

கண் விற்றுச்  சித்திரம் வாங்கத் தேவை என்ன?  அதற்குப்  பதில், அந்தச் சித்திரத்தைப் பார்க்கும் ஆசையைத் தியாகம் செய்யும்  மனோதிடம் வளர்த்துக் கொள்ளலாம். ஆனால்,  உலக ஆசைகள் வசப் பட்ட  மனதுக்கு,  அந்த மனபலம் இல்லை. சந்தேகம் கொண்ட மனம் அது. யோசிக்காது சித்திரம் வாங்கும். அதற்கு முட்டாள் தனமாய்க் கண்ணையே விலை பேசும். என்னுடன் பழகிக் கொண்டிருக்கும்,பழக்கம் இல்லாதிருக்கும் எல்லா ஆண்களுக்கும் சொல்கிறேன். தயவுபண்ணிக்  காது கொடுங்கள். முதுமையில் சித்திரங்கள் பார்ப்பது பேராசை.  கண் இருப்பது தேவை. குடும்பம் கண். அதன் சந்தோஷங்களைப்  பின் தள்ளி,  நீங்கள் அடையும் அதிகப் பணமும் பட்டமும் வெறும் அழியும் சித்திரங்கள். 

எவ்வளவு உண்மை. எளிமையாக எடுத்துக் கொள்ளலாமே? பிரபஞ்சத்தின் சிறு துளி நாம்.  பெரிய வருத்தங்கள் ,  இழப்புகள் என நாம்  நினைப்பவை எல்லாம் கூட, ஒரு குழந்தைக்கு பொம்மை உடைந்தால் ஏற்படும் இழப்பு போலத்தான்.  நகர்ந்து கொண்டே இருக்கும் மனிதன்,  வழியில் எதிர்கொள்ளும் நிகழ்வுகளில்,  எதற்கு எவ்வளவு முக்கியத்துவம் தரலாம்? ஒரு தொலைநோக்கு வேண்டாம்? நாம் எதையும் அறிய முடியாதுதான். மறுபடி மறுபடி நினைவுறுத்திக் கொள்வோம். எதிர்காலம் மறைபொருள்தான். ஆனால் எதிர்காலத்திலும் கதிரவன் கிழக்கிலேயே உதிப்பான். சரிதானே?  எண்பது வயதிலும் மனைவி அவள்தான். ஆனால், தொழில்முறை உறவுகள் முதுமையில் நிற்கும். அல்லது குறையும். நிதானப் படுங்கள் . சித்திரம் எழுத சுவர் வேண்டும். அதைக் காணக்  கண் வேண்டும். எவ்வளவு சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல,  கண்டும் காணாது  இருக்கும் ஆண்களைப்  பொறுத்துக்  கொண்டு நேசிக்கப்  பரந்த மனம் வேண்டும். ' இந்த எழுத்து என்ன சாதிக்கும்?'  என்ற தோல்வி மனப்பான்மை இருப்பினும்,  தொடரக்  கடவுள் எனக்கு அருள வேண்டும்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS