வியாழன், 14 ஜூலை, 2016

கண் விற்று வாங்கும் சித்திரங்கள்

'வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்றும் கொள்வாரோ? கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கை கொட்டிச் சிரியாரோ' என்கிறார் பாரதியார். எங்கோ நடப்பதையா பாரதியார் கூறினார்?  இல்லை.  கண்ணை விற்றுச்  சித்திரம் வாங்கும் மனிதர்களையே அதிகம் பார்க்கிறேன். எதை வாங்க எதைக் கொடுக்கலாம்?  வரைமுறை உள்ளதா இல்லையா?  வாழ்வு இறக்கை  கட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. வாகனம் போல வாழ்க்கை ஓடட்டும். பேருந்திற்குள் நாம் உட்கார்ந்து இருக்கிறோமா அல்லது உள்ளேயே ஓடுகிறோமா? ஓடும் வண்டிக்குள் உட்கார்ந்து செய்யும் அமைதியான பயணம் போல் ஏன் வாழ்க்கைப் பயணம் இல்லை?  காலம் நிற்காமல் ஓடும். நம் உடம்பில், வாழ்க்கைச் சூழலில், உலகத்தில், மாற்றங்கள் ஏற்படும். ஆனால் மனது? அதை மட்டும் அப்படியே,பத்திரமாக நிச்சலனமாக ஏன் வைத்துக் கொள்ள முடியாது?

எதையும் தேங்காய் உடைப்பது போல் பேசியே பழக்கப் பட்ட எனக்கு பூடகமாக ரொம்ப நேரம் பேசுவது இயலாது. சொல்லி விடவா,சொல்ல வந்ததை? 'வெளியுலகம் பற்றி நீ என்ன அறிவாய்'  என்று,  மனைவியையும் ஒரு சக ஊழியர் போல மட்டுமே பார்க்கத் தெரிந்த , எங்கேயும் நிதானிக்கவே தெரியாது முழிக்கின்ற,  சற்றுப்  பாவமான  ஆண் நண்பர்கள்,  இன்று மனதில் உட்கார்ந்து மணி அடிக்கிறார்கள். ஓசை தாங்கவில்லை. அதுதான் எழுத்து. நடுத்தர வயது கடந்த பெண்கள்,  தீராது என்று சும்மா இருக்கலாம். குழந்தைகள், அப்பாவைப் பார்த்து, "இந்த மாமா யாரம்மா" என்று கேட்கவில்லை என்று திருப்தி பட்டுக் கொள்ளுங்கள். ஆமாம்,எதற்கு ஓட்டம்?சாப்பாட்டுக்கா, சமூகத்தில் மதிப்பு கிடைக்கும் எனவா, இல்லை சும்மா வங்கி கணக்கில் பணம் உள்ளது என்று பார்த்து மகிழவா,  அல்லது சமூகத்திற்கு ஏதோ செய்கிறோம் என்ற எண்ணமா, இல்லை எப்போதும் திருப்தி அடையாமல் பேயாட்டம் ஆடும் ஈகோவை திருப்தி படுத்தும் முயற்சியா,  எதற்கு ஓடுகிறோம் என்றாவது தெரியுமா உங்களுக்கு? யாரோ துரத்துவது போலல்லவா ஓடுகிறீர்கள்!  இளமையில் ஓடுவதாவது தேவலை. முதுமையில்? கடைசி வரை ஓடியாக வேண்டும் என்ற விதியுடன் பிறந்தவர்கள்,  இதில் அடங்க மாட்டார்கள். அவர்களுக்காக,அவர்கள் உடல் நலத்துக்காக, குடும்பங்களுக்காகப்  பிரார்த்திக்கலாம்.  விதி வசப் பட்டு ஓடலாம். ஆசையால் அலைக்கழிக்கப் பட்டு ஓடக்  கூடாதுதான்.

கண் விற்றுச்  சித்திரம் வாங்கத் தேவை என்ன?  அதற்குப்  பதில், அந்தச் சித்திரத்தைப் பார்க்கும் ஆசையைத் தியாகம் செய்யும்  மனோதிடம் வளர்த்துக் கொள்ளலாம். ஆனால்,  உலக ஆசைகள் வசப் பட்ட  மனதுக்கு,  அந்த மனபலம் இல்லை. சந்தேகம் கொண்ட மனம் அது. யோசிக்காது சித்திரம் வாங்கும். அதற்கு முட்டாள் தனமாய்க் கண்ணையே விலை பேசும். என்னுடன் பழகிக் கொண்டிருக்கும்,பழக்கம் இல்லாதிருக்கும் எல்லா ஆண்களுக்கும் சொல்கிறேன். தயவுபண்ணிக்  காது கொடுங்கள். முதுமையில் சித்திரங்கள் பார்ப்பது பேராசை.  கண் இருப்பது தேவை. குடும்பம் கண். அதன் சந்தோஷங்களைப்  பின் தள்ளி,  நீங்கள் அடையும் அதிகப் பணமும் பட்டமும் வெறும் அழியும் சித்திரங்கள். 

எவ்வளவு உண்மை. எளிமையாக எடுத்துக் கொள்ளலாமே? பிரபஞ்சத்தின் சிறு துளி நாம்.  பெரிய வருத்தங்கள் ,  இழப்புகள் என நாம்  நினைப்பவை எல்லாம் கூட, ஒரு குழந்தைக்கு பொம்மை உடைந்தால் ஏற்படும் இழப்பு போலத்தான்.  நகர்ந்து கொண்டே இருக்கும் மனிதன்,  வழியில் எதிர்கொள்ளும் நிகழ்வுகளில்,  எதற்கு எவ்வளவு முக்கியத்துவம் தரலாம்? ஒரு தொலைநோக்கு வேண்டாம்? நாம் எதையும் அறிய முடியாதுதான். மறுபடி மறுபடி நினைவுறுத்திக் கொள்வோம். எதிர்காலம் மறைபொருள்தான். ஆனால் எதிர்காலத்திலும் கதிரவன் கிழக்கிலேயே உதிப்பான். சரிதானே?  எண்பது வயதிலும் மனைவி அவள்தான். ஆனால், தொழில்முறை உறவுகள் முதுமையில் நிற்கும். அல்லது குறையும். நிதானப் படுங்கள் . சித்திரம் எழுத சுவர் வேண்டும். அதைக் காணக்  கண் வேண்டும். எவ்வளவு சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல,  கண்டும் காணாது  இருக்கும் ஆண்களைப்  பொறுத்துக்  கொண்டு நேசிக்கப்  பரந்த மனம் வேண்டும். ' இந்த எழுத்து என்ன சாதிக்கும்?'  என்ற தோல்வி மனப்பான்மை இருப்பினும்,  தொடரக்  கடவுள் எனக்கு அருள வேண்டும்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக