ஞாயிறு, 24 ஜூலை, 2016

காற்று

கண்ணால் பார்க்காத,ஆனால் நான் முழுமையாக நம்புகிற இரண்டு இருப்புகள் என்றால்,ஒன்று கடவுள்,மற்றது காற்று.காற்றை ஒரு போஸ்டில் அடைக்க முடியுமா?ஏன் முடியாது?ஒன்பது துவாரம் உள்ள எண் சாண் உடம்பில் சுற்றி வருகிறதே,தப்பிக்க வகை இருந்தும் தப்பிக்க முயல்வதில்லையே ,தன்  போலவே கண்ணிற்குப் புலப்படாத ஆண்டவனின் ஆணை வரும்வரை ஆர்பாட்டம் ஏதும்  இன்றி தன் இருப்பை இயல்பான ஒரு நிகழ்வாக்கி லேசாக இருக்கிறதே. போஸ்ட்டிற்குள் அடங்கி விடேன் என்பது அதன் நெருங்கின தோழியின் அன்புக் கட்டளை.அதற்குக் காது உண்டு.கேட்கும்.

பஞ்ச பூதங்களில் காற்றுடன் ஏனோ நெருக்கம்.தினம் காற்று சம்பந்தப் பட்ட பாட்டு ஒன்று மனக் கதவைத் தட்டும்.காலை கண் விழித்ததும் ஜன்னல் வழி தெரியும் ஆகாசம்,கால் பதிக்கும் நிலம்,உலகில் பெரும்பகுதியை ஆக்ரமித்துக் கொண்டு-- சிம்பிள் ஆகச் சொன்னால் காலைக் கடன்களில் தொடங்கி தேவை படும் நீர்,வயிற்றின் அக்னியைத் தணிக்க நாம் மூட்டும் அடுப்பு நெருப்பு என்று மற்ற நான்கு பூதங்களும் தங்களை வெளிப் படுத்திக் கொள்ளும் போது ஜீவனே அதுதான் என்ற காற்று மட்டும் எப்படி உள்ளது என யோசிக்கிறேன். நாமும் அப்படித்தான் இருத்தல் வேண்டும் அல்லவா? நம் presence மற்றவரால் உணரப் பட வேண்டுமே தவிர உணர்த்த வேண்டி இருப்பின் அந்த வாழ்வு ஒரு மாற்று குறைவே என்று எண்ணம் தோன்றியது.ஆனால் அப்படி உணர்த்த நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் முயற்சியையே வாழ்க்கை என்று அழைத்துக் கொண்டிருக்கிறோம்.ஓரளவு சிந்திக்கத் தெரிந்தது முதல் இதைத்தான் செய்யக் கற்பிக்கப் படுகிறோம்.செய்கிறோம் . தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள முயலாத நபர்கள் எப்போதும் அமைதி தொலைப்பதில்லை.ஏன் நான் மற்றவரை விட உயர்வு?உண்மையில் நான் உயர்வு என்றால் அது காற்றுப் போல் தானாகவல்லவோ வெளிப்பட வேண்டும்!

காற்று உலகத்தில் செய்யும் தொழில் போல் வாழ்வை சற்று யோசிப்போம்.நம் ஒவ்வொருவரின் திறமையும் அளவற்றது.அது நமக்களிக்கப் பட்ட கொடை .இறக்கை முளைத்தது போல் மனம் பறந்து விரியலாம்.என்னென்ன செய்ய இயலுமோ செய்யலாம்.ஆனால் தகுதியை உலகம்தான் நிர்ணயிக்க வேண்டும்.வேடிக்கையாக சொல்வதுண்டு.மனிதன் தன்  சம்மந்தப் பட்ட விஷயங்களுக்கு வக்கீலாகவும் மற்றவர் விஷயங்களுக்கு நீதிபதியாகவும் செயல்படுகிறான் என்று.ரொம்ப உண்மை .நம்மைப் பற்றி, சொல்லிக் கொள்வதெல்லாம் வக்கீல் தன்  கட்சிக்கு வாதாடுவது போலத்தானே? மேலும் மற்றவர் நன்றாய் இருப்பதை உலகம் பொறுப்பதில்லை என்றெல்லாம் கூறுகிறார்கள்.அந்தக் கூற்றுகள் முற்றிலும் உண்மை இல்லை.மனித மனத்தின் விசித்திரங்களில் ஒன்றுதான் திறமைசாலிகள் அதுவும் தன்னை விட திறமைசாலிகளைக் கண்டாலும் காணாதது போலிருப்பது.ஆனாலும் மேன்மையானவை வெளிப்பட மற்ற மனிதர்களின் குறுக்கீடுகள் பெரிய தடைக் கற்கள் இல்லை.

சிறு கதை.நாமறிந்த கதை.தெய்வப் புலவர் திருவள்ளுவர் திருக்குறளை மதுரைத் தமிழ்ச் சங்கம் முன்னர் கொண்டு சென்ற போது மற்ற புலவர்கள் அதைக் கண்டு பொறாமையுற்று எதிர்த்தார்களாம்.திருக்குறளையும் மற்ற புலவர்களின் புத்தகங்களையும் ஒரு தட்டில் ஏற்றியவுடன் திருக்குறள் தவிர மற்ற அனைத்தும் நீருக்குள் விழுந்துவிட்டனவாம்.என்ன அறிகிறோம்?உண்மையில் உயர்ந்த விஷயங்கள் தானே அங்கீகாரம் பெற்றே தீரும்.சரி,காற்று வேலையைத் தொடங்கி விட்டது பார்த்தீர்களா?ஒரு சுற்று சுற்றி விட்டது.

நான் சொல்லும் காற்று,தென்றல்.ப்ராணாயாமம் செய்யும் போது உள்ளும் வெளியும் போகும் காற்று.சுவாசத்தில் இருப்பது.வருடிப் போவது.சத்தம் இன்றி முத்தம் தருவது.சூறாவளியும் காற்றுதான்.அசுரனும் பகவத் சொரூபம் என்பது போல.சூறாவளி இருப்பை வெளியிடும் காற்று.வெளிப் படுத்திக் கொள்ளவே வாழ்பவர் சூறாவளி போன்றோர்.சூறாவளி காற்று அடையும் வரவேற்பைத்தான் அவர்கள் அடையலாம்.சூறாவளி கதவில் மோதும்.தென்றல் போல் வரவேற்பறை வாராது.காற்று சொல்லும் பாடங்கள் இன்னும் ஏராளம். லகுவாக இருத்தல்.ஆரவாரம் அற்று இருத்தல்.அடையாளம் காட்டும் ஆசைகள் அற்று இருத்தல்.தென்றல் உடல் தொடுவது போல் அன்பால் மனம் தொடுதல்.அதைப் பிரயத்தனங்கள் இன்றி இயல்பாய் செய்தல்.இருப்பை விட  இல்லாமையால் இன்னும் அதிகமாக உணரப் படுதல்,இவை முக்கியமானவை.யாராலும் அடக்க முடியாதிருத்தல்,அதாவது கட்டுப் பாடற்று சுதந்திரமாய் இருத்தல் என்பதை நான் முக்கியம் என்ற பிரிவில் அடக்கவில்லை.ரசிக்கத்தக்க என்ற பிரிவில் போட்டுக் கொள்கிறேன்.ஏனென்றால் நான் காற்றை ரசிக்கக் காரணமே அதன் கட்டுப்படாத தன்மைதானே!வேலைகள் அழைக்கின்றன.காற்றுப் போல் அவற்றில் கரைந்து போனால்தான் வாழ்வின் ரிதம் பாதிக்கப் படாது.மீண்டும் சீக்கிரம் சந்திப்போமா ?

ரஞ்ஜனி த்யாகு


MOTHER PROTECTS

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக