வியாழன், 26 ஜூலை, 2018

கேரட் அல்வாவும் தயிர் சாதமும்

கல்யாண விருந்தின் முதல் நாள் தடபுடலாய் கேரட் அல்வாவுடன் ஆரம்பிக்கும். கல்யாணத்தின் மறுநாள் வற்றக் குழம்பு தயிர் சாதத்துடன் விருந்து நிறைவு பெறும்.  முதல் நாள் நாவின் சுவை நரம்புகளை சுண்ட வைத்த கேரட் அல்வாவை  மூன்றாம் நாள் நினைத்தாலே சற்று குமட்டும். வீடு சென்று மோர் சாதம் சாப்பிட மாட்டோமா என்றிருக்கும். முதல் நாள் தயிர் சாதம் பக்கம் திரும்பத் தோன்றாது.அதான் தினமும் சாப்பிடறோமே என்று கமெண்ட்டும் செய்து கொண்டு வயிறு தரும் சிக்னலை அலட்சியம் செய்து மற்ற பதார்த்தங்களை உண்டு களிப்போம் . உற்று நோக்கின் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நீதி போதனைதான். கேரட் அல்வாவும் தயிர் சோறும் கூட.

அந்தந்த நொடி முழுமையாக வாழ அருளப்பட்டுள்ளது. அங்கலாய்ப்புகளுக்கு இடமில்லை. எப்போ அல்வா தரணும் எப்போ மோர் சாதம் போதும் என சமைப்பவருக்குத் தெரியும் என்றால், நம்மை நடத்தும் சக்திக்கும் தெரியும் எப்போ எதைத் தரவேண்டும் என. சமையல்காரரிடம் மெனு மாற்றுவது போல் மாற்றிக் கேட்க அவசியம் இல்லை. அல்வாவும் கேசரியும் அல்ப விஷயங்கள்.மாற்றி சொல்லலாம்.ஏதும் கெட்டுப் போகாது. நம் வாழ்வு அப்படியல்ல. நாம் நினைப்பதை விட சூக்ஷுமமானது. பெரியது. அல்வாவுக்கு பதில் பெயர் தெரியாத ஒன்றைக் கேட்டு அதன் சுவை கசப்பானால் என்ன செய்வது? சில நேரம் இறைவன் நாம் பேசுவதைக் காதில் வாங்கவில்லையோ என்று தோன்றும். அப்படி இல்லை. நம் பிரார்த்தனை ஒன்றுக்கு இறைவன் செவி கொடுக்கவில்லை எனில், நமக்கு இன்னும் உயர்வான ஒன்று கிடைப்பதற்காகவே,கொடுப்பதற்காகவே.

இந்த போஸ்ட்டிற்கு ஊமை கண்ட கனவு என்ற தலைப்பே யோசித்து வைத்திருந்தேன். மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத நிகழ்வுகள் எத்தனையோ !!! நேற்று கார்த்திக்கிடம் தலைப்பு சொன்ன போது," ஏன் ஊமை கனவை எழுதிக் காட்டலாமே " என்றான். சிரிப்பும் சிந்தனையும் ஒருங்கே வந்தது. மெல்லவும் விழுங்கவும் சிரமமானதை துப்பி விடலாமே என்று தோன்றியது. ஆனால் பேச இயலாதவர்களுக்கு பேச்சு என்பது மட்டுமல்ல பிரச்சினை.அவர்கள் எழுதிக் காட்டவும் விரும்பாதவர்கள். கரெக்டாக கல்யாண சாப்பாடு சாப்பிடுபவர்கள்.அவ்வப்போது இலையில் போடப் படுவதை அமைதியாக உண்பவர்கள். அவர்களுக்கு அல்வா பார்த்து சுவை நரம்புகள் துடிப்பதில்லை. தயிர் சாதத்துக்கு வயிறு ஏங்குவதும் இல்லை. We shall live the present. Life is a celebration.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

ஞாயிறு, 22 ஜூலை, 2018

Double Standards

ஆங்கிலத் தலைப்புகள் அதிகம் வருகின்றன.மாற்ற முயற்சிக்கிறேன்.Double Standards உடன் உள்ளவரைப் பார்ப்பது போல் ஆச்சரியம் எனக்கு ஏதும் இல்லை. அது ஒரு ஸ்வபாவம்.அப்பப்போ கண்ணை மூடித் திறப்பது போன்றதொரு நிலை. வேண்டியதை,தனக்கு சாதகமானதை பார்த்து மற்றவற்றில் இருந்து மனத்தால் உடலால் விலகிக் கொள்ளும் ஒரு நிலை. நாம் மற்றவரிடம் முகம் காட்டலாம்.ஆனால் அவர்கள் நம் கண் பார்த்துப் பேச வேண்டும்.நாம் குரல் உயர்த்தலாம்.பிறர் நிதானம் தவறலாகாது .

இடைவெளியின் பின் ஆன தொடரல் . எழுத்து ஒரு வடிகாலே . வேகமான எண்ண ஓட்டங்கள் வேறு நிகழ்வுகளால் திசை திருப்பப் பட்டால் வடிகால் தேவை அற்றதாய்ப் போய் விடுகிறது.ஆ  ங் எங்கே விட்டேன்? ஒரே நேரம் இரு வேறு நிலைகளில் இருக்கும் இருப்பு.இரட்டைக் குதிரையில் சவாரி மேற்கொள்ளும் சாமர்த்தியம். அதை சந்திக்கும் போது வியப்பு ஏற்படுகிறது. நான் கண்டிப்பாக ஒரு குதிரை மேல்தான் போகிறேனா, என்ற ஆராய்ச்சி. ஆம் என்றே நினைக்கிறேன்.ஏன் என்றால் எனக்கு பயம். விழுந்து விட்டால் என்ற பயம்.பயம் இல்லை என்றாலே இரட்டைக் குதிரை சவாரி சாத்தியம். ஒரு குதிரை தள்ளி விட்டால் இன்னொன்றில் தாவி ஏறிக் கொள்ளலாம்.

நம்மில் பலர் சில விஷயங்களை கடவுளிடம் விடுவோம்.சிலதை விட மாட்டோம். மற்றவர் கஷ்டம் பார்த்தால் கடவுள் பார்த்துக் கொண்டுள்ளார் என்போம். நாம் அதே சந்தர்ப்பங்கள் தாண்டும் சமயம் நாத்திகவாதிகளையும் விட அதிகமாய் இறைவனை மறப்போம். என்னை விட்டால் என் மனைவிக்கு யார் இருக்கா என்கிறோம்.உண்மையிலேயே வேறு ஆதரவு இல்லாத பெற்றோரைக் கடவுள் வசம் ஒப்படைப்போம். இந்த வயசில் கடவுளை மட்டும் நம்பு என்று க்ளாஸ் எடுப்போம். ஏன்,மனைவியிடம் இப்போதில் இருந்தே கடவுளை நம்பு,என் பெற்றோர் வயதில் இன்னும் பக்குவப்பட்டிருப்பாய் என்றும் கூறலாமே? மனிதன் போல இறைவனும் partial ஆ? ஏன் உன் பெற்றோர் வாழ்வை இறைவனும் உன் வாழ்வை நீயேயும் நடத்தணும்? இது ஓர் உதாரணமே. அவரவர் இயல்புப் படி,வளர்ப்பின்படி,அனுபவத்தின்படி, கர்மாவின் படி சாய்தல் எதை,யாரை நோக்கியும் ஏற்படும். அறுபது வயசிலும் அம்மா அப்பாவின் குழந்தையாகவே நடந்து கொண்டு, தன் குடும்பத்தை க்ருஷ்ணா பாத்துக்கோ என்பவரும் உண்டு.

இரட்டைக் குதிரை சவாரி கஷ்டம்தான்.இரண்டும் ஒரே மாதிரி ஓடி நம்மை டெஸ்டினேஷனில் சேர்ப்பதில்லை.அடைய வேண்டிய இடம் அடைய கடைசி கொஞ்சம் தூரமாவது ஒரு குதிரையை நம்பவே வேண்டும். என்னை தெளிவாக வெளிப் படுத்திக்க கொள்கிறேனா தெரியவில்லை.Double standards என்றும் இரட்டைக்குதிரை சவாரி என்றும் நான் சொல்வது பழகும் மனிதர்களுக்கும் இருக்கும் சூழ்நிலைகளுக்கும் தக்கவாறு மாறிக் கொண்டே உள்ள மனசைப் பற்றி,மனிதர்கள் பற்றி. நமக்கென்று ஒரு நிலைப்பாடு உள்ளது. வெளி உலகும் அதன் செயல்பாடுகளும் நம்மை மாற்றிக் கொண்டே இருக்க நாம் என்ன களிமண்ணா? எப்படி வேண்டுமானாலும் standards மாற்றிக் கொள்பவருடன் தொடர்பில் இருப்பது , இயல்பாக இருப்பது கஷ்டம். அந்த உணர்வு விலகல் ஏற்படுத்துகிறது. மனதளவில். உடலளவில் பூமியில் இருந்தாகணும். செவ்வாய் கிரஹம் போகவா முடியும்? இதெல்லாம் உட்கார்ந்து போஸ்ட் எழுதலாம்.இல்லாது வாய் திறந்தால் நாம்தான் வேற்று கிரகத்தினர் போல் நோக்கப் படுவோம்.

எளிமையாகச் சொன்னால்,எனக்கு பச்சை நிறம் பிடிக்குமா அதை எங்கு பார்த்தாலும் பிடிக்கும். இனிப்பு பிடிக்கும்,இசை பிடிக்கும்,ஓசை பிடிக்காது,உயர்ந்த பேச்சு பிடிக்காது, இவற்றுக்கெல்லாம் ஒரே அர்த்தம்தான் எனில் நம் அன்றாட செயல்பாடுகளுக்கு அதே மீட்டர்தானே? ஏன் நம் வசதிப்படி மாற்றி மாற்றி பேச வேண்டும்? அதை விட சும்மா இருக்கலாமே? சாப்பிடும் போது தொலைபேசி தொடமாட்டேன் என்றால் அது யார் அழைத்தாலும். டீ குடிக்க மாட்டேன் என்றால் யார் கொடுப்பினும். அமைதியாகத்தான் பேசுவேன் என்றால் எல்லாரிடமும். தாமதமாக ஓரிடம் போக மாட்டேன் என்றால் ஒரு நாளும் லேட் பண்ண மாட்டேன். என் வாழ்வின் priority என்று ஒன்று உண்டென்றால், அதுதான் மைய புள்ளி.அதை விட பெரிதொன்றைக் கண்டால் மாறிவிடலாமா? நாளை அதனினும் மேலாக ஒன்று தென்படும். அப்போது நாம் யார்? நம் weakness காரணமாய் Double standards கொண்டு வாழ்ந்து விட்டு, காலம் கடந்து சரி செய்ய இயலுமா?  ஏதேனும் ஒன்றையாவது முழுமையாக செய்த மனநிறைவு ஏற்படுமா? இந்த போஸ்ட்டுக்கு வேறென்னென்ன தலைப்பு கொடுக்கலாம்? இரட்டைக்குதிரை,களிமண்,இன்னும் பல. மாற்ற சோம்பலாக உள்ளது.So, Double standards ok தான். இனி ஆங்கிலத்தலைப்புகள் வேண்டாம் என்று ஒரு முடிவெடுக்கவா?

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

வெள்ளி, 13 ஜூலை, 2018

பூதக்கண்ணாடி

பூதக்கண்ணாடி , சிறிய பொருள்களை பெரிதாக்கிக் காட்டும் உபகரணம். தலைப்பு சிறிய நிகழ்வுகளை பெரிதாக்கும் இயல்புடைய மனிதர்கள் பற்றியது.  சிறிய நிகழ்வுகள் நல்லதோ,  அல்லாததோ , அவற்றை உள்ளபடி நோக்காமல்,  பெரிதுபடுத்திப் பார்ப்பதே வாழ்வின் அறியாமைக்கு வித்திடுகிறது. நல்லதெல்லாம் அந்த நொடி நல்லது. பின்னால் அவை கெடுதல் என்ற தலைப்பில் வாராது போனாலும், அதன் முக்கியத்துவம் குறைந்தே போகிறது. பெருமைகளையும், வெற்றிகளையும் எவ்வளவு நாள் கொண்டாட முடியும்?  அந்த நொடி தாண்டினால் அவை வெறும் நினைவுகளே. எத்தனையோ பெரியோர்,அறிஞர்கள், எல்லாம் நினைவாகி மட்டும் போய் விட்ட போது நமக்கும் அதுவே நடக்கும். அதனால்,  நல்ல விஷயங்கள்  கூட, பூதக்கண்ணாடி  வைத்துப் பார்க்கப் பட்டு,  அதிக கவனம் ஈர்க்க வேண்டியதில்லை.  இதுவே அப்படியெனில் ,வேண்டாததைப்  பெரிது படுத்துவதற்கு,  நாலுவரி எழுதி நேரத்தை  வீணாக்குவது கூடத்  தேவை இல்லை.

காலை சிற்றுண்டி நேரம் , தலைப்பு பிறக்கும் நேரம். சென்ற வாரம் தலையாய பிரச்சினையாய் விவாதிக்கப் பட்ட ஒன்று , இந்த வாரம் வலுவிழந்த புயல் சின்னம் போல், கணினியில் இருந்து தலை நிமிர்த்திப் பார்க்காத கணவன் முன் வைக்கப் பட்ட ஏடு படிந்த ஆறின காபி போல் , சென்ற தீபாவளிக்கு வாங்கி இந்த தீபாவளிக்கு கொளுத்த முயன்ற புஸ்வாணம் போல் ஆகிப் போய் இருந்தது. அப்போதுதான், நாம் ஏன் எல்லாவற்றையும் பூதக்கண்ணாடி அடியில் வைத்துப் பார்க்கிறோம் என்ற பேச்சு வந்தது.  கடலில் அலைகள் நிரந்தரம்.  புயல் அப்படி அல்ல. புயல் நேரம், 'அலை நிரம்பிய அதே கடல்தான் இது.  இன்று ஏதோ ஆகிவிட்டது'  என்று பேசாதிருக்க வேண்டும்.  புயல் நேரம், ' மீனவர் கடலில் செல்ல வேண்டாம்' என்று, குறிப்பிட்ட  எண் போட்ட கொடி ஏற்றுகிறார்கள். அதே போல்,  நாமும் பிரச்சினைகளை தள்ளி இருந்து பார்க்க முயற்சியாவது செய்வோம்.  கடலில் அலைகள் ஓய்வதில்லை. பிறவிப் பெரும் கடலிலும்தான். ஆழ்கடலில் ஆரவாரம் இல்லை.

பூதக்கண்ணாடி வழிப்  பார்வை சரியான முடிவுகள் எடுக்க உதவுவதில்லை. கண் கோளாறுகள் நம்மில் சிலருக்கு ஏற்படும்.  அதற்குத் தீர்வு  பூதக்கண்ணாடி இல்லை. மூக்குக்  கண்ணாடி.  மூக்குக் கண்ணாடியின் தேவை , அணிந்து கொள்ளும் நபருக்குத்தான்.  பார்க்கப்படும் பொருள் எதுவாகவும் இருக்கலாம்.  குழப்பம் ஏற்பட்டால், நமது மூக்குக்கண்ணாடியாக மனம் செயல்படலாம். நெருங்கின யாரேனும் செயல்படலாம். இவை எல்லாவற்றின்,எல்லோரின் மூலமும் இறைவன் அருள் செயல்படலாம்.  நல்லதற்கும் இதேதான்.  மற்றவரிடம் உள்ள நல்லதையும் இயல்பாகப் பார்த்தால் போதும். அதில் பெரிது பண்ண என்ன உள்ளது? பிரமிக்க என்ன உள்ளது?  நம்மிடம் இல்லாத ஒன்று வேறெங்கோ பார்ப்பதே பிரமிப்புக்குக்  காரணம்.  பிரமிப்பு ஒப்பிடச் சொல்லும்.சோர்வு தரும்.  வீண் நேர விரயம்.  நம்மிடம் உள்ளதாக நாம் நினைக்கும் நல்ல குணங்களையும் பெரிசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.  அந்த நினைப்பு கர்வம் தரும். தொட்டால்சுருங்கியாக்கும். சுருங்கக் கூறின், நல்ல விஷயமோ அல்லாத விஷயமோ, பூதக்கண்ணாடியைத் தவிர்த்து விடுவோம்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

வியாழன், 5 ஜூலை, 2018

நிர்வாணம்

வேறு ஏதாவது தலைப்பு கொடுக்க வேண்டுமோ என ஒரு நொடி யோசித்தேன்.அப்படிக் கொடுத்தால் இந்த போஸ்டின் நோக்கமே போய் விடும் போல் தோன்றுவதால் மனது முதலில் பிரசவித்த தலைப்புடனேயே போஸ்ட் வருகிறது.துணி போர்த்தாமல் இருப்பதை நிர்வாணம் என்கிறோம்.ஆன்மிகவாதிகள் சொல்லும் நிர்வாணம் எல்லாம் விட்ட நிலை.பிறப்பில் நிர்வாணம்.இறப்பிலும் நிர்வாணம்.இடைப்பட்ட காலம் துணி போர்த்திக் கொள்கிறோம்.நடுவில் வருவதெல்லாமே செயற்கைதான்.விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் யாரும் சட்டை தைப்பதில்லை.அவற்றுக்கு மனம் இல்லை.குழப்பம் இல்லை.எதையும்,உடம்பு உட்பட எதையும் மறைக்கத் தேவை இல்லை.நமக்கு எல்லாம் வேண்டும்.பிறந்த அன்றே குட்டி சட்டை போட்டு விடுவார்கள்.வளர வளர சட்டை மாறும்.பெரிதாகும்.குழந்தை சட்டை போல் ரெண்டு பக்கம் நேர் தையல் போட்டு மாட்டிக் கொள்ள இயலாது.கடினமான விஷயம்.தையல்காரர்தான் தைக்க முடியும். உடம்பைப் போர்த்திக் கொண்ட மனிதர்கள் மனதையும் போர்த்திக் கொள்வது இயல்பான ஒன்றாயிற்று.நிர்வாண மனிதனைப் பார்ப்பது அசிங்கம் என்பது போல் சட்டை இல்லா மனம் கொண்ட மனிதனும் இந்த உலகில் அதிசய பிறவியே.

தலைப்பு ஏன் பிறந்தது? எங்கள் வீட்டில் சமையலறையில் ஒரு பெஞ்ச்.அதன் மேல் பொருள்கள் வைப்பேன்.அது அழுக்காக வேண்டாம் என அதன் மேல் ஒரு துணி போர்த்தி வைப்பேன்.நேற்று துணியே அழுக்காகி விட்டதோ என அதை விலக்கி வைத்தேன். துணி போர்த்தாத பெஞ்ச் மிக அழகாக இருந்தது.துணிதான் போர்த்தி விட்டோமே என்று அடியில் துடைக்காமல் விட்ட அழுக்கு இன்றி பளிச் என இருந்தது.பாடமும் சொன்னது. உடம்புக்கு விதம் விதமாய் உடைகள் அணியும் மனித மனது மட்டும் என்ன? மனவிகாரங்களை வெளித்தோற்றங்கள் மறைத்துத்தான் விடுகின்றன. உண்மை.நேற்று வாக் போன போது குப்பைத் தொட்டியில் ஏதோ தேடித் கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து விடாமல் குரைத்துத் துரத்திய நாய் ஒன்று, பேண்ட் ஷர்ட் போட்டவர்கள் பின் வாலை ஆட்டிக் கொண்டே சென்றது.

போர்த்தாத மனங்கள் பார்க்க வேண்டும் போல் உள்ளது.போர்த்திக் கொள்ளும் வியாதி தாக்காமல் இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை உள்ளது.ஒரு டேபிள் கூட அடைசல் இல்லா விட்டால் அழகாகி விடுமானால் மிக முக்கிய இடமான மனத்தில் எண்ணங்களை,வேண்டாத எண்ணங்களை நிரப்பலாமா? வித விதமாய்த் துணி அணிந்து அழகு பாத்துக் கொள்ள கண்ணாடி உள்ளது.மனத்தை ஒரு கண்ணாடியில் பார்த்துக் கொண்டால் அதிர்ச்சி ஏற்படுமா? உடம்புக்கு பழைய துணியை விட பட்டுத் துணி அழகு என்றால் மனதிற்கும் அதே சட்டம் அல்லவா? துணி இல்லாது ஜனிக்கும் குழந்தையின் அழகு எண்ணமற்ற மனம். அது சாத்தியம் இல்லை. பட்டால் போர்த்துவோமே? காசா பணமா? உடல் போர்த்த துணி வாங்கும் மனிதர்களில் ஏழை செல்வந்தன் என்ற பாகுபாடுண்டு. மனம் போர்த்தும் மனிதனில் அது இல்லையே? இஷ்டப் பட்டால் பட்டு வாங்கலாம். யார் வேண்டுமானாலும் வாங்கலாம். இது முக்கியமான தேர்வல்லவோ?

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

திங்கள், 2 ஜூலை, 2018

போதும்

போதும் என்பதுதான் இன்று நான் அறிந்த நல்ல வார்த்தை.மூன்றெழுத்து வார்த்தைதான் ஆனாலும் சொல்வது எளிதல்ல.எப்போது போதும் சொல்லலாம்,எதற்கு போதும் சொல்லலாம்,சொல்லி விட்டு மாற்றலாமா,அல்லது சொன்னால் சொன்னதுதானா? தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.ஆனால் மன அமைதிக்கும் இந்த வார்த்தைக்கும் தொடர்புண்டு. எத்தனை முறை சொல்ல முடியுமோ அத்தனை முறை அமைதியை நெருங்குகிறோம்.

வழக்கம் போல் இடைவெளி.இன்று போதும் என்ற தலைப்பு வேண்டும் என மாறி இருக்கக் கூடுமோ என்றால் இல்லை. என் மொழி புரியாத உலகு.அது பற்றிக் கவலை இல்லை.மற்றவர்களுக்கு எதைப் புரிய வைக்க எனது பயணம்? என்னை யார் என்று புரிந்து கொள்ள அல்லவோ இப்பயணம்!சரியாக சிந்திப்பதே போதும்.சரியான சிந்தனை கொண்டவளாகத் தென்பட எதற்கு ஆசை? திமிர் இல்லாது இருந்தால் போதும். திமிர் அற்றவளாகக் காட்டிக் கொள்ள என்ன அவசியம்?   வெளி தோற்றங்கள் மட்டுமே புரிந்து கொள்ளப் படும் சாபம் பெற்ற பூமி. மௌனம் புரியா பூமி.ஒன்றும் ஒன்றும் இரண்டுதான் என்பதற்கு கூட ஆதாரம் காட்டச் சொல்லி கேட்கும் பூமி.மொத்தத்தில் கடவுளின் அடுத்த மூவ் என்ன என்று பொறுமை காக்க முடியா பூமி.

இதில் வந்து பிறந்த பிறகு காயப் படாமல் பாடம் கற்க இயலாது. காயங்கள் கவனம் கற்றுத் தர வேண்டும். ஆயாசம் போதும். ஆத்திரம் போதும். ஆரவாரங்கள் போதும். அநாவசிய ஆராய்ச்சிகள் போதும்.அதிகப் படியான எல்லாம் போதும்............

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS