வியாழன், 5 ஜூலை, 2018

நிர்வாணம்

வேறு ஏதாவது தலைப்பு கொடுக்க வேண்டுமோ என ஒரு நொடி யோசித்தேன்.அப்படிக் கொடுத்தால் இந்த போஸ்டின் நோக்கமே போய் விடும் போல் தோன்றுவதால் மனது முதலில் பிரசவித்த தலைப்புடனேயே போஸ்ட் வருகிறது.துணி போர்த்தாமல் இருப்பதை நிர்வாணம் என்கிறோம்.ஆன்மிகவாதிகள் சொல்லும் நிர்வாணம் எல்லாம் விட்ட நிலை.பிறப்பில் நிர்வாணம்.இறப்பிலும் நிர்வாணம்.இடைப்பட்ட காலம் துணி போர்த்திக் கொள்கிறோம்.நடுவில் வருவதெல்லாமே செயற்கைதான்.விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் யாரும் சட்டை தைப்பதில்லை.அவற்றுக்கு மனம் இல்லை.குழப்பம் இல்லை.எதையும்,உடம்பு உட்பட எதையும் மறைக்கத் தேவை இல்லை.நமக்கு எல்லாம் வேண்டும்.பிறந்த அன்றே குட்டி சட்டை போட்டு விடுவார்கள்.வளர வளர சட்டை மாறும்.பெரிதாகும்.குழந்தை சட்டை போல் ரெண்டு பக்கம் நேர் தையல் போட்டு மாட்டிக் கொள்ள இயலாது.கடினமான விஷயம்.தையல்காரர்தான் தைக்க முடியும். உடம்பைப் போர்த்திக் கொண்ட மனிதர்கள் மனதையும் போர்த்திக் கொள்வது இயல்பான ஒன்றாயிற்று.நிர்வாண மனிதனைப் பார்ப்பது அசிங்கம் என்பது போல் சட்டை இல்லா மனம் கொண்ட மனிதனும் இந்த உலகில் அதிசய பிறவியே.

தலைப்பு ஏன் பிறந்தது? எங்கள் வீட்டில் சமையலறையில் ஒரு பெஞ்ச்.அதன் மேல் பொருள்கள் வைப்பேன்.அது அழுக்காக வேண்டாம் என அதன் மேல் ஒரு துணி போர்த்தி வைப்பேன்.நேற்று துணியே அழுக்காகி விட்டதோ என அதை விலக்கி வைத்தேன். துணி போர்த்தாத பெஞ்ச் மிக அழகாக இருந்தது.துணிதான் போர்த்தி விட்டோமே என்று அடியில் துடைக்காமல் விட்ட அழுக்கு இன்றி பளிச் என இருந்தது.பாடமும் சொன்னது. உடம்புக்கு விதம் விதமாய் உடைகள் அணியும் மனித மனது மட்டும் என்ன? மனவிகாரங்களை வெளித்தோற்றங்கள் மறைத்துத்தான் விடுகின்றன. உண்மை.நேற்று வாக் போன போது குப்பைத் தொட்டியில் ஏதோ தேடித் கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து விடாமல் குரைத்துத் துரத்திய நாய் ஒன்று, பேண்ட் ஷர்ட் போட்டவர்கள் பின் வாலை ஆட்டிக் கொண்டே சென்றது.

போர்த்தாத மனங்கள் பார்க்க வேண்டும் போல் உள்ளது.போர்த்திக் கொள்ளும் வியாதி தாக்காமல் இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை உள்ளது.ஒரு டேபிள் கூட அடைசல் இல்லா விட்டால் அழகாகி விடுமானால் மிக முக்கிய இடமான மனத்தில் எண்ணங்களை,வேண்டாத எண்ணங்களை நிரப்பலாமா? வித விதமாய்த் துணி அணிந்து அழகு பாத்துக் கொள்ள கண்ணாடி உள்ளது.மனத்தை ஒரு கண்ணாடியில் பார்த்துக் கொண்டால் அதிர்ச்சி ஏற்படுமா? உடம்புக்கு பழைய துணியை விட பட்டுத் துணி அழகு என்றால் மனதிற்கும் அதே சட்டம் அல்லவா? துணி இல்லாது ஜனிக்கும் குழந்தையின் அழகு எண்ணமற்ற மனம். அது சாத்தியம் இல்லை. பட்டால் போர்த்துவோமே? காசா பணமா? உடல் போர்த்த துணி வாங்கும் மனிதர்களில் ஏழை செல்வந்தன் என்ற பாகுபாடுண்டு. மனம் போர்த்தும் மனிதனில் அது இல்லையே? இஷ்டப் பட்டால் பட்டு வாங்கலாம். யார் வேண்டுமானாலும் வாங்கலாம். இது முக்கியமான தேர்வல்லவோ?

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

1 கருத்து: