புதன், 18 பிப்ரவரி, 2015

ஒரு Five Star அனுபவம்

    ரு உறவினர் மகன் நிச்சயதார்த்தத்திற்காக என் கணவர் குழந்தைகளுடன் போன வாரம் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குப் போயிருந்தேன். அங்கே நாங்கள் செலவிட்ட இரண்டு மணி நேரம் எனக்குள் ஏற்படுத்திய சலனங்களைக் கட்டாயம் 'சினேகிதி' களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்...

    'இந்திர லோகமோ' என்று  எண்ண  வைக்கக்கூடிய அந்தப் பகட்டான அறையில் நுழைந்ததும் மதுக்கோப்பை போல் இருந்த கண்ணாடிக் கோப்பைகளில் நிறைத்து பழரசம் தரப்பட்டது... 'வெல்கம் ட்ரின்க்'!

ன் கணவருக்கு இந்த அனுபவம் புதிதல்ல, ஆபிஸ் மீட்டிங் என்று மாதம் ஒரு முறையேனும் இப்படி டின்னர் உண்டு. நானும் குழந்தைகளும் ஆளுக்கொரு கோப்பையை எடுத்துக் கொண்டு சாதாரணமாய் வீட்டில் ஒரு சர்பத் போட்டால் எப்படிக் குடிப்போமோ அப்படி அந்த ஜூசைக் குடித்துவிட்டு காலிக் கோப்பையை மேஜை மேல் வைத்து விட்டு சுற்றுமுற்றும் பார்த்தோம். யாரும் அதில் கால்வாசி கூடக் குடிக்கவில்லை என்று தெரிந்தது, எனக்கு எப்படியோ இருந்தது.வாயில் வைத்து ஒரு மிடறு விழுங்கிவிட்டு கோப்பையை கையில் பிடித்தபடி பேசிக்கொண்டிருந்தனர்."ஓ இது ஒரு ஸ்டைல்" எனப் புரிந்தது.மெதுவாகக் குடிக்கட்டும் பரவாயில்லை ஆனால் என் முதல் அதிர்ச்சி,டின்னர் தொடங்கும் வரை அப்படியே இருந்த கோப்பைகள் மேஜையில் வைக்கப் பட்டு பின்னர் அகற்றப்பட்டதுதான்.முப்பது பேர் கூடி இருப்போம்.30x 100 ml =3000ml =3L பழரசம் அப்படியே வீண்.
அழகான யூனிபார்மில் கோட் சூட் அணிந்த வெயிட்டர்கள்.அவர்களை வெளியில் பார்த்தால் ஒரு கம்பெனியின் உயர் மட்ட அதிகாரிகள் என்று கண்டிப்பாக எண்ணத்தோன்றும்.ஆனால் வந்திருந்த சில பெண்கள் அவர்களிடம் நடந்து கொண்ட முறைக்கு ,ஆடம்பர வர்கத்தின் ஒரு பிரதிநிதியாகக் கலந்து கொண்ட நான் தலை குனிகிறேன்.தட்டில் அவர்கள் கொண்டு வந்து நீட்டும் பண்டங்களை ,தலையைக் கூட நிமிர்த்திப் பாராமல்,ஏதோ நம் அடிமைகள் நமக்கு சேவகம் செய்கிறார்கள் என்பது போலவும் தாங்கள் அரச பரம்பரையினர் போலவும் எண்ணிக் கொண்டு சைகையால் மறுத்த ஆணவம்.
இதே பெண்களை மறுநாள் வீட்டில் போய்ப் பார்த்தால் அழுக்கு நைட்டியுடன் சமையலறையில் அல்லாடிக் கொண்டிருப்பார்கள்.எனக்கு இந்த முரண்பாட்டைப் பார்த்து விநோதமாயும் வேதனையாகவும் இருந்தது.சில ஆயிரம் செலவழித்துச் சாப்பிடுவதால் (அது கூட ஓசி சாப்பாடு)நம் தலையின் பின் ஒளி வட்டம்உள்ளதா? இல்லை நம் எச்சில் தட்டைவாங்கிச் செல்வதால் அவர்கள் இழிவானவர்களா?
இதற்கே மனஉளைச்சல் பட்டால் எப்படி என்று அடுத்துத் தொடங்கியது டின்னர்.ஏகப்பட்ட உணவு வகைகள் மிகமிக அழகாக அலங்கரித்து வைக்கப் பட்டிருந்தன.பஹ்பே முறை உணவு.அவரவர்கள் தட்டில் வேண்டியது (வேண்டாததையும் கூட)எடுத்துக் கொண்டு பேசிய படியே சாப்பிட-(கொறிக்க என்பது இன்னும் பொருத்தமாய் இருக்கும்) தொடங்கினார்கள்.பலர் ஸ்பூன்,போர்க்கைஆயுதமாய் வைத்துக் கொண்டு தோசையுடன்சண்டை போட்டு சாப்பிட்டனர்.சில உணவு வகைகளைக் கையால் தொட வேண்டுமே என்றோ என்னமோ யாரும் அவற்றின் கிட்டே கூடப் போகவில்லை.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்  போல் ஒரு அயிட்டம் சாப்பிட்ட தட்டில் இன்னொன்றை சாப்பிட மாட்டார்களாம்.தோசை சாப்பிட்ட தட்டை முன்னால் சொன்ன அதே அலட்சியத்துடன் வெயிட்டரிடம் நீட்டி விட்டு வேறு தட்டில் புலாவ் ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்கிறார்கள்.வீட்டில் இப்படித்தான் ஒரு வேளை உணவு சாப்பிட நாலு தட்டு எடுத்துக் கொள்வார்களா?
ஒரு இரண்டு நாள் செய்து பாருங்கள்.வேலை பார்க்கும் முனியம்மா சொல்லாமல் கொள்ளாமல் நின்று விடுவாள்என்று கத்தலாம் போல இருந்தது.அனைவர் தட்டிலும் மீந்த உணவு வகைகளை வைத்து பல ஏழைகளுக்கு ஒரு வேளை உணவளித்து விடலாம்.
இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே எத்தனை பேர் உள்ளார்கள்?இரண்டு வேளை உணவு கூடக் கிடைக்காது பட்டினியாக உறங்கச் செல்லும் குழந்தைகள் எத்தனை பேர்!பணம் உள்ளவர்கள் செலவழிக்கட்டும் .யார் வேண்டாம் என்றது?ஆனால் உணவை வீணாக்காமல் இருப்பது அவரவர் மனசாட்சியைப் பொறுத்ததல்லவா?
இதன் பெயர் நாகரீகமா?எப்படி வந்தது இந்தக் கலாச்சாரம்?பெரிய மாற்றங்கள் ஒரு நாளில் ஏற்படாது என்பது நமக்குத்தெரியும்.ஆனால் ஒவ்வொருவரும் நினைத்தால் ஏதோ சிறிய அளவிலாவது ஒரு மாற்றம் ஏற்படாதா என்று நினைத்துக் கொண்டே சற்றே கனத்த மனதுடன் வீடு வந்து சேர்ந்தோம்.

ரஞ்ஜனி த்யாகு 


Mother Protects 


 மஞ்சுளா ரமேஷின் சினேகிதி -ஜூன் 2014 இதழில் வெளிவந்த கட்டுரை

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

காதலர்தினம்

இன்று காதலர் தினம்.இப்பொழுது எல்லாருக்கும் ஒரு தினம் உள்ளது. 365 நாட்களில் மீதி ஏதேனும் நாள் இருந்தால் நாம் கூட ஒரு நாளை நம்முடையது என அறிவித்துக் கொள்ளலாம் போல.காதல் என்றால் அன்பு. எல்லா  உயிர்களிடத்தும் செலுத்தும் அன்பைக் கொண்டாடும் தினம் என்று நாம் பொருள் கொண்டால் நம் வயது  எழுபதுக்கு மேல் என்று இளைஞர்கள் பொருள் கொள்வார்கள். கல்யாணம் பண்ணிக்கொண்ட அல்லது பண்ணிக்கொள்ளப் போகிற துணையிடத்துக் கொண்ட அன்பைக் கொண்டாடும் தினம். எப்போதோ படித்த ஞாபகம். 'Those who wait for great occasions to demonstrate their tenderness don 't know how to love '. சில உறவுகள் (பெற்றோர்,சகோதரர்கள் இன்ன பிற )தானாக அமைந்தவை.நாம் தேர்ந்தெடுக்கும் உறவுகள் சில. அவற்றில் முதன்மையானது கணவன் ,மனைவி உறவு. மண  நாள் முதல் மரண நாள் வரை தொடரும் உறவுக்கு ஒரு நாளை ஒதுக்க முடியுமா? Is that not a life long celebration? ஆனால் எதிர் துருவங்களாய் இருப்பவர்களே மண வாழ்வில் இணைகிறார்கள். எதிர் துருவங்களுக்கிடையே ஏற்படும் ஈர்ப்பு போன்றதொரு உணர்ச்சி தோன்றித்தான் திருமணத்துக்கு ஒப்புக்கொள்கிறார்கள்.மோகம் ஆசை முப்பது to அறுபது நாள்களில் முடிந்து போக விட்டு விடும் போதுதான் கருத்து வேறுபாடுகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. பரஸ்பரம் நம்பிக்கையும் புரிதலும் கொண்ட தம்பதிகளுக்கு வாழ் நாள் பூர Honey moon period ஆகவே அமைகிறது.
கைப்பிடித்த கணவனின் காரியம் யாவிலும் கை கொடுப்பவளே நல்ல பெண்.மனைவியைத்தன்னில் பாதியாய் ஆத்மார்த்தமாய் உணர்ந்து ஆதரவாய் இருப்பவனே நல்ல ஆண்.சின்ன சச்சரவுகள் இல்லாது வீடுகளில்லை. அவை வாழ்வின் சுவையைக் கூட்டலாமே தவிர தினப்படி வாழ்வைப் போராட்டமாக்கி விடக்கூடாது,தாய்க்குப் பின் தாரம் என்றார்களே எதற்காக?பெண்ணுக்கு அவ்வளவு கனிவு வேண்டும். காலம் காலமாக ஆணை நாடிப் பெண் வருவதே மரபாகிப்போன சமூகத்தில் வசிக்கிறோம். ஆண் என்பவன் பாதுகாவலன். மனைவியை எந்த சூழ்நிலையிலும் விட்டுத்தராத.திண்மை உடையவனே நல்ல ஆண். பெண் தன்மை கொண்ட கோழைஆண்கள், ஆண் தன்மை கொண்ட அகம்பாவமான பெண்கள் வீட்டிற்குக் கேடு விளைவிப்போரே. ஒருவர் மேல் ஒருவர் கொண்ட காதலால் மனம் கசிந்து வாழ்வோர்க்கு 365 நாளும் காதலர் தினமே.
இது இனிய நாளாய் இருக்கட்டும்
Mother Protects 
 .
ரஞ்ஜனி த்யாகு 

வியாழன், 12 பிப்ரவரி, 2015

Identity

பொழுது போக்காக செய்யும் சில காரியங்கள் ஒரு தாக்கத்தை நமக்குள் ஏற்படுத்துவதுண்டு.அந்தவகையில் சேர்ந்ததுதான் நேற்றுப்பார்த்த 'How old are you ?'மலையாளத்திரைப்படம்.Of course subtitle உடன்தான் பார்த்தேன்.'Who decides the expiry of a woman 's dreams ?என்ற ஒரு மையக்கருத்தை சுற்றிப் பின்னப்பட்ட அழகான படைப்பு.நல்ல டைரக்டர்களுக்கெல்லாம்ஒரு salute செய்யத் தோன்றியது.கல்யாணத்துக்கப்புறம் சுய விருப்பத்துடன் தன் அடையாளத்தைத் தொலைத்து விட்டு அதை வேறு யாராவது மீட்டுத்தருவார்களா என்று தேடும் ஒரு பேதை தன்னை மீண்டும் தேடி வெளிக்கொணர்ந்த கதை.முக்கால்வாசிப் பெண்கள் இது போல அடையாளம் தொலைத்தவர்கள்தானோ?நான் கணிக்கும் சதவிஹிதம் வேண்டுமானால் தவறாக இருக்கலாம்.ஆனால் நான் பெண்ணாய் இருந்து சாதித்தது திருப்தி என்று எந்தப் பெண்ணும் கூறி  கேட்ட ஞாபகம் இல்லை.இதை எழுதும்  போதேஒரு dullness engulfs me .அலுவலகத்தில் வெற்றிகரமாய் இருப்பவர்களை 'அவளுக்கு புருஷன்,குழந்தைகள் பற்றி ஞாபகம் ஏது 'என்று ஏச வேண்டியது.வெளியில் சென்று வேலை பார்க்காத பெண்கள் வெட்டியாய் வீட்டில் இருப்பது போல்அவர்கள் பங்களிப்பை நிராகரிப்பது.இரண்டையும் நன்றாக செய்யும் பெண்களுக்கு அவர்களே எதிரி.பெண்களுக்கு rather பெண்மைக்கு ஒரு கம்பீரமும் உண்டு.ஒரு பேதைமையும் உண்டு.மிகத்திறமையான பெண்கள் கூட மன உளைச்சலுக்கு ஆளாவதன் காரணம் இந்த flickering mindset தான்.இழிந்த பிறவியரான பெண்கள் என பகவான் கீதையில் குறிப்பிடுவது இந்த ஊசலாடும் மனம் பற்றி  கூறவே தவிரபெண் பிறப்பைத் தாழ்த்திச் சொல்ல அல்ல.
பெண்கள் முதலில் தன்  பற்றி சரியான சுய மதிப்பீடு கொள்ள வேண்டும்.திரைப்படத்தில் கதாநாயகிக்கு அவளையே ஞாபகப்படுத்த ஒரு தோழி தேவைப்பட்டாள்.அது போல நிஜ வாழ்வில் நடக்குமா தெரியாது.மேலும் மனித மனத்துடைய கெட்ட குணங்களில் ஒன்று யாரும் தன்னை விடத் திறமைசாலியான ஒருவரை அடையாளம் காண விரும்புவதில்லை.பிறகுதானே அவர்களை உயர்த்த உதவுவதெல்லாம்.தீதும் நன்றும் பிறர் தர வாரா.அமைதியாக நேரம் எடுத்துக்கொண்டு சிந்தித்தால் we will reinvent ourselves.
In a lighter tone let me add something .முப்பது வயசைக் கடந்த பெண்கள் முதலில் ஒருவரை ஒருவர் பேர் சொல்லிக் கூப்பிட்டுக்கொள்ளுங்கள்.சும்மா Mrs so and so இவனோட அம்மா அவளோட அம்மா என்று நீளமாய்க் கூப்பிட்டுக்கொண்டிராமல்.கூப்பிடத்தானே நம் பெற்றோர் பெயர் வைத்தார்கள்?ஆண்கள் எவ்வளவு அழகாக சார் சொல்லிக்கொள்கிறார்கள்?தன்னை அக்கா என்று கூப்பிடுபவர் தன் வயதொத்த பெண்ணை மாமி என்றழைத்தால் படும் அல்ப சந்தோஷங்களைத் தியாகம் செய்வதில் இருந்து பெண்கள் ஒவ்வொரு ஸ்டெப்பாய்முன்னேறத் தொடங்குவோம்.தொடங்குங்கள் என்று சொல்லி திட்டும் கர்வி என்ற பெயரும் ஏன் வாங்கிக்கொள்ளப் போகிறேன்?
Mother Protects 

ரஞ்ஜனி த்யாகு 

பின் குறிப்பு :இந்த போஸ்ட் 36 வயதினிலே என்று இப்போது திரை அரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படத்தின் மூலமான மலையாளப் படம் பார்த்து விட்டு எழுதியது.இப்போது முகநூலில் பகிர்வது பொருத்தமாக இருக்கும் என்பதால் பகிந்து கொள்கிறேன்.  

புதன், 11 பிப்ரவரி, 2015

அனுமதிக்கப்பட்ட 'டேட்டிங் '

 திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது. அவ்வாறு  நிச்சயிக்கப்பட்ட திருமணம் பூமியில் நடந்தேறி, ஒரு ஆயுள் பந்தமாக மாறி, பிரமாதமாக வாழ்ந்த காலம் ஒன்று இருந்தது. இப்போது நிறைய காதல் கல்யாணங்களும் நடக்கின்றன. காதலித்து மணம் புரிந்து மிக நல்ல முறையில் வாழ்ந்து காட்டி, திருமண பந்தத்தின் புனிதத்தை நிலை நாட்டுபவர்களும் பலர் உள்ளனர். ஆனால் சமீப காலமாய் ஒரு இரண்டும் கெட்டான் நிலை, (போக்கு) ஏற்பட்டு உள்ளது. அதையே 'அனுமதி வழங்கப்பட்ட டேட்டிங்' என்று அழைக்கத் தோன்றுகிறது.

திருமண வலைத் தளங்களில் வரன் வேண்டி பதிவு செய்யும் பெற்றோர், மகன் அல்லது மகளுடன் சேர்ந்து அந்த வலை தளங்களை அலசி, தங்களுக்கு  விருப்பமான வரனைத் தேர்வு செய்து, தங்கள் குழந்தைகளை அந்த வரனுடன் பேசச் சொல்கிறார்கள்.

பையனை  மட்டும் கலந்து பேசி, பெண்ணின் விருப்பத்தையே கேளாது திருமணங்களை பெரியவர்கள் முன்னின்று நடத்திய காலம் இருந்தது.

பின்னர் எண்பதுகளில், பெற்றோர் ஒருவருக்கொருவர் பேசி நம் குழந்தைக்கு இந்தப் பெண்ணோ அல்லது பையனோ சரியான துணை என முடிவு செய்து, பிறகு சம்பிரதாய பெண் பார்க்கும் படலம் நடக்கும், அதில் ஒரு சில நிமிடங்கள் பெண்ணும் பையனும் பேசிக் கொள்வார்கள். அவர்கள் விருப்பத்திற்கு மதிப்பளித்து திருமணம் உறுதி செய்யப்பட்டது. ஒரு சில நிமிட சம்பாஷணையில், பெரிதாக எதுவும் தெரிந்து கொள்ள இயலாது என்றாலும், அனுபவம்மிக்க, அக்கரைமிக்க பெற்றோர் கணிப்பு அநேகமாக சரியாய் இருந்து அத்தகைய திருமணங்கள் மிகவும் வெற்றிகரமாகவே அமைந்தன.

ஆனால்  இப்போது நடைமுறை என்ன? பெண்ணும் பையனும் பெற்றோர் வழங்கிய லைசென்சுடன் ஓயாது ஒரு நாளின் பாதி நேரம் முகநூல் (Facebook) மூலமும், கைபேசி மூலமும் தொடர்பிலேயே இருக்கிறார்கள். இந்தப் பேச்சுகளில் இனிமை வழிவதில் வியப்பென்ன? தங்களுடய இன்னொரு முகத்தை ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்வதே இல்லை எனலாம்.

'வளவள' என்று பேசி, சேர்ந்து புகைப்படம் எடுத்து முகநூலில் அப்லோட் செய்து அதற்கு எத்தனை லைக்ஸ் வருகிறது என்று எண்ணி, சகஜமாகத் தொட்டுப்பேசி என்று இவையெல்லாம் திருமணத்திற்கு முன்பே நடந்து விடுகிறது. எதற்கு இவ்வளவு நெருக்கம்? கல்யாணத்திற்குப்பின் நடக்கும், முதல் ஸ்பரிசம், முதல் முத்தம், சேர்ந்து உண்ணும் முதல் விருந்து, முதல் இரவு, இதிலெல்லாம் இவர்களுக்கு என்ன புதுமை இருக்கும்? தானாக வரும் காதலிலாவது, பெற்றோர் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்ற  பயம் மனதில் நெருஞ்சி முள் போல உறுத்திக் கொண்டிருக்கும். ஆனால் இந்தத் தனிப் பிரிவினர் விஷயத்தில் எல்லாம் பெற்றோருக்குத் தெரிந்தல்லவா நடக்கின்றது? இனிமையான - திருமணத்திற்குப் பின் வாழ வேண்டிய தருணங்களை முன்னால் வாழ்ந்து விட்டு, பின் என்ன நடக்கிறது? வாழ்வின் நிதர்சனம் முகத்தில் அறைகிறது. ஒரு வேலையும் பழகாது அம்மாவை அதிகாரம் செய்து வேலைக்குப்போய் வருவதே பெரிய விஷயம் என நினைத்த பெண்கள் இரட்டை பாரம் சுமக்க ஆரம்பிக்கும் போது கணவனிடம் கோபம் வருகிறது, மாமியார் நாத்தனாரைக்  குறை கூற  ஆரம்பிக்கிறார்கள், கசப்பு வருகிறது.

காத்திருப்பது சுகம், அதுவே ஆழமான பந்தத்தின் அடையாளம், தொடக்கம். நாலு மாதத்தில் நாற்பது தடவை சந்தித்தால் புளித்துப் போகும். அதிக நெருக்கம் சங்கடங்களில் கொண்டு விடும்.

திருமணத்திற்கு முன் விலகி இருந்து பின் நெருங்குவதே முறை. ஆனால் தலைகீழாக, முன்னால் நெருங்கி பின்னால் மனதளவிலாவது விலகிச் சென்று விடும் குழந்தைகளின் போக்கிற்கு, பெற்றோரே காரணம். பெற்றோர் ஏன் ஒரு கோடு போடக் கூடாது?!

இது தவிரவும் வேறு ஓர் ஆபத்தும் உள்ளது. நிச்சயதார்த்தம் ஆன பிறகு சில திருமணங்கள் நின்று விடுகின்றன, ஏதோ காரணங்களால். அப்போது இவர்கள் எடுத்த படங்கள், பழகியது, பேஸ்புக்கில் போட்டு ஊரறிய வைத்தது இவையெல்லாம் என்னாகும்?

இது ஒரு ஆபத்தான போக்காகவே உள்ளது. இளம் பெண்களும், பெற்றோரும் யோசிப்பது நல்லது.

Mother Protects 

ரஞ்ஜனி த்யாகு  

Appeared in மஞ்சுளா ரமேஷின் சினேகிதி, அக்டோபர் 2014

சகிப்புத்தன்மை

உங்கள் வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு பள்ளித்தோழிகள் எங்க அம்மா அப்பா அண்ணா நான் என்று பதிலளிப்பார்கள். அப்போ தாத்தா பாட்டி அத்தை எல்லாம் உனக்குக் கிடையாதா என்று கேட்ட ஞாபகங்கள் இன்னும் இருக்கின்றன. இதை ஏதோ எழுத வேண்டும் என்று சொல்லவில்லை. பாட்டியும் தாத்தாவும் இல்லாத ஒரு வீடு இருக்கலாம் என்று கற்பனை செய்யக்கூட அப்போது முடியவில்லை.நான் கூறும் காலம் 1967-1984. வீட்டுடைய தூண்கள் அல்லவா அவர்கள்? ஆனால் இப்போது முதல் வரிக்கேள்வியை ஒரு குழந்தை தோழியிடம் கேட்டால் அது கேள்வி கேட்ட குழந்தையை ஏற இறங்கப் பார்த்து விட்டு என்ன பதில் கூறும் தெரியுமா? இது கூடத்தெரியாதா?நான் அம்மா அப்பாதான். இப்போது கேள்வி கேட்கும் குழந்தையின் turn . அப்போ உங்க பாட்டி தாத்தா? Now the other child. அவங்க, அவங்கவீட்டுல இருக்காங்க. கூட்டுக் குடும்பங்கள் சுத்தமாக மறைந்து விட்டஇந்த நிலைமைக்கு tolerance கொஞ்சமும் அற்றுப்போன நாம்தான் காரணம்.

ஈகோவைத் தூக்கி எறியத்ராணியற்ற அனைவரும். வீட்டில் அடி எடுத்து வைத்த மறு நாளே மாமியார் VRS வாங்கி விட வேண்டும் அதுவும் வீட்டு வேலைகளில் இருந்தல்ல. தன் உரிமைகளிலிருந்து மட்டும். நேற்று வரை அவர்கள் பையனாய் இருந்தவன் தாலி கட்டி விட்டதனால் இரண்டே நிமிஷத்தில் முழுதாய் வேறு ஒருத்திக்கு சொந்தமாவது ரசாயன மாற்றம் போல நிகழ முடியுமா என்ன? இது வாழ்க்கை அல்லவா?

இனி மருமகள் பக்கப்பார்வை. மனதிலிருந்து சொல்கிறேன்.பெரியவர்கள் very rigid. அவர்களால் நிறுத்த முடியாத விஷயம் பழம் பெருமை. அதை கேட்க மகனுக்கே மனசும் நேரமும் இல்லை என்றால் மருமகளுக்கு எங்கிருந்து வரும்? உங்கள் ஆட்சிதான் இத்தனை நாள் நடந்து விட்டதே? ஒரு ஆட்சி மாற்றம் போல நினைத்துக்கொண்டுஏன் வேடிக்கை பார்க்க கூடாது? அதைக்கூடத்தாங்க முடியாது அல்லவோ தனியாய் இருக்க ஆசைப்படுகிறீர்கள்? அல்லது வீட்டிற்குள்ளேயே தீவு போல தனிமைப்படுத்தி கொள்கிறீர்கள்? சில வீடுகளில் மகனும் மருமகளும் தங்கள் ரூம் போய் கதவைத் தாளிட்டுக்கொள்வதும் உண்டு. Grumble பண்ணாது தனியாய் இருப்பதையாவது மன்னிக்கலாம்.தானே தேர்ந்தெடுத்த ஒன்றைப் பற்றி ஒரு தடவை புலம்பினாலும் தப்புதான். துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு.
மனம் ஒரு குரங்கு என்றுதானே கூறுவோம். அது மந்திரச்சாவி என்கிறார் சுகி சிவம்.மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம் அன்றோ? சேர்ந்திருக்க பொன் போன்ற ஒரு மனம் வேண்டும். அது இப்போது அரிய பொருள். நம் பிள்ளைகள் அறியாப்பொருளும் கூட ".என்மாமியார்  
 மிக நல்லவர்கள்தான் ஆனால் ஒரு space வேண்டும் என்று தனியாய் உள்ளார்கள்" என்று சொல்லும் மருமகள்களையும், "மருமகள் தங்கம் அவள் சூழ்நிலை அப்படி" என்று உதட்டளவில் சொல்லும் மாமியார்களையும் உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசுவோர் என்றுதான் என்னால் நினைக்க முடியும். 0 tolerance ன் result தான் தனிக்குடித்தனங்கள்.

Mother  protects 

ரஞ்ஜனி த்யாகு  

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

நினைவலைகள்

கண் மூடித்திறக்கும் முன் நிகழும் நிகழ்வுகள் போல காலம்தான் எவ்வளவு வேகமாய் ஓடி விட்டது? நின்று கடந்த காலங்களை அசை போட நேரமும் இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஆனால் பெருங்காய டப்பாவில் அது தீர்ந்த பின்னும் ஒரு மணம் இருக்குமே அது போல வாழ்வின் சில வருடங்கள் மனதோரம் மணம் பரப்பிக்கொண்டே இருப்பதாய்த் தோன்றுகிறது. அது என்னைப்பொறுத்தவரை பி.எஸ்.ஜி. டெக்கில் கழித்த ஐந்து வருடங்கள்தான். கல்லூரி என்பது என்ஜினியரிங் கற்க மட்டும் இல்லை. வாழ்க்கைக்கல்வி கற்கவும்தான். இன்னும் சொல்லப்போனால் சங்கரின் நண்பன் பட ஸ்ரீகாந்த் போல பலர் முக்கியமாகப்பெண்கள் மதிப்பெண்கள் அதிகம் பெற்றதால் உள்ளே வந்தவர்கள்தான் என்று கூறுவேன்.  இப்போது நல்ல பொசிஷனில் இருக்கும் என் தோழிகள் இதை மறுக்கக்கூடும்.

எத்தனை அற்புதமான ஆசிரியர்கள். எனக்கு fluid mechanics புரியாதது சீதாராமன் சார் தப்பா என்ன? And friends. எத்தனை வித்தியாசமான குணாதிசயங்களுடன் நண்பர்கள். அவர்கள் ஒவ்வொருவர் மூலமும் ஒரு பாடம் பெற்றதாய் கடந்த 25 வருடங்களில் உணர்ந்திருக்கிறேன். என் மகன் ராகவனுக்கு ஆட்டிசம் பாதிக்கப்பட்டிருப்பதாய்த் தெரிந்த பின் கடந்து சென்ற நாட்களில் புடம் போடப்பட்டுவிட்டாற் போலத் தோன்றுகிறது.இருபதுகள் மிக இளம் வயதுதானே? அந்த வயதிலும் ஒரு அதீத maturity காட்டிஎன்னிடம் unconditional அன்பு செலுத்தி  தோழமை பாராட்டிய என் சில இனிய தோழர்களே நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? பெயர்கள் குறிப்பிட்டால் பட்டியல் நீளும். Disciplined Life என்ன என்பதை PSG Tech அன்றி வேறு எங்கு கற்றிருக்க முடியும்? ஒருவரை அவர் இயல்புப்படியே ஏற்றுக்கொள்ளுதல் என்ற அரிய குணத்தை என் இள வயதுத்தோழர்களிடம் பார்த்தாற்  போல் பல பெரியவர்களிடம் கூடக்காணாமல் ஆச்சரியம் அடைந்திருக்கிறேன்.

நினைவுகள் என்றாலே ஒரு வருத்தமான tone வந்து விடுகிறதல்லவா? அது எதற்கு? நமக்கு நடந்த நல்ல விஷயங்களுக்காக சந்தோஷம் அல்லவா  பட வேண்டும்? ஆனால் நம் மகள் பெரிய எஞ்சினியர் ஆக வேண்டும். Practise ம் பண்ண வேண்டும் என்று மனம் பூர ஆசைகளுடன் எண்ணிக்கொண்டு வந்து கல்லூரியில் சேர்த்த என் பெற்றோரை ஏமாற்றி விட்ட எண்ணம் மட்டும் ஏனோ பல வருடங்கள் கடந்தும் அகல மறுக்கிறது. பெண் கல்வி பற்றியஎன் கருத்து வேறு. நான் என் படிப்பால் சம்பாதிக்காதது உண்மை. ஆனால் வாழ்வை மிகவும் நேர்மறையாய் நோக்க கற்றுத்தந்தது அந்தக் கல்விதான். பெண் குழந்தைகள் யோசித்து குடும்பத்தயும் profession ஐ யும் balance செய்ய முடிந்த courses தேர்வு செய்ய வேண்டும். இப்போது அதிகரித்து வரும் குடும்பப்பிளவுகளுக்கு இரட்டைக்குதிரையில் சவாரி மேற்கொள்ள முடியாத பெண்களே காரணம். இந்த வாரம் குங்குமம் பத்தரிகையில் செந்தில் குமார் எழுதி உள்ளார். வாழ்க்கை நாம் விரும்புவது விரும்பாதது இரண்டையும்தான் தந்து செல்கிறது என்று. வாழ்க்கையும் எதிர் காலமும் நாமறியா மர்மம் எனும் போது நிகழ் காலத்தின் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாகவும் முழுமையாகவும் வாழ்வதுதான் சரி. இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நினைத்துக்கொண்டு நாளை எளிமையாக இயல்பாக ஏதேனும் பேசுவோம்.
    
                                                                  Mother Protects



ரஞ்ஜனி த்யாகு

மௌனம்

வாழ்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுமே நேரடியாகவோ மறைமுகமாகவோ நமக்கு ஒரு பாடம் புகட்டவே வருகிறது . திருமணம்,  முதல் குழந்தை பிறப்பு ஆகியவை ஒரு முறை நிகழ்வுகளாய் முக்கியத்துவம் பெற்று விடுகின்றன. சிலருடைய வாழ்வில் அந்த நாட்கள் வருடத்தின் பண்டிகை நாட்களாயும் அமைந்து விடும்போது உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஒரு தீபாவளி திருநாளில்தான் என் முதல் குழந்தை ராகவன் பிறந்தான். அவன் ஆட்டிசம் என்ற பாதிப்பால் 'மௌனமாக' இருப்பவன்.

பண்டிகைகள் பட்சணம் சாப்பிடவும் புதுத்துணிமணிகளில் பணத்தை வாரி இறைக்கவும் மட்டும் வருவதில்லை. ஒவ்வொரு பண்டிகைத் திருநாளும் ஒரு உள்முகப் பயணத்தின் அவசியத்தை நினைவூட்டவே வருகிறது. தசரா என உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால், 'கடவுள் சக்தி, தீய சக்திகளை அழித்து நல்லதை நிலைநாட்டும் நாள்' என முதல் வகுப்பு குழந்தைகளுக்கே கற்றுத் தந்து விடுகிறார்கள்.

உலகில் நன்மையும், தீமையும் உள்ளது போல் நம் ஒவ்வொருவரிடமும் இரண்டும்  கலந்தே உள்ளன. நம்மிடம் உள்ள ஏதேனும் ஒரு தீய குணத்தை விலக்கி ஒரு நல்ல குணத்தை வளர்க்க எந்த நாளுமே உகந்த நாள்தான் என்றாலும் ஒரு டார்கெட் (Target ) போல விசேஷ நாட்களை எடுத்துக் கொள்ளலாம்.

இவை எல்லாம் நம் மனதிற்கு ஒரு உத்வேகத்தை, செய்ய வேண்டும்  என்ற ஆர்வத்தை ஏற்படுத்தத்தான். இந்த வருடம்  தீபாவளி அன்று "போன தீபாவளியின் போது  எப்படி இருந்த நான், இப்படி ஆகிட்டேன்" என்று நமக்கு நாமே ஒரு 'ஷொட்டு'  கொடுத்துக் கொள்ளலாம்.

இந்த வருடம் எனக்குத் தோன்றியது இன்னும் அமைதியாய், மௌனமாக இருக்கலாமே என்பதுதான். எங்கள் மகனுக்குக் கடவுளால் வரமாய் வழங்கப்பட்ட மௌனம், பொதுவாக அனைவருக்குமே எவ்வளவு நன்மை பயக்கக் கூடியது என்று சமீபகாலமாய் மனது யோசிக்கிறது. வாய் ஓயாமல் மனதில் நினைப்பதை எல்லாம் பேசிக் கொண்டிருப்பதில் என்ன பயன்?



"ஒரு பத்து நிமிடம் பயனுள்ள விதத்தில் பேச, பத்து நாட்கள் மௌனத்தைக் கடை பிடிக்க வேண்டும்"என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை. இந்த மகாவாக்கியத்தின் உண்மையை உணரத்தான் முடிகிறது. சொற்களில் வடிப்பது சாத்தியம் இல்லை. ஒரு நாளில் நாம் பேசும் பேச்சில் எவ்வளவு சதவீதம் உண்மை உள்ளது? அவசியமானவற்றை மட்டும்தான் பேசுகிறோமா என்றால் 'இல்லை' என்பதே நம்மில் பலரின் பதிலாய் இருக்கும்.

'ரகசியங்களில் நான் மௌனம்', என்கிறார் கீதையில் பகவான். 'கட்டுப்படுத்தப்பட்ட பேச்சு முழு  மௌனத்தை விடவும் சிறந்தது' என்பதும் அன்னையின் வாக்கே. "மௌனமாக இருக்கும் திறனில் பெரிய வலிமை உள்ளது. ஒருவர் என்ன செய்கிறார் அல்லது என்ன செய்யவில்லை என்பது பற்றி வெட்டிப் பேச்சுப் பேசுவது தவறு. அத்தகைய வெட்டிப் பேச்சுக்குக் காது கொடுப்பதும் தவறு . அது உண்மையா என அறிய முயல்வதும் தவறு. எல்லாரிடமும் குறைகள் உள்ளன. அவற்றைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பது அவற்றைப் போக்க உதவாது" என்பன எல்லாம் ஸ்ரீ அரவிந்த அன்னையின் அருளுரைகள் தாம்.

நம் மனதை சற்றே உயர்நிலைக்குக் கொண்டு சென்று யோசித்தால் இவை அனைத்தையும் உணரலாம். ஆனால் சாதாரணமாய் நினைத்துப் பார்த்தாலும் பேச்சை குறைப்பது நம் ஆற்றலை வெகுவாக சேமிக்க உதவும். பல வேண்டாத பிரச்சனைகளை விலக்கும். அடுத்த தீபாவளிக்காவது ஞானிகள் போல் மௌனியாய் இருக்கும் என் மகன் சற்றே அக்ஞாநியாகி மளமளவென்று பேசி, நான் கொஞ்சம் ஞானம் பெற்று இன்னும் அமைதியாக இருக்கக் கற்றுக் கொண்டால்  எவ்வளவு நன்றாக  இருக்கும்!

Mother Protects

ரஞ்ஜனி த்யாகு

Appeared in மஞ்சுளா ரமேஷின் சினேகிதி, அக்டோபர் 2014

திங்கள், 2 பிப்ரவரி, 2015

கொஞ்சம் பேசலாமா

 Mother Protects

அலைகடலில் நில்லாது தொடரும் அலைகள் போல் மனதில் எண்ணங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. அவற்றை சில சமயம் மனதுக்குள்ளேயே வைத்திருக்கவும் சில சமயம் நம் அலைவரிசையில் (wavelength)  உள்ளவர்களிடம் பகிர்ந்து பண்ணிக்கொள்ளவும் தோன்றுகிறது. ஆனால் நினைத்ததை எழுத்தில் வடிக்கும் பொழுது நாம் படித்த, நம்மை மிகவும் பாதித்த (நேர்மறையான பாதிப்பைத்தான் சொல்கிறேன்.) சில பெரிய எழுத்தாளர்களின் பாணியையோ கருத்துகளையோ  அறியாமல் பின்பற்றுவது  தவிர்க்க முடியாததாகிறது. யாருமே சொல்லாத ஒரு கருத்தைத்தான் சொல்ல வேண்டும் என்றால் அது இயலாத காரியம். நாம் படித்த, கேட்ட பல செய்திகள் நம் நினைவு மடிப்புகளில் இருந்தே தீரும்.என் ப்ரிய எழுத்தாளர் யார் என நீங்கள் கண்டுபிடித்தால், சாமர்த்தியமாக எழுதுவதில் நான் தோற்றுவிட்டேன் என்று கொள்ளலாம். பேப்பரையும் பேனாவையும் வைத்துகொண்டு பால்கனியில் உட்காந்து எழுதுவதுதான் எனக்கு இன்னும் சவுகரியமாக உள்ளது. 1970 க்கு முன் பிறந்த எல்லாருக்கும் அப்படித்தானா தெரியவில்லை. ஆனால் என்னதான் பழைய பெருமையெல்லாம் பேசினாலும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்குத் தலைவணங்கியே ஆக வேண்டும். அம்மாவிடம் இருந்து வரும் நீலவண்ண இன்லண்ட் லெட்டருக்காக அவசரம் அவசரமாக மதியஉணவு  சாப்பிட்டு விட்டு வார்டன் அறைக்கு  ஓடி கையில் கடிதத்துடன்  திரும்புவது ஏதோ பெரிய வெற்றி பெற்ற மாதிரியல்லவா இருந்தது! கடிதம்  வராமல் இருந்தால் எத்தனை எண்ணங்கள் ஓடும் மனதில்? அந்த பரபரப்புகளையெல்லாம் தூக்கி போட்டு விட்டதே தொழில்நுட்பம்? ஆனால், எது நினைத்தாலும் உடனே நடந்து விட வேண்டும் என்ற இளையதலைமுறையினரின்  பொறுமயின்மைக்கும் காரணமாகி  விட்டது.  கணினியும், தொலைக்காட்சிப் பெட்டியும்,கைபேசியும் வீடுகளின்  அமைதியை கெடுத்து விட்டதாக பல நாள் குற்றம் சாட்டுகிறேன்.  நீங்கள் பலரும் அதையே நினைக்கக் கூடும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான். பேச வேறு பல செய்திகள் உண்டு என நினைக்கும் உங்களுடன் நான் தொடர்புப் பாலம் ஏற்படுத்திக் கொள்ள விரும்பிச் செய்த சிறு முயற்சியே இந்தப் புத்தகம்.  மனதிற்கு இணையான, நொடியில் பயணிக்கும் போக்குவரத்து சாதனம் ஏதும் உண்டா,என்ன !! தங்கள் பொன்னான நேரத்தின் சிறு பகுதியை ஒதுக்கி இதை வாசிக்கும் உங்களுடன், சேர்ந்திருக்க என் மனக்குதிரை தயாராக உள்ளது.

பேசலாமா??



ரஞ்ஜனி த்யாகு