சனி, 4 ஏப்ரல், 2015

விருப்பஓய்வு (V R S )

எங்கள் குடும்ப வட்டத்திலும் தெரிந்த நண்பர்கள் மத்தியிலும் இப்போது விருப்ப ஒய்வு பெற்றுக் கொள்பவர்கள் அதிகரித்துள்ளார்கள். முக்கியமாக ஐம்பது வயதைக் கடந்த ஆண்கள் ஓடியது போதும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டனர். நம் நாட்டில் பொதுவாக பெண்களின் பிரச்சனைகள் பெரிது படுத்தப் படுவது போல் ஆண்கள் மனநிலை பற்றி நெருங்கினவர்கள் கூட யோசிப்பதில்லை. அது ஆண் பாவமாக்கும்ஆண் பாவமும் பொல்லாததே.

வேலை பார்க்கும் பெண்களைக் கொண்ட குடும்பங்களில் பெண்களின் சம்பளம் பெரும்பாலும் supporting salary ஆகவே உள்ளது. பொருளாதார நிர்பந்தம் இல்லாத பட்சத்தில் அவர்கள் நினைத்தால் வேலை பார்க்கலாம், இல்லை இருக்கவே இருக்கிறது சாக்கு. குழந்தை பராமரிப்பைக் காரணம் காட்டி வீட்டில் இருந்து கொள்ளலாம். ஆனால் இருபது +ல் குடும்ப பாரம் சுமக்கத் தொடங்கும் ஆண் ஐம்பத்து எட்டு வயது வரை நிற்காமல் ஓடுகிறான். பெண்களாவது மாமியார் மாமனார் என்ற வீட்டு உறுப்பினர்களான boss களை அனுசரித்துப் போனால் போதும். ஆனால் ஆண்கள், வேலை பார்க்கும் இடங்களில் எத்தனை பேரை அனுசரித்துப் போக வேண்டி உள்ளது! வெளியில் சென்று வேலை பார்த்தே ஆக வேண்டிய பெண்கள் நிலை டென்ஷன் நிறைந்ததுதான். ஆனால்  அவர்கள் சதவிகிதம் குறைவே.

"அரை மணி படுத்து எழுந்தால்தான் மதியம் காபி கூட போட முடியும்" என்று ஸ்டண்ட் அடித்து குட்டித் தூக்கம் போடுவதெல்லாம் ஆண்களுக்கு சாத்தியமா? இயலாமையே ஆண்கள் வீட்டில் சுப்பீரியாரிட்டியைக் காட்டிக் கொள்ள காரணம். ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் ஒரு பெண் கணவன் பற்றி சொல்லும் போது "அவர் எங்கள் வீட்டின் ஏடிஎம் மெஷின்என்றாள். மனைவி, மக்கள், பெற்றோர் எல்லார் தேவைகளையும் கவனித்து, ஆபிசரிடம்  டார்கெட் முடிக்கவில்லை எனத் திட்டு வாங்கிக் கொண்டு சாப்பிட, தூங்க மட்டுமே வீடு வரும் ஆண்கள் இறுக்கமாகவே இருப்பார்கள். அதைக் கிண்டல் செய்தால் எப்படி? "நான் செய்வது உடல் உழைப்பு. நாள் பூர சி ரூமில் அலுங்காமல் வேலை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து என்ன அதிகாரம் வேண்டிக் கிடக்கு "என்று சாடும் பெண்கள்  brain work, சமமாக, இன்னும் அதிகமாகவே கூட எனர்ஜியை உறிஞ்சும் எனப் புரிந்து கொள்ள வேண்டும்.

வீட்டு நிர்வாகத்தை பெண்கள் கவனித்துக் கொள்வதால்தான் ஆண்கள் அமைதியாய் வேலை பார்க்க முடிகிறது என்பது சரிதான். ஆனால் அதற்குத்தானே திருமணம்.  "காதல் ஒருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கை கொடுத்தே" என்று பாரதி கூறவில்லையா? ஏடிஎம் மெஷினாகவும் நம் டிரைவராகவும் அவர்கள் எடுக்கும் இன்னும் பல அவதாரங்கள் பற்றி கொஞ்சம் கனிவுடன் நினைத்துப் பார்ப்போம்.

 ப்ரத்யேக நேரம் (personal time) வேண்டும் என்று விரும்புகிறது மனம். அது ஆண்களுக்கும் உண்டல்லவா? ஆணும் பெண்ணும் இயற்கையிலேயே மாறுபட்ட இயல்பினர். புத்தகம் வாசிப்பது, சமையல் கலை வகுப்புகள் செல்வது, சீரியல் பார்ப்பது, ஷாப்பிங் செய்வது, அரட்டை அடிப்பதெல்லாம் பெண்களுக்கான space என்றால், செய்தித்தாள் படிப்பதும் news channels மாற்றி மாற்றிப் பார்ப்பதும் நண்பர்களுடன் செலவிடும் நேரமும் ஆண்களின் personal space.
ஆனால் ஓய்வுக்குப் பின் வரும் நாட்களில் கணவன்மார்களை வீட்டில் வைத்து சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். இத்தனை நாள் வீட்டை சுத்தமாய் மறந்து," கொக்குக்கு ஒன்றே மதி" என்பது போல் வேலை பார்த்து அவர்கள் குழந்தைகள் என்ன வகுப்பு என்பதைக் கூட மனைவியிடம் கேட்டுத்தெரிந்து கொண்டு தங்கள் உலகம் வேறென வாழ்ந்தவர்கள், திடீரெனக் கிடைத்த நேரத்தை என்ன செய்வதென்று அறியாமல் வீட்டையும் மனைவியையும் சுற்றிச் சுற்றி வந்து தொணதொணக்க ஆரம்பிக்கிறார்கள். மனைவியரோ எப்பவும் பிசி. கணவர்கள் இவ்வளவு நாள் காட்டிய பாரா முகத்தைத் திருப்பிக் காட்டவும் மனைவியருக்குத்  தோன்றலாம்.

இப்போதெல்லாம் வியட்நாம் வீடு பிரஸ்டீஜ் பத்மநாபன் போல் ஓய்வை ஒரு உணர்வு பூர்வமான விஷயமாய் யாரும் பார்ப்பதில்லை. சாதுர்யமாய், வரும் காலத்திற்கு சேமித்து விட்டுத்தான் ஓய்வெடுக்க முடிவு செய்கிறார்கள். ஆனால் ஓய்வை நல்ல முறையில் கழிக்கத் திட்டமிடுதல் அவசியம். எப்படி சம்பாதிக்கவும் சாதிக்கவும் இளம் வயது ஏற்றதோ அது போல் ஆன்மிக நாட்டம் உருவாக்கிக் கொள்ளவோ எந்த உருப்படியான செயல் தொடங்கவோ கூட இளம் வயதே ஏற்றது. ஆனால் ஓடி ஓடி வேறு எதுவும் செய்யாமல் போயிருந்தாலும் Better late than never. அதனால்,"விசையுறு பந்தினைப் போல் மனம் விரும்பிய படி செல்லும் உடலை "பிரார்த்தித்துப் பெற்று, சின்ன வயதில் ஆசைப் பட்டு செய்யாமல் விட்டதை எல்லாம் செய்யலாம். ஒவ்வொரு நாளையும் காதலர் தினம் போல் கருதி, துணையுடன் பொழுதை அமைதியாகபயனுள்ளதாகக் கழிக்கலாம். விருப்ப ஓய்வு பெரும் நண்பர்களின் குடும்பங்கள் வளமாக வாழ உங்கள் "சினேகிதி"யின் பிரார்த்தனைகள்.

ரஞ்ஜனி த்யாகு 

ஏப்ரல் 2015 சினேகிதி இதழில்" ஆண் பாவம் பொல்லாதது " என்ற தலைப்பில் வெளிவந்துள்ள சிறு கட்டுரை 

Mother Protects

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக