ஞாயிறு, 17 டிசம்பர், 2017

மார்கழிக் கல்யாணங்கள் -- சென்னை இசைவிழா

மார்கழியில் கல்யாணம் பண்ணுவதில்லை என்று நினைக்கிறோம். அனைவரும் டிசம்பரில் எங்கள் ஊருக்கு வந்து விட்டுக் கூறுங்கள். எது நிஜக் கல்யாணம் என்று. உங்கள் வீட்டு, எங்கள் வீட்டுக் கல்யாணத்திற்கு எத்தனை பேர் வரக்கூடும்?  1000?  2000?  அதுவுமே,  நம் வீட்டுத் திருமணத்தன்று மாமாவுக்கு அலுவலகத்தில் ஆடிட் இருக்கும். அத்தைக்கு மூட்டுவலி வரும். சொந்தங்களுக்கு ஏதோ சாக்கு வரும். ஆனால்,  சென்னையின் மார்கழி திருமணத்திற்கோ உலக உருண்டையின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் வருகிறார்கள். வருடம் தப்பாமல், டிசம்பரில் சென்னை வருகிறார்கள். சிவபெருமான் திருமணத்தின் போது நடந்தது போல்,  இந்தியாவின் தென்பகுதி பாரம் தாங்காமல் இறங்கிவிடுமோ என்று கூட நினைப்பேன். அப்படி ஒரு கோலாகலம். சாஸ்திரிய சங்கீதத்திற்கான இப்படி ஒரு விழா வேறெந்த ஊரிலும் நடப்பதில்லை என உறுதி செய்ய இன்டர்நெட்டை அலச வேண்டாம்.  அது நிதர்சனம். ஆனால் திருமணத்திற்கு என ஒரு மாசத்தை மட்டும் ஒதுக்கினால்,  என்னென்ன குழப்பங்கள் ஏற்படுமோ அத்தனை குழப்பமும் மெட்றாஸில் நடக்கிறது. வருஷத்தில் தை மாதம் மட்டுமே திருமணம் செய்ய உகந்தது என்றால், எல்லாருக்கும் மண்டபம் கிடைக்குமா, சமையலுக்கு ஆள் கிடைக்குமா, மாமாவுக்கு லீவ் கிடைக்குமா, ஒரே மாசத்தில் பல கல்யாணங்களுக்கு மொய் எழுத பாக்கெட் எல்லாருக்கும் சம்மதிக்குமா,  போத்தீஸில் மற்ற மாதங்கள் வியாபாரம் நடக்க வேண்டாமா, சமையல் வேலை செய்வோர் மற்ற மாதங்கள் சம்பாதிக்க வேண்டாமா, தேன்நிலவு தம்பதியருக்கு லாட்ஜ்களில் அறை கிடைக்க வேண்டாமா, குழப்பங்கள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல? அப்படித்தான் திண்டாடுகிறது டிசம்பர் சென்னை.

நேற்று மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸில் ஒரு காலைக் கச்சேரி சென்றோம். தெரியாதவர்களுக்கு ஒரு தகவல். காலைக் கச்சேரிகள் பெரும்பாலான சபாக்களில் இலவசம்.  காலை பாடுபவர்கள்,  வளர்ந்து வரும் கலைஞர்கள். அவர்கள் மதியக் கச்சேரி செய்யும் அளவிற்கு  உயர்ந்து, மாலை, Prime Slot  எனப்படும் ஆறு மணிக்கச்சேரி  வாய்ப்புப் பெற, காத்திருக்க வேண்டும். உழைக்க வேண்டும்.  திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தக்க வைத்துக் கொள்ள வேண்டும். செய்தால் பல வருடங்கள் துறையில் கோலோச்சலாம்.  .நான் அறிந்த வரை,  சபாக்களின் மாலைக் கச்சேரி வரை வர, குறுக்கு வழிகள் இல்லை. திறமை மட்டும் ஆட்சி செய்யும்,  மிகக் குறைந்த சிலதுறைகளில் ,  இது ஒன்று.  அப்பா பாடுகிறார் என்பதால்,  மகனுக்கு வாய்ப்பு தருவதில்லை.  வாய்ப்புத் தருவது சபாக்கள். மதிப்பிடுவது மக்கள் அல்லவா?  அதனால் நிஜமான திறமை வேண்டும். திறமைசாலிகளுக்குள் போட்டி உண்டு. சபாக்களுக்குப்  பிரியமான கலைஞர்கள் உண்டு.  அதெல்லாம் ஊடுருவிய தீமைகள். தவிற்பதற்கில்லை.

பணத்தை வைத்துச்  சுழலும் உலகில்,  ஏன் இலவசக் கச்சேரிகள் அளிக்கிறார்கள், தெரியவில்லை. அதற்கு டிக்கெட் நிர்ணயித்தால்,  வரும் பத்து பேரும் வரமாட்டார்கள் என்றா?  காலைக் கச்சேரிகள், காற்று வாங்கும் இடம்தான். அத்தனை பெரிய சபாவில், ஆங்காங்கே தென்படும் தலைகள். எண்ணி விடலாம். அட,மாலுக்கும் சினிமாவிற்கும், கூடச் செல்லும் நண்பர் குழாமும் அவர்கள் குடும்பங்களும் வந்தால் கூட கூட்டம் சேருமே ?பாடுபவர்களுக்கு சற்று உற்சாகம் வருமே!  பின்னால் வளர்வோம், நிறைந்த அரங்குகளைப் பார்ப்போம் என்ற நம்பிக்கையில், சுவற்றுக்குப் பாடும் பாடகர்கள் பாட்டில் உற்சாகம்  எங்கிருந்து வரும்? ஆயாசம்தான் இருக்கும். அதே போல், மாலைக் கச்சேரிகளின் டிக்கட் ரேட் , சினிமாவை விட அதிகம். சினிமா அளவு ஈர்க்க இயலாத ஒரு நிகழ்ச்சிக்கு , அதைப் போல் இரு மடங்கு டிக்கட் வசூலித்தால்,  சாமானியர்களுக்கு சபாவை எட்டிப் பார்க்கக் கூடத் தோன்றுவதில்லை.  தாங்கள்தான் சங்கீதத்தின் பிரதிநிதிகள் என்று நினைத்துக் கொள்ளும் ஒரு சிலரின் ஆதிக்கம்தான். கடைசிவரை பந்துவராளியை, பூர்விகல்யாணி என்றும், முகாரியை பைரவி என்றும் நினைத்துக் கொண்டு கேட்டு விட்டுப் போவார்கள்.

நேற்றுக்  கச்சேரியில் இரண்டு பேர்.  ஒரு ஜோல்னா பை, சாதா சூடிதார், அந்தப் பெண். அந்தப் பையன் , பல முறை துவைக்கப் பட்ட ஒரு சட்டை, பேண்ட்.  அவ்வளவு ஆர்வமாகக்  கச்சேரி கேட்டார்கள். த்விஜாவந்தியில்,  அகிலாண்டேஸ்வரியை விட்டால் வேறே கீர்த்தனையே யாரும் பண்ணவில்லையோ என்று நாம் நினைத்துக் கொண்டுள்ள போது , பாடகர் லேசாக முனகின உடனேயே , 'த்விஜாவந்தி ' என்று ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்த அப்பெண்ணும் பையனும், ' ஏன் ஆண்ட்டி, த்விஜாவந்தியில் இந்தக் கீர்த்தனை கேட்டுள்ளீர்களா'  என்று என்னிடம் வேறு கேட்டார்கள், பாருங்கள்,  அது என்ன கீர்த்தனை என்று கூடத்  திருப்பிச்  சொல்ல எனக்குத் தெரியவில்லை.

சபா  உணவகங்கள் அருமை. அரங்கை விட,  உணவகங்களில்  மக்கள் அதிகம் .மதிய உணவின் போதே,  மாலைச்  சிற்றுண்டிக்கு,  என்ன இனிப்பு  காரம் சேர்த்து உண்டால் நன்றாக இருக்கும்   என வெளிப்படையாகவே பேசுவோர்,  சபா சபாவாகத் தாவும்  கார்சவாரி ரசிகர்கள்.....அவர்கள் அப்படித் தாவுவது ,  வித்தியாசமான கச்சேரி கேட்கவா, வித்தியாசமான உணவகத்தில்  சாப்பிடவா என அவர்களைத்தான் கேட்க வேண்டும். எதுவும் அதிகமாக இருப்பது சந்தோசம் எனத் தப்புக் கணக்குப் போடுகிறோம். இல்லை. அது தொல்லை.  போதும் போதாததற்கு,  எல்லாத்  தொலைக்காட்சிகளும் கச்சேரிகள் ஒளிபரப்புகிறார்கள். அது நல்ல  விஷயம்தான்.  வயதானவர்கள், வசதியற்றவர்கள்,  வெளியே போகும் சூழ்நிலை இல்லாதவர்கள் , ஆகியோருக்கு நல்ல வரப்  பிரசாதம். வருஷம் முழுதும்  நடக்குமாறு பண்ணி,   இந்த இசை வெள்ளத்தில் மக்கள் மூழ்குமாறு செய்யலாமே?  இது என்ன பருவமழையா?  டிசம்பரில் மாத்திரம் வர?   சம்பிரதாயத்தை  மாற்ற பயம். ஆட்டுமந்தையாகவே இருக்க இஷ்டம். வேறு மாசத்தில் கச்சேரி வைக்க பயம். காலைக்  கச்சேரிக்கு டிக்கட் வசூலிக்க பயம். மாலைக்  கச்சேரிக்கு  டிக்கட் கட்டணம் குறைக்க பயம். உணவகம் இல்லாது சபா நடத்த பயம். வரவர,  சபா போகும் ஆசையே இருப்பதில்லை. பொய்யாகத்  தெரிகிறது.  பார்க்கலாம். ஒரு எல்லையைத் தொட்ட பின்னர் மாற்றம் வரலாம்.சென்னைக்கு எல்லாம் கல்யாண மாசம் ஆகலாம்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

சமூகத்தை அரித்து வரும் புற்று நோய்

இப்பொழுதுதான் சக்திபவனில் ஒரு தோசை சாப்பிட்டு வந்தோம்.இன்னும் உடை கூட மாற்றவில்லை.உண்மை.உண்மையில் இன்னும் சற்று பெரிய பளபள உணவகத்துக்கே முதலில் சென்றோம்.கூட்டம்.வெளியே நாற்காலிகளில் எல்லாம் மக்கள்.கோவில் வாசலில் கையேந்திக் காத்திருப்போர் பிச்சைக் காரர்களாம்.நாம் சொல்கிறோம்.அவர்களாவது பசிக்கு ஏதாவது கிடைக்குமா என்ற எண்ணத்தோடு காத்துள்ளார்கள்.ஆனால் posh ஹோட்டல் வாசலில் காத்திருப்போர் பசிக்கு காத்திருப்பதில்லை.சாப்பிடும் ஆசையால் காத்துள்ளோம். உடையாலும் உட்கார்ந்திருக்கும் இடத்தாலும் அறியப்பட்டால், அவர்கள் பிச்சைக்காரர்கள்.காத்திருக்கும் போது மனதில் உள்ள உணர்வால் அறியப்பட்டால் ,நாம்தான் பிச்சைக்காரர்கள்.அவர்கள் வயிறில் எரிவது பசி எனும் அக்னி.நம் மனதில் எரிவதோ ஆசை எனும் அக்னி.பசியை விரட்ட முடியாது.ஆசையை விரட்ட முடியும்.பசியும் இருந்து பணமும் இருந்தால் ஸ்டார் ஹோட்டல் போகக் கூடாதா?போகலாம்.ஆனால் காத்து நிற்பின் அது பசியால் அல்ல..ஆசையால்.இன்று எங்களுக்கு இருந்தது பசி.அதனால்தான் அங்கிருந்து சக்திபவன் சென்றோம்.

இந்த போஸ்டின் நாயக நாயகிகளைச் சந்தித்தது அங்கேதான்.முதல் பத்தி என் மனத்தில் நினைவு தெரிந்து உணவகங்களுக்கு செல்ல தொடங்கியது முதல் உள்ள எண்ணம். ஆனால் போஸ்ட்டின் வித்துக்கள் சிறப்பு எண்ணங்களே.எங்களுக்கு அடுத்த மேசையில் ஒரு ஏழை குடும்பம்,கணவன்,மனைவி,இரு குழந்தைகள் சாப்பிட அமர்ந்தார்கள்.அவர் ஆட்டோ ஓட்டுநர் என்று உடையில் இருந்தும் அவர்கள் ஏழ்மை அந்த பெண்ணின் கழுத்தில் இருந்தும் தெரிந்தது. குழந்தைகளுக்கு ஏதோ ஆர்டர் பண்ணப் பட்டு வந்தது.அவை ஆவலுடன் வேகவேகமாக சாப்பிட்டதைக் கணவனும் மனைவியும் பார்த்துப் பரவசப் பட்டுக் கொண்டார்கள்.நான் ஓரப் பார்வையாக அவர்களை பார்த்துக் கொண்டிருந்தேன்.இக்குழந்தைகள் சாப்பிடும் வேகம் பார்த்தால் அவர்கள் அம்மா அப்பாவிற்கு வரும் உணவையும் பங்கு கேட்கும் போல் உள்ளதே,அவரிடம் பர்ஸ் கூட இல்லை போல் தெரிகிறதே என்று சற்றுக் கவலையாக உணர்ந்தேன்.பளிச் என மனதில் ஒரு குரல் ஒலித்தது.அவர்களுக்கு எதுவும் சாப்பிட வர போவதில்லை என.கையில் உள்ள காசில் குழந்தைகளுக்கு மட்டும் ஏதாவது வாங்கித் தர வந்த பெற்றோர்.லேசில் வெல்ல இயலாத உணவு ஆசையை வென்ற இரு ஜீவன்கள்."அம்மா,நீ எப்ப சாப்பிடுவே "என்ற சின்னக் குழந்தையின் குரல்,என் இரவுத் தூக்கத்தைத் தொலைக்கப் பண்ணி விடுமோ என்று யோசித்தவாறே வெளியே வந்தேன்.

ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூகம்.ஏன்?ஐ.ஐ.டி .யில் இருந்து நாலு வருஷம் படித்து விட்டு வெளியே வருபவருக்கு ஏன் 18 லட்சம் சம்பளம்?கிரிக்கெட் மட்டும் ஏன் உசத்தி?டீமில் உள்ளவர்களுக்கு ஏன் அவ்வளவு பணம்?உன்னிகிருஷ்ணனுக்கு பாட வரும்.பாடுகிறார்.விராட் கோலிக்கு கிரிக்கெட் விளையாட வரும் .விளையாடுகிறார்.அஜித்துக்கு நடிக்க வரும் .நடிக்கிறார்.இன்று பார்த்த மனிதனுக்கு ஆட்டோ ஓட்ட வரும்.ஓட்டுகிறார். அஜித் டிசம்பர் கச்சேரி பாடுவாரா?உன்னிகிருஷ்ணன் ஆட்டோ ஓட்டுவாரா ?அவரவருக்கு வருவதை செய்கிறோம்.software engineer 12 மணி வேலை செய்தால்,ஒரு மெக்கானிக்கும் அதே நேரம் வேலை செய்கிறார்.கேட்டால் படிப்பு ஈட்டும் பணம் என்று கதை சொல்வார்கள்.உனக்குப் படிக்க வரும்.பிளம்பிங் பண்ண வருமா?மெத்தப் படித்தவர்கள், எல்லாம் ,தானே பண்ண வேண்டியதுதானே?படிக்க வந்தது.படித்தோம்.இன்னொருவனுக்கு படிப்பு ஏறவில்லை.வந்ததை செய்கிறான்.வசதி இல்லாமல் படிக்கும் வாய்ப்பை இழந்தவர்கள் எத்தனை பேர் உள்ளார்கள்.ஏன் வசதி இல்லை?சமூகத்துக்கு வந்த புற்று நோயால் அது தடுமாறி,தடம் மாறிப் போனதால்.

சரி,படிப்புக்கு மரியாதை தரவேண்டியதுதான்.அலுவலகத்தில் மணி அடிப்பவருக்கும்,மணி அடித்தால் வந்து கைகட்டி நிற்பவருக்கும்  ஒரே சம்பளம் தர வேண்டாம்.ஆனால் ஏன் இவ்வளவு வித்தியாசம்?ஒரு இடத்தில் ஏன் கோடிகள் குவிய வேண்டும்?ஆட்டோக்காரர்கள் பத்து ரூபாய்க்காக ஏன் தவளை போல் கத்த வேண்டும்?ஏன் விகிதாச்சாரம் இவ்வளவு மோசமாய் உள்ளது?நமக்கு உள்ளது போல் சமூகத்திற்கு,நாட்டிற்கு ஒரு ஆன்மா உள்ளது.சமூகத்தின் ஆன்மா நம் அனைவரிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டுள்ளது.சமூகம் என்ற பெரிய உடலை அழித்துத் தின்றுவரும் புற்று நோய் இந்த ஏற்றத் தாழ்வுகள்.சரியான ட்ரீட்மெண்ட் தரப்பட வேண்டும்.கான்சருக்கு க்ரோசின் போட்டால் சரியாகுமா?எத்தனை நாள்பட்ட கவனிப்பு வேண்டும்.அது போல்தான்.இப்போதெல்லாம் புற்று நோயை முற்றிலும் குணப்படுத்தி விடுகிறார்களாமே ?இன்று சக்திபவனுக்கு சாப்பிட வந்த குடும்பம் என்றாவது,முழுமையாக வயிறார சாப்பிடுமா?இல்லையெனில் தேடி சோறு நிதம் தின்று,பல சின்னஞ் சிறு கதைகள் பேசி,பலர் வாட பல செயல்கள் செய்து அடுத்த தலைமுறைக்கு என வங்கிக் கணக்கில் தேவைக்கு அதிகமாகப் பணம் சேர்க்கும் நாமெல்லாம் தலைகுனிய வேண்டியவர்களே.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

புகழ் தரும் தலைவலிகள்

இரண்டு வார மனச்சுமை. இன்று இறக்கி வைத்து விடுவேன். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப என்ற இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.நன்றாகப் போகிறது. நேரடியாக விஷயம் தொடுகிறேன். அதில் ரமணியம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் பாடிக் கலக்குகிறார். நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் பாராட்டுகள் எல்லா வழியிலும் வந்து குவிகின்றன. அவர்கள் பின்புலம் அறிந்த பின் மிகுந்த மரியாதை உண்டாகிறது. அவர்கள் சாதனைப் பெண் என்பது சந்தோஷம் தருகிறது. பின் ஏன் எனக்கு மனம் கனக்கிறது? சொல்கிறேன்.

புகழ் ஒரு போதை. மிகுந்த பக்குவத்துடன் கையாளப் பட வேண்டிய ஒன்று. அதிகம் குடித்தால் குடிகாரனுக்கு ஏற்படும் தடுமாற்றம்,  புகழ் வசப்படும் மனிதனுக்கு உண்டாகும். எளிமையான மனிதர்கள் புகழால் தொலைக்கும்  சில விஷயங்கள், எளிமை, தூக்கம், சுதந்திரம், பிறரால் அறியப் படாத இருப்பு, ஒரே வார்த்தையில் சொன்னால் நிம்மதி. பிரபலங்கள் யாராவது உண்மை பேசினால் நமக்கு இது விளங்கும். இல்லை என்றாலும் கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா என்ன? பாவம் ரமணியம்மாள் என்பதே என் மனது கொண்ட சுமை. முதல் பாடல் பாடும் போது,  தான் இவ்வளவு பயணிப்போம் என அவர்கள் நினைத்ததாகத் தெரியவில்லை. திறமையை,  தொலைக்காட்சிகள் ஊக்குவிக்கின்றன. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அவர்கள் டி ஆர் பி (டெலிவிஷன் ரேட்டிங் பாயிண்ட்) ஏற , இந்த அப்பாவிப் போட்டியாளர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்களோ என்றே தோன்றுகிறது. தொலைக்காட்சிசானல்களைத்  தப்பு சொல்ல மாட்டேன். அவர்கள் ஸ்ட்ரீட் ஸ்மார்ட்டாக இருந்தாக வேண்டும். வியாபாரிகள் வியாபார தந்திரம் செய்யக் கூடாது என்று வாதிட இயலாது. அந்த அம்மாள்தான் பாவம்.

அந்த ரமணியம்மாளே  வாக்குமூலம் தருகிறார்கள். "நான் வேலைக்கு செல்லும் வழியில் இளைஞர்கள் என்னுடன் செல்பி  எடுத்துக் கொள்கிறார்கள், சிலர் காரை நிறுத்திப் பணம் தருகிறார்கள்", என்றெல்லாம்.   சென்ற வார ஷோவில் அவர்கள் சொன்ன போது, அவர்களை நிம்மதியாய் விட்டு விடுங்களேன் என்று மனம் அடித்துக் கொண்டது. ஏன் என்றால்,  உலகம் பொய். உலகம் வேண்டுவது பரபரப்பு மட்டுமே. சில நல்ல உள்ளங்கள் உண்டு. அவர்கள் வலக்கை தருவது இடக்கைக்குத் தெரியாதது போல் உதவுபவர்கள். மற்றது எல்லாம் விளம்பரத்துக்காகத்தான்.  அவர்களால் சாலையில் இயல்பாய் முன் போல் நடக்கக் கூட முடியவில்லை. இரண்டு சேலைகளுடன் நிம்மதியாய் இருந்தவரை,  வாரம் ஒரு புது துணி கொடுத்து ஆசை வயப் படுத்தியாயிற்று. தூக்கம் வராது. நிச்சயம் வராது. அதற்காக ,அவர்கள் போன்ற, நம் போன்ற சாதாரண,  ஓரளவு திறமை உள்ள மக்கள் வளரவே கூடாதா என்கிறீர்களா? அப்படி இல்லை. இந்த தற்காலிக வளர்ச்சியும் புகழும் தரும் போதை, அவர்களைப் புறம் தள்ளி உலகம் தன்  பயணத்தைக் தொடரும் போது இந்த எளிய மனிதர்களுக்கு அதிர்ச்சியும் வலியும் ஏற்படுத்தும்.

இந்தப் புகழ் தற்காலிகமானது என நீ அறிவாயா என்றால், ஆம்,அறிவேன் என்பதே பதில். சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்த இதே போன்ற ஒரு பாட்டியின் திக்கற்ற நிலையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. ஆனால்,  தீர்வற்ற பிரச்சினை இதெல்லாம். நீங்களும் நானும் பேசிக் கொள்ளலாமே தவிர ஏதும் செய்ய இயலாது. ஆனால், ஒன்று கவனிக்கிறேன். ஒரு மனிதனின் வளர்ச்சியும் அவன் அடக்கமும்  பெரும்பாலும் நேர்விகிதத்தில் இருக்கின்றன. இருக்க வேண்டும். தொலைகாட்சி நிகழ்ச்சியின் நேர்காணலில் பங்கு பெறும் பல பிரபலங்கள் இதை உறுதி செய்கிறார்கள். வள்ளுவனும் பாரதியும் பெற்றது போன்ற புகழ்தான்  நிலையானது. அது நம் போன்ற சாமானியர்களுக்கு கஷ்டம். அதை உணர்ந்து, புகழின்  வசப்பட்டு மயங்காமல் இருப்பின் பிரச்சினை இல்லை. மயங்கி சந்தோஷ எல்லை வரை போனால், இன்னொரு எல்லையைத் தொட வேண்டிவரும் போது  அடி பலமாக இருக்கும். ரமணியம்மாளுக்கு இந்த எளிய மனம் மாறாமல் இருக்கட்டும் .வேறென்ன சொல்ல?  உடல் அடையும் புகழை,  உள்ளம் சினிமா படம் போல் வேடிக்கை பார்க்கட்டும்.தொலைக்காட்சி சானல்களும் இன்னும் கொஞ்சம் மிதமாக இருந்தால் நலம். சிம்பிள் பெண்டுலம்  போல் மக்களை வைத்து விளையாட அல்லவோ செய்கிறார்கள்! பாவம் மக்கள்.

மனம், சுமை இறக்கி இறகு போல் ஆனது.





திங்கள், 20 நவம்பர், 2017

என் மொழி வேறா?

இது முப்பது வருடக் கதை.கதைக்கு நாயகன்,நாயகி கிடையாது.ஒரு குடும்பமே கதையின் வித்து.தலைப்பு சொல்வது போல் இந்த போஸ்ட்டும் புரிந்து கொள்ளப் படக் கூடிய சாத்தியக் கூறுகள் குறைவே.ஆனாலும் ,என் போல புரியாத மொழியில் பேசிக் கொண்டிருக்கும் யாருக்காவது என்றேனும் உபயோகமாகலாம் என்பதே எழுத காரணம். என் குடும்பம் பற்றி அறியாதவர்களுக்கு......நான் ரஞ்ஜனி .த்யாகு என் husband .எங்கள் முதல் குழந்தை ராகவன்.அவன் தம்பி கார்த்திக்.ராகவன் ஆட்டிஸக் குழந்தை.அவன் வயது 29.ஆட்டிசம் பற்றி பாடம் நடத்த அல்ல இக்கட்டுரை.அதற்கு நல்ல தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் மருத்துவர்கள் .இருக்கிறார்கள்.வீட்டில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் என்றால் வீட்டின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை எளிமையாகக் கூறுவது கட்டுரையின் நோக்கம்.

ஆட்டிசம்என்பது  குழந்தையின் cognition மிக மோசமாக உள்ள ஒரு நிலை.cognition சரியாக இருப்பின்,ராமாயணமும் புரியும்.Theory of relativity ம் புரியும்.Cognition minus என்றால் எதுவும் எப்படிப் புரிய வேண்டுமோ அப்படிப் புரியாது.அந்தக் கஷ்டம் பாதிக்கப் பட்ட குழந்தையை விட அதன் அம்மா அப்பா rare cases ல் அதன் caretaker க்கே விளங்கும்.Cognition நன்றாக உள்ளதாய் கர்வம் கொண்டுள்ள so called normal people ஆன பெற்றோருக்கு ஏன் என் குழந்தைக்கு இது கூடப் புரியலை என்பது பெரும் அதிர்ச்சியாக இருக்கும்.அதை ஆழ்மனதிற்கு சொல்லி,புரிய வைத்து,மனதை இந்த condition ஐ ஏற்க வைத்து சம நிலை அடைந்து,மனசு என்ற ஆடுகின்ற வஸ்த்துவை உன் மேல் ஒரு கட்டடம் எழும்பப் போகிறது,நீ அஸ்திவாரம் ஆடாதே என்று மிரட்டி,அமைதியாக காலத்தை ஓட்ட வேண்டும்.

சமீப காலமாய் last straw on camel s back என்பது போல சில நிகழ்வுகளை சந்திக்கிறேன்.அது நெருக்கமானவர்கள் கூட அறிந்தும் அறியாமையினாலும் செய்வதைக் காணும் போது ஏன் என் மொழி புரியாமல் போனது அவர்களுக்கு என்று வியக்கிறேன்.மனித இனம் வாழ்வைப் படிக்கும் முன் வண்டி ஓட்டக் கற்றுக் கொண்டு விடுகிறது! நூறு சிறப்புக் குழந்தைகளை,குடும்பங்களையாவது அறிவோம்.You know,there s a cry in the depth of our hearts,which people without a special ear cannot hear? இது ஒரு பெரிய விஷயமா என்று தோன்றலாம்.குழந்தையின் ப்ரீ கே ஜி அட்மிஷனுக்கு தயார் செய்யும் அம்மா,ஐந்தாம் வகுப்பில் இரண்டாவது ரேங்க் வாங்கினதுக்கு குழந்தையை அழ அடிக்கும் பெற்றோர்,ஆறாம் வகுப்பில் Fitjee யில் சேர்க்கும் ambitious பெற்றோர்,ஐ ஐ டி தவிர இந்தியாவில் கல்லூரி இல்லை போல் ரிசல்ட் அன்று தூக்கம் தொலைக்கும் குடும்பங்கள்,அப்படியே குழந்தைகள் நாலு வருஷம் படித்து முடித்தாலும் முதல் நாள் campus interview ல் வேலை கிடைக்காவிட்டால்,ஒரு மாதம் பையன் சும்மா இருந்தால் சுனாமி நுழைந்தது போலாகும் வீடுகள் ,கல்யாண மார்க்கெட்டில் விலை போக முக்கியமாகப் பெறப் படும் மாஸ்டர்ஸ் டிகிரி வைத்துள்ள குழந்தைகளின் பெற்றோர்,அனைத்துக்கும் சிகரம் வைத்தார் போல் தன் பேரனோ பேத்தியோ சிறப்புக் குழந்தை என அறிந்த முதியவர்கள் ஆகியோருக்காவது இது பெரிய விஷயமே.நான் அப்படித்தான் நினைக்கிறேன்.வாழ்வு இரு கோடுகள் தத்துவமே.எல்லாருக்கும் ஒன்று சொல்ல விருப்பம்.

இந்தக் குழந்தைகளால் குடும்பங்கள் ஒரு மிதவாழ்வுக்கு பழகிவிடுகின்றன.அதீதமான உணர்வுப் பரிமாறல்கள் இருப்பதில்லை.கையளவு உள்ள இதயத்தில் முக்கியமான இடம் இக்குழந்தைகளால் ஆக்ரமிக்கப் பட்டுள்ளதால்,மற்ற அனைத்தும் அதை விட சிறிதாகவே தெரியும்.அப்படியெனில் யாரும் அவசியம் இல்லை என்று பொருள் கொள்ளக் கூடாது.இக்குழந்தையைச் சுற்றித்தான் எங்கள் உலகம் சுழலும்.வேறு மாதிரி இருக்க முடியாது.அதனால் நான் இவர்களுக்குத் தேவை இல்லையோ என்ற சந்தேகம் கொள்பவர்கள் எங்களால் தரப்படும் எந்த சமாதானத்தையும் ஏற்க முடிவதில்லை.அவளுக்கு ராகவன் ஒரு சாக்கு என்று சொல்பவர்கள்தான் அதிகம்.எனக்கு லேசான வருத்தம் வருவதுண்டு.ஆனால் கோபம் இல்லை.கோபங்கள் மறைந்து 29 ஆண்டுகள் ஆயின.உண்மை. பெரிய அழுத்தம் சுமப்பதாய் பொய் சொல்ல மாட்டேன்.ஆனால்,வேறு எந்த pressure ம் எங்கள் போன்ற பெற்றோருக்கு additional pressure தான்.சந்தேகம் இல்லாமல்.பக்கத்து வீட்டு ராமநாதன் சனிக்கிழமை ஆபீஸ் போகலையா,குழந்தைகளுக்கும் மனைவிக்கும் டிரைவர் வேலையா பார்க்கிறான் என்றால் இல்லைதான்.ஆனால் ராமநாதன் மனைவி அவர் நகர்ந்ததும் ஜோல்னா பையை மாட்டிக் கொண்டு பாண்டிபஜார் போகலாம்.வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளலாம்,காத்து வாங்கலாம்.ராமநாதன் குழந்தை பிஸ்ஸா சாப்பிட்டு வரும்.எங்கள் குழந்தை சாப்பாட்டு கிண்ணத்தைத் தூக்கி வந்து பசி எனக் காட்டும்.எங்கள் கூரை கீழேயே வசித்தாலன்றி என் மொழி புரிவது கடினமே.

ஒவ்வொரு நாளும் வேறானது.சிறப்புப் பள்ளிகளில் பெற்றோரை இவன் அம்மா அப்பா என்றே conscious ஆகக் குறிப்பிடுவார்கள்.ராகவனை ஒட்டி என் நாள்களில்,செயல்களில் மாற்றங்கள் இருப்பின் அது ஏன் யாருக்கும் புரியவில்லை?என் மொழி வேறா?குடும்பத்தினரே ஜாலியா இரு என்கிறார்கள்.எது ஜாலியின் டெபினிஷன்?ராகவனுக்கு வருத்தம்,அழுத்தம் புரியாது.அதனாலேயே நான் நித்ய ஜாலிதான் என்று சொல்லி ஆயிற்று.ஒரு முறை அல்ல.பல முறை.அதிகப்படியான excitements ம் இக்குழந்தைகளுக்குப் புரியாது. எங்கள் மூவருக்குமே அதுவே பழகிப் போனது.Nothing excites greatly.அதில் தவறென்ன? என்னுடன் தொடர்பில் உள்ள அனைவருக்கும் சொல்லி விட்டேன்.உங்களுடனான என் உறவு வேறு.எங்கள் வித்தியாசமான வாழ்க்கை முறை வேறு என்று.வாழ்வு ஒரு சதுரங்கம்.அவரவருக்கு ஒரு இடம்.எனக்கு குழப்பம் இல்லை.குழப்பிக் கொள்ளவும் கூடாது.அதனால் சில நேரம் மௌனம் காக்க வேண்டிவருகிறது.என் மொழி புரியாவிட்டால் பரவாயில்லை.என்னை அறிந்தவர்களுக்கு என் மௌனமுமா புரியாது?

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

செவ்வாய், 14 நவம்பர், 2017

இரவின் மடியில்

இரவின் மடியில் இருக்கும் ஒருவன் எப்படி இருப்பான், இருக்க வேண்டும்?அமைதி. மௌனம். பேச்சில்லை. அசைவில்லை. எல்லா ஜீவராசிகளும் உறங்குகின்றன. தூங்கா பிராணிகள் உண்டு என்று கூகிள் தேடல் செய்து கண்டறிய வேண்டாம். பொதுவாகச் சொல்கிறேன். நல்லவன் , அல்லாதவன் எல்லாருக்கும் தூக்கம் பொது. காலை முதல் சாவி கொடுக்கப் பட்ட பொம்மை போல ஓடி,  கதிரவன் மேற்கே மறையும் நேரம் வேகங்கள் குறைகின்றன. கொஞ்சம் கொஞ்சமாய் ஒடுங்கி, இரவின் மடி தேடி, தலை சாய்க்கிறோம். நித்ரா தேவி நம்மை ஆட்கொள்கிறாள். உறக்கம்,  இறப்பு இரண்டையும் ஒப்பிடுகிறார் திருவள்ளுவர். ஆழ்ந்த உறக்கம் இறப்புக்கு சமம்தான். ஒன்று வாழ்வின் சலனங்களை நிரந்தரமாய் முடித்து வைக்கிறது. மற்றது தற்காலிகமாய்த் தள்ளி வைக்கிறது. அவ்வளவே வித்தியாசம்.

உலகில் பரீட்சைக்கும் , கல்யாணத்திற்கும்,  வேலைக்கும்,  பொருள் ஈட்டவும் இன்னும் எல்லாவற்றிற்கும் எத்துணை தூரம் தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டுமோ,  அத்துணை தூரம் தூங்கவும் தயார்ப்படுத்திக் கொள்ளுதல்  தேவையாகிறது. எத்தனை பேர் படுக்கையை முகர்ந்தால் தூங்குகிறார்கள்?எளிமையான உழைப்பாளிகள் குழந்தைகள் என ஒரு சிறு பட்டியல் உண்டுதான்.சஞ்சலம் அறியாதவர்கள்.  இங்கே குறிப்பிடுவது மன சலனங்களையே. நாம் மிக அமைதியாக செலவிடும் நாள் நல்ல உறக்கம் தருகிறது. அதனாலேயே உறங்கும் முன் செய்யலாம், செய்ய வேண்டும் என பெரியோர்கள், மருத்துவர்கள் சில செயல்களைப் பரிந்துரைக்கிறார்கள். கட்டுரை பௌதிகத் தூக்கம் பற்றியதல்ல.

மனிதர்களின் பல நாட்கள் தேவர்களின் ஒரு நாள் என்று ஏதோ கணக்குகள் எல்லாம் படிக்கிறோம். அது போல மனித வாழ்வு நூறு வருஷங்கள் ஆனால், ஐம்பது வயது வரை நம் பகல். ஐம்பது கடந்தவர்கள் இரவின் மடியில் உள்ளோம். இரவு தொடங்கி விட்டது எனில் எப்போது வேண்டுமானால் தூக்கம் நம்மை அணைக்கும்.  அதற்குத்  தயாராக வேண்டும். நல்ல முறையில் பகல் பொழுது முழுதும் செலவிட்டிருந்தால், அதுவும் இயல்பாக நிகழ்ந்திருந்தால்,  இரவு அமைதியாகத் தூங்க முடியுமா என்ற யோசனை வராது. தூக்கமும் தானாக வரும். சரி, பகல் பொழுது நாம் அறியாமலேயே வேகமாகக் கடந்து விட்டது.யாரோ கெடுத்து விட்டார்கள், நாமே மெத்தனமாகக் கெடுத்துக் கொண்டோம் என்றால் கூட,  அந்தி சாயும் நேரம் , விழிப்படையலாம். நிதானப் படலாம்.

பௌதிக உறக்கத்துக்கே எளிமையான இரவு உணவு நல்லது என்கிறோம், இரவு உடை அணிகிறோம், கனமான நினைவுகள் விலக்க வேண்டும் என்கிறோம், த்யானம் செய்து விட்டு உறங்கப் போவது நல்லது என்கிறோம். அப்போது உண்மை உறக்கத்துக்கு? கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விடலாமே, உணவு ஆசையை, உடை ஆசையை, வன்மங்களை, நான் நடத்துகிறேன் என்ற பரிதாபகரமான தவறான எண்ணத்தை, நான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ........எப்படி சொல்வது, இந்த உருவத்தின் மீது கொண்டுள்ள விலக்க இயலாத பற்றை, கழிவிரக்கத்தை, பயத்தை, விட இயன்ற எல்லாவற்றையும்தான். இந்த நாளை வாழ்ந்து விட்டேன் என த்ருப்தி தருமாறு ஒரு நாளை வாழ்ந்தால், மறுநாள் விடியல் போனஸ் ஆக தெரியும். எல்லா நாட்களும் ஒன்றா வேறா? 24 மணி நேரம், காலை இரவு இரண்டும் தினம் வரும் என்று யோசித்தால் அனைத்து நாட்களும் ஒன்றே.

ஆனால் ஒரு நாள் என்பதன் பொருள் வேறு. ஒரே ஒரு முறை பயன்படப் போகும் ஒரு பொருளுக்கு மரியாதை தேவையா, இல்லையா? யூஸ் அண்ட் த்ரோ பொருளுக்கு குறைந்த மரியாதை போதும் என்பது ஒரு வாதம். ஆனால் அது சரியில்லை. ஒரே தடவை பயன்படுத்தப் படுவதால் அது மிகவும் உயர்ந்தது என்பதே உண்மை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாழ்வும் அத்துணை முக்கியம் பெறுகிறது. எது பிணைக்கிறது? வாழ்வின் மேல் உள்ள ஆசை. அதை முற்றிலும் நீக்கிக் கொள்ள முடியாதோ என்னவோ? ஆனால் சிறிது விலகி நின்று பார்க்க முயலலாம். பண்ண வேண்டும். நாம் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் நிகழும் என்றறிந்த ஒன்றல்லவா?  இரவின் மடி ஆசைகளை ஏக்கங்களை சில சமயம் அதிகம் ஆக்கலாம். நாம் சந்தோஷம் என நினைத்த ஒன்றின் தேவையே இல்லை என்பது அதிக நிம்மதி.

ஓரிரு நாட்களாக  இரவின் மடியில் என்ற தலைப்பு மன அரங்கில் ஆடுகிறது. பகலின் பிடியில் உள்ளவரும் யோசிக்கவே வேண்டும். 6 மணி வரை பகல் என்றாலும், 6.01க்கு இரவு வந்துவிடுகிறதே!  விலகல் வருந்த வேண்டிய விஷயம் அல்ல. உண்மையில் கட்டுக்களில் இருந்து பெறும் விடுதலை. பெரும் விடுதலையும் கூட. சாதாரணமாக நினைத்துப் பார்த்தாலும், இன்றைய வேலைகள் முடிந்தன, தூங்கப் போகிறேன் என்பது மனதுக்கு எத்தனை லேசாக உள்ளது. ஆனால் நம் படுக்கையை நாம் விரித்துக் கொள்ள வேண்டும். யாரோ மெத்தை விரித்து ரெடியாக வைப்பது எல்லாம்,மறு நாள் ஓட வேண்டுமே என சலித்துக் கொண்டே தினம் தூங்கும் தரம்  சற்றும் இல்லாத தினப்படி  தூக்கத்திற்கு வேண்டுமானால் சரி. நான் இரவின் மடி வந்து ஐந்து ஆண்டுகள் சென்றதால், நல்ல உறக்கத்துக்கு ஆயத்தம் செய்யவே விருப்பம். ஆயத்தம் செய்ய துவங்கி  விட்டதால் தூக்கம் என்னிஷ்டமா என்ன?  எதுவும் அறியாத, அறிய முடியாத இறைவன் கை விளையாட்டு பொம்மைகள் அல்லவோ நாம்?

வியாழன், 13 ஜூலை, 2017

வேடர்கள் இருவர்

உங்களுக்கு திண்ணப்பனைத் தெரியுமா?
தெரியாது.உனக்கு?
எனக்கும் தெரியாது.
கண்ணப்ப நாயனாரை?
நம் யாருக்குத்தான் தெரியாது.!
திண்ணப்பனை,கண்ணப்ப நாயனாராக்கியது எது? ஏன் எல்லா திண்ணப்பனும்  நாயனாராகவில்லை?ஏதோ ஒன்று வித்தியாசம்.பக்தியா?அது எல்லோருக்கும் உள்ளது.அல்லது இருப்பதாக சொல்லிக் கொள்கிறோம்.காட்டிக் கொள்கிறோம்.பின்?அவனிடம் இருக்கும் எல்லாம் நம்மிடமும் இருந்திருக்கலாம்.ஆனால் அவனைத் தனிமைப் படுத்தி உயரத்தில் தூக்கி வைத்தது,நம்மிடம் நிறைந்து உள்ள ஒன்று அவனிடம் இல்லாதிருந்ததே.அது என்ன?நான் இன்னும் ஒரு பத்தி எழுதும்  வரை யோசியுங்கள்.பிறகு சேர்ந்து யோசிப்போம்.முதல் வேடன் கண்ணப்ப நாயனார்.அடுத்து தலைப்பின் நாயகன்,இரண்டாவது வேடன், குகன்.

குகனொடும் ஐவரானோம் என்று எம்பிரான் வாக்கால் தழுவ பட்ட,(physical   ஆகவும்தான்) பேறு பெற்ற  ஸ்ருங்கிபேரபுரத்தரசன் குகன்.பரந்தாமனிடம் கொண்ட பேரன்பினால் உண்மை அந்தணனான குகன் என்று குறிப்பிடப்படும் குகன்.கண்ணப்ப நாயனாரும் குகனும் ஏன் ஒரே ஜாதி?வேட்டுவர் குலத்தை சொல்லவில்லை.ஏன் உயர்ந்தவர்கள்?என்ன ஒற்றுமை அவர்களுக்குள்?என்ன வேற்றுமை நமக்கும் அவர்களுக்கும்?

உலகம் முழுவதும் கொடுக்கல் வாங்கலையே அடிப்படையாய்க் கொண்டு நடக்கிறது.பழைய காலத்தில் பண்டமாற்று முறை இருந்தது.பின் பணம் புழக்கத்தில் வந்தது.பணம் கொடுத்தால் வாங்கக் கூடிய பொருள்கள் பெருகின.என்ன தப்பான புரிதல் வந்துவிட்டது என்றால்,எதையும் வாங்க முடியும்,அதற்கு சமமான ஏதோ ஒன்றைக் கொடுப்பின் என்ற நினைப்பு நமக்கு வந்துவிட்டது.பணத்திற்கும் பணத்தால் வாங்கும் பொருளுக்கும் இது சரிவரலாம்.ஆனால் பணம் கொடுத்து வாங்க இயலாத நிம்மதி,சந்தோஷம் ,நேரம்,அன்பு ,நட்பு எத்தனையோ உள்ளதல்லவா?அவற்றை வாங்க என்ன செய்வது? சொல்லவா?கொடுக்க மட்டும் செய்வது.எடுத்துக் கொள்ளும் எண்ணம் சற்றும் அற்றுக் கொடுப்பது.உடம்பின் ஒவ்வொரு அணுவிலும்,என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு துளியும் இல்லாமல் தருவது.இதையே வேடர்கள் இருவரும் செய்தார்கள்.பெறற்கரிய பேறு பெற்றார்கள்.

சிவபெருமானிடம் அன்புமயமானவர் திண்ணனார்.அவர் செயல்கள் எல்லாம் தனக்கினியன என்கிறார் சிவபெருமான். அன்பே சிவம்.பெருமான் அன்பெனும் பிடியில் அகப்படும் மலை.அவனை அடைய செய்யப்படும் எல்லா கர்மங்களும் அன்பு வழிக்குப் பிறகே.பெருமான் சிரசில் உள்ள பூக்களை செருப்பால் நீக்குகிறாராம்.அது ஆண்டவனுக்கு குமரன் மலரடியைக் காட்டிலும் இனிமையாக உள்ளதாம்.திண்ணப்பன் கூறும் அன்பு மொழிகள் முனிவர்களுடைய வேதம்,மந்திரம் முதலியவற்றிலும் இனிமையாக உள்ளதாம். சாதாரண வாழ்வா அது?அவசரமாய் எழுத?சிவபெருமான் திருக்கண்ணில் உதிரம் பெருக தனது வலக்கண்ணை அனாயாசமாய் அகழ்ந்து ஸ்வாமியின் கண் உள்ள இடத்தில் வைக்கிறார்.இப்போது மற்ற கண்ணில் ரத்தம் வருகிறது.திண்ணப்பருக்கு அவனிடம் அன்பைக் கொடுக்க மட்டுமே தெரிந்தது.க்ஷண நேரம் கூட யோசிக்கவில்லை.அவர் கொண்டது பேரன்பு.தன்னை மேல்மனத்திற்கு கொண்டு வந்து இந்தக் கண்ணையும் இழந்தால் என்னாவேன் என்று பேரம் பேச முடியாத அன்பு. கொடுத்தார்.ஆட்கொள்ளப் பட்டார்.கண்ணப்பரானார்.

குகனுடையதும் எதிர்பார்ப்பற்ற தூய அன்பு.அன்பிற்காக மட்டும் அன்பு செய்தவன் குகன். பெறுவதை யோசிக்காதது தூய்மை அடைகிறது.வலிமை அடைகிறது.அது விளங்க காலம் ஆகும்.கொடுக்க மட்டும் ஜனித்த பிறவிகள் உண்டு.கர்ணன் போல்.கொடுக்க மட்டும் பழகிக் கொண்டால் நிம்மதி சந்தோஷம் கட்டாயம் வரும்.உயர்நிலை வரும்.ஆனால் அது தேவகுணம்.அடைய முயன்றால் நல்லது. வேடர்கள் இருவரும் நேற்று ரொம்ப நேரம் பாடம் சொன்னார்கள். உலகில் இந்த Bhavam பார்ப்பது அபூர்வம்.இறைவன் பக்தன், குரு சிஷ்யன், அரிய நண்பர்கள்,இன்னும் அரிய தாய் சேய் -----தவிர மற்ற தொடர்புகளில் சாத்தியக்கூறுகள் குறைவு.கோடியில் ஒரு மனிதன் பிறக்கலாம்.வேடர்கள் இருவரும் கோடியில் இருவர்தானே ! ஒருவித Heaviness உணர்கிறேன்.மறுபடி பேசலாம்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER  PROTECTS

திங்கள், 10 ஜூலை, 2017

பெண் விடுதலைப் புரட்சி


பல நூறாண்டுகள் அடிமைப் படுத்தப்பட்ட இந்தியாவில் விடுதலைப் புரட்சி வெடித்தது. அதற்கான விதையை ஓரிருவர் போட அது விருட்சமாகி, வனமாகி பிரிட்டிஷாரை,  திரும்பிப் பார்க்காது ஓட வைத்தது. ஆங்கிலேயர்களிடம் இருந்து நல்லன, அல்லாதன பலவற்றை எடுத்துக் கொண்டோம். பெண்களை,  பொருள் போல் பார்ப்பதை மட்டும் ஆதி காலம் தொட்டு மாற்றிக் கொள்ள நம்மால் முடியாது போயிற்று. எதற்கும் ஒரு வரம்பு உண்டு. வரம்புகள் மீறப் பட்டால் புரட்சி வெடிக்கும். செய்யாத தவறுக்கு சிறைவாசம் அனுபவிக்கும் கைதி போல,  அடிமைகளாய் நடத்தப் பட்ட பெண்கள்,  உயிருக்கும், ஆத்மாவிற்கும் பால் கிடையாது என்பதை,  பாரத சமூகம் புரிந்து கொள்ளாவிடின்,  புரிய வைப்பது அவசியம் என்று உணர ஆரம்பித்ததே பெண்விடுதலைப் புரட்சியின் ஆரம்பம். இது தேவையா, நல்லதா, இன்றைய பெண்கள் நடந்து கொள்ளும் முறை, நோக்கம் வெற்றி பெற உதவப் போகிறதா?

பெண்கள்,  தாம் ஆண்களை விடக் குறைந்து விடவில்லை என்பதை, உடை, கல்வி, செய்யும் வேலை, வகிக்கும் பதவி, இப்படிப் பல வழிகளில் வெளியிடத்  தொடங்கி சில ஆண்டுகள் ஆயிற்று. ஆனாலும்,  அவர்களை நல்ல பெண்கள் பட்டியலில் சேர்க்க பலர் தயாராயில்லை. உடை அணிவதை எடுத்துக் கொள்வோம். ஆண்கள் உடைகளை, குறைவான உடைகளை அணிவதன் மூலம்,  " பார்!  உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? " என்று கேட்கிறார்கள். நான் அடிக்கடி யோசிப்பதுண்டு. உடைமாற்றம் முழு மாற்றமல்ல என்று பெண்களுக்கு யார் சொல்வது என. ஆனால்,  அவர்கள் கண்ணோட்டத்தில் பாருங்கள். இப்போ ஒரு அம்மன் படம் வரைகிறோம். அது சரஸ்வதியா துர்கையா என்று கேட்டால் உங்களுக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது.  நாம் அந்த தெய்வங்களை தரிசித்ததில்லை. அந்த அம்மன் கையில் வீணை வரைந்தால் சரஸ்வதி. சூலம் வரைந்தால் துர்கை. சரிதானே?  அது போல முதலில், வெகு விரைவில் உணரும் புலன் கண் என்பதால், முதல் செய்தியைக் கண்ணால் பார்க்கும் உடைவழி அனுப்பும் ஆயத்தம் ஜீன்சும் டீ ஷர்ட்டும். என்ன தவறு?

இந்த விஷயத்திற்கு சில ஆழம் செறிந்த சூட்சுமக் காரணங்களை ஆராய்வோம்.நான்கு நிலைகளில் ஒரு செய்தி உணரப் படுகிறது. வெளியே (Physical) , உணர்வால்  (Emotional) , அறிவால்  (Mental) , சூட்சுமமாக ( (Psychological) என்பவை அந்த நிலைகள். குருக்ஷேத்திர யுத்தத்தில் பகவான் தேரை பாண்டவ கௌரவ சேனைகளுக்கிடை கொண்டு நிறுத்துகிறார். முதலில் அர்ஜுனன் உணர்வது ஆயாசம். அதன்பிறகு உணர்வதே,  என் சுற்றத்தாரல்லவோ இவர்கள் என்ற உணர்ச்சி மேலீடு. நம் சுதந்திரப் போராட்ட வரலாறு சொல்வதும் இதேதான். முதலில் என் நாடாகட்டும். அது போலவே, பெண் விடுதலைப் புரட்சியில், வெளிப்பார்வைக்கு, முதலில் என் உடல் என் சொந்தம் என்பதைத் தெளிவுபடுத்தவே பெண்கள் முதலில் செய்தது  உடை மாற்றம். அதை மற்றவருக்குப் புரியவைப்பது ஒருபுறம் இருக்கட்டும். தாங்களே உணர்ந்து கொள்ளவும் அநேகப் பெண்களுக்கு உடை மாற்றம் தேவைப் படுகிறது. மிகத்தெளிவாக இருப்பின், இதைத் தாண்டி அடுத்தது யோசிக்க இயலும். ஆனால்,  பெண்கள் பதட்ட நிலை தாண்டி, தெளிவு பெற,  நேரம் எடுத்துக் கொள்கிறார்கள்.  சவுகரியங்களுக்காக மட்டும் வேறு உடை அணிபவர்களை விவாதத்திற்கு உட்படுத்தவில்லை.

திடீரென இந்தத் தலைப்பில் எழுதக் காரணம் உண்டு.நேற்று நீயா நானா என்ற நிகழ்ச்சி தொலைக்காட்சியில் பார்த்தேன். பெண்கள் இரு பிரிவினராகப் பிரிந்து பேசினார்கள். அத்தனை பெண்களுமா ஏதோ பிரச்சினை கூறுவார்கள்? அவர்களில் வெளிப்பார்வைக்கு மிக தைரியமாய்த் தென்பட்டவரே அதிகம்.  இப்போது எல்லாம் மாறி விட்டது. ஆண் சமூகம் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டது என்று நினைக்கிறோம். ஆனால், இல்லை என்றே தோன்றுகிறது. சுதந்திரம் பெண்களிடம் உள்ளது. அதை வேறு யார்  தருவது?  வீட்டுப் பெண்ணை அடிமை கொள்ள நினைக்காது இன்னொரு உயிர் என நினைத்தாலே போதும். மதிப்புடன்   நடத்தப் பட்டால் அதை உணரும் திறன் இல்லா மூடப் பிறவி அல்ல அவள். கணவன் வாழ்வு, அவன் குழந்தைகள் வாழ்வு, அவன் பெற்றோர் வாழ்வு என ஏகப்பட்ட பேர் வாழ்விற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அவள் நேரத்தை, வாழ்வை நாங்கள் நிர்ணயிப்போம் என்ற மெத்தனப் போக்கிற்கு பெண்கள் தரும் அடியே முறிந்த திருமணங்கள். விவாகரத்துகள். அதிகரிக்கும் முதிர்கன்னிகள்.

இந்தப் போராட்டம் இன்னும் தீவிரப் படும்.  ஒரு தொடக்கூடாத எல்லையைத் தொட்டு நிலைப்படலாம். ஆனால்,  இந்தியக் கலாச்சாரம்  நம் பெண்களை எப்போதும் பற்றி உள்ளது. வெகுசிலர் பாதை தவறலாம். பெரும்பாலோர் மனதளவிலும் தவறுவதில்லை. பெண்களின் முதல் எதிரி இன்னொரு பெண். அது ஒரு சமூக அவலம். வெற்றி பெறும் ஒவ்வொரு ஆணின் பின் ஒரு பெண் இருக்கிறாள் என்பது பொது வழக்கு. ஆனால் என் அகராதிப்  படி, ஒரு பெண் வெற்றி பெற வேண்டுமெனில் அவள் பின் ஒரு நல்ல ஆண்மகன் உள்ளான். ஒரு புரிந்து கொள்ளும் குடும்பம் உள்ளது. இன்று உள்ள சாதனைப் பெண்கள் சிலரை எடுத்துக் கொள்ளுங்கள். மாமியாருடன் கிளம்பும் வரை உரிமைப் போராட்டம் நடத்திவிட்டு  (எதற்கு, சிக்கிக் கொண்டுள்ளவன் அவர்கள் பிள்ளையா, இவள் கணவனா என்ற பேருண்மையைக் கண்டறியத்தான்) மைக் பிடித்தால் பாட வருமா, கல்லூரியில் டீச்சரானால் கணக்கு சரியாக சொல்லிக் கொடுக்க முடியுமா,  எந்த சாதாரண வேலையாயினும் ரிதம் தப்பாதா ?  என் கல்லூரித் தோழிகள் தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பெரும் பதவிகளில் இருப்பதாக வாட்சப் செய்தி வந்தது. மிகவும் சந்தோஷமான செய்தி.  வீட்டில் உள்ளவர்கள்,  அவர்களுக்கு வடை சுட தெரியுமா என்பதையே யோசித்துக் கொண்டிருந்தால் விமோச்சனம் இல்லை. அதற்காக வடையை வட்டமாக செய்யத் தெரியாதவர்கள் வெளியில் போய் வேலை செய்யத்தான் வேணும் என்பதும் இல்லை.

கேவலத்தின்  உச்சமாக இன்னொரு செய்தி வந்தது. ஒரு பையன்,  ஒரு சக மாணவியிடம் காதல் சொல்கிறான். அவள் தனக்குள்ள கடமைகள், சாதிக்கும் ஆசை  பற்றிக் கூறி மறுக்கிறாள். காலம் ஓடுகிறது. அவளை ஐந்து வருஷங்களுக்குப் பின் பார்க்கிறான். அப்போது, அவள் நிர்வாணமாக நிற்கும் தன் குழந்தைக்கு உடை அணிவித்துக் கொண்டிருக்கிறாள். கண்ணியமாக  எழுதி உள்ளேன். ஊகிக்க முடிந்தவர் ஊகித்துக் கொள்ளுங்கள். சாதனை  என்று அதை அம்புக்குறியிட்டு அந்தப் பையன் நகைப்பதாக அந்தக் குறும்படம் முடிகிறது. வெட்கப் பட வேண்டியது அவனா அவளா?  பெண் வெளிவர இதைவிட சிறப்பான நேரம் இல்லை . வீட்டுக்குள் பெண்ணைப் பூட்டி வைத்த விந்தை மனிதர் தலை கவிழும் நேரம். என்ன,  எல்லாப் புரட்சியும் போல வரவரத்  தீவிரமாகிறது.  அபாய எல்லையை எட்டும். எட்டட்டும். முடிவுக்கும் வரும். வாழ்க்கைச் சக்கரம் சுற்றும். நாம் எல்லாவற்றையும் பார்க்க முடியாது. நம் சந்ததி பார்க்கட்டும். ஆணும் பெண்ணும் சமமான சமுதாயம் உருவாகட்டும்.


புதன், 5 ஜூலை, 2017

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் தரும் செய்தி

தஞ்சாவூரின் தலையாட்டி பொம்மைகள் பிரசித்தம். மிக அழகாகத் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டும். சிவப்பு கலரில் எங்கள் வீட்டில் மூன்று தலையாட்டி பொம்மைகள் உண்டு. வேகமாக ஆட்டி விட்டால் வேகமாய் ஆடும். இல்லை என்றால் நாம் சொன்ன வேகத்திற்கு ஆடும். ஆனால் விழவே செய்யாது. கீழே குண்டாக.  மேலேயும் குண்டுதான்.  ஆனால் சற்றுக் குறைவான குண்டு. அணுகுண்டு போடப்பட்ட ஜப்பான் தன்  நிலைக்கு மீண்டாற்  போல மறுபடி தன்னிலை அடையும். இந்த பொம்மைகள் சிறு வயது முதலே என்னிடம் பேசுகின்றன. அவற்றிற்கு பாகுபாடில்லை. உங்களுடனும் பேசும். உற்றுக் கேட்கும் யாருடனும் பேசும். அவை ஏதோ செய்தி சொல்ல வருவது எனக்கும் அதற்கும் புரியும்.

நம்மை என்ன பண்ணினாலும்,மனிதர்களோ, சூழ்நிலைகளோ , மறுபடி நம் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும் என்பது அவை தரும் முதல் செய்தி. நாம் ஆட்டம் காண, யார் காரணமானாலும், இயல்பு நிலை அடைவது நம் கையில்தான் . தஞ்சாவூர் பொம்மையை ஆட்டி வேடிக்கை பார்ப்பவர் யாரேனும் அதை நிறுத்தப்  பார்க்கிறார்களா? சும்மா போகிற போக்கில் அதை சிலர் ஆட்டுவார்கள் .சிலர் அது ஆடுவதை ரசிக்க ஆட்டுவார்கள். அதெல்லாம் அது யோசிப்பதில்லை. 'நீ ஆட்டிக்கோ . ஆடுகிறேன்.ஆனால் விழப் போகிறேன் என்று எண்ணினால்,நீதான் முட்டாள்.ஆடிய சுவடு கூட இன்றி நின்று விடுவேன் '.  இந்த வாழ்க்கைச்  செய்திதான் எனக்கு இத்தனை நாள் பிடித்தது.புரிந்தது.

எல்லாம் பழையன கழிதல் ,புதியன புகுதல். தலைமுறை மாற்றங்கள். பொம்மைக்கு தலைமுறை இடைவெளி  உண்டா?  ஏன் இல்லை?  நேற்று வீடு தேடி ஒரு பொம்மை வந்தது, அன்பளிப்பாக.  அந்த  பொம்மையிடமே , அதை ஸ்லாகித்துப் பேச,  அது இந்தக்கால இளைஞர்கள் போல , என் எண்ணம் மாற்றம் காண வேண்டிய நேரம் வந்துவிட்டதை சொல்லிற்று. பொம்மைக்கு , தலைமுறை இடைவெளி என்று நான் குறிப்பிடுவது,ஏதோ வித்தியாசமாக எழுத வேண்டும் என்பதற்காக இல்லை. உண்மை. பொம்மை செய்யும் கலைஞன்,சிற்பி ஆகியோரின் உணர்வுநிலை  அந்தந்தப் படைப்பிற்குள் செல்கிறது. கலைஞனின் எண்ணம், படைப்பின் உயிர். ஒரு தாத்தா,அப்பா,மகன் என்று மூன்று தலைமுறைகள் பொம்மை செய்தால், பொம்மைகளும் மூன்று தலைமுறை காண்கிறது என்று அர்த்தம்.


'ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு' என்பது 2000வருடங்களாக   நமக்களிக்கப் பட்ட பாடம். 'ஆமாம் போடு, தலையாட்டு, யார் என்ன செய்தாலும் சரி சரி என்று கூறப் பழகிக் கொள் . ஆனால் உறுதியாக இரு ' என்பது,  தாத்தா கால பொம்மை சொன்ன பாடம். நேற்று வீடு வந்த பொம்மை தலையாட்டுவது வேறு பொருளில். அது "மாட்டேன்" என்று சொல்கிறது. "பிடிக்காத விஷயத்திற்கெல்லாம், 'இல்லை' சொல், சொல்லி விட்டு குற்ற உணர்வற்று அசையாத மனத்துடன் இரு" என்று சொல்கிறது. "ஆட்டுவிக்கும் உனக்குப் பிடித்ததெல்லாம் எனக்கும் பிடிக்கும்,என்றாவது சரி சொல்வேன்,  அல்லது வீழ்ந்து போவேன் என நினைக்காதே , என் வாழ்வும் இருப்பும் நான் நிர்ணயிக்க வேண்டியது, தள்ளி நின்று கொள்" என்கிறது.  ஆமாம், இன்று தலையாட்டி பொம்மையுடனா குழந்தைகள் விளையாடுகின்றன? அவை, பகட்டான கண்ணாடி பதித்த அலமாரிகளில் சீந்துவாரற்று  நிற்கின்றன.  குழந்தைகள் விளையாடத்தான் பல விலைகளில் மொபைல் உள்ளதே?

ஆனால் ஒரு சிறு நெருடல் எனக்கு. பொம்மை தலையாட்டலில் 'நோ 'என்பதே செய்தி என்று உணர்ந்தவர்கள், அந்தக் காலத்திலும் உண்டு.  இந்த நூற்றாண்டிலும், பொம்மை எல்லோருக்கும் தலையாட்டச் சொல்கிறதாக்கும் என்று ஆயாசத்துடன் தலையாட்டுபவர்கள் உண்டு. எப்படியாயினும் தன்னிலையை அடையும் வரை சரிதான். ஸ்வபாவங்கள் மாறாது. வாசனைகள்.கரு உருக்கொள்ளும் போதே கூட வரும் பதிவுகள்.  மாற மனம் வைத்தாலும், இறைவன் அருள் இன்றி எதுவும் செய்ய இயலாது என்ற உண்மையை மீண்டும் ஒரு முறை பறைசாற்றும் பதிவுகள்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

புதன், 17 மே, 2017

வாழ்க்கை கதையின் நாயக நாயகிகள்

அவரவர் வாழ்க்கையின் கதாநாயகன்,கதாநாயகி அவர்கள்தான்.பூமிக்கு நடிக்க வந்த நொடி நீண்ட வாழ்வெனும் நாடகத்தின் முக்கிய பாத்திரமாகி விடுகிறோம்.கதையில்,சினிமாவில்,நாடகத்தில் ஹீரோ நல்லவன்.அவனுக்குத் துணை போவோர் எல்லோரும் நல்லவர்.வில்லன்கள் இருப்பார்கள்.ஹீரோவுக்கு எல்லோருடனும் தொடர்புண்டு.ராமாயணக் கதையின் நாயகன் உண்மையான ஹீரோ.அவன்தான் உண்மையில் ஹீரோ. "நீ என்ன ராமனா" என்ற வழக்கு நமக்குத் தெரியும். ராவணன் வாழ்வில் அவனே ஹீரோ.ராமன் யாரையும் விரோதியாய் நோக்கவில்லை.தசரத மஹாராஜா வனம் போகக் கட்டளை பிறப்பித்த போதும் அவன் முகம் சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரையாகவே இருந்தது என்கிறார் கம்பர்.நிஜப்பூ வாடும்.சித்திரப்பூ வாடாது.கைகேயி,மந்தரை,சூர்ப்பணகை ,சுக்ரீவன்,குகன்,விபீஷணன் என்ற ஆயிரம் ராமாயணக் கதாபாத்திரங்களில் யாருடனும் ராமனுக்கு துவேஷம் துளியும் இல்லை.நல்ல ,அல்லாத பல பெயர்களை சேர்த்துச் சொல்லுகிறேன்.துவேஷம் அல்லாதது மட்டுமில்லை.எல்லோரிடமும் ஒரே பார்வை இருந்தது.கருணை இருந்தது.ராவணன் மட்டும் செய்யக் கூடாத மாபாதகம் செய்து ஸ்ரீ ராமனால் வதம் செய்யப்படுகிறான்.சூட்சுமமாகப் பார்த்தால் அவன் மோட்சத்தை நல்கின பெரும் கருணை ராமனுடையது.

நாம் அனைவரும் மனதில் வில்லன் போல் யோசித்து ஹீரோ போல் வாழ எண்ணுகிறோம்.அது நடக்காது.பிறரால் நமக்கு சங்கடங்கள் ஏற்படுகின்றன.உண்மைதான். "அரண்மனையை விட்டுக் காட்டுக்குப் போ" என்றால் சங்கடம் இல்லையா? நேற்று வரை பாசம் பொழிந்த அன்னை கைகேயியின் பாராமுகம் சங்கடம் இல்லையா? ராமாயணக் கதை ஓரளவு அறிந்தவர்கள்,சங்கடம் தரும் மனிதர்களை எதிர்கொள்ளும் போது தன்னை ராமனாக எதிரே உள்ளவரை அன்னை கைகேயியாக நினைத்துக் கொண்டால் மனசு கலங்காது.எந்த நல்ல விஷயம் கேட்டாலும்," சொல்லி விடலாம்,செய்வது கடினம் " என்றே ஒதுக்கி விடுகிறோம்.தப்பு.முயன்றால் முடியும்.முயலவே மனம் இல்லையென்றால் எப்படி? இன்னொன்று,நம் ஒவ்வொரு அணுவிலும் நேரான எண்ணங்கள் நிறைந்தாலொழிய உண்மையான அமைதியை நாம் அனுபவிப்பது சாத்தியம் இல்லை.நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் வரை அமைதி இன்ஸ்டால்மென்டில்தான் கிடைக்கும்.பணம் எனக்கு பொருட்டல்ல என்போம்.மனசின் ஆழம் கணக்குப் போடுவோம்.அம்மா மாதிரிதான் மாமியார் என்று மற்றவரை ஏமாற்றுவோம்.மனசாட்சி வெளியே தெரியாமல் சிரிக்கும்.நாம் மற்றவருக்குத் தரும் அழுத்தம் நமக்குத் தெரிவதில்லை.கைகேயியால் ராமனுக்கு ஸ்ட்ரெஸ் தர முடியவில்லை.ராமனோ கைகேயிக்கு ஸ்ட்ரெஸ் தர நினைக்கவே இல்லை.அவன் முகம் ஏன் மலர் போல் இருக்காது?நம் முகம் எப்படி மலர்ந்திருக்கும் ?

நாம் நம்மைப் பற்றி முதலில் முழுமையாக அறிய வேண்டும்.அதை செய்யாமல் பிறர் செயல்களில், வாழ்வில் தலையிடுவதில் அர்த்தமில்லை.மற்றவர் என்னை எப்படி நடத்துகிறார்கள் அல்லது நடத்த வேண்டும்,என்பதை விட,யார் நம்மை எப்படி நோக்கினாலும்,நடத்தினாலும் நான் ராமன் போலத்தான் இருப்பேன் என்று நம் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளலாமே? அப்போது ,நம் மனம் நம்வசப் படும் போது,மற்றவர் தரும் எந்தத் துன்பமும் நம் முன் செயல் இழக்கின்றன.ராவணன் வில்லன்.மற்றவரால் நம் வாழ்வு நடத்தப் பட்டால் நாம் வில்லன்தான்.மற்றவர் பேச்சு கேட்டு ஆசைவயப் படுதல் ,மற்றவர்களை நம் இஷ்டத்துக்கு ஆட்டுவித்து பலியிடுதல்,நல்லோர் சொல் அவமதித்தல் இன்னும் பல.கைகேயியும் விதிவசத்தால் இந்தக் குற்றங்கள் அனைத்தும் செய்தாள்.நாம் கதாநாயகனா வில்லனா என்பதை நமக்கு நாமே நிர்ணயித்துக் கொள்ளும் கட்டுப்பாடுகளே தீர்மானிக்கின்றன. ஹீரோ,வில்லன் எல்லோருக்கும் வாழ்வு சந்தோஷம் ,சங்கடம் இரண்டையும் தரும்.வேறுபடுவது அவரவர் பார்வை.அனைவரும் ஹீரோவாகவே பிறக்கிறோம்.அதே போல் வாழ்வது, Conscious Practice ,Constant Vigilance  இவை இருந்தால்தான் முடியும்.நம்மால் முடியும்.ராமாயணம் படித்தேன்,கேட்டேன்,தொலைக்காட்சியில் பார்த்தேன் என்பவர்களால்  முடிய வேண்டும்.முயற்சி செய்வோம்.ஓரடி வைப்பதும் நலமே.நெடிய,நல்ல பயணங்கள் அவ்வாறுதான் ஆரம்பிக்கின்றன.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

சனி, 13 மே, 2017

Don't handle with care

கவனத்துடன் கையாளவும் என்ற வாசகத்தைப் பல இடங்களில் பார்த்திருக்கிறோம்.உண்மையாகச் சொல்லுங்கள்,அந்த வாசகம் உங்களை சற்று டென்ஷன் ஆக்குகிறதா இல்லையா?என்னை ஆக்குகிறது.இது சாதா விஷயம் இல்லை.எங்கெல்லாம் அந்த வாசகம் பார்க்கிறோம்?கண்ணாடி,பீங்கான் சாமான்கள் Delicate சமாச்சாரங்கள் இருக்கும் இடத்தில்தானே ?ஏன் எச்சரிக்கப் படுகிறோம்?கொஞ்சம் கவனம் தப்பினாலும் மறுபடி சரி செய்ய இயலாத அளவு Damage ஆகி விடும்.நீங்கள் எல்லாம் எப்படி தெரியாது.நான் அவை பக்கமே திரும்ப மாட்டேன்.எதற்கு வம்பு?கவனம் நல்ல குணம்தான்.ஆனால் எப்போதும் ஏதோ Sindhbad and the sailor போல ஜாக்கிரதை உணர்வை மூட்டை போல மனசில் சுமக்க இயலாது.அவசியம் இல்லையே.கண்ணாடியுடன் புழங்குபவர்கள் ஜாக்கிரதையாக இருக்கணும்,அல்லது carefree ஆக இருக்கணும்.உடைந்தால் உடையட்டும்.அதன் தன்மை உடைவது.நான் உடைக்கலை என்றால் வேறு யாரோ கைதவறி போடும் போது உடைந்தே தீரும்.சாதாரணமாகப் பயன்படுத்துவோம்.உடையாமலே இருக்கவும் 100 சதவிகிதம் வாய்ப்பு உள்ளதே ?அதிக ஜாக்கிரதை அழுத்தம்.நான் கண்ணாடி கையாள விரும்பாமைக்குக் காரணம்,எனக்கு அழுத்தம் பிடிப்பதில்லை.உடைப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது என்னால் இயலவே இயலாது.தூர இருந்து ரசிப்பதுடன் சரி.

மனிதர்களில் கண்ணாடிப் பாத்திரம் போன்றவர் உண்டு.அவர்களுடன் பழகுவது கொஞ்சம் கஷ்டமே.பலர் தள்ளியே இருப்பார்கள்,அவர்களிடம் இருந்து.ஆனால் அந்தக் கண்ணாடி மனிதனோ பெண்ணோ நாம் அவசியம் தொடர்பில் இருக்க வேண்டிய நபரானால்,என்ன நடக்கிறது?எப்படிக் கையாளலாம்?ஏற்கெனவே கூறி விட்டேன்.இது டயரி.என்னைக் கண்ணாடிப் பாத்திரமாக எண்ணிக் கொண்டு ஒரு பார்வை.மனிதரில் பல நிறங்கள், "இது ஒரு விசித்திர வண்ணம் "என்று எண்ணிக் கொண்டு  நட்பாக இருக்கலாம்.ஏதும் பிரச்சினை வந்தால் வரும் போது எதிர்கொள்ளலாம்.ஆனால் எப்போதும் ஜாக்கிரதையாகவே அவர்களிடம் நடந்து கொண்டால் அதை மனம் உணர்கிறது. மொழி ஏதும் இன்றி ஏதோ குறைவதாக உணர்கிறது.பயம் கலந்த அன்பாக அது அவர்களை அடைகிறது..Delicate ஆக இருப்பது மற்றவரை பயமுறுத்தும் விஷயமா?ஏன் அப்படி? முதலில் கூறினாற்  போல் தேவை இல்லை என்றால் சுத்தமாக விலகி இருக்கலாம்.ஆனால் கடவுள் ஆன்மாக்களை இணைத்திருந்தால்?பயத்துடன் அணுகுவது அவஸ்தை அல்லவோ? ஒரு நிமிடம் கூட இயல்பை வெளியிட முடியாத அவஸ்தை.எதற்கு? நாம் இயல்பாய் இருந்தால் கண்ணாடி மனிதர்கள் முதலில் கஷ்டப்பட்டாலும்  என்றேனும் மாறலாம்.இயல்புக்கு மாறாய் ஜாக்கிரதை உணர்வு பிரதானமாக செயல்பட்டால் இரு சாராருக்கும் கஷ்டம்.அது திரை.கண்ணால் பார்க்க இயலாத திரை.

பொருள்களைக் கையாள கவனம் தேவை.மனிதர்களுடன் பழகவும் கவனம் தேவையே.ஆனால் உணர்வு குறுக்கீடு என்று ஒன்று உண்டு.கண்ணாடி உடைந்தால் ஒட்டாது.வறட்டு வைராக்கியங்கள் அற்ற மனித மனம் மாறலாம்."மிக கவனத்துடன் பழகவில்லையெனில் ஆபத்து" என்ற பிரிவு மனிதர்களை ,தொடர்பில் வைப்பது தேவை இல்லை எனில்,உறுதியாக மனசு, வாழ்வில் இருந்து விலக்கி விட வேண்டும். ஆனால் தவிர்க்க இயலாது வாழ்வில் இணைந்த உறவுகளை,Please,don't handle with care.ஆமாம் எதெல்லாம் தவிர்க்க இயலாத உறவுகள்? தன் இருப்பை விட இல்லாமையால் நம்மை நெருக்கமாக உணர வைப்பவர்கள்,நம் சந்தோஷங்கள் மட்டும் இன்றி வருத்தங்களையும் உணர முடிபவர்கள்,அன்பை கொடுக்கல் வாங்கல் என்ற வட்டத்துக்குள் அடக்காதவர்கள் ,யார் இல்லை என்றால் பாட்டரி இழந்த கடிகாரம் போல் இயக்கமே கேள்விக்குறியாகுமோ அவர்கள்,எந்த நிலையிலும் நம்மை விட்டுத் தராதவர்கள்.......இவர்கள் எல்லாம் தவிர்க்க இயலா உறவுகளே. யாருடைய அருகாமையில், நான் தனியாக இருந்தால் எப்படி இருப்பேனோ அப்படி இருக்க முடியுமோ அவர்கள்தான் என்னைப் பொறுத்தவரை நெருக்கமானவர்கள். அவர்களுடன் மட்டும் தொடர்பிருந்தால் போதும்.ஆனால் நாம் அப்படி நினைக்கும் நபர் அதே போல் நினைத்தால் Equation =  .  இல்லை எனில் நமக்கு அமைதி உண்டென்றாலும் Harmony missing தான். இறைவன் சமப்படுத்த வேண்டிய Equations !

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

வியாழன், 4 மே, 2017

விசா,பாஸ்போர்ட் இன்றி செல்லக் கூடிய உலகங்கள்----செல்வது அவசியமா?

போஸ்ட் வரவர டயரி எழுதுவது போல் ஆகி விட்டது.தோன்றுவதை பதிவு பண்ணுகிறேன்.மற்றவர் டயரி படிக்கும் ஆசை இருந்தால்இதையும் படிப்பீர்கள் .ஆனால்," என் டயரி இந்தா படி" என்று ஒருவர் கொடுத்தால் படிக்க நேரம் தவிர, வேறு உணர்ச்சித் தடைகள் இருக்காது.நேற்று ஆவின் ஜங்க்ஷன் போய் இருந்தேன்.எல்லாரும் பூங்காவை வாக் என்ற பெயரில் சுற்றி விட்டு இழந்த கலோரிகளை திரும்பப் பெறாமல் வெளியே போனால் ஆவின் நிர்வாகம் கோபிக்குமோ என்ற பயத்தில் நாம் வீட்டில் நாலு பேர் சாப்பிட காய் எடுத்து வைக்கும் அளவு பெரிய பௌலில் விதம் விதமாய் ஏதேதோ ஆவின் ப்ராடக்ட்ஸ் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.பிஸ்ஸா மணம் நாசியை நிறைத்தது.மூக்கு வழி மூளைக்கு எதிர் திசையில் பயணித்த அந்த மணம்தான் போஸ்டின் மூலம்

பூலோகம் அதாவது பூமி மட்டும் நமக்கு தெரிந்த இடம்.மேல் உலகம்,பாதாள லோகம்.சத்ய லோகம்,தேவ லோகம்,சந்திர மண்டலம் என்று பிரபஞ்சம் நாம் அறியாத பல உலகங்களையும் உள்ளடக்கியது.அந்த உலக நடப்புகள் நமக்குத் தெரியாது.தெரியாதவரை நம் நினைவுகளில் குழப்பம் இருப்பதும் இல்லை.நன்கு அறிந்த ஒன்றும் ஏதும் அறியாத வேறொன்றும் குழப்பங்கள் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவை.பிஸ்ஸாவிற்கும் இதற்கும் தொடர்பு உள்ளது.பிஸ்ஸா சாப்பிட்டதில்லை.அதனால் பிஸ்ஸா ஹட் எனக்கு அறியா உலகத்திற்கு சமம்.சரவணபவன்,முருகன் இட்லிக்கடை எல்லாம் அப்படி என்று எண்ணி விடாதீர்கள்.எத்தனை கிளைகள் உள்ளன என்று கூட தெரியும்.எதற்கு சொல்கிறேன் என்றால் பிஸ்ஸா உண்பதின் கெடுதல்களை எடுத்துக் காட்டுவதல்ல நோக்கம். சில பேருக்கு தாஜும் சோளாவும் தெரியும்.தெருமுக்கு கையேந்திபவன் தெரியாது.அது போல ஒரு ஒப்பிடல்தான்.புதுப்புது உலகங்களைத் தேடி மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று தோன்றிற்று.ஒரு முறை சென்று,{ஹோட்டலை சொல்லவில்லை,பொதுவாக சொல்கிறேன்}, அதில் ருசி ஏற்படுத்திக் கொண்டால் அதில் இருந்து மீள்வது எளிதல்ல.டாஸ்மாக் உதாரணம்.வேறு பல சொல்வேன்.எல்லோரும் படிக்கும் டயரி என்ற பின் யாரையாவது புண்படுத்தி விடக்  கூடாதே என அச்சம் காரணமாகத் தவிர்க்கிறேன்.

நல்லதிற்கும் இதேதான் நியதி.நல்லதில் ஏற்படும் ருசியும் மறுபடி செய்யத் தூண்டுவதே.இங்குதான் முன் சொன்ன அறிந்த,அறியாத உலகங்கள் பற்றி யோசிக்கிறேன்.ஒரு விஷயம் நாம் அனுபவித்து உணர வேண்டும்.அல்லது அதை நூறு சதவிகிதம் அறிந்தவர் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டும்.இதெல்லாம் நல்லது என்று எத்தனை பேர் பட்டியல் இட்டுப் போன பாதைகள் உண்டு.தைரியமாகப் போகலாம். அதை விட்டு இன்று இட்லிக்கு பதில் பிஸ்ஸா சாப்பிட்டு பார்ப்போமா என்று சாப்பிட்டு கண்ணுக்குத் தெரியாத ஆசையின் வசப்பட்டு திண்டாட வேண்டாம். இன்றைய குழந்தைகள்தான் பாவம்.சென்ற தலைமுறை வியப்புடன் பல உலகங்கள் பற்றி கதை கேட்டது.தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாய் அவை எல்லாவற்றையும் உள் சென்று நோக்க இந்தத் தலைமுறை படாதபாடு படுகிறது.பெற்றோரின் பேராசைகள்தான் விசா.தொழில்நுட்ப வளர்ச்சி பாஸ்போர்ட்.பாஸ்போர்ட் எடுப்பது ரொம்ப கஷ்டம் இல்லை.விசாவுக்கு போய் நின்றவர்கள் அதன் கஷ்டம் அறிவார்கள்.தாம் விட்டதைக் குழந்தைகள் மூலம் அடையும் பெற்றோர் ஆசை ரெடி விசா.பயணத்திற்கு என்ன தொல்லை?

சில இடங்களுக்கு விசா கிடைப்பது சுலபம்.U S A விசா அளவு கஷ்டமில்லை.பெற்றோரும் அதே போல அளவுகோல் வைத்துள்ளார்கள்.அவர்கள் சரி என்பதை குழந்தைகள் செய்யலாம்.அவர்களே ஆறடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயாதா? கூடாது என்ற சொல் புது உலகம் பார்க்கும் ஆசையை அதிகம் ஆக்குகிறது.அதனால்தான் தோன்றியது அறியா உலகங்கள் இருப்பதில் தவறில்லை என்று. சக்கரம் சுற்றி வரும்.புரிதல் ஏற்படும்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS 

செவ்வாய், 2 மே, 2017

நேர்பட ஒழுகு

அவ்வையார் ஆத்திச் சூடியில் நேர்பட ஒழுகு என்கிறார்.அப்பீல் இல்லாத விஷயங்கள்தான் ஆத்திச்சூடி முழுமையும்.ஒரு நேர்கோடு போட்டுக் கொண்டு வரும் போது ஸ்கேல் விலகினாலோ நம்மிடம் சிறு அதிர்வு ஏற்பட்டாலோ கோடு தடம் மாறும்.கோணலாகும் .சாக்பீஸ் பென்சில் கோடுகள் தப்பாகும்  போது அழித்து மறுபடி நேராக்கலாம்.பேனாவால் போட்டால் ஒயிட்னர் தேவை.அது இங்க் கரையை மறைக்கும்.ஆனால் கோடு எங்கே தப்பியது என்று முழுமையாய் மறைக்காது.பர்மனன்ட் மார்க்கர் என்ற ஒன்றுண்டு.அதால் கோணல் கோடு போட்டால் பக்கம் வீண்தான். அவ்வயாருக்கு நேர்பட ஒழுகு என உள்ளிருந்து குரல்(என்னைப் பொறுத்த வரை இறையின் குரல் ) கேட்டது.Effortless ஆக எழுதி விட்டார். சாமானியர்களுக்கு பேப்பர் பென்சில் என்று ஆரம்பித்துத்தான் யோசிக்க முடியும்.சரிதானே?

நேர்பட ஒழுகுதல்,பேசுதல் தானாக பிரயத்தனங்கள் இன்றி நடைபெற வேண்டியது.அதன் திரிபு ஆச்சரியம் தருகிறது.ஏன் என்ற கேள்வி தருகிறது.முக்கியமாக,பேச்சு.உதாரணங்கள்."இப்பதான் எங்கள் வீடு வர வழி தெரிந்ததா"என்ற ஒரு வழக்கு உள்ளது.முதல்முதல் இந்த வாக்கியம் கேட்ட போது எனக்கு அர்த்தம் விளங்கவில்லை என்றால் நீங்கள் நம்பத்தான் வேண்டும். இப்போது தெரியும்.உலகம் இதெல்லாவற்றையும் தெரிய வைத்தே தீரும்.சென்ற வாரம் என் கஸினுக்கு தொலைபேச அழைத்தேன்."என் வீட்டிற்கு ஒருவர் வந்திருக்கிறார்.பேசிக் கொண்டுள்ளேன்.நானே கூப்பிடட்டுமா"என்றான்.இது ஒன்றும் தப்பில்லை.கூடவே," அந்த ஒருவர் உனக்கும் தெரிந்தவர்" என்று கூறி முடித்தது இப்போது தமாஷாக உள்ளது.சில ஆண்டுகள் முன் எரிச்சலாக இருந்தது.நாம் எல்லாவற்றையும் எல்லாரிடமும் சொல்லத் தேவையில்லை.ஆனால் "உனக்குத் தேவையில்லை என் விஷயம் " என்று அவசியம் தெரியப் படுத்துவதன் நோக்கம் ரொம்ப உயர்ந்ததாகத் தெரியவில்லை.இதைத்தான் கோணல் கோடு என்கிறேன்.மன விகாரம்.நம் செயல்பாடுகள் பிறர் அறியக் கூடாது என்றால் அவை பற்றி வாயே திறவாதிருப்பதல்லவோ உத்தமம்.?

இன்னும் பல.உங்களால் ஒருவருடன் தொடர்பில்லாமல் இருக்க முடியாதா?எளிமையாகத் தொடர்பு கொள்ளுங்கள்.இது வியாபாரம் அல்ல.15 ரூபாய் கொடுத்தால் ஒரு கிலோ தக்காளி என்பது போல.நான் நாலு தடவை உன்னை வந்து பார்த்து விட்டேன்.அடுத்தது உன் முறை என்றால் கோட்டின் ஸ்கேல் நகர்வது எனப் பொருள்.நினைப்பதை மட்டும் வெளிப் படுத்துவதுதான் நேர்மை. ஆனால் நினைவே நேராய் இருப்பதே உண்மை.செம்மை.நீயெல்லாம் என்னைக் கண்டுகொள்ள மாட்டாய் ,என்னுடன் பேச மட்டும் உனக்கு நேரம் கிடைக்காது,இன்னும் நான் இருக்கேனா என பார்க்க வந்தாயா,விமானப் பயணம் கொடுத்து வெச்சிருக்கணும்,வெளிநாட்டு யோகம் உனக்கிருக்கு எனக்கில்லை,......இந்த புலம்பல்கள் எல்லாம் அமைதி தொலைந்ததின் அறிகுறிகளே. பேசுவது புலமையின் தைரியத்தின் அடையாளம் என நினைக்கிறோம்.ஆனால் கேட்பதற்குத்தான் இவை அதிகம் வேண்டும்.நேர்பட யோசித்தால் நேர்படப் பேசவும் செய்வோம்.நேராகப் பேச தொடங்கினால் வார்த்தைகள் குறையும். தானாக மௌனமான நேரங்கள் அதிகரிக்கும்.ஆற்றல் சேமிப்பு ஏற்படும்.நேராகப் பேச யோசிக்க வேண்டாம்.நேரம் மிச்சம்.கோணல் பேச்சுகளை முதலில் மனம் உற்பத்தி செய்து ,மூளை அதை process செய்து நாள் பூரா இயங்கும் வாய் அவற்றை உமிழ்ந்து என கிட்டத்தட்ட ஒரு இண்டஸ்ட்ரியே இயங்க வேண்டும்.

இன்னும் பற்பல அதிர்ச்சிகள் அனுதினம்.ஆனால் அதிர்ச்சி ஏற்படுவது நம்மிடம் ஒளிந்து கொண்டுள்ள குறைகளை, நாமே அறியாது பதுங்கி உள்ள குறைகளை நாம் அறியும் வழியே.உண்மையில் நேர்பட ஒழுகுபவர்கள் அதிர்ச்சி அடைவதே இல்லை.அவர்களுக்கு, தான் ஒழுங்காக இருப்பதே இன்னும் அவசியம். எல்லாவற்றில் இருந்தும் கற்க அவர்களுக்கு ஏதோ உள்ளது.ஒவ்வொரு நொடியும் தான் செய்ய வேண்டியது ஏதோ உள்ளது.சரியாகப் பார்த்தால்,ஒரு பெரிய stupidity, {அதாவது,நம்முடைய அல்லது பிறருடைய அறியா செயல்கள்},நேரம் கடந்தாவது   மிகவும் தெளிவாக நாம் அறிய வேண்டியதை விளக்கக் கூடும். SRI AUROBINDO MOTHER SAYS,"ANY EXAGGERATION,ANY EXCLUSIVENESS,IS A LACK OF BALANCE AND A BREACH OF HARMONY,AND THEREFORE AN ERROR" யாருக்கு?நேர்பட ஒழுக விரும்புவோருக்கு.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

புதன், 19 ஏப்ரல், 2017

எண்ணங்களாய் நிறைந்தவர்கள்

இரண்டரை மாதங்களாக எதுவும் எழுதவில்லை.மனம் தொடும் நிகழ்வுகளே எழுத்து.60 நாட்களாகவா எதுவும் மனத்தின் ஆழமான பகுதியை அடையவில்லை ?அப்படி என்றால் அந்த நாள்கள் வாழ்ந்த கணக்கா வாழ்வில் இருந்த கணக்கா?வாழத்தான் பிடிக்கிறது.வாழ்க்கை என்பது எண்ணமா ,நம்மைச் சூழ்ந்துள்ள மனிதர்களா,தினப்படி நடக்கும் நிகழ்வுகளா?ஒவ்வொருவர் பார்வையில் ஒவ்வொன்று.எனக்கு வாழ்க்கை எண்ணம்தான்.எந்த ஒரு நிகழ்வு எந்த ஒரு நபர் எண்ண வடிவில் எனக்குள் புக முடியுமோ அவர்களுடன்,அவைகளுடன் நான் நடத்தின நாடகம்,என்னைக் கருவியாக்கி இறைவன் நடத்தின நாடகமே இந்த 50+ ஆண்டுகள் .

இன்று அப்பாவின் பிறந்த நாள்.அம்மாவும் அப்பாவும் வெறும் மனிதர்களல்ல.தெய்வங்களும் அல்ல . அப்பா என்பது ஒரு எண்ணம்.Feel .மனதை மென்மையாக்கி மனதை அமைதியாக்கி உருவம் காட்டாது வ்யாபித்துள்ள எண்ணம்.சென்ற வருஷம் இந்த நாள் தன் இறுதி நாட்களில் இருந்தார்.உண்மையில் நாட்களை எண்ணிக் கொண்டு இருந்திருக்கிறார்.மனிதன் எப்படி எதையும் உணரும் சக்தி அற்ற அற்ப ப்ராணி என்று எண்ணங்கள் ஒடுங்கிப் போகின்றன. "Many more happy returns அப்பா "என்று பிறந்த நாள் வாழ்த்து ,வாழ்த்த வயதில்லாததால் வணக்கம் சொன்னேன்.அதற்கு பொருள் என்ன?தம் வாக்கால் ஒன்று சொன்னால் நடக்கும் என்று உணர்ந்தவர் தவிர பிறர் கூறும் இந்த வார்த்தைகள் வெறும் ஓசை அன்றோ?நல்ல வார்த்தைகளே வெறும் ஓசைகள் என்றால்,நிஜமான ஓசைகள் கேட்கப் பிடிக்காது போவது தப்பில்லை.என் அப்பாவின் இறுதி நாட்கள் அப்படித்தான் ஆரவாரம் குறைந்து போய்,ஆசைகள் அற்றுப்போய் ,எல்லா ஒலிகளும் ஓசையாய் ஒலித்து ,சாப்பிடுவது ஒரு வேலையாகிப்போய்,குளிப்பது கூட நம்முடையது அல்லாத ஒரு பாத்திரத்தைக் கழுவும் வேலை போலாகி நகர்ந்தன.திட்டம் இட முடியாத இறுதிப் பயணமும் அதே போல் " கொஞ்சம் வெளில போய் வரேன்" என்பது போல் நிகழ்ந்தது.என்ன, "வரேன்" மட்டும் சொல்லவில்லை. "இந்த வாழ்வும்,,இந்தக் கூடும் இந்த எல்லாமும் போதும்.அனுப்பி வைத்தவன் வேறு நல்ல , ""விசையுறு பந்து போல் உடல் தருகிறேன்,வா""  என்று ஆசை காட்டி அழைக்கிறான் .சொல்லிக் கொண்டு புறப்பட்டால் மூக்கிலும் வாயிலும் ஒரு கருவி பொருத்தி ஹாஸ்பிடலில் ,நீங்கள் கடவுள் என நினைப்பவரிடம் என்னை அனுப்பி வைப்பீர்கள்.நைந்த இந்த தேகத்தில் இன்னும் கொஞ்சம் நாள்கள்,அர்த்தமற்ற சஞ்சலங்கள்,போதும் சாமி "என்று சட் என,நொடியில் நகர்ந்து விட்டார்.இன்று உன்னை ரொம்ப நினைத்துக் கொள்கிறேன் அப்பா.நான் கூறியபடி நீ எண்ணமாய் எனக்குள் நிறைந்திருந்தால் எங்கே போய் விடுவாய்?மறுபடி உன்னைப் பார்ப்பேன்.

எண்ண வடிவில்,ஒவ்வொருவருக்குள்ளும்  நிகழ்வுகள்,மனிதர்கள் உண்டு.புறச் சலனங்களுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை.வாழ்வு அகம் சம்பந்தப் பட்ட ஒன்றே.அகம் அழகானதொரு உலகம்.அதை சரியானபடி திறக்க இறை அருள் தேவை என்றாலும்,போனால் போகிறது என சாவியை பகவான் நம் கையில் கொடுத்து வைத்துள்ளார்.தொலைத்து விட்டுத் தேடக் கூடாது.எண்ணமாய் நிறைந்த சிலருடன்,அதிக மக்கள் தொகை அற்ற நாடுகள் போன்றதொரு அக உலகம் சுகம். சாவியை குறைவாக,பயன்படுத்தினால் நிம்மதி.அது நம் சாய்ஸ். தத்துவம் மாதிரி தோன்றினாலும் எளிமையான உண்மை இதுதான்.வாழ்வு என்பது நம் எண்ணங்களே. அந்த எண்ணங்களில் நிறைந்தவர்கள்,நிறைந்தவைகளே.வெளியே நிகழும் சந்திப்புகள்,நம் தொடர்புகள்,நிகழ்வுகள் எல்லாம் சினிமாதான்.பொழுதுபோக்குத்தான்.ஆமாம்,பொழுதுபோக்குக்காக எத்தனை நேரம் செலவிடலாம்?......தொடரும்?.......

ரஞ்ஜனி த்யாகு

Mother Protects

வியாழன், 9 பிப்ரவரி, 2017

இரண்டாவது குழந்தைப் பருவம் கொண்டாட்டமா திண்டாட்டமா

உறவினர்கள்,நண்பர்கள்,தெரிந்தவர்கள்  சந்திக்கும் போது பொதுவாக அதிகம் அவசியமற்ற விஷயங்கள் பேசப் படுகின்றன என்பதே என் எண்ணம்.எது அவசியம்,எது அவசியம் இல்லை என்பது வேறுபடலாம்.இன்று எனக்கு ஏற்பட்ட சந்திப்புகள்,பாதிப்புகள்,விவாதங்களே இந்த போஸ்ட்.எல்லா காலங்களிலும் speech silver , silence gold தான். உங்களுக்கு,எனக்கு,ஏன் எல்லாருக்கும் சில விஷயங்கள் பேசி பலனில்லை என்று தெரியும்.ஆனாலும் பேசுவோம்.பகவான் விஷ்ணுவின் அடிமுடி காண இயலாத அளவு ஒரு பிரச்சினை முதியோருக்கும் இளையவர்களுக்கும் நடுவில் நடக்கும் மனப் போராட்டங்கள். இன்று என்  தங்கை கேட்டாள் , "குழந்தைகளுடைய  சிறுவயதில் ஆசை ஆசையாக எல்லா இடத்துக்கும் பெற்றோர்  கூட்டிச் செல்கிறார்கள்,தளர்நடை பயிலும் செல்வங்களைக் கைப் பிடித்து அழைத்துச் செல்வது இன்பம் தருகிறது.ஆனால் அந்தக் குழந்தைகள் பெரியவர்களாகி,பெற்றோரை அப்படி அழைத்துச் செல்வதிலும் அவர்களுக்குப் பணிவிடை செய்வதிலும் அந்த அளவு இன்பம் காண்பதில்லையே,ஏன்? " சரியான கேள்வி.அம்மா,அப்பாவை மிக நன்றாகப் பார்த்துக் கொள்வதாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் கூட மனசாட்சியிடம் சற்றுப் பேசிப் பார்த்தால் அதிர்ச்சி ஏற்படும்.முதியவர்களை குழந்தைகளிடம் காட்டும் அதே பாசத்துடன் அணுகுகிறோமா?சற்றும் சலிப்பில்லாமல்? ஆமாம் என்று சொல்லும் யாரையும் நான் நம்ப மாட்டேன்.நம் குழந்தைகளுடன் நமக்கு உள்ள கெமிஸ்ட்ரி வேறு.பெற்றோரிடம் உள்ளது வேறுதான். காரணம் என்ன?

அறியாய் பருவத்தில் இருக்கும் குழந்தையும்,எல்லாம் அநேகமாக அடங்கிய முதியோரும் சார்ந்து இருப்பவர்கள்.யாரோ ஒருவரை சார்ந்து செயல்பட வேண்டி உள்ளவர்கள்.இரண்டு சார்புகளுக்கும் உள்ள வேறுபாடுகளே சலசலப்புகள்.குழந்தையை நம் விருப்பப் படி எங்கு வேண்டுமானாலும் கூட்டிச் செல்வோம்.என் குழந்தைக்கு கோவில் என்றால் உசிர் என்று நாமே முடிவு செய்த ஒன்றை குழந்தை மேல் திணித்து நாம் விரும்பும் இடங்களுக்கு சென்று வருவோம்.நம் நம்பிக்கைகளே பெரும்பாலும் நம் குழந்தைகளின் நம்பிக்கை.இளம் குழந்தைக்கு யோசிக்கும் திறன் வளர நாளாகிறது.மனதளவிலும் உடலளவிலும் அது நம்மால் வழி நடத்தப் படுகிறது.நமக்கு ,நம் ஈகோ நிறைந்த மனசுக்கு அது சந்தோஷம் தருவது வியப்பில்லை.ஆனால் முதியவர்கள்! அவர்களுக்கு தேர்வு செய்யத் தெரியும்.எங்கே செல்ல வேண்டும்,எங்கே தங்களைக் கூட்டிச் செல்ல வேண்டும் எனக் கட்டளை பிறப்பிக்கத் தெரியும்.பண்ண வேண்டிய மனம் சம்மந்தப் பட்ட முடிவுகளைத் தாம் செய்கிறார்கள்.தங்கள் பாதுகாப்புக்கு இளையவர்களைச் சார்ந்துள்ளார்களே தவிர அவர்கள் பற்றி வேறெதையும் யோசிக்கும் மனநிலை பெரும்பாலான பெரியவர்களுக்கு இருப்பதில்லை.ஏன் பிரச்சினை வராது? Decisions எல்லாம் Lead பண்ணுபவரிடம் இருந்தால் தகராறு இல்லை.முடிவை நான் எடுப்பேன்,நீ கதையை நடத்து என்றால் சலிப்புதான் வரும்.அதுவே - நாம் உடல்மொழி மூலம் வெளிப்படுத்தும் அந்த சலிப்பே பெரியவர்கள் தாம் ignore பண்ணப் படுவதாய் நினைக்க முக்கியக் காரணம்.

இதில் மாற வேண்டியது முதியோர்தான்.குழந்தைகள் இயல்புப் படி நடந்து கொள்கிறார்கள்.நடுவயது மனிதர்கள்,சிலர் தவிர பெரும்பாலானோர் நன்றாக நடந்து கொள்ளவே முயற்சி செய்கிறார்கள்.அவர்கள் அடையும் ஆயாசமும் வயதிற்கு இயல்பாக வரும் ஒன்றே.இயல்புக்கு முற்றிலும் புறம்பானவை செய்யும் முதியோர்தான் யோசிக்க வேண்டியவர்கள்.நான் முதியவர்களுக்கு எதிரி அல்ல. பட்டாம்பூச்சி பறப்பது போல் நிமிஷமாகப் பறந்து சென்ற என் அன்பு அப்பா போல், துறக்க வேண்டியவற்றை நிச்சலனமாகத் துறந்து அமைதி அனுபவிக்கும் முதியோருக்கு நான் எதிரி அல்ல.குழந்தை எப்படி உலகிற்கு வருகிறது?அப்படியே உலகை விட்டு நீங்குபவர்களுக்கு மட்டும்தான் அமைதி கிடைக்கும்.Second childhood என்றால் உடலளவில் மட்டுமா?மனத்தாலும்தானே? ஆயிரம் எண்ணங்கள் அலைமோதுகின்றன.எழுத முடியாது என்று தோன்றுகிறது. குழந்தை தனக்கென தனிமனது பெறும் நொடி அதன் போராட்டங்கள் ஆரம்பிக்கின்றன.முதியவர்கள் தன் தனிமனதை இழந்த நொடி அவர்கள் போராட்டங்கள் முடிவடைகின்றன.

இன்று அரவிந்த அன்னையின் அவதாரத் திருநாள். பிப்ரவரி 21 ம் நாள்.என்றோ தொடங்கிய போஸ்ட்.இன்று முடிக்கிறேன்.தெய்வங்களும் குழந்தைகளாகவே பிறக்கின்றன.மனத்தால், பல வருஷங்களுக்கு முன் ஜனித்த அந்த தெய்வ குழந்தையின் பிஞ்சுப் பாதங்களை இறுகப் பற்றிக் கொள்கிறேன்.மனத்தின் ஆழங்களுக்கு பயணிக்கும் போது எல்லாமே அமைதி என்று  தெரிகிறது. சலனங்கள் வெளியேதான்.தெய்வத்தின் அருள் கொடை கற்பக வ்ருக்ஷம் போல . We can receive it in the silence of the heart.இன்றுள்ள மனநிலையில் தலைப்புடன் தொடர்பாக ஏதும் பேச இயலவில்லை. நாம் விரும்புவது போலவே வாழ்வு அமையும் என்ற உத்தரவாதம் யார் தர இயலும்? நம்மால் வேறெதுவும் செய்ய இயலாது என்ற கடைசி நாட்களுக்காக உள்ளே செல்லும் பயணம் ஒத்திப் போடப்பட்டால் அது முட்டாள்தனமல்லவா?சாக்ரடீஸ் விற்பனைக்காக பரப்பப் பட்டிருந்த பல ஆடம்பர பொருள்களை பார்த்து அதிசயித்தாராம்!"உலகில் எனக்கு வேண்டாத பொருள்கள் எவ்வளவு இருக்கின்றன"என்று.இரண்டாம் குழந்தைப் பருவத்தில் ஒவ்வொன்றாக விடத்தானே வேண்டும்? உறவுகள் ஆசைகள்,செல்வம்,பதவி,புகழ்,தேவையற்ற எண்ணங்கள் என்று குழந்தை ஒவ்வொன்றாக சேர்க்கத்  தொடங்குவது போல ,மறுபடி குழந்தைகளாகி விட்டோம் என்பவர்கள் ஒவ்வொன்றாக நீக்கத் தொடங்க வேண்டும் அன்றோ?என்னைத் திட்ட முடியாது. நான் வாழ்வின் இரண்டாம் பாகத்தில்தான் இருக்கிறேன்.சொல்பவை அனைத்தும் முதலில் எனக்கே சொல்லிக் கொள்கிறேன்.

தளர்நடையும், பொக்கைவாயும்,ஒருவரை மறுபடி குழந்தை ஆக்குவதில்லை.மனசு என்று ஒன்று உள்ளதே அதுதான் குழந்தை ஆக்குகிறது.பின் ஏன் சிலரைப் பார்த்து அவருக்கு குழந்தை மனசு என்கிறோம்? நிஜமான குழந்தை போல உள்ள முதியவர்கள் குழந்தை அடையும் அத்தனை சலுகைகளையும் அடைந்து,Second Childhood ஐ கொண்டாடுகிறார்கள்.மற்றவர்கள் திண்டாடுகிறார்கள்.அதற்கு அவரவரே பொறுப்பு.உலகில் குழப்பங்கள் இல்லை.எல்லாக் குழப்பங்களும் மனதில் மட்டுமே.ஒரே உலகம் சிலருக்கு சொர்கமாகவும் சிலருக்கு நரகமாகவும் தெரிந்தால் குறுக்கிடுவது மனம்தான் என்று உணர்வோம் . Seneca writes to his friend Lucillius,"நேரம் தவிர வேறெதுவும் உலகில் நம் சொந்தமில்லை.ஆனால் வேண்டாத பல விஷயங்கள்,மனிதர்கள் நம்மிடம் இருந்து அதை திருடி விட இயலும்.திருடினவர் நினைத்தாலும் திருப்பித் தர முடியாத ஒன்று என்பதே அதன் சிறப்பு.நம்முடையது என்ற ஒரே பொருளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டாமா? Certain moments are torn from us.Some are gently removed.சீக்கிரம் விழித்துக் கொள் நண்பனே " என்று.Life span நூறு வருஷம் என்றால்,ஐம்பது யோசிக்க சரியான வயதுதானே ? சொல்லப் போனால் லேட் .பேசுவோம்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

பெண்களின் ஆன்மீக வாழ்வு

ஆன்மிகம் என்ற சொல்லுக்கு உண்மைப் பொருள்,எனக்குத் தெரியாது.கத்திரிக்காய் என்றால் தெரியும்.கடலை மிட்டாய் என்றால் தெரியும்.ஆன்மிகம் என்றால் என்ன என்றால் எப்படிக் காட்டுவது?அது ஒரு உணர்வு.ஒரு பொருள் நம் அனைவர் மனங்களிலும் ஒரே பிம்பத்தை உண்டாக்குவது போன்று ஒரு உணர்வு ஒரே எண்ணத்தை நம் மனத்தில் உண்டாக்குமா என்றால்,இல்லை.நம் அனுபவங்களுக்கேற்ப,யோசிக்கும் திறனுக்கேற்ப சில விஷயங்களைப் புரிந்து  கொள்கிறோம்.எனக்குப் புரிந்த வரை,ஆன்மிகமும்,மன அமைதியும் தொடர்புடையவை.இரட்டைக் குழந்தைகள் போல .(அம்மா வயிற்றில் உள்ள இரட்டைக் குழந்தைகளைக் குறிப்பிடுகிறேன்.) If we are at peace with our own self,and also with the world ,அதுவே முழுமை.

நமக்குத் தெரிந்த ஆன்மிகப் பெரியோர்களில் பெரும்பாலானோர் ஆண்கள்.ஏன்?கடவுள் கூட,தன்அரசாங்கத்தில் இட ஒதுக்கீடு (Reservation) வைத்துள்ளாரா என்ன! ஏன்,நாம்  100 ஆண்களுக்கு ஒரு பெண்ணைக் கூட குரு ஸ்தானத்திற்கு உயர்த்துவதில்லை ? இந்த பிரபஞ்சத்தின் அதிசயங்களுடன்,இறையுடன் ஒரு குட்டி தொடர்பு,ஒரு வினாடி உண்மையான தொடர்பு ஏற்பட்டால் கூட அந்த மனிதன் கட்டாயம் Humble ஆகி விடுகிறான்,என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை.பெண்ணின் இயல்பு அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு நிறைந்தது . பெண்கள் இயல்பில் சாதுவானவர்கள்தான்.Intuitive ஆக அவர்களுக்குள் இறை உணர்வு  உள்ளது.இன்றைய பெண்கள் பற்றி தப்பு தப்பாய் பல பேசுகிறோம்.திமிர்,யாரையும் மதிக்க மாட்டார்கள் ,தடிப் பசங்களுக்கு சரியாக எல்லாம் செய்வாள் என்று காதால் கேட்க இயலாதவற்றை எல்லாம் கூறுகிறார்கள். தவறு.பாவம்.எப்படி பெண்ணுக்கும் ஆணுக்கும் வேறு அமைப்பில் உடல் படைக்கப் பட்டுள்ளதோ அதே போல் இயல்பும் வேறாகத்தான் இறைவன் படைப்பு நிகழ்கிறது.மாற்றுகிற வேண்டாத வேலை செய்வது நாம்.ஒரு உயரதிகாரியின் வேலையில் வாயில் காப்பவர் குறுக்கிடுவது போல் இறைவன் படைப்புடன் விளையாடி துன்பம் தேடுகிறோம்.பெண்ணின் இயல்பை மாற்ற முயலும் நாம் வேறென்ன செய்து விட முடியும்? உருவத்தையும் மாற்ற முடியுமா என்ன?

பெண்களை இயல்புப் படி விட்டால் அனைத்துப் பெண்களும் ஆன்ம பலம் பெருமளவில் கொண்டவர்கள்.கர்மயோகிகள்.அனைத்துப் பெண்களும் அம்மாக்கள்.பௌதிகத் தாய்மார்கள் மட்டும் அம்மா இல்லை.பெண்களை weaker sex என்கிறோம்.ஆனால்,அவர்களுடைய physical energy ம் தாங்கும் திறனும் அலாதியானது.பெண்கள்,தங்கள்  இயல்புப் படி ஞாயத்தின் பக்கம் நிற்க கூடியவர்கள்.ஆனால் கற்பு என்றதில் தொடங்கி எல்லாக் கட்டுப்பாடுகளும் பெண்ணுக்கே விதிக்கப் பட்டன."கற்பு நிலை என்று சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்"என்றார் மஹாகவி பாரதியார்.கட்டுப்பாடு யாருக்கு உண்மையில் தேவை? ஒவ்வொரு பெண்ணின் மனதுமே அவளின் நீதிபதி.புறக் கட்டுப்பாடுகள் பகவான் கிருஷ்ணனை தாய் யசோதா கட்டியது போல் ஒரு பாவனைதான்.

பெண்களின் வாழ்வே ஆன்மிக வாழ்வுதான்.அவர்கள் தனியாக எதுவும் செய்யத் தேவை இல்லை.உபநிஷத ,வேத காலங்களில் மைத்ரேயி போன்ற பெண்கள் ரிஷிகளுக்கு சமமானவர்களாகத் திகழ்ந்தார்கள் என்ற குறிப்புகள் உள்ளன.சோழ மன்னர்கள் காலத்தில்,குந்தவைப் பிராட்டி போன்று அரசியலில் முக்கியப் பங்கு வகித்த பெண்கள் உண்டு.அவர்களின் வழி தோன்றல்கள்தான் எல்லாப் பெண்களும்.பின் வந்த காலங்களில் மாற்றங்கள் தொடங்கின.பெண்கள்  நிலைமை மட்டும் மாற்றங்களை சந்தித்தே வந்திருக்கிறது .காரணம் அவர்கள் தன்பலம் அறியாமல் இருப்பது.பெண்ணுடல் போர்த்துக் கொண்ட தருணம் ஆத்மா தான் உடல் கடந்தது என்பதை மறந்து விடுமோ? Women think with their heart and men with their head என்று சொல்வார்கள்.அது உண்மைதான். ஆணுக்குத் தன்னை நேசித்துக் கொள்வதே முதன்மையாக உள்ளது.பெண்கள் பிறந்தது முதல் தன்னை இரண்டாம் இடத்திலேயே வைத்துக் கொள்கிறார்கள்.தியாகம் என்ற பெயரில் அன்பு என்ற பெயரில்  தன்னை தொலைத்து விடுதல் அவர்களுக்கு சுலபமாய் செய்ய வருகிறது.உள்ளே உள்ள வஸ்துவுடன் ஏற்படும் தொடர்பைத் தக்க வைக்கும் சக்தியை,பெண் மேல் திணிக்கப் பட்ட, அவளாக ஏற்படுத்திக் கொண்ட கட்டுகள் வலிமை இழக்கச் செய்கின்றன.   அதெல்லாவற்றையும் தாண்டி இறைவன் அழைப்பு உள்ள பெண்கள் விடுபட்டு விடுகின்றனர்.

ஆனால் எனக்கு இது புதிராகவே மனதில் தங்கி உள்ளது.ஆணுடன் ஒப்பிட்டால் உள்ளுணர்வு அதிகம் கொண்ட பெண்கள் ஏன் பிறர் போற்றும் அளவு அறியப் படவில்லை? இல்லை எனக்குத் தெரியவில்லையா?அப்படியே நான் அறியாமையில் இருப்பினும் விகிதம் குறைவு என்பது உண்மை அல்லவா?எல்லாத்  துறைகளிலும்  பெண்கள் சமமாக சாதிக்கிறார்கள்தான்.ஆனால் அதுவுமே கூடசரி  சமம் இல்லை. அதற்கு பெண்குழந்தைகளைக் கருவில் கொல்ல நினைக்கும்,பெண் பிறந்து விடுமோ என்று திகில் கொள்ளும் முட்டாள் மனங்கள் திருந்த வேண்டும்.புறம் சம்பந்தப் பட்டவை இப்போது பேச வேண்டாம்.அகம் தொடர்பான ஒரு உலகில் ஏன் குடத்துள் விளக்கு போலத்தான் பெண்கள் இருக்கிறார்கள்?ஆனால் ஒன்று.வெளியே ஆன்மிகவாதிகளாய்த் தென்படும் பலரின் வாழ்வை விட,சாதாரண ,ஆர்பாட்டமற்ற ,வெகுளியான இந்தியப் பெண்ணின் வாழ்வு வணங்கத் தக்கது.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

சனி, 21 ஜனவரி, 2017

கொசுவலைக்குள் த்யாகு

சென்ற சில போஸ்ட்களை வாசித்த ஒரு நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.அவர் கூறினார்,"எல்லாம் படித்தேன்.ஆனால் எழுத்துக்கள் யார் மீதோ உள்ள கோபத்தை நீ  வெளிப் படுத்துவதாக உணர்கிறேன்.உனக்கு லைட்டாக எழுத வராதா?" யோசித்துப் பார்த்தேன்.ஏதோ நம்மைத் தொடும் போதுதான் எழுத முடிகிறது.மகிழ்ச்சியான தருணங்களை மனம் அமைதியாக அசை போடுகிறது.கோபங்களுக்கு எழுத்து வடிகால்.அவ்வளவே.என் கோபங்கள் தார்மீகக் கோபங்கள்.வன்மங்கள் இல்லை.இந்த போஸ்ட் இரண்டு வாரமாக மனதில் உட்கார்ந்துள்ளது.நண்பர் அறிவுரையை ஏற்று நகைச்சுவை எழுத முற்பட்டுள்ளேன் என நினைக்க வேண்டாம்.எனக்கு அது வருவதில்லை.சரி,... சொல்ல வந்ததை பேசி விடுவோம்.

ஏதேனும் அல்ப விஷயம் சொல்ல வேண்டி வந்தால்,கொசு மாதிரி என்று கூறுவோம்.அது எவ்வளவு தவறு என்று கொசுக்கடியுடன் தூங்குபவருக்கே தெரியும்.வர்தா புயல் வந்தாலும் வந்தது.குடியிருப்பை சுற்றி விழுந்த மரங்கள்,தேங்கிய நீர்,அப்புறப் படுத்துவதில் தாமதம்.கேட்கவா வேண்டும்? கொசுக்கள் பெருகி,இரவு பூரா கொசு அடித்து தூக்கம் தொலைத்தோம்.ஓடோமாஸ்,சுருள்,இத்யாதிகளுக்கெல்லாம் அவை அசரவில்லை.கிட்டத்தட்ட 30 வருஷமாய் என் தொணதொணப்பு,தினமும் Boss தரும் sermon அதெல்லாவற்றையும் விட த்யாகுவை சற்றே அதிகம் பயமுறுத்தின கொசுக்கள். கொசுவலைதான் ஒரே தீர்வு என முடிவெடுத்து ராமஜபம் செய்வது போல் தினம் பத்து முறை" கொசுவலை வாங்கணும்" என சொல்லிவிட்டுத் தூங்குவதை வழக்கமாக்கிக் கொண்டார்.அது எந்த விதத்தில் உதவியது தெரியவில்லை.யாருக்குத் தெரியும் இந்த சைக்காலஜி எல்லாம்.எனக்கோ சாமான் கூடினால் அலர்ஜி வரும்.வாங்க வேண்டாம் என்றால் இன்னும் கூடுதலாய் கொசுவலை பற்றி பாடம் நடத்துவார்.வாங்கினால் பார்த்துக் கொள்ளலாம் என தப்பு கணக்கு போட்டேன்.ஏனென்றால் என் நம்பிக்கை அப்படி.ஒரு சின்ன 80 பக்கம் நோட்டு பூரா வீட்டிற்காக அவர் உடனடியாக செய்ய வேண்டிய வேலைகளைக் குறித்து வைத்துள்ளேன்.இன்னும் முதல் பக்கமே திருப்பிய பாடில்லை.ஆண்களுக்கு மனைவி மேல் உள்ள நம்பிக்கையும் அப்படி.80 பக்கத்தில் உள்ள எல்லாவற்றையும் எப்படியாகிலும் முடித்து விட்டு, "நீ சூப்பர் "என்ற இரண்டு வார்த்தையில் மயங்கி,அடுத்த நோட்டுக்கு விஷயம் சேகரிக்கும் அப்பாவிகள்.ஆனால் கொசு இன்னும் வலிமையானது என்று உணரும் நேரமும் வந்தது.

பாண்டிச்சேரி போய்விட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்த சமயம் சாலையில் கொசுவலைகளைப் பரப்பி வியாபாரம் செய்து கொண்டிருந்தவர் கண்ணில் பட்டார்.காரை நிறுத்தி விட்டு , குணா படத்தில் கமல்ஹாசன் அபிராமியைத் தரிசிக்கும் போது ஒரு பாவம் (BHAVAM  )காட்டுவாரே அது  போல பரவசத்துடன் இவரும் கொசுவலை விற்பவரை நோக்கிப் போனார்.பத்தே நிமிஷத்தில் பேரம் படிந்து,கையில் நூறு ரூபாய் நோட்டே இல்லாமல் நாடு திண்டாடிக் கொண்டுள்ள சமயம் கையில் இருந்த எட்டு நூறு ரூபாய்த் தாள்களையும் கொடுத்து வாங்கிய கொசுவலையைத்   தூக்க முடியாமல்  தூக்கி வந்து கார் டிக்கியில் வைத்தார். பசங்களும் நானும் சற்று அதிருப்தியுடன் ஒருவரை ஒருவர் மௌனமாகப் பார்த்துக் கொண்டோம்.த்யாகு அதையெல்லாம் பொருட்படுத்தும் மனநிலையிலேயே இல்லை. இனிமையான தூக்கம் அல்லவா,பல நாள்களுக்குப் பின்?மனதைத் தேற்றிக் கொண்டேன்.ஏனென்றால்,அழகாக மடிக்கப் பட்ட கொசுவலை சிறு Briefcase அளவே இருந்தது. இடம் அடைக்காது.எனக்கு என் கவலை.வீட்டிற்கு வந்தவுடன் கவர் பிரிக்கப் பட்டது. கிட்டத்தட்ட மூர்ச்சையாகி விட்டேன்.பட்டணத்தில் பூதம் பட ஜீபூம்பா போல கொசுவலை விரிந்தது. "மூன்று பேர் இதற்குள் தூங்கலாமாம்.அவன் சொன்னான்" என்றார் .எனக்கு சிரிப்பதா அழுவதா தெரியவில்லை.

இரவும் வந்தது.எங்களை எல்லாம் ஒப்புக்கு ஒரு வார்த்தை கேட்டுவிட்டு,மிதப்பாக கொசுவலையைப் பிரித்து அதில் உள்ள சிறுவாயில் வழியே கஷ்டப் பட்டு உள்ளே போய் படுத்து கொண்டார்.அரசகுமாரிகள் மஞ்சத்தில் உறங்குவதை சினிமாவில் பார்ப்போமே அது போல ஒரு ஸ்டைல்.கொசுவலையை சுற்றி வந்த கொசுக்கள் எல்லாம்" நோ என்ட்ரி "போர்ட் பார்த்தாற் போல அடுத்த டார்கெட்டாக எங்கள் பக்கம் திரும்பின.தன் விஷயம் ஜயித்ததால்,த்யாகு அலட்சியப் படுத்திய  ஓடோமாஸ்,கொசு விரட்டும் மற்ற உபகரணங்கள் சீந்துவாரற்று இருந்தன.பெண்களுக்கு அதற்கெல்லாம் நேரம் இருப்பதில்லை.தலையணையை முகர்ந்தால் தூக்கம் வந்து விடுகிறதே?அறையில் நாலு பேரையும் சமமாகக் கடித்த கொசுக்கள்,இப்போது மூன்று பேரைக் கவனித்தால் போதும் என்று வேலையைத் தொடங்கின. அது மட்டும் இல்லாது ஒவ்வொரு முறையும் ஏதேனும் எடுக்க வெளியே வந்தால் ஒரு கொசு உள்ளே வந்து விடுமோ என,என்னைப் பலமுறை அன்போடு அழைக்க ஆரம்பித்தார்.குடிக்க தண்ணி,விக்ஸ்,மொபைல் ,படிக்க துக்ளக் .......சரி ரொம்ப நாள் இவ்வளவு ப்ரயத்தனப் பட்டு கொசுவலை உபயோகிக்க மாட்டார் என்று பார்த்தால்,அவர் ஒன்றும் கண்டுகொள்வதாயில்லை.இன்னொரு வேலையும் எனக்கு  சேர்ந்து கொண்டது.மறுநாள் அதை மடித்து வைப்பது.அதுதான் கவரில் இருந்து வெளியே வந்தவுடன் விஸ்வரூபம் காட்டியதே.இதோ இப்போது கூட கொசுவலைக்குள் இருந்து அழைப்பு வருகிறது.

பெண்கள் பற்றி,காளிதாசன் காலம் தொட்டு என்னென்னமோ சொல்கிறார்கள்.கடைக்கண் பார்வையில் எல்லாம் சாதித்துக் கொள்வார்கள்,விழியினால் வலை போட்டு அதில் மாட்ட வைத்து விடுவார்கள்,நிமிஷத்தில் கண்ணில் நீரை வருவித்து எதையும் அடைந்து விடுவார்கள்,தலையணை மந்திரம் ஓதுவார்கள்,கணவனைக் கட்டிப் போட்டு விடுவார்கள் .....எல்லாம் சும்மா.ஒரு கொசுவலைக்குள் த்யாகுவை கட்டிப் போட்ட கொசு செய்வதைக் கூட (அது ஆறே மணி நேரமாயினும்) என்னால் செய்ய முடியவில்லை.எனக்குத் தெரிந்த பெண்கள் நிலையும் இதுவே.விதிவிலக்குகள் இருக்க வாய்ப்புண்டு.அவர்களைக் கூட ஸ்மார்ட்டான பெண்கள் என்று சொல்வதை விட அந்த ஆண்கள் கொஞ்சம் பயந்தவர்கள் என்றுதான் கூறுவேன்.ஏற்கெனவே ஒரு போஸ்ட்டில் சொல்லிவிட்டேன்.ஆனாலும் மறுபடி சொல்ல நினைக்கிறேன்.ஆண்களுக்கு உலகம் வீடு.பெண்களுக்கு வீடே உலகம்.ஆண்களை அறிந்து கொள்ள அந்தப் பெரிய உலகிற்குள் பெண்கள் வர வேண்டும்.ஆனால் பெண்மனம் அறிய வீடு என்ற சிறு உலகிற்குள் ஆண்கள் வந்தால் போதும்.எது சுலபம்,சொல்லுங்களேன்.ஆத்மார்த்தமாக வர வேண்டும்.மனத்திற்கு ஆண்பால்,பெண்பால் இல்லை.எல்லா மனமும் ஆழமானதே.பெண்மனம் ஆழம் என்று கவிதை சொல்லி ஒதுங்காமல், இயல்பாய், அங்கு என்னதான் உள்ளது என்று தேடலாமே? பெண்கள் பற்றி பேச இன்னும் எத்தனையோ உண்டு.பேசுவேன்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

ஞாயிறு, 15 ஜனவரி, 2017

2017 பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் சில பதிவுகள்

எங்கள் இளமைக்கால பொங்கல் விழா அமைதியானது.இப்போது பொங்கல் ஆரவாரம் நிறைந்தது.இரண்டும் சரிதான்.ஆழ்கடல் போல ,பொங்கும் வெள்ளமும் அழகே.ஆனால் எதற்காகக் குதூகலிக்கலாம் என்று வரைமுறை இருந்தால் கொஞ்சம் நலமாக இருக்கும்.வீட்டுப் பெண்கள் பொங்கல் வைக்கும் நேரம் ஆயிற்றே என்ற யோசனை துளியும் இல்லாமல் சன் தொலைகாட்சி ஒவ்வொரு வருடமும் திரு சாலமன் பாப்பையா (ஐயா வணக்கம்,நான் உங்கள் விசிறி)அவர்களுடைய சிறப்பான தலைமையில் 10 மணிக்கு ஒளிபரப்பும் பட்டி மன்றத்தில் இருந்து ,கிராமிய பொங்கல்,அந்த நடிகை வைத்த பொங்கல்,இந்த நடிகர் டேஸ்ட் பார்த்த பொங்கல் என பல நிகழ்ச்சிகள் எல்லா சேனலிலும் இடைவிடாது ஒளிபரப்பாயின. என் நேரம் நல்லதாக இருந்ததால்,திரு.சுகி சிவம் அவர்கள் கம்பன் கழகத்திற்கு ஆற்றிய உரையையும்,தூர்தர்ஷன் சானலில் திருவள்ளுவர் தினத்திற்காக (இன்று 16 ஜனவரி திருவள்ளுவர் தினம்) ஒரு பெரியவர் ஆற்றிய சிறப்புரையையும் கேட்க நேர்ந்தது.அவர்கள் பெயரைத் தொடர்ந்து கீழே போட்டால் என்ன?நடிகர்கள் நேர்காணலின் போது ,நமக்குத் தெரியும் என்று தெரிந்தும் நொடிக்கொரு முறை பெயர் போடுகிறார்கள். இரண்டு நிகழ்ச்சிகளிலும் உரையாற்றிய பெருமக்கள்  பேச்சில் மனம் தொட்ட சிலவற்றைப் பதிவு செய்கிறேன்.அதற்கு முன் ஒன்று கூறுகிறேன்.2 மணிக்கு சண்டை,6 மணிக்கு ரௌத்திரம், தொடர்ந்து  வேட்டை,பிச்சைக்காரன்.வேதாளம், போக்கிரி, சைத்தான்.... பொங்கலும் அதுவுமாய்க் கெட்ட வார்த்தை பேசுகிறேன் என்று திட்டாதீர்கள்.தமிழ்ப் பட பெயர்கள். சினிமா துறையைக் கிண்டல் செய்யவில்லை.இவை நல்ல படங்களாக இருக்கலாம்.ஆனால் இப்பெயர்கள் தாங்கின படம்,பட்டிமன்றம் போன்ற இரண்டு நிகழ்ச்சிகள் இருந்தால் பின்னதையே பார்க்க தோன்றுகிறது.

"நாம் அனைவரும் ராவணன் இனம்தான்,அவன் வெளியேயும் ராவணன்,நாம் உள்ளே ராவணர்கள்" என்று தொடங்கினார் சுகி சிவம் அவர்கள்.ராவணன் சீதை மேல் கொண்ட எண்ணத்திற்குப் பெயர் என்ன?எதற்காக பிராட்டியைக் கவர்ந்து சென்றான்,தன் உயிர் பிரியும் முன் அந்த மாயவலையில் இருந்து விடுபட்டானா,அல்லது அவன் தெளிவடையாமலே உலகை நீத்து விடுகிறானா என்பதை,கம்பன் பார்வை,தன் பார்வையில் இருந்து விளக்கினார்.சூர்ப்பணகை மூக்கு அறுபட்டு வருகிறாளாம்.சினம் கொண்ட ராவணன், காரணம் கேட்டறிய முற்படுகையில்,அரக்கியாய் இருப்பினும் பெண் என்பதால், ராமன் மேல் கொண்ட மோகத்தால் கிடைத்த தண்டனை என்பதை வெளியிட நாணி,ராவணனைக் கவரும் விதமாய் சீதாபிராட்டியை வர்ணிக்கிறாள் .ராவணன்,"நீ என்ன செய்தாய்" எனக் கேட்பதாய்க் கம்பநாடார் உரைக்கிறார்.ராமனிடம் தான் பேசியவற்றைக் கூறாது ,அவன் weakness எது என அறிந்து,அவனை திசை திருப்புமாறு சீதை பற்றி வர்ணிக்கிறாள் .அவள் கூறுவதைக் கேட்கக் கேட்க ராவணன் மனதில் ஒரு பெண் பிம்பம் உருவாகிறது.ராவணன் தேடிவந்ததும்,கவர்ந்து சென்றதும் அந்த சீதையைத்தான் .Physical ஆகக் கவர்ந்து சென்றதை இங்கு குறிப்பிடவில்லை.உண்மையான சீதை பற்றி அவன் அறியான்.அவன் மனம் கவர்ந்த தன்  எண்ணத்தில் உருவான ஒரு பெண்ணையே பிராட்டியில் காணப் படாத பாடு படுகிறான்.மாயையால் அலைக்கழிக்கப் படுகிறான்.ஆனால் அவன் சிறந்த சிவபக்தன்.மாயை நீங்கித் தெளிவு பெற்ற பின்னரே அவன் மூச்சு பிரிகிறது.தெளிவு எப்படி வந்தது?அவன் தெளிவு பெற்றான் என நாம் எப்படி அறிவோம்?

பொதுவாக இதிகாசங்கள், பெரிய படைப்புகள் செய்வோர் வெறும் கதை சொல்வதற்காக எழுதுவதில்லை.ஒரு முறை கேட்ட கதையை மறுபடி கேட்க அதே ஆர்வம் இருக்காது.(ராமாயணம் விதிவிலக்கு.நம்மில் கலந்தது.)வால்மீகியை கம்பன் மொழிபெயர்க்கவில்லை.ராமாயணக் கதை மூலம் செய்தி சொல்வதே அவர் நோக்கம்.அயோத்தி மாநகர்,ஆரண்யம்,அமர்க்களம் இவை மூன்றில் கம்பன், தான்  சொல்ல விரும்பிய பல விஷயங்கள் சொன்னது அமர்க்களத்திலேயே.ஏனென்றால் நகரம் கட்டுப்பாடு நிறைந்த இடம்.காடோ கட்டுப்பாடு சுத்தமாய் அற்ற இடம்.ஆனால்,போர்க்களம்?மனிதனின் உண்மை இயல்பு,ஞானம் பரிபூரணமாக வெளிப்படக் கூடிய இடம் போர்முனை.  பகவத் கீதையும் போர்க்களத்தில் புகட்டப் பட்டதே என்பதை இங்கு ஒப்பு நோக்கலாம்.ஒரு கட்டுப்பாட்டிற்கு அடங்கியும் கட்டுப்பாடே அற்ற இடத்திலும் அமைதி காப்பது பெரிதல்ல.நொடிக்கு நொடி எல்லாம் மாறும் ஒரு சூழலில் அதை செய்தால் வருவதே ஞானம்.ராவணன் தெளிவு பெற்றதும் அமர்க்களத்திலேயே.

14 ஆண்டுகளும் தான் கற்பித்துக் கொண்ட பெண்பிம்பத்தை அடைய ஏதேதோ செய்கிறான்.நடக்கவில்லை.அவன் நடவடிக்கைகள் போர்முனை வரை அவனை இட்டுச் சென்ற பின்னரே,இந்த மாயையை விடப் பெரிய ஒன்று உள்ளது என உணர்கிறான்.அவனுக்குள் இருக்கும் க்ஷத்ரியன் விழிப்படைகிறான்.லங்கையின் பாதுகாவலனாய் உணர்கிறான்.பெரும் சிவபக்தன்.சிவன் வெளியேறி சீதை இருந்த மனம் குழப்பத்தில் இருந்தது.இப்போது,மனசில் இத்தனை வருஷம் பாதுகாத்த பிம்பம் உடைகிறது.பிராட்டியை அசோகவனத்தில் சிறை வைத்தானே தவிர துன்பம் தந்தானில்லை.ஆனால் கடைசிப் போரில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை சந்திக்க கிளம்பும் போது சொல்கிறானாம், "இன்று,ஒன்று மண்டோதரி அழ வேண்டும்,அல்லது சீதை அழ வேண்டும்" என.சீதையிடம் கொண்ட மாயமோகம் அகல்கிறது.அவள் கண்ணீர் தன்னை இனி அசைக்கப் போவதில்லை என உணர்கிறான்."சட்" என மாயத்திரை போய் விடுகிறதாம்.இந்த விளக்கங்கள், திரு சுகிசிவம் வாக்கில் மிக அழகாக இருந்தன.ஏன் தெரியுமா?நாம் அனைவருமே ராவணன் பண்ணினதையே செய்கிறோம். பார்க்கும், பழகும், ஒவ்வொரு நபர் பற்றியும் நாம் உருவாக்கிக் கொண்ட பிம்பங்களை உண்மை மனிதர்களாக நினைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளோம்.உண்மை முற்றிலும் வேறாக இருக்கும் போது, சிலர் அதிர்ச்சி அடைகிறோம்.சிலர் ஞானம் பெறுகிறோம்.அது அவரவர் கர்மபலனைப் பொறுத்தது.இன்னும் பல கூறினார்.அவை பிறகு.

அடுத்து பொதிகை தொலைக்காட்சி நிகழ்ச்சி.பெண்கள் பற்றிய நிகழ்ச்சி.சத்ரபதி சிவாஜியின் தாய் பற்றி அவ்வளவு உயர்வாகக் கூறினார்.பண்டைக்காலத்தில், போரில் ஒரு அரசனை வெற்றி கொண்டால்,அவனது நாட்டில் தொடங்கி அனைத்து உடமைகளும் வெற்றி பெற்ற அரசனைச் சேருமாம். சிவாஜி ஒரு முறை அவ்வாறு போர் முடிந்து தான் வென்ற பொருள்களைப் பார்வை இட்டுக்  கொண்டு வருகிறாராம்.ஒரு பல்லக்கில் தோல்வியுற்ற அரசனின் துணைவி இருக்கிறாள்.பல்லக்கின் திரை விலகுகிறது.உள்ளே இருந்த பெண் நடுங்கி,வெளிறிப் போய் அமர்ந்திருக்கிறாள்.சிவாஜி அவளைப் பார்த்துக் கேட்கிறாராம்," தாயே என்ன ஆயிற்று?தாங்கள் ஏன் இவ்வாறு நடுங்குகிறீர்கள்?"என.இப்போது நடப்பது என்ன? பெண்கள் பற்றின வன்முறைகளைப் பேப்பரில் எழுதவும் படிக்கவும் வெறுக்கிறேன்.சினிமாக்களில் காட்டப் படுவதை அந்தப் படங்களைப் புறக்கணித்து அலட்சியம் காட்ட விழைகிறேன்.அதனால் இன்னும் கோபமான பதிவுகள் செய்யாமல் நிறுத்துகிறேன்.ஆண் குழந்தைகள் பெற்றவர்கள்,மற்ற பெண்களைத் தாய் போல கருத தங்கள் மகனுக்கு கற்பிக்க வேண்டுகிறேன்.

அடுத்த செய்தி.பெண் பெற்றவர்களைப் பார்த்து," பெண்ணை எங்கே கொடுத்திருக்கிறீர்கள் "என்று கேட்போம்.ஆண் குழந்தைகள் பெற்றவரிடம் "எங்கிருந்து பெண் எடுத்திருக்கிறீர்கள்" எனக் கேட்கிறோம்.எல்லாம் கொடுக்கல் வாங்கல்தான் . பொருளை வாங்கிக் கொள்பவர் அல்லவோ ஏதேனும் கொடுத்து வாங்கி கொள்ள வேண்டும்?பெண்ணையும் கொடுத்து பொருளையும் கொடுக்கும் வழக்கம் இன்னும் மாறாமல் உள்ளதை ஒரு பேச்சாளர் மிக வருத்தத்துடன் குறிப்பிட்டார்."ஆணும் பெண்ணும் நிகர் எனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்குமாம்" என்றார் மஹாகவி பாரதியார்.எங்கே தழைக்க விடுகிறோம்?முதலில் பெண்களுக்கே அந்த ஆசை இருப்பதாய்த் தெரியவில்லை.அற்ப விஷயங்களில் ஆண்களுடன் போட்டி போட்டால் சரியாயிற்றா?

கடைசியாய் ஜல்லிக்கட்டு சம்பந்தமான கருத்து வேறுபாடு.ஒரே கூச்சல் எல்லா சானல்களிலும் .நடத்தி விட்டுப் போகட்டுமே?காளைகள் துன்புறுத்தப் படுவதாய் பேசுகிறார்கள்.பெட்ரோல் பங்க் ஒவ்வொன்றிலும் கூண்டுக் கிளிகள்.பட்டுப் புடவைக்காக கொல்லப் படும் பட்டுப் பூச்சிகள், உணவுக்காக கொல்லப் படும் ஆடு கோழிகள்,வலை வைத்துப் பிடிக்கும் மீன்கள் எல்லாம் துன்பப் படவில்லையாம்.காளைகள் ஒரு நாள் அடைவது துன்பமாம்.என்ன லாஜிக்கோ?சரி மற்ற கட்சியினரும்தான் எதற்கு கொடி பிடிக்கிறார்கள்?பாரம்பரியம் அழிந்து விடுமாம்.பாரம்பரிய உடையை மாற்றலாம்.பழக்கவழக்கங்களை மாற்றலாம்.பெண்ணைப் பார்க்காமலே கல்யாணம் செய்து கொண்டார்கள்.இப்போ செய்வீர்களா?நாலு மாசமாவது பழகாமல் தாலி கட்டுகிறார்களா? பாரம்பரிய உடைதான் அணிகிறோமா?பாரம்பரிய உணவுதான் சாப்பிடுகிறோமா?அதில் எல்லாம் போகாத பாரம்பரியம் ஜல்லிக்கட்டைத் தடை செய்வதால் போய் விடுமாம்.எத்தனை நேரம்,சக்தி விரயம் பாருங்கள் .

அடுத்த பொங்கல் வரை பேச விஷயம் இருக்கும் போலத் தோன்றுகிறது.பொங்கல் கொண்டாட்ட நினைவுகள் பசுமையாக உள்ள போதே விடை பெறுகிறேன்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

செவ்வாய், 10 ஜனவரி, 2017

ஒரு கபடு வாராத நட்பு

அபிராமி அம்மைப் பதிகத்தின்,முதல் பதிகத்திலேயே ,இரண்டாவது வரியிலேயே ஓர் கபடு வாராத நட்பு என்று திரு அபிராமபட்டர் குறிப்பிடுகிறார். இது போன்ற தெய்வத் துதிகள் புனைவோர் எழுதுபவை சாதாரண மனநிலையில் இருந்து எழுதப் பட்டவை அல்ல. உயர்ந்ததொரு நிலை. அவை தெய்வ வாக்குகளே. ஒவ்வொரு வரியும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை. ஒரு பிறவியில், சர்க்கரைக்  குன்றை சாப்பிட ஆவலுறும் எறும்பு போல,  அணுவளவு சுவைக்கலாம். எப்போதுமே, கபடில்லா நட்பு என்ற இந்தப் ப்ரயோகம் என்ன சொல்ல வருகிறது என நான் யோசிப்பேன். அப்படி ஒரு நட்பு பாராட்டினால்தான் அதை உணர்தல் சாத்தியம் என்று தோன்றும். தான் உணராத ஒன்றை எழுத முடியாது. அப்படிப்பட்ட எழுத்து இதயம் தொடாது. அபிராமபட்டர், கலையாத கல்வி, குறையாத வயது, கன்றாத வளமை, குன்றாத இளமை , சலியாத மனம்,  தாழாத கீர்த்தி,  மாறாத வார்த்தை, தடைகள் வாராத கொடை,  ஒரு துன்பம் இல்லாத வாழ்வு,  என்று சாமானியர்களுக்கு அடைய மிகக் கடினமான ஒரு பட்டியலில், உச்சியில் கொண்டு வைக்கிறார் ஒரு கபடு வாராத நட்பை. இவை எல்லாம் தர வேண்டி அன்னையைப் ப்ரார்த்திக்கிறார். அப்படியென்றால் என்ன தெரிகிறது? கபடு வாரா நட்பு அடையக்  கொடுத்து வைத்திருக்க வேண்டும் என. அடைய மட்டும் இல்லை. தரவும். இங்கு கொடுப்பதே திரும்ப வரும்.

நட்பு எந்த இரு ஜீவன்களுக்கு இடையேயும் நிகழலாம். பொதுவாக,  முன் அறிமுகம் இல்லாத, ரத்த சம்பந்தம் அற்ற, இருவருக்கிடையே, காரணம் அற்றுத்  துளிர்க்கும் பாசத்தையே நட்பு என்கிறோம். ஆனால் நட்பு இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே ஏற்படலாம். கண்ணனைத் தோழனாய்க் கண்ட மஹாகவி போல. கணவன் மனைவி, பெற்றோர் குழந்தைகள், சகோதரர்கள்,  குரு சிஷ்யன் எந்த இருவரும் நட்புறவாடலாம். நட்பு பாராட்டும் விதமான இயக்கமே உலக இயல்பு. ஆனால்,அபிராமபட்டர் கூறின கபடில்லா நட்புதான்,  தொடர இயலும். மேலே குறிப்பிட்ட ஒரு ஜோடியை எடுத்துக் கொள்வோமே! நண்பர்களாய்த் தொடங்குகிறார்கள், கல்யாணத்தால் இணைந்து கணவன் மனைவி ஆகிறார்கள். நட்பு ஆழமல்லவோ ஆக வேண்டும்!  ஆகிறதா? கபடு என்றால்,  ஏதோ பெரிய சூது மட்டும் இல்லை. ராவணன் சீதா பிராட்டியைக் கவர்ந்து செல்ல, சகுனி பாண்டவர்களை ஒழிக்க செய்தவை மட்டும் சூது இல்லை. சகோதரனை சொத்து விஷயமாய் ஏமாற்றுவதும், பெற்றவர்களை ஏமாற்றுவதும் சூதுதான். தன்னை மிஞ்சின சிஷ்யனைக் கண்டு மனம் வெதும்பும் ஆசான் செய்வது மனத்தால் செய்யும் சூது. குரு துரோகம் சூது. கணவனை அவன் பெற்றோரிடம் இருந்து பிரிப்பது சூது.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற

என்கிறார் திருவள்ளுவர்.மனத்தில் மாசற்றிருப்பதே கபடில்லாமை. மாசு என்றால் எவை என்றால் மறுபடி பட்டியல்தான் இட வேண்டும்.

நட்பு அழகிய சொல்.நட்பே வாழ்வை இயக்குகிறது. நட்பும் கபடும் ஸ்ரீதேவியும் அவள் தமக்கையும் போல. சேர்ந்து வாசம் செய்ய முடியாது. மனதில் கபடம் தோன்றும் நேரம் அன்பு, புரிதல், பொறுமை, என்ற பல நல்ல குணங்கள், " நீயே இந்த மனசில் இருந்து கொள் .உன்னுடன் சேர்ந்தால் எனக்கு மூச்சு முட்டும்" என்று அந்தக் கபடிற்கு இடம் கொடுத்து விட்டு வெளியேறுகின்றன. இப்போது நட்பு என்ற சொல்லுக்கு,உண்மையான,வெறும் தோழர்களாக மட்டும் உள்ளவர் பார்வையில் இருந்து ஞாயம் செய்து விடுவோம். மேலே குறிப்பிட்ட எல்லாரையும் விட பலபடிகள் மேலானது இரு நண்பர்களுக்கிடையே நிலவும் நட்பு . ஏன்? உறவுகளைப் பிணைக்கும் வலிமையான சங்கிலிகள் கிடையாது. ஒருவனையோ ஒருத்தியையோ ஏன் அவ்வளவு பிடிக்கும் என்பதற்கு காரணம் கிடையாது. மனத்தில் முதல் இடத்தில் இருந்தாலும் அவர்களுக்கு பெரிதாக எதுவும் செய்ய  உரிமைகள் கிடையாது. என் தோழன்  எனக்கு எல்லாவற்றையும் விட மேல்தான் என்று கூற தைரியம் கிடையாது.....இப்படி பற்பல கிடையாதுகளைத் தாண்டி நட்பில் காலம் பூர இருக்க வேண்டும் என்றால் எப்படி கபடு எட்டிக் கூடப் பார்க்காமல் மனஸ் தெளிந்த நீரோடையாய் இருக்க வேண்டும்!!!

நட்பு,உயிர்  இருக்கும் வரை தொடர்ந்தால், அதில் கபடில்லை. நல்ல நட்புகள் மனசில் சேர்ந்தே இருக்கும். வேண்டாத எண்ணங்கள் மனதை ஆக்ரமித்தால் வெள்ளைத் துணியில் பட்ட சிறு கரை போலத்தான். அதை வெள்ளைத்துணி என்று கூற இயலாது. இந்தக்  கட்டுரை  மூலம் என் நட்புகளுக்கு நன்றி. நட்பிற்கு ஒரு கௌரவம்  உண்டு. பிரபஞ்சத்தில் ஒரே மாதிரி மனிதர்கள் இருவர் இல்லை. ஏதேனும் வேறுபடும். ஒரே மாதிரி இரண்டிருந்தால் அதன் தேவை என்ன?  .யாருடனானாலும் ஒரே எண்ணம் கொண்டிருப்பது மட்டும் நட்பில்லை. வள்ளுவர் நட்பு என்ற அதிகாரத்தில் கூறுகிறார்,

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு

நட்பில் உயர்வு தாழ்வில்லை.இவர் எனக்கு இன்ன தகுதி உடையவர், என்று பிறருக்கு சிறப்பித்து சொன்னால் கூட நட்பின் தன்மை மாசுபட்டு விடுகிறது என்கிறார். நட்பில்  கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் பிணைப்பது மெல்லிய நூல். ஆத்ம நட்புகளுக்கு நூல் மிக வலிமையானது.



வெள்ளி, 6 ஜனவரி, 2017

வேகத்தடைகள்

பயணத்தின் போது பல வேகத்தடைகளைத் தாண்டிப் போகிறோம்.விபத்துக்கள் தவிர்க்கப் பட வேண்டி,போடப் பட்ட வேகத்தடைகள்.அரசும் நெடுஞ் சாலைத் துறையும் அந்த கைங்கரியத்தைச் செய்கின்றன .நாம் நலமாக destination அடைய யாரோ செய்யும் உதவி.வாழ்க்கைப் பயணத்திற்கும் வேகத்தடைகள் தேவை.அவற்றை அனிச்சையாக யாரோ நமக்குப் போடலாமே தவிர அக்கறையாக,பெரும்பாலும் பெற்றோர் தவிர யாரும் போட மாட்டார்கள்.வாழ்வோ நீண்ட பயணம்.கால்வாசி தூரம் தடை போட்ட பெற்றோர் மறைந்து விடுகிறார்கள்.எனவே எஞ்சின தொலைவைக் கடக்க,கட்டுப் பாடுடன் கடக்க நாம்தான் அதைச் செய்ய வேண்டும்.காமம்,க்ரோதம்,ஆசை,மனச் சோர்வு,சந்தேகம்,பயம் ,சுய பச்சாதாபம் ,வீண்பெருமை,தற்புகழ்ச்சி,வழுக்க வைக்கும் பாசம்,பொறுமையின்மை,வஞ்சகம்,கடுமை,லோபம்,அனைத்திற்கும் காரணமான தான் என்ற மகத்துவம் ஆங்கிலத்தில் ஈகோ இவையெல்லாம் வாழ்க்கை நமக்களிக்கும் விபத்துகள்.எழுதாமல் விடப்பட்டவையே அதிகம்.எத்தனை தடைகள் தேவை,பாருங்கள்.ஆனால் போட வேண்டிய இடத்தில் தடை போடாமல்,நம் நல்ல இயல்புகளுக்கு நம்மை அறியாமல் தடை போட்டுக் கொள்கிறோம்.பரிதாபம்!

முறைப்படுத்தப் பட்ட காமம் இப்போது இல்லை.க்ரோதத்தை ஹெல்த்தி காம்பெடிஷன் என்று தப்பாக நினைக்கிறோம்.பேராசையை,நல்ல ஆசை என சமாதானப் படுத்திக் கொள்கிறோம்.மனச்சோர்வில் ஒரு சுகம் காண்கிறோம்.அனாவசியமாய் சந்தேகம் கொள்கிறோம்.அதனால் என்ன பலன்?சரி யாரோ ஏமாற்றி விடுகிறார்கள் என வைத்துக் கொள்வோம்.அது ஏமாற்றியவனை அல்லவோ உறுத்த வேண்டும்?அதற்கும் மேலே யோசித்தால் எது ஏமாற்றம்?மாறும் வாழ்வில் நாம் நினைப்பது எது மாறினாலும் ஏமாற்றம்.அதற்கு எப்பவும் தயாராய் இருப்போம்.சந்தேகப் பட்டு சந்தோஷம் தொலைக்காமல்,வரும் போது பார்த்துக் கொள்வோம்.அடுத்து பயம்.இது பெரிய எதிரி.தோல்வி பயம்,மரணபயம்.உலகின் பார்வை பற்றின பயம் இவை தலையாயவை.எப்போதும் ஜெயிக்க முடியாது.தோற்று விடுவோம் என பயந்தால் தோற்றுத்தான் போவோம்.தோல்வி,வெற்றி என்பதெல்லாம் relative terms .எப்போதும் செய்திகளில் முதல் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் வெற்றி அடைந்தவர்கள் என்று சொல்ல முடியாது.மரணபயத்தை வெற்றி கொள்வது கஷ்டம்.பேச எனக்கு qualification இல்லை.உலகின் பார்வையில் நன்றாக,நல்லவனாக இருப்பது வேறு.உண்மையாய் இருப்பது வேறு.உண்மை பயப்படாது.இது போன்றவைதான் மற்ற மேலே குறிப்பிட்ட விபத்துகள்.மற்றவை பற்றின detailed analysis தேவை இல்லை.எனக்கும் தெரியும்,உங்களுக்கும் தெரியும்.வாழ்வின் வேண்டாத வேகத்தைக் குறைக்கும் தடைகளை யோசிப்போம்.

உள்ளது ஒன்றுதான்.அதை எல்லோரும் கூறிவிட்டார்கள்.முடிந்த கருத்து.அனுபவப் பட்டவர்கள்,சொன்னதை மறுபடி ஆராய்ச்சி செய்வதும்,நம் சிற்றறிவு கொண்டு இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம் என்பதும் intellectual ,mental level ல் யோசிக்க மட்டுமே முடியும்.சேரவேண்டிய இடம் தெரியும்.பாதையை செப்பனிடுவதுதான் செய்ய வேண்டியது.செப்பனிடும் போது வேகத்தடைகள் போட்டுக் கொள்ள வேண்டியதாகிறது.எதெல்லாம் சலனம் தருமோ அதெல்லாம் கவனத்துடன் கையாள பட வேண்டியவை.இந்த இடத்தில் தடை தேவை என மனம் உணரும்.உடனே போட்டு விட வேண்டும்.சிலர் போராளிகள்.அவர்கள் புறம்தள்ளுவதை ஒரு முறையாகக் கொள்கிறார்கள்.Movement of REJECTION .மறுபடி மறுபடி,எத்தனை கஷ்டமாக இருந்தாலும் வேண்டாத எண்ணம் அகலும் வரை போராடி வெற்றியும் பெறுவோர் உண்டு.மற்றொரு வகையினர் உண்டு.வேண்டாத எண்ணங்களை மறுத்தல்.மன ஆழத்தில் இருந்து மறுத்தல்.DENIAL .உண்மையான புரிதலுடன்,நம்மை விட சக்தி வாய்ந்த ஒரு ஒளியின் துணை கொண்டு,வேண்டாம் என்பவற்றை வேரறுத்தல்.முதல் வகையில் நிகழ்ந்தது போர்.WAR .இரண்டாம் வகையில் நடந்தது முழு மாற்றம்.TRANSFORMATION .போர் மறுபடி என்றேனும் ஏற்படலாம்.வேரறுக்கப் பட்ட கெட்ட மரம் துளிர்ப்பதில்லை.எத்தனை பெரிய வண்டி மோதினாலும் உடையாத STRONG SPEED BREAKER .

கஷ்டங்கள் இல்லாத உலகம் இல்லை.இருந்தாலும் வெறும் இனிப்பை இலையில் வைத்து சாப்பிடுவது போல் இருக்கும்.அதனால்தான் கடவுள் நம் தாங்கும் சக்திக்கேற்ப நம்மை சோதிக்கிறார்.இருமைகள் இல்லையேல் சுவை இல்லை.இருமைகளைக் கடப்பதுதானே சுவாரஸ்யம்.முயல் ஆமை கதையில் இறுமாப்பால் முயல் ஓய்வெடுத்தது .தோற்றது.அப்படி இல்லாமல்,ஒரேயடியாய் தாமஸப் படாமல்,அவ்வப்போது நிதானப் பட்டு பயணிப்போம்.வேகத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து அமைதியாகப் பயணப் படுவோம்.முக்குணங்களில் தமஸ் அக்ஞான இருளில் பிறப்பது.அசட்டையாக இருப்பதும் அமைதியாக இருப்பதும் வேறு.முயற்சி அற்று இருப்பதை,மதிமயக்கத்தால் விட்டேற்றியாய் இருப்பதை சிலசமயம் நாம் சாத்வீகமாக உள்ளதாய் தப்பாகக் கணக்கிடுகிறோம்.ஆனால் அது விலக்க வேண்டிய தமோ குணமே.செய்வதை சிறப்பாக செய்வதும்,எப்போதும் எண்ணம்,வார்த்தை செயல் உண்மையாக இருக்குமாறு பார்த்துக் கொள்வதும் செய்தாலே உயர்ந்த அனுபவங்கள் ஏற்படும் என்று தோன்றுகிறது.Break போடப் போகிறேன்,போஸ்ட்டுக்கு.காஷ்மீரில் இருந்து கன்யாகுமரி வரை ஒரே நாளில் பயணிப்பது போல இவ்வளவு நீள போஸ்ட் boring இல்லை?பயணிக்கலாம்,விட்டு விட்டு.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

CELEBRATION--LIFE IS A CELEBRATION

MOTHER PROTECTS

புது வருஷ வாழ்த்துக்கள்.நாங்கள் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறோம்.120 வீடுகள் இருக்கும்.புதுவருஷக் கொண்டாட்டங்கள் இப்போதெல்லாம் ஒரு வித்தியாசமான பரிணாமம் கொண்டுவிடுகின்றன.மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப் பட்ட மேடை.மைக் செட்.ஸ்பீக்கர்.உணவு அளிக்கும் (காசு கொடுத்தால்தான்)ஸ்டால் ,அலங்கார பொருள்கள் விற்பனைப் பிரிவு ,தம்மை முன்னிலைப் படுத்தி காட்ட கூடிய உயர்தர உடை அணிந்த ஆண்,பெண்,குழந்தைகள்.சமீபத்திய திரைப்படங்களில் இருந்து குத்துப் பாட்டுகள்,அதுவும் அதிகபட்ச வால்யூமில் ,அதற்கேற்ப நடனமாடிய தோழர்கள் ......கொண்டாட்டம்தான் போங்கள் .மகிழ்ச்சி தொற்று .சந்தோஷமான சூழ்நிலை நம்மையும் மகிழ்வூட்டுகிறதுதான்.ஆனால் எவ்வளவு நேரம் தொடர இயலும்?தேடல் வெளியே நடந்து கொண்டுள்ள வரை ,கமா போட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.புள்ளி வைப்பது அவசியம்தானே ?இல்லை என்றால் ,முடிவு தெரியா நாவல் போல குறுகுறுப்பாக இருக்கும் அல்லவா?நாம் இருக்கிறோம்.நமக்கு உள்ளே ,வெளியே என இரு இடங்கள்.மகிழ்ச்சியை வெளியே தேடுகிறோம் என்றால்,உள்ளே அது இல்லை என்பதே பொருள்.இன்னும் துல்லியமாகச் சொன்னால் ,தேடல் நடக்க வேண்டியது வெளியேதான் என்று முழுமையாய் நம்புகிறோம்.பொன்னையும் பொக்கிஷத்தையும் பூமிக்கடியில் புதைத்து விட்டு,வீட்டு அலமாரியில் தேடினால் அகப்படுமா?

விழாக்கள்,பண்டிகைகள் மட்டும் கொண்டாட்டமா?இருப்பே கொண்டாடப் பட வேண்டிய ஒன்றுதானே!காலை கண் விழித்தால் ,நான் இன்று இருக்கிறேன் என்பதே பெரிய விஷயம் அல்லவோ? ஆனால் சொல்லும் அளவு உள்தேடல் சுலபமில்லை.நல்ல மாற்றங்கள் ஏற்படும்,அவ்வப்போது.ஆனால்,அவை irrevocable ஆக இருப்பது கஷ்டம்.தேடல் பெரும்பாலும் பெரிய catastrophes நடந்த பின் ,பெரிய வலிகளுக்குப் பின்னரே தொடங்குகிறது.நாம் ஏன் இங்கு உள்ளோம் என்ற எண்ணம் வந்தால் நல்லது.அதுவே அடிப்படை.பள்ளி சென்றால் அது படிக்க,குளியலறை சென்றால் குளிக்க,கடைக்கு சென்றால் சாமான் வாங்க,திரையரங்கு சென்றால் கேளிக்கைக்காக,கோவில் சென்றால் சாமியைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்ள ,உணவகம் சென்றால் சாப்பிட என்று ஒவ்வோர் இடத்துக்குச் செல்லவும் நமக்கு காரணம் தெரியும் போது உலகத்திற்கு வந்தது எதற்கு என அறியாமல் போய்ச் சேரலாமா?

நேற்று கொண்டாட்டங்களின் போது அபார்ட்மெண்டில் ஒரு வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் குழந்தை ஒன்று அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தது.Obvious ஆக food stall அருகில்.அந்தப் பெண்ணால் காசு செலவழித்து எந்த உணவும் வாங்க இயலாது.ஏனெனில் அந்த ஒரு நாள் கூத்துக்கு செலவழிந்த மின்சாரத்துக்கு சேர்த்துதான் சோளா பூரிக்கு ரேட் .அவள் எங்கே போவாள்,பாவம்!சீதையைக் கவர நடந்த மாரீச மான் போல,சாப்பிடுபவர்களின் கவனம் ஈர்க்க அக்குழந்தை நடை போட்டது.சீதா ப்ராட்டி தெய்வம்.எளிய மானுட வடிவெடுத்த தெய்வம்.காலமோ வால்மீகி  காலம்.மாரீசனை மான் என நம்பினாள் .நாமோ டெக்னாலஜியைக் கைக்குள் வைத்திருக்கும் உயர்மட்ட மனிதர்கள்.அக்குழந்தைக்கு உணவைப் பார்த்து ஆசை வரும் என்பது போன்ற விஷயங்களைக் கூட மனதால் யோசிப்போமா?தெரிந்த வழியையே GOOGLE MAP  அல்லவா சொல்ல வேண்டும்!நம் முழங்கால் உயரம் கூட இல்லாத சிறு மனிதன் ,அவனா முக்கியம்,2017 ஐ வரவேற்பதை விட?இயேசு கிறிஸ்து அவதரித்து 2017 ஆண்டுகள் ஆகிவிட்டன.இன்னும் 2000 ஆண்டுகள் போகட்டும்.இன்னொரு அவதாரம் வேண்டுமானாலும் நிகழட்டும்.நான் தேடிச் சோறு நிதம் தின்று,சின்னஞ் சிறு கதைகள் பேசி வேடிக்கை மனிதனாக கதையை நடத்தி விட்டுப் போகிறேன்.வருத்தமாக இல்லையா?ஒவ்வொன்றையும் உற்றுப் பார்த்தால் கேள்வி எழும் .கேள்வி வந்தால்தான் பதில் யோசிக்கத் தோன்றும்.

ஏன் காதைச் சுற்றி மூக்கைத் தொட வேண்டும்?ஏன் பாடம் பெற வாழ்க்கையில் அடி வாங்க வேண்டும்? வாழ்வின் ஒவ்வொரு நொடியும் பாடமல்லவா?எத்தனை மஹான்கள் நடந்த வழித் தடங்கள் கண் முன்னே தெரிகின்றன.Is it not very easy to be a follower than be a leader? கேளிக்கைகள் தவறில்லை.ஆனால் கால அவகாசத்திற்குட்பட்டவை.அன்று மேடையில் ஒரு நடிகரை இமிடேட் செய்து ஒரு சிறுவன் ஆடினான்.உலகமே நாடக மேடை.நாடகத்திற்குள் ஒரு நாடகம்.என்ன பயன்?கேளிக்கைகள் மூலம் ஏதேனும் செய்தி சொன்னாலாவது தேவலை என்றிருந்தது.நித்தம் நம்மை அமைதியாக,ஆனந்தமாக வைத்துக் கொள்ளத்தான்,கொஞ்சம் நேரம் செலவழித்து சிந்திக்க வேண்டும்.Celebration சந்தோஷம் .Life முழுமையும் celebration ஆனால் நிரந்தர சந்தோஷம் .ஆமாம், நிரந்தரம் என்று பேச எது உள்ளது?ஒரு இடைச் செருகல்.அடுத்த போஸ்ட்டின் வித்தும் கூட.அந்தக் குழந்தைக்கு,மாரீச மானுடன் ஒப்பிட்டேனே அந்தக் குழந்தைக்கு சிலர் சாப்பிட ஏதோ வாங்கித் தந்தனர்.அவர்களுக்கு என் மன ஆழத்தில் இருந்து வணக்கம்.ஆனால் அன்ன தானம்தான் சிறப்பு என்கிறார்களே,அதில் என்னால் உடன்பட முடியவில்லையே?போதும் என சொல்ல வைக்கக் கூடியது என்கிறார்கள்.சரிதான்.ஆனால் அந்த வேளைக்கு மட்டும்தானே வயிறு போதும் என்று கூறும்.?அடுத்த பசி?So வேறு ஏதோ தானம் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும்.நீங்களும் யோசியுங்கள்.நானும் யோசிக்கிறேன்.மறுபடி பார்க்கலாம்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS